பிரிய மகனே.

Image result for old man sitting at park

 

உன் கடிதம் வந்து மாதங்களாகிறது.
நான்
தபால்காரன் விலகிச் செல்லும் வரை
வாசலில் தான் விழித்திருக்கிறேன்.

மனம் ஒத்துழைக்குமளவுக்கு
இப்போதெல்லாம்
உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.
ஆனாலும்
உன்னைப்பற்றி நினைக்கும்போது மட்டும்
இன்னும் இளமையாய் உணர்கிறேன்.

மழலைப்பருவத்தின்
மாலை வேளைகளிளெல்லாம்
நீ
என் மார்பு நனைத்துக் கிடப்பாய்.
பிஞ்சு விரல்களால் மீசையை இழுத்துச் சிரிப்பாய்
தூங்கவிடாமல் புரள்வாய்
நினைவிருக்கிறது.

நம் வயலோரக்காற்றெல்லாம்
உன்னை முத்தமிட
நீ
என் உள்ளங்கைக்குள் கரம் பொத்தி
என் சுவடுகளுக்குள் அளவெடுத்து நடப்பாய்.

பட்டென்று
அம்மாவின் முந்தானை இழுத்து
அவளை சமையல் செய்யவிடாமல்
சிறைப்பிடிப்பாய்.

உன் முகத்தின் முக்கால்வாசியும்
சோறு தின்ன
வாய்க்குள் சில பருக்கைகள்
மட்டுமே பயணப்படும்.

வெள்ளையடித்து முடித்த சுவர்களெங்கும்
சேற்றுச் சித்திரம் வரைவாய்
தூங்க மறுக்கும் இரவுகளில்
தாயின் தாலாட்டுகளில் லயித்திருப்பாய்.

பழைய கதைகளைப் புதிதாய்ப் பேசிப் பேசி
ஒவ்வோர் கிழமைகளிலும்
நானும், உன் அம்மாவும்
உன் நினைவுகளில் தான்
சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்

உனக்கு
மழலை நினைவுகளெல்லாம்
பள்ளிக்கூட படிதாண்டியபோது மறந்திருக்கும்.

சிறுவனாய் சிரித்ததெல்லாம்
கல்லூரி வாழ்க்கையால்
கழுவப்பட்டிருக்கும்.

கல்லூரிக் கலாட்டாக்கள் கூட
வேலைப்பளுவில் களைந்து போயிருக்கும்..

இன்னும்
நீ எனக்கு மழலை தான்.

வங்கியின் வயிற்றை நிரப்பும் வேகத்தில்
எங்கள் மனசை பட்டினியிடாதே..
நான் வேண்டுவதெல்லாம்
ஐந்திலக்க அமெரிக்க டாலர்களை விட
நலமென உன் கரம் எழுதும்
ஓர்
நான்கு வரிக் கடிதம் தான்.

 

மழலைக்கால சிந்தனைகள்

Image result for parenting

 

பெற்றோரே,
உங்கள்
பிள்ளைகளை
கவனமாய் செதுக்குங்கள்.

0

குழந்தைகள்
மலர்கள்.
எந்த வாசனை
நீங்கள் ஊற்றப் போகிறீர்களோ
அதுவே
அவர்களின்
சொந்த வாசனையாகப் போகிறது.

நேசத்தின்
வாசனையை
உள்ளத்தில் ஊற்றுங்கள்

0

நீங்கள்
மீட்டுவதைப் பொறுத்து தான்
அவர்கள்
சுரம் விடுவார்கள்

அளவான துளைகள் இட்டு
பிள்ளைகளைப்
புல்லாங்குழல் ஆக்குங்கள்.
அவசரக் கீறல்களால்
உடைத்து விட வேண்டாம்.

0

எதையும்
திணிக்காதீர்கள்.
வேர் விடும் முன்
காய்களின் கனவெதற்கு ?

பச்சை இமைகள்
இமையம் தாங்காது.

0

சொற்களைப் பெற்று
கற்பதில்லை மழலை
அது
செயல்களைக் கண்டு
கற்றுத் தெளியும்.

செயல்களை
žர் செய்யுங்கள்

0

உரட்டல்
மிரட்டல்களால்
மழலைகளை
துரத்த வேண்டாம்

மேகத்தை அரைத்தால்
மழை பொழியாது

0

மழலைகள்
குயவன் கை களிமண்.
வனையும் பொறுப்பை
நீங்களே எடுங்கள்.

இல்லையேல்
யாராரோ வந்து
தப்புத் தப்பாய்
வனைந்து முடிக்கக் கூடும்.

0

குழந்தைகள்
பாத்திரங்கள்,
உச்சமானதை மட்டுமே
மிச்சமின்றி நிறையுங்கள்.

கன்னத்தின் கன்னம் வைத்து
அவர்களிடமிருந்து
புன்னகைக்க
மட்டுமேனும்
கற்றுக் கொள்ளுங்கள்.

பூனைக்குட்டி

Image result for cute cat

 

அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி.
உடல் முழுதும்
வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய்,
வெல்வெட்டை வெட்டி வைத்ததாய்,
பாதரசப் பயணமாய் வழவழப்பு.

மெல்லிய மீசையை மெதுவாய் என்
முகத்தில் தேய்த்து விளையாடும்.
என் தோளுக்கும் காலுக்குமாய்
அவசரப் பாதங்களுடன்
மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும்.

கூரிய நகங்கள் அதற்கு.
ஆனால் ஒருமுறை கூட காயம் தந்ததில்லை,
உறைக்குள் சொருகப்பட்ட சிறுவாளாய்
விரல்களுக்குள் புதைந்து கொள்ளும் அவை.

தரையில் உணவுதந்தால் அடம்பிடிக்கும்,
பாத்திரத்தில் பரிமாறினால் மட்டுமே
முத்தமிட்டு ஒத்துக்கொள்ளும்.

என் படுக்கைக்குள் அவ்வப்போது
குறுகுறுக்கும்.
பாத்திரங்கள் கலைத்து பால் தேடும்,
என் தனிமைத் திண்ணையில் தலைகோதும்.

நான் வீடுதிரும்பும் வேளைகளில்
வாசலோரத்தில் வந்து சத்தமிடும்.
கால்களைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும்..

என் உயிர்த் தோழனாய்..
அந்தச் சின்ன ஜ“வன்.

இரண்டுநாளாய்
அதைக் காணவில்லை.
உயிரைத் தொலைத்ததாய் உள்ளுக்குள் வலித்தது.
கூரியதாய் ஏதோ ஒன்று
இதயத்தை குறுக்கும் நெடுக்குமாய் கூறுபோட்டது.

அலுவலகத்தில் வேலை நகரவேயில்லை.
சக நண்பன்.
சத்தமில்லாமல் சலித்துக் கொண்டான்
பூனைத்தொல்லை தாங்கமுடியவில்லை.
கண்காணாத தூரத்தில் விட்டுவிடவேண்டும்.

முதுமை வலிகள்

Image result for painting of old man

 

இமைகளை இழுத்துப் பிடித்து
தறி அறைந்திருப்பதுபோலவும்,
இமையின் மயிற்கால்கள் எல்லாம்
பூமி பிளந்து பாய்ந்திருக்கும் நங்கூரம் போலவும்
பாரமாய்த் தோன்றுகிறது
ஒவ்வோர் காலைப் பொழுதுகளிலும்.

இந்த பாழாய்ப்போன மூட்டுவலி
கால்களைக் கட்டிக்கொண்டு நகர மறுக்கிறது.
பல்தேய்க்கும் முன்பே கால்களில்
தைலம் தேய்க்கும் காலம் எனக்கு.

முதுகெலும்பின் அடுக்குகளெங்கும்
அடுக்கடுக்காய் வலி நரம்புகள்
வரிந்து சுற்றப்பட்டிருக்கின்றன.

மெதுவாய்த்தான் நகர முடிகிறது
பாதங்களில் மேல்நோக்கி
அறையப்பட்டிருக்கின்றன ஆணிகள்.

உட்கார்ந்தால் எழும்புவதற்கும்
எழுந்தால் உட்கார்வதற்கும்
இடுப்போடு நான்
இன்னொரு உடன்படிக்கை
இடவேண்டி இருக்கிறது.

வேப்பமரத் தைலமும்,
முருங்கைக்கீரை சாறும் தான்,
இன்னும்
இழுத்துப் பிடித்திருக்கின்றன என் உயிரை.

எல்லா வேதனைகளும்
ஒன்றுடன் ஒன்று
சண்டையிட்டுக்கொண்டிருக்கும் போது,
தொலைபேசி ஒலிக்கும்.

நலமா எனும் தொலைதூர மகனின்
விசாரிப்புக் குரலுக்கு
பரம சுகம் என
பட்டென்று என் வாய் பதில் சொல்லும்.

அவனுடைய சின்னச் சின்ன
வருத்தங்களுக்காய்
மனதின் மத்தியில்
புதிது புதிதாய் வலிகள் முளைக்கும்.

புரியவில்லை அம்மா ..

Image result for south indian wedding bride sad

 

அம்மா.
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மொழிபெயர்த்து
அமுதூட்டுவாய்.
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.

பாவாடைப் பருவத்தில்
என் இடுப்பில்
புடவை கட்டிவிட்டு
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.
ஏனோ எனக்குப் புரியவில்லை.

அறிவுக்குள் காரணங்கள் விளங்காத
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்
பூரித்தாய்.
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது.

அந்தி வந்து வாசல் தட்டும் முன்
நான் வந்து சேரவேண்டுமென்று
கோபக்குரலில் விளக்கினாய்
முழுதாய் படராத இருட்டுபோல
சில இடங்கள் புரியவேயில்லை.

பள்ளிக்கூடத்தின் பலகைகளில்
தரவரிசையில் நான்
தலைகாட்டியபோதெல்லாம்
அடக்கமுடியா ஆனந்தத்தில் அணைத்துக் கொள்வாய்,
அப்போதெல்லாம்
தினம் தினம் தேர்வுகள் வராதா என்று யோசித்திருக்கிறேன்.

வலிகளின்
இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்­ர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் மடியில் கவிழ்ந்தழுதிருக்கிறேன்.

என் கண்கள் துடைக்கும்
உன் முந்தானை நுனி,
என் வலிகள் பிய்த்தெறியும் உன் விரல் நுனி,
இவைகளின் தைரியத்தில்,
நான்
அழுவதற்குக் கூட அச்சப்பட்டதில்லை.

ஆனால்,
இன்று பயமாய் இருக்கிறது எனக்கு,

எப்போதும் சிரிக்கும்
உன் கண்கள் முழுதும் கண்­ர்,
இறுக்கக் கட்டியிருக்கிறாய்
உன் ஆறுதல்க் கரங்களை.
உன் கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றுகிறது.

பாரமாய் என் கழுத்தில்
புத்தம் புதுத் தாலி.

இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நீள் பாதை..

Image result for girl talking phone in room

 

பிரியமே..
வருடங்கள் எவ்வளவு விரைவாய்,
பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது
பார்த்தாயா நீ ?

உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு,
நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது
உன் கரம் கோர்த்து,
கூந்தலின் இழையிடையே விரல் வரைந்து
மூச்சுக்காற்று மூச்சுத்திணறும் நெருக்கத்தில்
மன்னிப்புக் கேட்ட பொழுதுகள்..

நீயும் நானும் தவிர
உலகத்தில் எல்லாமே ஐந்தறிவு ஜ“வன்கள் என்று,
தூக்கமே தூங்கத்துவங்கிய பின்னிரவுப் பொழுதிலும்,
கதைபேசிக் கதைபேசியே
நாட்களைக் கிழித்தெறிந்த நாட்கள்.

உன் உதட்டுக்கும்
என் உதட்டுக்குமிடையே மட்டும்
ஓயாமல் நடந்துகொண்டிருந்த
தொடர் ஒப்பந்தக் காலங்கள்,

வாழ்த்து அட்டை கவர்களின்
ஓரம் கூடக் கிழியாமல்
காதலின் முத்திரைகள் என்று
முத்தமிட்டு சேமித்துக் கரைத்த வருடங்கள்

இப்போது,
மனசின் வெயில்ப் பிரதேசங்களில்
நிகழ்ந்தவற்றின் சில
நிழல்ப்பதிவுகள் பட்டுமே.
கல்லூரிக்குச் செல்கின்றன நம் குழந்தைகள்.
காதலிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

முன்னினைவுகள் வந்து முகம் தட்டும்
பின்னிரவுப்பொழுதில் அவ்வப்போது உன்
முகம் பார்த்துக் கிடக்கிறேன்..
ஆழமாய்த் துயில்கிறாய் நீ,
அதே அழகுடன்.

அடுத்த அறை தொலைபேசியில்
நம் மகள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்
அதே சிரிப்புடன்.

 

அம்மா.

கல்லூரி பாடத்திட்டம் ஒன்றில் இணைந்த கவிதை

Image result for mother art

கல்லூரி பாடத்திட்டம் ஒன்றில் இணைந்த கவிதை

———————————–

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
பதக்கங்கள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

உன் கேள்விகளும் உள் இரசனைகளும்

Image result for Love fantasy

பிரியமே,

காதலில்
கேள்விகள் எழக் கூடாது
எழுந்தால்
பதில்கள் உள்ளத்தின்
உளறல்களாய் தான் விழும்.

ஏன் என்னை
காதலிக்கிறாய் என்கிறாய்?
வண்ணத்துப் பூச்சிக்கு
வர்ணங்களும்,
இதயத்துக்கு காதலும்
இயல்பாய் வருவது இயற்கையடி.

என்னை எவ்வளவுப்
பிடிக்கும் என்று
எடையிடச் சொல்கிறாய்.
அளவைகளையே அளக்கும்
பாசத்தை அளக்க
எந்த தராசைத் தேடுவேன் ?

எப்போது என்னை
பிடிக்க ஆரம்பித்தது என்கிறாய் ?
முதல் பர்வையில் வந்த
கிளர்ச்சியின் வளர்ச்சிதானடி
இன்றைய என்
கலம் தளும்பும் காதல்.

கடைசி வரை
காதலிப்பாயா என்கிறாய்,
எதன் கடைசி ?
அந்தமில்லா அன்பின் கடைசியா ?
இல்லாத ஒன்றோடு மல்லிடல்
நிழல் யுத்தமல்லவா ?

பிரபஞ்சத்தை பாரேன்
என் பிரியமே.

தாழம்பூவில் தவமிருக்கும்
வாசனை வண்டிடம் உண்டு
காதலின் சுவாசம்.

கிளை கொத்திக் கடக்கும்
கிளிகளின் அலகிலும்,
வலை தொத்திக் கிடக்கும்
மீன்களின் கண்களிலும்,
விலகாத காதல் அகலாமல்.

காதல்,
இயற்கைக்கு இயற்கை
பச்சை குத்திச் சென்ற
பகுத்தறிவு.

இதில்
விடைகளை விடப் பெரிது
உணர்வுகளின் உரையாடல்களே.

பதில்களை விட
எனக்குப் பிடித்ததென்னவோ
பதில் தெரிந்தும்,
பிடிவாதமாய் பல்லிடுக்கில்
நீ கடிக்கும்
பிள்ளைக் கேள்விகளே.

அவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.

Image result for mental girl

சடைபிடித்த தலையும்,
புழுதிக் கன்னங்களுமாய்,
கிழிந்த பாவாடையை
வாழை நாரில் கட்டி
உடுத்தி நடப்பாள் அவள்.

பைத்தியக்காரி லெச்சுமி,
என்று
ஒளிந்திருந்து மாங்கொட்டை
எறிந்திருக்கும் சிறுவர்களும்,

தூரப் போ என்று
துரத்தி நடக்கும் மக்களும்,

பாவம் என்று
உச்சுக் கொட்டி நடக்கும்
சிழவிகளும்
ஊருக்குள் ஏராளம்.

ஆனாலும் அவள் கைகள்
எச்சில்
மிச்சங்களையும்
எப்போதாவது தான் சம்பாதிக்கும்.

எந்த அரசியல் மாற்றங்களிலும்
அலைக்கழிக்கப் படாமல்,
எந்த ஆசைக்குள்ளும்
சிரச்சேதம் செய்யப்படாமல்
அவள் சுற்றி வருவாள்.

‘உன் கார்குழல் பூவில்
ஓர் குழவி
கவிதை எழுதுகிறதென்று’
அவள்
இளமைக்காலத்தில் எவனாவது
மோக மை முக்கி
கவிதை எழுதியிருக்கக் கூடும்.

எப்போதேனும் ஒரு
பத்துரூபாய் கொடுப்பேன்,
அவள் கை தீண்டிவிடாத
தூரத்திலிருந்து.

சிரித்துக் கொண்டே என்
கன்னம் தொட்டு விலகுவாள்.

‘பைத்தியத்துக்கு
காசு கொடுக்கிறதும்
பன்றிக்கூட்டத்தில்
குன்றி மணி தூவுறதும் ஒண்ணு தான்,
பயனில்லை’ –
கடக்கும் யாராரோ
சொல்லிப் செல்வார்கள்.

எப்படி அவள்
பசியின் பரப்புகள்
நிரம்புகிறதென்பதே
புரிந்ததில்லை எனக்கு.

இந்த முறை
ஏதேனும் கொடுக்கவேண்டுமென்று,
தீர்மானித்துத்
தரையிறங்கினேன்.

காலத்தின் கடிகாரம்
நெஞ்சில்
முரட்டுக் கொம்புகளால்
என்னை
மூர்க்கத்தனமாய் மோதியது.

முதன் முதலாக
அழுக்குக்கு அஞ்சாமல்,
பாசத்தோடு தீண்டினேன்,
அவள் கல்லறைக் கற்களை.

இன்னொரு வேண்டுகோள்.

Image result for Guy sad

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.

தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.