ஓர் தாயின் கடிதம்.

Image result for south indian pregnant painting

 

 

என்
பரவசப் படிக்கட்டுகளில்
பனிக்கட்டியாய்
உறைந்த என் மழலையே.

இப்போதெல்லாம்,
என்
விரல்களின் முனைகளில்
நகங்களுக்குப் பதிலாய்
வீணைகள் முளைக்கின்றன.

என்
கண்களுக்குள்
புதிதாய் சில
கருவிழிகள் உருவாகின்றன.

புலரும் காலைகளும்,
நகரும் மாலைகளும்
உன்
புன்னகை விரிப்புகளில் தான்
பயணிக்கின்றன.

உன்
சின்னச் சின்ன அசைவுகளில்
தான்
என் கவிதைக் கனவுகள்
பிரசுரமாகின்றன.

என் உயிரின் நீட்சி,
உன் வரவின் ஆட்சி.

என்னிடம்
வார்த்தைகள் இல்லை.
மலர்க் கண்காட்சிக்குள்
விழுந்து விட்ட
பூப் பிரியை யாய்
பொழுதுகள் உலர்கின்றன.

ஒவ்வொர் நாளும்
என்
கனவுகளின் கதவுகள்
அகலமாய் திறக்கின்றன.

மனசு மட்டும்
கைகளில் இறங்கி வந்து
வயிறு தடவிப் பார்க்கிறது.

நெருங்கி வரும்
உன்
ஜனன நாளை.

 

அம்மா.

கல்லூரி பாடத்திட்டம் ஒன்றில் இணைந்த கவிதை

Image result for mother art

கல்லூரி பாடத்திட்டம் ஒன்றில் இணைந்த கவிதை

———————————–

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
பதக்கங்கள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

உன் கேள்விகளும் உள் இரசனைகளும்

Image result for Love fantasy

பிரியமே,

காதலில்
கேள்விகள் எழக் கூடாது
எழுந்தால்
பதில்கள் உள்ளத்தின்
உளறல்களாய் தான் விழும்.

ஏன் என்னை
காதலிக்கிறாய் என்கிறாய்?
வண்ணத்துப் பூச்சிக்கு
வர்ணங்களும்,
இதயத்துக்கு காதலும்
இயல்பாய் வருவது இயற்கையடி.

என்னை எவ்வளவுப்
பிடிக்கும் என்று
எடையிடச் சொல்கிறாய்.
அளவைகளையே அளக்கும்
பாசத்தை அளக்க
எந்த தராசைத் தேடுவேன் ?

எப்போது என்னை
பிடிக்க ஆரம்பித்தது என்கிறாய் ?
முதல் பர்வையில் வந்த
கிளர்ச்சியின் வளர்ச்சிதானடி
இன்றைய என்
கலம் தளும்பும் காதல்.

கடைசி வரை
காதலிப்பாயா என்கிறாய்,
எதன் கடைசி ?
அந்தமில்லா அன்பின் கடைசியா ?
இல்லாத ஒன்றோடு மல்லிடல்
நிழல் யுத்தமல்லவா ?

பிரபஞ்சத்தை பாரேன்
என் பிரியமே.

தாழம்பூவில் தவமிருக்கும்
வாசனை வண்டிடம் உண்டு
காதலின் சுவாசம்.

கிளை கொத்திக் கடக்கும்
கிளிகளின் அலகிலும்,
வலை தொத்திக் கிடக்கும்
மீன்களின் கண்களிலும்,
விலகாத காதல் அகலாமல்.

காதல்,
இயற்கைக்கு இயற்கை
பச்சை குத்திச் சென்ற
பகுத்தறிவு.

இதில்
விடைகளை விடப் பெரிது
உணர்வுகளின் உரையாடல்களே.

பதில்களை விட
எனக்குப் பிடித்ததென்னவோ
பதில் தெரிந்தும்,
பிடிவாதமாய் பல்லிடுக்கில்
நீ கடிக்கும்
பிள்ளைக் கேள்விகளே.

அவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.

Image result for mental girl

சடைபிடித்த தலையும்,
புழுதிக் கன்னங்களுமாய்,
கிழிந்த பாவாடையை
வாழை நாரில் கட்டி
உடுத்தி நடப்பாள் அவள்.

பைத்தியக்காரி லெச்சுமி,
என்று
ஒளிந்திருந்து மாங்கொட்டை
எறிந்திருக்கும் சிறுவர்களும்,

தூரப் போ என்று
துரத்தி நடக்கும் மக்களும்,

பாவம் என்று
உச்சுக் கொட்டி நடக்கும்
சிழவிகளும்
ஊருக்குள் ஏராளம்.

ஆனாலும் அவள் கைகள்
எச்சில்
மிச்சங்களையும்
எப்போதாவது தான் சம்பாதிக்கும்.

எந்த அரசியல் மாற்றங்களிலும்
அலைக்கழிக்கப் படாமல்,
எந்த ஆசைக்குள்ளும்
சிரச்சேதம் செய்யப்படாமல்
அவள் சுற்றி வருவாள்.

‘உன் கார்குழல் பூவில்
ஓர் குழவி
கவிதை எழுதுகிறதென்று’
அவள்
இளமைக்காலத்தில் எவனாவது
மோக மை முக்கி
கவிதை எழுதியிருக்கக் கூடும்.

எப்போதேனும் ஒரு
பத்துரூபாய் கொடுப்பேன்,
அவள் கை தீண்டிவிடாத
தூரத்திலிருந்து.

சிரித்துக் கொண்டே என்
கன்னம் தொட்டு விலகுவாள்.

‘பைத்தியத்துக்கு
காசு கொடுக்கிறதும்
பன்றிக்கூட்டத்தில்
குன்றி மணி தூவுறதும் ஒண்ணு தான்,
பயனில்லை’ –
கடக்கும் யாராரோ
சொல்லிப் செல்வார்கள்.

எப்படி அவள்
பசியின் பரப்புகள்
நிரம்புகிறதென்பதே
புரிந்ததில்லை எனக்கு.

இந்த முறை
ஏதேனும் கொடுக்கவேண்டுமென்று,
தீர்மானித்துத்
தரையிறங்கினேன்.

காலத்தின் கடிகாரம்
நெஞ்சில்
முரட்டுக் கொம்புகளால்
என்னை
மூர்க்கத்தனமாய் மோதியது.

முதன் முதலாக
அழுக்குக்கு அஞ்சாமல்,
பாசத்தோடு தீண்டினேன்,
அவள் கல்லறைக் கற்களை.

இன்னொரு வேண்டுகோள்.

Image result for Guy sad

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.

தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

லாடம் அடித்த கனவுகள்

Image result for Girl in dreamபிரிய நிலவே,
எத்தனை நாளாகிறது
உன்னைப் பார்த்து.
ஓர்
பதினான்காம் பிறைபோல
நினைவிடுக்கில்
நகர்கின்றன நாட்கள்.

காதலின் கணங்களும்
காத்திருப்பின் கனங்களும்
கால்களை
பாறையோடு பதியனிட்டதாய்
இறுகிக் கிடக்கின்றன.

தேடலின் விழிகள் கூட
உறைந்து விட்டன.
ஆனாலும்
விடாமல் என் உள்ளத்தை மட்டும்
உழுது கொண்டே இருக்கிறேன்.

உன்
ஒவ்வோர் புன்னகைக்கும்
உயிரின் ஒருபாதையை
உயிலெழுதிய பழக்கத்தால்
இன்று
மிச்சமிருப்பதெல்லாம்
பட்டா இல்லாத பகுதிகளே.

என்
பொருளாதாரப் பல்பறித்து
காதலுக்கு
காலணி நெய்ததில்
என் முதுகெலும்பு முறித்தே
கைத்தடி செய்ய வேண்டிய
கட்டாயம் எனக்கு.

ஆனாலும்,
உன் வயல்க்காட்டுத் தூறல்
வற்றி விடவில்லை என்றே,
என் நாற்றுக்கள்
நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.

ஒத்திகைக் காலக்
குத்தகை முடிந்ததால்,
அரங்கேற்ற மேடை
தூண்களில்
தவறாமல் தவமிருக்கிறேன்.

நீ
வந்தபின் விரிப்பதற்காய்
தோகைகளைக் கூட
துடைத்து வைத்திருக்கிறேன்.

நீ,
வரும் வடிவத்தை மறவாமல்
கடிதத்தில் அனுப்பு.

நீ
பல்லக்கில் வருவாயானால்
நான்
கடிவாளத்தோடு
காத்திருக்கக் கூடாதில்லையா ?

பிரிய மனைவிக்கு. பிரியமுடன்.

Image result for man writing

 

அழகே,
அனிச்ச மலரின்
அடுத்த உறவு நீதானா ?

தொட்டாச்சிணுங்கியின்
உயிர்த்தோழியும் நீதானா ?

மாங்கல்ய பந்தங்களுக்குள்
முடிச்சிட்ட பின்
அழுகையை
அவிழ்த்து விடுகிறாயே.

கூந்தல் இழைகள்
கலைந்து புரள்வது போல
உன்
குற்றச் சாட்டுகளை
பறக்க விடுகிறாயே.

உன்னைக் கொஞ்சுவது
குறைந்து போனது என்கிறாய்,
பழைய நேசம்
பறந்து போனதா என்கிறாய்.

புரிந்து கொள் பிரியமே
கவிதை அழகுதான்
ஆனால்
கவியரங்கமே வாழ்க்கையாகி விடுமா ?

ஒரு கூரையின் கீழ்
உயிர்ப் பரிமாற்றம் செய்பவர்கள் நாம்,
இதில் தீர்ப்பில்லா வழக்குகளுக்காய்
வழக்காடுதலை
வழக்கமாக்கலாமா ?

நான் வாசமானவன் என்று
வண்ணமலர்
பச்சை குத்திக் கொள்வதில்லை.

என் நேசமதை
வார்த்தைகளில் சொல்லாவிடில்
வற்றி விட்டது என்பதா ?

உன் கடந்தகாலமும்
என் கடந்த காலமும்
கடந்து போன சுவடுகளில் தான்
நம் நிகழ்காலம்
நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதில் ஏனடி இந்த
இறந்தகாலச் சிந்தனைகள் ?

உன்னைக் காதலிக்கத்துவங்கிய
முதல் வினாடியில்
உன்னில் தீக்குளித்து முடித்தேன்.
அந்த அக்கினி வாசம் இன்னும்
அகலவேயில்லை.

காதலின் கணவாய்களில்
என்
காதலைச் சொன்ன நான்
திருமணத்தின்
நிறுத்தத்துடன் அதை
நிறுத்திவிட்டது தவறுதான்.

புரிந்து கொண்டேன்..
மௌனம்
காதலியாய் இருக்கும் போது மட்டுமல்ல.
மனைவியான பின்னும்
மன்னிக்க முடியாததுதான்.