த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.
மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள்.
முதலாம் உலகப் போரில் மகனை இழந்த ஒரு தந்தையின் துயர நினைவுகளுடன் துவங்குகிறது படம். பார்வையிழந்த அந்த மனிதர் கடிகாரம் செய்பவர். மகனின் நினைவாக அவர் செய்யும் கடிகாரம் பின்னோக்கி ஓடுகிறது !
“வாழ்க்கையில ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தா எப்படி இருக்கும்” எனக் கேட்கும் முதல்வன் பட வசனம் போல, வாழ்க்கை பின்னோக்கி ஓடினால் எப்படி இருக்கும் ? என் மகன் என்னுடன் இருந்திருப்பான் என மனதை உலுக்கும் சோக உணர்வுகளுடன் படம் துவங்குகிறது.
அந்த நிகழ்வின் மையம் கதையை உணர்த்த, படு கிழவனாய் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாய் இளமை திரும்பப் பெற்று, தனது கடைசி காலத்தில் சிறுவனாய், மழலையாய், கைக்குழந்தையாய் மாறி உயிர்விடும் பெஞ்சமின் பட்டரின் கதை விரிகிறது.
அருவருப்பாய், வயதானவனாய் பிறக்கும் கதாநாயகன் பிறக்கும் போதே அம்மாவை முழுங்கியவன். அவனது அப்பாவும் அவனை ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் முழுகி விட அங்கேயே வளர்கிறார் நாயகன்.
இவனுக்கு ஆயுள் இன்னும் கொஞ்ச நாள் தான். எப்போ வேண்டுமானாலும் இறப்பான் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவரும் வியக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறான் நாயகன் என கதை பயணிக்கிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில் படம் நகர்வதாகக் காட்டுவதும், முதியோர் இல்லத்தை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதும் படத்தை சற்றே பலப்படுத்த எடுத்துக் கொண்ட உத்திகள் என்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இல்லை.
வயதான காலத்தில் சிறுமியாய் இருந்து, சிறுமி வயதாகிக் கொண்டே செல்ல, நாயகன் வயது குறைந்து கொண்டே வர அந்த வயது முரணின் இடைவெளி குறையும் காலத்தில் வருகிறது காதல்.
கடைசியில், காதலன் கைக்குழந்தையாகி மரணத்தை எதிர் நோக்கி காதலியின் கைகளில் இருக்க, துயரத்துடன் காதலி குழந்தையின் முகத்தையே பார்க்க, மெல்ல மெல்ல கண் மூடிக்கொள்ள பெஞ்சமின் மரணமடையும் காட்சி மனதைக் கனக்க வைக்கின்றன.
இந்த வயதாகும் முரணைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தில் சிலாகிக்க ஏதுமே இல்லாமப் போவது தான் படத்தின் மிகப்பெரிய குறை.
மேக்கப்பில் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வயதான தோற்றத்தில் வரும் நாயகனின் உடல், கைகால், பார்வை என ஒப்பனை கன கட்சிதம். ஒளிப்பதிவும் மனதை மயக்குகிறது. நேர்த்தியான கால இடைவெளிகளை கவனித்து ஒளிப்பதிவு நிறங்களால் பேசுவது சிலிர்க்க வைக்கிறது.
மற்றபடி ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்ட அளவுக்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது எனது கருத்து.
இழுத்து இழுத்து படத்தை நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது முடியும் என்ற சலிப்பே வந்து விடுகிறது ஒரு கட்டத்தில்.
என்ன வித்தியாசமான கதை கிடைத்தாலும், உலகம் சுற்றுதல், கற்பை இழத்தல், காதலித்தல், மரணித்தல் எனும் வட்டத்துக்குள் அடைக்கப்பட்டால் அது வலுவிழக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.
1922ல் ஸ்காட் என்பவர் எழுதிய கதையாம் ! அந்த சிறுகதையை படமாக்கியிருக்கிய விதத்தில் தனது வேலையை முடித்திருக்கிறார் இயக்குனர் டேவிட் பிஞ்சர்.