சிறுகதை : அது… அவரே தான்….

Image result for school girl cycle 

இசை கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அவரே தான் ! அந்த பரந்து விரிந்த பள்ளிக்கூட மைதானத்தின் ஓரமாய் அமர்ந்து எதையோ வரைந்து  கொண்டிருக்கிறார். இசையால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மீண்டும் உற்றுப் பார்த்தாள். அவளது நினைவு நரம்புகளுக்குள் விளைந்து கிடந்த அந்த முகத்தை அவளால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன ?

ஸ்கூல் முடிந்து பையனை கூட்டிக்கொண்டு போக பெரும்பாலும் இசையின் கணவர் தான் வருவார். அவ்வப்போது அபூர்வமாய் இசை வருவதுண்டு. ஆனால் இதுவரை இவரைச் சந்தித்ததில்லை. இங்கே அவருக்கு என்ன வேலை ?

ஸ்கூல்ல வாத்தியாரா சேந்துட்டாரா ? இல்லை அவரும் ஒரு பேரன்டா ? யோசித்துக் கொண்டே இருந்த இசையின் மனதுக்குள் மெல்லிய பெருமூச்சோடு நினைவுகள் ஊர்வலமாய் நுழைந்தன.

ஆயிற்று நீண்ட நெடிய பதினெட்டு வருடங்கள். பள்ளிக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தான் அந்த முகத்தை முதன் முதலாகப் பார்த்தாள் !

“யாருடி அவரு.. ஸ்மார்ட்டா இருக்காரு.. லேடீஸ் ஸ்கூல்ல அவருக்கென்ன வேலை ?”

“தெரியலடி.. ஏதாச்சும் குரியர் பாயா இருக்கும்…”

“போடி.. இவ்ளோ ஸ்டைலா இருக்காரு.. அவரைப் போயி குரியர் பாய்… சொறியர் பாய்ன்னு”

“ஓஹோ… அப்போ எதுக்கு என்கிட்டே கேக்கறே.. நீயே போய் கண்டுபிடி” என்று சொல்லிவிட்டு தோழி விடுக்கென திரும்பிப் போய்விட்டாள்.

இசை சிரித்தாள் . அவளுடைய கண்ணாடி மனசுக்குள் ஏதோ ஒரு சின்ன கலவரம் !

இசை !

பெயருக்கேற்றார் போல இசையின் இழைகளில் கிடப்பவள். அவளுடைய குரலுக்குள் கொஞ்சம் குயிலின் அம்சமும் உண்டு, கொஞ்சம் வயலின் தன்மையும் உண்டு. இரவு நேர மௌனத்தின் தாழ்வாரங்களில் அவளது குரல் மென்மையாய் ஒலிப்பது தெய்வீக அனுபவம்.

அத்தோடு அவளுடைய பிரியத்தின் பட்டியலில் இருந்த இன்னொரு விஷயம் டிராயிங். படம் வரைவதென்றால் அவளுக்கு உலகம் மறந்து விடும். தன் முன்னால் இருக்கின்ற காகிதமே உலகமாய் மாறிவிடும். அந்தக் காகிதத்தில் அவளுடைய கற்பனைக் கோடுகள் புதிய உலகத்தைப் படைக்கத் துவங்கும். கதாபாத்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பென்சில் கோடுகளின் வழியாக பிரசவித்துக் குதிக்கும்

அப்படி பதினொன்றாம் வகுப்பில் ஒரு டிராயிங் போட்டி நடந்தது. ஆனால் இசையின் பெயர்  அதில் இடம் பெறவில்லை. இசைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

நேராக தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றாள் இசை.

‘சார்… என்னோட பெயரை போட்டியில கண்டிப்பா சேக்கணும் சார்… எத்தனை பரிசு வாங்கியிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்’

‘ஓ..உன் பேரு இல்லையாம்மா ? நான் டிராயிங் சார் கிட்டே சொல்றேன்’ சொல்லிக்கொண்டே ஒரு பெல்லை அமுக்க அட்டென்டர் எட்டிப்பார்த்தார்.

‘யப்பா.. டிராயிங் சார் டீச்சர்ஸ் ரூம்ல இருப்பாரு கூட்டிட்டு வா’

இசைக்கு மனதில் கோபம் தீரவில்லை. தன்னை எப்படி அவர் நிராகரிக்கலாம் ? இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்காமல் விடப்போவதில்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போதுதான் அவர் உள்ளே நுழைந்தார்.

அந்த ஸ்மார்ட் இளைஞர் ! இசையின் கண்ணாடி இதயம் சட்டென கண்சிமிட்டியது.

‘சார்… இவங்க இசை.. நல்லா வரைவாங்க.. இவங்க பெயரையும் காம்பெட்டிஷன்ல சேத்துக்கங்க’ தலைமை ஆசிரியர் சொன்னார்.

‘சரி சார்… இவங்க குவாலிஃபை ரவுண்ட்ல ஆப்சென்ட் சார்.. அதான் சேக்கல’

‘பரவாயில்லை சார்…ஷி ஈஸ் டேலன்டட்..’

‘ஓகே சார்.. நான் புதுசு இல்லையா.. அதான் தெரியல’

இசையின் கோபமெல்லாம் சட்டென காணாமல் போயிருந்தது. ‘சார்.. பரவாயில்லை சார்… நான் அன்னிக்கு வராதது என் தப்புதான் சார்… மன்னிச்சிடுங்க’

மனதில் நினைத்திருந்ததற்கு நேர் எதிரான வார்த்தைகள் மென்மையாய் இசையிடமிருந்து வந்தன.

அன்றிலிருந்து இசையின் இலட்சியம் டிராயிங் என்பதை விட,  டிராயிங் சாருடன் நட்பு பாராட்டுவது என்றாகிவிட்டது.

பதினொன்றாம் வகுப்பில் டிராயிங் கிடையாது. இருந்தாலும் அடிக்கடி தனது டிராயிங் புக்கை எடுத்துக் கொண்டு சாரைப் பார்க்கலாம் என போவாள். இருந்தாலும் தயக்கம் தடுக்கும்.

எப்போதும் ராஜ் சார் வருகிறாரா ? என்பது தான் மனசில் ஓடும் சிந்தனையாய் இருக்கும். கண்கள் மானின் கண்களைப் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

இவளுடைய கண்ணிமைகளில் தொற்றிக் கிடந்த பால்யக் காதலை அவரும் கண்டிருந்தார். ஆனாலும் காணாதது போல அவர் நடித்து அமைதியாக போய்விடுவார்.

‘எப்படியாச்சும் சாரோட வீடை கண்டு பிடிக்கணும்டி…’

‘ஓ.. தெரியாதா ? அவரு நம்ம கோனார் கடைக்கு போற தெருவுக்கு பக்கத்துல எங்கயோ தான்டி வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்காரு’

‘தேங்க்ஸ்டி..’ சொல்லிக்கொண்டு சைக்கிளை விருட்டென கோனார் கடையை நோக்கித் திருப்பினாள் இசை. பல நாள் தேடலுக்குப் பின் அவரது வீட்டையும் கண்டுபிடித்தாள்.

அதன்பின் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் பால் வாங்க வேண்டுமென்றாலும் கூட, தூரத்தில் இருக்கும் கோனார் கடை வீதியைச் சுற்றி தான் போவாள். அவர் அவ்வப்போது மாடியில் தென்படுவார். அந்த தரிசனமே போதுமானதாய் இருந்தது அவளுக்கு.

பள்ளிக்கூடத்துக்கு தினமும் தாமதமாய் வருவாள். அந்த நேரத்தில் தான் சைக்கிள் ஸ்டேன்ட் பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்து அவர் வரைந்து கொண்டிருக்கும் தருணம்.

அவரை அரைக்கண்ணால் நோட்டம் இடுவதற்காகவே தாமதமாகப் போவாள் இசை. அதை அவர் கவனித்தே தான் இருந்தார்.

நாள்கள் செல்லச் செல்ல இசையின் மனதுக்குள் இருந்த பால்யக் காதல் பருவமடையத் துவங்கியது. அவளது நினைவுகளில் திரிந்த மாஸ்டர் கனவுகளுக்குள்ளும் நுழையத் துவங்கினார்.

பால்யத்தின் கலர் கனவுகளில் அவர் தான் படம் வரைந்து கொண்டிருந்தார். இனம் புரியாத ஒரு இன்பத் திளைப்பில் இசையின் இதயம் துடித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது.

‘ஏய்… இசை… தெரியுமாடி விஷயம்.. உன்னோட ஆளுக்கு வேற கவர்மென்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்காம்… கிளம்பறாரு’ தோழி பற்ற வைத்தது கண்ணி வெடியாய் வெடித்தது.

கண்கள் சட்டென அருவியாய் கொட்ட தேம்பித் தேம்பி அழுத இசை நேரடியாக கான்டீன் பக்கம் ஓடினாள். ஓரமாய் இருந்த பெஞ்சில் அமர்ந்து கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.

தோழிக்கு பக் என்றாகி விட்டது. ஏண்டா சொன்னோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்போது சட்டென அவர்கள் முன்னால் வந்து நின்றார் ராஜ் மாஸ்டர். இசையின் அருகில் வந்து அமர்ந்தார். இசையின் மனதுக்குள் பெருங்கடல் பொங்கி மறிந்தது. ஆனாலும் அதில் ஆனந்தம் இருக்கவில்லை.

மாஸ்டர் இசையில் கையை மெல்லமாய்ப் பற்றினார்.

அந்த முதல் தொடுதலின் ஸ்பரிசத்தில் அவளுக்குள் நான்கைந்து நயாகராக்கள் சரிந்தன. ஏழெட்டு இமைய மலைகள் தடுமாறி விழுந்தன.

“வருத்தப்படாதேம்மா .. எல்லாம் சரியாயிடும்’

ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். ஆனால் இசையின் மனதில் எதுவும் நிற்கவில்லை.

சில நாட்களிலேயே அவர் ஸ்கூலை நிறுத்தினார். அடுத்த சில நாட்களிலேயே அவர் வீட்டையும் காலி செய்து விட்டு போய்விட்டார்.

இசையின் மனதில் காதலின் வலி நிரம்பியது.

அவளுக்கு பள்ளிக்கூடத்திலேயே ரசிகர்கள் உண்டு. அவளுடைய குரலுக்கும், ஓவியத்துக்கும், ஒரு தேவதையாய் சிரிக்கும் அவளது புன்னகைக்கும் ! எதுவும் அவளை சலனப்படுத்தவில்லை.

ஒரு முறை தலைமை ஆசிரியை கூப்பிட்டு திட்டவும் செய்தார். ‘என்னம்மா லவ் லெட்டரெல்லாம் ஸ்கூலுக்கு வருது.. இதெல்லாம் நல்லதில்லை’ என்று !

‘நல்லதில்லேன்னா கிழிச்சு போடுங்க, எனக்கு எந்த லவ் லெட்டரும் வேண்டாம்’

‘என்ன திமிரா ? பத்தாம் கிளாஸ்ல 92 சதவீதம் மார்க்.. பதினொன்னாம் கிளாஸ்ல 62 சதவீதம்… படிக்கணும்ன்னு வரியா இல்லை தெனாவெட்டா பேச வரியா ?”

“மேம்… 12ம் கிளாஸ்ல 90 சதவீதத்துக்கு மேல மார்க் எடுக்கலேன்னா என்னை கேளுங்க நீங்க.. “ என சொல்லி விட்டு வீராப்பாய் வெளியே வந்தாள் இசை.

சொல்லி வைத்தார்போல் அடுத்த ஆண்டு 91 சதவீதம் மார்க் ! தலைமை ஆசிரியை தனியே கூப்பிட்டு அவளைப் பாராட்டினார்.

அதன்பின் கல்லூரி, வேலை, திருமணம் என வருடங்கள் தாவித் தாவி இன்று மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இத்தனை வருடங்கள் அவருடைய நினைவு எத்தனையோ சந்தர்ப்பங்களில் வந்து போயிருக்கிறது.

அடிக்கடி சோசியல் மீடியா தளங்களில் அவருடைய பெயரைப் போட்டு தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் சிக்கியதில்லை.

இப்போது !

இதோ கண்ணெதிரே அமர்ந்து கொண்டிருக்கிறார். இசை முடிவெடுத்தாள். போய் பேசிவிடுவோம். ! இத்தனை ஆண்டுகள் கழிந்து அவருடைய மனசு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இசை  தான் இருந்த இடத்திலிரிந்து எழுந்து அவரை நோக்கிப் போனபோது மகன் ஓடிவந்து கட்டிக்கொண்டான்.

‘மம்மீ…. லெட்ஸ் கோ’

‘வெயிட் டா.. அதோ ஒரு அங்கிள் இருக்காங்கல்ல, அவங்களை பாத்து பேசிட்டு போலாம்’

‘ஓ..அந்த அங்கிளா.. அனாமிகா வோட டாடி… ‘

‘அனாமிகா ?’

‘எஸ் மாம்… மை கிளாஸ் மேட்.. குளோஸ் பிரண்ட்…’ பையன் சொல்லிக்கொண்டே போக இசையின் உதடுகள் புன்னகைத்தன.

எதையோ தீவிரமாய் வரைந்து கொண்டிருந்த  ராஜை நோக்கிப் போனாள்.

‘ராஜ் மாஸ்டர்…’

ராஜ் நிமிர்ந்து பார்த்தார். திடுக்கிட்டார். சட்டென எழுந்தார்.

‘நீ..நீ..’

‘சேம் இசை மாஸ்டர்… உங்களுக்கு இம்சை குடுத்துட்டே இருப்பேனே.. அந்த காலத்துல… ‘ இசை சிரித்தாள்.

‘வாவ்… ரொம்ப சந்தோசம்.. எப்படி இருக்கீங்க’

‘ஐம் ஃபைன் மாஸ்டர்… தோ.. ஹி ஈஸ் மை சன்.. அனாமிகா கிளாஸ்  தான்… சர்ப்ரைஸ் இல்லையா’ இசை சிரித்தாள்.

‘யா.. யா.. ரியலி… ‘ ராஜ் சிரித்தார். அவருடைய கண்கள் இசையின் விழிகளை தொட்டுத் தொட்டு விலகின.

‘மாம்… லெட்ஸ் கோ…’ பையன் இழுத்துக் கொண்டே இருந்தான்.

‘சரி.. மாஸ்டர்… நான் கிளம்பறேன். ஒரு நாள் பொண்ணையும் வைஃபையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க’

‘கண்டிப்பா… கண்டிப்பா’ ராஜ் சொன்னார்.

இசை புன்னகைத்துக் கொண்டே திரும்பினாள். அவளுடைய மனதில் ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சி நிரம்பியது. ஒரு பறவையாய் மெல்ல மெல்ல அசைந்து விலகினாள்.

ராஜ் பின்னாலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இசை.. உனக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது உனக்கு கிடைச்சுதா தெரியல. உனக்கு என்மேல் இருப்பது காதலாய் இருந்தால் அந்த வாரத்தில் ஏதோ ஒரு நாள் எனக்குப் பிடித்த உன்னுடைய மஞ்சள் கலர் கம்மல் போட்டுட்டு வர சொல்லி எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ரகசியமா உன்னோட காதை பாத்துட்டே இருப்பேன்.

நீ முதல் நாளே மஞ்சள் கம்மலோட வருவேன்னு நினைச்சேன். ஆனா ஒருவாரத்துல ஒரு நாள் கூட மஞ்சள் கம்மலோட நீ வரல. மனசு உடைஞ்சு போச்சு. உன் படிப்பு எல்லாம் முடிஞ்சப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கனவு கண்டேன். ஒரு வாத்தியாரா இருக்கும்போ அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு தான் நான் ரிசைன் பண்ணினப்புறம் லெட்டர் போட்டேன்.

உன் சிரிப்பு என் மனசுல ஏற்படுத்தின காயம் கொஞ்ச நஞ்சமல்ல. உன் கிட்டே இன்னும் அதே ஈர்ப்பு இருக்கு’

ராஜின் மனம் நினைவுகளின் சிக்கெடுத்துக் கொண்டிருக்கையில் வந்து நின்றாள். அனாமிகா ! ஒரு விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த அனாமிகாவுக்கு கடந்த ஒன்பது வருடங்களாக ராஜ் தான் அப்பா ! ராஜுக்கு பள்ளிக்கூட நினைவுகள் தான் குடும்பம் ! அந்த நினைவுகளோடு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தார் ராஜ் மாஸ்டர்.

*

 

சிறுகதை : பணி நீக்கம்

 

அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள்.
அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது.

சட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் நல்லமுறையில் இயங்குவதற்குக் காரணம் நீங்கள் தான்.

இந்த அலுவலகத்தை மூட வேண்டுமென்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் வீழ்ச்சி, வீட்டுக் கடன் சிக்கல், டாலர் விலை சரிவு என பல காரணங்கள்.

 நம்முடடய இந்த அலுவலகத்துக்கு எந்த விதமான புதிய ஒப்பந்தங்களும் நடைபெறாத நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட இயலாத நி?லக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இந்த அலுவலகத்தை இந்த மாதத்துடன் மூடுவெதென்று உத்தேசித்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கு..

அமெரிக்காவின் கலிபோர்ணியா நகரின் ஓர் எல்லையில் இருந்தது அந்த அலுவலகம்.

அது இன்றோ நேற்றோ துவங்கியதல்ல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. இதுவ?ர எந்தவிதமான நெருக்கடி நிலமைகளும் வந்ததில்லை, இந்தியா வின்ஒரு மூன்றாம் தொடர்பாளர் வழியாக வேலை பார்த்துவந்த சில இந்தியர் பேர் உட்பட அந்த அலுவலகத்தில் இருந்த நானூற்று அறுபத்து மூன்று பேருக்கும்  இன்னும் இரண்டு வாரம் தாண்டினால் வேலை இல்லை. காலையில் திடீரென்று ஓர் அழைப்பு, ஏதோ ஒரு மீட்டிங் என்று கைகளில் குளிர்பான கோப்பைகளோடு வந்தமர்ந்த மொத்த உறுப்பினர்களும் இதயம் சூடாகிப் போனார்கள்.

திடீரென்று ஓர் விசும்பல் சத்தம், கொஞ்சம் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண்… கட்டுப்படுத்த முயன்று தோற்றுபோன விசும்பல்.

அங்காங்கே கேள்விகள் முளைத்தன. சில கேள்விகள் கெஞ்சல்களாய், சில இயலாமையின் வெளிப்பாடாய், சில கோபத்தின் பிரதிநிதியாய்.

இப்படி திடீரென்று சொன்னால் என்ன செய்வது ? எங்கள் நில?ம தான் என்ன ? எங்களுக்கு வேறு அலுவலகத்தில் வேலை கிடைக்க நிர்வாகம் உதவி செய்யுமா ?

கம்பெனியிலிருந்து ஊழியர்களுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கிடக்குமா ?

நாங்கள் வேலையிலிருந்து நிற்க விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்னால் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் நிர்வாகம் ஏன் குறைந்த பட்சம்  அதைக்கூட செய்யவில்லை ?

குடும்பமாக இங்கே இருந்துவருகின்ற எங்களுக்கு என்ன முடிவு ?

கொத்துக்கொத்தாய் கேள்விகள் விழுந்தாலும் புன்னகையுடன் ஒரே ஒரு பதில் தான் வந்தது.

வருந்துகிறேன்…மன்னிக்க வேண்டும்… எனக்கு அதிகமாய் எதுவும் தெரியாது… உங்கள் கேள்விகளை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்கிறேன். இல்?லயேல் நீங்களே மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்….

முடிவு எடுத்தாகிவிட்டது… இனிமேல் என்ன பேசினாலும் பிரயோசனம் இல்லை என்று மொத்த கூட்டமும் நிமிடங்களில் புரிந்து கொண்டு விட்டது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கூட்டத்தினர் வெளியேறத்துவங்கினார்கள். கடைசி வரிசையில் அமர்ந்து எதையும் செரித்துக்கொள்ளமுடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.

விக்னேஷ், மூன்று மாதங்களுக்கு முன் ஏராளம் கனவுகளோடு அமெரிக்காவுக்கு வந்தவன்.

கிராமத்தில் படித்து, சென்னையில் கணிப்பொறி மென்பொருள் எழுதும் ஓர் கம்பெனியில் பணியாற்றி, ஒரு கன்சல்டன்சி வழியாக அமெரிக்கா வந்தவன். தன்னைப்படிக்க வைத்து அமெரிக்கா செல்லக்கூடிய அளவுக்கு தயாராக்கிய தந்தை, அம்மா… இன்னும் வானத்தை நம்பி விவசாய வாழ்க்கை நடத்தும் உறவினர்கள்… 

.
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சம் உதவ வேண்டும் என்னும் ஏக்கம் அவன் மனசு முழுவதும் நிறைந்திருந்தது. இவன் அமெரிக்கா செல்ல விமானம் ஏறிய போது பெருமையுடனும், பிரிவின் வலியுடனும் கண்கலங்கிய அப்பா… என் மகன் அமெரிக்காவில்  இருக்கிறான் என்று எதிர்படுவோரிடமெல்லாம் வலியச் சென்று சொல்லும் அப்பா… நினைக்கும் போது கண்கள் நிறைந்தது விக்னேஷ்க்கு.

இதே நிலமை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் கூட இவ்வளவு வருந்தியிருக்க மாட்டான். இப்போது நிலமையே வேறு. எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பு, பல நூறு கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. வேலை கிடைப்பது இப்போது குதிரைக்கொம்புதான். சில ஆண்டுகளுக்கு முன்பு, கணிப்பொறியில்  ஏதோ நான்கு வார்த்தைகள் சொல்ல முடிந்தால் உடனே வேலை. இப்போது அப்படி அல்ல… அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடப்பதால் இந்தியாவில் கூட வேலை கிடைப்பது மிகவும் கடினமாம்.

“விக்னேஷ்”.

நண்பனின் குரல் அவனை நிலத்துக்கு இழுத்து வந்தது.

என்னடா … இப்படி கவுத்துட்டாங்களே. இப்போ என்ன பண்றது ?

இங்கே வேறு கம்பெனியில் முயற்சி செய்யலாம்… வேறு என்ன செய்ய முடியும் ?

எங்கே போய் முயற்சி செய்வது ? போனவாரம் ரஞ்சித் சொன்னதைக் கேட்டாயா ? எங்கேயும் வேலை இல்லை. நமது நிலமை இப்போ மிகவும் இக்கட்டானது. இங்கே வேலையில்லாமல் நாம் ஒரு மாதத்துக்கு மேல் தங்க முடியாது தெரியுமா ? நாம வந்திருப்பது வேலை பா
ர்ப்பவர்க்கான விசா… இந்த நாட்டில் நாம் வேலையில்லாமல் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் நாம் அவர்களுடைய சட்டத்தை மீறுபவர்களாய் கருதப்படுவோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் ஜெயிலில் கூட அனுப்பப்படலாம்….பதட்டம் நிறைந்த குரலில் சொன்னான் விக்னேஷ்.

நண்பன் ஊமையானான்… எதுவும் சொல்ல முடியவில்?ல என்னால். என்ன நடக்கப்போகிறதோ ?

எங்கே வேலை தேடுவதோ தெரியவில்லை. ஒரு நாள் நான்குமுறை தலை நீட்டும் நிர்வாகிகள் யாரையும் காணவில்லை. எல்லோரும் நழுவி விட்டார்கள். நடுக்கடலில் நிற்கிறோம் இப்போது. கண்டிப்பாக நீச்சலடித்துத் தான் ஆகவேண்டும். எங்கே கரையேறுகிறோம் என்பது ஆண்டவன் செயல். சொல்லிவிட்டு நடக்கத்துவங்கினான் ரஞ்சித்.

வாழ்க்கை சுவாரஸ்யம் இழந்துபோனதாய் நகர்ந்தது. ஆகாய விமானமாய் பறந்துகொண்டிருந்த உற்சாகம் எல்லாம் விதியில் விழுந்து நடைவண்டியாய் நடக்கத் துவங்கியது.

வாரம் ஒன்று ஓடிவிட்டது. நிறைய இடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியாகிவிட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை… விக்னேஷின் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடையத்துவங்கியது.
வேலை இருந்தபோது தினசரி நான்குமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நண்பர்கள், விஷயம் கேள்விப்பட்டபின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் செல்வதுபோல் தோன்றியது விக்னேஷிக்கு. ஏதாவது உதவி கேட்பேன் என்று பயப்படுகிறார்களா ?

இல்லை என்னோடு வழக்கம் போல கலகலப்பாய் பேசமுடியாது என்று நினைக்கிறார்களா ? சிந்தனை வட்டமடித்துப் பறந்தது.

பிரியாவிடமிருந்து கூட பதில் கிடைக்கவில்லை…. பிரியா, விக்னேஷின் நெருங்கிய தோழி.  தினமும் ஒரு மின்னஞ்சலாவது அனுப்பும் தோழி.

கணிப்பொறியில் இரண்டு நிமிடங்கள் செலவழித்தால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். காணோம்.

முதல்நாள் அதிர்ச்சியாய் ஒரு கடிதம்… இரண்டாம் நாள் வேலை ஏதாவது கிடைத்ததா என்னும் ஒரு கடிதம்.

கடந்த நான்கு நாட்களாக அதுவும் இல்லை. இப்போது விக்னேஷிற்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் அதிகமாய் காயப்படுத்துவதாய் தோன்றியது. 
மூக்கில் அறுவைசிகிட்சை செய்து கொண்டவனுக்கு தொண்டடயும் கட்டிப்போன அவஸ்தை அவனுக்கு.

இதுதான் வாழ்க்கை. சாவு நெருங்கிவரும்போதுதான் தான் வாழ்ந்த இந்த உலகம் என்பது மிகவும் உன்னதமாது என்கிற விஷயம்  பலருக்கும் புரியத் துவங்குகின்றது. ஒரு பிரிவுதான் உறவின் இறுக்கத்தை மிகத்தெளிவாய் விளக்குகிறது. விக்னேஷிற்கும் இப்போது தான் சில விஷயங்கள் புரிவதாகத் தோன்றியது.

ஏதாவது  ஒரு மாயம் நடந்து கம்பெனி மூடும் விஷயத்தைதக் கைவிட மாட்டார்களா என்று வேண்டுதல்கள் செய்தான். இந்த தனிமை அவனை ஒரு பாறாங்கல் கிரீடமாய் அமிழ்த்தத் துவங்கியது. இனி என்ன செய்வது ?
எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து விக்னேசின் கால்களை உடைத்துக் கொண்டிருந்தபோது அழைப்புமணி ஒலித்தது.

வாசலில் தபால்காரப் பெண்மணி. கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு, கொஞ்சும் ஆங்கிலத்தில் கைகயசைத்து நகர்ந்தாள்.

யார் கடிதம் அனுப்பியிருப்பார்கள் என்று பார்த்த விக்னே? ஆச்சரியப்பட்டான். அப்பா !!!. அப்பா இதுவரை கடிதம் எழுதியதில்லை, இப்போது என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணியபடியே கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

அன்பு மகனுக்கு…..

உனக்கு வேலை பறிபோய்விடும் என்னும் விஷயம் கேள்விப்பட்டு கலங்கினேன். இதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்கள் தான். இந்த வேலை போனால் உனக்கு வேறு ஒரு வேலை காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள். வேலை போனால் கவலையில்லை, ஆனால் நம்பிக்கை மட்டும் உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக்கொள். வேலை என்பது ஒரு பாதை. நம்பிக்கை என்பது உன் பாதம்.

இல்லையேல் வேலை என்பது ஒரு கதவு, நம்பிக்கை என்பது உன் கரங்கள் என்று நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சின்ன வயதில் நீ ஆரம்பப்பாடசாலைக்குச் செல்ல அழுவாய். அப்போதெல்லாம் நீ நினைத்தாய் உன் சின்ன வயதுச் சுதந்திரம் சிறையிலிடப்பட்டது என்று. பிறகு நீ புரிந்து கொண்டாய். கல்லூரியில் இடம் கிடைக்காத போது கலங்கினாய், விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்று வருந்தினாய். வேலை தேடிய நாட்களில் தாழ்வுமனப்பான்மையில் தவழ்ந்தாய். இவையெல்லாம் உனக்கு வேலை கிடைத்தபோது மறைந்து போய்விட்டது.

இதுவும் அப்படித்தான், ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவுகள் திறக்கும் என்பார்கள். கவலையை விடு.

உயிருக்குயிராய் காதலித்தவள் இன்னொருவனோடு ஓடிப்போனபோது கூட, அவளைப்புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இதுவென்று அமைதியாய் சொன்னவன் நீ.
நீ  கலங்கமாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தற்காலிகத் தோல்விகள் கற்றுத்தந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்தவெற்றி நோக்கி அடியெடுத்து வை.

எதுவும் புரியவில்லை என்றால் என்னிடம் வா… கொஞ்சநாள் சின்ன வயதுக்காரனாய் என்னோடு சிரித்துவிளையாடு.

விக்னேசிற்கு கண்கள் பனித்தன. மனதுக்குள் ஏதோ மிகப்பெரிய ஒரு பலம் வந்ததாய் உணர்ந்தான்.

ஒன்றுமில்லாத விஷயத்துக்காய் இத்த?ன நாள் கஷ்ப்பட்டதாய் தோன்றியது அவனுக்கு.
நன்றி அப்பா…. மனசுக்குள் உற்சாகமாய் சொல்லிக்கொண்டான்.

****

சம்பள உயர்வு


சீக்கிரம் வாடா.. மணி பத்தரையாச்சு. காஃபி டைம். செல்போனில் கூப்பிட்டான் நட்டு என்கிற நடேசன்.

இப்போ தாண்டா வந்தேன் ஆபீசுக்கு. நீ போ நான் அப்புறமா வரேன். ஜெயராஜ் தயங்கினான்.

‘டேய் வெண்ணை. நீ எண்ணிக்குதான் சீக்கிரமா வந்திருக்கே. அதான் இப்போ ஆஃபீசுக்கு வந்தாச்சுல்ல, கீழே வா காண்டீனுக்கு.. முதல்ல காஃபி சாப்பிட்டு ஒரு தம் போட்டுட்டு அப்புறமா பாத்துக்கலாம் உன்னோட வேலையை’ நடேசன் தொடர்ந்தான்.

நடேசனுடைய தொந்தரவு பொறுக்க முடியாத ஜெயராஜ், தனக்கு முன்னால் இருந்த கணிப்பொறியை லாக் செய்து விட்டு கேண்டீனுக்குப் புறப்பட்டான்.
காண்டீன் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் இருந்தது. ஜெயராஜ் மூன்றாவது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

எங்கும் கணிப்பொறிகள். வேவ்வேறு நிறங்களில் எதையெதையோ தங்கள் முகத்தில் ஓடவிட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொரு கணிப்பொறிக்கு முன்னாலும் ஒவ்வொரு கணிப்பொறியாளர். பெரும்பாலானவர்களுடைய வயது இருபதுக்கும் முப்பந்தைந்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது ஒரு இனிய ஆச்சரியம். விரல்களுக்குக் கீழே இருக்கும் விசைப்பலகையில் விரல்கள் ஒரு வீணை வாசிப்பவனில் தாளத்தோடு அங்கும் இங்குமாய் அலைய மானிட்டரில் வரிகள் ஓடின. ஏதேதோ மென்பொருட்கள், ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட வெவ்வேறு பணிகள் என்று சுறுசுறுப்பாக இருந்தது அலுவலகம். எதிர்பட்ட நபர்களிடமெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு விசாரிப்பை வழங்கிவிட்டு கீழ்த்தளம் நோக்கி நடந்தான் ஜெயராஜ்.

காண்டீன் பரபரப்பாய் இருந்தது. தேனீர் தயாரித்துத் தரும் இயந்திரத்துக்குக் கீழே பிளாஸ்டிக் குவளையை வைத்து ஏதோ ஒரு பட்டனை அமுக்கி காபியை நிறைத்தான் ஜெயராஜ். ஓரமாய் இருந்த மேஜையில் நடேசன், ஸ்ரீநாத்.

நிறைந்து வழியும் காஃபியை விரல்களில் வழியவிடாமல் பூனை தன் குட்டியைத் தூக்கும் லாவகத்தோடு விரல்களின் நுனிகளால் பற்றி மேஜையை வந்தடைந்தான் ஜெயராஜ்.

ஆபீஸ்க்கு இப்போ தான் வந்தேன். அதுக்குள்ள என்னை இழுத்துப் புடிச்சு காண்டீனுக்கு வர வெச்சுட்டீங்க. இன்னும் மெயில்களைக் கூட வாசித்துப் பார்க்கல.
சொல்லிக்கொண்டே அமர்ந்தான் ஜெயராஜ். அவனுக்கு முன்னால் மேஜையில் ஏதோ ஒரு ஆங்கில மாத இதழ் முன்னட்டையில் புரியாத தொழில்நுட்பப் புகைப்படத்தோடும், வழவழப்பான தன்மையோடும் சிரித்தது.

இந்த கணிப்பொறி சர்க்கியூட் களுக்கும் நவீன ஓவியங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும். இரண்டுமே ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. கணிப்பொறியில் நாள் முழுவதும் வேலை செய்யும் மனிதர்களில் தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேருக்கு கணிப்பொறிக்கு உள்ளே இருக்கும் விஷயங்கள் ஒன்றுமே தெரியாது. அதேபோல கணிப்பொறி தயாரிக்கும் மக்களால் கணிப்பொறியில் வேலை செய்யவும் முடிவதில்லை. அவரவர் வேலை அவரவர்க்கு. அவ்வளவே.

‘காலைல வந்ததும் எல்லா செய்தித் தாள்களையும் இண்டர் நெட்ல வாசிக்க வேண்டியது. அப்புறம் அப்படியே பத்தரைக்கு காபி, பதினொன்னறை வரைக்கும்
காண்டீன்ல அரட்டை அடிக்க வேண்டியது அப்புறம் மேல போயி கேள்பிரண்ட்ஸ் அனுப்பியிருக்கிற மெயில்களை வாசிக்க வேண்டியது, பன்னிரண்டரைக்கு சாப்பிட வரவேண்டியது. சாப்பிட்டு தம் போட்டு முடிக்கும்போ ஒண்ணரை. அப்புறம் ஒண்ணரையில இருந்து மூணரை வரைக்கும் தூங்கிட்டே ஏதாவது மெயில்ஸ் டைப்பண்ண வேண்டியது, அல்லது சாட் பண்ண வேண்டியது. மூணரைக்கு மறுபடியும் காபி. இப்போ போதாக்குறைக்கு ஐஞ்சரைக்கு மேஜைப்பந்து, கேரம், ஷட்டில் ஏதாவது விளையாடிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது.. இது தானே நீ பண்றே. இதுல எதுக்கு படம் காமிக்கிறே’ நடேசன் ஜெயராஜை வம்புக்கு இழுத்தான்.

‘சைக்கிள் கேப்ல ஆட்டோ  ஓட்டற மாதிரி அதுக்கு இடையேயும் ஒர்க் பண்றேன் இல்லையா அது தான் பெரிசு. உன்னை மாதிரி மீட்டிங் மீட்டிங் ந்னு கூட்டம் போட்டு தூக்கமா போடறேன்’ ஜெயராஜ் தன் பங்குக்கு நடேசனை இழுத்தான்.

‘ஆரம்பிச்சுட்டீங்களா உங்க வேலையை ? ‘ ஸ்ரீநாத் இடையே நுழைந்தார்.

‘உங்களுக்கென்ன ஸ்ரீநாத். நீங்க மானேஜர். உங்களுக்கு வேலையே இல்லை. உங்களுக்கு மேலே இருக்கிறவங்க அனுப்பற மெயிலை உங்க டீமுக்கு ஃபார்வேர்ட் பண்ன வேண்டியது, அப்படியே டீம் மெம்பர்ஸ் கேக்கறதை மேலிடத்துக்கு பார்வேர்ட் பண்ண வேண்டியது. அது இல்லேன்னா டைரியை தூக்கிட்டு இங்கேயும் அங்கேயும் அலைய வேண்டியது. நாலுபேர் கூடற இடத்துல கான்ஃபரன்ஸ் போட்டு பீட்டர் வுடுறது. அதுக்கும் மேல ஏதாவது பண்ணணும்ன்னு தோணினா இரண்டு எக்ஸல் ஷீட் அனுப்பி வொர்க் அலோகேஷன் நிரப்ப சொல்லுவீங்க, தூக்கம் வரும்போ எட்டிப் பார்த்து ஸ்டேட்டஸ் கேப்பீங்க. ம்ம்…. மேலே போக போக வேலை கம்மியாயிட்டே போகும்’ நடேசன் ஜெயராஜை விட்டு விட்டு ஸ்ரீநாத்தை பிடித்தான்.

‘அந்த வெட்டிப் பேச்சை எல்லாம் விடுங்க.. “டுமாரோ சாஃப்ட்வேர்ஸ்” ல ஆள் எடுக்கறாங்களாம் தெரியுமா ? நல்ல பே தராங்களாம்’ ஸ்ரீநாத் பேச்சை திருப்பினார்.

‘ஆமா கேள்விப்பட்டேன். நம்ம கம்பெனில தான் சம்பளம் ரொம்பவே கம்மி. எரிச்சல் பட்டான்’ ஜெயராஜ்

ஆமாடா. மத்த சாஃப்ட்வேர் கம்பெனில எல்லாம் நம்ம எக்ஸ்பீரியன்ஸ்க்கு கிடைக்கிற சம்பளமே வேற. நாலுவருஷமா ஒரே கம்பெனில இருக்கிறோம் வெறும் பத்தோ பதினஞ்சோ சதவித சம்பள உயர்வு குடுத்து அவமானப் படுத்தறாங்க. இதையே மத்த கம்பெனில எல்லாம் முப்பது நாப்பது சதவிகிதமாம். நடேசன் ஒத்து ஊதினான்.

ஆமா. என் கிளாஸ்மேட் ஒருத்தன் பெங்களூர்ல மிரர் சாப்ஃட்வேர்ஸ் ல இருக்கான். அவனுக்கு மாசம் அறுபதாயிரம் சம்பளமாம். நமக்கு அந்த அளவுக்கு வர இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ.

ஆமா. நாற்பதைத் தாண்டற வழியே காணோம். அதுலயும் முப்பது சதவிகிதம் டாக்ஸ் புடிச்சு உயிரை வாங்கறாங்க.

ஐயோ, அந்த டாக்ஸ் கதையை ஞாபகப் படுத்தாதே. வருஷத்துக்கு இரண்டு இலட்ச ரூபாய் டாக்ஸ்லயே போயிடுது. அவன் அவன் நாலு ஹோட்டல், ஐஞ்சு கம்பெனி வெச்சுட்டு வரிகட்டாம இருக்கான். அரசியல் வாதிங்களைப் பார்த்தா ஊரெல்லாம் பங்களா வாங்கித் தள்றாங்க,  நம்மள மாதிரி மாச சம்பளம் வாங்கறவங்கன்னா உடனே வந்துடுவாங்க ஒரு ஆர்டரையும் தூக்கிக்கிட்டு. சே… டாக்ஸ் சேவிங்ஸ்க்காக ஊரெல்லாம் பாலிஸி வாங்கி, இப்போ அதுக்கு பிரீமியம் கட்ட வழியில்லாம அல்லாட வேண்டியதாயிருக்கு.

இந்த மார்ச் வரைக்கு வெயிட் பண்ணுவேன். இந்த தடவையும் நல்ல ஹைக் குடுக்கலேன்னா வேற கம்பெனி தேடறதா இருக்கேன்.

அதை நான் எண்ணிக்கோ டிசைட் பண்ணிட்டேன். ரெஸ்யூம் கூட ரெடி பண்ணிட்டேன். நாலு மாடல்ல. எந்த கம்பெனில எந்த போஸ்ட் க்கு கேக்கறாங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு ரெஸ்யூம் அங்கே அனுப்பிட வேண்டியது தான்.

‘சரி அதை விடு. இன்னிக்கு மேட்ச் பாத்தியா ?’ ஸ்ரீநாத் பேச்சை திசைதிருப்புவதற்காவே இருப்பவர் போல புது கேள்வியைக் கேட்டார்.

ஸ்கோர் பாக்காம என்ன பண்ன சொல்றீங்க ? என்.டி.டி.வி ஸ்கோர் கார்ட் ஒண்ணு ஓடிட்டே இருக்கும் என்னோட சிஸ்டம்ல. அதுவும் போதாதுன்னு கிரிக் இன்போ டாட் காமையும், கிரிக்பஸ் டாட் காமையும் பத்து செகண்டுக்கு ஒரு தடவை ரிஃப்ரஸ் பண்ணிட்டே இருப்பேன். மாட்ச் நடக்கும்போ வேற வேலையே ஓடாது. ஜெயராஜ் சொன்னான்.

ஆமா. இல்லேன்னா மட்டும் வேலை வந்து குமியுதா என்ன ? ஏதோ கொஞ்சம் புராஜக்ட் டெஸ்டிங். அதுலயும் இரண்டு இஷ்யூ கண்டு பிடிச்சுட்டோ ம்னா போதும். அப்புறம் டெவலப்மெண்ட் டீம் அதை பிக்ஸ் பண்ணி நமக்கு கோடு தரதுக்கு கொஞ்ச நாள் ஆகும் அதுவரைக்கும் ஃபிரீ தான். டெஸ்டிங் டீம்ல இருக்கிறதுல இது ஒரு வசதி. என்ன டெவலப் பண்ணினாங்கன்னு பார்த்து டெஸ்ட் பண்ணினா போதும். அப்படியே நாம சரியா டெஸ்ட் பண்னலேன்னா கூட ஏதும் குடி முழுகிப் போயிடப் போறதில்லே. புரடக்ஷன் இஷ்யூ கொஞ்சம் வரும். அதை மட்டும் அப்புறம் டெஸ்ட் பண்ணினா போதுமே.

அடப்பாவி.. இப்படித்தான் உன்னோட வாழ்க்கை ஓடுதா ? நாங்க இங்கே டெவலப்மண்ட் டீம்ல இருந்து கஷ்டப்படறோம். நீ என்னடான்னா ஜாலியா வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கே.  ஜெயராஜ் சிரித்தான்.

சிரிக்கிறதை நிறுத்து முதல்ல. உருப்படற வழியைப் பாரு. நல்ல கம்பெனி ஒண்ணை செலக்ட் பண்ணி டிரை பண்ணுவோம். இந்த கம்பெனில குப்பை கொட்டினது போதும். நாலு வருஷம் ஒரே கம்பெனில இருக்கிறேன்னு சொன்னா சிரிக்கிறாங்க.

அதுக்கு ஏன் டென்சனாகிறே. டிரை பண்ணுவோம். இப்போ தான் மார்க்கெட் நல்லா இருக்கே. நாம ஒரு நல்ல கம்பெனியைப் பார்த்து சேர்ந்துடலாம். நல்ல ஹைக் குடுக்கிற கம்பெனி எத்தனையோ இருக்கு.

அவர்களுடைய பேச்சு இருக்கும் கம்பெனியில் சம்பளம் குறைவு என்றும், புதிய கம்பெனி தேடவேண்டும் என்றும் நீண்டு கொண்டே இருந்தது. ஜெயராஜின் மனசுக்குள் இந்த கம்பெனியில் இருப்பது நல்லதல்ல, உடனடியாக வேறு ஒரு கம்பெனியில் சேரவேண்டும் என்னும் எண்ணம் ஆழமாகப் பதியுமளவுக்கு அவர்களுடைய உரையாடல் ஆழமானதாய் இருந்தது.

மாலை,

பல்வேறு சிந்தனைகளுடன் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தான் ஜெயராஜ்.

‘அண்ணா.. ஒரு குட் நியூஸ்….’ உற்சாகமாக துள்ளிக்கொண்டே வந்தான் அருள். ஜெயராஜின் தம்பி.

‘என்ன குட் நியூஸ் சொல்லு.. இவ்வளவு உற்சாகமா இருக்கே… ‘ ஜெயராஜும் உற்சாகமானான்.

அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு மெக்கானிக் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஜெயராஜின் தம்பி மூச்சு வாங்கிக் கொண்டே அண்ணனின் அருகே வந்து உட்கார்ந்தான். எனக்கு கம்பெனில சம்பள உயர்வு குடுத்திருக்காங்க. ஏழு சதவீதம். இரண்டு வருஷமா சம்பள உயர்வு கேட்டுட்டே இருந்தோம் இப்போ குடுத்திருக்காங்க. இனிமே மாசம் எனக்கு நாலாயிரத்து முன்னூறு ரூபாய் கிடைக்கும். முதுகு உடைய, உடம்பெல்லாம் வலிக்க வலிக்க செய்த வேலைக்கு இப்போ தான் பலன் கிடைச்சிருக்கு

உற்சாகமாக சொல்லிக் கொண்டே போன தம்பியைப் பாத்ததும் ஏதேதோ தெளிவடைவது போல உணர்ந்தான் ஜெயராஜ்.

நச்….


வாணியைத் தவிர அந்த வரவேற்பறையில் இன்னும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். மெயின்பிரேம் என்னும் கணிப்பொறி சார்ந்த நேர்முகத் தேர்வுக்காக எல்லோரும் பதட்டம் பூசிய முகத்தோடு காத்திருந்தார்கள்.

“நீங்க இண்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க ?” அருகிலிருந்த இளைஞனிடம் வாணி மெதுவாய்க் கேட்டாள்.

‘என்னங்க கேள்வி இது ? புதுசா ஐயர்ன் பண்ணின வெள்ளைச் சட்டை போட்டுட்டு வந்திருக்கேன். இண்டர்வியூ நடக்கிற ரூமுக்கு வெளியே காத்திருக்கேன். இண்டர்வியூவுக்கு வராம கிளிஜோசியம் பாக்கவா வந்திருக்கேன். குளிச்சிட்டிருக்கிறவனைப் பார்த்து குளிக்கிறியா ங்கற மாதிரி இருக்கே நீங்க கேக்கறது. ”  ரொம்பநாள் பழக்கமானவன் போல சிரித்தான் அருண்.

‘இல்லே… கொஞ்சம் டென்சனா இருக்கு. அடுத்ததா என்னைத் தான் கூப்பிடுவாங்க. அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு’ அவள் புன்னகையோடு இழுத்தாள்.

‘கவலையே படாதீங்க. ரிலாக்ஸா இருங்க. அது தான் இண்டர்வியூவுக்கு ரொம்ப முக்கியம். நாம என்ன பண்றோம், என்ன படிச்சிருக்கோம்கிறதை விட எப்படி பிரசண்ட் பண்றோம்ங்கிறது தான் முக்கியம்’ அவன் சொன்னான்.

‘ஆமா… ஆனா எந்த மாதிரி கேள்வி கேப்பாங்கன்னு தெரியலையே… அதான் கொஞ்சம் பயமா இருக்கு’

‘அதுக்கெல்லாம் ஏன் கவலைப்படறீங்க ? மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களுக்கான இண்டர்வியூ இது. ஆனா எனக்கு ஒரு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் தான் இருக்கு.  மிச்சம் எல்லாம் உல்டா தான். நானே கவலைப்படாம இருக்கேன்’ அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே மெதுவாய்ச் சொல்லி சிரித்தான்.

‘பயோடேட்டா வில தப்பான தகவல் கொடுத்திருக்கீங்களா ? கண்டு பிடிக்க மாட்டாங்களா ?.’

‘வேற என்ன பண்ண சொல்றீங்க ? புதுசா படிச்சு முடிச்சவங்களுக்கு வேலை எங்கேயும் இல்லை. எங்கே போனாலும் மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் கேக்கறாங்க. யாரும் வேலை தராம எங்கிருந்து எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அதான் படிச்சு முடிச்சப்பறம் வேலை தேடிட்டு இருந்த இரண்டு வருஷத்தையும் எக்ஸ்பீரியன்ஸ் ஆ மாத்திட்டேன்… அதனால தான் என்னை இண்டர்வியூவுக்கே கூப்பிட்டாங்க’ அவன் சிரித்தான்.

‘அது எல்லோரும் பண்றது தான். நான் கூட மெயின்ஃப்ரேம் படிக்கலை.. கொஞ்ச நாள் ஒரு கம்பெனி, இன்னும் கொஞ்ச நாள் இன்னொரு கம்பெனின்னு இரண்டு மூணு கம்பெனில வேலை பாத்தேன். அந்த அனுபவத்தை வெச்சு பெங்களூர்ல மூணு வருஷம் வேலை பார்த்தது போல காட்டியிருக்கேன். என்ன ஆவப் போகுதோ ?’ அவள்  கொஞ்சம் பயந்துகொண்டே மறந்து சொன்னாள்.

‘சத்தமா சொல்லாதீங்க. எங்கேயாவது கேமரா வெச்சு பாத்திடப் போறாங்க’ அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.

“வாணி……உள்ளே போங்கம்மா… அடுத்தது நீங்க தான். உள்ளே போய் உட்காருங்க” அட்டண்டர் சொன்னான்.

வாணி உள்ளே போனாள். இரண்டு நிமிடக் காத்திருப்புக்குப் பின் அந்த பாதி வழுக்கைத் தலை மனிதர் கழுத்தில் ஒரு பணக்கார டையுடன் வந்தார்.

“குட்மார்ணிங் வாணி. ஐ ஆம் சாரி டு சே தாட் யூ ஆர் நாட் குவாலிபைட்” அமெரிக்காவிலிருந்து குளோனிங் செய்து இறக்கிய ஆங்கிலத்தில் அவர் சொல்ல வாணி கோபமானாள்.

“சார்….. நீங்க என்னை இன்னும் இண்டர்வியூவே பண்ணலையே சார். அதுக்குள்ள எப்படி வேலையில்லேன்னு சொல்றீங்க. ”

“கூல் டவுன் வாணி…. இண்டர்வியூ தான் முடிஞ்சுபோச்சே… அருண் தான் உன்னை இண்டர்வியூ பண்ணினவர்” அவர் சொல்லச் சொல்ல திகைத்துப் போய் அவமானத்தில் கூனிக் குறுகி வாணி வெளியேறினாள்.

வெளியே அருண் இன்னொரு இளைஞனிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

சினிமாவுக்கு பாட்டு எழுதுகிறேன்


“வணக்கம் சார்… நான் தான் ராஜ்”

எந்த ராஜ் யா ? என்ன வேண்டும் என்று அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இருந்தாலும் தொண்டைக்குள் நின்றிருந்த மிச்ச உமிழ்நீரையும் விழுங்கிக் கொண்டே. ” போன வாரம் பேசினோமே சார். இன்னிக்கு வரச் சொல்லியிருந்தீங்க… பாட்டு எழுதுற விஷயமா…. ” என்று இழுத்தேன்

“ஓ… அந்த பாட்டு எழுதறவனா… உட்காரு..” – என்று சொல்லியபடி கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்தபோது மனுஷனை மதிக்கத் தெரியாத ஒரு இசையமைப்பாளர்யா… என்று மனசுக்குள் சுயகெளரவம் என்று நானாய் கற்பனை செய்து வைத்திருந்த மனசு அவமானப் பட்டது.

இருக்கை நுனியில் உட்கார்ந்தேன். இலக்கியவிவாதங்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம் அலட்சியமாய் செளகரியமாய் உட்கார்ந்து கொள்ளும் நானா இப்படி பவ்யம் காட்டி அமர்கிறேன் என்பதும், ஏன் இப்படி பவ்யம் காட்டுகிறேன் என்பது சத்தியமாய் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் எப்படியாவது ஒரு வாய்ப்பு வாங்கியாகவேண்டும். இரண்டு படங்களிலாவது பாடல் எழுதி நாலுபேர் நம்ம வரிகளை பாடித்திரியவேண்டும் என்னும் ஆர்வம் தான் மனசெங்கும்.

இசையமைப்பாளம் விதேயன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய இசைக்குறிப்புகளோடு மல்லிட்டுக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ அவர் வேண்டுமென்றே இழுத்தடிப்பது போல் தோன்றியது. ஆனாலும் அமர்ந்திருந்தேன். வேறு வழி ?

சட்டென்று திரும்பிப் பார்த்துக் கேட்டார். “நீ தானன்னா க்கு பாட்டு எழுதுவியா ”
“எழுதுவேன் சார்….” சட்டென்று சொல்லிவிட்டேன். ஆனால் எழுதியதில்லை.
” சார் நான் நாலு புக் போட்டிருக்கேன் சார். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் பாராட்டியிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டே மேஜையில் நான் எடுத்து வைத்த புத்தகங்களை அவர் ஒரு மரியாதை நிமித்தம் கூட பிரித்துப் பார்க்காதது சத்தியமாய் எனக்கு அவமரியாதையாய் தான் இருந்தது. ஆனாலும் பேசவில்லை.

சரி … ஒரு டியூண் சொல்றேன்  எழுது பார்ப்போம்…
சொல்லிக் கொண்டே அவர் போட்ட டியூன் இது தான்.

“தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா
தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா”

“சார் என்ன சூழ்நிலை சார்..” என்று நான் கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பார்வையே காட்டிக் கொடுத்து விட்டது.
” லவ்வர்ஸ் பாடறாங்க…” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். அதற்கு மேல் எனக்குள் எழுந்த கேள்விகளை நான் கேட்கவில்லை.
கேட்டால் நீ எழுத வேண்டாம்.. என்று சொல்லிவிடுவாரோ என்னும் பயம் தான் காரணம்.

நான் மனசுக்குள்ளும் காகிதத்திலும் மாறிமாறி ஏதேதோ எழுதிக் கிழித்து விட்டு… சொன்னேன்…

பின்னல் போட்ட மின்னல் காரி
காதில் காதல் சொல்வாளா…
கன்னம் கோர்த்த கன்னம் கொண்டு
கவிதை எழுதிச் செல்வாளா ?

எழுதி முடித்து பெருமிதத்தோடு அவரிடம் வரிகளைக் காண்பித்தபோது சலனமே இல்லாமல் வாங்கிப் பார்த்தவர் சொன்னார்….
“இதுல ஏதும் அட்ராக்டிவ் வேர்ட்ஸ் இல்லையேபா…. “..
” அது வந்து சார்… காதலன் காதலியை நினைச்சு…”

“அது என்ன மண்ணையோ நினைச்சுட்டு போகட்டும்….. முதல் வார்த்தை ரொம்ப கேச்சியா இருக்கணும்… இப்போ பாரு.. மன்மதராசா… இல்லேண்ணா காதல் பிசாசே… இப்படி ஏதாவது”

“காதல்பேயே காதல் பேயே
காதில் காதல் சொல்வாயே….”

ன்னு வெச்சுக்கலாமா சார்…. நான் கிண்டலாய் தான் கேட்டேன். ஆனாலு அவர் கொஞ்சம் பரிசீலனை செய்வது போல் தோன்றவே பக் கென்றாகிவிட்டது எனக்கு.

“இது பரவாயில்லை.. ஆனாலும் காதல் பிசாசே இருக்கிறதனால… வேற ஏதாவது எழுது…”

நான் மீண்டும் மண்டையைச் சொறிந்தேன்.

“நரகம் மீதில் கரகம் ஆடும்
நவரச தேவதை நீதானோ…
கிரகம் தாண்டி நகரம் தீண்டி
பரவசம் தருவதும் ஏந்தானோ”

” அட… இது பரவாயில்லை…. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நீ பாட்டு எழுத கத்துக்கறே…. ”

“சரி… நான் முழு டியூனையும் இந்த கேசட்ல வெச்சிருக்கேன். வீட்ல போய் உட்கார்ந்து நல்லா யோசிச்சு ஒரு பாட்டு எழுதிட்டு வா… பாட்டுல, கொஞ்சம் விரசம் தூக்கலா இருக்கணும்…. கேக்கறவனுக்கு பத்திக்கணும்.. நான் உன்னை கற்பழிப்பேன்,, ந்னு கூட எழுதலாம்… ”
என்று அவர் சொன்னபோது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனேன்.

ஆனாலும் பேசாமல் டியூன் கேசட்டை வாங்கி வீட்டில் வைத்தேன். திரும்பத் திரும்ப யோசித்து நான் எழுதிய சரணங்கள் இவை தான்…
மேற்கு வானம் மஞ்சள் பூசி
நீலக் கடலில் குளிக்க,
வெப்பம் போன காற்றுக் கூட்டம்
தெப்பத்துக்குள் கிடக்க,
வெள்ளிப் பாத வெள்ளை வாத்து
அல்லி விலக்கி மிதக்க,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உந்தன் பின்னே நடக்குதடி.

0

தாழக்கரையின் தாழம் பூவும்
வாசனை வீசிச் சிரிக்க – அது
பட்டுப் பூச்சியின் வண்ண இறகில்
மெல்ல மோதிக் களிக்க
பச்சை கொட்டிய வயலின் நண்டுகள்
வளைகளை உடம்பில் உடுத்த,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உனக்குள்ளேயே கிடக்குதடி.

எழுதி முடித்து பாடலை இசையமைப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு வந்தேன். அவ்வளவு தான் கடலில் போட்ட கல்லைப் போல, நீண்ட நாட்களாக எந்த ஒரு பதிலும் இல்லை.
சரி மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து ரிகார்டிங் ஸ்டுடியோ பக்கம் போனேன். உள்ளே ஒரு பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.
எனக்கு அவர் கொடுத்த அதே டியூண்… ஆனால் வேறு வரிகள்.

திடுக்கிட்டுப் போனேன். உள்ளே ஏதோ ஒரு கவிஞர் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்…

கொள்ளி வாய்ப் பிசாசு நீதானா
கொள்ளை யிடும் ஆளும் நாந்தானா
கொல்லிமலை மேலே மீன் தானா
மெல்லிடையில் நீந்த நாந்தானா…

கவிஞர் வரிகளை வாசித்துக் காட்டக் காட்ட… ஆஹா… பிரமாதம் சார். இந்த பாட்டு தான் இனி நாளைக்கு தமிழகத்தையே கலக்கப் போகுது.
நீங்க இன்னும் ஃபீல்ட் ல இருக்கிறதுக்கு இது தான் சார் ஒரே காரணம்.. கிரேட் என்று பாராட்டு மழை பொழிந்து கொண்டிருந்தார் இசையமைப்பாளர்.

நான் பாக்கெட்டிலிருந்து தபால்கார்டை எடுத்துப் பார்த்தேன். மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம் இருக்கிறது.
ம்ம்.. நமக்கு பாட்டு எழுதும் வேலையெல்லாம் ஒத்து வராது என்று முடிவு கட்டிக் கொண்டு திரும்பி நடந்தேன்.

மனத்திரையில்.. கொள்ளிவாய்ப் பிசாசு நீ தானா என்ற வரிகளுக்கு 70 எம் எம் மில் ஒரு தொப்புள் வந்து பயமுறுத்திப் போனது

விசா கிடைக்குமா ?

அமெரிக்கன் கவுன்சிலேட் நுழைவு வாயில் பரபரப்பான இந்திய முகங்களால் நிறைந்து கிடந்தது.

மேய் மாதத்தின் அக்கினி வெயிலும், மேம்பாலத்தின் வாகனப் புழுதியும் உடம்புக்குள்ளிருந்த நீரை எல்லாம் வியர்வையாக வெளியேற்றிக் கொண்டிருந்த மதியப் பொழுது. நுழைவு கேட்டை ஒட்டியபடி இருந்த வாயிலின் அருகே ஒரு செயற்கைக் குளிரூட்டப்பட்ட அறை. உள்ளே இருந்தவனுக்கு சென்னை வெயிலின் வீரியம் புரிந்திருக்க நியாயமில்லை. வெகு நிதானமாய் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

கையிலிருந்த பாஸ்போர்ட்டையும், தயாராய் எழுதி வைத்திருந்த விண்ணப்பப் படிவங்களையும் கவுண்டரின் குளிரூட்டப்பட்டிருந்த அறையில் இருந்தவரிடம் நீட்டினேன். பாஸ்போர்ட்டின் முன் அட்டையின் பின்பக்கம் ஒட்டப்பட்டிருந்த என்னுடைய அதரப் பழசான புகைப்படத்தையும், சம்பந்தமே இல்லாதது போல் இருந்த என்னுடைய முகத்தையும் மூன்று முறை உற்று உற்றுப் பார்த்தான். பின் விண்ணப்பப் படிவத்தை ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட்டு காரணமே இல்லாமல் ஒரு பெருமூச்சையும் விட்டுக் கொண்டு அனைத்தையும் என்னிடமே திரும்பக் கொடுத்துவிட்டு அருகிலிருந்த கதவை நோக்கிக் கையைக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய வாசலில் நின்றிருந்த காவலாளியைப் பார்த்தபோது பாவமாய் இருந்தது. இலட்சத்து எத்தனாவது முறை என்று தெரியவில்லை அதே கேள்விகளை வரிசை பிசகாமல் என்னிடமும் கேட்டான்.

‘மொபைல் போன், சிடி, எலக்ட் ரானிக் ஐட்டம்ஸ், க்ளோஸ்ட் கவர்ஸ் ஏதும் வெச்சிருக்கீங்களா சார்’

‘இல்லை..’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு என்னிடமிருந்த பைலை மட்டும் அவரிடம் நீட்டினேன். அதை மட்டும் தான் கையோடு எடுத்துப் போயிருந்தேன். அவருடைய பங்குக்கு அவரும் ஒருமுறை அதை வியர்வைக் கரங்களால் தொட்டுப் பார்த்து விட்டுத் திருப்பித் தந்தார். அவருடைய இடது கை கதவைத் திறந்து விட்டது.

கதவு திறந்ததும் அறைக்குள் நிறைந்து கிடந்த சில்லென்ற காற்று முகத்தில் முத்தமிட்டு வரவேற்றது. மாதம் முழுவதும் அடுப்படியில் வேலை பார்த்த சமையல்கார அம்மா அதற்கான ஊதியத்தைக் கைகளில் வாங்கும் போது மனசுக்குள் நிறையும் ஒருவிதமான உணர்வு என்னுடைய வியர்வை மேனிக்கும் வந்திருக்க வேண்டும், உடம்பு கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு வந்தது.

‘பைலை குடுங்க சார்’ குரல்வந்த திசையில் மெட்டல் டிடக்டர் கையுடன் ஒருவர். அடக்கடவுளே.. இன்னும் எத்தனைக் கதவுகள் தாண்டிப் போகவேண்டுமோ !!

‘மொபைல் போன், சிடி, எலக்ட் ரானிக் ஐட்டம்ஸ், க்ளோஸ்ட் கவர்ஸ் ஏதும் வெச்சிருக்கீங்களா சார்’

வெச்சிருந்தா முதல் கேட்லயே என்னை விட்டிருக்க மாட்டாங்களே … என்று மனசுக்குள் மிதந்த பதிலை நீங்கள் எதிர்பார்ப்பது போல நான் சொல்லவில்லை.
‘இல்லை’ என்று மிகச் சிக்கனமாகவே சொல்லி வைத்தேன்.

‘இதோ இடதுபக்கமா இருக்கிற டி.டி சர்வீசஸ் ல நானூற்று நாற்பத்து ஒரு ரூபாவைக் கட்டிடுங்க’ சொல்லிவிட்டு அவர் கைகாட்டிய திசையில் லெட்ஜரும் கையுமாய் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் கையில் தயாராய் வைத்திருந்த நானூற்று நாற்பத்து ஒரு ரூபாயைக் கொடுத்தேன். அவர்கள் அதற்குரிய பில்லைத் தந்துவிட்டு கைகாட்டிய திசையில் இன்னொரு கவுண்டர்.

மீண்டும் பாஸ்போர்ட், விண்ணப்பப் படிவம் இரண்டையும் கவுண்டரின் கீழே இருந்த மெல்லிய இடைவெளி வழியாக நீட்டினேன்.

‘செக் குடுங்க…’ உள்ளிருந்த பெண்மணி தன்னுடைய வாயருகே நீண்டு கொண்டிருந்த மைக்கைச் செல்லமாய்ப் பற்றி மெலிதான ஆங்கிலத்தில் கேட்க நான் என்னுடைய கையிலிருந்த பைலை பரபரப்பாய்ப் புரட்டி அதிலிருந்த நான்காயிரத்து நானூறு ரூபாய்க்கான காசோலையை எடுத்து உள்ளே நீட்டினேன். அதை இடதுகையால் எடுத்து வலதுபுறமாய் வைத்துவிட்டு அவள் பிரிண்ட் செய்து தந்த ரசீது நூறு டாலர்கள் என்றது.

‘இதை எடுத்துக் கொண்டு அடுத்த கவுண்டருக்குப் போங்க’

கிளைகள் தாவித் தாவி ஓடும் குரங்கு போல மனிதர்கள் கவுண்டர் கவுண்டராய்த் தாண்டிக் கொண்டிருக்க நானும் தாவினேன்.

அடுத்த கவுண்டருக்கான வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, கவுண்டரை நெருங்கினேன். வரிசையில் எனக்கு முன்னால் நின்றிருந்த இளம் பெண் பெண் விண்ணப்பத்தில் ஒட்டியிருந்த புகைப்படம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப் பட்டாள்.

‘விண்ணப்பத்தில் இருக்கும் விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப் பட வேண்டும். ஐம்பதுக்கு ஐம்பது அளவில், பின்பக்கம் வெள்ளை யாக இருக்கும் படியாகவும், மிகவும் நெருக்கமாக எடுக்கப் பட்ட குளோசப் புகைப்படம் தான் வேண்டும். நீங்கள் ஸ்டுடியோவுக்குப் போகும் போது அமெரிக்க விசாவுக்கு என்று கேட்டால் அவர்கள் சரியாக எடுத்துத் தருவார்கள். உங்களுடைய அப்பாயின்மெண்ட் டைம் இரண்டு மணி. இன்னும் அரை மணி நேரத்துக்குள் நீங்கள் வந்தாக வேண்டும்’ என்று சலனமே இல்லாமல் செதுக்கி எடுத்த ஆங்கிலத்தில் அவள் சொல்கையில் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணுக்கு ஏசி யிலும் வியர்த்தது.

ஏதும் பதில் பேசவோ, விளக்கங்கள் கொடுக்கவோ முடியாது அங்கே. போ.. என்றால் போக வேண்டும். வா என்றால் வரவேண்டும் அவ்வளவு தான். அந்தப் பெண் கவலையுடன் வரிசையிலிருந்து விலகிச் செல்ல நான் என்னுடைய ஆவணங்களை நீட்டினேன். என்னுடைய பாஸ்போர்ட்டை மெல்லிதான ஒளிக்கற்றை விழுந்து கொண்டிருந்த ஒரு ரீடர் கருவியின் கீழே காட்டிவிட்டு கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்தாள் அவள். என்னுடைய தகவல்கள் எல்லாம் அந்தத் திரையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு திரும்பத் தந்தாள் அவள்.

இனிமேல் எங்கே போகவேண்டும் ? இன்னும் எத்தனை கவுண்டர்கள் காத்திருக்கின்றனவோ ? இத்தனையும் நிகழ்ந்தாலும் விசா கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனதுக்குள் கேள்விகள் வரிசை வரிசையாக எறும்புக் கூட்டம் போல ஊர்ந்து கொண்டிருந்தன.

‘சார்.. அந்த பில்டிங்க்கு போங்க சார்’ நீல நிற ஆடை போட்டிருந்த செக்யூரிட்டி வழிகாட்டிய திசையில் நடந்தேன்.

எதிர்பார்த்தது போலவே அந்த அறையிலும் ஒரு செக்கிங். சம்பிரதாயக் கேள்விகள். அவர்கள் அங்கிருந்து என்னை ஒரு பெரிய ஹாலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

எதிர்பார்க்கவேயில்லை இத்தனை பேர் இங்கே காத்திருப்பார்கள் என்று. அனுமர் வால் போல நீண்டிருந்தது விசாவுக்காய் காத்திருந்த மக்களின் கூட்டம். எல்லோரும் சொல்லி வைத்தார் போல வெள்ளை, அல்லது அது சார்ந்த நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்கள்.

அது ஏனோ தெரியவில்லை. அமெரிக்கா சென்று விட்டால் முக்கால் பேண்டும், சாயம் போன டி சர்ட் ம் போட்டு அலையும் மக்கள் எல்லாம் அமெரிக்க கவுன்சிலேட் உள்ளே மட்டும் ஏன் முழுக்கை சட்டையும், கழுத்துப் பட்டையும் அணிந்து வருகிறார்களோ ! தேவையில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கையிலிருந்த டோ க்கன் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்பது என்றது. அங்கே அறுநூற்று எத்தனாவதோ எண் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று புரிந்து கொண்டு ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.

வரிசையாய் பத்து கவுண்டர்கள். எல்லா கவுண்டரின் உள்ளேயும் அமெரிக்க முகங்கள். இது வரை நான் தாண்டி வந்த கவுண்டர்களிலெல்லாம் இந்திய முகங்கள் தான். ஒவ்வொரு கவுண்டரின் முன்னும் வரிசைகள்.

அமெரிக்க உச்சரிப்பில் கேள்விகள் தெறித்துக் கொண்டிருந்தன.

‘ஏன் அமெரிக்கா போகிறாய் ?’

‘என்ன வேலை உனக்கு அங்கே ? ஏன் அமெரிக்கர் ஒருவரால் இந்த வேலையைச் செய்ய முடியாதா ?

‘எத்தனை நாட்கள் அங்கே தங்குவாய் ?’

‘எங்கே தங்குவாய் ? என்ன வேலை ?’

‘திரும்ப இந்தியாவுக்கு வருவாயா ? வருவாய் என்பதற்கு என்ன நிச்சயம் ?
ஒவ்வொரு கேள்விக்கும் தலையைக் குனிந்து பவ்யமாக மேடம் அல்லது சார் என்று முடிவது போல பணிவாக விழுந்தன பதில்கள். கேள்விகள் கட்டளைகளாகவும், பதில்கள் எல்லாம் அடிமைகளில் குரல்களாகவும் ஒலித்துக் கொண்டிருந்தன அங்கே.

ஓட்டிக் கொண்டிருக்கும் காருக்கு முன்னால் சைக்கிள்காரன் ஒருவன் குறுக்கே வந்தாலே பொறுமையிழந்து கத்தும் மக்கள் அவர்கள். சைக்கிள் காரன் தானே, இந்த வெயிலில் அவன் கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டுகிறான், காரில் இருக்கும் நாம் கொஞ்சம் பொறுமையாய் போகலாம் என்றெல்லாம் யோசித்துப் பார்க்காத மக்கள் அங்கே கவுண்டர்களின் முன்னால் கவசங்களையெல்லாம் கழற்றி வைத்து விட்டுத் தெண்டனிட்டுக் கிடந்தார்கள்.

கவுண்டருக்குள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கடவுளர்களாகவும், அவர்கள் அருள்பாலித்து வழங்கப் போகும் விசா வரத்துக்காக பாத்திரமேந்திக் காத்திருக்கும் பக்தர்கள் போல மக்களும் எனக்குத் தோன்றினார்கள். நானும் அப்படித்தான் போய் நிற்கவேண்டியிருக்கும் என்னும் நினைப்பே எனக்குள் அருவருப்பாய் உறுத்தியது.

பிரசவத்துக்காகக் காத்திருக்கும் மகளைப் பார்க்க அமெரிக்கா செல்லத் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெற்றோருக்கு என் கண்முன்னால் விசா மறுக்கப் பட்டது. அவர்களுடைய மகளுக்கு அமெரிக்க வங்கியில் போதுமான அளவுக்குப் பணம் இல்லையாம்.

படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்காக இருந்த சில மாணவர்களும் நிராகரிக்கப்பட்டார்கள். இங்கே யாருக்கு விசா வழங்கப்படும், யாருக்கு வழங்கப்படாது என்பதெல்லாம் புரியாத புதிர். ஒரே தகுதியுள்ள இருவரில் ஒருவர் அழைக்கப்படுவார், ஒருவர் துரத்தப்படுவார். எதிர்த்துப் பேசவோ, வாதிடவோ எந்த வாய்ப்பும் இல்லை. எல்லோருடைய முகங்களும் பதட்டத்தின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தன. கடைசி வரிசையில் இரண்டு கத்தோலிக்கப் பாதிரியார்கள். அவர்களும் கைநிறைய ஆவணங்களோடு காத்திருந்தார்கள்.

ஏழாவது எண் கவுண்டரில் கையில்லாத மேலுடை அணிந்திருந்த ஒரு பெண்மணி சகட்டு மேனிக்கு விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும், இரண்டாவது கவுண்டரில் அமர்ந்திருக்கும் ஆண் இதுவரை யாரையும் நிராகரிக்கவில்லை என்றும் தகவல்கள் பின் இருக்கையில் பரிமாறப்பட்டன.

நாம் விரும்பிய வரிசையில் சென்றுவிடவும் முடியாது. நம்முடைய எண்ணை அழைத்து எந்த கவுண்டரில் போகச் சொல்கிறார்களோ அங்கே தான் நாம் சென்றாக வேண்டும். நம் கடவுளை நம் பிறப்பு தீர்மானிப்பது போல, நமக்குரிய கவுண்டரை அழைப்பு தீர்மானிக்கிறது.

என்னை பத்தாவது கவுண்டரில் அழைத்தார்கள்.

பதட்டமும், வேண்டுதலும் நிறைத்துக் கொண்டு முன்னால் சென்று நின்றேன். என்னையும் அறியாமல் என் முதுகில் ஒரு பணிவு வந்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது.

இப்போது கேட்கப் போகும் நான்கைந்து கேள்விகள் தான் என்னுடைய பயணத்தை நிர்ணயிக்கப் போகின்றன. வேலைக்கான நேர்முகத் தேர்வு போன்ற ஒரு சூழல். உனக்குத் தெரிந்த ஆயிரம் பதில்களுக்கு மரியாதை இல்லை, தெரியாத ஒரு பதிலுக்கான தண்டனை நிச்சயம் உண்டு.

‘எதற்காக அமெரிக்கா செல்கிறாய் ?’ என் முன்னால் விழுந்தது கேள்வி.

இரண்டு மணிநேரமாக இருக்கையில் காத்திருந்த எனக்கு இவர்கள் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்பதெல்லாம் அத்துப்படியாகியிருந்தது. எல்லா கேள்விகளுக்குமுரிய பதிலை இந்த ஒரு கேள்விக்குப் பதிலாய்க் கொடுத்தேன்.

உள்ளே இருந்தவன் என்னை கொஞ்சம் வித்தியாசமாய்ப் பார்த்தான். தலையை ஆட்டினான்.

‘உங்களுக்கு விசா வழங்கப்படும், முதலாவது கவுண்டரில் சென்று பணத்தைக் கட்டுங்கள்’. அவர் சொன்னபோது மனசுக்குள் நிம்மதி நிழல் நீண்டது.

அதுதான் கடைசிக் கவுண்டர். அங்கே இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்ட் ஐக் கொடுத்துவிட்டு, ஐம்பது டாலருக்கான ரசீதைப் பெற்றுக் கொண்டு,  கவுன்சிலேட்டை விட்டு வெளியே வந்தபோது மாலையாகி இருந்தது.

இப்போது தான் நான் நானாகி இருந்தேன். இதுவரை போர்த்தியிருந்த பணிவு, அடக்கம் எல்லாவற்றையும் அவிழ்ந்து அந்தக் கட்டிடத்துக்குள் எறிந்து விட்டு வெளியே வந்து சென்னையின் அழகான வெப்பக் காற்றை முகர்ந்தேன். இப்போது அது மிகவும் ஆசுவாசமாய் இருந்தது.

‘ஐயா…. ஏதாச்சும்……’ கை நீட்டியபடி வந்தார் ஒரு பிச்சைக்காரர்.

பாக்கெட்டைத் துழாவி ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அவருடைய தட்டில் போட்டேன். அவர் குனிந்து, பணிந்து,  நன்றி ஐயா என்று சொல்லிக் கொண்டே கடந்து போனார். அந்த வினாடியில் மனசுக்குள் வந்து போனது, நான் கவுண்டருக்கு வெளியே பணிவுடன் நின்றிருந்ததும், உள்ளே இருந்தவன் எனக்குப் விசா பிச்சையை வழங்கியதும்.

பிச்சைக்காரனிடமிருந்து நமக்குக் கிடைக்கப் போகும் கண நேர மரியாதைக்காகவும், நன்றிக்காகவும் தான் நாம் பிச்சையிடுகிறோமோ ?
மனம் என்னிடம் கேட்ட போது தூரத்தில் அந்தப் பிச்சைக்காரர் வேறொருவனுக்கு மரியாதை வழங்கிக் கொண்டிருந்தார்.

கடவுள் கேட்ட லிஃப்ட்


சார்.. என்னை தேனாம்பேட்டை வரை லிப்ட் தர முடியுமா ?

காரை வழிமறித்துக் கேட்ட சிறுவனின் கண்களில் இருந்த கபடமின்மை என்னை கட்டிப் போட்டது. கதவைத் திறந்து விட்டேன். முன் இருக்கையில் வந்து அமர்ந்து புன்னகைத்தான்.

யாரு தம்பி நீ ? இங்கே சைதாப்பேட்டையிலே தான் தங்கியிருக்கிறாயா ? தேனாம்பேட்டையில் வேலை பார்க்கிறாயா ?
காரை மெல்ல ஓட்டிக் கொண்டே கேட்டேன் நான்.

நான் கடவுள். சிறுவன் சொன்னான். நான் சிரித்தேன்.

கடவுள் ந்னு உனக்கு பேரு வெச்சிருக்காங்களா ? புன்னகைத்துக் கொண்டே கேட்டேன்.

கடவுள் என்னுடைய பெயர் கிடையாது. என்னுடைய அடையாளம். சிறுவனின் பதில் தெளிவாக வந்து விழ நான் குழம்பினேன். ஒருவேளை மூளை சரியில்லாத பையனோ ? என்ன கேட்கப் போகிறான். தேனாம்பேட்டையில் இறங்கிவிடுவானா ? ஒருவேளை மக்கள் கூட்டத்தில் இறங்கி நின்று அப்பா என்று அழைத்துவிட்டால் மக்கள் என்னை சந்தேகப் படுவார்களே ! ஏதேனும் சிக்கலில் மாட்ட வைக்கப் போகிறானோ ? ஏண்டா இவனை ஏற்றினோம் என்றானது எனக்கு.

ஏன் இத்தனை கேள்விகள் மனதில் ? நம்பிக்கையில்லாத உலகில் வாழ்ந்து வாழ்ந்து உங்களுக்கு யாரையுமே நம்ப முடியாமல் போய் விட்டது. யாராவது பாராட்டினால் கூட எதையோ எதிர்பார்த்து தான் பாராட்டுகிறான் என்று நினைக்கிறீர்கள். சிறுவன் சிரிக்க எனக்குத் தலை சுற்றியது.

‘இ..இல்லை.. கடவுள் இத்தனை சின்னவராய் இருக்கிறாரே….என்று’ நான் உளறினேன்.

ம்.. புரிகிறது என் தலை நரைக்கவில்லையே என்று தானே சந்தேகப்படுகிறாய்?
கடவுளுக்குத் தான் வயதே கிடையாதே. இந்த உண்மையை அறிந்து கொள்ளாத மனிதர்கள் தான் என்னை தலைநரைத்த கிழவனாகவோ, இல்லையேல் திடகாத்திர இளைஞனாகவோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவன் சிரித்தான்.

எனக்கு ஏசி காரின் குளிர்ச்சியையும் மீறி உள்ளங்கையில் வியர்வை நதி விருட்டென்று கிளம்பியது. கால்கள் பிரேக்கின் மேல் நடுங்கிக் கொண்டிருந்தன. காலை ஒன்பது மணி போக்குவரத்து நெரிசல் என் கண்முன்னால் திடீரென மங்கத் துவங்கியது.

பயப்படாதே. கடவுள் சொன்னார்.

அவ்வளவுதான் வினாடி நேரத்தில் என்னுடைய கைகளின் வியர்வை காணாமல் போயிருந்தது. கால்கள் இயல்புக்கு வந்தன. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவன் கடவுள் தான் போலிருக்கிறது, மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அடுத்த வினாடியே, இருக்காது என்றது மனது.

அது என்ன ? எல்லோரும் கடவுளை நோக்கி வேண்டுகிறீர்கள். கடவுளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் நேரில் வந்து நான் தான் கடவுள் என்றால் நம்ப மறுக்கிறீர்கள், அல்லது பயந்து நடுங்குகிறீர்கள். கடவுள் கேட்டார்.

அப்படியில்லை கடவுளே. உயரத்துல இருந்தாதான் கடவுளுக்கே மரியாதை. தொட முடியாத தூரத்துல இருக்கிறதனால தானே சூரியனுக்கு மரியாதை, வீதிக்குள்ள வந்துட்டா ? சொல்லிவிட்டு சிறுவனைப் பார்த்தேன். இன்னும் எனக்குள் கேள்விகள் தீர்ந்தபாடில்லை. சீக்கிரம் தேனாம்பேட்டை சென்று சேர்ந்து இவனை இறக்கி விட்டு விட வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டே காரை ஓட்டினேன்.

‘பொறம்போக்கு…. ‘ சட்டென்று என் காரின் முன்னால் சைக்கிளில் குறுக்கே பாய்ந்த மனிதனை நோக்கித் திட்டினேன். திட்டிய வேகத்தில் நாக்கைக் கடித்தேன்.

ஸாரி… கடவுளே. நீங்க இருக்கிற ஞாபகம் இல்லாம திட்டிட்டேன்.

‘நான் தான் எப்போவும் இருக்கேனே… ‘ சிறுவன் சொல்ல நான் திகைத்தேன். என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் அமைதியானேன்.

‘உனக்குக் கார் தந்திருக்கிறேன் நான். அவனுக்கு சைக்கிள் தான் தந்திருக்கிறேன். என்னுடைய திட்டப்படி நீ அவனைப் பாதுகாக்க வேண்டும். நீ அவனைத் திட்டுகிறாய். உன் காரை ஒரு இருசக்கர வாகனம் தாண்டிப் போனாலே எரிச்சல் படுகிறாய். அவனை விரட்டுகிறாய். நீ காரோட்டும் சுகத்தை அனுபவி. அவன் தாண்டிப் போகும் அந்த சின்ன சந்தோசத்தைக் கூட காணக் கூடாது என்று நினைக்கலாமா ?’ கடவுள் கேட்க நான் உறைந்தேன்.

அப்படியல்ல… இந்த இருசக்கர வாகனம், ஆட்டோ  எல்லாம் தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம். நாம இந்த சைதாப்பேட்டை தாண்டி, நந்தனம் தேனாம்பேட்டை போய் சேர்வதற்கு அரைமணி நேரமாகும் பாருங்களேன்.

சரி.. சாலையில் வாகனங்களே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நேரமாகும் ?

பத்தே நிமிடம் தான். நான் சொன்னேன்.

சரி.. இருபது நிமிடம் அதிகம் அவ்வளவு தானே ஆகட்டுமே. என்ன ஆகிவிடப் போகிறது ? எனக்குத் தெரிந்தவரை இந்த இருபது நிமிட நேரம் உன்னுடைய வாழ்க்கையை ஒன்றும் புரட்டிப் போடப் போவதில்லையே. கடவுள் சொல்ல நான் மீண்டும் நிலைகுலைந்தேன்.

எல்லாருமே அவரவர் கடமைகளை உணர்ந்து நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால் யாருமே செய்வதில்லை. மீறுவதற்காகவே படைக்கப்பட்டது தான் சாலை விதிகள் என்பது போல போகிறீர்கள். மஞ்சள் விளக்கு போட்டவுடன் காரை நிறுத்தினால் கொலைக்குற்றம் செய்து விட்டது போல திட்டித் தீர்க்கிறீர்கள். அதாவது வீதிகளில் விதிகளைக் கடைபிடிப்பவனை மதிகேடனாகப் பார்க்கிறீர்கள். மொத்தத்தில் நீங்கள் சரியாக நடப்பதில்லை. சரியாய் நடப்பவனை மனிதனாக மதிப்பதும் இல்லை. சரிதானே ? கடவுள் கேட்க நான் வாயடைத்துப் போனேன்.

அப்படியல்ல… அவரவர் கவலை அவரவர்க்கு.. அதான் வேகமாக ஓடுகிறார்கள்.

நீ மீண்டும் மீண்டும் தவறுகளை நியாயப் படுத்தத் தான் பார்க்கிறாய். வரிசையில் நிற்காமல் கவுண்டருக்குள் கையை இடித்து நுழைக்கிறாய், ரயில்வே கேட் மூடியபின்னும் இருசக்கர வாகனத்தை சரித்து நுழைக்கிறாய்… எத்தனை எத்தனை மீறுதல்கள். எல்லாமே உங்களுக்குப் பழகி விட்டது. எல்லாமே மாமூல் வாழ்க்கை ஆகி விட்டது. எது தவறு எது சரி என்று வித்தியாசம் தெரியாத அளவுக்குத் தவறுகள் உங்களுக்குப் பரிச்சயம் ஆகிவிட்டன. பரிச்சயமானது எல்லாம் சரி என்று தோன்றுகிறது உங்களுக்கு. கடவுள் சொல்லச் சொல்ல எனக்கு மீண்டும் வியர்க்கத் துவங்கியது.

கடவுளே. இதெல்லாம் வாழ்க்கையில் பகுதிகள். கடவுள் வந்து கவலைப்படக் கூடிய அளவுக்கு இதில் ஏதும் இல்லையே ?

அப்படியில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் நீ சரியாக நடக்கும்போது பெரிய விஷயங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். சின்னச் சின்ன எண்களின் கூட்டுத் தொகை தானே பெரிய இலக்க எண் ? கடவுள் தொடர்ந்தார். எல்லோருக்குள்ளேயும் கடவுள் இருக்கிறார். நீங்கள் கடவுளைக் காண்பதற்காகத் தான் அலைகிறீர்களே தவிர கடவுளைக் காட்ட வேண்டுமென்று நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

சிக்னலில் வண்டியை நிறுத்திக் கொண்டே தலையாட்டினேன் நான்.  இவர் உண்மையிலேயே கடவுள் தானோ ? ஒருவேளை என்னைத் தண்டிப்பதற்காக வந்திருக்கிறாரோ ? மனசுக்குள் ஒரு பய அலை புரண்டது.

அப்போது பின்னால் நான்கைந்து வண்டிகள் தாண்டி ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அவசர ஒலியுடன் வந்து நின்றது. அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலிடையே காற்று நுழைவதே கடினமாய் இருந்த காலைப் பொழுது. ஆம்புலன்ஸ் வண்டி பின்னால் வந்து ஒலியெழுப்பிக் கொண்டே நின்றது. யாரும் எங்கும் நகர முடியாத நிலை. சிக்னல் போட்டு வண்டி கிளம்பினால் தான் கொஞ்சமாவது ஓரம் கட்ட முடியும். உள்ளே எந்த அவசர நிலையில் யார் இருக்கிறார்களோ மனது அடித்துக் கொண்டது. அமெரிக்காவிலெல்லாம் சாலையில் கடைசியில் ஒரு லேன் அவசர வண்டிகளுக்காகவே வைத்திருப்பார்கள். எத்தனை பெரிய போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அந்த வரிசையில் யாரும் வாகனத்தை ஓட்டமாட்டார்கள். எனவே அங்கெல்லாம் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் நிற்கவேண்டிய அவசியமே இருப்பதில்லை. எனக்குள் நினைவுகள் சுழன்றபோது கடவுள் கூப்பிட்டார்.

பார். இந்த ஆம்புலன்ஸ் நகராமல் இருப்பதற்குக் கூட ஒரு வகையில் நீங்க எல்லோரும் காரணம் தான். எல்லோரும் அவரவர்க்குரிய வரிசையில் சாலையில் நின்றிருந்தால் இந்த ஆம்புலன்ஸ் தாமதமில்லாமல் போய் சேர்ந்திருக்கும். இப்போது பார். அந்த வண்டியில் இருக்கும் பெண் இறப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது.

‘அ..அந்த வண்டியில் இருப்பது பெண்ணா ? அ..அவளுக்கென்ன ?’ எனக்கு தூக்கிவாரிப் போட்டது. குரல் நடுங்கியது.

அவள் ஒரு மனிதாபம் மிக்க கடவுள் பக்தை. எப்போதும் மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றியே சிந்திப்பவள். இப்போது கூட சேரி மக்களிடம் பணியாற்றிவிட்டு வரும் வழியில் தண்ணி லாரி மோதிவிட்டது.

‘ஐயோ… கடவுளே. நீங்கள் இங்கே இருக்கிறீர்களே. நீங்கள் நினைத்தால் அவளைக் காப்பாற்ற முடியும் இல்லையா ?’

நான் அவளைக் காப்பாற்ற வரவில்லை. அழைத்துப் போக வந்திருக்கிறேன்.

‘அ…அழைத்துப் போகவா ?’ எனக்கு நாக்கு குழறியது

ஆம். அவள் நல்ல செயல்கள் பல செய்திருக்கிறாள். அதனால் தான் அவளை அழைத்துப் போக நானே வந்திருக்கிறேன். கடவுள் சொன்னார்.

ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த அந்தப் பெண் ஏராளமான இரத்தத்தைச் சிந்தி மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
என் வண்டி தேனாம்பேட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.