நில்..நிதானி…காதலி

 

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.

நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.

நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.

.

பூவா தலையா
கேட்கிறாய்
நீ.

காசு
என்கிறேன் நான்.

.

அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?

.

உனக்குப் பிடிக்காததை
செய்யும் போது
உனக்குப் பிடிக்காதே என்றும்,
உனக்குப் பிடித்ததைச்
செய்யும் போது
உனக்கும் பிடிக்குமே என்றும்,
எஞ்சியவற்றை
செய்யும் போது
உனக்குப் பிடிக்குமோ என்றும்….
நீ சார்ந்த எண்ணங்கள் மட்டுமே
நீள்கின்றன.
இது
உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ?

.

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

.


நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.

.

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.

.

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.
.

உங்களைப் போல
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா
என்ன அழகான கவிதை !!!

நில், நிதானி, காதலி – கவிதை நூலிலிருந்து