போராளி…

பாதுகாப்பாய்
இருக்கும் வரை
பேசத் தான்
உலக சமாதானம்.

வெறிநாய்களிடையே
வீசப்பட்டால்
போரிட்டுத் தான்
தீரவேண்டும். 

 

அந்தப் போராளியின்
கண்களை
உற்றுப் பார்த்தேன்

விழி ஓரங்களில்
ஈரம்.
உள்ளே ஈழம்.

முடிந்து போன துவக்கங்கள்

கடந்த காலத்தில்
தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை
என்று
சொல்ல வைக்கின்றன.

கிடைக்காத நுழைவுத் தேர்வு
ஒன்று
என்
எதிர்காலத்தை
வெளிச்சப்படுத்தியிருக்கிறது.

கிடைக்காத
வேலை ஒன்று
தந்திருக்கிறது
கிடைத்தற்கரிய வேலையை.

துரோகமிழைத்த
நண்பன்
கற்றுத் தந்திருக்கிறான்
தாங்கும் வலிமையை.

ஏமாற்றிய நண்பன்
பெற்றுத் தந்திருக்கிறான்
ஏமாறாத மனதை.

தோற்றுப் போன
காதல்
பரிசளித்திருக்கிறது
அன்பான மனைவியையும்
அழகான குழந்தையையும்.

ஒவ்வோர்
தோல்விக்கும் பின்னும்
கடவுள் இருக்கிறார்.
கவனித்துக் கொண்டே.

எதிர்காலச் செய்தித் தாள்.

எதிர்கால செய்தித் தாள்.

0

பவுன் விலை
மேலும் உயர்ந்து
ஐம்பதாயிரத்தைத்
தொடும்.

யாரோ
யாரை எதிர்த்தோ
அறிக்கை விடுவார்கள்.

பற்றாக்குறையாகும்
ஆக்சிஜனை
தண்ணீரிலிருந்து
விஞ்ஞானம்
பிரித்தெடுக்கும்.

பற்றாக்குறையாகும்
தண்ணீருக்காய்
கர்நாடகம்
வடமாநிலத்தை வேண்டும்.

சபரி மலைக்கு
சிறப்பு ரயில்கள்
ஓடும்.

முன்பு
கணிப்பொறி
கனமாக இருந்தது,
தொலைபேசிக்குக்
கம்பிகள் தேவைப்பட்டன,
தொலைக்காட்சி
மூக்குக் கண்ணாடிக்குள்
இருந்திருக்கவில்லை !
என்றெல்லாம்
இறந்த காலப் பார்வைகள்
சொல்லும்.

இன்னும்
ஐந்தாண்டுகளில்
வறுமையை ஒழிப்போம்
எனும்
வாக்குறுதி மட்டும்
பரிச்சயமானதாய் தோன்றும்.

ரஜினி

ரஜினி

திரை நட்சத்திரங்கள்
மரபு அட்டவணைகளில்
நடிப்பைப் பிழிகையில்
புயலென புகுந்து
விதிகளை மீறிய புதுக்கவிதை
இவன்.

இவன்
அசைவுகளில் எழுந்த
விசைகளால்
திசைகள் அடங்கின.

இவன்
எதிரிகளை எச்சரித்த வார்த்தைகளே
இளைஞர்கள்
அதிகமாய் உச்சரித்த வார்த்தைகள்.

இவன் திரையின் கதவடைத்து
இமயம் நோக்கி
நடந்தபோதெல்லாம்
இமையின் கதவுடைத்து
இதயங்கள் அழுதன.

இவன் கடலாய் இருப்பதால்
இவன்
விரலசைவுகளே
சுனாமிகளாய் சுருண்டன.

இவன் புகழை
அண்ணாந்து பார்த்ததில்
எவரெஸ்ட்டுக்கும்
கழுத்து சுளுக்கிக் கொண்டதாம்.

இவன் படம் வெளியாகையில்
தேவலோகத்திலும்
கைத்தட்டல் கேட்டதாம்.

இவனோடு
உரசிக் கொண்டால்
அரசுகளும் தீப்பிடிக்கும்.
ஆனாலும்
இவனுக்கோ
ஆன்மீகப் பூ பிடிக்கும்

அரசியல் இருக்கை
தலைநகரத்தில்
இவனுக்காய்
தயாராகையில்
இமயமலை இடுக்குகளில்
கிழிந்த உடையில் நடந்தவன் இவன்.

கடவுளா? உலகமா ?
எனும் கேள்வி எழுகையில்
கடவுளே உலகமடா
என்றவன் இவன்.

இவன் ஆடைகள்
தற்செயலாய்க் கிழிகையிலெல்லாம்
தமிழக இளைஞர்கள்
தங்கள் ஆடைகளை
வலுக்கட்டாயமாய்க் கிழித்தனர்

இவன் தமிழனில்லை
என்று
தகராறுகள் எழுகையில்,
இனி நாங்கள்
இந்தியர்கள் என்றனர் தமிழர்கள்.

இவன்
ஓய்வெடுக்க உறங்கினால்
சாய்ந்து விட்டான் என்பார்கள்,
அமைதியாய் இருந்துவிட்டால்
பயந்து விட்டான் என்பார்கள்,
எப்படியோ
இவனைப் பற்றிப் பேசாமல்
இருந்ததில்லை தமிழ்நாடு.

கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.

இவன் பார்வைகளின்
கூர்மையில்
தங்கள்
வீர வாள்களை கூர் தீட்டினர்
இளைஞர்கள்.

இவன் வார்த்தைகளின்
வேகத்தில்
தங்கள்
ஊற்றுக் கண்களை
சட்டென்று திறந்தனர் சிறுவர்கள்.

திருவிழா காலங்களில்
இவன் படம் வெளியாவதில்லை
இவன்
படம் வெளியாகும் தினங்களில்
திருவிழாக்கள் தோன்றுகின்றன.

சுருங்கக் கூறின்,
இவன்
இனி இவனுக்கில்லை.

முக்கியமற்ற முக்கியங்கள்

முத்து தேடிய
காலங்களில்
மீன் பிடிக்கத் துவங்கியிருந்தால்
சில
முத்துக்களை இப்போது
வாங்கியிருக்கக் கூடும்.

நாகக் கல் தேடி
ஓடிய தூரத்தை
நீளமாய் போட்டிருந்தால்
கைகூடியிருக்கும்
ஏதேனும் ஓர்
மாரத்தான் வெற்றி.

காதலுக்காக
நழுவ விட்ட கணங்களை
இறுகப் பிடித்திருந்தால்
ஒருவேளை
முற்றத்தில் பூத்திருக்கக் கூடும்
சில காதல்கள்

என்ன செய்வது
முக்கியமற்றதாய் தோன்றும்
நிகழ்வுகளின்
கூட்டுத் தொகையில் தான்
வாங்க முடிகிறது
முக்கியமான
சில இலட்சியங்களை.

மோகம் மிச்சமில்லை

மோகத்தின்
பானம் ஊற்றிய கோப்பைகளில்
காதல் உவமைகள்
தெறிக்கின்றன.

வாத்சாயன விழிகளோடும்
கம்பன் விரல்களோடும்
காகிதக் குடுவைகளில்
தயாராகின்றன
காதல் கவிதைகள்.

தூரமாய் போன
நிலவை
எட்டித் தொட
கவிதை வாலில்
தீ கட்டி நீட்டுகின்றனர்
சிலர்,

தீ நாக்குகளின்
வெப்பத்தில்
மூச்சு முட்டும்
மோகத் திணிப்புகளில்
கவிதையை
வழிய விடுகின்றனர் சிலர்,

அசைந்து நடக்கும்
அழகையும்,
பார்வைக்குத் தெரியும்
பாதங்களையும்
கவிதைச் சமையலறை
மிகச் சுவையாய் சமைக்கிறது.

காமத்திற்கு
ஆயிரம் கோடி விரல்கள்
அதனால் தான்
கவிதைகள் பல
அங்க வருணிப்புகளோடு
அடங்கி விடுகின்றன.

மோகம் வடிந்த
பிற்காலப் பொழுதுகளில்
பெய்யக் கூடும்
சில
ரம்மியக் காதல் மழைகள்.

மெளனம் உரைத்தல்

தனிமையாய் நிற்கும்
ஒற்றைப் பாறையில்
முதிர்ந்த முகத்திலோ,

ஆளில்லாத
ஒற்றையடிப்பாதையின்
வரப்போர
கற்றாழை இலைகளிலோ,

தற்காலச்
சுற்றுலாத் தலங்களின்
கற்காலக் குகைகளிலோ,

குறைந்த பட்சம்
பேருந்தின்
முன்புற இருக்கை முதுகிலோ,

எங்கும் காணக் கிடைக்கிறது
ஏதேனும்
ஓர்
காதல் ஜோடியின் பெயர்.

நேரில் சொல்லத்
தயங்கிய பட்டியல்
இத்தனை பெரிதாமோ ?

நினைக்கும் நெஞ்சில் குத்தும்
நினைவுகள்.
கல்லூரி கால பின் பெஞ்சில்
காம்பஸ் கிழித்த
அவள் பெயர்
இப்போது எங்கே இருக்கிறதோ ?

நில் நிதானி காதலி

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.


நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.

உன் கண்களில்
கண்ணீர் வரக்கூடாதே
என்னும்
கவலையில் நான்.

நான்
கவலைப் படுவதால்
கண்ணீர் விடுகிறாய்
நீ

பூவா தலையா
கேட்கிறாய்
நீ.

காசு
என்கிறேன் நான்.

அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?

நீ சிரித்தாய்
சூரியன் மெல்ல இமைத்தான்,
உள்ளே வா,
நீ
வெளியில் நின்றால்
இரவு வராது.

நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

நில் நிதானி காதலி – என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற சில கவிதைகள் இவை ….

நிற்காத நிமிடங்கள்

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

முன்னுரை மகான்கள்

சந்திக்கும் புத்தகங்களின்
தரம் பார்க்க
அதன்
முகவுரை பார்ப்பதுண்டு.

பலரைப் போலல்ல
இவனென்றும்,

இவன் தான்
சமுதாயச் சருகுகளுக்காய்
எரிமலைப் பாசனத்தை
உருவாக்கியவன்
என்றும்,

மானுடக் கவிஞன்
இவன் மட்டுமே
மற்றோரெல்லாம்
மண்பாண்டக் கவிஞர்கள்
என்றும்,

பல
முகவுரைகள்
முக உறைகளாய்
சிரித்துக் கிடக்கின்றன.

முன்னுரைகள்
எழுத்தாளனின்
முகத்துக்கான சாயம் அல்ல
அவை
எழுத்தின்
அகத்துக்கான அணிகலன்.

நட்பையும்
நேசத்தின் ஆழத்தையும்
நிரப்பிக் கொண்டு
பேனா திறக்காதீர்கள்.

ஒரு
கவிதை நூல்
தோல்வியடையும் போது
முன்னுரையாளனின்
முகமும்
கொடும்பாவி யாகிறது !

முன்னுரை
மகாத்மாக்களே.
கவிதைக்குப் பொய்யழகு
என்பதே
பொய்யாகும் காலமிது !

அதை
முன்னுரைக்கும்
முன்மொழியாதீர்கள்.