நெடுங்கவிதை : என்ன செய்யப் போகிறாய் ?

நம்ப முடியாத … என்று சொல்வார்களே ! அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது !  

1.

கீழே தூரத்தில்
மேகங்கள்
வானத் தடாகத்தின்
தலை கீழ் தாமரைகளாய்
மிதந்தன.

மேலும் கீழும்
அசைவதற்கு இசையாத
மேக வீரர்களின்
அணிவகுப்புக்கிடையே
சத்தத்தைத் துரத்தியபடி
நின்ற நிலையிலேயே
ஓடிக் கொண்டிருந்தது
அந்த விமானம்.

அதிகாலைச் சூரியன்
மேகம் துளைத்து
மெலெழும்பும் காட்சியை
சன்னலோரம் அமர்ந்து
ரசித்துச் சிலிர்த்தாள்
மலர்விழி.

பூமியிலிருந்து பார்த்தால்
பயணித்துக் கொண்டிருக்கும்
மேகங்கள்
இங்கே
கலையாத் தவங்களாய்
கலைய மறுத்து
வெள்ளைப் புற்றுக்குள்
பிள்ளைக் காளான்களாய்
குடைபிடித்துக் கிடக்கின்றன.

மேகம் ஓர்
அற்புத அனுபவம் தான்,
வானக் கானகத்தின்
வெள்ளை மலைகளாய்,

வானக் கடல்
அலையடிக்காமல் ஒதுக்கிய
நுரை மிச்சங்களாய்,

வான வயலில்
நட்சத்திரத் தானியங்களை
கதிரடித்துக் கொட்டி முடித்த
வெள்ளை வைக்கோல்
குவியல்களாய்,

யுகம் யுகமாய் வாழ்ந்த
பிரபஞ்சத் தாயின்
நரைத்த தலையாய்…

கற்பனைகளை
கவிதைகளும்,
கவிதைகளை கற்பனைகளும்
துரத்தி ஓடும் ஓர்
வெள்ளாட்டு மந்தையில்
முதுகுப் பிரதேசமாய்
பரவிக் கிடந்தது ஆகாயம்.

மலர்விழியின் அருகே
அமர்ந்து,
மேகத்தின்
உருவமற்ற உருவங்களின்
பருவப் பயிர்த்தோட்டத்தில்
பார்வை விரித்து
அமர்ந்திருந்தாள் சுகந்தி.
மலர்விழியின் தாய்.

விமானம்
ஏதோ ஓர் அட்சக் கோட்டின்
எல்லையில் துவங்கி,
சில
தீர்க்கமான தீர்க்கரேகைகளைக்
கடந்து
அமெரிக்கா நோக்கி
பறந்து கொண்டிருந்தது.

காற்றில் யாரும்
ஓவியம் வரைய முடியாது
என்பதை கொஞ்சம்
மறந்துதான் ஆகவேண்டும்,
இங்கே
காற்றில் சாலையே
சாத்தியமாகிறதே !

நாளை,
வானத்தில் சில நிறுத்தங்கள்
நிறுவி,
தேனீர்க் கடைகளையும்
நியமிக்கலாம் !

ஓடுதளத்தை
பசிபிக் கடல் மேலான
மேகத்தின் மேல் அமைக்கலாம்,
கனவுகளை
கண்டு விழிக்கும் முன்
நிஜமாக்கத் துடிக்கும்
விஞ்ஞானத்தின் முன்னாலே
வறுமையைத் தவிர
அத்தனை இயலாமைகளும்
மொத்தமாய் தீர்க்கப் படுகின்றன.

விமானம்
இமைக்க மறுக்கும்
இறக்கைகளோடு
பறந்துகொண்டிருக்க,
இருக்கையில் இருந்த
சுகந்தியின்
சிந்தனைகள் மட்டும்
இறந்த காலத்துக்குள்
இமைகளை இறக்காமல்
விழித்துக் கிடந்தது.

இந்த பயணத்தில்,
வின்சென்ட் மட்டும்
அருகில் இருந்திருந்தால் …
எத்தனை
அற்புத அனுபவமாய்
இருந்திருக்கும் ?

0

 

2

நினைத்துப் பார்க்கவே
முடியவில்லை வின்செண்ட்,
நாம்
பதிவுத் திருமணம்
பண்ணிக் கொண்டதை.
சுகந்தி கண்ணீரோடு கிசுகிசுத்தாள்.

வின்சென்ட் சிரித்தான்,
சில முடிவுகள்
எடுக்காவிட்டால்,
சில ஆரம்பங்கள்
ஆரம்பிக்காமலேயே போகலாம்.

நம் காதலுக்கு
நீ
பிள்ளையார் சுழி போட்ட
கணத்திலேயே தெரியும்,
நம் காதல்
அங்கீகரிக்கப் படாது என்பது.

உங்கள்
கர்ப்பூரத் தட்டுகள்
என்
சிலுவைச் சமாச்சாரங்களை
சம்மதிக்கப் போவதில்லை என்பதும்.

எங்கள் வீட்டு
விவிலிய விரல்கள்,
கீதையின் பக்கங்களை
புரட்டிப் பார்க்க அனுமதிக்காது
என்பதும்,
புலரும்போதே புரிந்தவை.

காதலுக்கே கருப்புக் கொடி காட்டும்
நம் உலகத்தில்,
மதத்தின் மதில் சுவர் தாண்டிய
மனங்களை
எந்த வீட்டில் தான்
விட்டு வைத்திருக்கிறார்கள்.

முதலில் எதிர்ப்புகள்,
பின் சில எதிர்பார்ப்புகள்
பின்
மீண்டும் நம் பழைய தொட்டில்…

கொஞ்சம் பொறுத்திரு,
கடல் தான் மேகத்தின் தாய்
ஆனாலும்
கடலிலிருந்து புறப்படும் போதே
மேகத்தை
பார்க்க முடிவதில்லை.

பொறுத்திருக்க வேண்டும்,
மேகம்
கார்மேகமானபின்பே
மீண்டும் அது
பூமிக்குத் திரும்ப இயலும்.

நமக்கு ஓர்
மழலை மலரட்டும்,
அப்புறம் பார்,
அணைகளைத் தேடாத வெள்ளம்
அணைத்துக் கொள்ள
ஓடிவருவதை…

சொல்லிக் கொண்டே
வின்சென்ட் சுகந்தியின்
கூந்தல் கரையில்
முத்திருக்கிறதா என்று
மூழ்கித் தேடினான்.

காதலின் கவலைகள்
எல்லாம்
கூந்தலின் வருடலில்
திருடப்பட்டுவிடும் என்பதை
இன்னுமொருமுறை
அவர்கள்
உறுதிப் படுத்திக் கொண்டனர்.

மதங்களின் துரத்தல்கள்
எட்ட முடியா எல்லையில்
ஓர்
வாடகை வீட்டில் வாழ்க்கை
வேர்களில்லா விழுதுகளாய்
விழ ஆரம்பித்தது.

ஆனாலும்,
சுகந்தியின் சிந்தனைகளும்
வின்சென்ட் – ன் நினைவுகளும்
தங்கள் வீட்டுக்
கொல்லைப் புறத்திலேயே
குட்டி போட்ட பூனையாய்
சுற்றிச் சுற்றி நடந்தன.

காலங்கள் வந்து
வாசலில்
கோலம் போட்டு வரவேற்கும்,
பிரிவுகள் வந்து
கதவு தட்டி
பிரியம் கொண்டாடும் என்ற
கனவுகள் எல்லாம்
காவிரித் தண்ணி போல
எல்லைக்கு வெளியே நின்றுபோயின.

மாதங்கள் சில
மூலையில் முக்காடிட்டுத்
தூங்கிப் போன
ஒரு பொழுதில்,
வின்சென்ட்-ன் காது கடித்தாள் சுகந்தி…

சொந்தங்கள் சொந்தங்கொண்டாட
ஓர்
புதிய சொந்தம் எனக்குள்
பதியம் கொண்டுவிட்டது.

நம்
காதல் கொடியில் இப்போது
ஓர்
புதிய கிளை
உதயமாகி இருக்கிறது.

நமக்கே நமக்கான
நாம்
இனிமேல்
ஓர் குழந்தைக்குச்
சொந்தமாகப் போகிறோம்.

0

3

வின்சென்ட்
ஆச்சரியப் போர்வையை
விலக்கி வெளியே குதித்தான்,

அவன் மனம்
வானவெளியிலிருந்து
பாராசூட் கட்டாமல்
குதித்து மிதந்தது.

சுகந்தியைத் தூக்கி
ஓர்
குழந்தையாய் கொஞ்சினான்.

நிலாவுக்குள் இன்னோர்
பௌர்ணமியின் பிரவாகமா ?

நம்
எதிர்பார்ப்புகளின் தூரம்
எதிர் வீட்டு
தூரத்திலா ?

உப்புக் கடலில் வீசப்பட்ட
சிறு
தெப்பப் படகாய்
மனம் அலைந்தாடியது.

சுகந்தி
புதிதாய் உணர்ந்தாள்.
விழிகளின் ஓரங்களில்
சில
நாணத்தின் நாணல்கள்
வளைந்தாடின,
சில வெட்கத்தின் விரால் மீன்கள்
வழுக்கி ஓடின.

அத்தனை ஜனத்தொகை
இருந்தாலும்,
ஒவ்வோர் ஜனனமும்
இத்தனை பரவசமா ?

உலகுக்கு ஓர்
புள்ளி விவரக் கணக்காய்
தெரிவது தான்,
என் வாழ்வின்
மையப் புள்ளியா ?

தனக்குச் சொந்தமான
மழலையின் விரல் தொடுவது
மனித மகிழ்வில்
முதன்மையானது !
அவை
எந்த அளவைக்குள்ளும்
அடங்கிப் போவதில்லை.

அப்படித்தான்
சிலிர்த்துப் போனார்கள்,
சில
இலவசச் சிறகுகள்
இணைந்து கொள்ள,
உயர உயரப் பறந்தார்கள்.

சந்தோஷத்தின்
சாயங்காலங்கள் சில
சென்றபின்,
வின்சென்ட்,
இன்னோர் சந்தோஷத்தை
சுமந்து வந்தான்.

ஓராண்டு
அமெரிக்கப் பயணம்,
வயிற்றில் குழந்தையோடு
வரப்போகிறது
நம் தேனிலவுப் பயணம்,
சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.

சுகந்தியின் சிறகுகளில்
அப்போதே
சில
பனித்துளிகள் பறந்து வந்து
ஒட்டிக் கொண்டன,
குளிர் அகலுமுன் அவள் அவனை
கட்டிக் கொண்டாள்.

0

  
4

நாளை
விமானப் பயணம்.
இந்த ஓர் இரவு மட்டும் தான்,
நாளைய இரவு
விமானத்தினுள் தான்.

ஆடம்பர பூமிநோக்கி
ஓர்
உல்லாசப் பயணம்.

இத்தனை சந்தோஷங்களை
எப்படித் தாங்குவது ?
என்று தெரியாமல்
திணறினாள் சுகந்தி,

சுகந்தி
சந்தோஷ மூட்டைகள்
சுமந்து கூட
கால் வலிக்கக் கூடாதென்று
தோளில் தாங்கினான்
அவன்.

அத்தனை பெட்டிகளிலும்
ஆடைகள் நிறைத்தாயிற்று,
மனசின்
அத்தனை அடுக்குகளிலும்
உற்சாகப் புத்தகங்களை
அடுக்கியாகி விட்டது.

கொஞ்ச நாள்
தொலைதூரப் பயணம்,
பின்
சொந்தங்களை சந்தித்து
மழலையை அறிமுகப் படுத்தி
சமாதானக் கொடி
தயாரிக்கத் திட்டம்.

வின்சென்ட்
சுகந்தியின் கன்னம் தொட்டான்,
ஓர்
வண்ணத்துப் பூச்சி
தென்றலை தன்
சிறகால் அடிக்கும் மென்மையில்,

பனித்துளி ஒன்று
புல்லில் புரண்டு படுக்கும்
மென்மையில்,

சுகந்தி விழிகளை மூடி
தவம் செய்தாள்,
வின்சென்ட்ன் விரல்கள்
வரங்களை
வருவித்துக் கொண்டிருந்தன.

அவர்களின்
காதல் இசைகளில் ஓர்
சுரம் கெட்ட ஓசையாய் விழுந்தது
தொலைபேசியின்
அழைப்பு.

வின்சென்ட் – ன்
நண்பன் விக்னேஷ் தான்.
அமெரிக்க அண்ணனுக்கு
சில பொருட்களை
வாங்கிச் செல்ல வருவாயா ?
எனும் மனுவின் முனையில்.

வின்சென்ட்,
மறுப்புச் சொல்லப் பழகாதவன்,
புன்னகையோடு புறப்பட்டான்.

சுகந்தி சிணுங்கினாள்,
சீக்கிரம் வரணும்..

விட்ட இடத்திலிருந்து
தொடராமல்,
ஆரம்பத்திலிருந்தே
ஆரம்பிக்கிறேன்.
கண்ணடித்து,
சுகந்திக்குள் கொஞ்சம்
வெட்கம் வளர்த்துப் போனான்
அவன்

0

  
5

இரவு,
மணித்துளிகள் மெல்லமெல்ல
இரவின் ஆழத்தை
அறிவித்து நகர்ந்தன.

இன்னும்
வின்சென்ட் ஐ காணவில்லை.
வினாடிகளைத் தின்று
நிமிடங்களும்,
நிமிடங்களை விழுங்கி
மணித்துளிகளும்
வயிறு வீங்கி நகர்கின்றன.

இரவு பத்துமணி,
ஆறு மணிக்குக் கிளம்பியவனை,
இன்னும் காணவில்லை.
கொஞ்சம்
பதட்டத்தின் விட்டம்
அகலமானது.

மணி பதினொன்று,
கொஞ்சம் கோபமும்,
கொஞ்சம் பயமும்
மனசின் கூட்டுக்குள் வந்து
குடியேறின.

நேரமாகிறது என்றால்
ஒரு
போன் செய்யலாமே ?
இத்தனை நேரத்துப் பதட்டத்தை
எப்படித் தான்
தாங்கிக் கொள்வது ?

மணி பன்னிரண்டு,
இன்னும் வின்சென்ட் வரவில்லை.
சுகந்தியின்
கூட்டுக்குள் குடியேறிய
பயத்தின் எலி,
பயங்கர சிங்கமாய் உறுமியது.

அவள் தொலைபேசி,
தெரிந்த எண்களையெல்லாம்
தடவித் தடவி எழுப்பின,
எங்கும்
விக்னேஷ் பெயர் இல்லை !

மத்தியானம் வரை
விடியாமல் கிடந்தால்,
சேவல் சங்கடப் படுமோ ?
கால்கள்
வாசலுக்கும் தெருவுக்குமாய்
நடந்து நடந்து தேடின.

மணி ஒன்று,
உச்சகட்ட பயம் ஒன்று
உள்ளுக்குள் மையம் கொண்டு
எந்நேரம் வேண்டுமானாலும்
இமைகளை இடித்து
தரையிறங்கலாம் என்ற நிலை.

காவல் துறைக்கு
தகவல் தரலாம்…
யோசனையில் தொலைபேசி
தொட்டாள் சுகந்தி.

அதே நேரம்
வாசல் கதவு
தட்டப் பட்டது !

சுகந்திக்கு
போன உயிரில் பாதி
உற்சாகத்தோடு உள்ளுக்குள்
வந்தது.

கவலைகளின் கால்கள்
சட்டென்று விலகின,
உதடுகளின் இறுக்கம்
மெல்ல விலக
கதவை நெருங்கி,
தாழ் விலக்கினாள்.

வின்சென்ட் இல்லை,
யாரோ இருவர்,

வின்சென்ட் உங்களுக்கு
யாரம்மா ?
விசாரிப்பின் தோரணை
சுகந்தியின் உள்ளுக்குள்
புதிதாய் ஓர்
கண்ணிவெடியை மிதித்தது.

நான் அவரோட மனைவி,
என்ன விஷயம் ?
பரபரப்பு வார்த்தைகள்
வாசல் முழுதும் சிதறின.

வின்சென்ட் க்கு ஒரு விபத்து,
அரசு மருத்துவமனையில்
அனுமதி,
வருகிறீர்களா ?
அழைத்துச் செல்கிறோம்.
நாங்கள் காவல் துறையினர்.

வார்த்தைகளின் ஆணிகள்
சுகந்தியின் காதுகளில்
ஆழமாய் இறங்கின,
கண்களுக்குள் ஓர்
பெருங்கடல் கொந்தளித்தது,
இதயத்தின் உள்ளே
பயத்தின் குதிரைக் குளம்படிகள்
வேக வேகமாய் குதித்தன.

நிஜம் தானா,
இவர்கள்
ஏமாற்றுக் காரர்களின் எஜமானர்களா ?
காக்கி உடை இல்லை,
வந்திருப்பது காவல் வாகனமும்
இல்லை,

வினாடி நேர யோசனையில்
சுகந்தி சொன்னாள்,

நானே வருகிறேன்
நீங்கள் செல்லுங்கள்.

வின்சென்ட்,
ஒரு போன் செய்யேன்,
உனக்கொன்றுமில்லை என்று…
சுகந்தியின் மனம் கதறியது.
உள்ளுக்குள்
திகில் புயல் ஒன்று
திசை தெரியாமல் வீசியது.

வந்தவர்களின் வாகனம்
விலகியபின்
வெளியே வந்தாள் சுகந்தி.

0

  

 
6

வீதிகளெங்கும்
கணக்கில்லா கருப்பு மேகம்,
யானைகளின்
ஊர்வலம் போல்
திட்டுத் திட்டாய் இருட்டு.

தன்னைச் சுற்றி மட்டுமே
ஒளி வட்டம் வரையும்
மின் மினி வாலாய்
சாலை விளக்குகள்.

சுகந்தியின் சுவாசப் பைக்குள்
ஆக்சிஜன் வரத்து
நின்று போன உணர்வு.

உதவிக்கு அழைக்க
யாரையும் காணவில்லை.
உறவுக்குள்
இருந்தவர்கள் யாரும்
அந்த இரவுக்குள் இல்லை.

காதல் திருமணத்தின்
ஓர்
கவலைப் பக்கத்தை
அப்போது தான் அவள் விரல்கள்
புரட்டிப் படித்தன.

அதுவரை
உலகத்தோடு இருப்பதாய்
தோன்றிய அவள்,
இப்போது
தனிக்கிரகத் தவளையாய்
தடுமாறினாள்.

ஆதரவுக்கு யாருமே
அருகில்லா நிலையை
அக்கணம் தான்
அவளுக்கு
அறிவித்துப் போனது.

வண்டுகளும் பூக்களுமே
வாழ்க்கையென்று
இருந்தவர்கள்
கிளைகளைக் கவனிக்காத
தவறை
அப்போது தான் அறிந்தாள்.

ஏதேனும்
ஆட்டோ  கிடைக்குமா என
அங்குமிங்கும்
துழாவினாள்.

அதுவரை
இரைச்சலைத் தின்ற சாலை
இரவைச் செரிக்க
கோணி போர்த்திச்
சுருண்டு கிடந்தது.

எங்கும்
நிசப்தத்தின் நிழல்கள்
நெடிதுயர்ந்து நின்றன.

இருசக்கர வாகனத்தின்
பின்னால்
பயணித்து பயணித்து
நேற்று வரை
ஆட்டோ ப் பயணம்
அவசியமற்ற ஓர்
ஆறாம் விரலாய் இருந்தது.

இப்போது அதுவே
உள்ளங்கை போல
அத்தியாவசியத் தளமாய்
மாறியது அவளுக்கு.

பதட்டத்தின் வேகத்தில்
வாகனத்தைக் காணாத
படபடப்பும் சேர்ந்து கொள்ள
செய்வதறியாது விழித்தாள்
சுகந்தி.

கணநேர மின்னல் ஒன்று
காரிருட்டை
வினாடி நேரம் விலக்கிவைப்பது
போல,
கண்களுக்குள் விழுந்தது
அந்த சாலையோர ஆட்டோ .

நள்ளிரவின்
பயமுடிச்சுக்களோடும்,
வின்சென்ட் பற்றிய
பதட்ட முடிச்சுகளோடும்
நின்ற அவளை
ஓர்
மூன்றிலக்க கட்டணம் பேசி
ஏற்றிக் கொண்டது வாகனம்.

மருத்துவமனை நோக்கிய
பயணம்,
கல்வாரியில் இயேசுவின்
சிலுவைப் பயணமாய்
கனத்தது அவளுக்கு.

தலைகளில் முள்முடியும்
முதுகில்
சாட்டையின் நகக் கீறல்களும்,
சுய இரத்தம்
அங்கங்களெங்கும் தங்க
வலியில் நிற்கும்
இயேசுவின் உருவம்
ஏனோ
அவள் விழிகளுக்குள்
வலுக்கட்டாயமாய் வந்து விழுந்தது.

வின்சென்ட் சொல்லியிருக்கிறான்,
சுயமாய்
செத்துப் போகச் சம்மதிக்கும்
நிலை,
மனதை அடக்குவதின்
உயர்ந்தபட்ச நிலை என்று.

ஆட்டுக் கூட்டம் புகுந்த
தொட்டாச் சிணுங்கித்
தோட்டமாய்,
உள்ளம் விரிய மறுத்து
சுருண்டு கிடந்தது சுகந்திக்கு.

யார் தான் சிரிக்க முடியும்
பலிபீடத்தில்
தலைவைத்தபின் ?
சிரச்சேதச் சக்கரம்
கழுத்தை நோக்கிப்
பாயும் போது,
எந்த அவஸ்தையோ
அந்த அவஸ்தையே
அப்போது அவளுக்கும்.

தூரத்தில்,
மருத்துவமனை !

0

 

 
7

தூரத்தில்,
மருத்துவமனை !

வாசலிலேயே குதித்து
‘காத்திருங்கள்’ என்னும்
ஒற்றை வார்த்தையை
ஆட்டோ க்காரர் கையில் திணித்து,
உள்ளுக்குள்
ஓடினாள் அவள்,
புள்ளிமானைத் துரத்தும்
புலியின் பாய்ச்சலில்.

எதிர்பட்ட அறைகளிலெல்லாம்
பார்வை அறைந்து,
வரவேற்பறை நோக்கி
கால்களை எறிந்தாள்.

விண்சென்ட் ஐக் காணவில்லை.

வரவேற்பறையில்,
ஒரு வெள்ளைத் தூக்கம்
சிவப்புக் கண்களோடு
சாய்ந்திருந்தது.

அவசரமாய் உலுக்கி,
விஷயம் உதிர்த்தாள் சுகந்தி.
அந்த
மருத்துவப் பறவை
அப்போது தான் வந்ததாம்,
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து
இல்லையே என்று
அமைதியாய் சிறகடித்தது.

சுகந்தியின் பதட்டம்
இருமடங்கானது !,
ஒருவேளை
தகவல் பொய்யா ?

அனுமதி வாங்கி
வீட்டுக்கு தொலைபேசினாள்,
அது
கிணற்றுக்குள் விழுந்த
வாயில்லாப் பூனையாய்
தீண்டுவாரில்லாமல்
கதறித் தீர்ந்தது.

அதுவரை இமைகளுக்குள்
வரப்புகட்டி பாதுகாத்த
உப்பு நீர்
உடைபட்டுக் கொட்டியது.

மருத்துவமனையின்
அத்தனை அறைகளிலும்
தேடினாள்,
எதிர்பட்ட அத்தனை பேரையும்
மன்றாடினாள்.

போர்க்களத்தில் தொலைந்த
கத்தியைத் தேடுவதாய்,
பிணியாளர் கூட்டத்தில்
துணையாளனைத் தேடினாள்
சுகந்தி.

எங்கும் அவன் இல்லை,
திசைகளின்
கதவுகளெல்லாம்
தாழ் போட்டுப் பூட்டிய அவஸ்தை,
கண்ணீர் வழிய
ஆட்டோ வுக்குத் திரும்பினாள்.
இரவு
மணி இரண்டு என்றது.

ஆட்டோ  ஓட்டுனர்,
களைப்பின் படுக்கையில்
இருந்தார்,
சுகந்தியின் விழிநீர் அவரை
விசாரிக்க வைத்தது.

சுகந்திக்கும்,
இதய பாரத்தை எங்கேனும்
இறக்கி வைக்கவேண்டி
இருந்தது.

சொன்னாள்
கேட்டான்.
ஆச்சரியமானான்.

விபத்தில் அடிபட்ட ஒருவரை
இந்த வாகனம் தானம்மா
இங்கே சுமந்து வந்தது,
பின்
அவரை
அடுத்த மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தார்கள்.
அங்கும் நான் தான் போனேன்.

அவராய் தான் இருக்கும்
வாருங்கள்
அழைத்துப் போகிறேன்.


8

பாதாள அறைக்குள்
சிறைவைக்கப் பட்ட கிளிக்கு
ஓர்
சின்ன ஜன்னல்
திறக்கப் பட்டதாய் தோன்றியது
அவளுக்கு.

அவருக்கு என்னவாயிற்று
ஏதேனும் தெரியுமா ?
சொல்லுங்களேன்.
வார்த்தைகளை கண்ணீரும்
கண்ணீரை வார்த்தைகளும்
போட்டி போட்டு
முன்னேற
முகம் பொத்திஅழுதாள் சுகந்தி.

விஷயம் முழுதாய்
விளங்கிக் கொள்ள இயலவில்லை,
ஆனால்
உயிர் இருப்பதை மட்டும்
உணர்ந்து கொண்டேன்.

நீங்கள்
ஆட்டோ வில் ஏறிய சாலையில்
தானே
அடிபட்டுக் கிடந்தார் !
அருகே தான் உங்கள் வீடா ?

கவலையை விடுங்கள்,
நல்லதே நடக்கும்,
அனாதைக் கவலைகளுக்கு
ஆறுதல் சொன்னான் அவன்.

வீட்டுக்கு அருகே
விபத்து நடந்திருக்கிறது !
சாலையில் அவன்
சிதறிய நேரம் நான்
கூப்பிடு தூரத்தில்
செவிகளில்லாமல் கிடந்திருக்கிறேன்.

அந்த நினைவு
அவளுக்குள் மேலும்
ஓர் அணுகுண்டின்
கனத்தை தந்து போனது.

ஆட்டோ வின் இருக்கையின்
ஓரமாய்,
ஈரமில்லாமல் இருதுளி இரத்தம்
சுகந்தியின் கண்களில்
விழ,
அடக்கி வைக்க முயன்ற
கண்ணீர் நதி மீண்டும்
அருவியாய் ஆர்ப்பரித்தது.

“என்
ஒவ்வோர் இரத்தத் துளிகளிலும்
நம்
காதலைத் தான்
சேமித்து வைத்திருக்கிறேன்”,
வின்சென்ட் முதன் முதலாய்
எழுதிய காதல் கவிதை.

நம் காதலின்
எத்தனை சொட்டுகளை
சாலைக்குத் தந்தாய்
காதலா ?

என் உயிரின் கடைசிச் சொட்டும்
உன்
நினைவுகளைத் தானடி
ஈரமாய் சுமக்கும்….,
நினைவுகள் அவளை
பாரமாக்கியது.

அவர் பேசினாரா ?
சுகந்தியின் உதடுகள்
தொண்டைக்குள்ளிருந்து
வார்த்தைகளை துழாவின.

‘பேசவில்லை… ஆனாலும்
 உயிருக்கு மோசமில்லை’
வருத்தங்கள் எதையும் தருவதில்லை
தைரியமாய் இருங்கள்.

அம்மாவின் தோள் சாய்ந்து
அழ வேண்டும்
போலிருந்தது அவளுக்கு.
இயலாமையின்
ஆமைஓட்டுப் பாரம்
அசுர பலத்தோடு அழுத்தியது.

0

 

 
9

தூரத்தில் மருத்துவமனை
இருளுக்குள் ஓர்
மெழுகு வர்த்தியாய் ஒளிர்ந்து
நின்றது.

அவசரமாய்
ஓடினாள்,
வரவேற்பறை அடைந்து
விசாரிப்பு மனுவை
அவசரமாய் வாசித்தாள்.

எத்தனை பதட்டங்களைப்
பார்த்ததோ
அந்த வெள்ளைக் குயில்,
பதட்டமில்லாமல்
பதில் சொன்னது.

‘அவசர சிகிச்சைப்
பிரிவுக்கு செல்லுங்கள்’

சுகந்திக்குள்
சின்னதாய் ஓர் நிம்மதி இழை
நீண்டது,
உயிருக்கு உத்தரவாதம்
இருக்கிறது !.

அவசர சிகிச்சைப் பிரிவின்
கண்ணாடிச் சன்னல்
வழியாக
கண்களை உள்ளே வீசினாள்.

அதோ,
வின்சென்ட்.

தேர்ச்சக்கரம் நசுக்கிய
சிறு
வெள்ளை முயலாய்
அங்கமெங்கும்
திட்டுத் திட்டாய் இரத்தக் காயம்.

சுகந்தியின் அழுகை
சத்தத்தையும்
துணைக்கு அழைத்தது.

சிகிச்சை ஆரம்பித்ததாய்
சுவடுகளே இல்லை!
அவளுக்குள் இருந்த
உயிர்க் குயிலுக்குள்
வெடுக்கென்று
இறகுகள் பிடுங்கிக் கொண்டன.
0

 

  

10

ஓடினாள்,
விசாரித்தாள்…

‘முதலுதவி முடிந்து விட்டது,
மருத்துவர்
நாளை காலை வருவார்,
அவருக்கு
முதல் வேலை இது தான்’

நாளைக் காலையா ?
போய்க்கொண்டிருக்கும் உயிரை
அழைத்து வரச் சொன்னால்,
சமாதிக்கு அனுப்ப
நேரம் குறிக்கிறீர்களா ?

அவசியமாய் ஓர்
அவசர உதவி
தேவைப்படும் ஒருவருக்கு
அவசரமில்லாமல் தான்
உதவிகள் வருமா ?

எத்தனை பணம் வேண்டும்
தருகிறேன்,
யாரையேனும் வரவழையுங்கள்.

நினைவிழந்த அவரை
உயிரிழக்கச் செய்யாதீர்கள்.

சுகந்தி
மண்டியிட்டு அழுதாள்.
ஆட்டோ  டிரைவர்
உதவிக்கு வந்தார்.

தொலைபேசிகள் ஆங்காங்கே
இரவுப் படுக்கைகளில்
சிணுங்கின,
இறுதியில்
ஒருமணி நேரத்துக்குள்
ஒருவர் வருவதாய்
உத்தரவாதம் வந்தது.
மணி மூன்று !

காலம்
தூக்கத்தில் நடக்கும் நத்தையாய்
மிகவும் மெதுவாய்
நகர்ந்தது.

ஒருமணி நேரம்
ஒரு யுகத்தின் பாரத்தோடு
கரைந்து மறைந்தது.
யாரும் வருவதற்கான
தடையங்கள் இல்லை.

காரிருள் சாலையில்
ஏதேனும்
வாகனக் கண் விழிக்காதா
என்று
ஈர விழிகளோடு இருந்தாள்
சுகந்தி.

விடியல் கதிர்கள் மெல்ல
சாலைகளில்
வந்த போது தான்
அவர் வந்தார்.
ஐந்து மணி அப்போது !.

0

 

11

வின்சென்ட்
கண்ணாடிக் கூட்டுக்குள்
பறக்க இயலாமல்
படுக்கையில் கிடந்தான்.

மருத்துவர்
நிதானமாய்
அவசர உதவிகளை
ஆரம்பித்து வைத்தார்.

சுகந்தியின் இதயம்
அத்தனை தெய்வங்களையும்
துணைக்கு அழைத்தது.

இன்று ஒரு நாள் மட்டும்
எல்லா தெய்வங்களும்
மற்ற பணிகள் நிறுத்தி,
கணவனைக்
கண்விழிக்கச் செய்யட்டுமே
என்று
இரத்த அணுக்கள் கத்த
பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினாள்.

உயிரை
மருத்துவர் கையில் கொடுத்துவிட்டு
சேதாரம் வராமல்
சேர்ப்பிக்கும் வரத்தை
கடவுளிடம் வேண்டி நின்றாள்.

மருத்துவப் பணி
மணித்துளிகளை
உறிஞ்சிக் குடித்து தொடர்ந்தது.

மேலும் சில
மருத்துவர்கள் சேர்ந்து கொள்ள,
வின்சென்ட் – ன்
உயிர் காக்கும் பணி
தொடர்ந்தது.

நான்கு மணி நேர
தொடர் போராட்டத்தின்
முடிவில்,
சுகந்தி
மருத்துவரின் அறைக்கு
வரவழைக்கப் பட்டாள்.

காதுகளிலும் கண்களிலும்
விழப் போவது,
எரி கற்களா ? இல்லை
சிறு பூக்களா ?

ஓர்
ஆனந்த சங்கீதம் கேட்குமா ?
என்
காதுகளுக்குள் மீண்டும்
சின்னக் குயிலின்
சிணுங்கள் கொஞ்சல்கள்
கேட்கவேண்டுமே…

சுகந்தியின் கண்ணீர்
அடர்த்தியாய் கசிந்தது.

மருத்துவரின் முகத்தில்
புன்னகைத் தென்றல் கடந்துபோன
பாதத் தடங்கள் இல்லை.
புயலடித்து ஓய்ந்து போன
அழிவுத் தடயங்களும் இல்லை.

சம்பிரதாய சிரிப்பு மட்டுமே
சிறு
சிலந்தி வலையாய்
பிய்ந்து தொங்கியது உதடுகளில்.

0

 

 
12

“அமருங்கள்…”
மருத்துவர்
இருக்கையை நோக்கி
ஒரு கையை நீட்டினார்.

“அவருக்கு எப்படி இருக்கிறது ?..”

நான் நினைக்கும் பதில்
வரவேண்டுமே என்னும்
நிர்ப்பந்த வேண்டுதல்களோடு
விழுந்தது
சுகந்தியின் வினா.

உயிருக்கு ஒன்றுமில்லை.
மருத்துவர்
சிக்கனப் பதிலை சரித்தார்.

சுகந்திக்கு
போன உயிர்
தெருமுனை சென்று
திரும்பி வந்ததாய் தோன்றியது.

நன்றி டாக்டர்..

மேலும் சொல்லுங்களேன்…
என்னும் வினாவின் தூண்டிலோடு
பார்வையை
மருத்துவருக்குள் இட்டாள்
சுகந்தி.

அம்மா, அப்பா
யாரேனும் அருகிருந்தால்
அனுப்புங்களேன்,
மருத்துவர் சொன்னார்.

யாரும் இல்லை டாக்டர்,
நாங்கள் இருவரும்
காதலித்ததால்
தொப்புள் உறவை
துண்டித்துக் கொண்டவர்கள்.

நேசம் வைத்த காரணத்துக்காய்
எங்கள்
பாசத்தின் தேசம் விட்டு
துரத்தப் பட்டவர்கள்.

இப்போது
எங்கள்
நாடோ டி தேசத்தின்
மன்னர்களும்
பிரஜைகளும் நாங்கள் மட்டுமே.

எதுவானாலும்
என்னிடம் சொல்லுங்கள்.

சுகந்தி
நகங்களின் இடையிலும்
நடுக்கத்தை இருத்தி
நடுங்காமல் கேட்டாள்

சொல்வதை
பதட்டப் படாமல் கேளுங்கள்,

மருத்துவர்கள் அனைவரும்
சொல்லும்
தவறாமல் சொல்லும்
தவறான வார்த்தை இது.

கழுத்துக்குச் சுருக்கு
இறுக்கும் போது,
கவலைப் படாதே என்று
தூக்குத் தண்டனை கைதியிடம்
காவலர் சொல்வது போல,

தூண்டில் மீனை
தூக்கிப் பிடித்து
கவலைப் படாதே என்று
மீனவன் சொல்வது போல,

விலாவில் அம்பு விட்ட வேடன்
புறாவோடு
சிரிக்கச் சொல்வது போல,

அந்த இடத்துப் பதட்டத்தை
அந்த
முன்னெச்சரிக்கை வார்த்தை
வேங்கையைக் கண்ட
வெள்ளாட்டுக் குட்டியாய்
வெலவெலக்க வைத்தது.

தற்கொலை முனையில்
சறுக்கத் தயாராய் நிற்கும்
கால்களைப் போல கவலை தந்தது.

உங்கள் கணவருக்கு
மிகப் பலத்த அடி.
குருதி அதிகம் கொட்டியதால்
உயிரின் உறுதி குலைவு,

சாலையிலேயே
அதிக நேரம் கிடந்திருக்கிறார்,
என்று
காவலர் குறிப்பு
சொல்கிறது.

ஆறு மணிக்கு
அடிபட்டவருக்கு,
மூன்று மணி நேரத்திற்குப் பிறகே
முதலுதவி கிட்டியிருக்கிறது.

தலையில் பலத்த அடி.
தலையின் அடி
தண்டுவடத்தை உடைத்து விட்டது.

மருத்துவக் கவனிப்புகளால்
சரிக்கட்ட முடியாத
இக்கட்டான நிலை.

மருத்துவர் சொல்லச் சொல்ல
சுகந்திவின்
இதயம் வேக வேகமாய் துடித்தது.

தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர்
பாறையாய் உருகி
உள்ளுக்குள் ஏதோ ஓர்
அச்சத்தின் விமானம்
எச்சரிக்கை விடாமல்
விழுந்து நொறுங்கியது.

டாக்டர் தொடர்ந்தார்.
அவருக்கு உயிர் இருக்கிறது.

உயிர்
மட்டும் தான் இருக்கிறது !

0

 

13

டாக்டர் தொடர்ந்தார்.
அவருக்கு உயிர் இருக்கிறது.

உயிர்
மட்டும் தான் இருக்கிறது !

அவரால்
பேசவோ, பார்க்கவோ
ஏன்
உடலின் ஒருபாகத்தையும்
மெல்லவேனும் அசைக்கவோ இயலாது.

கண்ணாடியைக் கழற்றிவிட்டு
கவலைகளை
இறக்கிய தோரணையில்
மருத்துவர் பார்த்தார்.

சுகந்தியின்
இதயம்,
அதுவரை இருந்த கட்டுப் பாட்டை
உடைத்து விட்டு
உடைந்து நொறுங்கியது.

இப்படி ஒரு வார்த்தை
வருமென்று
எதிர்பார்க்கவில்லை அவள்.

அத்தனை தெய்வங்களும்
கூட்டு சேர்ந்து
ஒரு
பக்தனைப் புதைக்குமென்று
அவள்
சிந்தித்திருக்கவேயில்லை.

தன்
உள்ளத்தின் ஆழத்தில்
கிச்சு கிச்சு மூட்டிய
தூக்கணாங் குருவி ஒன்று
சத்தமிட முடியாமல்
முடங்கிக் கிடக்கிறதே.

தன்
காதுகளுக்குள்
காதல் ஊற்றிப் போன
காற்று
உறைந்த நிலையில்
உலர்ந்து கிடக்கிறதே .

வார்த்தைகள் வரவில்லை
கண்ணீர் வரவில்லை
சுவாசம் கூட
வந்து செல்வதாய் நினைவில்லை.
தன்
பூமியின் அச்சு மாறியதாய்
அச்சம் மட்டும் வந்தது.

டாக்டர்….

ஒற்றை வார்த்தை தான் அழைத்தாள்
அதற்குள்
ஓராயிரம் கேள்விகள்.

பார்வைகளைப் படிப்பதற்குத் தான்
டாக்டப் பட்டம்
போலிருக்கிறது.
மருத்துவர் தொடர்ந்தார்.

உங்கள் நிலமைக்கு
வருந்தாமல் இருக்க இயலவில்லை.
இந்த நிலை
எந்த நாட்டின் மருத்துவராலும்
சரிசெய்ய இயலாத
நிலை.

அமெரிக்காவின்
மில்லியன் செலவுகளாலும்
இதை
மில்லி மீட்டர் கூட
சரி செய்ய முடியாது.

இது,
மருத்துவர் முன்னேற முடியா
ஓர்
முற்றுப் புள்ளி முனை.

சுகந்தியின்
நரம்புகள் வேலை நிறுத்தம் செய்தன.
நாக்கும் விரல்களும்
இருந்த இடத்திலேயே
வேர்விடத் துவங்கின.

என்ன செய்வது டாக்டர்.
ஏதேனும் சொல்லுங்களேன்.
எப்படி சரி செய்வது ?

மருத்துவர் பார்த்தார்.

நீங்கள் அவரை
மிகவும் நேசிக்கிறீர்களா ?

சுகந்தி விசும்பினாள்.
என் புன்னகையின் பூமியிலும்
என்
கண்ணீரின் தேசத்திலும்,
எல்லா
அணுக்களின் துணுக்குகளிலும்,
அவர் மட்டும் தான்.

அப்படியானால்
அவரைக் கொன்று விடுங்கள்.

0

 

 
14

மருத்துவரின் வார்த்தை
சுகந்தியின்
உச்சந்தலையில் ஓர்
சுத்தியலாய் விழுந்தது.

டா…க் டர்…
எழுத்துக்களும் எழும்பமுடியாமல்
பக்கவாட்டில் சரிந்து
ஊர்ந்தன.

பதட்டப் படாதீர்கள்.
உங்கள் கணவரின் வாழ்க்கை
இனிமேல்
ஓர்
பறிக்கப்பட்ட காய்கறி போல தான்.

படுக்கையில் கிடக்கும் ஓர்
துணி போல தான்.
எந்த உணர்வுகளும்,
எந்த செயல்பாடுகளும் இங்கே
சாத்தியப் படுவதில்லை.

மூளையின் பாகம் மட்டும்
விழித்திருக்க இயலும்,
அதுவும்
சாவு வேண்டுமென்று சத்தமிடும்.

உங்கள்
அழுகையை உணரும்போது
உங்களை
அழைக்கவோ,
தோள் தொட்டு ஆறுதல் சொல்லவோ
இயலாமல்,
அவஸ்தைப் புதைகுழிக்குள்
மூச்சு முட்ட திணறும்.

அந்த வலி,
கொஞ்ச நஞ்சமல்ல.
மூளை அதைச் செய் என
சொல்லும்போது
உடல் ஒத்துழைக்காத நிலை
மரணத்தை விட
ஆயிரம் மடங்கு அவஸ்தையானது.

நீங்கள்
செய்யப் போகும்
நல்ல செயல்
கருணைக் கொலை
ஒன்று தான்.

‘முடியாது….’
சுகந்தி அலறினாள்.

என்னால்
இதற்கு சம்மதிக்க முடியாது.
முடியவே முடியாது…
சுகதியின் மறுப்பு
அலறலாய் அவதாரமெடுத்தது.

பாசமாய் சிறகுக்குள்
பதுக்கி வைத்திருந்த
கோழிக் குஞ்சு ஒன்றை
பலவந்தப் பருந்தொன்று
பறித்துச் செல்வதாய்,
உயிர் துடித்தது அவளுக்கு.

“நீ மட்டும்
என்னோடு பேசாமல் இரு..
உன்னைக்
கொன்று விடுவேன்”
சுகந்தி அவ்வப்போது
கட்டிலில் சொல்லும் வார்த்தை.
தேவையில்லாமல்
இந்த நேரத்தின் பாரத்தை அதிகரிக்க
அவளுக்குள் வந்தது.

உண்மையிலேயே
அவனைக் கொன்று விடுவதா ?
முடியாது,
அவனைப் பார்த்துக் கொண்டாவது
பொழுதை ஓட்டுவேன்.

அவனை
கொன்று விடுங்கள் என்று
என்னைக் கொன்றாலும்
சொல்லமாட்டேன்.

சுகந்தியில்
உள்ளுக்குள் முள்ளுக்காடு
ஈவு இரக்கமில்லாமல்
ஆயிரம் கைகள் கடன் வாங்கி
குத்திக் கிழித்தது.

0

 
15

அவசர பிரிவுக்கு ஓடினாள்.

அங்கே
அசைவுகளை அறியாமல்
கிடந்தான் வின்சென்ட்.

அவனைக் கண்டதும்,
சுகந்திக்குள் சேர்த்து வைத்திருந்த
கண்ணீர் துளிகளெல்லாம்
பாரம் தாங்காமல்
பாய்ந்து வந்தன.

அவன் கன்னங்களைத் தடவி,
என்னை
பயணிக்கச் சொல்லிவிட்டு
பாதியிலேயே
துடுப்போடு இறங்கிக் கொள்கிறாயே,
நியாயமா?

நீ
இல்லாமல்
சாலைக்கு வரவே தெரியாது,
வாழ்க்கைக்கு எப்படி
வருவேன்.

காதலின் அடையாளத்தை
எனக்குள் இருத்திவிட்டு
முகம் காணாமல்
மூடிக் கொண்டாயே
நியாயமா ?

வா வின்சென்ட்,
நீ இல்லாமல்
என்னைச் சந்திக்கும் வலிமையே
என்
விழிகளுக்கு இல்லை.

வின்சென்ட்  – ன்
உள்ளுணர்வுக்குள்
சுகந்தியின் கண்ணீர் வார்த்தைகள்
கணீரென்று விழுந்தன.

விரல்களை விலக்கி,
அவள் கூந்தலை கலைத்து
அழாதே என்று
இமைகளைத் துடைக்க
ஆசைப்பட்டான்.
முடியவில்லை.

குறைந்த பட்சமாய்
இமைகளைப் பிரித்து
ஒரு முறை
அவளைப் பார்க்க,
சின்னதாய் ஒரே ஒருமுறை
புன்னகைக்க
ஆசைப்பட்டான். நடக்கவில்லை.

ஆவியாய் அலைபவர்களுக்கும்
இதே
நிலை தானோ ?
கத்தினாலும் யாருக்கும்
கேட்பதில்லை,
கரம் பற்றினாலும் யாரும்
உணர்வதில்லை.

வின்சென்ட் ன் உள்ளுக்குள்
இயலாமையின் வலிகள்
அழுத்தின,
நிலமையின் வீரியம்
அவனுக்குள் வீழ்ந்தது.

சுகந்தி…
என் கண்ணே.
உன் தொடர் கண்ணீரைக் கண்டு
ஒன்றும் செய்ய முடியாமல்
கிடக்கும் படி
என்னைத் தண்டித்து விடாதே.

என்
நினைவுகளே என்னை விட்டு
விலகிப் போங்கள்,
முடிந்தால் என்னை
குணப்படுத்துங்கள்,
இல்லையேல் என்னை
மரணப்படுத்துங்கள்.

மரணத்துக்கும் வாழ்வுக்கும்
இடையேயான
ஓர்
பள்ளத்தாக்கில் பிடித்துத் தொங்கும்
ஒற்றைக் கை
பிராணியாய் கிடப்பதுவா
வாழ்க்கை ?

மரணமே வா,
என் தவறுகளுக்குத் தன்டனையாய்
உயிரைத் திருடு,
நற்செயல்களின் மிச்சமாய்
உயிரை விட்டு விட்டுச்
சென்று விடாதே…
வின்சென்ட்,
வெளியே வராத வார்த்தைகளால்
வேண்டுதல் நடத்தினான்.

0

16

சுகந்தியின்
கதறல் நிற்கவில்லை,
வின்சென்ட் – ன்
விழிவருடி அழுதாள்.

என் உயிரே,
உடல் வேண்டாமென்று
எந்த ஜன்னல் வழியாய்
நீ
வெளியேறி ஓடினாய் ?

அழுதாள் அழுதாள்
பின்,
உள்ளுக்குள் முடிவெடுத்து
வின்சென்ட் – ன் காதுகளில்
ஓதினாள்.

வின்சென்ட்.
என் காதலனே.
எந்தக் காதலியும் செய்யாத
ஒன்றைச் செய்ய
காலம் என்னைக் கட்டாயப்
படுத்துகிறது.

போய் விடு,
மயானத்தின் புதைகுழியில்
உயிரோடு கிடக்கும்
உயிரின் நிலமை உனக்கெதுக்கு ?

தவறாமல் வா,
நம்
திருமணத்தின் முத்திரை
மழலை முகமாய்
தெரியும் நாள் தொலைவில் இல்லை.

அழுகையின் ஆழத்தில்
சுகந்தியின் விழிகள்
நிறமிழந்தன.
வின்சென்ட் உள்ளுக்குள்
அழுதான்.

நன்றி என் செல்வமே,
என்னை
உயிரோடு படுக்கையிலே
புதைக்காமல்,
உயிர் விலக்கி
பூமிக்குள் புதைக்க சம்மதித்தாய்.

இங்கே தானடி
உன்
உண்மைக் காதல் இன்னும்
உயரமாய் வருகிறது.

உன் சந்தோஷத்தை விட
என்
கவலையில்லா மரணத்தை
கண்ணோக்கினாயே,
உன்னை
அணைத்துக் கொள்ள முடியாமல்
அணைந்து போய் கிடக்கிறேனே.

ஒரு துளி
கண்ணீராவது என்
இமைகளை விட்டு வெளியேறி
உன்னிடம்
போய் வருகிறேன் என்று சொல்லாதா ?
புலம்பினான் உள்ளுக்குள்.
அவன்.

இரண்டு உயிரை
ஒற்றை உயிருக்குள் அடைத்துவிட்டு
அவன் உடலை
கருணைக் கொலைக்கு
கையளித்து விட
கையொப்பமிட்டது அவள்
மனசு.

0

  

 17

மலர்விழி
மூன்றாம் முறையாக
அம்மாவை அழைத்தாள்.
“அம்மா…”

பழைய நினைவுகளுக்குள்
மூழ்கிக் கிடந்ததில்
சுகந்தியின் விழிகள்
ஈரமாகி இருந்தன.

விமானம்
அமெரிக்கா நோக்கி
ஆயிரம் கிலோ மீட்டர்
வேகத்தில்
ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தது.

இருபது வருடங்களுக்கு
முன்னால்,
ஓர்
அமெரிக்க பயண நாள்
வாழ்வின் அத்தனை வசந்தங்களையும்
முரட்டுத் தனமாய்
மோதித் தள்ளிய நினைவுகள்,
புதியனவாகவே
சுகந்திக்குள் இருந்தன.

என்னாச்சு ?
ஏன் அழறீங்க ?
விமானப் பயணம் பயமா ?
மலர்விழி
அம்மாவின் தோள்தொட்டாள்.

அவளுக்குத் தெரியாது,
சுகந்தியின்
அந்த ஒரு நாள் பயங்கரமும்
அதன்
பாதாளப் பாதிப்பும்.

அவளுக்குத் தெரிந்ததெல்லாம்,
முகம் மலரும் முன்
அப்பா ஓர்
விபத்தில் இறந்தார் என்னும்
ஒற்றை வாக்கியம் தான்.

பயமெல்லாம் ஒன்றுமில்லை,
இதயமெல்லாம்,
உன்
அப்பாவின் நினைவுகள்
தப்பாமல் வருகின்றன,
சுகந்தி சிரிக்க முயன்றாள்.

மலர்விழி ஒரு
சின்னப் புன்னகையோடு
பேசினாள்.


இறந்தகால நினைவுகளின்
இடுக்குகளில் கிடந்தால்,
நிகழ்காலத்தின் மிடுக்கு
உடைபட்டுச் சிதறும்.
நிகழ்காலத்தின் நிமிடம் மட்டுமே
நிஜமென்று கிடந்தால்
எதிர்கால வாழ்வு தவறாமல் இடறும்.
இறந்தகால வரலாறுகளை
அறி,
நிகழ்கால நிமிடங்களை செலவழி
எதிர்கால
வாழ்க்கைக்கு சந்தோசத்தை சேமி’

மலர்விழி சொல்லச் சொல்ல
ஆச்சரியமானாள்
சுகந்தி.

இது,
வின்சென்ட் அடிக்கடி
சொல்லும் ஒரு வசனம்.

இதெப்படி உனக்குத் தெரியும்,
விழிகளை விரித்து
ஆச்சரியமாய் கேட்டாள் சுகந்தி.

அப்பாவின் பழைய டைரியின்
கிழிந்துபோன
ஓர் காகிதத்தில்
கிழியாமல் கிடந்தன இவை.
இவற்றையே
எனக்கு அப்பா தந்த அறிவுரையாய்
வரைகிறேன் உள்ளுக்குள்.

சிரித்தாள் மலர்விழி.
அந்த சிரிப்பிற்குள்
வின்சென்ட் ன் வாசம் வீசியது.

விமானம்
உயரத்தை அதிகரித்தது,
சுகந்தியின் பாரம்
இதயம் விட்டு கீழிறங்கியது.

மெல்லமாய்
மலர்விழியின் கரம் தொட்டு
மெதுவாய் சொன்னாள்.
நீ
என்றும் எனக்கு வேண்டும்.

0