சிறுகதை : பையன் எங்கே ?

பையனைக் காணோங்க….

போனின் மறுமுனையில் பதட்டமும், அழுகையுமாய் வழிந்த குரலைக் கேட்டதும் சாகர் வெலவெலத்துப் போனான். முகத்துக்கு நேரே விசிறியடித்துக் கொண்டிருந்த ஏ.சி காற்றையும் மீறி சட்டென உடல் வியர்த்தது. பதட்டத்தில் இருக்கையை பின்னோக்கித் தள்ள அது ஒரு அரைவட்டமடித்து ஆடியது. முன்னால் டேபிளில் இருந்த லேப்டாப் முகத்தில் வரி வரியாய், கட்டம் கட்டமாய் ஆங்கில எழுத்துகளை வாங்கி புரியாமல் பார்த்தது.

பையனைக் காணோமா ? ஏன் ? என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான் ? இருக்கையை விட்டு பதறி எழுந்த சாகரின் கையிலிருந்த செல்போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த ஐடி நிறுவனத்தின் தரை முழுவதும் அழுக்கு கலர் கார்ப்பெட் கைகளை விரித்துப் படுத்திருந்தது. கீழே விழுந்த அந்த போன் இருபதாயிரத்துச் சொச்சம் ரூபாய். இன்னொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால், “ஓ..ஷிட்..” என்று கத்தியிருப்பான். இப்போது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை.

என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான்.. மறுபடியும் கேட்டுக்கொண்டே கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே ஒரு அரை ஏக்கர் நிலம் அளவுக்கு அந்த வர்க் ஏரியா விரிந்து கிடந்தது. சின்னச் சின்ன தடுப்புகளுக்குப் பக்கத்தில் கணினிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள்.

மறுமுனையில் பிரியாவின் அழுகைக்கிடையே அவளுடைய வார்த்தைகளைத் தேடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. ஒரே பையன். போன மாசம் தான் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினான். பிறந்த நாளை கிராண்டா கொண்டாடாதேப்பா கண்ணு வெச்சுடுவாங்க.. ஊரில் பாட்டி சொன்னதையும் மீறி நல்ல செலவு பண்ணி விழா எடுத்திருந்தான்.

மாமாவும், அக்‌ஷத்துமா வெளியே போயிருந்தாங்க…

ஓ… அப்பா தான் கூட்டிட்டு போனாரா ? சாகர் குரலில் கொஞ்சம் பதட்டம் தணிந்தது. வந்துடுவாங்க.. எப்போ போனாங்க…

போய் ஒரு மூணு மணி நேரமாச்சும் இருக்கும்

மூணு மணி நேரமா ? போன பதட்டம் மறுபடியும் வந்து ஒட்டிக் கொள்ள, சரி.. அழாதே, பக்கத்துல எங்கேயாச்சும் போயிருப்பாங்க. என்றான்.

இல்லீங்க, மாமா வெறும் லுங்கியும், பனியனும் தாங்க போட்டிருந்தாரு. பையன் வீட்ல போட்டிருந்த சட்டை தான் போட்டிருந்தான். வேற எங்கயும் போயிருக்க வழியே இல்லை.

போன் பண்ணிப் பாத்தியா ?

பண்ணினேன்.. போனை வீட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காரு.. வெளியே போனா கைல எடுத்துட்டுப் போற அறிவு கூடவா இல்லை ?

பக்கத்துல கடைகளுக்கு எங்கேயாவது போயிருப்பாரோ ?

பக்கத்து கடை, அவங்க போற பார்க், அவங்க சுத்தற ஏரியா எல்லாம் போய் பாத்துட்டேன். அத்தை பையன் லாஸ்ட் ஒன் அவரா பைக்ல சுத்திட்டே திரியறான்.. எனக்கென்னவோ பயமா இருக்குங்க.. மறு முனையில் விசும்பல் சத்தம் அதிகமாகி அழுகையாய் மாறியிருந்தது.

சரி, டென்ஷன் ஆகாதே.. நான் இதோ கெளம்பி வரேன்.. சொல்லிக் கொண்டே பளீரென ஒளிவிட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை அப்படியே மடக்கி கருப்பு நிற பைக்குள் திணித்தான். சுவரில் ஒரு பாம்பு போல தொங்கிக் கொண்டிருந்த பவர் கார்டையும் இழுத்து உள்ளே தள்ளினான். கதவைப் பூட்டாமல், லைட்டை அணைக்காமல் வெளியே வந்தான்.

எதிரே பளீர் விளக்கோடு தெரிந்தது மேனேஜர் முத்து வின் அறை. அந்த அறையைப் பார்த்தபோதே உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் வேகமாக அந்த அறையின் கதவை சம்பிரதாயமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத் திறந்தான்.

வாங்க சாகர்.. என்ன பையோட கெளம்பிட்டீங்க

பையனைக் காணோமாம்…

என்னது பையனைக் காணோமா ? முத்துவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி அவருடைய கண்ணாடியையும் மீறி எட்டிப் பார்த்தது.

அப்பா தான் பையனைக் கூட்டிட்டு போயிருக்காரு, அதனால பக்கத்துல எங்கேயாவது தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஓ.. அப்பா கூட தான் போயிருக்காரா ? அப்போ நோ பிராப்ளம்…

இல்ல… தட்ஸ் த பிராப்ளம்.. அவருக்கு இல்லாத நோய் எல்லாம் இருக்கு. சுகர், லோ பிபி.. எல்லா எழவும் இருக்கு. பாவம்.. சட்டுன்னு லோ பிபி அது இதுன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது ? அதான் டென்ஷனா இருக்கு…

சரி..சரி.. நீங்க கெளம்புங்க… பிளீஸ்… டோன்ட் வரி,,,ஹி..வில் பி ஆல்ரைட்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது ரொம்ப ரொம்ப ஈசி. அதே பிரச்சினை நமக்கு வரும்போது தான் எந்த ஆறுதலும் வேலை செய்யாது. சோலியப் பாத்துட்டு போய்யா.. அவனவன் கஷ்டம் அவனவனுக்குன்னு கத்தத் தோணும். சாகர் எதையும் சொல்லவில்லை, தாங்க்ஸ்… என்று மட்டுமே சொன்னான்.

அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை, வேக வேகமாக கதவில் அக்ஸஸ் கார்டைக் காட்டினான். பீப் என சத்தமிட்டு இறுக்கம் தளர்ந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டே ஓடிய சாகரை செக்யூரிடி பிடித்து நிறுத்தினார்.

சார்..சாவி..சாவி… ரூம் சாவி சார்…

சாவி ரூம்லயே தான் இருக்கு… நீங்களே பூட்டி சாவியை எடுத்துக்கோங்க, கொஞ்சம் அர்ஜன்ட்… பேசிக்கொண்டே ஓடினான் சாகர்.

சரசரவென இரண்டு மாடிகள் கீழே இறங்கி, கார்ப்பார்க்கிங்கை நோக்கி ஓடுகையில் மீண்டும் போன்…

போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க போறேங்க… ஐயோ.. பையன் எங்கே போனானோ…

கொஞ்சம் வெயிட் பண்ணு, என் பிரன்ட்ஸ்க்கு கால் பண்றேன்.. தேடுவோம்… வரேன்… நான் கார்ல ஏறிட்டே இருக்கேன்…

லேட் ஆயிட்டே இருக்கு.. நைட் ஆச்சுன்னா கண்டு பிடிக்க கஷ்டம்.. சொல்லும் போதே பிரியாவின் அழுகை போனில் கொட்டியது.

பெண்களுடைய அழுகை தான் ஆண்களுடைய டென்ஷனை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. தனது சான்ட்ரோ காரில் ஏறி சட்டென கிளம்பினான் சாகர்.

“டாடி.. இன்னிக்கு ஒரு நாளைக்கும் லீவ் போடுங்களேன்” காலையில் அக்‌ஷத் சட்டையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

இல்லப்பா.. இன்னிக்கு கண்டிப்பா போணும், ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு.. முத்து வரச் சொல்லியிருக்காரு.

யாருப்பா அது முத்து ?

என்னோட பாஸ் டா..

அதென்ன பாஸ் பா.. என் பையன் வீட்ல நிக்க சொல்றான்னு சொல்ல வேண்டியது தானே..

ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு… அதனால நிறைய வேலை..

ஆமா.. பையனுக்கு கிளையன்ட் விசிட், வேலை எல்லாம் ரொம்ப நல்லா புரியும் ரொம்ப டீட்டெயிலா சொல்லுங்க. பாத்திரங்களின் இசைக்கிடையே பிரியாவின் குரல் கிண்டலுடன் ஒலித்தது.

பையனுக்கு புரியுதா இல்லையாங்கறது முக்கியமில்லை, ஆனா உண்மையைச் சொல்லணும்ல…

ஆமா..ஆமா.. பையனுக்கு சொல்ற சாக்குல என் கிட்டே தான் அதைச் சொல்றீங்க…

சே…சே… உனக்கு இனிமே புதுசா சொல்லணுமா என்ன ? சாக்ஸை உதறிக் கொண்டே கேட்டான் சாகர். அவனுடைய பதிலில் சிரிப்பு கொஞ்சம், வழிசல் கொஞ்சம் கலந்திருந்தது.

சரி.. சரி.. கெளம்புங்க…

டாடி…. பிளீஸ்….

இல்லடா செல்லம்.. நாளைக்கு லீவ் போட்டு உன்னை ஊர் சுத்திக் காட்டறேன் சரியா…

டேய்.. நாளைங்கறது டாடிக்கு எப்பவும் வராதுடா… அவருக்கு கிளையண்ட் தான் முக்கியம்…

சாகர் சிரித்துக் கொண்டே, பையனை அள்ளி எடுத்துக் கொஞ்சிவிட்டு காரை நோக்கி நடந்தான். பின்னால் பையன் ஒரு சோக முகத்தோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டே நின்றான்.

டேய்..சாவுகிராக்கி.. பாத்து ஓட்டமாட்டே ?

சர்ர்ர்ர்ர்ரக்… என பிரேக் அடித்து நிமிர்ந்த சாகரின் காருக்கு முன்னால் ஒரு பல்சர் நின்றிருந்தது. அவன் எப்போ அங்கே வந்தான் என்பதையே சாகர் கவனிக்கவில்லை. கவனம் எல்லாம் பையன் மீது தான் இருந்தது…

இந்த ஐடி கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே ஏதாவது ஒன்று மாறி ஏதோ ஒரு வேலை வந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய ? ஐந்திலக்கத்தில் ஒரு பெரிய எண் வங்கிக் கணக்கில் மாசம் தோறும் அட்சர சுத்தமாய் வந்து சேரும். அதற்குக் கொடுக்கும் விலை ரொம்பப் பெரியது.

கிளையன்ட் விசிட் என்றாலே போச்சு. அவன் தானே பணம் காய்க்கும் மரம். அவனை எவ்வளவு தூரம் சோப்பு போடறோமோ அந்த அளவுக்கு தான் கம்பெனி வளரும். ஒருத்தன் அமெரிக்காவிலிருந்து விசிட்டுக்கு வருகிறான் என்றாலே இங்கே எல்லோருக்கும் கிலி பிடித்துக் கொள்ளும்,

அஜென்டா தயாராக்கிட்டியா ? விசிட் அரெஜ்மென்ட் எல்லாம் என்ன நிலமைல இருக்கு ? லாஜிஸ்டிக்ஸ் ல எந்த பிரச்சினையும் வரக்கூடாது… வர்ரவன் சாதாரண ஆள் இல்லை. அவன் அந்த குரூப் டைரக்டர். அவனோட மனசைக் குளிர வைக்கிறது தான் நம்ம ஒரே குறிக்கோள்.

அஜென்டா பண்ணிட்டிருக்கேன் முத்து.. இன்னும் முடியல..

சீக்கிரம் முடி.. இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. நாலு கேப்பபிளிடி பிரசன்டேஷன் வேணும். டெஸ்டிங் சர்வீசஸ்ல யார் அவெய்லபிள்ன்னு பாரு… நாலு பிரசன்டேஷனாவது இருக்கணும். வரவனுக்கு நம்ம கம்பெனி மேல நல்ல அபிப்பிராயம் வரணும்.

கண்டிப்பா பண்ணிடலாம்.

சீக்கிரம் பண்ணு… ஐ  வான்ட் டு ரிவ்யூ த பிளான். பிரசன்டேஷன் குடுக்கிறவங்களோட டைம் வேணும். அவங்களோட பிரசன்டேஷன் வாங்கி முதல்ல படிச்சுப் பாரு. ஒரு டிரை ரண் போடணும். சும்மா கிளையன்ட் முன்னாடி நிறுத்தினா சொதப்பிடுவாங்க. பத்து மில்லியன் அக்கவுண்ட்ப்பா… கொஞ்சம் சொதப்பினாலும் வீ வில் லூஸ் அவர் ஜாப்.. அப்புறம் வீட்ல தான் இருக்கணும்.

யா.. ஐ அண்டர்ஸ்டேன்ட்.. நான் பண்ணிடறேன்..

ஐ..நோ.. யூ வில் டூ.. பட்.. ஐ னீட் திஸ் குவிக்லி மேன்…

முத்துவின் விரட்டலிலும் காரணமில்லாமல் இல்லை. கிளையன்ட் விசிட் என்றால் அப்படி ஒரு முக்கியம் ஐடியைப் பொறுத்தவரை. வருபவனுக்கு மாலை போட்டு வரவேற்பது முதல், தனியே ஒரு கான்ஃபரன்ஸ் ரூம், பக்கத்திலேயே ராடிசன் ஹோட்டல் சிப்பாய்கள் ரெண்டுபேர் அவனுக்கு காபியோ, டயட் கோக்கோ ஊத்திக் கொடுக்க. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அலகில் கிளிப் போட்டது போல சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன லைஃப் டா இது என அவ்வப்போது சலித்துக் கொள்வான் சாகர். ஆனால் எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை ?. வெட்ட வெயிலில் ரோட்டு நடுவே நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளை விட கஷ்டமானதா நமது வேலை, அல்லது சைக்கிளில் காய்கறி வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கும் பெரியவரை விடக் கஷ்டமானதா நமது வேலை. இல்லவே இல்லை. என மனசைத் தேத்திக் கொள்வான்.

சாலையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, பிரியாவுக்கு போன் செய்தான்.

என்கேஜ்ட் என்றது…

நண்பன் ஶ்ரீனிக்கு போன் செய்தான். டேய் அக்‌ஷத்தைக் காணோமாம்டா மச்சி.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வா…

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியாவின் போன்… கடவுளே நல்ல செய்தியாய் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டே கிளிக்கினான்…

மறுமுனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

இதோ நாம் இன்னும் ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் போலாம்.. அப்பாவும் போயிருக்காருல்ல.. வந்துடுவாங்க… சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே எதிர் திசையில் வந்தது.

சாகரின் கால்கள் வலுவிழந்தன… ஐயோ.. பையனுக்கு ஏதாவது ?… அந்த நினைப்பே அவனுக்குள்ளிருந்த கிலியை அதிகரிக்க கைகள் ஈரமாகி வழுக்கின.

இதோ இன்னும் இரண்டு சிக்னல் தான்.. சாகரின் மனம் எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தது.

என்ன அப்பன் நான். பையன் எவ்ளோ தடவை சொன்னான்.. பேசாம லீவ் எடுக்காம அந்த முத்து பேச்சைக் கேட்டு ஆபீஸ் போனதே தப்பு.. கடவுளே நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடு… என் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… பிளீஸ்… அவனுடைய நெஞ்சம் பதறித் தவித்தது.

அதோ அடுத்த சிக்னலில் வலது பக்கமாக இருக்கும் டோமினோஸ் பீட்ஸா கடையை ஒட்டிய சந்தில் திரும்பினால் வீடு…

வேகமாய் காரை மிதித்து சரேலெனத் திரும்பினான் சாகர். எதிரே வந்த லாரி இன்னும் ஒண்ணே கால் வினாடி தாமதித்திருந்தால் ஏறி மிதித்திருக்கும். நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை. வீட்டிற்கு முன்னால் சின்னதாய் ஒரு கூட்டம்.

வண்டி நின்றது. ஓடி வந்தாள் பிரியா… ரெண்டு மணிக்கு போனாங்க, மணி ஆறாகுது.. இன்னும் வரலைங்க.. என்னமோ ஆயிருக்கு… அவள் அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.

சாகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உதடுகளைக் கடித்தான். அவனுடை பார்வை எதிரே இருந்த புதரை நோக்கிப் போனது.

எல்லா வாய்க்கா, புதர் எல்லாம் பாத்துட்டேங்க… அழுகை கலந்து குரல் வந்தது.

என்ன செய்வது ? போலீசுக்குப் போக வேண்டியது தான். சாகர் காரை நோக்கி விரைந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது.

என்னாச்சு ? கேட்டுக்கொண்டே இறங்கினார் சாகரின் அப்பா. கையில் பையன் அக்‌ஷத். எல்லோருக்கும் போன உயிர் சட்டென திரும்பி வந்தது.

அக்‌ஷத்த்த்… கூவிக்கொண்டே ஓடிப்போய் குழந்தையை அள்ளினாள் பிரியா. கொஞ்ச நேரம் தெய்வங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தையை அணைத்தாள்.

ஏன்.. ஏன் கூட்டம் ? என்னாச்சு ? சாகரின் அப்பா புரியாமல் கேட்டார்.

ஏன்பா.. போகும்போ… போனையாவது கைல கொண்டு போயிருக்கலாம்ல… சாகர் பையனைக் கண்ட நிம்மதியில், அப்பாவிடம் மெலிதான எரிச்சலைக் காட்டினான். பையனைக் காணோம்ன்னு நாலு மணி நேரமா ஊர் புல்லா சுத்தியாச்சு.. எங்கே தான் போயிருந்தீங்க.

அய்யோ.. அதான் இந்த ஆர்ப்பாட்டமா.. சாரி.. பையன் பார்க் போணும்னு சொன்னான், பக்கத்து பார்க் மூடியிருந்துது அதான் நம்ம பிள்ளையார் கோயில் பின்னாடி இருக்கிற பார்க்ல கூட்டிட்டு போனேன்.

அவ்ளோ தூரமா போனீங்க..

ஆமா, போகும்போ நடந்து தான் போனோம். சரி லேட்டாயிடுச்சே தேடுவீங்களேன்னு தான் நான் ஆட்டோ புடிச்சு வந்தேன்.

மத்தவங்க பிள்ளையைத் தேடுவாங்கன்னு தெரியாது ? அறிவு கெட்ட ஜென்மம்… வேணும்னா தனியா போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே.. பிரியா உதடுகள் பிரியாமல் திட்டினார்.

எந்த ஆர்ப்பாட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அக்‌ஷத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

போன் அழைத்தது…

சாகர்… பையன் கிடைச்சுட்டானா ? மறு முனையில் முத்து.

யா.. கெடச்சுட்டான்.. அப்பா கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போயிட்டாரு போல. அதுக்குள்ள என்னோட வய்ஃப் கத்தி கலாட்டா பண்ணிட்டாங்க.

ஓ..காட்.. நல்ல வேளை.. ஒரே பதட்டமாயிப் போச்சு. ஏன் வைஃபை மட்டும் சொல்றீங்க ? உங்க முகமே விகாரமாயிப் போச்சுல்ல. அதான்பா பிள்ளைப் பாசம்.

யா.. வேற எதையும் என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல… முத்து, ஹி.. ஈஸ் மை எவ்ரிதிங்.

ஓ.கே.. குட்.. தேங்க் காட்… சரி, நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க.. வீட்ல பையன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க..

தாங்க்ஸ் முத்து, நானே கேக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஹே..நோ..நோ பிராப்ளம்.. கிளையன்ட் வருவான், போவான்.. நம்ம லைஃப், நம்ம கிட்ஸ் அவங்களை நாம தான் பாத்துக்கணும்… ஸ்பென்ட் சம் டைம் வித் ஹிம்…

தேங்க்ஸ் முத்து…  முதன் முறையாக முத்து மீது கொஞ்சம் மரியாதை வந்தது சாகருக்கு.

போனை வைத்த மறு வினாடி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையனை அள்ளினான்.

நாளைக்கு நான் லீவ் போடறேன்.. எங்கே போலாம்… ?

ரியலி ?? இன்னிக்கு போன பார்க்குக்கே போலாம் டாடி… கபடமில்லாமல் சிரித்தான் அக்‌ஷத்…

கண்டிப்பா என அணைப்பை இறுக்கினான் சாகர்.

சேவியர்

விபத்து

accident.jpg
மதியம் மணி ஒன்று. அந்த அமெரிக்கச் சாலை தன் மேல் போர்த்தப் பட்டிருந்த பனி ஆடையை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தண்ணீராய்க் கழற்ற ஆரம்பித்திருந்தது. வெயில் அடித்தாலும் விறைக்க வைக்கும் குளிர் காற்றில் நிரம்பியிருக்க, வாகனங்கள் மணிக்கு நூற்றுச் சொச்சம் கிலோமீட்டர்கள் என்னும் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன. தன்னுடைய டயோட்டா காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விமல். அருகிலேயே விக்னேஷ். பின் இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும், ஹேமாவும்.

கார் உள்ளுக்குள் கதகதப்பாய் வெப்பக் காற்றை நிறைத்துக் கொண்டு மணிக்கு நூற்றுப் பத்து கிலோமீட்டர் எனும் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனந்தியின் மனசு முழுதும் அந்த கதை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன. பொதுவாகவே ஒரு கதை எழுத பத்து நாட்களாவது எடுத்துக் கொள்வாள் ஆனந்தி. தன்னுடைய கதைகள் சாதாரண விஷயங்களைச் சொன்னாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதே அவளுடைய பிடிவாதக் கொள்கை.

இப்படித்தான், சேரி வாழ் குடும்பம் ஒன்று ஒரு மழைநாள் இரவில் படும் அவஸ்தையை எழுதுவதற்காக ஒரு மழைநாள் இரவு முழுதும் சேரியிலேயே படுத்துவிட்டு வந்தாள். இரயில்வே பிளார்பாரக் கடைவைத்திருப்பவனைப் பற்றி எழுத வேண்டுமென்று ஒரு நாள் பிளாட்பாரத்தில் கடை விரித்தாள். ஆனால் அந்தக் கதைகள் எங்கும் பிரசுரமாகவில்லை. அவளுடைய கதைகள் பல அங்கீகரிக்கப்பட்டதில்லை. அதற்காய் ஆனந்தி வருத்தப்படுவதுமில்லை. “நான் செடி மாதிரி. பூக்களை பூப்பிப்பது மட்டுமே எனக்குப் பிரியமான பணி. யாரும் பறித்துக் கொள்ளவில்லையே எனும் கவலையோ, யாரும் பாராட்டவில்லையே எனும் பதட்டமோ எனக்குக் கிடையாது” என்பாள்.

“பாட்டுச் சத்தத்தை கொஞ்சம் குறைத்து வை விமல் . பின் சீட்டில் உட்கார்ந்தால் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல இருக்கிறது” என்றபடியே ஆனந்தி காரின் ஜன்னலைத் திறந்தாள். காரில் ஏதோ ஒரு ஸ்பானிஸ் பாடல் அலறிக்கொண்டிருந்தது. குளிர் காற்று வேக வேகமாக முகத்தில் மோதியது. உள்ளே இருந்த வெப்பக் காற்றை எல்லாம் வினாடி நேரத்தில் விழுங்கிவிட்டு உள்ளுக்குள் குளிர் நிறைத்தது. கொஞ்ச நேரம் மூச்சை அடைக்கும் அந்த வேகக் காற்றில் சுகம் பிடித்தாள் ஆனந்தி. அதிக நேரம் ஜன்னலைத் திறந்து வைக்க அந்த பனிக்குளிர் இடம் தராததால் மீண்டும் மூடினாள். அவள் மனம் முழுதும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றிய சிந்தனைகளே நிறைந்திருந்தன.

ஒரு காதல் கதை. காதலுக்கு காதலன் வீட்டில் எதிர்ப்பு. ஆனால் குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை. காதலனோ பிடிவாதமாய் காதலியைத் தான் மணம் செய்வேன் என்கிறான்.தீறுதியில் காதலன் வீட்டா ஒத்துக் கொள்கிறார்கள். காதலி அமெரிக்கா செல்கிறாள். ஒரு விபத்து நடக்கிறது. விபத்தில் காதலி ஊனமாகிறாள். காதலைத் தடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கும் காதலனின் பெற்றோருக்கு அந்த விபத்து ஒரு காரணமாகிறது. இது தான் கதை. இதில் காதலியாக ஆனந்தி. காதலனாக கிரி.

கிரியை நினைக்கும் போதெல்லாம் ஆனந்திக்குக் கவிதை எழுதத் தோன்றும். ஆனாலும் அவள் எழுதுவதில்லை. ” கவிதை எழுதினால் அது சாதாரணக் காதல், நூற்றுக்கு தொன்னூற்றொன்பது பேர் காதலித்தால் கவிதை தானே எழுதுகிறார்கள் இல்லையா கிரி ?”  என்பாள். ஆனால் கிரி அதற்கு நேரெதிர். ஒவ்வோர் சந்திப்புக்கும் ஒவ்வொரு கவிதை எழுதுவான். கிரியும் ஆனந்தியைப் போல ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். யார் மீதும் வராத காதல் ஆனந்தி மீது வந்ததற்கான வலுவான காரணத்தை கிரியாலும், காதலாலும் சொல்ல முடியவில்லை !. அதை விசாரிக்க இருவரும் விசாரணைக் கமிஷன் அமைத்துக் கொண்டதும் இல்லை. அது தானே காதல் ?

ஆனந்தி அமெரிக்கா வந்த அந்த நள்ளிரவில் விமான நிலையத்தில் பெருமையும், கண்ணீரும், வலியும் கலந்த பார்வை ஒன்றை கிரியின் கண்களில் கண்டபோது ஆனந்திக்கு இந்த மூன்று மாதப் பயணம் முள் காடாய் உறுத்தியது. என்ன செய்வது ? இப்போது போக மாட்டேன் என்றால், பிறகு எந்த வாய்ப்பும் தரமாட்டார்களாம் அலுவலகத்தில். எப்படியும் இந்த மூன்று மாதம் பொறுத்துத் தான் ஆக வேண்டும். அதற்குப் பின் திருமணம். கிரியின் பெற்றோர் மீண்டும் முருங்கை மரம் ஏறும் முன் அது நடக்க வேண்டும். என்னதான் கிரியுடன் சேர்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்ள முடியும் என்றாலும், கூட்டுக் குடும்ப சூழலில் நடக்கும் திருமண வாழ்க்கையே வேண்டும் என்னும் பிடிவாதக் குணம் அவளுக்கு.

ஆனந்தியின் கதைகளின் முதல் வாசகன் கிரி தான். கிரியின் கவிதைகளின் முதல் ரசிகை அவள்.
” என்ன ஆனந்தி எந்தக் கதைகளை எழுதினாலும், அந்த களத்துக்குள்ளே போய் தான் எழுதறே… முத்தம் பற்றி ஒரு கதை எழுதேன் .. நான் களம் அமைத்துத் தரேன்”… அவ்வப்போது சீண்டுவான்.
“ஆமா… இப்போ முத்தம் பற்றி எழுது முத்தத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லுவே… அப்புறம் குழந்தை பற்றி எழுதுண்ணு சொல்லுவே…” சொல்லி முடிக்கும் முன் வெட்கப் படுவாள் ஆனந்தி.

” ஏன் ? முத்தம் பற்றி எழுதுறது என்ன தப்பு ஆனந்தி ? பிழையா எழுதினாலும் இனிக்கிற ஒரே கவிதை முத்தம் தான் தெரியுமா ? ” – கண் சிமிட்டுவான் கிரி.
“ஆமா.. ஆமா… ஏதாவது பேசியே சமாளிச்சுடு. நான் முத்தம் பற்றி எழுதினாலும்… குழந்தையின் முத்தம் பற்றி தான் எழுதுவேன்”… சிரிப்பாள் ஆனந்தி.
” நம்ம குழந்தையா ? ” – மீண்டும் சிணுங்கலாய் அபினயம் காட்டிச் சீண்டுவான் கிரி.

நினைவுளில் மூழ்கிப் போய் மெலிதாய் புன்னகைத்தாள் ஆனந்தி. கதைக்கு கதாநாயகன் ரெடி, கதாநாயகி ரெடி, களம் ரெடி.. இனிமேல் அந்த விபத்து தான் பாக்கி. இதுவரை எந்த விபத்தையும் நேரடியாய் பார்த்ததில்லை ஆனந்தி. கதைக்கு அந்த விபத்து தான் முக்கியம் என்பதால் கதையின் அந்தப் பாகத்தை ஜீவனோடு எழுதவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசனையில் மூழ்கினாள் ஆனந்தி.

“விமல் கொஞ்சம் மெதுவா போயேன்… ரோடெல்லாம் ஒரே ஈரமா இருக்கு…” ஹேமா மூன்றாவது முறையாகச் சொன்னாள்.
” வேணும்ன்னா சீட் பெல்ட் போட்டுக்கோ ஹேமா… இங்கே நான் நாலு வருஷமா கார் ஓட்டறேன். ஒரு சின்ன துரும்புக்கு கூட சேதம் வருத்தியதில்லை. கவலைப் படாதே”.. விமல் சிரித்தான்.

“பயம்ன்னு இல்லே… ரோடு ஈரமா இருக்கிறதனால சொன்னேன். ” ஹேமா முனகினாள்.
“ஆமா, நாம எந்த எக்சிட் எடுக்கணும் ?” விமல் விக்னேஷ் பக்கமாய் திரும்பிக் கேட்டான்.

அமெரிக்காவில் பிரீவே எனப்படும் சாலைகளில் நிறுத்தங்கள் கிடையாது. வேகம் அதிகபட்சம் நூற்றுப் பத்து கிலோமீட்டர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் மைல் க்கு ஒரு முறை சொல்லும். ஆனாலும் வாகனங்கள் நூற்று முப்பது, நூற்று நாற்பது என்று மதிக்காமல் ஓடும். குறைந்தபட்ச வேகமே எப்படியும் எண்பது, தொண்ணூறு கிலோ மீட்டர்கள் இருக்கும். வேகம் அளவுக்கு அதிகமாகிப் போனால் ஆங்காங்கே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் காத்திருக்கும் போலீசாரிடம் கப்பம் கட்ட வேண்டியது தான். இங்கே கப்பம் கட்டும் பணத்தில் ஊரில் நல்லதாய் இரண்டு டி.வி.எஸ் வாங்காலாம்.

இந்த பிரிவே க்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று லேன் வசதியோடு, ஒரு வழிப்பாதையாக இருக்கும். அதிக பட்ச வேகக் காரர்கள் இடப்பக்கமும், வேகம் குறைவாய் ஓட்டுபவர்கள் வலப்பக்கமும் செல்ல வேண்டும் என்பது சட்டம். எந்த ஊருக்குப் போகவேண்டுமென்றாலும், இந்த பிரீ வே யிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ரோட்டை பிடித்தாக வேண்டும். ஒவ்வொரு பிரிந்து செல்லும் சாலைக்கும் ஒவ்வொரு எண் இருக்கும். அந்த எண் தெரியாவிட்டால் திக்குத் தெரியாத காட்டில் அலைய வேண்டியது தான். சாலை ஓரங்களில் ஆள் நடமாட்டம் அறவே இருக்காது.

“எந்த எக்சிட் எடுக்கவேண்டும்” என்ற விமலின் கேள்விக்கு பதில் சொல்ல விக்னேஷ் வரைபடத்தை புரட்டினான்.
” சீக்கிரம் பாருப்பா…. நாம முன்னூற்று ஒன்பதிலே இருக்கிறோம்…” விமல் பாடலில் சத்தத்தை குறைத்துக் கொண்டே சொன்னான்.
விக்னேஷ் வரைபடத்தின் மீது விரலை ஓட்டியபடியே….. ” நாம் முன்னூற்றுப் பத்தில் நுழைய வேண்டும் ” என்பதற்குள் கார் முன்னூற்றுப் பத்தை வெகுவாக நெருங்கியிருந்தது.

சட்டென்று காரை வலப்புறமாய் திருப்பி வெளியேறும் சாலையை அடைவதற்குள் காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போக, சாலையின் மேலும், சாலை ஓரங்களிலும் கிடந்த பனி காரின் டயரை இறுக்கமாய் பற்றிக் கொள்ள மறுத்து கைகளைவிரிக்க, கார் அந்த பிரீ வேயில் ஒரு சுற்று சுற்றி எதிர் பக்கமாய் திரும்பி நிராயுதபானியாய் நின்றது. காரை நோக்கி இராட்சச வேகத்தில் வண்டிகள் பாய்ந்து வந்தன.

நிலமையின் வீரியம் காரிலிருப்பவர்களுக்குப் புரிந்து அலற ஆரம்பிப்பதற்குள் அசுர வேகக் கார் ஒன்று வேகமாய் மோதி இவர்கள் காரை இடது ஓரத்துக்குள் தள்ளியது. அங்கிருந்து இன்னொரு கார் மோத, வலப்பக்கமாய் உருண்டது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன் வாகனம் தன் அத்தனை பக்கங்களிலும் மூர்க்கத்தனமான மோதல்களைப் பெற்று ஓரமாய் தூக்கி வீசப்பட்டது.

பக்கத்துக் காரில் இருந்தவர்கள் போன் செய்திருக்க வேண்டும். விபத்து நடத்து மூன்று நிமிடங்கள் முழுதாய் முடியும் முன் அந்த இடம் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு காவல்துறை வண்டிகளும், ஆம்புலன்ஸ்களுமாய் நிறைந்திருந்தன.

*

ஆனந்தி கண்களைத் திறந்தாள். சுற்றிலும் மங்கலாய் உருவங்கள். விமல் தான் முதலில் கண்களில் தட்டுப் பட்டான்.
” ஆனந்தி … “… மெதுவாக அழைத்துக் கொண்டே விமல் ஆனந்தியை நெருங்கினான்.
” மத்தவங்க எல்லாம்…. எப்படி இருக்காங்க… ?” ஆனந்தியின் தொண்டையில் வார்த்தைகள் பலவீனமாய் வெளிவந்தன.
தான் எத்தனை நாளாய் மயக்கத்தில் இருக்கிறேன் என்ற கேள்வி ஆனந்தியின் உள்ளுக்குள் மெல்ல உருண்டது.

” யாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல ஆனந்தி. ஐயாம் வெரி சாரி…   இப்படியெல்லாம் ஆகும்ன்னு நினைச்சுக் கூட பாக்கல. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ” விமலின் கண்கள் கலங்கின.
” அதெல்லாம் ஒண்ணுமில்லை விமல் யாருக்கும் எதுவும் ஆகல இல்லே…” இன்னும் வார்த்தைகள் பலம் பெறாமல் தான் வந்தன.
” ஹேமா எங்கே ? “என்றபடியே வலது கையைத் தூக்கிய ஆனந்தி ஏகமாய் அதிர்ந்தாள். அவளுடைய கை முழங்கையோடு முடிந்து போயிருந்தது.
அதிர்ச்சியின் உச்சம் உள்ளத்தைத் தாக்க …. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருள மீண்டும் மயக்கத்துக்குள் போனாள் ஆனந்தி.

*

“அப்பா…”- கிரி அப்பாவை மெதுவாக அழைத்தான்.
அப்பா திரும்பினார்.
” ஆனந்திக்கு விபத்து நடந்திடுச்சுப்பா…. அதுல.. ஆனந்தியோட கை…….” அதற்கு மேல் பேச முடியாமல் கிரியின் கண்கள் கலங்கின.

ஒரு நிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்த அப்பா பேச ஆரம்பித்தார்,
” கேள்விப் பட்டேன்….  எல்லாம் கேள்விப் பட்டேன். என்ன பண்ன முடியும் ? எல்லாம் நடக்கணும்னு இருக்கு…. கல்யாணத்துக்கு அப்புறம் இது நடந்திருந்தா நான் என்ன செய்திருக்க முடியும். இந்த நேரத்துல இதைக் காரணம் காட்டி காதலை முறிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மனசாட்சி இல்லாதவன் இல்லை… நிச்சயித்தபடியே திருமணம் நடக்கும். கவலைப்படாதே. அவளுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்லு”…
சொல்லிவிட்டு கண்மூடிய அப்பாவை ஆச்சரியமாய்ப் பார்த்தான் கிரி.

” இல்லேப்பா. ஒரு கை இல்லாத பொண்ணு கூட வாழறது பிராக்டிக்கலா எனக்கு சரியாப் படல. நீங்களும் அதையே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க நேர்மாறா சொல்லிட்டீங்க. காதலிச்சப்போ வேண்டாம்ன்னு சொன்னீங்க, நான் கேக்கல. இப்போ வேணும்ன்னு சொல்றீங்க… அதையும் என்னால கேக்க முடியல” . என்னை மன்னிச்சுடுங்கப்பா. என்ற மகனை அதிர்ச்சியாய்ப் பார்த்தார் அப்பா.

முடிவு தெரியாத நிலையில் ஆனந்தி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். அவளுடைய கதை  ஒரு விபத்தைச் சந்தித்த அதிர்ச்சியில் முடிவுறாமல் கிடந்தது.

*