கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்

bed.jpg

சில நினைவுகள்
மூழ்கித் தொலைகின்றன,
சில
தூண்டில்களை மூழ்கவிட்டு
மிதவைகளாய் மிதக்கின்றன.

கல்லூரிக்குச் சென்றபின்
நான்
மறந்து விட்டேனென்று
என் ஆரம்பகால நண்பன்
அலுத்துக் கொண்டான்,

வேலைக்குச் சென்றபின்
நட்பை
மறந்து விட்டதாய்,
கல்லூரி நண்பன்
கவலைப் பட்டான்.

திருமணத்துக்குப் பின்
சந்திப்பதில்லையென்று
என்
சக ஊழியன்
சங்கடப்பட்டான்.

ஒவ்வோர்
முளைக்கு முன்னும்
சில
இலைகளை உதிர்த்துக் கொண்டே
மரம் வளர்கிறது.

ஆனாலும்
வேர்களுக்குள் இருக்கின்றன
உதிர்ந்த இலைகள்
உதிரம் ஊற்றிய ஈரப் பதிவுகள்.

கலியுகப் பொங்கல்

pongal.jpg

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
‘Happy Pongal” வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

நாளை விடுமுறை
ஏதோ some பொங்கலாம்
ஈ.சி.ஆர் போலாமா
கொஞ்சலுடன் பேசிக்கொண்டன
சாட் அறைகள்.

நாளைக்கு பொங்கலா ?
அப்போ
சன் டிவியிலே என்ன படம் ?
சாய்வாய் அமர்ந்து
ரிமோட் திருகும்
குடியிருப்பு வாசிகள்.

பேட்டிகளின் திணிப்பால்
‘கோலங்கள்’ பார்க்க முடியாத
பதட்டத்தில்
வீட்டு அம்மாக்கள்.

பொங்கலுக்கு
இரண்டு நாள் லீவில்
ஊருக்கு போகும் ஆசையுடன்
தூரத்து பணியாளன்.

தமிழன்
‘எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு’
பட்டிமன்றங்கள் பொதிகையில்.

ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்

வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.

பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

ஒரு கடற்கரையின் இரவு

sea.jpg

விரிந்த கடலின் ஓரம்
பாய்ந்து பாய்ந்து
தேய்ந்து போன கரை.
உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும்
கட்டுக்குள் நிற்காத காற்று.

மனசு நனைகிறது.
என் மணல் மேனி முழுதும்
பல்லாயிரம் சுவடுகள்.

மாலைப் பொழுது
விடியும் போது
விரல்களில் சுண்டல் பெட்டியுடனும்
நரம்புகளுக்குள் வற்றாத நம்பிக்கையுடனும்
தொடர் சுவடு விட்டுச் செல்லும்
சிறுவர்கள்.

விழிகளின் வெளிச்சத்தில்
நேசத்தின் நெருக்கம்
உணர்வுகளை நொறுக்கும் போது
காதுமடலில் சுடு சுவாசம் வீசும்
காதலர்கள்.

கால் தொடும் கடலலையின்
முதல் துளியையும்
நீள் கடலின் ஓரம் தட்டும்
கடைசிச் சொட்டையும்
ஓர்
ஈர நூல் தான் இழுத்துக் கட்டுகிறது
என்று கவிதை சொல்லும் கவிஞர்கள்.

கொட்டும் இருளிலும்
கைதட்டும் அலைகளின் சத்தத்திலும்
அமைதியைப் பிரித்தெடுக்கும்
வறுமைக் கோட்டுக்கு கீழும்
முதுமைக் கோட்டுக்கு மேலேயும் இருப்பவர்கள்.

எதிர்காலத்தை
இருளுக்குள் இளைப்பாற விட்டுவிட்டு
நிகழ்கால நிமிடங்களில்
மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில்
குறி சொல்லிக் கொண்டிருக்கும்
ஜாதகப் பட்சிகள்.

குடியிருப்புக்களில்
காற்று குற்றுயிராகிப் போனதால்
மணல் வெளியின் சந்தடியில்
சுவாசம் தேடும் சந்ததிகள்.

வயிற்றுக்குள் அமிலம் வளர்வதால்
அமுதசுரபி தேடித் தேடி
பிஞ்சுக் கரங்களில்
பருக்கைகள் விழக்காத்திருக்கும்
மணிமேகலைகள்.

அலுவலகக் கதவுகளும்
தொழிற்சாலை மதில்களும்
நிராகரித்த விரக்தியில்
மணலுக்குள் விழுந்த சர்க்கரையாய்
வாசல் தேடி மூச்சிரைக்கும்
இளைஞர்கள்.

இன்னும் இன்னும்.
யாராரோ
என் மேனியைத் தொட்டுக் கொண்டு
என்னில் விட்டுச் சென்ற சுவடுகள்
நெருக்கமாய்
மிக மிக நெருக்கமாய்.

இரவுக் காவலர் பார்வை பட்டு
காதலர்கள் விலகிப் போக.

போர்வைகளின்
பார்வை தேடி
மிச்ச கூட்டமும் வடிந்து முடிந்தபின்,

சில்லறை எண்ணி
சிரித்தும் சிந்தித்தும்
சுண்டல் சிறுவர்கள் சிதறி மறைய.

என்
தூக்கத்தைத் தின்று விட்டு
இரவு நிம்மதியாய்த் துயில,

நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீலக் கடல்.
நான் விழித்திருக்கும் நம்பிக்கையில்.

அப்பாவே தான்

அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.

மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.

படிகள்

வாழ்க்கை
ஒவ்வோர் படிக்கட்டிலும்
ஒவ்வோர் புதையலை
ஒளித்து வைத்திருக்கிறது.

வாழ்பவர்களோ
படிக்கட்டுகளைத்
தாண்டித் தாண்டி
தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

படிக்கட்டுகளின் உச்சியில்
தான்
புதையல் இருப்பதாய்
தலைமுறை தவறாமல்
தவறாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

நிதானமாய் நடப்பவர்களை
ஓடுபவர்கள்
கோழைகள் என்கிறார்கள்.
காற்றுள்ள போதே
தூற்றத் தெரியாதவர்கள் என்று
தூற்றுகிறார்கள்.

தலைதெறிக்க ஓடி
மூச்சிரைத்து மூச்சிரைத்து
உச்சியில் போய்
முர்ச்சையாகி விடுகிறார்கள்.

ஓடுபவர்கள்
பதக்கங்களைச் சொந்தமாக்கி
படுக்கையில் சரிகிறார்கள்.

நடப்பவர்கள்
வாழ்க்கையைச் சொந்தமாக்கி
இடுக்கண்ணிலும் சிரிக்கிறார்கள்.

மரணத்துக்கு முந்திய
மணித்துளியில்,

வாழ மறந்து விட்டோ மே என்று
ஓடியவர்கள்
ஒப்பாரி வைக்கிறார்கள்.

அடுத்தத் தலைமுறையை
நடக்கப் பழக்கிய
நிம்மதியில்
நடந்தவர்கள் நித்திரையடைகிறார்கள்.

படிகள்
அடுத்த தலைமுறைக்காய்
புதையலைப் பத்திரப்படுத்தி
பேசாமல் கிடக்கிறது.

உனது குரல்

( இந்த வார புதிய பார்வை இதழில் வெளியான எனது கவிதை)

.
எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

விழாக்கால வாழ்த்துக்கள்

வயலோர
ஒற்றையடிப்பாதையில்
சாயமிழந்து போன
சைக்கிளை நிறுத்தி
வைத்து விட்டு
வருவார் தபால்காரப் பெரியவர்.

கிறிஸ்மஸ்,
புது வருடம்,
பொங்கல்
என
ஒவ்வோர் பண்டிகைக்கும்
அவருக்கான
காத்திருப்பு அதிகரிக்கும்.

காத்திருத்தலைக் கலைக்க
ஒரு சில
வாழ்த்துக் கடிதங்களேனும்
இருக்கும்
அவருடைய கைகளில்
எனக்காய்,

எப்போதும்
தோன்றியதே இல்லை
அவருக்கும்
ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.

காதல் பூனை

நான்
வளர்த்து வரும்
பூனைக்குட்டிக்கு
இப்போது
புலி நகம் முளைத்திருக்கிறது

அதன்
பற்களில் பல
புலிப்பற்களாகி விட்டன.

முன்பெல்லாம்
மடியிலமர்ந்து கொஞ்சும்.
இப்போதோ
படியிலமர்ந்து உறுமுகிறது.

அதன்
மெல்லிய மின்னல் மீசை
இன்னல்களையே
அள்ளித் தருகிறது.

என்
படுக்கையில் விரித்திருக்கும்
கனவுகளைச்
சுருட்டி வெளியே
எறிய வேண்டுமாம்,

தலை கோதும்
விரல் போதும்
என்றிருந்த என் பூனைக்குட்டி,
கனவுக் கன்றுகளைக் கூட
கட்டக் கூடாதென
கட்டளையிடுகிறது.

கனவுகளை
அவிழ்த்து விட்டு,
பூனையை அனுப்பவேண்டும்.

மீண்டும் வளர்க்க
ஓர்
செல்ல நாய்க்குட்டி
கிடைக்காமலா போய்விடும்.

ஆனாலும்
நினைக்கும் போதெல்லாம்
வலிக்கிறது
பூனை நகக் கீறல்கள்.

அறிமுகம்

வீட்டுக்கு வந்திருக்கும்
புதிய நபரிடம்
வீட்டு
நபர்களை
அறிமுகப் படுத்துகையில்,

தன் முறை
எப்போது வருமென்று
வாசலில்
வாலாட்டியபடி
காத்திருக்கும் நன்றியுள்ள
நாய்.

தனிமைக் குறிப்புகள்

என்
டைரியை
நீ
வாசித்து விடுவாயோ
என்னும் அச்சத்தைப் போலவே

என்
கவிதையை
நீ
வாசிக்காமல் விடுவாயோ
என்னும் அச்சமும்.

ஒன்றில்
என் கோரமுகம்
இன்னொன்றில்
என் ஈரமுகம்.

அந்தரங்கத்தின்
அவையேற்றத்தைத் தடுக்கும்
அச்சத்தின் மிச்சமே
என் நாட்குறிப்பில்
தேங்கி நிற்கிறது.

எப்படியேனும்
மேடையேறி விடத் துடிக்கும்
தயக்கத்தின் பாதங்கள்
கவிதைகளிலும்.

இரவின் தனிமையில்,
மனைவியும்
ஆழ்ந்துறங்கிய பின்னர்…

நெடுநேரம் வாசிக்கிறேன்.
எழுதத் துவங்காத
என்
டைரியின் பக்கங்களை.