புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்

9

ரிஸ்க் மேனேஜ்மென்ட்

போனவாரம் ஒரு புராஜக்ட்டுக்கு வரக்கூடிய ஆபத்துகளைக் குறித்த அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். இந்த வாரம் அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக‌ அலசலாம். காரணம், ஒரு புராஜக்டின் வெற்றிக்கு, எதிர்பாரா ஆபத்தை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியம்.’

ஒரு புராஜக்டின் ஏதோ ஒரு பகுதிக்கு வரக்கூடிய ஆபத்தை, ஒட்டு மொத்த புராஜக்டின் வெற்றியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நபர் சொதப்பினாலும் டீம் தோற்றுப் போவதைப் போல, ஒரு சில ரிஸ்க்கள் போதும் ஒரு புராஜக்டை முடக்க. ஒரு புராஜக்டில் ஒருவேளை பத்து நிலைகள் இருக்கலாம். இந்த ரிஸ்க் எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து அடுத்தடுத்த நிலைகளில் பாதிப்பு உருவாகும்.

வயலில் விதைத்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்பது ஒரு நிலை. விதைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அது அடுத்தடுத்த நிலைகளிலும் பாதிப்பை உருவாக்கலாம். ஒருவேளை தாமதமாய் விதைத்தால் தண்ணீர் கிடைக்காமல் போகலாம். ஒரு ரிஸ்க் இன்னொரு ரிஸ்கை உருவாக்கும் சூழல் அப்போது உருவாகும். அல்லது அறுவடை காலத்தில் சரியான வேலையாட்கள் கிடைக்காமல் போகலாம், அப்படியெனில் அதை எப்படிக் கையாள்வது என்பது தெரிய வேண்டும்.

ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கின்ற பணிகளில் ஒன்று தாமதமானாலும் அடுத்தடுத்த பணிகளில் அது பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். எனவே எந்த இடத்தில் ரிஸ்க் வந்தாலும், அது புராஜக்டின் முடிவு தேதியை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ரிஸ்க் களுக்கான திட்ட வரைவு செய்யும் போது முடிந்தமட்டும் பொதுப்படையாக இல்லாமல் தெளிவான திட்டமாக உருவாக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, அருள் என்பவர் புராஜக்டின் முக்கியமான கட்டத்தில் விலகிவிட்டால் அந்த வேலையை ஆன்டனி என்பவரை வைத்துச் செய்ய வேண்டும். இதில் தெளிவாக, ஒரு நபருக்குப் பதில் இன்னொரு நபர் என்பதையும், அவர் யார் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதையும் நாம் திட்டமிடுகிறோம். அது தான் தெளிவான திட்ட வரைவு. அருள் இல்லையேல், வேறொருவரை வைத்து வேலையை முடிப்போம் என்பது சரியான திட்ட வரைவு அல்ல. அது பொதுப்படையான ஒரு திட்டம் அவ்வளவு தான்.

ரிஸ்க் திட்டத்துக்கு பல வழிகள் உண்டு. உதாரணமாக, டிசிஷன் ட்ரீ என்பது ஒரு முறை. ஒவ்வொரு ரிஸ்க் விஷயத்தையும் எழுதி, அது நடந்தால் என்ன பாதிப்பு என்பதையும் எழுத வேண்டும். அதை ஒரு கிளை விரித்துப் பரவும் மரத்தைப் போல படிப்படியாய் வரைய வேண்டும். அதிலிருந்து அந்த ஆபத்துகளைக் குறித்த ஒரு முழுமையான பார்வையும், திட்டமிடுவதற்குத் தேவையான தகவல்களும் கிடைக்கும்.

கேள்வி பதில்களால் முடிவெடுப்பது இன்னொரு வகை. வல்லுநர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்கெல்லாம் ஆபத்து வரலாம் என்பதைக் கண்டுபிடிப்பது இந்த வகை. இதில் நாம் யாரிடம் கேள்வி கேட்கிறோம் என்பதை வைத்து வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும். சரியான நபர்களிடம் நாம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றால் முழுமையான ஒரு ரிஸ்க் பிளானைப் போட முடியும்.

இப்போது கணினி மயமாக்கப்பட்ட முடிவெடுக்கும் மென்பொருட்களும் பயன்பாட்டில் உள்ளன. தேவையான தகவல்களை உள்ளீடு செய்தால், எந்த ரிஸ்க் எப்படி வரலாம் ? வந்தால் எங்கெங்கே பாதிப்பு வரும், போன்றவற்றையெல்லாம் எளிதில் கண்டறிய முடியும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். என்னென்ன ஆபத்துகள் வரலாம் என கண்டறிந்து “எல்லாவற்றுக்கும்” திட்டம் தீட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதற்கெல்லாம் திட்டம் தீட்ட வேண்டும், எதையெல்லாம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம் தீர்மானிக்கின்ற சக்தி புராஜக்ட் மேனேஜர் தான்.

உதாரணமாக ஒரு ஆபத்து வந்தால், அதன் விளைவு அதிகமாக இருக்கும் என்றாலோ அல்லது ஒரு ஆபத்து அடிக்கடி வரும் ஆபத்து உண்டு என்றாலோ அதை எதிர்கொள்ளும் திட்டம் நிச்சயம் தேவை. சில ஆபத்துகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது, சில ஆபத்துகள் வரக்கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக இருக்கும். அத்தகைய ஆபத்துகளுக்கான திட்டம் தீட்ட அதிக நேரத்தைச் செலவிடத் தேவையில்லை. எந்த ஆபத்துக்கு திட்டம் தீட்ட வேண்டும், எதை அப்படியே விட்டு விடவேண்டும் என்பதை புராஜக்ட் மேனேஜர் முடிவெடுப்பார். புராஜக்டின் தன்மை, அவரது அனுபவம் போன்றவையெல்லாம் அந்த முடிவை எடுக்க அவருக்கு உதவும்.

சில வேளைகளில் ஆபத்து வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும், ஆனால் வந்துச்சுன்னா மொத்தம் காலி என்பது போன்ற சூழல் வரும். அத்தகைய ரிஸ்க்களைக் கண்டறிந்து அதற்கான திட்டத்தை நிச்சயம் உருவாக்க வேண்டும். உதாரணமாக மலைப்பகுதியில் ஒரு வீட்டைக் கட்டுவது திட்டமெனில், நிலச்சரிவைப் பற்றி யோசிக்க வேண்டும். வரும் வாய்ப்பு குறைவு தான், ஆனால் வந்தால் எல்லாம் போச்சு எனும் நிலை வரும் இல்லையா ? அது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ரிஸ்க் விஷயத்தில் மூன்று வகைகளைச் சொல்வார்கள்.

1. ரிஸ்கைத் தவிர்ப்பது
2. ரிஸ்கை இன்னொரு இடத்துக்கு அனுப்புவது
3. ரிஸ்கை எதிர்கொள்வது

ரிஸ்கைத் தவிர்ப்பது என்பது எளிதான ஒன்று. எதெல்லாம் ஆபத்தான விஷயமோ அதையெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது. உதாரணமாக, மலைப்பகுதியில் மலைச்சரிவு ஏற்படலாம் எனும் ஆபத்து உண்டெனில், மலைப்பகுதியே வேண்டாம் என முடிவெடுப்பது ரிஸ்கை தவிர்ப்பது. மலைப்பகுதியில் வீடே கட்டவில்லையேல் வீடு சரியாது இல்லையா ?

இரண்டாவது, ரிஸ்கை இடம் மாற்றி விடுவதற்கு உதாரணமாய் இன்சூரன்ஸைச் சொல்லலாம். வீடு ஒருவேளை சரியலாம், உடையலாம் எனும் சூழல் இருந்தால், தொடக்கத்திலேயே நல்ல ஒரு இன்சூரன்ஸ் எடுக்கலாம். ஆபத்து வந்தால் அதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்த்துக் கொள்ளும்.

மூன்றாவது, ரிஸ்கை எதிர்கொள்வது. மலைச்சரிவு ஏற்படும் சூழல் உண்டெனில் சரிவிலும் தாக்குப்பிடிக்கும் விதமாகக் கட்டுமானத்தைக் கட்டலாம். அல்லது மிகக்குறைந்த சேதம் வரக்கூடிய அளவுக்கு வரைபடம் வரையலாம். அல்லது என்ன நடந்தாலும் உயிருக்கு ஆபத்து வராதபடி அதை உருவாக்கலாம்.

எது எப்படியெனினும் மிக முக்கியமாய் மனதில் கொள்ள வேண்டிய விஷயம், ரிஸ்க் குறித்து ஆழமான அலசலும், தெளிவான திட்டமிடலும், சிறப்பான ஒரு அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்பது தான்.

இந்த ரிஸ்க் உலகில் மூன்று வகையான மனநிலை இருக்கவே கூடாது என்பார்கள். ஒன்று, ஆஸ்ட்ரிச் மனநிலை. அதாவது தீக்கோழி மனநிலை. தீக்கோழி என்ன செய்யுமென்பது நமக்குத் தெரியும். எதிரி துரத்திக் கொண்டு வருகிறானெனில் ஓடோ ஓடென்று ஓடி ஒரு இடத்தில் தலையைத் தரையில் புதைத்துக் கொள்ளும். அப்படிச் செய்தால் எதிரிக்குக் கண் தெரியாது என்பது அதன் சிந்தனை. நம்மைத் துரத்துகின்ற சிக்கல்களை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கும் மனநிலை இது. அப்படி ஒரு பிரச்சினையே இல்லை என மனதை நம்ப வைத்து, தோல்வியடைவது இது. அப்படிப்பட்ட மனநிலை புராஜக்ட் மேனேஜரிடம் இருக்கவே கூடாது.

இரண்டாவது, செப நிலை. பிரேயர் அப்ரோச் என்பார்கள். நம்ம புராஜக்ட்டுக்கு வரக்கூடிய பிரச்சினை எதுவாக இருந்தாலும், விண்ணகத்திலிருந்து ஒருவர் வந்து எல்லாவற்றையும் அழித்து ஒழித்துக் காப்பார் என நம்பும் மனநிலை இது. மந்திர மாயங்களின் மூலம் புராஜக்டின் ரிஸ்க் களை களையவோ, எதிர்கொள்ளவோ முடியாது. அதற்குத் தேவை பிரேயர் அல்ல, பிளானிங்.

மூன்றாவது. சில ரிஸ்க் விஷயங்கள் நமக்குத் தெரிந்திருந்தாலும், அதெல்லாம் நிகழாது என நம்புவது. ஊருக்கெல்லாம் புற்று நோய் வந்தால் கூட, நமக்கு வராது என நம்பி தம்மடிப்பவர்களைப் போல. அந்த ரிஸ்க் சட்டென முகம் காட்டும் போது, வாழ்க்கைக்கு டாட்டா காட்ட வேண்டியது தான்.

ரிஸ்க் பற்றிய ஒரு பொதுவான புரிதல் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இன்னும் விரிவாக எழுதினால் நீங்கள் புக்கை மூடி வைக்கும் ரிஸ்க் உண்டு என்பதால் இப்போதைக்கு முடிக்கிறேன். அடுத்த வாரம் இன்னொரு விஷயம் பற்றிப் பேசுவோம்.

( சேவியர் )