கவிதை : மோக நதிகள்

மாலையில் உன்
நினைவு அழுத்துகையில்
யாரோ என்
உள்ளுக்குள் புகுந்து
உணர்வுகளுக்குள் தீ மூட்டினர்.

பின்னர்
பின்னிரவில்
உன் நினைவுகள் பின்னுகையில்
எனக்குள்
மோக நதிகள் முளைத்தெழுந்தன.

தூக்கம் பிடிக்காத
ஜாமங்கள் கடக்கையில்
சில்மிஷச் சந்தையாய்
படுக்கை
உன் விரல்களைக் கடன் வாங்கி
கலைந்தது.

அதிகாலைப் படுக்கையிலும்
ஆழிப் பேரலையின்
அவசரக்
கனவுகள் தொடர்ந்தன.

வெயில் பூத்த கதவு திறந்தபின்
நினைவுகள்
சற்று
கண்ணியத்துடன் நடந்து கொண்டன.
 
அவை
மோகத்தின் வாசலுக்கு
மதகு கட்டிவிட்டன.

சில்மிஷத்தின் சன்னலை
சாத்தி விட்டன.

இரவுக்கும் பகலுக்கும்
இடையேயான
உன்
நினைவுகளின் கூர்வாள்கள்

கற்றுத் தந்தன
பக்குவப் படாத பால்யக் காதலை.

விலக்கப்பட்ட கனி

42-15555067.jpg

எங்கோ பார்த்தபடி விரியும்
இந்தப்
பார்வையின் நீட்சியாய்
என்னை
நெருங்குவாய்,

பின்
என் கண்கள்
சிரிக்கிறதென்று
கண்டிப்பாய் சொல்வாய்.

வாரங்கள் போனபின்
வருடுவாய்
விரல்களை.

பின்
தொடுதலின் எல்லையை
விரிதாக்கி
என் பலங்களை
பலவீனப் படுத்துவாய்

சீண்டல்களின் வெப்பத்தில்
உன்னை
என்னில் ஊற்றி
கொதிக்க வைப்பாய்.

பின்னர்
கலவியை நோக்கியே
நடக்கும்
உனது
உரையாடல்களும் விளையாடல்களும்.

நான்
என்னைத் தந்து
காதலை யாசிப்பேன்,
நீ
காதலைத் தந்து
என்னை புசித்துப் போவாய்.

பின்
எங்கோ பார்த்தபடி
விரியும்
உன் பார்வைகள்.

விலக்கப் பட்ட கனியாய்
வீதியில்
கிடப்பேன் நான் மட்டும்.