கைபேசிக் கவிதைகள்


சீவி சிங்காரித்த
செல்ல மகளை
அழைத்துச் செல்லும் அழகுடன்
அலங்கார குட்டிப் பைக்குள்
கைபேசி அடக்கி
கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள்.

*

நெரிசல் பயணங்களில்
ஏதோ ஓர்
செல்பேசிச் சிணுங்குகையில்
அனிச்சைச் செயலாய்
கைபேசி தொடுகின்றன
எல்லா கைகளும்

*
இரயில் பயணத்தில்
குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
தனியே சிரிக்கும் பெண்கள்
அவ்வப்போது
அசடு வழிகின்றனர்.
நிலமை உணர்ந்து

*

அழைப்புகளின்றி
அமைதியாய் கிடக்கும் கைபேசியை
வேலை செய்கிறதா
என சோதித்துப் பார்க்கின்றன
சந்தேக விரல்கள்.

*
அலுவலக கணினி திரைகள்
நாட்டியமாடுகின்றன
ஓரமாய்
அதிர்ந்து சிணுங்கும்
கைபேசியில் அழைப்பில்.

*
நள்ளிரவு தாண்டிய
ஜாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது.

*
ஆயுத பூஜை நாளில்
நெற்றியில் மஞ்சள் பொட்டு சூடும்
விலையுயர்ந்த கைபேசியில்
ஸ்கீரின் சேவராய்
பிரிட்னி ஸ்பியர்ஸ்

*
அலுவலகத்தை
வீட்டின் சமையலறை வரையும்
வீட்டை
அலுவலகத்தின் இருக்கை வரையும்
நீட்டிக்கிறது
கைபேசி.

பிடித்திருந்தால் கிளிக்கி வாக்களியுங்கள்…

கவிதை : பனைமர நினைவுகள்

palm.jpg

உடைந்து வழியும்
நிலவை
கிழியாத இலையில்
ஏந்திப் பிடித்திருக்கும்
பனைமரம்.

அதன்
சொர சொர மேனியில்
சிக்கிக் கொண்டால்
மார்பு
யுத்தக் களமாகி விடாதா என
விரல்கள் தொட்டு
வியர்த்திருக்கிறேன்.

பனைமரத்தடியில்
பறங்காய் சுட்டுத் தின்று,
கலையம் சாய்த்துக்
கள் குடிக்கும்
பனையேறியைக் கண்டு
பயந்துமிருக்கிறேன்.

சுட்ட பனங்காயில்
சிவந்த நாரை
சூயிங்கமாய் தின்று மகிழ்ந்ததும்,
நொங்கு தின்ற
கூந்தை எடுத்து
வண்டி செய்து விளையாடியதும்
ஞாபக நிறுத்தங்களில்.

திளாப்பும் கையுமாய்
வாழ்ந்த
என் தாத்தாவையும்,

பதனீரும் விறகுமாய்
வாழ்ந்த
என் பாட்டியையும்,

இந்த
பனைபரம் தான் எனக்கு
நினைவூட்டிக் கொண்டிருந்தது
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை.

இப்போது,
தாத்தாவின்
மங்கிப் போன
புகைப்பட வெளிச்சத்தில்
அசைகின்றன
என் பனைமர நினைவுகள்.

கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்

bed.jpg

சில நினைவுகள்
மூழ்கித் தொலைகின்றன,
சில
தூண்டில்களை மூழ்கவிட்டு
மிதவைகளாய் மிதக்கின்றன.

கல்லூரிக்குச் சென்றபின்
நான்
மறந்து விட்டேனென்று
என் ஆரம்பகால நண்பன்
அலுத்துக் கொண்டான்,

வேலைக்குச் சென்றபின்
நட்பை
மறந்து விட்டதாய்,
கல்லூரி நண்பன்
கவலைப் பட்டான்.

திருமணத்துக்குப் பின்
சந்திப்பதில்லையென்று
என்
சக ஊழியன்
சங்கடப்பட்டான்.

ஒவ்வோர்
முளைக்கு முன்னும்
சில
இலைகளை உதிர்த்துக் கொண்டே
மரம் வளர்கிறது.

ஆனாலும்
வேர்களுக்குள் இருக்கின்றன
உதிர்ந்த இலைகள்
உதிரம் ஊற்றிய ஈரப் பதிவுகள்.

கலியுகப் பொங்கல்

pongal.jpg

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
‘Happy Pongal” வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

நாளை விடுமுறை
ஏதோ some பொங்கலாம்
ஈ.சி.ஆர் போலாமா
கொஞ்சலுடன் பேசிக்கொண்டன
சாட் அறைகள்.

நாளைக்கு பொங்கலா ?
அப்போ
சன் டிவியிலே என்ன படம் ?
சாய்வாய் அமர்ந்து
ரிமோட் திருகும்
குடியிருப்பு வாசிகள்.

பேட்டிகளின் திணிப்பால்
‘கோலங்கள்’ பார்க்க முடியாத
பதட்டத்தில்
வீட்டு அம்மாக்கள்.

பொங்கலுக்கு
இரண்டு நாள் லீவில்
ஊருக்கு போகும் ஆசையுடன்
தூரத்து பணியாளன்.

தமிழன்
‘எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு’
பட்டிமன்றங்கள் பொதிகையில்.

ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்

வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.

பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

சோற்றுப் பானை

lunch.jpg 

சோற்றுப் பானை
இளைத்திருக்கையில்,

தட்டு நிறைய சாதமிட்டு
உண்ணும் வரை
சிரித்திருந்து,

நீங்க சாப்பிடலையா
எனும் கேள்விக்கு

ஏற்கனவே சாப்பிட்டாச்சு
எனும்
அப்பாவின் பதிலுக்கும்,

வயிறு சரியில்லை
எனும்
அம்மாவின் பதிலுக்கும்

உண்மையான அர்த்தத்தை
கண்டு கொள்ள
இத்தனை வருடங்கள்
தேவைப்பட்டிருக்கின்றன
எனக்கு.

ஒரு தார்ச்சலைக்குத் தாகம் எடுக்கிறது

road.jpg

சுடுகிறது எனக்கு.

சூரியன் என் முகத்திலும்
பூமி என் முதுகிலும்
உலை வைத்து உலை வைத்தே
உருக்குலைந்து போனது என் தேகம்.

என் மீது பாதம் வைத்தாலே
எண்ணைக்கொப்பறையில் விழுந்ததுபோல்
துடிக்கும் மக்கள்,
மோர்க் கோப்பைகளிலும்
இளநீர், குளிர்நீர் களிலும்
இதயம் வைக்கிறார்கள்.

ஆனால்
தொட்டுப் பார்க்கும் தொலைவிலிருந்தும்
தண்ணீர் லாரிகள் கூட எனக்கு
தயவு காட்டுவதில்லை.

என் முகத்தில் ஆயிரம் விழுப்புண்கள் .

புண்களைச் சரிசெய்ய
அனுப்பப் பட்டவர்கள்
எண்கள் சரிசெய்ய மட்டுமே பழக்கப்பட்டவர்கள்.

என் நாசித் துளைகள் எங்கும்
டீசல் புகை வழிய
உலகத்தின் நுரையீரல்கள்
ஈரம் வறண்டு போகின்றன.

என் தோள்களிலும்
கால்களிலும்
மிச்சப் பொருட்களின்
எச்சில் துளிகளாய் குப்பைக் குவியல்கள் !!!

சிலநேரங்களில் என்
நரம்புகளுக்கு இரத்ததானம் செய்யும்
அவசரத் தற்கொலையாளர்கள்
தானமாய்ச் செத்துப் போவதுண்டு.

எப்போதாவது வானம்
வருத்தப்பட்டு என் தேகம் நனைக்க
மேகம் கரைப்பதுண்டு.

பகலைப் போர்த்தியும்
இரவை உடுத்தியும்
மல்லாக்கப் படுத்திருக்கும் எனக்கும்
ஓடத்தோன்றுவதுண்டு.

எப்போதாவது வரும்
மந்திரியின் வருகைக்காய்
என் தினசரி நண்பர்களை
என் மீது
ஓடவிடாமல் ஒதுக்கும் போது.

அப்பாவே தான்

அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.

மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.

படிகள்

வாழ்க்கை
ஒவ்வோர் படிக்கட்டிலும்
ஒவ்வோர் புதையலை
ஒளித்து வைத்திருக்கிறது.

வாழ்பவர்களோ
படிக்கட்டுகளைத்
தாண்டித் தாண்டி
தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

படிக்கட்டுகளின் உச்சியில்
தான்
புதையல் இருப்பதாய்
தலைமுறை தவறாமல்
தவறாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

நிதானமாய் நடப்பவர்களை
ஓடுபவர்கள்
கோழைகள் என்கிறார்கள்.
காற்றுள்ள போதே
தூற்றத் தெரியாதவர்கள் என்று
தூற்றுகிறார்கள்.

தலைதெறிக்க ஓடி
மூச்சிரைத்து மூச்சிரைத்து
உச்சியில் போய்
முர்ச்சையாகி விடுகிறார்கள்.

ஓடுபவர்கள்
பதக்கங்களைச் சொந்தமாக்கி
படுக்கையில் சரிகிறார்கள்.

நடப்பவர்கள்
வாழ்க்கையைச் சொந்தமாக்கி
இடுக்கண்ணிலும் சிரிக்கிறார்கள்.

மரணத்துக்கு முந்திய
மணித்துளியில்,

வாழ மறந்து விட்டோ மே என்று
ஓடியவர்கள்
ஒப்பாரி வைக்கிறார்கள்.

அடுத்தத் தலைமுறையை
நடக்கப் பழக்கிய
நிம்மதியில்
நடந்தவர்கள் நித்திரையடைகிறார்கள்.

படிகள்
அடுத்த தலைமுறைக்காய்
புதையலைப் பத்திரப்படுத்தி
பேசாமல் கிடக்கிறது.

உனது குரல்

( இந்த வார புதிய பார்வை இதழில் வெளியான எனது கவிதை)

.
எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

விழாக்கால வாழ்த்துக்கள்

வயலோர
ஒற்றையடிப்பாதையில்
சாயமிழந்து போன
சைக்கிளை நிறுத்தி
வைத்து விட்டு
வருவார் தபால்காரப் பெரியவர்.

கிறிஸ்மஸ்,
புது வருடம்,
பொங்கல்
என
ஒவ்வோர் பண்டிகைக்கும்
அவருக்கான
காத்திருப்பு அதிகரிக்கும்.

காத்திருத்தலைக் கலைக்க
ஒரு சில
வாழ்த்துக் கடிதங்களேனும்
இருக்கும்
அவருடைய கைகளில்
எனக்காய்,

எப்போதும்
தோன்றியதே இல்லை
அவருக்கும்
ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.