நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்

sad.jpg

 .

பூவைத் தீண்டும் தென்றல் போலே
 என்னைத் தீண்டினாய் – நான்
தீயைத் தீண்டும் காலம் வேண்டும்
 என்றா வேண்டினாய் ?

காதல் என்னும் சுவாசக் காற்றை
 நீதான் ஊற்றினாய் – பின்
மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை
 ஏனோ மாற்றினாய்

.
சரணம் 1

முத்தம் மட்டும் கன்னம் தொட்டால்
 காதல் வாழுமா – நான்
நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்
 போதல் நியாயமா ?

சித்தம் கொண்டு என்னைத் தீண்டு
 பாவம் நானம்மா – ஓர்
யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல்
 சாபம் ஏனம்மா ?
 
சரணம் 2

வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
 உன்னைக் காண்கிறேன் – நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
 பூக்கக் காண்கிறேன்.

சொட்டுச் சொட்டாய் எந்தன் ரத்தம்
 கொட்டக் காண்கிறேன் – நீ
விட்டுச் செல்லச் செல்லக் காதல்
 வற்றக் காண்கிறேன்

.
சரணம் 3

உதயம் வானில் சிரிக்கும் முன்னே
 உன்னைத் தேடுவேன் – பின்
இரவுப் பொழுது முடிந்த பின்னும்
 உன்னால் வாடுவேன்.

இதயம் துவைத்து காதல் இருத்தி
 தினமும் நாடினேன் – நீ
புதையல் கிடந்த இடத்தை நோக்கி
 பாதை மாற்றினாய்

சரணம் 4.

உள்ளம் முழுதும் வெள்ளம் போலே
 காதல் வந்ததடி – பின்
கள்ளம் எல்லாம் உள்ளம் விட்டு
 எங்கோ சென்றதடி.

வெள்ளை மனதில் உன்னை வைத்தேன்
 முள்ளாய்க் கொல்லுதடி – உன்
பிள்ளைப் பாதம் தீண்டா நெஞ்சம்
 உள்ளே வேகுதடி.

சரணம் 5

தீயாய் எரிந்த என்னை நீராய்
 நீதான் மாற்றினாய் – பின்
நீயாய் ஏனோ என்னை விட்டு
 பாதை மாற்றினாய்.

தேயா நிலவாய் நீயே வந்தாய்
 வானாய் மாறினேன் – எனை
தேயச் சொல்லி வானம் விட்டு
 மாயம் ஆகிறாய்.