நில் நிதானி காதலி

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.


நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.

உன் கண்களில்
கண்ணீர் வரக்கூடாதே
என்னும்
கவலையில் நான்.

நான்
கவலைப் படுவதால்
கண்ணீர் விடுகிறாய்
நீ

பூவா தலையா
கேட்கிறாய்
நீ.

காசு
என்கிறேன் நான்.

அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?

நீ சிரித்தாய்
சூரியன் மெல்ல இமைத்தான்,
உள்ளே வா,
நீ
வெளியில் நின்றால்
இரவு வராது.

நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

நில் நிதானி காதலி – என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற சில கவிதைகள் இவை ….

நிற்காத நிமிடங்கள்

விரல் உரசினாலே
மின்னலடித்த காலம் உண்டு
என்
உதடுகள் உரசினால் கூட
சலனமற்றிருக்கிறாய்
இப்போது.

உன்னுடைய
மனசுக்கு வயதாகி விட்டது.
உன்னுடைய
காமத்தின் கலத்தில்
ஊற்றப்பட்டிருந்த காதல்
காலாவதியாகி விட்டிருக்கிறது.

உன்னுடைய
பேச்சிலிருந்த
கவிதை காணாமல் போய்
அவசர தொனியே
அலாரமடிக்கிறது எப்போதும்.

உன்னுடைய
கோபத்தின் எருதுகள்
மிருதுவான புன்னகையை
மிதித்துச் செல்கின்றன.

என்னோடு அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பது
உனக்கு
நேரத்தை வீணடிப்பதாகி விட்டது.

நீர்வீழ்ச்சியிலேயே
தங்கி விட முடியாத
தண்ணீர் துளியின் தவிப்புடன்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்.

அடுத்த
அருவியின்
வரைபடமில்லாமல்,
வெறும்
எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு.

முன்னுரை மகான்கள்

சந்திக்கும் புத்தகங்களின்
தரம் பார்க்க
அதன்
முகவுரை பார்ப்பதுண்டு.

பலரைப் போலல்ல
இவனென்றும்,

இவன் தான்
சமுதாயச் சருகுகளுக்காய்
எரிமலைப் பாசனத்தை
உருவாக்கியவன்
என்றும்,

மானுடக் கவிஞன்
இவன் மட்டுமே
மற்றோரெல்லாம்
மண்பாண்டக் கவிஞர்கள்
என்றும்,

பல
முகவுரைகள்
முக உறைகளாய்
சிரித்துக் கிடக்கின்றன.

முன்னுரைகள்
எழுத்தாளனின்
முகத்துக்கான சாயம் அல்ல
அவை
எழுத்தின்
அகத்துக்கான அணிகலன்.

நட்பையும்
நேசத்தின் ஆழத்தையும்
நிரப்பிக் கொண்டு
பேனா திறக்காதீர்கள்.

ஒரு
கவிதை நூல்
தோல்வியடையும் போது
முன்னுரையாளனின்
முகமும்
கொடும்பாவி யாகிறது !

முன்னுரை
மகாத்மாக்களே.
கவிதைக்குப் பொய்யழகு
என்பதே
பொய்யாகும் காலமிது !

அதை
முன்னுரைக்கும்
முன்மொழியாதீர்கள்.

பூக்கள் புன்னகைத்த பால்யம்

பால்ய காலம்
ஆக்னஸுக்கும்
நட்புகளையும், சிரிப்புகளையும்
மட்டுமே
சம்பாதித்துத் தந்தது.

பெரிய வீடு
தோட்டத்துப் பூக்களைத்
தொட்டுக் கொண்டு துணையிருக்கும்
தென்றல்.

எப்போதும்
நிம்மதியைத் தர
சம்மதிக்கும் சுற்றம்
என
ஆக்னஸ் ஆனந்தத்தில் தான்
மையம் கொண்டிருந்தாள்.

வயதுக்கு மீறாத
மழலைத்தனம் முகத்தில் மிளிர,
உள்ளுக்குள் மட்டும்
வயதுக்கு மீறிய
பக்தியும், பணிவும்.

குயில் ஒன்று
புல்லாங்குழல் பயில்வதாய்
பாடல் பயின்றாள்.
ஆலய பாடல் குழுக்களில்
பாடினாள்.

ஆண்டவனுக்காய் பாடுவதில்
மனம் முழுதும்
ஆன்மீகப் பூக்கள்
ஆனந்தமாய் முளைத்தன.

திரு இருதய ஆலயம்
அவளுடைய
ஆரம்பக் கல்வியை
ஆரம்பித்து வைத்தது.

கல்வியில்
முதல் தரம் வாங்கினாள்
கடமைகளின்
கால்களும் உடைபடாமல்
காத்துக் கொண்டாள் !.

ஊருக்குச் நல்ல பிள்ளையாய்
வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாய்
துளிர்க்கும் போதே
வாசனை அளித்தாள்.

அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்
ஓர் ஏழை விதவை
விலக்க இயலா வறுமையுடனும்
இருட்டில் தவழும்
ஏழு குழந்தைகளுடனும்
குடிசை வீடொன்றில்
குடியிருந்தாள்.

அவள் வீட்டைவிட்டு
வெளிச்சம் வெளியேறி
வெகு நாட்களாகியிருந்தது.
வறுமை
உள்புகுந்தும்
வருடங்களாகியிருந்தது.

ஆக்னஸின் தாய்
அந்த வீட்டை
தன் இரண்டாம் குடும்பமாய்
பாவித்தாள்,
ஆக்னஸோ
அவ் வீட்டிற்கு உதவுவதில்
எட்டாம் குழந்தையானாள்

பூவோடு சேர்ந்த
பூ,
இருமடங்கு வாசம் வீசியது.

ஆக்னஸிற்கு
ஒன்பது வயதான போது
அவர்கள் குடும்பத்தை
ஓர்
முரட்டுப் புயல்
முட்டிக் கவிழ்த்தது.

துயர அலை ஒன்று
உயரமாய் வந்து
கரையில் விளையாடிய அவர்களை
கண்ணீருக்குள்
மூழ்கடித்தது.

ஆக்னஸின் தந்தையை
மரணம் வந்து சந்தித்து.

மரணம்

சாவு ஊர்வலத்தில் சிந்திய
வீதியோரப் பூக்களை
மிதிப்பவர்களின்
கண்களில்
மின்னி மறைகிறது
மரண பயம்.


எட்டு காலில்
சுடுகாட்டுப் பயணமெல்லாம்
செவிவழிச் செய்தியாகி
விடக்கூடும் விரைவில்.
நான்கு சக்கரப் பாடைகள் தான்
தெருவெங்கும் நகர்கின்றன.

குடித்துக் குடித்துக்
குடல் வெந்து செத்தவனுக்கு
முன்பாகவும்
ஆட்டம் போடுகிறது
சாராய வாசனை.

காதல் ஒரு செருப்பு

எனக்காகவே
தயாரானது போல் இருந்தது
அந்தச் செருப்பு.

அதை
என் கால்விரல்கள்
கட்டிக் கொண்டு
நடக்கும் போதெல்லாம்
பயணம்
பெருமிதம் தந்தது.

சிலர்
ஓரக்கண்ணால் பார்த்தனர்
சிலர்
கிடைக்குமிடம்
கேட்டுச் சென்றனர்.

குதூகலக் காலம்
ஓர் நாள்
சட்டென்று இடறிய கல்லால்
சாலை வழியில்
அறுந்து போனது.

அறுந்து போன செருப்பு
அவஸ்தையாகிப்
போனது.

கைகளில் எடுக்கலாம் என்றால்
நான்
இருப்பதாய் நினைத்துக் கொண்ட
கெளரவம் தடுத்தது.

தரையைத்
தேய்த்துத் தேய்த்து
நடந்து பார்த்தேன்
அது
கவன ஈர்ப்புத் தீர்மானத்தை
மட்டுமே
நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

தைக்கலாம் என்றால்
அது
உயர் ரக செருப்பாம்
ஒட்டுப் போட்டால் உதவாதாம்.

வேறு வழியில்லாமல்
வெற்றுக் கால்களோடு
வீடு திரும்பினேன்.

வாங்கும்போது
கவனித்து வாங்கியிருக்கலாம்
என்றும்,

அலங்காரச் செருப்புகள்
ஆகாது என்றும்,

ஆளாளுக்கு
ஆறுதல் சொன்னார்கள்.

கவனமாக நடந்திருக்கலாம்
என்று
சொல்லிக் கொண்டேன்
நான் மட்டும்.

கமலஹாசன் !

< எதைப்பற்றியெல்லாமோ யாரெல்லாமோ கவிதை எழுதுகிறார்கள். கமலைப் பற்றி ஒரு கவிதை எழுதினால் என்ன என்று தோன்றியது…. நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….>  

எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.

தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.

நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.

அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.

தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.

இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.

நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.

உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.

இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.

மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.

இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.

அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.

விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.

கண்ணியமும் பெண்ணியமும்

கண்களைப் பார்த்து
கண்ணியத்துடன் பேசிக்கொண்டிருக்கையில்
மாராப்பைச் சரிசெய்யும்
பெண்களின் கைகள்
என்னை
அவமானப் படுத்துகின்றன.

மின் மிரட்டல்

கணிணி யுகம்
வேகமாக வளர்கிறது.

மக்கள்,
ஜாதகத்தை
கணிணியில் கணிக்கிறார்கள்,

வார பலன்களை
வாசிக்கிறார்கள்,

நியூமராலஜி
நேமாலஜி க்காய்
வலைகளில் அலைகிறார்கள்

திருப்பதி கோயிலுக்கு
மின் பூஜையோ
வேளாங்கன்னிக்கு
மின் வேண்டுதலோ
அனுப்புகிறார்கள்.

போதாக்குறைக்கு,

இந்தக் கடிதத்தை….
எனும்
மிரட்டல் மெயில்களை
பதினைந்து நபர்களுக்கு
தவறாமல்
அனுப்பியும் வைக்கிறார்கள்

அரசு தருகிறது

அரசு,

வன்முறை கேட்டு
அதிர்ச்சியடைகிறது

துயரம் கண்டு
அனுதாபம் தருகிறது.

பண்டிகை நாட்களில்
வாழ்த்து தருகிறது.

அழிவு கண்டு
உறுதி தருகிறது

தேர்தல் தேதிகளில்
வாக்குறுதி தருகிறது.

ஆட்சி முடியும் வரை
ஏமாற்றம் தருகிறது.