இணையக் காதல்

internet.jpg

இணையம்,

அட்சக் கோடுகளையும்
தீர்க்கக் கோடுகளையும்
இறுக்கமாய்க் கட்டிவிட்டு,
பூமிப் பந்தை
ஒற்றைப் புள்ளியில்
உட்கார வைத்திருக்கிறது இணையம்.

மடியாத ஆடைகளுக்காய்
மல்லிட்டு,
கண்ணாடியின் கண்களுக்கு முன்
இமைக்காமல் நின்று,
பிம்பங்களோடு
பிடிவாதம் பிடித்து
யாரும் இப்போது காதலிப்பதில்லை.

விரல் தொட்டுக் கசங்கிப் போய்
உதட்டுப் பதிவு
ஒப்பந்த முத்தங்ககளின் மேல்
கையெழுத்திட்டனுப்பும்
காதல் கடிதங்கள்
இப்போதெல்லாம் காணக் கிடைப்பதில்லை.

கடிதத்தைப்,
பட்டு விரல் தொட்ட வினாடியில்
நெற்றியோரம்
வியர்வை அரும்பியதா?
விழிகளோரம் வெட்கம் விளைந்ததா ?
என்பதை
நேரில் தரிசிக்கும் வரமும் வருவதில்லை.

இப்போதெல்லாம்
காதல்
பூங்காக்களில் பூப்பதில்லை.
நிம்மதி கொள்கின்றன பட்டாம் பூச்சிகள்,
பூங்காக்களில் பூக்கள் தான்
பூக்கின்றனவாம்.

கடற்கரையில் கால் படுவதை விட
கணிணிப் பலகையில்
விரல் தொடுவதையே
விரும்புகிறது கல்லூரி வட்டம்.

இணையம் ஊமையாகும்
நாட்களில்
ஐந்து தலை
படபடப்புப் பாம்பொன்று
காதலரை தீண்டித் தொலைக்கும்.

அவசர தொலைபேசி
அழைப்புகளோ
இணையத்தின் இணைப்புகளால்
இருட்டறைக்குள் எறியப்படும்.

காதலியின் கண் கண்டு
கால் நகர்த்தா வார்த்தைகள்
கணிணி கண்டால் தான்
கையசைக்கின்றன.

பட்டென்று பதிலிறுத்தால்
பல்லிடுக்கில் வார்த்தைகள்
படுகாயம் படக்கூடும்.
இணையமோ
பட்டென்றுச் சொல்லென்று
பதட்டத்தைத் தருவதில்லை.

உரசலின் வெப்பத்தை விட
நம்பிக்கையின் சத்தம் தானே
காதலுக்குத் தேவை.

மடிமீது தலைசாய்த்து
மகரந்தங்கள் மயங்காமல்,
விசைப்பலகையில் விரல் இருத்தி
காதலை நிலை நிறுத்தல்
சாத்தியமிங்கே.

இணையம்
வரம்புகளை மீறாமல்
நரம்புகளை மீட்டும் தளமல்லவா.
எல்லை மீறும் முறுக்கு மடல்களை
நில்லென்று நிறுத்துதலும்
சாத்தியமல்லவா.

மின்மடலில் இதயங்கள்
இடம் மாறும்,
மின் அரட்டையில்
மனம் கொஞ்சம் மெருகேறும்.

காதலரே,
இணையாக் காதலையும்
இணையம் இணைக்கும்.

முதல் பார்வையில் தான்
காதல் வருமா,
இனிமேல்
முதல் மடலில் வருமென்று
முழங்கிச் சொல்லுங்களேன்.

முகிலினங்கள் அலைகிறதே
மின்னஞ்சல் மறந்ததுவோ
என
புதிதாய்ப் பாடுங்களேன்.

இணையத்தில் இணைப்புப் பிழை
என
காதல் பொய்யை
நவீனப் படுத்துங்களேன்.

கிறுக்கல் கையெழுத்தென்று
காதல் இங்கே
மறுக்கப் படுவதில்லை
மகிழுங்களேன்.

இணையம் என்பது
இமயம் தான்
ஆனாலும்
காதலரே கவனியுங்கள்,

அருகிலேயே
அழகியொருத்தியை இருத்திக் கொண்டு
நீதான் என் உலகம் என்று
உங்களுக்கு யாரேனும்
வலையில்
வலை விரிக்கக் கூடும்.

கணிப்பொறி வித்தையில்
புகைப்படம் புதுப்பித்து,
நடிகனின் நடையிலே
முடவனும் உங்கள் முன்வரக் கூடும்.

உனக்கனுப்பிய
காதல் கடிதத்தின்
கண் காணாப் பிரதி,
தபால்த் தலைச் செலவின்றி
பல கன்னியரின்
கணிணிச் ஜன்னல்களைக்
காதலுடன் தட்டியிருக்கக் கூடும்.

மாடலிங் தான் தொழிலென்று
மாடசாமியும், தன்
முன் வழுக்கையைத் தடவிக் கொண்டும்
மூச்சு விடாமல்
இருமிக் கொண்டும்,
யாஹூவுக்குள் வசிக்கக் கூடும்.

அவரசக் காதலர்க்கு
ஓர்
அவசிய எச்சரிக்கை.

தெருப் பெயர் மாறினாலும்
தபால்க் காரன் சமாளிப்பான்,
ஓர்
சிறு புள்ளி மாறினாலே
இணையக் காரன் புறக்கணிப்பான்.
நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்வுக்குத் தேவை இணை.
அதைத் தரும்
இணையத்துக்கு இல்லை இணை !

( சந்தவசந்தம் இணையக் குழுவில் எழுதிய கவியரங்கக் கவிதை. தலைப்பு : இணையத்துக்கு இல்லை இணை. )