சிறுகதை : பையன் எங்கே ?

பையனைக் காணோங்க….

போனின் மறுமுனையில் பதட்டமும், அழுகையுமாய் வழிந்த குரலைக் கேட்டதும் சாகர் வெலவெலத்துப் போனான். முகத்துக்கு நேரே விசிறியடித்துக் கொண்டிருந்த ஏ.சி காற்றையும் மீறி சட்டென உடல் வியர்த்தது. பதட்டத்தில் இருக்கையை பின்னோக்கித் தள்ள அது ஒரு அரைவட்டமடித்து ஆடியது. முன்னால் டேபிளில் இருந்த லேப்டாப் முகத்தில் வரி வரியாய், கட்டம் கட்டமாய் ஆங்கில எழுத்துகளை வாங்கி புரியாமல் பார்த்தது.

பையனைக் காணோமா ? ஏன் ? என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான் ? இருக்கையை விட்டு பதறி எழுந்த சாகரின் கையிலிருந்த செல்போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த ஐடி நிறுவனத்தின் தரை முழுவதும் அழுக்கு கலர் கார்ப்பெட் கைகளை விரித்துப் படுத்திருந்தது. கீழே விழுந்த அந்த போன் இருபதாயிரத்துச் சொச்சம் ரூபாய். இன்னொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால், “ஓ..ஷிட்..” என்று கத்தியிருப்பான். இப்போது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை.

என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான்.. மறுபடியும் கேட்டுக்கொண்டே கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே ஒரு அரை ஏக்கர் நிலம் அளவுக்கு அந்த வர்க் ஏரியா விரிந்து கிடந்தது. சின்னச் சின்ன தடுப்புகளுக்குப் பக்கத்தில் கணினிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள்.

மறுமுனையில் பிரியாவின் அழுகைக்கிடையே அவளுடைய வார்த்தைகளைத் தேடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. ஒரே பையன். போன மாசம் தான் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினான். பிறந்த நாளை கிராண்டா கொண்டாடாதேப்பா கண்ணு வெச்சுடுவாங்க.. ஊரில் பாட்டி சொன்னதையும் மீறி நல்ல செலவு பண்ணி விழா எடுத்திருந்தான்.

மாமாவும், அக்‌ஷத்துமா வெளியே போயிருந்தாங்க…

ஓ… அப்பா தான் கூட்டிட்டு போனாரா ? சாகர் குரலில் கொஞ்சம் பதட்டம் தணிந்தது. வந்துடுவாங்க.. எப்போ போனாங்க…

போய் ஒரு மூணு மணி நேரமாச்சும் இருக்கும்

மூணு மணி நேரமா ? போன பதட்டம் மறுபடியும் வந்து ஒட்டிக் கொள்ள, சரி.. அழாதே, பக்கத்துல எங்கேயாச்சும் போயிருப்பாங்க. என்றான்.

இல்லீங்க, மாமா வெறும் லுங்கியும், பனியனும் தாங்க போட்டிருந்தாரு. பையன் வீட்ல போட்டிருந்த சட்டை தான் போட்டிருந்தான். வேற எங்கயும் போயிருக்க வழியே இல்லை.

போன் பண்ணிப் பாத்தியா ?

பண்ணினேன்.. போனை வீட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காரு.. வெளியே போனா கைல எடுத்துட்டுப் போற அறிவு கூடவா இல்லை ?

பக்கத்துல கடைகளுக்கு எங்கேயாவது போயிருப்பாரோ ?

பக்கத்து கடை, அவங்க போற பார்க், அவங்க சுத்தற ஏரியா எல்லாம் போய் பாத்துட்டேன். அத்தை பையன் லாஸ்ட் ஒன் அவரா பைக்ல சுத்திட்டே திரியறான்.. எனக்கென்னவோ பயமா இருக்குங்க.. மறு முனையில் விசும்பல் சத்தம் அதிகமாகி அழுகையாய் மாறியிருந்தது.

சரி, டென்ஷன் ஆகாதே.. நான் இதோ கெளம்பி வரேன்.. சொல்லிக் கொண்டே பளீரென ஒளிவிட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை அப்படியே மடக்கி கருப்பு நிற பைக்குள் திணித்தான். சுவரில் ஒரு பாம்பு போல தொங்கிக் கொண்டிருந்த பவர் கார்டையும் இழுத்து உள்ளே தள்ளினான். கதவைப் பூட்டாமல், லைட்டை அணைக்காமல் வெளியே வந்தான்.

எதிரே பளீர் விளக்கோடு தெரிந்தது மேனேஜர் முத்து வின் அறை. அந்த அறையைப் பார்த்தபோதே உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் வேகமாக அந்த அறையின் கதவை சம்பிரதாயமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத் திறந்தான்.

வாங்க சாகர்.. என்ன பையோட கெளம்பிட்டீங்க

பையனைக் காணோமாம்…

என்னது பையனைக் காணோமா ? முத்துவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி அவருடைய கண்ணாடியையும் மீறி எட்டிப் பார்த்தது.

அப்பா தான் பையனைக் கூட்டிட்டு போயிருக்காரு, அதனால பக்கத்துல எங்கேயாவது தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஓ.. அப்பா கூட தான் போயிருக்காரா ? அப்போ நோ பிராப்ளம்…

இல்ல… தட்ஸ் த பிராப்ளம்.. அவருக்கு இல்லாத நோய் எல்லாம் இருக்கு. சுகர், லோ பிபி.. எல்லா எழவும் இருக்கு. பாவம்.. சட்டுன்னு லோ பிபி அது இதுன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது ? அதான் டென்ஷனா இருக்கு…

சரி..சரி.. நீங்க கெளம்புங்க… பிளீஸ்… டோன்ட் வரி,,,ஹி..வில் பி ஆல்ரைட்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது ரொம்ப ரொம்ப ஈசி. அதே பிரச்சினை நமக்கு வரும்போது தான் எந்த ஆறுதலும் வேலை செய்யாது. சோலியப் பாத்துட்டு போய்யா.. அவனவன் கஷ்டம் அவனவனுக்குன்னு கத்தத் தோணும். சாகர் எதையும் சொல்லவில்லை, தாங்க்ஸ்… என்று மட்டுமே சொன்னான்.

அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை, வேக வேகமாக கதவில் அக்ஸஸ் கார்டைக் காட்டினான். பீப் என சத்தமிட்டு இறுக்கம் தளர்ந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டே ஓடிய சாகரை செக்யூரிடி பிடித்து நிறுத்தினார்.

சார்..சாவி..சாவி… ரூம் சாவி சார்…

சாவி ரூம்லயே தான் இருக்கு… நீங்களே பூட்டி சாவியை எடுத்துக்கோங்க, கொஞ்சம் அர்ஜன்ட்… பேசிக்கொண்டே ஓடினான் சாகர்.

சரசரவென இரண்டு மாடிகள் கீழே இறங்கி, கார்ப்பார்க்கிங்கை நோக்கி ஓடுகையில் மீண்டும் போன்…

போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க போறேங்க… ஐயோ.. பையன் எங்கே போனானோ…

கொஞ்சம் வெயிட் பண்ணு, என் பிரன்ட்ஸ்க்கு கால் பண்றேன்.. தேடுவோம்… வரேன்… நான் கார்ல ஏறிட்டே இருக்கேன்…

லேட் ஆயிட்டே இருக்கு.. நைட் ஆச்சுன்னா கண்டு பிடிக்க கஷ்டம்.. சொல்லும் போதே பிரியாவின் அழுகை போனில் கொட்டியது.

பெண்களுடைய அழுகை தான் ஆண்களுடைய டென்ஷனை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. தனது சான்ட்ரோ காரில் ஏறி சட்டென கிளம்பினான் சாகர்.

“டாடி.. இன்னிக்கு ஒரு நாளைக்கும் லீவ் போடுங்களேன்” காலையில் அக்‌ஷத் சட்டையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

இல்லப்பா.. இன்னிக்கு கண்டிப்பா போணும், ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு.. முத்து வரச் சொல்லியிருக்காரு.

யாருப்பா அது முத்து ?

என்னோட பாஸ் டா..

அதென்ன பாஸ் பா.. என் பையன் வீட்ல நிக்க சொல்றான்னு சொல்ல வேண்டியது தானே..

ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு… அதனால நிறைய வேலை..

ஆமா.. பையனுக்கு கிளையன்ட் விசிட், வேலை எல்லாம் ரொம்ப நல்லா புரியும் ரொம்ப டீட்டெயிலா சொல்லுங்க. பாத்திரங்களின் இசைக்கிடையே பிரியாவின் குரல் கிண்டலுடன் ஒலித்தது.

பையனுக்கு புரியுதா இல்லையாங்கறது முக்கியமில்லை, ஆனா உண்மையைச் சொல்லணும்ல…

ஆமா..ஆமா.. பையனுக்கு சொல்ற சாக்குல என் கிட்டே தான் அதைச் சொல்றீங்க…

சே…சே… உனக்கு இனிமே புதுசா சொல்லணுமா என்ன ? சாக்ஸை உதறிக் கொண்டே கேட்டான் சாகர். அவனுடைய பதிலில் சிரிப்பு கொஞ்சம், வழிசல் கொஞ்சம் கலந்திருந்தது.

சரி.. சரி.. கெளம்புங்க…

டாடி…. பிளீஸ்….

இல்லடா செல்லம்.. நாளைக்கு லீவ் போட்டு உன்னை ஊர் சுத்திக் காட்டறேன் சரியா…

டேய்.. நாளைங்கறது டாடிக்கு எப்பவும் வராதுடா… அவருக்கு கிளையண்ட் தான் முக்கியம்…

சாகர் சிரித்துக் கொண்டே, பையனை அள்ளி எடுத்துக் கொஞ்சிவிட்டு காரை நோக்கி நடந்தான். பின்னால் பையன் ஒரு சோக முகத்தோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டே நின்றான்.

டேய்..சாவுகிராக்கி.. பாத்து ஓட்டமாட்டே ?

சர்ர்ர்ர்ர்ரக்… என பிரேக் அடித்து நிமிர்ந்த சாகரின் காருக்கு முன்னால் ஒரு பல்சர் நின்றிருந்தது. அவன் எப்போ அங்கே வந்தான் என்பதையே சாகர் கவனிக்கவில்லை. கவனம் எல்லாம் பையன் மீது தான் இருந்தது…

இந்த ஐடி கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே ஏதாவது ஒன்று மாறி ஏதோ ஒரு வேலை வந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய ? ஐந்திலக்கத்தில் ஒரு பெரிய எண் வங்கிக் கணக்கில் மாசம் தோறும் அட்சர சுத்தமாய் வந்து சேரும். அதற்குக் கொடுக்கும் விலை ரொம்பப் பெரியது.

கிளையன்ட் விசிட் என்றாலே போச்சு. அவன் தானே பணம் காய்க்கும் மரம். அவனை எவ்வளவு தூரம் சோப்பு போடறோமோ அந்த அளவுக்கு தான் கம்பெனி வளரும். ஒருத்தன் அமெரிக்காவிலிருந்து விசிட்டுக்கு வருகிறான் என்றாலே இங்கே எல்லோருக்கும் கிலி பிடித்துக் கொள்ளும்,

அஜென்டா தயாராக்கிட்டியா ? விசிட் அரெஜ்மென்ட் எல்லாம் என்ன நிலமைல இருக்கு ? லாஜிஸ்டிக்ஸ் ல எந்த பிரச்சினையும் வரக்கூடாது… வர்ரவன் சாதாரண ஆள் இல்லை. அவன் அந்த குரூப் டைரக்டர். அவனோட மனசைக் குளிர வைக்கிறது தான் நம்ம ஒரே குறிக்கோள்.

அஜென்டா பண்ணிட்டிருக்கேன் முத்து.. இன்னும் முடியல..

சீக்கிரம் முடி.. இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. நாலு கேப்பபிளிடி பிரசன்டேஷன் வேணும். டெஸ்டிங் சர்வீசஸ்ல யார் அவெய்லபிள்ன்னு பாரு… நாலு பிரசன்டேஷனாவது இருக்கணும். வரவனுக்கு நம்ம கம்பெனி மேல நல்ல அபிப்பிராயம் வரணும்.

கண்டிப்பா பண்ணிடலாம்.

சீக்கிரம் பண்ணு… ஐ  வான்ட் டு ரிவ்யூ த பிளான். பிரசன்டேஷன் குடுக்கிறவங்களோட டைம் வேணும். அவங்களோட பிரசன்டேஷன் வாங்கி முதல்ல படிச்சுப் பாரு. ஒரு டிரை ரண் போடணும். சும்மா கிளையன்ட் முன்னாடி நிறுத்தினா சொதப்பிடுவாங்க. பத்து மில்லியன் அக்கவுண்ட்ப்பா… கொஞ்சம் சொதப்பினாலும் வீ வில் லூஸ் அவர் ஜாப்.. அப்புறம் வீட்ல தான் இருக்கணும்.

யா.. ஐ அண்டர்ஸ்டேன்ட்.. நான் பண்ணிடறேன்..

ஐ..நோ.. யூ வில் டூ.. பட்.. ஐ னீட் திஸ் குவிக்லி மேன்…

முத்துவின் விரட்டலிலும் காரணமில்லாமல் இல்லை. கிளையன்ட் விசிட் என்றால் அப்படி ஒரு முக்கியம் ஐடியைப் பொறுத்தவரை. வருபவனுக்கு மாலை போட்டு வரவேற்பது முதல், தனியே ஒரு கான்ஃபரன்ஸ் ரூம், பக்கத்திலேயே ராடிசன் ஹோட்டல் சிப்பாய்கள் ரெண்டுபேர் அவனுக்கு காபியோ, டயட் கோக்கோ ஊத்திக் கொடுக்க. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அலகில் கிளிப் போட்டது போல சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன லைஃப் டா இது என அவ்வப்போது சலித்துக் கொள்வான் சாகர். ஆனால் எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை ?. வெட்ட வெயிலில் ரோட்டு நடுவே நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளை விட கஷ்டமானதா நமது வேலை, அல்லது சைக்கிளில் காய்கறி வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கும் பெரியவரை விடக் கஷ்டமானதா நமது வேலை. இல்லவே இல்லை. என மனசைத் தேத்திக் கொள்வான்.

சாலையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, பிரியாவுக்கு போன் செய்தான்.

என்கேஜ்ட் என்றது…

நண்பன் ஶ்ரீனிக்கு போன் செய்தான். டேய் அக்‌ஷத்தைக் காணோமாம்டா மச்சி.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வா…

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியாவின் போன்… கடவுளே நல்ல செய்தியாய் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டே கிளிக்கினான்…

மறுமுனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

இதோ நாம் இன்னும் ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் போலாம்.. அப்பாவும் போயிருக்காருல்ல.. வந்துடுவாங்க… சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே எதிர் திசையில் வந்தது.

சாகரின் கால்கள் வலுவிழந்தன… ஐயோ.. பையனுக்கு ஏதாவது ?… அந்த நினைப்பே அவனுக்குள்ளிருந்த கிலியை அதிகரிக்க கைகள் ஈரமாகி வழுக்கின.

இதோ இன்னும் இரண்டு சிக்னல் தான்.. சாகரின் மனம் எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தது.

என்ன அப்பன் நான். பையன் எவ்ளோ தடவை சொன்னான்.. பேசாம லீவ் எடுக்காம அந்த முத்து பேச்சைக் கேட்டு ஆபீஸ் போனதே தப்பு.. கடவுளே நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடு… என் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… பிளீஸ்… அவனுடைய நெஞ்சம் பதறித் தவித்தது.

அதோ அடுத்த சிக்னலில் வலது பக்கமாக இருக்கும் டோமினோஸ் பீட்ஸா கடையை ஒட்டிய சந்தில் திரும்பினால் வீடு…

வேகமாய் காரை மிதித்து சரேலெனத் திரும்பினான் சாகர். எதிரே வந்த லாரி இன்னும் ஒண்ணே கால் வினாடி தாமதித்திருந்தால் ஏறி மிதித்திருக்கும். நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை. வீட்டிற்கு முன்னால் சின்னதாய் ஒரு கூட்டம்.

வண்டி நின்றது. ஓடி வந்தாள் பிரியா… ரெண்டு மணிக்கு போனாங்க, மணி ஆறாகுது.. இன்னும் வரலைங்க.. என்னமோ ஆயிருக்கு… அவள் அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.

சாகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உதடுகளைக் கடித்தான். அவனுடை பார்வை எதிரே இருந்த புதரை நோக்கிப் போனது.

எல்லா வாய்க்கா, புதர் எல்லாம் பாத்துட்டேங்க… அழுகை கலந்து குரல் வந்தது.

என்ன செய்வது ? போலீசுக்குப் போக வேண்டியது தான். சாகர் காரை நோக்கி விரைந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது.

என்னாச்சு ? கேட்டுக்கொண்டே இறங்கினார் சாகரின் அப்பா. கையில் பையன் அக்‌ஷத். எல்லோருக்கும் போன உயிர் சட்டென திரும்பி வந்தது.

அக்‌ஷத்த்த்… கூவிக்கொண்டே ஓடிப்போய் குழந்தையை அள்ளினாள் பிரியா. கொஞ்ச நேரம் தெய்வங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தையை அணைத்தாள்.

ஏன்.. ஏன் கூட்டம் ? என்னாச்சு ? சாகரின் அப்பா புரியாமல் கேட்டார்.

ஏன்பா.. போகும்போ… போனையாவது கைல கொண்டு போயிருக்கலாம்ல… சாகர் பையனைக் கண்ட நிம்மதியில், அப்பாவிடம் மெலிதான எரிச்சலைக் காட்டினான். பையனைக் காணோம்ன்னு நாலு மணி நேரமா ஊர் புல்லா சுத்தியாச்சு.. எங்கே தான் போயிருந்தீங்க.

அய்யோ.. அதான் இந்த ஆர்ப்பாட்டமா.. சாரி.. பையன் பார்க் போணும்னு சொன்னான், பக்கத்து பார்க் மூடியிருந்துது அதான் நம்ம பிள்ளையார் கோயில் பின்னாடி இருக்கிற பார்க்ல கூட்டிட்டு போனேன்.

அவ்ளோ தூரமா போனீங்க..

ஆமா, போகும்போ நடந்து தான் போனோம். சரி லேட்டாயிடுச்சே தேடுவீங்களேன்னு தான் நான் ஆட்டோ புடிச்சு வந்தேன்.

மத்தவங்க பிள்ளையைத் தேடுவாங்கன்னு தெரியாது ? அறிவு கெட்ட ஜென்மம்… வேணும்னா தனியா போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே.. பிரியா உதடுகள் பிரியாமல் திட்டினார்.

எந்த ஆர்ப்பாட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அக்‌ஷத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

போன் அழைத்தது…

சாகர்… பையன் கிடைச்சுட்டானா ? மறு முனையில் முத்து.

யா.. கெடச்சுட்டான்.. அப்பா கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போயிட்டாரு போல. அதுக்குள்ள என்னோட வய்ஃப் கத்தி கலாட்டா பண்ணிட்டாங்க.

ஓ..காட்.. நல்ல வேளை.. ஒரே பதட்டமாயிப் போச்சு. ஏன் வைஃபை மட்டும் சொல்றீங்க ? உங்க முகமே விகாரமாயிப் போச்சுல்ல. அதான்பா பிள்ளைப் பாசம்.

யா.. வேற எதையும் என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல… முத்து, ஹி.. ஈஸ் மை எவ்ரிதிங்.

ஓ.கே.. குட்.. தேங்க் காட்… சரி, நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க.. வீட்ல பையன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க..

தாங்க்ஸ் முத்து, நானே கேக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஹே..நோ..நோ பிராப்ளம்.. கிளையன்ட் வருவான், போவான்.. நம்ம லைஃப், நம்ம கிட்ஸ் அவங்களை நாம தான் பாத்துக்கணும்… ஸ்பென்ட் சம் டைம் வித் ஹிம்…

தேங்க்ஸ் முத்து…  முதன் முறையாக முத்து மீது கொஞ்சம் மரியாதை வந்தது சாகருக்கு.

போனை வைத்த மறு வினாடி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையனை அள்ளினான்.

நாளைக்கு நான் லீவ் போடறேன்.. எங்கே போலாம்… ?

ரியலி ?? இன்னிக்கு போன பார்க்குக்கே போலாம் டாடி… கபடமில்லாமல் சிரித்தான் அக்‌ஷத்…

கண்டிப்பா என அணைப்பை இறுக்கினான் சாகர்.

சேவியர்

கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

 3

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான்.

“இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்”

சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை.  அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்து அடிக்கடி சாத்துவார். இப்போ இந்த மந்திரத் தண்ணீர் கிடைச்சிருக்கு. இது தண்ணீர் எல்லா சிக்கலுக்கும் விடிவு என சிறுவன் நினைத்தான்.

அன்று மாலை மந்திரக் குடுவையைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஒரு செடியின் தலையில் விட்டான்.

ஜீ..பூம்…பா போல செடி கடகடவென வளரும் என நினைத்தான்… ஊஹூம் வளரவில்லை.

அடுத்த செடியில் விட்டான்…

ஊஹூம்…

அதற்கு அடுத்த செடி ?

ஒரு மாற்றமும் இல்லை.

அப்படியே கடைசிச் செடி வரை முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ரொம்ப சோகமாகிவிட்டது. மிச்சமிருந்த பாட்டில் தண்ணீரையெல்லாம் கடைசிச் செடியின் தலையில் கவிழ்த்தான். கொஞ்ச நேரம் செடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ரொம்ப சோகமும் சோர்வும் பிடித்துக் கொள்ளப் போய்ப் படுத்து தூங்கிவிட்டான்.

மறு நாள் காலை.

டேய்.. சீக்கிரம் எழும்புடா…. அப்பா உலுக்கினார்.

என்னப்பா ?

உன் தோட்டத்தைப் போய் பாரு ? என்ன பண்ணினே ?

என்னாச்சுப்பா ?

எழும்புடா போய்ப் பாரு.

சிறுவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே தோட்டத்தைப் போய்ப் பார்க்க செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்து அழகழகாய்ப் பூக்கள் பூத்திருந்தன. புது வகையான பூக்கள் !

சிறுவனுக்கு குஷி தாங்கவில்லை. ஓடிப் போய்க் கடைசிச் செடியைப் பார்த்தான். அந்தச் செடிக்குத் தான் மிச்சமிருந்த தண்ணீரையெல்லாம் ஊற்றியிருந்தான்.

அந்தச் செடி வானளாவ வளர்ந்து மேகத்துக்குள் புகுந்திருந்தது…

ஓ…வாவ்… எவ்ளோ பெருசு ? சிறுவன் ஓடிப் போய் அந்த மரத்தில் தொங்கினான். அந்தக் கிளையில் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. தகதகவென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பொன் நிறத்திலான குட்டி டிராகன் !

சரி… ஸ்கூல் வந்துச்சு… இனிமே மிச்ச கதை நாளைக்கு. வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிவிட்டு சீட் பெல்டைக் கழற்றிக் கொண்டே இடப்பக்கம் திரும்பி மகனைப் பார்த்தேன். மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, கொஞ்சம் சாம்பல் கலரில் ஒரு டவுசர். கழுத்தில் தொங்கும் டேகில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பெயர். அருகில் குட்டிப் புகைப்படத்தில் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். கீழே யூகேஜி பி. என்று பளிச் என எழுதப்பட்டிருந்தது.

டாடி… பிளீஸ்… கார்ல இருந்தே கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்….  

நோ… டா செல்லம்.. இட்ஸ் லேட். நைன் ஓ க்ளாக். மிச்சம் நாளைக்கு.

ஒரு கையில் பையையும், மறுகையில் பையனையும் அள்ளிக் கொண்டு ஸ்கூல் காம்பவுண்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி கம்பீரமாய் நின்றிருந்தது. பள்ளியின் தலையில் டிரீம், டேர், டூ என வாசகங்கள். வாசலில் குட்டிக் குட்டி மழலைப் பூக்கள் ஓடியாடிக் கொண்டிருந்தன. குட் மார்ணிங் மிஸ் எனும் குரல்களுக்கிடையே ஆசிரியர்களும் ஆங்காங்கே தெரிந்தார்கள்.

எனக்கு இது தினசரிப் பழக்கம் தான். காலையில் 6.20 க்கு அலாரம் அடிக்கும். அடிக்கும் அலாரத்தை சபிப்பதில்லை. காரணம் இப்போதேனும் எழும்பாவிட்டால் எல்லாம் குளறுபடியாகிவிடுமென்பது ரொம்ப நல்லா தெரியும். ஒருபக்கம் மகள், மறுபக்கம் மகன் என ஆளுக்கொரு திசையில் அற்புதமான தூக்கத்தில் லயித்திருப்பார்கள். அழகான தூக்கத்தில் இருக்கும் ஒரு மழலையை எழுப்புவது போல ஒரு மோசமான வேலை இருக்க முடியாது. என்ன செய்ய ? இப்போ எழும்பினால் தான் மகளை 8 மணிக்கு ஸ்கூலில் கொண்டு விட முடியும். பிறகு திரும்ப வந்து பையனை 9 மணிக்கு ஸ்கூலில் கொண்டு போய் விட வேண்டும்.

வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் தான். சென்னை ஸ்பெஷல் ஏரியா ! சந்துகளைச் சந்தித்து, டிராபிக்கை அனுசரிக்க வேண்டியிருப்பதால் பத்து நிமிட கார்ப் பயணம்.

காரில் ஏறியவுடன் சீட்பெல்ட் போட்டு, ஒரு குட்டிப் பிரேயர் முடித்த கையோடு “டாடி ஸ்டோரி” என்பார்கள் இருவரும்.

ஆளுக்குத் தக்கபடி கதைகளைச் சொல்ல வேண்டும்.

மகளுக்கு பிடித்தவை தேவதைக் கதைகள். ஃபேரி டெய்ல்ஸ் அவளுடைய ஃபேவரிட். அழகழகான பூந்தோட்டங்கள், அதில் உலவும் ஃபேரி கள், அந்த ஃபேரிகளுக்கு வில்லனாய் வரும் தூரதேசத்து மோசமான சூனியக்காரி, பிறகு எப்படி அந்த ஃபேரிகள் கடைசியில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று முடியும். ஒரு ஃபேரி கதை முடிந்தபின் அடுத்த கதைக்கு டால்பின், கடல்க் கன்னி, தூரதேசத்து ராஜகுமாரி, அரச கோட்டையில் கிடந்த நீலக் கல் என ஏதோ ஒரு கதை அன்றைய காலைப் பொழுதில் உதயமாகி தானாகவே வளரும்.

பையனுக்குப் பிடித்தமானவை ஆக்‌ஷன் கதைகள். மந்திரவாதி, டிராகன், டைனோசர், சிங்கம், புலி என பரபரப்பாய் இருக்கும் கதைகள் தான் பிரியம். அப்படி இல்லாவிட்டால் கார் ரேஸ், கடல் பயணம் என அதிரடியாய் இருக்க வேண்டும். பசங்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ரசனை சின்னவயதிலேயே நிர்ணயமாகிவிடுகிறது பாருங்கள். எல்லாம் கடவுள் படைப்பின் விசித்திரம் என்றால் நாத்திகவாதிகள் அடிக்க வருவார்கள். சரி அது கிடக்கட்டும். அப்படி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி கதைகள் எப்படியோ எனது மூளையின் வலது பக்கத்தில் உதயமாகிக் கொண்டே இருக்கும்.

எந்தக் கதையையும் முன்கூட்டியே யோசிப்பதில்லை. எந்தக் கதை எப்படி துவங்கி எங்கே போய் முடியும் என்று சத்தியமாய்த் தெரியாது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. கதை எப்படி இருந்தாலும் அதைச் சொல்லும் போது ஒரு நாடகம் போல ஏற்ற இறக்கம் முக்கியம். கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் இருக்கலாம் தப்பில்லை. பிள்ளைகள் எந்த இடத்தை ரசிக்கிறார்களோ அந்த இடத்தை டெவலப் செய்து கொண்டே போக வேண்டும். எந்த இடம் அவர்களுக்குச் சுவாரஸ்யம் இல்லையோ, அந்த இடத்தைக் கட்பண்ணி கடாசவேண்டும். அந்த நுணுக்கம் தெரிந்தால் எல்லோருமே கதை சொல்லிகள் தான். என் கதைகள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். தினமும் கதை சொல்வேன். எந்த இடத்தில் நேற்று முடித்தேன் என்பதையே மறுநாள் மறந்து விடுவதும் உண்டு. ஆனால் பிள்ளைகள் மறப்பதேயில்லை.

“டாடி, அந்த டிராகனோட முதுகுல இருந்து கடல்ல குதிப்பான்ல, அதுவரைக்கும் சொன்னீங்க. அவன் குதிக்கிற இடத்துல நிறைய முதலைங்க நீந்திட்டு இருந்துச்சு…” என்று அட்சர சுத்தமாய் நினைவில் வைத்து சொல்வார்கள்.

“ஓ.. குதிச்சானா, அங்கே முதலை வேற இருந்துச்சா… ” சட்டென மூளையைக் கசக்குவேன். எனக்கு உதவ ஒரு திமிங்கலமோ, கடல்கன்னியோ, அல்லது விழும் முன் தூக்கிக் கொண்டு பறக்க ஒரு ராட்சத வெள்ளை கழுகோ வரும். அது அந்த நாளைப் பொறுத்தது !

பையனை ஸ்கூலில் அனுப்பியாகிவிட்டது. இனிமேல் அலுவலகத்தை நோக்கி 30 நிமிட டிரைவ்.

கண்ணாடிகளை ஒட்டி வைத்து சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப முயலும் ஐடி நிறுவனம் ஒன்றில் தான் வேலை. பிஸினஸ் எனேபிள்மென்ட் என ஸ்டைலாக அழைக்கும் துறையில் மேனேஜர். பேரைக் கேட்டு பயந்துடாதீங்க, கலர் கலரா பிரசன்டேஷன் பண்ணி, அதை திரையில் காட்டி கஸ்டமர்களை வசீகரிப்பது தான் வேலை. கொஞ்சம் டீசன்டா சொல்லணும்ன்னா அடுத்த கம்பெனிக்கு பிஸினஸ் போகாம நம்ம பக்கத்துக்கு இழுக்கிறது. ஓடைல ஓடற தண்ணியை இடையில வாய்க்கால் வெட்டி நம்ம வயலுக்குத் திருப்பற மாதிரி. விவசாயம் பத்தி தெரியாதவங்க,  டக் ஆஃப் வார் ன்னு வேணும்ன்னா வெச்சுக்கோங்க. 

கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு புராஜக்ட்க்காக மாடாய் உழைக்கிறோம். புராஜக்ட் புரபோஸல் கடைசி ஸ்டேஜ் ! கடைசி நிலைன்னு சொல்றது கஸ்டமரிடம் நமது பிரசன்டேஷனைக் கொடுத்து அவனுக்கு விளக்கிச் சொல்வது. அலுவலகத்தில் ஒவ்வொருத்தரிடமும் தகவல் கறந்து, சொல்யூஷனிங், டைமிங், காஸ்ட் அது இது என புரண்டு புரண்டு ஓடியதில் முதுகுக்கே முதுகு வலி. இன்னிக்கு நைட் கிளையன்ட் பிரசன்டேஷன். ஒரு நட்சத்திர ஹோட்டலில் கான்ஃபரன்ஸ் ஹால் புக் பண்ணியிருந்தார்கள்.

வைன் கோப்பைகளும், கோட் சூட்டுகளும் இருக்கும் அறையில் பிரசன்டேஷன் செய்வதே ஒரு பெரிய மேஜிக். கத்தியில் நடப்பது போல கவனம் வேண்டும். நாமும் கோட்டு சூட்டுக்கு மாறவேண்டியது முதல் கொடுமை ! வாடகைக்காவது ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொள்ள வேண்டியது இரண்டாவது கொடுமை. உதட்டிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடாத புன்னகையை ஆணி அடித்து வைக்க வேண்டியது மூன்றாவது கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல் கிளையண்ட் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது உலக மகா கொடுமை.

இந்த கொடுமைகளையெல்லாம் தாண்டி, இந்த பிரசன்டேஷன் வெற்றி கரமாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மேனேஜரிம் மனசிலும் அதே சிந்தனை தான்… ஸீ… ஹி..ஈஸ் காலிங்…

சார்…

இட்ஸ் லேட்… வயர் ஆர் யு ?

ஆன் மை வே… ராஜ்….. ஐ..ல் …பி …. இன் ஃபியூ மினிட்ஸ்.

சீக்கிரம் வாங்க… ஒரு ஃபைனல் ரன் துரூ தேவையிருக்கு. நீட் மோர் கிளாரிடி ஆன் ஆன்ஸர்ஸ்.

கண்டிப்பா சார்… வெச்சுடலாம்… ஒரு லெவன் ஓ கிளாக் உங்களை மீட் பண்றேன்.

ஓகே… சப்போர்ட்டிங் டாக்குமென்ட்ஸ்..

எல்லாம் ரெடி சார்…

வீ நீட் டு கட் துரோட் மேன்…. ஐ ஆம் ஆல் எக்ஸைட்டிங்…

பண்ணிடலாம் சார். ஆல் செட்…. இந்த புரபோசல் நமக்கு தான் சாதகமா இருக்கு. காஸ்ட் வைஸ் நாம மத்த கம்பெனியை விட கம்மியா இருக்கோம்ன்னு நமக்கே தெரியுது. அப்படியே அவங்க இதை விடக் கம்மியா கோட் பண்ணியிருந்தா கூட, நாம நாலெட்ஜ் டிரான்சிஸன் இலவசமா பண்ணிக் கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அது ஒரு இன்வெஸ்ட்மென்ட் நம்ம சைட்ல. அவங்களுக்கு அது ஒரு ஆடட் அட்வான்டேஜ்… எல்லாமே நல்லா தான் இருக்கு…. எந்திங் மிஸ்ஸிங் ?

நோ..நோ… யூ ஆர் ரைட்… நல்லா பிரசன்ட் பண்ணணும். தேட்ஸ் இம்பார்டன்ட்.

கண்டிப்பா சார்.

ஓகே,.. ஸீ..யூ.. இன் ஆபீஸ்.

அன்று மாலை,

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு பேர் இருந்தார்கள். ஒட்டடைக்குச்சி போல ஒருவர் கழுத்தில் டையுடன் நீளமான ஒரு கோப்பையில் வைன் வைத்திருந்தார். அவருக்கு நேர் எதிராய் ஒரு குண்டு மனிதர் பழச் சாறுடன் அமர்ந்திருந்தார். மிச்ச நபர்கள் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வை எமோஷன்ஸ் ஏதும் காட்டாத ஜேம்ஸ்பாண்ட் லுக்.

கழுத்தில் இருந்த டையை கொஞ்சமாய் அழுத்தி தலையை அசைத்துக் கொண்டே…

“ஐ ஆம் ரியலி எக்ஸைடட் டு வெல்கம் யூ ஃபார் திஸ்……” என்று பேசத் துவங்கினேன்.

தயாரித்து வைத்திருந்த பவர் பாயின்ட் பிரசன்டேஷன் திரையில் கலர்கலராய் வரைபடங்களோடு மின்னியது.

எங்களுக்கு வேலை கொடுத்தால் மூன்று ஏரியாக்களில் நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த செலவு, நிறைந்த தரம் மற்றும் சரியான நேரம். இந்த விஷயங்களை எப்படி நாங்கள் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கப் போகிறேன். அதற்காக எங்களிடம் என்னென்ன ஸ்பெஷல் திறமைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லப் போகிறேன். அதற்கு முன் எங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் வீர தீர பராக்கிரமங்களையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மென்மையான ஆங்கிலத்தில் விழுந்து விடாத புன்னகையில் பேசத் தொடங்கினேன்.

எனக்கு முன்னால் கதை கேட்க சுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் மகனின் முகம் தெரிந்தது. உள்ளுக்குள் மெல்லப் புன்னகைத்தேன். ‘டாடி.. சொல்லுங்க டாடி’ என்று அவன் சொல்வது போல ஒரு பிரமை.

நான் என் கையிலிருந்த மந்திரக் கோப்பையை எடுத்தேன். அதிலிருந்த திரவத்தை எடுத்து தெளித்தேன். செடிகள் அசுர வளர்ச்சியடைந்தன. எதிரே இருப்பவர்களின் சுவாரஸ்யங்களை அறிந்து அந்த ஏரியாக்களில் உயர்வு நவிர்ச்சி அணியைப் புகுத்தினேன். மற்ற இடங்களைத் தவிர்த்தேன். சரளமாக நான் சொல்லிக் கொண்டிருந்த ஃபேரி டேல் கலந்த பிரசன்டேஷனைப் பார்த்து தூரத்தில் அமர்ந்திருந்த மேனேஜர் பிரமித்துப் போய்விட்டார். நான் தொடர்ந்தேன்… தொடர்ந்து கொண்டே இருந்தேன். 

எனக்கு எதிரே அமர்ந்து உதட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

எனி கொஸ்டின்ஸ் ?  என்றேன், புன்னகை மாறாமல்.

சேவியர்

 

 

 

கல்கி : பழைய காதலி

thinking
பழைய காதலி !
——————–

போச்சுடா… நேத்தும் நைட் ஃபுல்லா சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான்.

வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். ‘ஆமா மச்சி… அவள மறக்க முடியல. அவளும் என்னை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப் படறா. முதல் காதலை மறக்கிறது ஈசி கிடையாதுடா’

டேய்… அதுக்கு சுடர் உன்னோட முதல் காதலி இல்லையே…

யா… பட்… இருந்தாலும் இரண்டாவது காதலையும் மறக்க முடியாதுடா மச்சி.

எலேய்.. அவ உனக்கு இரண்டாவது காதலியும் கிடையாதுடா !

ஓகே..ஓகே… அதென்னவோ தெரியல மச்சி, சுடரை மட்டும் என்னால மறக்கவே முடியல.

டெய்லி நைட் தூங்காம ஃபேஸ்புக்கை சுரண்டிட்டே இருந்தா எப்படிடா மறக்க முடியும் வெண்ணை ! அவளைத் தூக்கிப் போட்டுட்டு மத்த விஷயங்களைப் பாக்க வேண்டியது தானே ! அவ என்ன உன்னை நினைச்சுட்டா இருக்கா ? கனடால போய் செட்டில் ஆகல ?

டேய் அவ கனடால இருந்தாலும், கர்நாடகால இருந்தாலும் என் மனசுல எப்பவுமே இருப்பாடா…

ஐயோ.. லவ் பண்ணும்போ தான் டயலாக் டயலாக்கா அவுத்து உட்டு சாகடிச்சே. இப்போ பிரிஞ்சப்புறமுமாடா ?

நாங்க பிரியவே இல்லையேடா ?

அது உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா ?

ஹி..ஹி… தெரிஞ்சா நாங்க பிரிஞ்சுடுவோம்.. ஐ மீன் என் பொண்டாட்டி மாலதியைச் சொன்னேன்.

வாசன் சிரித்தான். போதும்டா.. அவ மகேஷ்வரனைக் கல்யாணம் பண்ணி கனடால செட்டில் ஆகி ஆறு வருஷம் ஆச்சு. அவளோட பொண்ணுக்கும் இப்போ அஞ்சு வயசாச்சு.

பட்.. அவளோட குழந்தை பேரு தெரியும்ல ? சாரினி. என் பேரோட முதல் எழுத்துடா மச்சி. சாகர்.. சாரினி ! ஸீ.. தட்ஸ் லவ்.

மண்ணாங்கட்டி. அவ பாட்டி பேரு சாரினீஷ்வரி. அந்த பேரைத் தான் வைக்கணும்ன்னு சுடரோட அம்மா ஒத்தக் காலில நின்னாங்க. அதேதோ லேடி ரஜ்னீஷ் பேரு மாதிரி இருக்குன்னு மகேஷ் சண்டை போட்டு கடைசில வாலைக் கட் பண்ணி சாரினி ன்னு வெச்சாங்க. அதெல்லாம் தெரியாதது மாதிரி நடிக்காதே..குடுத்த காசுக்கு மட்டும் நடி.

சரி… அப்படியே இருந்தா கூட அது ஒரு தெய்வ சித்தம் மாதிரி அமஞ்சு போச்சு பாத்தியா ?

டேய்.. தெய்வ சித்தம் இல்லடா.. தெய்வக் குத்தம்… கல்யாணத்துக்கு அப்புறம் பழைய காதலி கூட கொஞ்சிக் குலவறது குத்தம்டா… இதெல்லாம் மாலதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் !

டேய்.. அதெல்லாம் தெரியாதுடா. இதுல என்ன தப்பிருக்கு. அவ கனடால இருக்கா, நான் இங்கே இருக்கேன். சும்மா பேச்சு தானே !

பேச்சு இல்ல மச்சி. மனசு. மனசுல என்ன இருக்கோ அது தான் செயல்ல வரும். மனசுல சுடரை நீ வெச்சிருந்தா மாலதியோட வாழற வாழ்க்கை நல்லா இருக்காது. நீ கவனிக்க வேண்டியது உன் மனைவியை.

போதுண்டா உன் அட்வைஸுக்கு. நீயும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவன் தானே. ஏதோ லவ்வே பண்ணாத மாதிரி பேசறே. குடும்பத்தையெல்லாம் நான் நல்லாதாண்டா பாத்துக்கறேன் என்ன குறைவெச்சிருக்கேன்.

என்ன ம்ம்… வாயில நல்லா வருது. உன் பொண்ணோட ஸ்கூல் புராஜக்டை பண்றதுக்கு நேரமில்லை, புண்ணாக்கு இல்லைன்னு புலம்பினே. சுடர் கூட கடலை போட டைம் இருக்கோ ?

சரி.. அந்த பேச்சை விடு.. இப்போ என்ன விஷயம் சொல்லு…

ஒண்ணும் இல்லை சும்மா தான் வந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது சாகரின் மானிட்டரில் சேம்டைம் சேட் வின்டோ டொங் என்று திறந்தது.

‘சாகர் ஒரு நிமிஷம் இங்கே வரமுடியுமா பிளீஸ் ‘ மானேஜர் தான் கூப்பிட்டார்.

‘கண்டிப்பா’ என்று பதில் தட்டிவிட்டு சாகர் எழுந்தான்.

வாசன் சாகரின் கம்ப்யூட்டர் வின்டோவைப் பார்த்தான். டாஸ்க் பாரில் ஃபேஸ் புக் திறந்திருந்தது. கிளிக்கினான். அப்படி என்ன தான் சுடர் கூட பேசறான்னு பாப்போமே என்று நுழைந்தான். சுடரோடு சாகர் பேசிய சேட் ஹிஸ்டரி அனுமர் வால் போல நீண்டு கிடந்தது.

ஹாய் சுடர்.. எப்படியிருக்கே.

ம்ம்.. இருக்கேன் நீங்க ?

ஏதோ இருக்கேன்.. நினைவுகள் வாழவைக்குது.

ம்ம்ம்…

வீட்ல எல்லாரும் நலமா ?

யா… இருக்காங்க.. உங்க வீட்ல..

ம்ம்… இருக்காங்க…

நைட் தூங்காம சேட் பண்றீங்க ?

உன்னை மறக்க முடியுமா ? உலகத்துல எல்லாத்தையும் விட முக்கியமானது உன்கூட பேசறது தான் சுடர். அது தான் உலகத்துல என்னை வாழ வைக்குது.

ம்ம்ம்… ஐ யாம் மிஸ்ஸிங் தோஸ் டேஸ்

ம்ம்ம்… அந்த அருகாமை, அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம்.

ம்ம்…. ஆமா…

ஞாபகம் இருக்கா.. அந்த வேலன்டைன்ஸ் டேக்கு.. முதல் முதலா….

வாசன் கடகடவென வாசித்தான். சேட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காதல், கவர்ச்சி, ஆபாசம் என தாவ வின்டோவை மூடினான். டெஸ்க் டாப்பில் ஒரு நோட் பேட் தென்பட்டது. பாஸ்வேர்ட்.டெக்ஸ்ட்

திறந்தான். சாகரின் மின்னஞ்சல்கள், ஃபேஸ்புக் எல்லாவற்றுக்குமான ஐடி மற்றும் பாஸ்வேர்ட். மடப்பயல் என்று நினைத்து கொண்டிருந்தவனின் மனதில் சட்டென ஒரு பொறி. ஃபேஸ்புக் ஐடி, பாஸ்வேர்ட்களை மனதில் பதித்துக் கொண்டு ஃபைலை மூடினான். இன்னும் சாகர் திரும்பி வரவில்லை.

அன்று இரவு, மணி பதினொன்று. வாசனின் போன் அடித்தது. மறுமுனையில் சாகர். சாகரின் குரலில் பதட்டம் தெரிந்தது.

மச்சி.. என்னோட டேட்டா கார்டைப் பாத்தியா ? பேக்ல போட்டிருந்தேன் காணோம். நெட் கணெக்ட் பண்ண முடியல.

ஓ.. இல்லையேடா… ஆபீஸ்ல விட்டுட்டியா தெரியலையே !

தெரியலடா மச்சி.. சே..நெட் கனெக்ட் பண்ண முடியல.. சுடர்வேற வெயிட் பண்ணிட்டிருப்பா…

டேய்… போய் தூங்குடா.. ம…. எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். சொல்லிக் கொண்டு போலிக் கோபத்துடன் போனை ஆஃப் பண்ணினான் வாசன். அவனுடைய கையில் சாகரின் டேட்டா கார்ட் சிரித்தது. அவனுடைய லேப்டாப்பில் சாகரின் ஃபேஸ் புக் பக்கம் சுடருக்காகக் காத்திருந்தது !

அரை மணி நேரத்துக்குப் பின் சுடர் பச்சை விளக்குடன் ஆன்லைனில் வந்தாள்.

கொஞ்ச நேரம் வாசன் அமைதிகாத்தான். சுடரே பேச்சை ஆரம்பித்தாள்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

பேசினான். சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள். மறுமுனையில் இருப்பது வாசன் என்பதை சுடர் அறியவில்லை. சாகர் என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

மறு நாள் மதிய வேளையில் பதட்டத்துடன் ஓடி வந்தான் சாகர்.

மச்சி… சுடர் கிட்டே நேத்திக்கு பேசல. அவ கோச்சுகிட்டா போலிருக்கு. என்னை அன்பிரண்ட் பண்ணிட்டா. இப்போ நான் அவளோட ஃபேஸ் புக் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்லயே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு.

ம்ம்ம்…

என்னடா நான் டென்ஷன்ல சொல்லிட்டிருக்கேன்.. நீ சைலன்டா இருக்கே.

மச்சி.. கொஞ்சம் பொறுமையா கேளு ! நேற்று சுடர் நைட் ஒரு மணி நேரம் சாகர் கூட பேசினா.. அப்புறம் போயிட்டா.

என்னடா சொல்றே ?

சாரி மச்சி.. நான் தான் பேசினேன், உன் பெயர்ல. உன் ஐடில நான் நுழைஞ்சுட்டேன். நீ இடையில வரக்கூடாதுன்னு தான் உன் டேட்டா கார்டை சுட்டுட்டு போனேன். கூல் டவுன்… இந்த சேட்டை படிச்சுப் பாரு ! வாசன் நேற்று இரவு நடந்த சேட் ஹிஸ்டரியை சாகரிடம் நீட்டினான்.

சாகரின் பொறுமை எல்லை மீறியது. டேய்.. மயி….இதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா. என்னோட பர்சனல் விஷயத்துல அளவுக்கு மீறி தலையிடறே. அவகிட்டே என்ன சொன்னே ? என் லைஃப்பை டிசைட் பண்ண நீ யாரு ? நான் பேசுவேன், பேசாம இருப்பேன். அது என் இஷ்டம். திஸ் ஈஸ் டூ மச். ஐ ஆம் டோட்டலி இரிடேட்டட்.

முதல்ல நீ சேட்டை படி.. நான் ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா செருப்பால அடி..

சாகர் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் சேட்டை வாசித்தான்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே ?

ம்ம்… இருக்கேன்.

வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? மகேஷ்வர், சாரினி நலமா ?

ம்ம்… இருக்காங்க… உங்க வீட்ல..

எல்லாரும் நல்லா இருக்காங்க. இன்னிக்கு என்னோட பொண்ணுக்கு டான்ஸ் புரோக்ராம் இருந்துச்சு. ஷி வாஸ் டூயிங் வெரி வெல். ரொம்ப சந்தோசமா இருந்துது !

ஓ.. நைஸ்.. நைஸ். என்ன டான்ஸ்

பரதநாட்டியம் கத்துக்கிறாங்க. லாஸ்ட் ரெண்டு வருஷமா. குட்டிப் பொண்ணு தான் ஆனா பின்றா. ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகளை டான்ஸர் என கேட்ட டாடி… ( ஸ்மைலி )

ம்ம்… என் பொண்ணு கூட மியூசிக் கிளாஸ் போறா… வயலின்.

வாவ்.. வயலின் ரொம்ப கஷ்டமாச்சே…

ம்ம்.. ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு.

யூ. நோ வாட்… என்னோட மனைவிக்கு வயலின்னா உசுரு. ரொம்ப அழகா வாசிப்பா. அவ வாசிச்சா நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாம். அடிக்கடி சாயங்காலம் மொட்டை மாடில போய் உட்கார்ந்து அவ வாசிக்கிறதை நானும் பொண்ணும் கேப்போம். மியூசிக் ரொம்பவே அற்புதமான விஷயம் யா.

ம்ம்…. என் ஹஸ்பன்ட் கூட நல்லா கீ போர்ட் வாசிப்பாரு. முன்னாடி ஒரு குரூப்ல சேர்ந்து ஆல்பம்ஸ் எல்லாம் போட்டிருக்காரு.

வாவ்.. வெரி இன்டரஸ்டிங். நீ சொன்னதே இல்லை.

ம்ம்… நீங்க கேட்டதில்லை அதனால நான் சொன்னதில்லை.

ஆமா.. உண்மை தான்.. ( ஸ்மைலி )

அப்புறம்.. வீக் எண்ட் என்ன பிளான் ?

என் பொண்ணோட அஞ்சாவது பிறந்த நாள் நெக்ஸ்ட் வீக் வருது. அதுக்கு பிளான் பண்ணணும். சில ஹோட்டல்ஸ் போய் பாக்கலாம்ன்னு இருக்கோம்.

வய்ஃப் கூடவா ?

ஆமா… அவங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்கும்ல, அது மாதிரி பண்ணலாம்ன்னு பிளான். அவங்க சஜஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். எங்க வெட்டிங் ஆனிவர்சரி கூட அவளோட பிளான் படி தான் இருந்துது. தேட் வாஸ் கிரேட். அதனால அவங்க கிட்டயே இதையும் விட்டுட்டேன்.

நானும் அப்படி தான். என் ஹஸ்பன்ட் என்ன சொல்றாரோ அது தான் ஃபைனல். பட்… ஹி ஈஸ் வெரி லவ்லி.. எனக்கு என்ன புடிக்குதோ அது தான் செய்வாரு. குட்டிம்மா குட்டிம்மா ன்னு சுத்தி சுத்தி வருவாரு (ஸ்மைலி)

நம்ம பார்ட்னருக்குப் பிடிச்சதைச் செய்றதுல தான் லைஃபே இருக்கு சுடர்…

ம்ம்ம்.. தோஸ் ஆர்… ஹேப்பி மொமன்ட்ஸ். குறிப்பா பிளேயிங் வித் மை கிட்.. வாழ்க்கையிலயே ரொம்ப சந்தோசமான விஷயம்.

கண்டிப்பா… குழந்தைங்க தானே நமக்கு உசுரு மாதிரி. அதுக்கு அப்புறம் தானே மற்றதெல்லாம்.

ம்ம்…. யா… நானும் அப்படித் தான் குழந்தையைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்க முடியாது.

வாவ்.. எனக்கும் அப்படியே தான் சுடர். அவ பொறந்த நாளு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான நாள்.

ம்ம்ம். அப்போ ரெண்டாவது சந்தோசமான நாள் எது ?

அது என் பொண்ணோட முதல் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது தான். ரொம்ப ரொம்ப அற்புதமான நாள். இன்னும் என் கண்ணுக்கு முன்னடியே அவளோட பாதங்கள் நடனமாடிட்டே இருக்கு.

ம்ம்ம்… மூணாவது சந்தோசமான நாள் ?

என்னோட கவிதை ஒண்ணு பிரசுரமான நாள். ரொம்ப சந்தோசப்பட்ட நாள் அது !

உன்னோட ஃபேவரிட் டேஸ் என்னென்ன சொல்லேன்.

ஆல்மோஸ்ட் சேம். என் குழந்தை பிறந்த நாள்… அவ ஸ்கூல் போன நாள்… நான் கனடா வந்த நாள். எங்க வெட்டிங் ஆனிவர்சரி. இப்படி !

வெரி நைஸ். இப்படி குழந்தைங்க கூட குடும்பமா சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஆனந்தமான வாழ்க்கை தான். அதெல்லாம் சின்ன வயசுல தெரியல. லவ் மட்டும் தான் தெரிஞ்சுது. இப்போ குடும்பம் முன்னால வந்துடுச்சு. மற்ற எல்லாமே பின்னால போயிடுச்சு.

ஆமா சாகர். உண்மை தான். வாழ்க்கைல மிகப்பெரிய சந்தோசமே மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நாம கல்யாணம் பண்ணிக்காம இருந்த அந்த கெட்ட விஷயத்துல நடந்த நல்ல விஷயம் நமக்கு நல்ல இரண்டு குடும்பங்கள் கிடைச்சது தான். நம்ம குழந்தைங்க இடத்துல வேற குழந்தைங்களை வெச்சு நினைச்சுக் கூட பாக்க முடியல இல்லையா !

யா.. யா… நீங்க லைஃப்ல மகிழ்ச்சியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு !

கண்டிப்பா.. நான் கூட நீ ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகி, கணவன் கூட சந்தோசமா இருக்கிறதுல ரொம்ப ரொம்ப சந்தோசப்படறேன்.

ஓ.கே… போணும்… பொண்ணுக்கு லஞ்ச் டைம் வந்துடுச்சு… சீ யூ…

கண்டிப்பா.. நானும் கொஞ்சம் தூங்கறேன். டயர்டா இருக்கு… குட் நைட்…

சாகர் சேட் ஹிஸ்டரியை முழுமையாய் வாசித்து விட்டு அமைதியானான். வாசன் எதுவும் தப்பாய்ப் பேசவில்லை. எதுவும் தப்பான தகவல்களையும் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு உரையாடலை நான் நடத்தியதே இல்லை. அவனுடைய மனசுக்குள் என்னவோ செய்தது. இதுக்கு ஏன் சுடர் என்னை நட்பு வளையத்திலிருந்து விலக்கினாள் ?

வாசன் சாகரின் தோள் தொட்டான்.

மச்சி, நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. லவ்ல சில முகங்கள் உண்டு. ஒண்ணு ஐயோ நம்ம லவ் பண்ணின ஆளு நல்லா இல்லையோ, சந்தோசமா இல்லையோ அப்படீன்னு குழம்பி, குற்ற உணர்ச்சியாகி, அவங்க கிட்டே பேசிட்டே இருக்கிறது. பழைய நினைவை கிளறிக் கிளறி நிகழ்கால வாழ்க்கை நாசமா போவும். இன்னொரு வகை என்னன்னா, நாம காதலிச்ச பொண்ணோ பையனோ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா எரிச்சல் பட்டு, கட் பண்ணிட்டு போயிடறது. என்கிட்டே இருந்தால் கிடைக்கிற சந்தோசமும், நிம்மதியும் நம்ம ஆளுக்கு வேற எங்கயும் கிடைக்காது ன்னு நினைக்கிற மனநிலை அது. கிடைச்சா எரிச்சலோ, கோபமோ கொள்ளும். அதனால உண்மையை எப்பவுமே அது பேசாது. ரியாலிட்டியை நீங்க ரெண்டு பேருமே பேசிக்கிட்டதில்லை. நீங்க போலியா ஒரு வளையத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாத்திட்டிருந்தீங்க. நான் உங்க மனசுல இருந்த உண்மை உணர்வை வெளியே கொண்டு வந்தேன். இப்போ உனக்குத் தெரியும், அவ சந்தோசமான ஒரு வாழ்க்கைல இருக்கான்னு. நீயும் அப்படியே தான் இருக்கே. அதை ஏற்றுக் கொண்டா போதும் !

சாகர் அமைதியாய் இருந்தான். அவனுடைய மனதில் இருந்த குழப்பங்கள் தெளிவடையத் தொடங்கியது போல் இருந்தது. ஏன் சுடர் தன்னை நட்பு வட்டத்திலிருந்து விலக்கினாள் என்பதும் அவனுக்கு புரியத் தொடங்கியது. மௌனமாய் இருந்தான். வாசன் வழக்கம் போல அவனுடைய மௌனத்தைக் கலைத்தான்.

மச்சி.. லீவ் இட். வாழ்க்கைல நீ ஒரு தடவை காதலிச்சே. இனி வாழ்க்கையை ஒரு தடவை காதலி ! சிம்பிள். சொல்ல சாகர் புன்னகைத்தான்.

சேவியர்.
கல்கி 22 செப்டம்பர் 2013

அமரர் கல்கி சிறுகதைப் போட்டி 2013 – ல் பிரசுரத்துக்குத் தேர்வான பழைய காதலி எனும் எனது சிறுகதை

சிறுகதை : ஒரு குரலின் கதை

oru-kuralin-kathai
கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு.  தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….”  மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை”  விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ”  :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?”  விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான்  குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

0

சிறுகதை : கொல்லன்

“ அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு
கேட்டுக்கிட்டே இருக்கு. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ?” கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா.

அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு
இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு கிராமத்தில் ஏகப்பட்ட சொத்து. வயல், தென்னந்தோப்பு என அந்தப் பரக்குன்று கிராமத்தின் பத்தில் ஒரு பங்கு அவருடையது தான்.

அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டில் போய்ப் படித்த ஒரே நபர் அபினயா. அந்த பெருமை எப்போதும் பரந்தாமனின் பேச்சுக்களில் தெறிக்கும். ஒரே மகள் என்பதால் அவளுக்கு சாப்பாட்டை விட அதிகமாய் செல்லத்தைத் தான் ஊட்டி வளர்த்தார்.

மகளை மெதுவாய்ப் பார்த்தார் பரந்தாமன், அது பக்கத்து ஆலைல கொல்லன் இரும்படிக்கிற சத்தம்மா. உனக்குத்தான் இந்த கிராமத்தோட தொடர்பு விட்டுப்போயி வருசக் கணக்காச்சு. காலேஜ், மேல்படிப்புண்ணு கிராமத்தை விட்டுப்போயி ரொம்ப நாளாச்சு. காலம் காலமா இவன் இந்த இடத்துல தான் கொல்லப்பட்டறை வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கான், நாம தான் இங்கே புதுசா பங்களா கட்டி இருக்கோம். இந்த சத்தம் எல்லாம் கொஞ்ச நாள்ல பழகிடும் பேசாம போய்ப் படுத்துக்கோ. எனக்கும் முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது. இப்போ பழகிடுச்சு. சிறி சிரிப்புடன் மகளைச் சமாதானப்படுத்தும் குரலில் சொன்னார் பரந்தாமன்.

“என்னால முடியாதுப்பா. யாரோ உச்சந்தலைல ஓங்கி அடிக்கிற மாதிரி சத்தம் வருது….”- பாருங்க நைட் மணி பன்னிரண்டாகப் போகுது இன்னும் அவன் அடிக்கிறதை நிறுத்தல.. எப்படி தூக்கம் வரும். பிளீஸ்ப்பா நான் இங்க இருக்கப்போற பத்து நாளா வது இந்த சத்தத்தை நிறுத்துங்க சொல்லிவிட்டு மாடிப்படியேறி படுக்கைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள் அபினயா.

பால்க்கனிக்குச் சென்று வெளியே எட்டிப்பார்த்தார் பரந்தாமன். வெளியே கொஞ்சம் தூரத்தில் அந்த குடிசை. மெலிதான நிலவின் வெளிச்சம் கிராமத்தை போர்த்தியிருக்க அந்த குடிசை மட்டும் நெருப்புகளோடு விழித்துக் கிடந்தது. இன்னும் இரும்படித்துக் கொண்டிருந்தான் அவன்.

புறம்போக்கு நிலத்தில் இருந்த அவனுடைய குடிசைக்கு பின்னால் ஒரு பெரிய சானல். வீட்டிலிருந்து வழுக்கினால் முதுகு ஒடியும் பள்ளத்தில் விழவேண்டியது தான். வீட்டின் பின்புறமாய் சில பனை மரங்கள். ஓலைக்குடிசை ஆங்காங்கே கோணிப்பைகளால் ஒட்டுப் போடப்பட்டிருந்தது.

அவன் பெயரை எல்லோரும் மறந்திருப்பார்கள். பரந்தாமனுக்கும் அவன் பெயர் என்னவென்று நினைவுக்கு வரவில்லை. கொல்லன் என்றால் தான் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். பரம்பரை பரம்பரையாய் இரும்படிப்பது தான் அவர்களது தொழில்.

கொல்லப்பட்டறை என்றால் ஒரு தீக்குழி, அந்த தீக்குழிக்கு காற்றை அனுப்பிக்கொண்டிருக்க ஒரு பெரிய தோல்ப்பை. அந்த தோல்ப்பையின் ஒரு முனையில் கயிறு கட்டி மேலே தொங்க விடப்பட்டிருக்கும், அதன் மறு முனை ஒரு குழலோடு இணைக்கப்பட்டு தீக்குழிக்குள் சொருகப்பட்டிருக்கும்.

விறகுக்கரி சேகரித்து அந்த தீக்குழியில் இட்டு, தீயைப்பற்ற வைத்து, அந்த கயிற்றைப்பிடித்து மெதுவாய் இழுத்தால் காற்று குழாய் வழியாகச் சென்று தீ கெடாமல் பார்த்துக் கொள்ளும்.

அந்த கயிற்றைப்பிடித்து இழுப்பதற்காகவே ஒரு கருங்கல் போடப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்திருப்பாள் செல்லாயி, கொல்லனின் மனைவி. ஏதேனும் ஒரு இரும்புத் துண்டையோ, உருக்குத் துண்டையோ கொண்டு வந்து கொடுத்து கத்தி, மண்வெட்டி, வயல் அறுக்கும் அறுப்பத்தி போன்றவை செய்யச் சொல்வார்கள். கொல்லனும் அந்த இரும்புத்துண்டை தீக்குழிக்குள் இட்டு, அந்த இரும்பு பழுக்க ஆரம்பித்தபின் இடுக்கியால் அதை எடுத்து அருகிலிருக்கும் தண்ணீர் பானைக்குள் நுழைப்பான்.

தீ பெரும்பாம்பின் மூச்சுக் காற்றைப் போல சத்தமிடும், மீண்டும் நெருப்பு, மீண்டும் நீர். அவனுக்குத் தெரியும் எப்போது நீரின் இடவேண்டும், எப்போது இரும்பின் மீது இரும்பை வைத்து இரும்பால் அடிக்கவேண்டும் என்பது. அவன் அதில் ஒரு கலைஞன்.

அவனுடைய சுத்தியல் அசுரவேகத்தில் பழுத்த இரும்பின் மீது இறங்கும்போது அவனுக்குள்ளிருந்து ஹ் ஹே…. என வெளியேறும் மூச்சு மீண்டும் சுத்தியலை தூக்கும் போது தான் திரும்ப நுழையும்

வயலில் அறுவடை ஆரம்பித்தால் கதிரறுக்கும் பெண்களும், ஆண்களும் அவனிடம் வருவார்கள். இந்த அறுவடைக்குத் தேவையான் அறுப்பத்தி செய்வதைத் தவிர்த்துப் பார்த்தால், உலக்கைக்கு போடும் வளையம் செய்வதும், மண்வெட்டி கழன்று விட்டால் அதை இரும்புக் கம்பி போட்டு முறுக்கிக் கொடுப்பதும், பனையேறிகளின் பாளை அறுப்பத்தியை பருவம் வைத்துக் கொடுப்பதும் தான் அவனுக்கு வரும் பெரும்பாலான பணிகள்.

இதில் வருமானம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியாய் ஒன்றுமே இருக்காது. நாள் முழுவதும் இருந்து சுத்தியல் அடித்தால் ஒரு வெட்டு கத்தியோ, சின்னதாய் இரண்டு அறுப்பத்திகளோ தான் செய்ய முடியும். அதில் கிடைக்கும் சில்லறைப் பணத்தில் ஏதேனும் வாங்கி சாப்பிட்டு, இரண்டு ரூபாய்க்கு மாடசாமியின் வயலோரத்துச் சாராயக்கடையில் ஒரு கிளாஸ் சாராயத்தை அடித்து விட்டு வந்து படுத்தால் விடியும் வரை களைப்பு தெரியாது. இல்லையேல் கையும் முதுகும் கழன்று விழுவதாய்த் தோன்றும்.

அவனுக்கென்று யாரும் கிடையாது, செல்லாயியைத் தவிர. யாரும் அவனை நண்பர்களாகவோ, தெரிந்தவனாகவோ பார்ப்பதில்லை, காரணம் அவனுடைய ஏழ்மையும், அவனுடைய வேலையும்.

எங்கேனும் திருமணம் நடந்தால் இரவில் போவான், மிச்சம் மீதி சாப்பிடுவதற்கும், கல்யாண சாப்பாட்டுக்காய் அடுப்பு மூட்டிய இடத்திலிருந்து விறகுக்கரியைப் பொறுக்குவதற்கும். அந்த விறகுக் கரியைக் கொடுப்பதற்குக் கூட அவனிடமிருந்து காசு வாங்குபவர்கள் அந்த ஊரில் உண்டு.

பரந்தாமன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மகளின் தூக்கம் அவருக்கு முக்கியமாய்ப் பட்டது. மாடிப்படி இறங்கி கொல்லனின் குடிசை நோக்கி நடந்தார்.

தன்னை நெருங்கி வரும் பரந்தாமனை கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான் கொல்லன். இந்த நேரத்துக்கு யார் வருகிறார்கள் ? கையிலிருந்த சுத்தியலை மண்ணில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தான். பரந்தாமன் நெருங்கி வர வர, கொல்லன் மரியாதை காட்டி எழுந்தான்.

‘வாங்க சாமி, என்ன நட்ட ராத்திரில வாரீங்க ? என்னாங்கிலும் வேணுமே ?’ மெதுவாகக் கேட்டான் கொல்லன்.

‘இல்லப்பா… தூக்கம் வரல.. என்ன நீ இன்னும் தூங்கலயா ? மணி பன்னிரண்டாகுது ?’ கேட்டார் பரந்தாமன்.

“அப்பிடியில்ல ஏமானே, ஒறக்கம் வரத்தேன் செய்யுது… ஆனா நாளை நம்ம கொற்கைக்க வயலு அறுப்பாம். நாலு அறுப்பத்தி வேணும்ன்னு சொல்லியோண்டு போனாரு. அறுப்பு நிக்கருது இல்லியா.. அதான் கொறச்சு கஸ்டம் பாக்காத அறுப்பத்தி செய்தோண்டு இருக்குதேன். ‘ கொல்லன் சொன்னான்.

“செய்து முடிஞ்சிச்சுட்டியா ?” பரந்தாமன் மெதுவாய்க் கேட்டார்.

“ இன்னும் தீந்தூல்ல… அடுத்த வாரம் நிறைய வயலு அறுப்பு வருதில்லியா ? அதுகொண்டு நிறைய அறுப்பத்தி செய்ய வேண்டியிருக்கு. தங்கையன், செல்லக்கண்ணு, பொன்னையன் எல்லாருக்க வீட்டு வயலும் இப்போ தான் அறுப்பாம். செய்து குடுக்கிலாண்ணு செல்லி பைசா வேண்டியாச்சு. இன்னி சமயத்துக்கு செய்து குடுக்காத இருக்க பற்றாது. அதான் கஸ்டம் பாக்காத ராத்திரி வேலை செய்யுதேன். நமக்கென்ன மைரு, நாலு நாளு ஒறங்க பற்றாது அம்மட்டும் தேன். மற்றபடி இப்போ தான் கொறச்சு பைச வாற சமயம். அறுக்காறாவும்போ ஒறங்கல்லே. ன்னு மலையாளத்துல ஒரு பழஞ்சொல்லும் உண்டு“ கொல்லன் வெகு இயல்பாய் சிரித்துக் கொண்டே பேசினான்.

பரந்தாமன் அவஸ்தையாய் சிரித்தார். கொல்லன் தொடர்ந்தான்.

“ இப்போ எல்லாம் நிறைய வேலை வாறதில்ல. எங்க அப்பனுக்க காலத்துல, கலப்பையும், தண்ணி புடிக்கிற காக்கோட்டையும், மண்வெட்டி, பிக்காசு எல்லாமே அவரு தான் செய்யுவாரு. இப்போ என்ன வேணுங்கிலும் களியக்காவிளை சந்தைல போனா மதி. போனோமா பைசா குடுத்து வாங்கினோமான்னு ஆச்சு. பட்டறைல வந்து செய்யோக்கு ஆளு கொறவு தேன். மண்ணு வெட்டுக்கு போறவியளுக்க நம்மாட்டி (மண்வெட்டி) கீறிப் போச்சுண்ணா வருவினும் நான் அடைச்சு குடுப்பேன். மரம் வெட்ட போறவியளுக்க கோடாலி ஆப்பு களந்து போனா வருவினும், செரியாக்கி குடுப்பேன். அத்தறதேன். அது போயிற்று எனக்கு வாற வேலை எல்லாம் அறுப்பத்தி, கத்தி, வெட்டோத்தி அம்மட்டும் தேன் “

கொல்லன் சொல்லிக் கொண்டே அமர்ந்தான். பரந்தாமனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மெதுவாய் திரும்பி நடக்கலாமா என யோசித்தார்.

“ நான் பாட்டுக்கு என்னன்னவோ பேசியோண்டே போறேன். நீங்க வந்த விசயம் செல்லுங்க. என்னாங்கிலும் செய்யணுமா ?” கேள்வியாய் பார்த்தான் கொல்லன்.

இ… இல்ல… ஒண்ணுமில்ல….. பரந்தாமன் இழுத்தார்.

“ இல்லேண்ணு சென்னாலே ஏதோ உண்டுண்ணு தேன் அர்த்தம். செல்லுங்க. ஒறக்கம் வரூல்லியா ? “ கொல்லன் கேட்டபடியே தரையிலிருந்த சுத்தியலை எடுத்து அதில் ஒட்டியிருந்த சிறு சிறு மண் துகள்களைத் துடைத்தான்.

“வேற ஒண்ணும் இல்லை. என் பொண்ணு லீவுக்காக வந்திருக்கா. அவளுக்கு இந்த இரும்படிக்கிற சத்தம் தொந்தரவா இருக்காம். தலை வலிக்குதாம். தூங்க முடியாம கஸ்டப் படறா. சரி வேலை முடிஞ்சுதான்னு கேட்டுப் போகலாமேன்னு வந்தேன்” பரந்தாமன் மெதுவாய் சொன்னார்.

“ அய்யோ அப்பிடியா ? அதை ஆத்தியமே செல்லியிருக்கலாமே. செரி.. செரி… பிள்ள ஒறங்கட்டு. வெளி நாட்டில எல்லாம் படிச்சோண்டு வந்த பிள்ள இல்லியா. நான் நிறுத்துதேன். மிச்சத்தை மைரு நாளைக்கு பாத்துக்கலாம்.” சொல்லிக் கொண்டே சுத்தியலை ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து தீ மேல் தெளித்து அணைத்தான் கொல்லன்.

சொல்ல வந்ததன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தனது வேலையை விடப் பெரிதாய் தன் மகளின் தூக்கத்தை கொல்லன் முக்கியமாய்ப் பார்த்தது பரந்தாமனை உறுத்தியது. கொல்லனோ வெகு இயல்பாய், கூரையில் சொருகியிருந்த கோணிப்பையை எடுத்து உதறினான். அதுதான் அவனுடைய படுக்கை.

பரந்தாமனுக்கு மனசு பாரமானது போல் தோன்றியது. ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தார். வீட்டில் வந்த பின்பும் நினைவுகள் கொல்லனைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. பாவம் எப்படிப்பட்ட வேலை இது. இது வரைக்கும் அவனுடைய குடிசைக்கு இவ்வளவு அருகில் சென்று பார்த்ததில்லை. எப்படித்தான் அந்த குடிசைக்குள் வெந்து தணியும் காற்றோடு குடும்பம் நடத்துகின்றார்களோ ?

வீட்டில் ஒரு நாள் ஏசி வேலை செய்யாவிட்டாலோ, குறைந்தபட்சம் மின்விசிறி சுழலாவிட்டாலோ தூக்கம் போய் விடுகிறது. அவனுக்கோ வீட்டில் மின்சாரம் என்பதே இல்லை. கூடவே தரையில் சூரியனாய் எப்போதும் தீ வேறு.

கொறித்தபடியோ, காபி குடித்தபடியோ தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து கூடவே போரடிக்கிறது என புலம்பும் எனது வாழ்வுக்கும், நள்ளிரவு வரை இரும்படிக்கும் அவனது வாழ்வுக்குமிடையே தான் எத்தனை பெரிய பள்ளம்.

எப்போதாவது ஒரு சுவையான முழுச்சாப்பாடு கொல்லன் சாப்பிட்டிருப்பானா என்பதே சந்தேகம் தான். ஐந்துக்கும் பத்துக்கும் அவனுடைய உடம்பு எப்படி உழைக்க வேண்டி இருக்கிறது ? யோசனை செய்தபடியே மாடிப்படி யேறி அபினயா வின் அறையை அடைந்தார். உள்ளே மகள் மெத்தையில் புதைந்து தூங்கிக்கிடந்தாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே பரந்தாமன் தன்னுடைய அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். இரவு மெல்ல மெல்ல இழுக்க அப்படியே தூங்கிப்போனார்.

மறுநாள் காலை.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

பால்கனியில் நின்று காப்பி குடித்தபடியே கிராமத்தை அளந்து கொண்டிருந்தாள் அபினயா.

இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாய் உறுத்தியது அவளுக்கு.

எது ? என்ன வித்தியாசம். சிந்தனைகளை ஒவ்வொன்றாய் புரட்டிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென பிடிபட்டது ! சத்தம் !!! இரும்படிக்கும் சத்தம். !!!

எங்கே போயிற்று அந்த இரும்படிக்கும் ஓசை ? நேற்றைக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரமாய் அடித்த ஓசை இன்றைக்கு எப்படி தொலைந்து போனது ? யோசனையோடு கீழே இறங்கி வந்தாள் அபினயா..

“ அப்பா… அப்பா..”

“என்னம்மா ?”

“என்னப்பா.,.. இன்னிக்கு அந்த கொல்லன் இரும்படிக்கிற வேலையை இன்னும் ஆரம்பிக்கலையா ? ஒரே நிசப்தமா இருக்கு ? “ அபினயா கண்களை விரித்தபடியே கேட்டாள்.

பரந்தாமன் அபினயத்துடன் பேசும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் சிறு புன்னகையுடன். அவருக்குள்ளும் அப்போது தான் அந்த வித்தியாசம் உறைத்தது.

“ அந்த சத்தம் இல்லேன்னா எப்படி அமைதியா இருக்கு பாத்தீங்களா ?
அது ஒரு பெரிய டார்ச்சர் சத்தம்பா. நீங்க எல்லாம் எப்படித் தான் இந்த சத்தத்தை சகிச்சுக்கறீங்களோ “ சலித்துக் கொண்டாள் அபினயா.

பரந்தாமன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.
பொதுவாகவே காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடுவானே. இன்று என்னவாயிற்று அவனுக்கு ? நிறைய வேலை இருக்கிறது என்று வேறு சொன்னானே ? ஒருவேளை நேற்று நான் சொன்னதால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் இருக்கிறானோ ? கேள்விகள் மனதில் வரிசை வரிசையாய் எழ எழுந்து வெளியே சென்றார் பரந்தாமன்.

குடிசை வாசலில் செல்லாயி நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா… கொல்லன் எங்கே ? வேலை இருக்குன்னு சொன்னான். ஆளையே காணோம் ? “ கேட்டபடி அவளை நெருங்கினார் பரந்தாமன்.

செல்லாயின் கண்கள் அழுதன…

“என்ன சொல்லோக்கு ஏமானே. யாரோ தொட்டி பய ரெயில் ஸ்டேசன்ல அடுக்கி வெச்சிருந்த பாள(தண்டவாள) கம்பியை மோட்டிச்சோண்டு போனானாம். வெளுக்கோக்கு மின்னே போலீசு வந்து இவரு தான் எல்லாத்தையும் மோட்டிச்சோண்டு போனதா கள்ளக் கேசு போட்டு கூட்டியோண்டு போச்சினும். எங்கே என்ன கம்பி காணாத போனாலும் இவரை தேன் பிடிச்சோண்டு போவினும். கேக்கோக்கு ஆளில்லாதது நம்மம் தானே. எப்போ வருவாரோ. அறுப்புக்கு அறுப்பத்தி கேட்டு ஆளுவளும் வருவினும். என்ன செய்யோகின்னு மனசிலாவூல்லே” சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் செல்லாயி.

பரந்தாமனுக்கு பக் கென்று இருந்தது. இரயில்வே தண்டவாளக் கம்பிகளை இவன் திருடியதாய் இழுத்துச் சென்றிருக்கின்றனர். கொல்லப் பட்டறை வைத்திருப்பதால் கத்திகள் செய்வதற்காகத அவற்றைத் திருடியிருப்பான் என போலீஸ் சந்தேகிக்கிறதா ? இல்லை வேறு ஆள் கிடைக்காததால் இந்த அப்பாவியை இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்களா ? பரந்தாமனுக்குள் கேள்விகள் வரிசையாய் எழுந்தன.

“ கவலைப்படாதே. நான் போய் என்னன்னு பாக்கறேன். ஸ்டேஷன்ல போய் அவனை கூட்டிட்டு வரேன் “ சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

இதுவரை கொல்லனின் வீட்டில் என்ன நடக்கிறது என்று பரந்தாமன் சட்டை செய்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் மனதில் ஆணி அடித்தது போல நிலைத்தது. என்னவாயிற்று ? எதையும் நெருங்கிப் பார்க்கும் வரை ஒரு அன்னியத் தன்மை மனதில் இருக்கும் என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

நெருங்க நெருங்கத் தான் தெரிகிறது ஒவ்வோர் தனி மனிதனுடைய வாழ்விலும் நிகழும் சோகமும், எதிர்பார்ப்பும், வலியும். பரந்தாமனின் மனசுக்குள் பாரம் பாறாங்கல்லாய் வந்து அமர்ந்தது. கொக்கியில் மாட்டியிருந்த ஒரு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டே கார் ஷெட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

“ அப்பா . காலைல எங்கேப்பா கிளம்பிட்டீங்க ? நானும் வரேன்” பின்னாலிருந்து அபினயாவின் குரல் ஒலித்தது.

“ இல்லேம்மா. நம்ம கொல்லனை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களாம், நான் போய் என்னன்னு விசாரிச்சுப் பார்த்து அவனை கூட்டிட்டு வரேன், “ என்று சொன்ன பரந்தாமனை புரியாமல் பார்த்தாள் அபினயா.

“நம்ம கொல்லன்” என பரந்தாமன் சொன்ன வார்த்தைகள் அபினயாவுக்குள் குழப்பத்தையும், சிரிப்பையும், புரியாமையையும் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது அவளது பார்வையிலேயே தெரிந்தது.

பரந்தாமனின் கார் காம்பவுண்ட் கேட்டைக் கடந்து ஊர் சாலையில் வந்து, காவல் நிலையத்தை நோக்கி நகர்ந்தது.

காரின் சன்னல் வழியாக வெளியே பார்த்தார் பரந்தாமன்.

“ டொங்.. டொங்… டொக்….” வலுவில்லாமல் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டறையில் செல்லாயி உட்கார்ந்து இரும்படித்துக் கொண்டிருந்தாள்.

சிறுகதை : இரண்டாவது சாவு

( என் நண்பனின் கல்லூரியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை)

சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த கல்லூரி கேண்டீன் சுவரில் மோதியது
படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷும், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும். காண்டீன் முன்னால் கட்டிட
வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த விக்கி மணல் மீது விழுந்து சிறிய காயங்களோடு தப்பிக்க, ராஜேஷ் குவித்து வைக்கப்பட்டிருந்த
கருங்கற்கள் மீது தலைகுப்புற விழுந்தான்.

கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போக, கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் காதில் விழுமுன் இரத்தச்சிதறல்களுடன் மயக்க நிலைக்குப் போனான் ராஜேஷ்
இரண்டு நிமிடம் தான்… யாருக்கும் எதுவும் புரிவதற்குள் நடந்துவிட்டது அந்த விபரீதம்.
என்ன அலறல் என்று புரியாமல் மொத்த ஆசிரியர்களும் ஓய்வு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். மாணவர் கும்பல் அதற்குள் சுதாரித்து இருவரையும் தூக்கி கிடைத்த
வாகனத்தில் ஏறி மருத்துவமனை நோக்கிப் பறந்தது.

என்னப்பா என்ன ஆச்சு ? எப்படி நடந்தது ? ஆளாளுக்கு விசாரணைகள் செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகள் அழுகையும் படபடப்பும் விலகாத கண்களுடன் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ராஜேஷ், பாரதி பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன். எந்த குறிப்பேட்டிலும் தன்னைப்பற்றி கறுப்புப் புள்ளி வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் இருப்பவன். கல்லூரியின் எல்லா மட்டங்களிலும் அவனுக்கு நண்பர்கள், காரணம் அவனுடைய மனசை மயக்கும் நகைச்சுவைப் பேச்சும், மனசை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் அழகான கவிதைகளும் தான். போதாக்குறைக்கு பாலசுப்ரமணியத்தின் குரலில் பாதி அளவு வசீகரம் அவன் குரலுக்கு. அது போதாதா நண்பர்கள் கூட்டம் சேர்வதற்கு ? கல்லூரியின் விழாக்களில் அவன் கவிதைகள் எப்போதும் பரிசு வாங்கத் தவறியதில்லை. காண்டீன் மேந?களில் தாளமிட்டு கல்லூரி துவங்கும் வரை நண்பர்களோடு பாட்டுப்பாடி, டீ குடித்து கதை பேசி, இப்படியே கலகலப்பாகிப் போன நாட்களில் தான் இப்படி ஒரு விபரீதம் நடந்தது.

இதுவரை பைக் ஓட்டாத ராஜேஷ் ஏன் இன்றைக்கு மட்டும் ஓட்டினான் என்பது மட்டும் யாருக்கும் புரியவே இல்லை. ” அடிபடணும்னு விதி.. இல்லேன்னா ஏன் இண்ணிக்கு மட்டும் பைக் ஓட்டறான்.. பாவம் டா அவன்…”  மொத்த மாணவர்களுக்கும் விஷயம் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது.

கல்லூரி துவங்குவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் தான் பாக்கி.

கல்லூரியின் கடைசிக் கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த நூலகத்தில் ராஜேஷ் வருவதற்காகக் காத்திருந்தாள் ராகவி. கூடவே அவள் தோழிகள் பிரியாவும், வித்யாவும்.
ராகவி, ராஜேஷின் காதலி.

காதல் என்றால் கொஞ்ச நஞ்சக் காதலல்ல. கல்லூரியின் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்த காதல். கல்லூரியில் மூன்றாமாண்டு, அதே ராஜேஷின் வகுப்பில் படித்துக்
கொண்டிருப்பவள். கொஞ்சம் ரசிக்குமளவுக்கு அழகு, பளீரென்று விழுந்துவிடுமளவுக்கு மிக மிக… என்று எத்தனை மிக போட்டாலும் மிகையாகாத அழகான சிரிப்பு. இன்னும் ராகவிக்கு விஷயம் தெரியவில்லை. கல்லூரி நூலகத்தில் எப்போதுமே மூன்று அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள், இன்றைக்கும் அப்படித்தான் ராகவி, பிரியா, வித்யா தவிர வேறு யாருமே இல்லை.

வகுப்புக்கு நேரமாகி விட்டது. இந்த மடையன் எங்கே போனான் ? வகுப்பு துவங்குவதற்கு 15 நிமிடம் முன்னதாக காத்திருக்கச் சொன்னான். எங்கே போய் தொலைந்தானோ. சரி வா உன்னை கவனிச்சுக்கறேன். எங்கே போயிடப் போறே.
ஏதாவது கேட்டா ‘காத்திருப்பது தான் காதலுக்கு அழகேன்னு’ டயலாக் வேற. இதை கேட்டுக் கேட்டே காது வலிக்குது. மனசுக்குள் செல்லமாய் திட்டிக்கொண்டே எழுந்தாள் ராகவி.

நூலகம் விட்டு வெளியே வந்த போது தான் கல்லூரி கொஞ்சம் வித்யாசமாய் தோன்றியது அவளுக்கு. கூட்டம் கூட்டமாய் மாணவர்கள், மாணவிகள்… ம்…ஏதோ போராட்டம் போல இருக்கு.

இன்னிக்கு வகுப்பு இருக்காது… இந்த மடையனைக் கூட்டிக்கொண்டு ஏதாவது படத்துக்குப் போக வேண்டியது தான். நினைத்துக் கொண்டே நடந்தவளை எதிர்ப்பட்டு நிறுத்தினாள் ரெஷ்மி.
“நீ போகலயா ராகவி.. ஆஸ்பத்திரிக்கு ?”

ஆஸ்பத்திரிக்கா ? எதுக்கு ? – புரியாமல் பார்த்தாள் ராகவி.

ஐயய்யோ..உனக்கு விஷயமே தெரியாதா ? ராஜேஷ்க்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம். ராஜா மருத்துவமனைக்கு – க்கு எடுத்துட்டுப் போயிருக்கிறாங்க.

சட்டென்று கரங்களிலிருந்த புத்தகங்கள் நழுவ. அலறினாள் ராகவி .

“எப்போ…? என்ன ஆச்சு அவனுக்கு ?”
‘தெரியலடி… ஒண்ணும் பெருசா இருக்காது கவலைப் படாதே. நீ போய் பாரு.’

சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரெஷ்மி…

ராகவி ஓடினாள். கீழே கிடந்த புத்தகங்களை அவசர அவசரமாய்ப் பொறுக்கி எடுத்துக் கொண்டே அவளைத்தொடர்ந்து ஓடினாள் பிரியா. கூட்டம் கூட்டமாய் நின்றிருந்த மாணவ, மாணவியர் கொஞ்சம் பரிதாபம் கலந்து அவளைப் பார்த்தார்கள். ராகவிக்கு கண்முன்னால் எதுவும் தெரியவில்லை. ராஜேஷ் மட்டும் தான் தெரிந்தான்.
ஐயோ ராஜேஷ் எப்படி கஷ்டப்படுகிறாயோ ? நான் நகம் வெட்டித் தரும்போதே வலிக்கிறது என்பாயே, இப்போது எப்படி இந்த வலி தாங்குகிறாயோ.கண்ணீர் பொல பொலவென்று கண்ணீர் வழிய. கல்லூரி வாசலுக்கு வந்த ராகவியை தடுத்து நிறுத்தினான் சரவணன்.

‘ராகவி… இப்போ நான் ஆஸ்பத்திரில இருந்து தான் வரேன். இப்போ நீ அங்கே போகவேண்டாம். பிளீஸ்.’ தடுமாறினான் சரவணன்.

“ஏன் என்ன ஆச்சு.. ராஜேஷுக்கு ? பயப்படும் படியா ஒண்ணும் இல்லையே ? ”  வார்த்தைகள் குழறி கண்ணீரோடு வந்தன.

அவசர சிகிச்சைப்பிரிவுல சேத்திருக்கோம்.

‘அவசர சிகிச்சைப்பிரிவா !!?’- ராகவியின் குரல் மேலும் உச்சஸ்தாயிக்குப் போயிற்று.

நோ… நான் அவனை உடனே பாக்கணும்.

‘பிளீஸ் ராகவி.. நான் சொல்றதைக் கேளு. நீ இப்போ அங்கே போனாலும் அவனைப்பார்க்க முடியாது… கொஞ்சம் பொறு… போகலாம்.’ சரவணன் பேசப் பேச அதைக் காதில் வாங்காமல் வேகவேகமாய் ஓட ஆரம்பித்தாள் ராகவி…

எதிரே வந்த ஆட்டோ வை நிறுத்தினாள்.

‘ராஜா ஹாஸ்பிடல் போகணும்.’

நிலமையின் வீரியம் புரியாத டிரைவர் பீடிக் கறைபடிந்த பற்களைக்காட்டிச் சொன்னான்.

‘நூறு ரூபா ஆகும்மா’

‘ஆயிரம் ரூபாய் தாரேன்பா.. நீ போ…’  என்றவளின் அழுகையில் அடங்கிப்போன டிரைவர்…மறுவார்த்தை பேசாமல் ஆட்டோ வைக் கிளப்பினார்.

கல்லூரியின் முதல் ஆண்டில் வேறு வேறு பிரிவில் படித்துடிட்டு, இரண்டாம் ஆண்டுதான் ஒரே வகுப்பில் சேர்ந்தார்கள் ராஜேஷும், ராகவியும். முதல் பார்வையில் காதல் வரவே வராதுஎன்று வாதிடும் ரகம் ராஜேஷ். அவளைப்பார்த்தபின், முதல் சிரிப்பில் காதல் வரலாம் என்று தெரிந்து கொண்டான்.

ஆசிரியர் ஏதேதோ விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் எதிர் புற இருக்கையில் இருக்கும் ராகவியை ரகசியமாய் படித்துக்கொண்டிருப்பான்.

‘என்ன நீ.. எப்பவும் பொண்ணுங்க பக்கமாவே பாத்திட்டு இருக்கே?’ – ஒரு காலைப்பொழுதில் கேட்டாள் ராகவி.

இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ராஜேஷ். ஆனாலும் மனசுக்கு மிக இதமாய் இருந்தது அந்தக் குரல். பேசுகிறாள். ராகவி என்னுடன் பேசுகிறாள். ஆஹா…. மனசு சந்தோசத்தில் மிதந்தது.
என்ன பண்றது ராகவி. ஒரு சிரிப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமா சிதைக்குது. அதான் அந்தபக்கம் பாத்திட்டு இருக்கேன்.

ம்…ம்.. சிதைக்கும் சிதைக்கும்… என்ன லவ்வா ? – மறுபடியும் அதே சிரிப்பு.

‘யாரு பொண்ணு’ ?

‘சொல்ல மாட்டேன். வீட்ல போய் உன்னோட கண்ணாடி கிட்டே போய் கேளு’. சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க,  ‘எங்க வீட்டுக்கண்ணாடில எங்க பாட்டி போட்டோ  ஒண்ணு ஒட்டிவெச்சிருக்கேன்… சிரித்துவிட்டு நகர்ந்தாள் ராகவி. ராகவிக்கும் கொஞ்சம் கவிதை, கதை என்று ரசனைகள் உண்டு.. அது அவர்களுடைய பழக்கத்தை கொஞ்சம் இலகுவாக்கியது. அவனுடைய காதலை ஆழப்படுத்தியது.

பொதுவாகவே, பாராட்டுக்கு மயங்காத மனிதர் மிகவும் குறைவு. அதிலும் பெண்கள், அதிலும் இளம் பெண்கள், . நீ அழகு ! .என்றால் மிகவும் அன்புடன் பழகுவார்கள். இவனோ நீ ரோஜாக்கள் தோய்த்து எடுத்த ஒரு படிக ஓவியம் என்றான். தென்றலை உறையவைத்து உருவாக்கிய சின்னச் சிற்பம் என்றான். பூமி முதல் வியாழன் வரை அறிவுக்கு எட்டிய அனைத்திலும் அழகானது நீயே என்றான். கவிதை விதைத்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் விளைய ஆரம்பித்தது.

‘இன்னும் கொஞ்சம் வேகமா போங்க…. பிளீஸ்…ஆட்டோ  டிரைவர் திரும்பினான். டிராபிக் ம்மா. உள்ளார பூந்து போக முடியாது. அந்த சிக்னலாண்ட போயிட்டா சந்து வழியா போயிடலாம்மா. தோ அஞ்சு நிமிசத்துல போயிடலாம்….’

ஆட்டோ  டிரைவர் பேச்சு மீண்டும் அவளை நினைவுகளுக்குள் தள்ளியது. ராஜேஷ் நன்றாக பல குரலில் பேசுவான்… சென்னை பாஷை எல்லாம் அவனுக்கு சரளம். அவனோடு நடந்து, அவனோடு பேசி அவளோடு அவனில்லாத மணித்துளிகளை எண்ணி விடலாம். எல்லா காதலர்களுக்குமே தன் காதல் தான் புனிதமானது என்னும் எண்ணம் இருக்கும்… ராஜேஷ் க்கும் இருந்தது.

நம்ம பெயர்ல கூட ஒற்றுமை இருக்கு இல்லையா என்று அடிக்கடி பூரித்துப் போவாள் ராகவி.

காதலிக்கத் துவங்கும் வரை காதலர்களின் சம்மதம் மட்டுமே மிகப் பிரதானமாய் தெரியும்.. ஆனால் காதலில் மூழ்கியபின்புதான் காதலுக்கு காதலர்கள் தவிர எல்லாமே எதிர்ப்பாய்த் தெரியும்.
ஆனால்…. இவர்கள் காதலுக்கு மட்டும் எதிர்ப்பு வரவில்லை.

‘எதிர்ப்பே இல்லாத காதல் போரடிக்குது ராஜேஷ் ‘- கொஞ்சலாய் பேசுவாள் ராகவி.

‘நீ..வேணும்னா வேற யாரையாவது லவ் பண்ணு’. அப்போ காதலுக்கு நீயே எதிரியாயிடுவே. என்ன சொல்றே ? சீரியஸ் குரலில் சீண்டுவான் ராஜேஷ்
பத்து மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதாவது இருக்குமா… காதலித்துப் பார்த்தால் விடை கிடைக்கும். பல மணி நேரம் மெளனமாய் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது
காதல்.

ஆட்டோ  வும், அவள் நினைவுகளும் ராஜேஷை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.

அதே நேரம் கல்லூரியின் வராண்டாவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தான் சரவணன். கண்கள் கலங்கிப் போயிருந்தது, கல்லூரி முதல்வரின் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.அந்த நீளமான வராண்டாவின் கடைசி வரை போகவேண்டும் முதல்வரின் அறைக்கு. வராண்டா நீண்டு கொண்டே போவதாய் தோன்றியது அவனுக்கு.
‘எக்ஸ்கியூஸ் மி சார்’

‘வா.. சரவணன். வா.  ராஜேஷ் க்கு எப்படி இருக்கு… ராஜா ஹாஸ்பிடல் தானே போயிருக்கீங்க ?’ முதல்வர் கேட்டார். அவருக்கு ராஜேஷை நன்றாகத் தெரியும். ஒரு முறை கல்லூரியில் அதிக பரிசு வாங்கியதற்காகவே இன்னொரு சிறப்புப் பரிசு வாங்கியவன் தான் ராஜேஷ். சொல்லு சரவணன். மீண்டும் முதல்வர் குரல்.
‘சார்… ரா… ராஜேஷ்… இறந்துட்டான் சார்’ . சரவணன் குரல் சிதறியது..

‘என்ன சொல்றே ?’  அமைதியாய் இருந்த கல்லூரி முதல்வர் பரபரப்புக்குள் விழ. பரபரப்புக்குள் இருந்த கல்லூரி ஒரு பெரிய நிசப்தத்துக்குள் விழுந்தது.
ஆட்டோ  விரைந்து கொண்டிருந்தது.

ஆண்டவனே.. ராஜேஷ் க்கு எதுவும் ஆகிவிடக் கூடாது… இதயம் விடாமல் அழுது கொண்டிருந்தது.

‘எப்படி ராகவி… வாழறதக்காக காதலிக்கறவங்க, காதலுக்காக செத்துப்போறாங்க ? லாஜிக்  உதைக்கல ?’ ஒரு நாள் கேட்டான் ராஜேஷ்.

‘நான் சாக மாட்டேன்பா.. நீ போனா எனக்கு இன்னொரு ராஜேஷ். பொய்யாகச் சொல்லி நிஜமாகக் கிள்ளுவாள். தற்கொலைங்கிறது கோழைங்க எடுக்கிற தைரியமான முடிவுன்னு
எங்கயோ படிச்சிருக்கிறேன். ஆனா அது தைரியமானவங்க எடுக்கிற கோழைத்தனமான முடிவுன்னு தான் தோணுது. ‘ சொல்லி விட்டுச் சிரிப்பாள். அவள் சிரிக்க ஆரம்பித்தால் பிறகு வாக்குவாதம் இருக்காது அவனிடம் மெளனம் மட்டுமே நிலைக்கும்.

அவள் சிரிப்பதற்காகவே நிறைய ஜோக் படிப்பான். நிறைய ஧ஜோக் அடிப்பான்.
சரக்க்க்… என்று அஸ்டகோணலால் வளைந்து ஆட்டோ  ஆஸ்பத்திரி முன் நின்றது.

ராஜேஷ்…ராஜேஷ்… நீ எப்படிடா  இருக்கே. உனக்கு வலிக்குதாடா. ஏண்டா நீ பைக் எல்லாம் ஓட்டினே. மனசு அரற்றியபடி ஒட்டமும் நடையுமாய் விரைந்தாள்
ராகவி. ஆ?பத்திரி வாசல் முன் மாணவர் கூட்டம். கூட்டம் கூட்டமாய்…. அவசரமாய் அவர்களை அடைந்தவள் கேட்டாள்.

‘ஐ.சி.யூ’ எங்க இருக்கு ?

ராகவி… அது… வந்து… ஐ.சி.யூ எல்லாம் போகவேண்டாம். நில்லு.

ராஜேஷ் எப்படி இருக்கான்.

ராஜேஷ் எப்படி இருக்கான்.  சொல்லுங்க பிளீஸ்… ராகவி கெஞ்சினாள். மொத்த மாணவர்களும் சொல்வதறியாது திகைத்து நின்றார்கள்.

” எப்படி சொல்றதுன்னு தெரியல ராகவி… ஹி஢..ஈஸ் நோ மோர்”   யாரோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே

” ராஜேஷ்ஷ்ஷ்… “ என்று மொத்த ஆஸ்பத்திரியும் திரும்பிப்பார்க்குமளவுக்கு வீறிட்டபடி மயக்கமானாள் ராகவி.

நாட்கள் மெது மெதுவாய் நகர்ந்தது. இன்னொரு பக்கம் உரசியபடி வரும் இப்போது ராஜேஷ்  இல்லை. சண்டையிட்டபடியே புல்வெளியில் தள்ளிவிடும் ராஜேஷ் ,சிரித்துவிட்டால் சொக்கிப்போகும் ராஜேஷ். மாலையில் யாரும் பார்க்காதபோது சட்டென்று முத்தமிடும் ராஜேஷ். நினைவுகள் ஒவ்வொன்றாய் உருக உருக கண்கள் கசிந்து கொண்டிருந்தது ராகவிக்கு.
‘ராகவி… என்ன நடந்தாலும், நீ என்ன முடிவு எடுக்கணும்னாலும் உணர்ச்சிமயமா இருக்கும் போ எடுக்கக் கூடாது… கொஞ்சம் ஆறப்போடு.. அப்போதான் உன்னால சிந்திக்க முடியும். நீ அவசரப்பட்டு எடுக்க இருந்த முடிவு மிகவும் தப்பானதுண்ணு புரியும்’.
அவ்வப்போது ராஜேஷ் சொல்லும் வார்த்தைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல எழுந்து அடங்கியது..

நீ என்ன கஷ்டத்துல, இல்ல வருத்தத்துல இருந்தாலும் பகவத் கீதைல வர ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.’ இந்தப் பகுதியை மனசுக்குள்ள இரண்டு தடவை சொல்லு. எப்போதாவது சின்னச் சின்ன சோகங்கள் வரும்போதெல்லாம் சொட்டுச் சொட்டாய் நம்பிக்கை ஊற்றுவான் ராஜேஷ்.
வாரம் ஒன்று ஓடி விட்டது… கல்லூரியில் கலாட்டாக்கள் மீண்டும் துவங்கிவிட்டன. ராஜேஷின் இழப்பு எல்லோருக்கும் ஒரு செய்தியாக மாறி மறைந்துவிட்டது.  ராகவிக்கு மட்டும் உள்ளுக்குள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.

கல்லூரிவகுப்புகளை பாதிநேரம் புறக்கணித்தாள். நூலகம், கல்லூரிப் பூங்கா என்று தனிமைகளில் காலம் கடத்தினாள். அதற்குக் காரணமும் இருந்தது, மாணவிகளின் பரிதாபப் பார்வையும், மாணவர்களின் ஆறுதல் பேச்சுக்களும் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக்கொண்டே இருந்தது.

ராஜேஷ்  நடந்த இடம், ராஜேஷ் உட்கார்ந்த இடம் என்று கல்லூரி முழுதும் நடந்து கொண்டிருந்தவள் கல்லூரி காண்டின் முன்புறம் வந்ததும் நின்றாள். காண்டீன் முன்புறம் கிடந்த கற்களின் மேல் சிவப்பாய் உறைந்து போன ராஜேஷின் இரத்தத்தின் மிச்சத்தைப் பார்த்ததும் மீண்டும் உடைந்துபோனாள்.
இரவு எத்தனை மணி என்று தெரியவில்லைஎழுதிக் கொண்டிருந்தாள் ராகவி.

என்னை மன்னித்து விடு ராஜேஷ். நீ இல்லாத வாழ்க்கையை கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன்.

உன்னை சந்திக்கும் முன் பல ஆண்டு காலம் வாழ்ந்தேன். ஆனால் உன்னைப் பிரிந்தபின் இரண்டு வாரங்கள் கூட என்னால் வாழமுடியவில்லை. நீ ரசிக்கும் சிரிப்பு மரத்துப்
போய்விட்டது. ஏழுநாட்கள் , ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்கள். என்னை ஆறுதல் படுத்திப்பார்த்தேன். உன் அறிவுரை படியே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் நிதானமாகவே நான் வாழ்ந்து பார்த்தேன். முடியவில்லை.

நீ இல்லாமல் எனக்கு ஆறுதல் தோள்கள் கிடைக்கவில்லை. நீ இறந்தபோதே நானும் இறந்துவிட்டேன். இனிமேல் என்னால் வாழமுடியாது. இன்று எனக்கு இரண்டாவது சாவுதான்.

சொர்க்கமோ நரகமோ. நீ எங்கே இருக்கிறாயோ அங்கே வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

கண்ணீர் கன்னங்களில் வடிய கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் ராகவி.

நாளை இன்னொரு துயரச் செய்தி வரப்போகிறது என்பதை அறியாத அந்தக் கல்லூரி இருளுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தது

சிறு கதை : தற்காப்புத் தலைவலி

police.jpg

 போலீஸ் குடியிருப்புக்குள் பயங்கர நிசப்தம். பொழுது இன்னும் விடியவில்லை.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மெதுவாய் கதவு திறந்து பார்த்தான் ஆன்றணி  .

வெளியே, சக தொழிலாளி ஜேம்ஸ்? நின்றிருந்தார்.

வாப்பா ஜேம்ஸ்.. என்ன காலங்காத்தால ? கேட்டுக் கொண்டே கதவை முழுசாய்த் திறந்த ஆன்றணி க்கு வயது 40 இருக்கும். ஆனால் 32 க்கு மேல் சத்தியம் பண்ணிச் சொன்னால் கூட யாரும் நம்பமாட்டார்கள். போலீஸ் அதிகாரி. அதற்கே உரிய கம்பீரம். துணிச்சல், நேரான பார்வை.

காவல் துறையில் “அதிரடிப்படை” எனும் பிரிவில் பணிபுரிகிறார். எப்போதெல்லாம் கலவரங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் ஆயுதம் ஏந்தி கலவரத்தை அடக்க வேண்டிய பணி.

இன்று வரைக்கும் ஐந்து காசு கூட லஞ்சம் வாங்கியதில்லை. இதை வெளியே சொன்னால், பொழைக்கத் தெரியாதவன், இவன் எல்லாம் லஞ்சம் வாங்கலேன்னா நாட்டுல லஞ்சம் ஒழிஞ்சுடும் பாரு, என்று சக போலீஸ் காரர்களும், “ஆமாம் வெளிப்பார்வைக்கு நல்லவன், அப்பப்போ நல்ல தொகையா சுருட்டுவான்னு நினைக்கிறேன்” என்று பக்கத்து வீட்டுக்காரர்களும் திட்டுவதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விடுபவன்.

ஏன் அவ்வப்போது மனைவியே சொல்வதுண்டு, ம்…ம்… பக்கத்து வீட்டுல பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க, அவங்களுக்கு நல்ல வருமானம் போல இருக்கு என்று. அப்போதெல்லாம் கண்டிப்பான ஒரு பார்வை பார்ப்பார், அவ்வளவு தான். அதற்குமேல் அவருடைய மனைவி எதுவும் பேசுவதில்லை.

கமிஷனர் உங்களை உடனே பார்க்கணும்ன்னு சொன்னாரு. கமிஷனரா ? எதுக்காம் ? … புரியாமல் தாடையைச் சொறிந்தார் ஆன்றனிஎனக்குத் தெரியல, ஆனா கமிஷனர் ரொம்ப பதட்டமா இருக்காராம். கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நடந்த ஷூட்டிங் விஷயமான்னு தெரியல.

இப்போது ஆன்றணிக்கு விஷயங்கள் புரியத் துவங்கின.

ஆறு மாதங்களுக்கு முன்னால், பெசண்ட் நகர் பீச் பக்கமாக ஒரு ஊர்வலம் திடீரென்று கலவரமாக வெடித்தது. என்ன செய்தும் கலவரத்தை அடக்க முடியவில் லை.கூட்டம் பேருந்தைக் கொளுத்துவதும், கடைகளை உடைப்பதுமாய் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அப்போது ஆன்றனி தான் அதிரடிப்படை பொறுப்பில்
இருந்தான். ஷூட்டிங் ஆர்டருக்காக காத்திருந்து காத்திருந்து கண்முன்னால் நடந்த கொடுமைகளை எல்லாம் கையில் மிஷின் கண்னோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி நினைவுக்குள் விழுந்தது.

காவல் துறை வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தான் நன்றாக இருக்கும், உள்ளே கண்டிப்பாக நிலமை மிகவும் மோசம். மாதச் சம்பளம் வாங்கும் குமாஸ்தா வேலை போல போலீஸ் வேலையைப் பார்ப்பவர்கள் தான் அதிகம். விறைப்பாய் நின்று சல்யூட் அடிப்பதும், ஷூட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லையென்றால் ஆயிரம் பேர்
செத்தாலும் பக்கத்திலிருந்து பிணங்களைப் பாதுகாப்பதும் தான் போலீஸ் வேலை.

காவல் துறைக்குள் நுழையும் போது இருக்கும் வேகம் எல்லாம் உண்மையான அதன் முகம் கண்டு ஆறிப் போய்விடும். இரவு முழுவதும் ரோந்து சுற்றி, ஏதோ ஒரு இடத்தில் படுத்து கொசுக்கடி வாங்கி தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுவது கான்ஸ்டபிள் நிலையிலிருப்பவர்கள் மட்டும் தான். உயரதிகாரிகளெல்லாம் மந்திரிகளை விட அதிகமாகவே பந்தா விடுபவர்கள்.

ஏதாவது பிரச்சனை என்றால் கான்ஸ்டபிள்களைக் கடிந்து கொள்வதும், பெருமை என்றால் தானே சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் தான் உயரதிகாரிகளின் வேலையே !!!. கடை நிலைக் காவலர்கள் எல்லாம், கார்ப்பரேஷன் தண்ணிக்கு குடத்தோடு அலைந்து, அவ்வப்போது வரும் 300 ரூபாய் பயணப்படிக்கு எழுத்தாளர் முன் வரிசையாய் நின்று, வெயிலில் கருகி, மழையில் நனைந்து விடுப்பே இல்லாமல் வேலை செய்யும் நடுத்தர மக்கள் தான். எல்லோருடைய கத்தல் களையும் கேட்டு உள்ளத்துக்குள் எரிந்து கொண்டிருக்கும் சாதாரன மக்கள் தான்.

யாருங்க ? காலைல ? டியூட்டி ஏதாவது வந்திருக்கா ? கேட்டபடியே படுக்கைஅறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் ஷைலஜா ஆன்றனியின் மனைவி. இன்னும் தூக்கம் கலையாத கண்கள். மகள் ரம்யா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள் போர்வையைக் கடித்தபடி.

ம்.. கமிஷனருக்கு என்னைப் பாக்கணுமாம்… போய் பாத்துட்டு வரேன்.

என்னங்க மறுபடியும் எல்லாத்தையும் துருவித் துருவி விசாரிக்கப் போறாங்களா ?
பயமா இருக்குங்க .. என்ற மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு, பிரேக் பாஸ்ட் ரெடிபண்ணி வை சாப்பிட வரேன், என்றபடி கொடியில் கிடந்த சட்டைஒன்றை எடுத்து மாட்டி விட்டு கிளம்பினார் ஆன்றனி

இதுவரைக்கும் நான்கு விசாரணைக்கமி?ன் போட்டாயிற்று. டி.ஐ.ஜி஢, ஐ.ஜி஢, கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என்று எல்லா மட்டத்தினரோடும் பேசியாகிவிட்டது. இப்போது மீண்டும் ஒரு அழைப்பு. எதற்கென்று தெரியவில்லை. இருந்தால் மேல் மட்டத்தில் இருக்கவேண்டும், இல்லையேல் கடைசி நிலையில் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சனைதான். இதைப்பண்ண நீ யார் ? என்று மேல்மட்டம் மிதிக்கும். உனக்கு வேறு வேலை இல்லையா என்று கீழ் மட்டம் கேலிபேசும்.

அந்த கலவரம் … அதை இப்போது நினைத்தாலும் மனசு துடிக்கிறது. சாலையோரம் நின்று கொண்டிருந்த எல்லா அப்பாவி ஜனங்களின் தலையிலும் இரத்தக்காயம்… பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். கையில் துப்பாக்கியோடு உத்தரவுக்குக் காத்திருக்கும் அதிரடிப்படையினர்.

என்ன செய்வதென்று தெரியாமல், கையிலிருந்த துப்பாக்கியை யாராவது வாங்கி திருப்பிச் சுட்டுவிடக் கூடாதே எனும் கவலையில் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தபோது தான் அது நடந்தது. கண்முன்னால் தன்னோடு பணிபுரியும் ஒரு காவல் துறை அதிகாரியை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தது ஐந்து பேர் அடங்கிய ஓர் அரிவாள் கும்பல்.

ஒரு மனிதனை பொறுமையின் எல்லை வரை துரத்தினால் பிறகு என்ன தான் செய்ய முடியும், பொறுமையைத் துறப்பதை விட ?. இதற்கு மேலும் பொறுக்க முடியாது.
“என்ன வந்தாலும் இந்த மண்ணு மேல தான்” என்னும் வழக்கமான வார்த்தைய மனசுக்குள் நினைத்துக்கொண்டு கையிலிருந்த நவீன துப்பாக்கியை எடுத்து, அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவனின் நெஞ்சுக்கு நேராய் நீட்டினார் ஆன்றனி.

அந்த கும்பல் அசரவில்லை ஏதோ சுதந்திரப்போராட்ட வீரர்களைப் போல நெஞ்சு நிமிர்த்தி நின்று முறைத்தார்கள். ஆன்றனி சுட்டார், சரியாக … மிகச் சரியாக… முதலின் நின்றவனின் மார்பு நோக்கி…எங்கிருந்து தான் அந்த காமிரா கண்சிமிட்டியது என்று தெரியவில்லை. தோளில் பையோடு ஒரு பத்திரிகைக் காரன், கூட்டத்துக்கிடையே நழுவுவது தெரிந்தது.

கமிஷனர் அலுவலகம் முன் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார் ஆன்றனி உள்ளே உட்கார்ந்திருந்த கமிஷனர் முன் விரைப்பாய் நின்று சல்யூட் அடித்தார்.

வா ஆன்றனி உட்காரு.

பரவாயில்லை சொல்லுங்க சார்.

இத பாரு ஆன்றனி., நிலமை ரொம்ப இக்கட்டாயிடுச்சு. பத்திரிகைக் காரன் ஒருத்தனால தான் இந்த பிரச்சனையே பூதாகரமாச்சு…. நான் சொல்றது உனக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன்… அந்த ஷூட்டிங் இஷ்யூ பத்தி தான் பேசிட்டிருக்கேன்… இப்போ வேற வழியே இல்லை. நீ ஒத்துக் கிட்டு தான் ஆகணும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லாம நான் பாத்துக்கறேன். ஒரு வாரமோ, இரண்டு வாரமோ சஸ்பெண்ட் ல இருக்க வேண்டி
வரும் அவ்வளவு தான். உங்களுக்கு நான் என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றேன். தயவு செய்து ஒத்துக்குங்க. ஒரே ஒரு ஸ்டேட் மெண்ட் எழுதிக் கொடுங்க போதும்.

சார்… நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது.. ஆனா என்ன பண்றது. நான் தான் சுடவே இல்லையே. சுட்டிருந்தா நான் ஏன் கவலைப்படப் போறேன். சாரி ..சார் என்னால எந்த ஸ்டேட்மெண்டும் எழுதித் தர முடியாது.

ஆன்றனி, வீணா முரண்டு பிடிக்காதீங்க, சுட்டது நீங்க தான். நான் ஷூட்டிங் ஆர்டர் தராம நீங்க சுட்டது சட்டப்படி குற்றம். அதுல ஒரு உயிர் வேற போயிருக்கு. இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேணுமா வேண்டாமா ? கமிஷனர் குரலில் கொஞ்சம் இறுக்கம் கூடியிருந்தது.

சார் உங்களுக்கே தெரியும், அன்னிக்கு சுட்டது நான் தான். அன்னிக்கே நான் உங்க கிட்டே வந்து உண்மையைச் சொன்னேன். நீங்க என்ன சொன்னீங்க ?  போலீஸ் சுட்டதா சொன்னா பிரச்சனை பெரிசாகும், கலவரத்துல செத்துட்டான்னு சொல்லு ன்னு .
சொன்னேன்.

டிபார்மெண்ட் ல எல்லா தோட்டாக்களையும் திருப்ப ஒப்படைச்சதா ஒப்பமிடச் சொன்னீங்க செய்தேன்.

அன்றைக்கு நீங்க உண்மையை எதிர் கொள்ள பயந்தீங்க, ஏன்னா அன்னிக்கு ?஥ஷூட்டிங் ஆர்டர் தர ஧வண்டியது நீங்க. ஆனா தரல. பத்திரிகைக் காரன் ஏதோ போலீஸ்காரன் தான் சுட்டான்னு பேப்பர்ல போட்டான்.. நல்லவேளை போட்டோ வில சுடப்பட்டவன் மட்டும் தான் இருந்தான். அன்னிக்கு மட்டும் நான் சுடலேன்னா கண்டிப்பா நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இரண்டு உயிராவது போயிருக்கும்.

குருவி சுடறதுக்குத் தான் போலீஸ் துப்பாக்கின்னு ஊர் கேவலமா பேசி இருக்கும். ஆனா இப்போ ஏதோ ஒரு அரசியல் ரெளடி தான் செத்துப் போயிருக்கான். ஒரு கலவரத்தை அடக்கினதுக்காக, டிபார்ட்மெண்ட் ஆட்களோட உயிரைக் காப்பாதினதுக்காக நான் தண்டனை அனுபவிக்க முடியாது சார். ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி தான் எனக்கு இருக்கு, இந்த பிரச்சனைல நான் பலிகடா ஆக முடியாது.
இனிமே நான் ஒத்துக்கிட்டா, எப்படி அன்னிக்கு மொத்த தோட்டாவையும் திருப்பிக் கொடுத்தே ? அப்படின்னா நீ தீவிரவாதியா ? இல்லை விடுதலைப்புலி கூட உனக்கு நெருங்கிய தொடர்பான்னு கேட்டு ஜெயில்ல போடுவாங்க.

நீங்க மத்தவங்க போடற சல்யூட்டை வாங்கிட்டு காவல்துறையிலே களையெடுப்பேன் னு பேட்டி குடுப்பீங்க. அதெல்லாம் என்னால முடியாது சார். உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச உண்மை… நமக்குள்ளே செத்துப்பேயிடறது தான் நல்லது. இன்னும் நாலு விசாரணைக் கமிஷன் வரட்டும், அன்னிக்கு அதிரடிப்படைல நான் இருந்தேங்கிற காரணத்துக்காக நான் எல்லாருக்கும் பதில் சொல்றேன். மற்ற படி … என்னை மன்னிச்சிடுங்க. ஆன்றனி நீளமாய் பேசி நிறுத்தினான்

ஆன்றனி யார் கூட பேசறீங்கங்கிறதை மறந்துட்டு பேசறீங்க… நான் உன்னோட உயர் அதிகாரி. கமிஷனர் குரலில் தோல்வி தூண்டிவிட்ட கோபம் தெறித்தது.

அப்படின்னா இனிமேலாவது இந்த கீழதிகாரி கிட்டே கெஞ்சுறதை நிப்பாடுங்க சார்…

சொல்லிவிட்டு விறைப்பாய் சல்யூட் ஒன்றை அளித்துவிட்டு வெளியேறி நடக்கத் துவங்கினார் ஆன்றனி

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

திருட்டு : உண்மை கலந்த கதை

station.jpg

ஐயோ… என் பையைக் காணோமே…. என் பையைக் காணோமே…
விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய் ஆங்காங்கே கிழிவதற்குத் தயாராய் இருக்கும் சேலை. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத வண்ணத்தில் ஜாக்கெட்.

என்னம்மா … என்ன இருந்துது பைல ? எங்கே வெச்சிருந்தே ? நல்லா போய் தேடிப்பாரு. இப்படியா தூங்கறது ட்ரெயின்ல ? ஆளாளுக்கு ஏதோதோ சொல்ல அந்தம்மா அழுகை இன்னும் அதிகமாகியது.

ஊரில இருந்து சென்னைக்கு வரங்கய்யா… என் பொண்ணு கல்யாணத்துக்காக ஊர்ல இருந்த உழவு மாட்டையும் நிலத்தையும் வித்து நகையும் பணமும் கொண்டு வந்தேன். பத்தாயிரம் ரூபாயும், பத்து பவுன் நகையும் இருந்துது பைல. நேற்று முழுக்க அலைச்சலுங்க. அதான் கொஞ்சம் அசந்துட்டேன். அப்படியும் தலகாணி மாதிரி வெச்சி தான் தூங்கினேன். எந்த பாவி பய எப்போ எடுத்தான்னு தெரியலையே. ஐயா… தேடிப்பாருங்கையா…. புண்ணியமா
போவும். யாராச்சும் எடுத்திருந்தா குடுங்கையா… கால்ல விழறேன்… அந்த அம்மாவின் புலம்பலும் அழுகையும் இரயில் பெட்டியை நிறைத்தது.

சிலர் மீண்டும் போர்வைக்குள் நுழைந்து தூங்க, சில நல்லெண்ணம் கொண்டோர் பெட்டியில் தேடவும், யாராவது வந்தாங்களா என்று விசாரிக்கவும் துவங்கினர். அதற்குள் டி.டி.ஆருக்கு தகவல் போக, டி.டி.ஆர் வந்து சேர்ந்தார்.

யாருக்கும்மா பொட்டி காணோம் ?
‘ஐயா எனக்குதான்யா… பொட்டி எல்லாம் இல்லை. பைதான்யா.. அதுக்குள்ள பத்தாயிரமும், பத்துபவுன் நகையும் இருந்துதுய்யா… எப்படியாவது தேடிப்புடிச்சு குடுங்கையா …’ நேரம் செல்லச் செல்ல கிடைக்காமல் போய்விடுமோ என்னும் நினைப்பிலேயே அந்த அம்மாவின் அழுகை அதிகமானது.

பேரென்னம்மா ?
‘பொன்னம்மா’
இவ்ளோ நகை பணம் எல்லாம் எடுத்துட்டு வரே… ஒரு சங்கிலி கொண்டு வந்து கட்டி வைக்க வேணாம் ? கூட யாரும் வரலயா ?

‘ஐயா யாரும் வரலீங்க… நான் மட்டும் தான். இந்த பணம் இல்லேன்னா என் பொண்ணு வாழ்க்கை போயிடுங்க…’ பொன்னம்மா நிறுத்தாமல் அழுதாள்.

களவு போன பொருள் கிடைக்கிறது குதிரைக்கொம்பும்மா…. முணுமுணுத்துக் கொண்டே ஒவ்வோர் இருக்கை இருக்கையாய் நடந்து கொண்டிருந்த டி.டி.யாரிடம் ஒருவர் கிசுகிசுத்தார்.
‘சார்… பையைத் திருடினவனை நான் பார்த்தேன். பார்க்க ஸ்டுடண்ட் மாதிரி இருக்கானே ஐம்பத்து ஒன்பதாம் எண் இருக்கைல… அவன் தான் சார் எடுத்தவன் நான் பார்த்தேன்…நான் சொன்னதா சொல்லிடாதீங்க….’ கிசுகிசுத்துவிட்டு திரும்பிக் கொண்டார் அவர்.

டி.டி.ஆர்… ஏதும் தெரியாதவர் போல எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே அவனிடமும் விசாரித்தார். அவன் ஏதும் தெரியாதது போல பேச… டி.டி.ஆர் அகன்றார்.

அதன்பின் வி?யங்கள் ரகசியமாக நடந்தன. பொன்னம்மா அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைய, டி.டி.ஆர் செங்கல்பட்டு இரயில்வே காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் அனுப்பி, இரயில் வண்டி செங்கல்பட்டு வந்ததும் சாதாரண உடையில் வந்த காவலர்கள அவனை அமுக்கி வெளியே போட்டதில் உண்மையை ஒத்துக் கொண்டான் அவன். பொன்னம்மாவுக்கு போன உயிர் வந்ததுபோல் இருந்தது.

வாயில மண்ணுவிழுந்த பயலே நீ நல்லா இருப்பியா… உன்னை கள்ளி வெட்டிச் சாரி போக…. என்று அவளுடைய பாஷையில் சபித்துக் கொண்டே கிடைத்த பையை பரபரப்பாய் பிரித்துப் பார்த்து எல்லாம் சரியாய் இருக்கிறது என்றதும் எல்லா தெய்வங்களையும் மனசுக்குள் நினைத்து நன்றி சொல்லி இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது … இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
‘வாம்மா… ஸ்டேசன் வா… கம்ப்ளெயிண்ட் எழுதி குடு’

‘ஐயா… கம்ப்ளெயிண்ட் எல்லாம் வேண்டாங்கய்யா…. ஏதோ பாவி மவன் தெரியாம எடுத்துட்டான். அதான் கிடச்சுடுச்சுல்லீங்களா ? போகட்டும் நாசமாப் போறவன்… நம்ம கம்ளெயிண்ட் குடுத்தா படிச்ச முடியாம போயிடும் இல்லையா ?’
பொன்னம்மாவுக்குள்ளிருந்த கிராமத்து இதயம் பேச, திருடியவன் கூட ஏகத்துக்கு குற்ற உணர்வை முகத்தில் வாங்கி தலை கவிழ்ந்தான்.

‘ஏம்மா…. உன்னோட லெக்சரை எல்லாம் ஸ்டேசன்ல வெச்சுக்கோ… வா… சீக்கிரம்…  டிரையின் கிளம்பப் போவுது’ இன்ஸ்பெக்டர் கத்தினார்.

‘ஐயா… என்கிட்டே இருக்கிற டிக்கெட்டை வெச்சு வேற ட் ரெயினில போவ முடியுமுங்களா ?’ அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டே இறங்கிய பொன்னம்மாவைப் பார்த்து சக பயணிகள் பரிதாபப் பட்டனர்.

‘அவ்வளவுதான் அந்த போலீஸ்காரங்க இருக்கிற பத்துல ஒண்ணையாவது புடுங்காம விடுவானுகளா ?’
‘ஆதாயம் இல்லாம எவன் ஆத்தோட போவான் ?’
‘ பாவம் கிழவி…’

‘சரி பரவாயில்லை… தொலைஞ்ச பணம் கிடச்சுதே..’
ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டார்கள். வண்டி நகர்ந்தது.

***

பொன்னம்மா ஸ்டேசன் வாசலில் காத்திருக்கத் துவங்கி இரண்டு மணி நேரமாகிவிட்டது.  அதற்குள் பையைத் திருடிய பையனை ஸ்ட்டியோடு நிற்க வைத்து போட்டோ  எடுக்கவும், கைரேகைகளை எடுக்கவும் ஆரம்பித்திருந்தது ரெயில்வே போலீஸ்.

அவனும் அவன் பாகத்துக்கு கெஞ்சினான். ‘ஐயா… தெரியாம செஞ்சுட்டேங்க. இதான் முதல் தடவை. எங்க அப்பா அம்மா தெரிஞ்சா அவமானத்துல செத்தே போயிடுவாங்க. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா… இனிமே இந்தமாதிரி பண்னவே மாட்டேன். என் படிப்பும் வாழ்க்கையும் போயிடும்யா…’

இன்ஸ்பெக்டர் அவனுடைய கழுத்தைப் பிடித்து தள்ளினார்.

‘திருட்டு நாய்ங்க எதுதான் இப்படி பேசாம இருந்திருக்கு… சும்மா கிட… ‘

‘யோவ் ரைட்டர் எங்கய்யா… இன்னும் காணோம். அவனை இங்கே வரச்சொல்லு…. சீக்கிரம் எப்ஃஐஆர் தயார் பண்னணும்..’

‘கிழவிக்கு ஏதாச்சும் வேணுமா கேளு…’

‘ஆமா எஸ்பி எங்கய்யா.. புடிக்கவே முடியலை… வெளியூர் போயிருக்காரா என்ன ?… பழனி… அவரோட செல்நம்பர் என்ன ?’

இன்ஸ்பெக்டர் பரபரப்பாய் இருந்தார்.

பழனி எஸ்பியுடைய செல்போன் நம்பரை கிழிந்து கிடந்த பேப்பர்களிடையே இருந்து துடைத்து எடுத்து நீட்டினார்.

‘ஐயா… எஸ்பி… இருக்காருங்களா ? நான் செங்கல்பட்டு ரெயில்வே இன்ஸ்பெக்டர் தங்கதுரை பேசறேன்’

‘சொல்லுய்யா… என்ன வி?யம் ?’

‘சார்… இன்னிக்கு காலைல ஒரு தெஃட் ஐ புடிச்சுட்டோ ம் சார். சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்களை ரிக்கவர் பண்ணிட்டோ ம்..’

‘நல்லது… விட்டுடாதே… ஏற்கனவே உங்க ஸ்டேசன் மேல ஏகப்பட்ட பிளாக் மார்க். நிறைய கேஸ் பெண்டிங். நீங்க ரெயில்வே திருடங்களுக்கு சப்போர்ட் பண்றமாதிரி எல்லாம் புகார் வந்திருக்கு. அதனால் இந்த மேட்டரை ரொம்ப பெரிசு பண்ணு.. அப்போ தான் நம்ம டிப்பார்ட் மெண்ட் மேல கொஞ்சமாச்சும் மக்களுக்கு மரியாதை இருக்கும்’

‘ அதனால தான் பார்ட்டியை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிட்டிருக்கேன் சார்’

‘ம்ம்… அதைப் பண்ணு முதல்ல. ஆமா… யாரு அக்யுஸ்ட். அதே ஏரியாவா ?

‘ இல்ல சார்… விருதுநகர் பக்கத்துல உள்ள ஒரு பையன்’

‘ அதானே பார்த்தேன்.. நம்ம ஏரியான்னா… உங்களால புடிக்க முடியாதே…. போன மாசம் ஏழு கேஸ் ! உங்களுக்குத் தெரியாம நடந்திருக்காது. ஆனா எனக்கு எதுவும் வரலை. நான் இங்கே திருச்சில இருக்கிறதனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுடாதே…’ எஸ்பி தனக்கு மாமூல் வராத வெறுப்பை வெளிக்காட்டினார்.

‘ அப்படியெல்லாம்…. ‘

‘ போதும்யா… ரொம்ப இழுக்காதே. இந்த கேசை ஸ்டிராங்கா புரஜக்ட் பண்ணு. திருட்டு நடந்த மூணு மணி நேரத்துல திருடனைப் பிடித்து ரயில்வே போலீஸ் சாதனை ந்னு நியூஸ் குடு. …சரியா… ‘

‘அப்படியே செய்யறேங்கையா… ‘ என்று சொல்லி போனை வைத்த இன்ஸ்பெக்டர். போனைவைப்பதற்காகவே காத்திருந்தது போல, வைத்தவுடன் அந்த காவலர்களுக்கே உரிய ….பய என்னும் கெட்டவார்த்தையை மந்திரம் போல உரைத்தார்.

மதியம் மணி இரண்டைக் கடந்தபோது இன்ஸ்பெக்டர் பொன்னம்மாவை அழைத்தார்.

‘வாம்மா… வந்து இங்கே ஒரு கையெழுத்து போடு….’

பொன்னம்மா பெருவிரலை நீட்டினாள்….
‘கம்ப்ளெயிண்ட் போட்டாச்சுங்களா ஐயா… நான் இப்போ கிளம்பலாமா ?’ என்று கூறிக் கொண்டே பையைத் தொட்டாள்.

‘என்னம்மா… புரியாம பேசறே. இப்போ தான் கம்ப்ளெயிண்ட் போட்டிருக்கு… இனிமே இதை கோர்ட்டுக்கு கொண்டு போயி விசாரணை பண்ணிட்டு உங்க கிட்டே பொருளை எல்லாம் குடுப்பாங்க. நீ இப்போ போ…. போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா… என்னிக்கு கோர்ட்டுக்கு போகணும்ன்னு சொல்றேன்’ இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தாள் பொன்னம்மா.

‘ஐயா… பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேங்கய்யா… பணத்தையும் நகையையும் குடுத்துடுங்கய்யா.. எந்த கோர்ட்டுக்கு வேணும்ன்னாலும் நான் வரேன்’

‘என்ன புரியாம பேசறே. அதெல்லாம் ரூல்ஸ் படி தாம்மா நடக்கும்.. நீ இப்போ போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா. எல்லா நகையையும் தனித்தனியே எடை போட்டு கணக்கு எழுதணும். இருக்கிற பணத்தை எல்லாம் கணக்கு காட்டணும்… எத்தனை வேலையிருக்கு… போ…உன்பணத்தை யாரும் முழுங்கிடமாட்டாங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.. எதுவும் புரியாமல் வெளியே வந்தாள் பொன்னம்மா.

அதன்பின் இரண்டு வாரங்கள் கழிந்து பொன்னம்மா செங்கல்பட்டு ஸ்டேசனுக்கு வந்து காவல் இருக்க…

‘இந்த திருட்டு நடந்தது விழுப்புரம் ஏரியாம்மா.. அதனால விழுப்புரம் ஸ்டேசனுக்கு நாங்க கேசை மாற்றியிருக்கோம். கேஸ் செலவுக்கெல்லாம் உன் கிட்டேயிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கோம். யாரு கேட்டேலும், பத்து பவுன் நகை ஒன்பதாயிரம் ரூபாய்ன்னு சொல்லு… இல்லேன்னா உனக்கு ஒண்ணும் கிடைக்காது’ என்று இன்ஸ்பெக்டர் அவளை விழுப்புரம் அனுப்பினார்.

பொன்னம்மா… அழுதுகொண்டே விழுப்புரம் ஸ்டேசனுக்கு ஓட…
‘இன்னும் கேஸ் கட்டு இங்கே வரலேம்மா…’ என்று நாட்கணக்கில்  விழுப்புரம் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் இழுத்தடிக்க, பொன்னம்மா அங்கும் இங்கும் ஓடி ஓடி வாரங்கள் மாதங்களாக…. ஒருவழியாக கேஸ் விழுப்புரத்துக்கு வந்தது.

இன்ஸ்பெக்டர் அழுதுகொண்டிருந்த பொன்னம்மாவிடம் சலனமே இல்லாமல் சொன்னார்.
‘ அம்மா… கேஸ் முடியறதுக்கு எப்படியும் இரண்டு மூணுவருசம் ஆகும். அதுவரைக்கும் உங்க நகைகளையும் பணத்தையும் கோர்ட் லாக்கர்ல தான் வெச்சிருப்பாங்க…. நீங்க கேஸ் ஆரம்பிச்ச பிறகு உங்க சாட்சியைச் சொல்லிட்டு நகைகளை வாங்கிட்டு போயிடலாம். ஆனா அந்த நகைகளை எல்லாம் கோர்ட் எப்போ கேட்குகோ அப்போ கொண்டு வந்து காட்டணும். அதை விக்கவோ, மாற்றவோ கூடாது. பணத்தோட நம்மரை எல்லாம் நோட் பண்ணி வெச்சிருக்காங்க. அதனால பணம் எல்லாம் கோர்ட்ல தான் இருக்கும் அது கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தருவாங்க….’

‘அப்போ என் பொண்ணு கல்யாணம்….. ‘ என்று ஏங்கிய பொன்னம்மா கண்கள் இருண்டு
போய், நடை தளர்ந்து ஸ்டேசன் வாசலிலேயே சாய்ந்தாள்.

பணம் இல்லாமல் பொன்னம்மாவின் மகளுடைய கல்யாணம் நின்று போனதும், அந்த அவமானம் தாங்காமல் பொன்னம்மாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதும், ஒருவருடம் கடந்தபின்னும் இன்னும் பொன்னம்மா விழுப்புரம் கோர்ட் வாசலில் வெயிலில் அழுது கொண்டிருப்பதையும், கேஸ் என்பதே குறைந்த பட்சம் ஐந்து வருடம் என்பதை அறியாமல் வாரம்தோறும் அவள் மனசாட்சியே இல்லாத தலைமை கிளார்க்கிடம் அழுது
புலம்புவதையும் எழுதுவதற்குரிய மனவலிமை எனக்கு இல்லாததால் இந்தக் கதை இத்துடன் முடிவடைகிறது

நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

light.jpg

‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ?’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்? ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின்  மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன் சொன்னான்.

‘இப்படி ஒரு யோசனை உங்களுக்கு எப்படி வந்தது ? அதுவே ஆச்சரியமாக இருக்கிறது’ அதிகாரி கண்களில் இருந்த வியப்பில் ஒருதுளி கூட குறையாமல் பேசினார்.

திடீரென நம்ம வீட்டுக்கு விருந்தாளி வரப்போறாருன்னு தோணும். பார்த்தா தூரத்துச் சொந்தக்காரங்க யாராவது வந்து நிப்பாங்க. யாரோ நமக்குப் போன் பண்ணப் போறாங்கன்னு நினைப்போம், அப்போ பார்த்து யாராவது போன் பண்ணுவாங்க. இப்படி நடக்கிற அனிச்சைச் செயல்களோட காரணத்தைத் தான் கடந்த பல வருடங்களா ஆராய்ச்சி செய்திட்டே இருந்தேன். அதோட வளர்ச்சி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

‘இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..’

சொல்றேன். நம்ம மூளை ஒரு அற்புதம். அதோட போட்டி போட நம்முடைய எந்த அறிவியல் கருவிக்கும் வலு இல்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா மூளையை விட சிறப்பானதா நாம எதையும் கண்டுபிடிக்கவேயில்லை.

அடுத்த நிமிடம் ஏதோ நடக்கப் போகுதுன்னு நமக்குச் சொல்ற அந்த வேலையை மூளையோட ஒரு குறிப்பிட்ட பாகம் தான் செய்யுது. அந்த இடத்திலே தான் என்னோட ஆராய்ச்சி ஆரம்பமாச்சு.

அந்த பாகத்துல மூளைக்கு ஏற்படக் கூடிய மாற்றங்களை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தினா, அதாவது அந்த எண்ணம் தோன்றும் போது ஏற்படக் கூடிய அதிர்வலைகளை அதிகப்படுத்தினா, அடுத்த நிமிடம் ங்கிறது அதிகமாகி அடுத்த மணி நேரத்துல என்ன நடக்கும்ங்கிறதை நாம கண்டு பிடிக்க முடியும். அப்படித் துவங்கின
ஆராய்ச்சியோட வளர்ச்சி தான் இப்போ அடுத்த நாள் என்ன நடக்கும்ங்கிறதை கண்டு பிடிக்கக் கூடிய நிலமைல வளர்ந்திருக்கு.

‘ஆச்சரியமா இருக்கு சித்தார்த். பெருமையாவும் இருக்கு. அப்போ நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை நாம் இன்னைகே தெரிஞ்சுக்க முடியும் இல்லையா ?’

‘நிச்சயமா !. நாளைக்கு நடக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய வகைல ஒரு மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கிறேன். அதுதான் இப்போதைய வெற்றி. இதையே இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தினா, இந்த நாள் என்பது வாரம், மாதம், வருடம் என்ற நிலைக்கு நீட்டிக்க முடியும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை’

‘வாட்… மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கீங்களா ?. இது நம்ம விதிகளுக்கு எதிரானது. மனிதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன் விலங்குகளை ஆராய்ச்சில உட்படுத்தினீங்களா ? ‘ அதிகாரியின் கண்களில் திகில் அதிகமானது.

‘மன்னிக்கணும். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறதை விலங்குகள் அறிந்து கொண்டாலும் அதை நமக்குச் சொல்லக் கூடிய அறிவு அவற்றுக்குக் கிடையாது இல்லையா ?.  அதனால இந்த ஆராய்ச்சில விலங்குகளை ஈடுபடுத்திப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதால் நமக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. என்னுடைய உதவியாளர் நாதனைத் தான் ஈடுபடுத்தியிருக்கிறேன்’ சித்தார்த் அமைதியாகச் சொன்னான்.

மனிதர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் உயர்மட்டக் குழுவிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஏதானும் தவறு நடந்திருந்தால்…’ அதிகாரியின் குரல் கோபமடைந்தது.

‘மன்னியுங்கள். என்னுடைய ஆராய்ச்சியில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததுண்டு. மனித ஆராய்ச்சி என்று சொல்லும்போது நிச்சயமாக நம்முடைய குழு அதை அனுமதிக்காது. அதனால் தான் அதைப்பற்றி குழுவுக்குத் தெரிவிக்காமல் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ சித்தார்த் குரலை தாழ்த்திப் பேசினான்.

அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாமல் கையிலிருந்த பேனாவை உள்ளங்கையில் வைத்து இருகைகளாலும் உருட்டினார்.

‘சார். இதனால் நம்முடைய நாட்டுக்குக் கிடைக்கப் போகும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. நாளைக்கு காஷ்மீர் செல்லும் பிரதமரின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ? நாளை ஏதேனும் விமானம் சியர்ஸ் டவர்சை தகர்க்குமா, எதிர்பாராத நிலநடுக்கம் எங்கேனும் நிகழுமா ? என்பதையெல்லாம் நம்மால் கண்டு பிடிக்க முடியும். ஏன் நாளைக்கு எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்யுங்கிறதைக் கூட நம்மால கண்டுபிடிக்க முடியும்.’

‘எதை வச்சு சொல்றீங்க ?’

‘நீங்க இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி அளிப்பீங்கங்கறது எனக்குத் தெரியும். அதை வெச்சுத் தான் நான் உங்க கிட்டயே பேசிட்டு இருக்கேன்..’ சித்தார்த் மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

‘ஓ… காட்… இதுலே இருக்கக் கூடிய பிரச்சனைகளையும், விளைவுகளையும் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ?’ அதிகாரி வேகம் குறைக்காமல் கேட்டார்.

‘என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?’ சித்தார்த் முகத்தில் மெல்லிய கேள்விகள் முளைத்தன.

நாளைக்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ல யார் ஜெயிக்கப் போறாங்க, நாளைக்கு எந்த குதிரை பந்தயத்துல ஜெயிக்கும் ஏன் நாளைக்கு எந்த லாட்டரிக்குப் பரிசு விழும்கிறது கூட கண்டுபிடிக்க முடியுமே ? அப்படின்னா அதை வெச்சு பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம். இதை ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்றேன். வாழ்க்கையோட சுவாரஸ்யமே நமக்கு இல்லாம போயிடுமே சித்தார்த்.

‘சார்.. நாம இதை எல்லா மூளையிலேயும் செய்யப் போறதில்லை. சில நம்பிக்கைக்குரிய,
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிக்கக் கூடிய, சிலருக்குத் தான் நாம் இந்த மாற்றத்தைச் செய்யப் போறோம். இதையே வேற விதமா யோசிக்கலாமே சார். இப்படி ஒரு வசதி இருந்திருந்தா, நாம கோட்சே கையிலிருந்து காந்தியைக் காப்பாற்றியிருக்கலாம், பாதுகாவலன் கைலயிருந்து இந்திராகாந்தியைக் காப்பாற்றியிருக்கலாம்.. ஏன், சுனாமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கலாமே…’

‘சரி… லீவ் நாள் அதுவுமா இன்னிக்கு அவசரமா என்னைக் கூப்பிட்டுப் பேசிட்டிருக்கீங்களே.. என்ன விசயம் ?’ அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாத மனநிலையில் கேட்டார்

‘சார்… மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் ஒண்ணு நாளைக்கு நடக்கப் போகுது. நாளைக்கு நாம அனுப்பப் போற ராக்கெட் கிளம்பற பத்தாவது நிமிசமே செயலிழந்துபோய் கடல்ல விழப் போகுது. இந்த ராக்கெட் கிளம்பாம இருந்தால் நமக்கு ஏற்படக் கூடிய கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை நாம தடுத்திடலாம். நான் இதை இப்போ யார் கிட்டேயும் சொல்ல முடியாது. ஆனா நீங்க நினைச்சா… ஐ.எஸ்.ஆர்.ஓ தலைமையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல முடியும்’

‘நோ..நோ…நோ… அது முடியாது சித்தார்த். நான் என்ன சொல்லித் தடுப்பேன். காரணம் கேப்பாங்க, விளக்கம் கேப்பாங்க, நான் பதில் சொல்லியாகணும். பிள்ளையை பிக்னிக் அனுப்பாதீங்கன்னு சொல்றமாதிரி ஈசியா நான் இதைச் சொல்ல முடியாது’ அதிகாரி தலையை வேகவேகமாய் ஆட்டிப் பேசினார்.

‘அதுக்கும் வழி சொல்றேன் சார்’ சித்தார்த் புன்னகைத்தான்.

‘என்ன வழி’

‘சார். ராக்கெட் ஏன் பழுதடையுதுங்கிற விஷயம் கூட தெரியும் சார்’ சித்தார்த் சொல்ல அதிகாரி தளர்ந்து போய் பேசினார் ‘சித்தார்த்.. உன்னுடைய கண்டுபிடிப்பை நினைச்சா பயமா இருக்கு. ‘

‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை சார். அணு ஆயுதங்களை தேசத்தோட மடியிலே கட்டி வெச்சிருக்கோம், தற்கொலைப்படைகளை நாட்டோ ட எல்லைகளிலே உலவ விட்டிருக்கோம், அதைவிடப் பயமூட்டக் கூடிய விஷயம் இதுல எதுவுமே இல்லை சார்’

‘சரி.. ராக்கெட் செயலிழக்கக் காரணம் என்ன ? தொழில் நுட்பக் கோளாறா, இல்லை வேறேதும் காரணமா ?’

‘சார்.. நான் அதோட காரணத்தைச் சொன்னா நீங்க சிரிப்பீங்க.’

‘சொல்லுங்க. சிரிக்காம இருக்க டிரை பண்றேன்’

‘சார்.. ராக்கெட்ல வரப்போறது பெரிய தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. சின்ன புரோக்ராமிக் குளறுபடி தான். அதுவும் வேரியபிள் டிக்ளரேஷன் எறர்’

‘என்ன சொல்றே… சின்ன வேரியபிள் டிக்ளரேஷன் எரர் ராக்கெட்டை செயலிழக்கச் செய்யுமா ? புரியும்படியா சொல்’

‘சொல்றேன் சார். இன்னும் நம்ம ஆராய்ச்சிக் கூடத்துல ஃபோர்ட்ரான் புரோக்ராம் லாங்குவேஜ் தான் பயன்படுத்தறாங்க. அதுல ராக்கெட்டோ ட டைரஷனை தீர்மானிக்கக் கூடிய ஒரு வேரியபிள் லெங்க்த் சின்னதா குடுத்திருக்காங்க. ராக்கெட் எல்லையைத் தாண்டறதுக்கு முன்னாடியே அந்த வேரியபிள் ஓவர் புளோ ஆகி ரீசெட் ஆகப் போகுது. அதுக்கு அப்புறம் அது பாசிடிவ் வேல்யூவுக்குப் பதிலா நெகட்டிவ் வேல்யூவுக்குப் போகும். அப்போ ராக்கெட்டோ ட டைரஷன் மேலே போறதுக்குப் பதிலா கீழே வரும்’ சித்தார்த் சொல்லச் சொல்ல அதிகாரி திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘எ..என்னால எதையும் நம்பவே முடியலை சித்தார்த். அப்படியெல்லாமா தப்பு பண்ணுவாங்க ?’ அதிகாரியின் குரல் குழறியது.

‘எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. காரணத்தைக் கேட்டபோது. ஆனா அதுதான் உண்மை. நீங்க நினைச்சா மட்டும் தான் இந்த ராக்கெட் புறப்படறதைத் தடுக்க முடியும்’ சித்தார்த் சொன்னான்.

‘உனக்கு எப்படித் தெரியும் ? . விஞ்ஞான ரகசியங்கள் வெளியே போகுதா ? ந்னு ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும் சித்தார்த்…’ அதிகாரி இழுத்தார்.

‘உங்ககிட்டே நான் விஷயத்தைச் சொல்லிட்டேன். இனிமே உங்க கைல தான் சார் இருக்கு எல்லாமே’ சித்தார்த் சொல்லி விட்டு அமைதியானான்.

இதை எப்படிச் சொல்லி எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்னும் கவலையில் தலையில் கைவைத்து அமர்ந்தார் அதிகாரி.

மறுநாள் காலை 7.45 மணி.

சித்தார்த்… என்னால அவர்களைக் கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை. எத்தனையோ தடவை ராக்கெட் அனுப்பியிருக்கோம், அதே டீம் தான் வர்க் பண்ணியிருக்கு, நாட்டுல ஜனாதிபதி துவங்கி, கன்யாகுமரி கிராமம் வரைக்கும் ராக்கெட் லாஞ்ச் பத்தி தான் பேசிட்டிருக்காங்க… இது கண்டிப்பா சக்சஸ் தான் ஏதாச்சும் கனவு கண்டுட்டு உளறாதீங்க. உங்க டிப்பார்ட்மெண்ட் வேற எங்க டிப்பார்ட்மெண்ட் வேற ந்னு சொல்லிட்டாங்க.

‘அப்படின்னா…’ சித்தார்த் திகைப்புடன் கேட்டான்.

‘இன்னிக்கு எட்டு மணிக்கு ராக்கட் லாஞ்ச் பண்ண போறாங்க’

‘சார்….’ சித்தார்த் சோர்வுடன் அமர்ந்த போது அவனுடைய செல்பேசி கிணுகிணுத்தது.

‘எஸ்..’

‘சார் நான் தான் நாதன் பேசறேன்.’

‘சொல்லு நாதன் ஏதாச்சும் தகவல் இருக்கா ?’

‘ஆமா சார்.. இன்னிக்கு சாயங்காலம் நல்ல மழை பெய்யப்போகுது.

‘இது தானா… இதுக்குப் போய் ஏன் அவசரமா கூப்பிட்டே ?’

‘அது மட்டும் இல்லே சார். திடீர்ன்னு தலை வலிக்குது. நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை என்னால கணிக்க முடியலை. மழை சாயங்காலம் ஆறுமணிக்கு ஆரம்பிச்சு பத்து மணி வரைக்கும் விடாம பெய்யும். நகரத்துல எல்லாமே ஸ்தம்பிக்கும். அதுக்குமேல யோசிக்க முடியலை. நம்ம ஆராய்ச்சில ஏதோ பிரச்சனைபோல தோணுது’ நாதனின் குரலில் இருந்த பதட்டத்தை சித்தார்த் வாங்கிக் கொண்டபோது

“எதிர்ப்பாராத விதமாக சற்று முன்னர் கிளம்பிய ராக்கெட் பழுதடைந்து கடலில் விழுந்தது” என்று தொலைக்காட்சி தற்போது வந்த செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

சித்தார்த் திரும்பி அதிகாரியைப் பார்க்க, அவர் வெலவெலத்துப் போய் எதுவும் செய்ய இயலாதவராய் நடுங்கும் கீழுதட்டைக் கடித்தார்.

மாலை ஆறுமணி.

சொல்லி வைத்தார்போல கொட்டத் துவங்கியது மழை. அதிகாரி நேரத்தோடு வீடு போய்விட்டிருந்தார்.

சித்தார்த்தும், நாதனும் ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

‘நாதன். நீ பதட்டப்படறமாதிரி ஒண்ணும் இல்லை. இந்த ஆராய்ச்சி மூளையை எதுவும் செய்துவிடாது. சில மாற்றங்கள் மட்டும் தான் செய்யும். உன்னால் சாதாரணமாக இருக்க முடிகிறது தானே…’

‘அதுல ஏதும் பிரச்சனை இல்லை.. ‘

மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

நாதனும் சித்தார்த்தும் ஆரவாரமாகப் பெய்து கொண்டிருந்த  மழையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘நாம கண்டுபிடிச்சும், நம்மால ராக்கெட்டைக் காப்பாத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே நம்முடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். அதற்குரிய முயற்சிகளை நாளைக்கே துவங்கப் போறேன்’ சித்தார்த் பெருமூச்சுடன் சொல்ல நாதன் புன்னகைத்தான்.

‘இதனால என்னுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாதே ?’ நாதன் இலட்சத்து மூன்றாவது முறையாகக் கேட்டான்.

‘இத்தனை வருடமா என்னுடன் ஆராய்ச்சியில் இருந்தும் நீ இப்படிக் கேட்கிறாயே’ சித்தார்த் அதே பதிலை சொல்லி நாதனின் தோளில் கைவைத்தான்.

திடீரென்று… வானத்தில் தோன்றிய மின்னல் ஒன்று கணநேரத்துக்கும் குறைவான நேரத்தில் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. சுதாரித்து நிமிர்வதற்குள் அவர்கள் பற்றியிருந்த கம்பி அந்த மின்சாரத்தை அப்படியே வாங்கி அவர்களுக்குக் கொடுக்க இருவரும் மரணத்துக்குள் விழுந்தார்கள்.

உள்ளே கடிகாரம் அடிக்கத் துவங்கியது. பத்து மணி !

0

வெள்ளக்காரன் சாமி ( த சண்டே இந்தியனில் – எனது சிறுகதை )

ch1.jpg
‘வெள்ளக்காரன் சாமி இறந்துட்டாராம்’ – பரக்குன்று கிராமத்தின் தெருக்களில் இந்த செய்தி பரவியபோது தெருக்களை ஒருவித சோக இருள் கவ்விக் கொண்டது. கடையிலிருந்த முதியவர்களின் நினைவுகளெல்லாம் பழைய நாட்களை நோக்கி ஓடியிருக்க வேண்டும் அவர்களுடைய கண்களில் ஒரு திடீர்ச்சோகம் பற்றிக் கொண்டது.

சந்தையிலும் அந்த செய்தி கூறு வைத்த மீன்களிடையே பரவியது. சில பெண்கள் கதறியழத் துவங்கினார்கள். பலர் உச்சுக் கொட்டினார்கள். சந்தையின் வியாபாரச் சந்தடிகளிலும் ஒருவித கனத்த மௌனம் வந்து தொற்றிக் கொண்டது.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த செய்தி வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், ரப்பர் மரங்களிடையே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும், மரச்சீனி தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடமும் மின்னலென பரவியது.

ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒருவிதமான நிறமற்ற சோகம் வந்து சூழ்ந்து கொண்ட அதே வேளையில் பரக்குன்றிலிருந்த அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் துக்க மணி அடித்தது. தாசையன் தன்னுடைய வெள்ளைத் தாடியை மெதுவாகத் தடவியபடி வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருடைய கண்களில் குதித்து விடத் தயாராய் காத்திருந்த கண்ணீர் துளிகளிடையே கடந்த காலம் விரிந்தது.

பரக்குன்று !. குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமம். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நசுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த கிராமத்தை ஒருகாலத்தில் கண்டெடுத்தவர் அந்த வெள்ளக்காரச் சாமி என்று கிராமத்தினரால் அன்புடன் அழைக்கப்படும் ஜேம்ஸ் தொம்மர் தான்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜேம்ஸ் பரக்குன்று கிராமத்துக்குள் நுழைந்தபோது அது வெறும் காட்டுப் பகுதியாய் மட்டுமே இருந்தது. பரந்து விரிந்த குன்றுகள் இருந்த இடம் பரக்குன்று என்று அழைக்கப்பட்டதாய் காரணப் பெயர் சொன்னார்கள். மேல் துண்டு அணியாத கிராமத்து வாசிகள்.

கிராமத்தில் நிலம் வைத்திருந்த சமூகத்தினர் நிலமில்லாத, வசதியில்லாத ஏழைகளை கொத்தடிமைகள் போல நடத்தி வந்த நிலை ஜேம்ஸ் கண்களை வருத்தியிருக்க வேண்டும். இந்த சமூக ஏற்றத்தாழ்வை சமன்படுத்த ஏதேனும் செய்யவேண்டும் எனும் ஏக்கம் அவருக்குள் முளைத்தது.

தான் பரக்குன்று பகுதியில் குடியேற வேண்டுமெனில் ஒரு ஆலயம் வேண்டுமென்று நினைத்தார் அவர். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆலயம் வந்துவிட்டால், ஜேம்ஸ் அங்கே பணியாற்றத் துவங்கினால் தங்களுடைய பிடி தளர்ந்துவிடும் என்றும், அவர்களை கொத்தடிமைகளாக நடத்தும் வாழ்க்கை நின்றுவிடும் எனவும் கருதிய சமூகத்தினர் அதை தீவிரமாக எதிர்த்தார்கள்.

அப்போது அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் தான் தாசையன். கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு தினமும் நடந்தே கேரளாவில் சென்று படித்தவர் அவர். சுருங்கக் கூறின் கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருந்தவர் அவர் ஒருவரே.

ஜேம்ஸ் ஆலயம் கட்ட ஆதரவு தெரிவித்த மக்களை அழைத்து கூட்டம் போட்டார். அவருடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் உடனிருந்தார்.

‘இங்கே ஒரு ஆலயம் அமைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும். இந்த ஆலயம் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமையும். எல்லா மதத்தினரும் இந்த ஆலயத்துக்கு வரலாம். இந்த ஆலயம் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் முதல் முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்’ ஜேம்ஸ் கூறினார்.

ch2.jpg

சாமி… இங்கே கோயிலு கட்டறது பயங்கர கஷ்டம். ஏமான் மாருவ அதுக்கு ஒத்துக்க மாட்டினும். பிரச்சனை பண்ணுவினும்.

ஏன் பிரச்சனை பண்ணுவார்கள் என நினைக்கிறீர்கள் ?

ஜேம்ஸ் தொம்மரின் கேள்விக்கு கிராம மக்களிடம் சரியான பதில் இல்லை. ஆனாலும் அவர்களுக்குள் ஒரு அச்சம் இருந்தது. தாழ்ந்த நிலையிலேயே தங்களை நினைத்து வந்த சமூகத்தினருக்கு இயல்பாகவே இருக்கும் அச்சமே அது என்பது ஜேம்ஸ் க்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் போய் மக்களிடம் சொல்லுங்கள். இது ஊருக்கான ஆலயம். இந்த ஆலயம் கட்டினால் இங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவேன். கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கிராம மக்கள் அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் இலவசமாய் படிக்க அனுமதி உண்டு என எல்லோடுக்கும் சொல்லுங்கள். ஜேம்ஸ் சாதுர்யமாகப் பேசினார்.

கிராமத்துப் பெண்களைத் தான் அந்த செய்தி முதலில் வசீகரித்தது. தங்கள் பிள்ளைகளும் படிக்க முடியும், அதுவும் இலவசமாய் படிக்க முடியும் என்னும் செய்தி அவர்களுக்குள் ஒரு இனிப்பான மழையாய் பொழிந்தது. பெண்களைக் கவர்ந்த செய்தி ஆண்களை சம்மதிக்க வைத்தது.

கிராமத்தில் ஆலயம் கட்டும் பணி துவங்கியது. கிராமத்து மக்களின் உழைப்பைக் கொண்டே அந்த ஆலயம் எழும்பத் துவங்கியது. உழைக்கும் மக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் ஊதியத்தின் பெரும்பகுதி கோதுமையாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டது !

இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பாகுபாடின்றி மக்கள் வேலையில் ஈடுபட்டனர். பாறையை உடைத்து கற்கள் கொண்டு வரப்பட்டன, மண் ஆழமாகத் தோண்டப்பட்டது, கொட்டாங்குச்சியை எரித்து அதிலுள்ள சாம்பலைக் கொண்டு கருப்பு நிறத்தில் பெயிண்ட் போன்ற கலவை தயாராக்கப்பட்டது. ஆலயம் வேகமாக வளர்ந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லாதது ஜேம்ஸ் தொம்மரை கொஞ்சம் ஆனந்தமும் வியப்பும் அடையச் செய்தது. இரவு வேளைகளில் நிகழ்ந்த ஓரிரு மிரட்டல் சம்பவங்களைத் தவிர ஏதும் அசம்பாவிதங்கள் இல்லை. ஜேம்ஸ் தன்னுடைய முதல் திட்டம் வெற்றியடைந்ததில் மகிழ்ந்தார். அவருடைய முதல் திட்டம் ஆலயமாக இருக்கவில்லை. மக்களின் ஒற்றுமையாக இருந்தது !

‘தாசையா.. சாமிக்க அடக்கத்துக்கு போகல்லியா ?’ குரல்கேட்டு நிமிர்ந்தார் தாசையன்.  கீழ விளை தங்கராஜ் நின்றிருந்தான்.

‘எதுக்கு அடக்கத்துக்கு போயி ? ‘ தாசையன் குரலில் விரக்தி தெரிந்தது.

‘ஏன் அப்படி சொல்றே ? சாமிக்கு நீயின்னா உயிரு.. நீயும் போவலேன்னா நல்லா இருக்காது’

தாசையன் பதில் சொல்லவில்லை. அவருடைய நினைவுகள் பழைய காலத்துக்குள்ளேயே அலைந்து திரிந்தன.

‘சாமி.. கோயிலு கட்டியாச்சு. ஆனா.. பூசைக்கு ஆள் இல்ல. வெறும் கொறச்சு பேரு தான் வராங்க. என்ன செய்யலாம் ?’ தாசையன் கேட்க ஜேம்ஸ் புன்னகைத்தார்.

‘இது சினிமா இல்லை மக்கள் முண்டியடித்துக் கொண்டு வர. வருபவர்கள் வரட்டும். முதலில் அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்.. அப்புறம் பார்க்கலாம் மற்ற விஷயங்கள்’ ஜேம்ஸ் குரலில் இருந்த உறுதியினால் விரைவிலேயே ஒரு ஓலை கொட்டகை பள்ளிக்கூடமாக உதவியது.

‘திரு இருதய ஆலயம்’  பக்கத்திலேயே பள்ளிக்கூடம் ஆரம்பமானது.

பள்ளிக்கூடத்துக்கும் பிள்ளைகள் இல்லை. சிறுவயதிலேயே பிள்ளைகளை வயலுக்கும், காட்டுக்கும் அனுப்பி காசு வாங்கிப் பழக்கப்பட்ட பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்கவில்லை.

பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுக்கு சீருடை, புத்தகங்கள்,மதிய உணவு இலவசம். ஜேம்ஸ் மக்களைக் கெஞ்சினார்.

ஒரு சில பிள்ளைகள் வந்தார்கள். எதிர் பார்த்த கூட்டம் வரவில்லை. தெருக்களில் ஏராளம் சிறுவர்கள் அலைந்து திரிந்தார்கள். பலர் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப் போனார்கள்.

‘பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளுடைய வீட்டுக்கு கோதுமை தருவேன்’ ஜேம்ஸ் அறிவித்தார். அந்த அறிவிப்பு மக்களைக் கொஞ்சம் வசீகரித்திருக்க வேண்டும். மாணவர்கள் வந்தார்கள்.

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட மகிழ்ச்சி ஜேம்ஸ் முகத்தில் மிளிர்ந்தது.

தினமும் மாலையில் கிராமத்து மலைகளில் ஏறி அனைத்து குடிசைகளையும் சென்று சந்தித்து அவர்களுடன் உண்டு, அவர்கள் கஷ்டங்களைக் கேட்பது அவருடைய பணி. அந்த வீடு சந்திப்பு நிகழ்ச்சி ஜேம்ஸ்க்குள் ஒரு பொறியை எழுப்பியது.

பெரும்பாலானோர் பனையேற்றுத் தொழில் செய்கிறார்கள். ஆனால் அதற்குரிய ஊதியம் இல்லை. ஏமான்மார் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதியமே கிடைத்தது. விற்பனை செய்யுமிடத்திலும் சரியான வருவாய் இல்லை. இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும். ஜேம்ஸ் யோசித்தார்.

‘ஊரில் ஒரு பனஞ்சீனி ஆலை அமைப்போம். நான் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். ஜெர்மனியிலிருந்து பனஞ்சீனி ஆலைக்குரிய உபகரணங்கள் கொண்டு வருவோம். ‘ ஜேம்ஸ் மக்களிடம் சொல்ல மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.

பனஞ்சீனி ஆலையும் சில வருடங்களில் அமைந்தது.

பனஞ்சீனி ஆலை அமைத்த போதுதான் ஜேம்ஸ் தொம்மரை பிரச்சனைகள் விஸ்வரூமபமெடுத்துத் தாக்க ஆரம்பித்தன.  கிராம மக்களின் உழைப்பை மூலதனமாகக் கொண்டு சுரண்டல் சாலைகளாய் வியாபித்திருந்த செங்கல் சூளைகளும் விவசாய நிலங்களும், பனையேறும் தொழிலும் முதலாளி வர்க்கத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி ஒரு சமத்துவ சமுதாயத்துக்குள் விழுமோ எனும் பயம் முதலாளிகளை ஆக்கிரமித்தது.

ஜேம்ஸ் எல்லாரையும் கிறிஸ்தவராக்குகிறான். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும், நமது ஆதிக்கம் அற்றுப் போகும். வெளிநாட்டுப் பணம் கொண்டு வந்து இந்துக்களை அழிப்பான், இந்துக் கோயில்கள் இடிப்பார்கள் என்று ஒரு புரளியைப் பரப்பிவிட்டார்கள்.

புரளிக்கு புரவியை விட வேகம் அதிகம். அது மிக வேகமாகப் பரவி, ஊரில் இருந்த ஒற்றுமையின்  வேர்களில் கோடரியாய் இறங்கியது.

ஊருக்குள் விஷயம் விஷமாய் பரவிக் கொண்டிருந்தபோது பனம் ஓலை மடலை மூலதனமாகக் கொண்டு ஒரு நார் ஆலை உருவாக்கும் சிந்தனையில் அமர்ந்திருந்தார் ஜேம்ஸ்.

பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பனை ஓலை பாயாகவும், பனை ஓலை கூடைகளாகவும், கடவங்களாகவும் மாறிக்கொண்டிருக்க ஓலையின் அடிப்பாகமான மடல் மட்டும் வெறும் விறகாய்ப் போவதை விரும்பாமல் அதை முதலீடாகக் கொண்டு நாற்றாலை ஒன்றை நிறுவவேண்டும் என்பது அவருடைய அடுத்த கட்ட சிந்தனையாய் இருந்தது.

‘தாசையா….’  தங்கராஜ் மீண்டும் மௌனத்தைக் கலைத்தான்.

‘போயிட்டு வா தாசையா… சாமியோட ஆவி உன்னைப் பாக்காம வருத்தப்படும்…’ தங்கராஜ் மீண்டும் சொன்னான்.

சற்றுநேரம் தங்கையனைப் பார்த்துக் கொண்டிருந்த தாசையன் சாணம்  மெழுகியிருந்த திண்ணையிலிருந்து கீழிறங்கினார். கயிற்றில் கிடந்த டவலை எடுத்து முகத்தைத் துடைத்தார். உள்ளறைக்குச் சென்று வேட்டியைக் கட்டிக் கொண்டார். ஒரு சட்டையை எடுத்து மாட்டினார்.

‘டேய்.. சாமிக்க அடக்கத்துக்கு போறேன்’ உள்பக்கம் நோக்கி குரல் கொடுத்தார் தாசையன். மனைவியை ‘டேய்’ என்று அழைப்பதே அவருடைய வழக்கமாய் இருந்தது.

‘சுங்காங்கடையில இல்லியா அடக்கம் ? அங்க வரைக்கும் போறியளா ? எப்ப வருவிய ? ‘ மனைவி சமையல் கட்டிலிருந்து குரல்கொடுத்தார். தாசையன் பதில் ஏதும் சொல்லாமல் முற்றத்தில் இறங்கி நடந்தார்.

சரளைக் கற்கள் காலை குத்தும் உணர்வு கூட இல்லாமல்  அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து ஓடையைத் தாண்டி ரோட்டுக்கு வந்தார் தாசையன். ரோடு என்றால் பெரிய ரோடு இல்லை. சற்றே அகலமான ஒரு ஒற்றையடிப் பாதை. எப்போதாவது ஒரு பஸ் வந்து போகும். அதையும் அவ்வப்போது குழித்துறை ஆற்றிலிருந்து மணல் அள்ளிக்கொண்டு வரும் லாரியின் சத்தத்தையும் தவிர்த்தால் நிசப்தமான சாலை.

இரண்டு குடிசைக் கடைகள், ஓலைக் கூரையுடனும் இரண்டு பாட்டில்களில் சர்பத் மற்றும் நாரங்காய்கள், கூரையில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு குலை வாழைப்பழத்தோடு யாருடைய வருகைக்கோ காத்திருக்கும். சந்தை வேளைகளில் வெற்றிலையோ, பழமோ, நாரங்கா வெள்ளமோ செலவாகும் வாய்ப்பு உண்டு.

தாசையன் அந்தக் கடைகளின் பின்புறம் வழியாக நடந்தார்.

கடைகளுக்குப் பின்புறம் கிடந்தது சிதிலமடைந்த கட்டிடம் ஒன்று. அந்தக் கட்டிடத்தின் அருகே வந்து சற்று நேரம் மௌனமாய் இருந்தார் தாசையன். கட்டிடத்திற்கு உள்ளே குப்பைக் கூளங்கள் நிறைந்து வழிந்தன. பல்லியும் ஓணானும் சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் தாசையன். ‘திரு இருதய பனஞ்சீனி ஆலை’ போர்ட் முக்கால் வாசி எழுத்துக்கள் அழிந்து போயிருக்க மிச்சம் மீதியுடன் விழுந்து கிடந்தது.

அதற்கு அந்தப் பக்கமாய் இருந்தது உடைந்து மண்ணோடு மண்ணாக பனம்தும்பு ஆலை. பனை மட்டையிலிருந்து நார் தயாரிக்கும் இடம்,

‘தாசையா.. எந்த கஷ்டம் வந்தாலும். இந்த தொழிற்சாலைகள் முடங்கிவிடக் கூடாது. நமது மக்களின் வியர்வையை ஏதோ முதலாளி உறிஞ்சிக் கொழுக்கக் கூடாது. அதுக்குத் தேவை இந்த தொழிற்சாலைகள். நம்ம மக்கள் அவர்களுடைய வியர்வைக்கு ஏற்ற கூலியைப் பெற்வது மட்டுமல்ல, நியாயமான வருவாயையும் பெறவேண்டும் அதுக்கு இந்த இரண்டு தொழிற்சாலைகளும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்’ ஜேம்ஸ் சாமியார் சொல்வது தாசையனின் காதுகளில் எதிரொலித்தது.

‘இந்த சாமியால நமக்கு பெரிய பிரச்சனை. ஏமான் மாரு யாரையும் வேலைக்கு வரவேண்டாம்ன்னு சொல்றாங்க. சாமி வேணும்ன்னா சாமி கிட்டே போங்க. எங்க கிட்டே வரவேண்டான்னு விரட்டுறாங்க. நமக்கு வேலை முக்கியம். சாமிக்க பேச்சைக் கேட்டா நாம ஒருநாள் பட்டினி கிடக்க வேண்டியது தான்’  ஊரில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

‘ஆமா.. இந்த சாமி ஒரு நாள் போயிடுவாரு. அப்புறம் நாம என்ன பண்றது ?’

‘பேசாம இவரை இந்த இடத்துல இருந்து மாற்றிடலாம். கோட்டாறு மறைமாவட்டத்துக்குச் சொன்னா அவங்க இவரை மாத்திடுவாங்க’

இருபது வருடங்கள் பரக்குன்று மக்களின் வளர்ச்சிக்காக சுயநலமின்றி உழைத்த ஜேம்ஸ் தொம்மருக்கு எதிராக கிராமத்தில் தங்கள் பிரதிநிதிகளை வலுவாக உருவாக்கியிருந்தார்கள் முதலாளிகள்.

பேச்சு வலுவடைந்தது. ஊர் இரண்டு குழுவாக மாறியது. ஜேம்ஸ் பரக்குன்றில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று விவாதங்கள் அனல் பறந்தன. கிராமத்தில் இருந்த ஒற்றுமைக்கு ஒரு பேரிடியாக வந்தது அந்த பிரச்சனை.

இந்த விவாதங்களினால் மனமுடைந்து போன ஜேம்ஸ் ஊருக்கு மத்தியில் வந்து நின்றார்.  ஊர் மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘ஊரின் அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே நான் போராடினேன். பள்ளிக்கூடம் இன்று எட்டாம் வகுப்பு வரை இருக்கிறது. நூற்பாலை இருக்கிறது, பனஞ்சீனி ஆலை இருக்கிறது. நான் நினைத்த எல்லாம் இருக்கிறது. ஆனால் ஒன்றைத்தவிர. அது தான் ஊர் மக்களின் ஒற்றுமை. ஆலயம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பனஞ்சீனி ஆலை உருவாக்கிய போது உங்களுக்கு இருந்த ஒற்றுமை, பள்ளிக்கூடம் கட்டியபோது உங்களுக்கு இருந்த ஒற்றுமை இப்போது இல்லை. நான் ஒற்றுமையை விரும்புபவன்.  ஒற்றுமைக்குப் பங்கம் என்னால் தான் வருகிறது என்றால் நான் இங்கே இருக்கமாட்டேன்’

ஜேம்ஸ் தொம்மர் சொல்ல அவருடைய ஆதரவாளர்கள் குரல்கொடுத்தனர்.

‘நீங்க ஏஞ்சாமி போணும். நீங்க போவண்டாம். கிறுக்குப் பயலுவ ஏதாச்சும் சொல்லுவினும்’

ஜேம்ஸ் இடைமறித்தார்,’ இல்லை. அடுத்த ஞாயிற்றுக் கிழமை உங்கள் பங்கிலிருந்து விடைபெறுகிறேன். வேறொரு பங்குப் பணியாளர் உங்களிடம் வருவார். இது என்னுடைய இறுதி முடிவு. இது சம்பந்தமாக இனிமேல் ஊரில் எந்தப் பேச்சும் எழவேண்டாம்’

சொல்லிவிட்டு ஜேம்ஸ் கூட்டத்தினரிடமிருந்து விலகினார். கூட்டத்தினரிடம் சலசலப்பு. மகிழ்ச்சியும், அழுகையுமாக அந்த கூட்டம் கலைந்தது.

இல்லம் சென்ற ஜேம்ஸ் கண்ணீர் விட்டார். தலை குனிந்து தன்னுடைய பணிகள் பாதியிலேயே நின்று விட்டதற்காகவும். தான் செய்த பணிகளுக்காக கடைசியில் கிடைக்கும் அவமரியாதைகளுக்காகவும் அவருடைய உள்ளம் வெகுவாக வலி கண்டிருந்தது.

‘சாமி…’ பாதிரியார் கண் திறந்து பார்க்க முன்னால் தாசையன்.

‘வா.. தாசையா… ‘

‘சாமி.. நீங்க நிஜமாவே போறீங்களா ?’

‘ஆமா… என்னால ஊருக்கு பிரச்சனை வேண்டாம். நான் சுங்கான்கடை பக்கத்துல இருக்கிற துறவியர் மடத்துக்குப் போகிறேன். இந்த கிராமத்திலேயே சாகும் வரை இருந்து, இறந்து, இதே பங்குக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படணும்னு நினைச்சேன். ஆனா அது முடியல… ‘ ஜேம்ஸ் சொல்லச் சொல்ல அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

‘தாசையா… என்ன இங்க வந்திருக்கே ? சாமிக்க அடக்கத்துக்கு போகலையா ‘ மீண்டும் ஒரு குரல் தாசையனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.

தாசையன் ஜேம்ஸ் கட்டிய ஆலயத்தின் பின் பக்கமாக அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் நின்றிருந்தார். கல்லறைத் தோட்டத்தின் இடது ஓரமாக நின்ற செம்பருத்திச் செடியின் அருகே அமர்ந்து கைகளால் கல்லறை அளவுக்கு ஒரு சதுரம் வரைந்து கொண்டிருந்தார்.

தாசையன் நிமிர்ந்தார். ‘ஆமா.. இன்னிக்கு ஜேம்ஸ் சாமியாரோட அடக்கம் இல்லையா.. அதான் வந்திருக்கேன் ‘ எதிரே நின்றிருந்த சினேகப்பூ
நெற்றி சுருக்கினாள்.

‘சாமியாரோட அடக்கம் அங்கே சுங்காங்கடையில. அவரை இங்கே அடக்கம் செய்யக் கூடாதுன்னு பங்கு மக்கள் ஏற்கனவே சொல்லியிருந்தாங்களே.. ‘ சினேகப்பூ சொன்னாள்.

‘ம்.. அது நம்ம மக்கள் அவருக்குக் காட்டிய நன்றிக்கடன். அவருடைய உடலை அவங்க எங்கே வேணும்ன்னாலும் அடக்கம் செய்யட்டும். ஆனா அவரு அடக்கம் செய்யப்பட விரும்பிய இடம். இதோ.. நான் வரைஞ்சிருக்கிற இந்த சதுரம் தான்’

சினேகப்பூ புரியாமல் பார்த்தாள்.

நான் சாமியாரை இங்கே அடக்கம் பண்ணிட்டிருக்கேன். அவரோட உயிர் இங்கே தான் உலவிட்டிருக்குன்னு என்னோட உள் உணர்வு சொல்லுது. அவரை நான் மானசீகமா இங்கே அடக்கம் பண்றேன். அவர் விரும்பிய இடத்தில.. அதற்குமேல் சொல்ல முடியாமல் தாசையன் விம்மினார்.

காற்று வேகமாக வீச ஊசியிலை மரங்கள் அடந்த அந்த கல்லறைத் தோட்டம் துயரம் கூட்டியது. மரங்களுக்கிடையே அவர் கட்டிய ஆலயம் மௌனமாய் நின்றிருந்தது