சிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

வற்றாத வளம் தன்னை
முற்றாகத் தருகின்ற
உற்ற துணையாம் இயற்கையே போற்றி.

தீராத வரம் தன்னை
ஆறாகத் தருகின்ற
மாறாத அருளாளன் இறையே போற்றி

அனைவருக்கும் என் அன்பின் வணக்கங்கள்.

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள் குறித்து உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என நினைக்கிறேன்.

‘தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இறைவன்’ என என் அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இன்றைக்குப் பார்த்தால், தூணிலும் துரும்பிலும் இருப்பது நெகிழி தான் என்று சொல்லத் தோன்றுகிறது. சின்ன விஷயம் தானே என நினைத்து நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சிறு பிளாஸ்டிக் பொருளும் பூமியின் மீது நாம் தூவும் ஒரு துளி விஷம் என்பது தான் உண்மை.

இங்கே வந்தபோது தண்ணீர் குடித்தேன். நெகிழிப் பயன்பாடு. ஒரே ஒரு பாட்டில் தானே என உதாசீனப்படுத்தி விட முடியாது. காரணம், உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை 10 இலட்சம் ! அடுத்த ஆண்டு இது நிமிடத்துக்கு பன்னிரண்டு இலட்சம் என மாறும் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு ஆண்டுக்கு சுமார் 500 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா ?

நேற்று அப்பாவுடன் கடைக்குச் சென்றபோது ஒரு பொம்மை வாங்கினேன். அதை ஒரு நெகிழிப் பையில் போட்டுக் கொடுத்தார்கள். ஒரு பை தானே என நாம் அலட்சியமாய் இருந்து விட முடியாது. காரணம் உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் ! இந்தப் பைகளெல்லாம் பூமியின் மீது போர்த்தப்படுகின்ற சவத் துணிகள் அல்லவா ?.

புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே போனால் நேரமாகிவிடும். எனினும் கடந்த அரை நூற்றாண்டுகளில் நாம் சேமித்த பிளாஸ்டிக் குப்பைகளின் எடை சுமார் 9 பில்லியன் டன்கள். அதாவது எட்டு இலட்சம் ஈபில் டவர்களின் எடைக்கு சமமான அளவு குப்பை. இதில் வெறும் ஒன்பது சதவீதம் மட்டுமே மறு சுழற்சிக்குச் செல்கிறது. மற்றதெல்லாம் மண்ணின் மீது அழியாமல் கிடந்து, மண்ணை அழிக்கிறது. தாயாய் நினைக்கின்ற பூமிக்குச் செய்கின்ற அதிகபட்ச துரோகமல்லவா இது !!

வளமான நமது பூமியை, மலடான பூமியாய் மாற்ற இந்த பிளாஸ்டிக் மட்டும் போதும். இந்த பிளாஸ்டிக் ஆயிரம் ஆண்டுகள் வரை அழியாமல் பூமியில் கிடக்கும். அதாவது இப்போது பூமியில் போடுகின்ற பிளாஸ்டிக் கிபி 3020 ம் ஆண்டு வரை அழியாமல் இருக்கும். எவ்வளவு அச்சமூட்டும் விஷயம் இல்லையா ?

பிளாஸ்டிக்கை புதைத்தால் பூமி மாசடைகிறது.
அதை எரித்தால், காற்று மாசடைகிறது.
நீரில் மிதந்து தண்ணீர் மாசடைகிறது !

இந்த மாசு என்பது நம்மையும் நமது ஆரோக்கியத்தையும் மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. சுமார் 11 இலட்சம் பறவைகளும், உயிரினங்களும் ஆண்டு தோறும் இந்த பிளாஸ்டிக்கினால் உயிரை இழக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்கை உட்கொள்கிறோம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதை மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீமையானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இன்றைக்கு பல புதிய புதிய நோய்கள் புறப்பட்டு வர ஒரு முக்கியமான காரணம் இந்த நெகிழி தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! அதை நாமே தான் தீர்மானிக்கிறோம்.

நெகிழியும் ஆபத்தும் ஒற்றை நாணயத்தின் இரட்டைப் பக்கங்கள் போல. பயன்படுத்துவதை நிறுத்துவதே பூமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

பல நாடுகள் நம்மை அழிக்கும் நெகிழியைத் தடை செய்திருக்கின்றன. நாடுகள் தடை செய்கிறதோ இல்லையோ, நாம் அதை தடை செய்ய வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் போது சுமந்து செல்கின்ற துணிப் பைகள், நெகிழிப் பயன்பாட்டை கணிசமாய்க் குறைக்கும் !

வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தினால், நெகிழியின் ஆபத்து கணிசமாய்க் குறையும் !

பிளாஸ்டிக் குடங்களைத் தவிர்த்து மண் குடங்களைப் பயன்படுத்தினால், நெகிழியின் உற்பத்தி கணிசமாய்க் குறையும். !

பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மாற்று பாட்டில்களில் தண்ணீர் சுமந்து வந்தால், நெகிழியின் வீச்சு கணிசமாய்க் குறையும்.

பிறர் என்ன செய்வார்கள் என்று பார்ப்பதல்ல, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்பதே சரியான வழிமுறையாகும்.

அழிவின் தோழனாம்
நெகிழியை ஒழிப்போம்.

வாழ்வின் தோழனாம்
இயற்கையைக் காப்போம்

என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி

*

வந்துவிட்டதா, பிளாஸ்டிக் விடைபெறும் காலம் ?

plastic_household_items

ஆடித் தள்ளுபடிக்கு கடையில் புடவை எடுத்து ஒவ்வொரு புடவையையும் ஒவ்வோர் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வரும் அம்மாக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீங்கு பற்றி ?

பயணத்துக்குச் செல்லும் போதெல்லாம் நான்கைந்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி, தண்ணீரைக் குடித்து முடித்தபின் அலட்சியமாய் தூக்கி வீசும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது பிளாஸ்டிப் பொருட்கள் பூமியை மாசுபடுத்தி விடுமே எனும் கவலை ?

சற்றே நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை பொருட்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருக்கின்றன ? வீட்டு உபயோகப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கருவிகள் என எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயம்.

பிளாஸ்டிக் பொருகள் பயன்படுத்த வேண்டாம் என்று எத்தனை தான் அறிவுரைகள் சொன்னாலும் அவை இன்றைக்கு நடைமுறை சாத்தியமற்றுப் போவதற்கு மிக முக்கியமான காரணம் சரியான மாற்றுப் பொருள் இல்லாமை!

இந்த பிளாஸ்டிக் எமனின் விஸ்வரூப வளர்ச்சி இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் மாபெரும் கவலையாய் உருவெடுத்து பல ஆண்டுகாலமாக பேசப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் முடியாமல், அழியவும் செய்யாமல், நச்சுத் தன்மைகளை உள்ளடக்கி வேண்டாத விருந்தாளி போல கூடவே திரியும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விலக்கி விடும் வாய்ப்புக்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமே வருடத்துக்கு குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீர் விற்கப்படுகிறதாம். உலக அளவில் பார்த்தால் சுமார் முப்பது இலட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆண்டு தோறும் விற்கப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். இவற்றில் பெரும்பாலானவை பூமிக்குள் திணிக்கப்பட்டு பூமியை மாசுபடுத்தும் பணியைத் தான் செய்கிறது.

பூமியை மாசுபடுத்துவதுடன் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் எ எனும் அமிலம் மூளையின் செயல்பாடுகளையும், மனநிலையையும் பாதிக்கலாம் என ஏல் பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன் ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது. குரங்குகளை வைத்து நிரூபிக்கப்பட்ட இந்த ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தலாம் என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

இன்னொரு கவலை இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவு ! அமெரிக்காவில் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க மட்டுமே இருபது இலட்சம் பாரல்கள் எண்ணெய் ஆண்டு தோறும் தேவைப்படுகிறதாம். ஒரு இலட்சம் கார்கள் சுமார் ஓராண்டு காலம் ஓடத் தேவையான எரிபொருள் இது என்பது குறிப்பிடத் தக்கது.

அப்படியானால் பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல பிரச்சினை, அதைத் தயாரிப்பதனால் மறை முகமாக எரிபொருள் வளத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதும் ஒரு பிரச்சினையே.
 
இதற்கு ஏதேனும் மாற்றுப் பொருள் கண்டுபிடித்தாகவேண்டும் என ஆராய்ச்சிகள் படு வேகமாய் இயங்கிக் கொண்டிருக்க,  இதோ நாங்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறோம் என கவன ஈர்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர் ஜெர்மன் விஞ்ஞானிகள்.

மரத் திரவம் ! அதுதான் அந்த புதிய வழி. பிளாஸ்டிக் பொருட்களுக்குச் சரியான மாற்றுப் பொருள் இது தான். மாசு குறித்த கவலையற்றது, எந்த நச்சுத் தன்மையுமற்றது, இனிமேல் பூமி அசுத்தமடையாது என உற்சாக அறிக்கை வெளியிட்டுள்ளது பான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி.

ஆர்போஃபோம் எனப்படும் இந்த புதிய பொருள் மரத்திலுள்ள மெல்லிய திசுக்களையும் வேறு பல பொருட்களையும் இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பொருள் எந்தவிதமான நச்சுத் தன்மையும் அற்றது, எனவே பிளாஸ்டிக் பொருளுக்குரிய அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பாய் இருக்கும் நார்பர்ட் என்பவர்.

காகிதம் செய்வதற்குப் பயன்படாத மரப் பகுதியான லிக்னின் இந்த புதிய பொருளை உருவாக்க உதவும் என்பது கவனிக்கப்படவேண்டிய தகவல் என்கிறார் குழுவின் தலைவர் எமிலியா. இதன் மூலம் காகித ஆலைகளில் தேவையற்றதாய் ஒதுக்கப்படும் பொருள் இந்த மரத் திரவத்தின் மூலப்பொருளாகிவிடுகிறது.

இந்தப் பொருள் பிளாஸ்டிக்கைப் போன்ற தோற்றத்துடன், ஆனால் மரத்துக்கான குணாதிசயங்களுடன் விளங்கும் என்றும், பிளாஸ்டிக்கைக் கொண்டு என்னென்ன தயாரிக்க முடியுமோ அவற்றையெல்லாம் இந்தப் பொருளைக் கொண்டும் தயாரிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே ஒரு சிக்கல் இந்தப் பொருளில் அடங்கியுள்ள சல்பர் எனும் வேதியல் பொருள். இதை 90 விழுக்காடு அளவுக்குக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். இதன் மூலம் சற்றும் பாதிப்பில்லாத வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கலாம்.

சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சொல்லப்படும் இந்த மரத் திரவம், மறு சுழற்சிக்கும் ஏதுவானது என்பது நம்பிக்கையூட்டுகிறது.

எப்படியோ நீண்ட நெடுங்காலமாக பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருந்த உலகுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்றாய் வெளிவந்திருக்கிறது இந்த புதிய முறை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

பிடித்திருந்தால் ஒரு கிளிக்…