கசப்புப் பதனீர்

palm.jpg 
விஷயம் தெரியுமா உங்களுக்கு ? என்றபடி வந்தாள் செல்லம்மாள்.
செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை. எந்த நிறத்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கிற விஷயம் தான் இது. காலையில் ரேடியோ கேட்பது போல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாக வேண்டும். தினமும் சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும் போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் முக்கியமான பொழுதுபோக்கு.

என்ன சமாச்சாரம் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு ?
கேட்டுக்கொண்டே முழங்கையால் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்த சொர்ணத்துக்கு 45 வயது இருக்கும். இன்னும் கண்ணாடி போட வேண்டி வராத தீர்க்கமான பார்வை. கையில் பதனீர் காய்ச்சுவதற்கான பெரிய தகரப் பாத்திரம். நேற்று பதனீர் காய்ச்சிய பிசுபிசுப்பை சாம்பல் தொட்டு தேங்காய் சவுரி கொண்டு தேய்த்துக்கொண்டிருந்தாள் சொர்ணம்.

எப்படி மனுஷனோட ஆயுசு பொட்டுண்ணு போயிடுதுண்ணு நினைச்சாலே பயமா இருக்கு. நேத்திக்கு வரைக்கும் கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் இன்னிக்கு பொசுக்குண்ணு போயிடறான். காலைல பேசிகிட்டு இருக்கிறவங்க மறுநாள் பாத்தா பேச்சி மூச்சில்லாம கிடக்கிறாங்க. இதெல்லாம் விதி. மனுஷன் எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம், காலம் வரும்போ காலணா கூட எடுக்காம போய்க்க வேண்டியது தான்.

எப்போதுமே செல்லமா இப்படித்தான், சொல்லவேண்டிய விஷயத்தை நேரடியாகச் சொல்வதில்லை, பலமான பீடிகை அது இது என்று ஏதாவது பேசிவிட்டுத் தான் சொல்வாள்.

சரி நீ இப்போ விஷயத்தைச் சொல்லு.. என்ன ஆச்சு ? கேட்டுக்கொண்டே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் சொர்ணம்.

நம்ம தெக்கேத் தோட்டத்து பாலம்மா புருஷன் தங்கப்பன் செத்துப் போயிட்டானாம் பனையில இருந்து விழுந்து…

செல்லம்மா சொல்லி முடிக்கவில்லை, சொர்ணம் திடுக்கிட்டுத் திரும்பினாள்…

எப்போ ?…எப்படியாம் ?

இன்னிக்கு காலைப் பனை ஏறப் போனப்போ தான் நடந்துதான். பனைத்தாவல் சமயத்துல பிடி நழுவிடுச்சுண்ணு சொல்றாங்க. என்ன நடந்துதுண்ணு யாருக்கும் சரியா தெரியல. ஏதோ சத்தம் கேட்டு ஓடிப்போயி பாத்திருக்காங்க. அப்போ தான் பேச்சு மூச்சில்லாம கீழே கிடந்திருக்காரு மனுஷன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மூத்த பையன் பாண்டில பனை ஏறப் போயிருக்கானாம், அவனுக்கு தகவல் சொல்ல போயிருக்காங்க, அவன் வந்ததுக்கு அப்புறம் தான் அடக்கம் இருக்கும்.

சொர்ணத்தின் நெஞ்சுக்குழிக்குள் அம்மி வைத்தது போல் ஒரு பாரம். தங்கப்பனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அந்த மரணம் ஒருவித கிலியை ஏற்படுத்தி விட்டது. காரணம் அவள் புருசன் பொன்னனுக்கும் பனைஏற்றுத் தொழில் என்பது தான்.

அவனும் பனைத் தாவலில் பிரசித்தம். அருகருகே நிற்கும் இரண்டு நெட்டைப்பனைகளை தனித்தனியே ஏறுவதற்குப் பதிலாக ஒரு மரத்தில் ஏறி பூ சீவி கலையம் கட்டியபின், கத்தியை இடுப்பில் கட்டியிருக்கும் பாளையில் போட்டுவிட்டு, ஒருமரத்தின் ஓலை வழியாக நடந்து பக்கத்து மரத்தை அடைந்து விடுவார்கள், இதைத் தான் பனைத்தாவல் என்று சொல்வார்கள். பொன்னன் இதில் பிரசித்தம். பொன்னனுக்கு இப்போது 55 வயதாகிறது. இன்னும் கட்டுக் குலையாத கம்பீரம். பிள்ளை மேல் வைத்திருக்கும் பாசம். மனைவியைக் கடிந்து கொள்ளாத மனசு. இதெல்லாம் தான் நெட்டைப்பனை உசரத்துக்கு பொன்னனை சொர்ணத்தின் மனசுக்குள் நிறுத்தியிருந்தது.

சொர்ணத்தின் திருமண சமயத்தில் , 50 பனை ஒரே மூச்சில் ஏறுவான் பையன், அந்திப்பனை ஏறுவான் என்றெல்லாம் பெருமையாக சொல்லித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் எத்தனை பனைமரம் ஏறுகிறான் என்பதை வைத்துத் தான் புருசனுடைய வீரமே கணக்கிடப் பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் குடும்பங்கள் தான் பனை ஏறும் தொழில் செய்கின்றன.

பொன்னனுக்கு வைராக்கியம். பனைஏற்றுத்தொழிலின் மேல் அவனுக்கு பக்தி இருந்தது. காலையில் நான்குமணிக்கெல்லாம் எழுந்து பனை ஏறக்கிளம்பிவிடுவான். செல்லாயி கையால் பால் கலக்காத ஒரு தேயிலை தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டால் தூக்கமெல்லாம் போய்விடும். ஒரே பையன் தாசப்பன், அவனை நெஞ்சின் மேல் படுக்கவைத்துத் தான் தூங்குவான். அவனை ஒரு வாத்தியாராக்க வேண்டும் என்பதுதான் பொன்னனுடைய ஒரே கனவாக இருக்கிறது. அதற்காக அவனை எந்த வேலையும் செய்ய சொல்வதில்லை. தாசப்பனுக்கும் அந்த உணர்வு இருந்தது. எப்போதும் குடிசைக்கு வெளியே இருக்கும் புளியமரத்தடியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பான்.

இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து சொர்ணத்துக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எப்படியாவது பாழாய்ப்போன இந்த வேலையை நிறுத்தச் சொல்லவேண்டும். எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக பனையேறுவதை மறந்து கொண்டிருக்கிறார்கள், இவருக்கு மட்டும் எதுக்கு இந்த வீம்பு ? விட்டுத் தொலைக்க வேண்டியது தானே ? ஒழைக்கிறதுக்கு உடம்புல தெம்பிருக்கிற வரைக்கும் விறகு வெட்டியாவது பொழைக்கலாம். மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் சொர்ணம்.

இதொன்றும் புதியதில்லை, ஒருமுறை பாதிப் பனைஏறிக்கொண்டிருக்கும் போது பனை ஏறுவதற்காகக் காலில் போட்டுக் கொள்ளும் திளாப்புக் கயிறு அறுந்துபோக பனை மரத்தைக் கட்டிக் கொண்டு வழுக்கி கீழே விழுந்ததில் மார்பு முழுவதும் இரத்தக் காயம். பனைமரத்தின் கூரிய வளையங்கள் ஆழமாக கிழித்திருந்தன. அப்போதே கண்ணீர் தீருமட்டும் அழுதுப் பார்த்தாள். மனுசன் கேட்பதாக இல்லை.

தாசப்பனும் ஓரிருமுறை சொல்லி இருக்கிறான், நான் வேணும்னா வேலைக்குப் போறேன்பா.. நீ இந்த வயசு காலத்துல கஷ்டப்பட வேண்டாம் என்று. அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே , ” நீ வாத்தியானாகிற நாளைக்கு அப்புறம் நான் பனையேற மாட்டேண்டா”… அதுவரைக்கும் நீ படி, நான் தொழில் பாக்கறேன். அவ்வளவும் சொல்லிவிட்டு போய்விடுவார். அதற்குமேல் பேச்சை வளர்த்துவதும் அவருக்குப் பிடிப்பதில்லை.

சொர்ணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்திப்பனை ஏற மாலையில் 5 மணிக்கு தான் போவார்கள், எப்போதாவது கொஞ்சநேரம் பிந்திவிட்டால் என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று ஈரல் குலை நடுங்கும். வாசலில் மண்ணெண்ணை விளக்கேற்றி பார்த்திருப்பாள். அப்படி பொழுது தப்பி பொன்னன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கள் வாசனையோடு தான் வருவான். சீவி விட்ட பனம் பூவோடு சேர்ந்து கட்டிவைக்கும் கலையத்தில் சுண்ணாம்பு தேய்த்துவைத்தால் சேர்வது பதனீராகும், இல்லையேல் அது கள்ளாக மாறிவிடும். கள் குடித்துவிட்டு பொன்னன் எப்போதுமே பனையேறுவதில்லை, கடைசிப்பனையில் அவ்வப்போது கள் பானை வைப்பதுண்டு, எல்லா பனையும் ஏறி முடித்தபின் கடைசியாக அந்தபனையில் ஏறி கள் இறக்கி அவ்வப்போது குடிப்பான்.

செல்லாயியின் வார்த்தைகள் தான் சொர்ணத்தை மிகவும் பாதித்ததென்றில்லை, அந்த கவலை அவளுக்கு எபோதுமே இருந்து வந்ததால், இன்றைய நிகழ்ச்சி அவளை மிகவும் பாதித்தது. பதனீர் காய்ச்சி அதை தேங்காயின் கண் பாகம் இருக்கின்ற சிரட்டைகளில் இலைவைத்து அதில் ஊற்றி , கருப்புக்கட்டி செய்துகொண்டிருந்தபோது பொன்னன் வரும் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள் … அவள் கண்கள் கலங்கியிருந்தன.
ஏன் அப்படிப் பார்க்கறே ? நேரத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறேனே ? கருப்புக்கட்டி வியாபாரமெல்லாம் அடிமாட்டு விலைக்குப் போயிடுச்சாம் அதனால இந்த வாரம் சந்தைக்கு போகவேண்டாம். அடுத்தவாரம் பாத்துக்கலாம், பேசிக்கொண்டே பொன்னன் இடுப்பிலிருந்த பாளையையும் தோளிலிருந்த திளாப்பையும் கழற்றி கூரையில் தொங்கவிட்டான்.

விஷயம் கேள்விப்பட்டீங்களா ? தங்கப்பன்…… சொர்ணத்தால் முழுதாக சொல்ல முடியவில்லை.
ம்.. கேள்விப்பட்டேன். என்ன ஆச்சுண்ணு தெரியல. அவன் ரொம்ப நாளா கட்டிப் புடிச்சு ஏறுற மரம் அவனை கீழே விட்டுடுச்சு. மெலிதான சோகம் படர விட்டுக் கொண்டே சொன்னான் பொன்னன்.

நான் சொல்றதை கேக்கறீங்களா ? நாளையில இருந்து பனை ஏற போக வேண்டாமே ?
நம்ம நினைச்சா வேற வேலையா பாக்க முடியாது ? எத்தனை பேரு ஏமான் சாரோட வயலில வேலை பாக்கறாங்க ? அவரோட மரக்கடையில விறகு வெட்டறாங்க ? சொல்லிவிட்டு பார்த்தாள் சொர்ணம்.

அதெல்லாம் எதுக்கு சொர்ணம். எத்தனை வருஷமா இந்த வேலை பாக்கறேன்.
எல்லா தொழில்லயும் கஷ்டம் இருக்கு. ஒரு டிரைவர் விபத்துல செத்து போயிட்டா எல்லாரும் வண்டி ஓட்டுற தொழிலை விட்டுடுவாங்களா ?
போன மாசம் ஆத்துச் சுழில சிக்கி ஒரு சின்னப் பையன் கூட செத்து போயிட்டான். பாவம். விதி முடிஞ்சுட்டா போய் சேந்துட வேண்டியது தான். அதுக்காக பயந்துட்டு தொழிலுக்கு போகாம இருக்கலாமா சொர்ணம் ? நீ கவலைப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது.

எனக்கு பூவோடயும் பொட்டோ டயும் போய்ச்சேரணும், அதான் ஆசை. இந்த கஷ்டத்தை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியாது சாமி… என் தலையில் அவன் என்ன எழுதி இருக்கானோ ? சமையல் கட்டில் சொர்ணம் புலம்பிக்கொண்டிருந்தாள்…

முற்றத்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் வந்து உட்கார்ந்த பொன்னனுக்கு தொண்டை அடைத்தது. பாவம் தங்கப்பன், எத்தனை வருஷமாய் பனை ஏறுகிறான். சின்னவயதிலிருந்தே என் கூட பனையேறும் தொழில் தொடர்வது அவன் மட்டும் தான். காலையில் முதல் பனையில் ஏறியவுடனே சத்தம் போட்டு பேசுவான் பக்கத்து பனையிலிருக்கும் என்னைப் பார்த்து.. ஒரு தோழனாய், தொழில் செய்யுமிடத்தில் ஒரு பேச்சுத் துணையாய் எல்லாமாய் இருந்தவன் தான் தங்கப்பன். அவன் மரணம் இதுவரை சொல்லாத ஏதோ ஒரு வலியையும், சிறு பயத்தையும் பொன்னப்பனின் மனசில் விதைத்தது.

“அவனுக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது”. காய்ப்பேறிப் போன கைகளை ஒருமுறை பிசைந்துவிட்டு காதுமடலில் சொருகி வைத்திருந்த பீடி எடுத்து பற்ற வைத்து விட்டு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் பொன்னன். பையனை எப்படியும் வாத்தியானாக்க வேண்டும். அதோடு இந்த செத்துப்பிழைக்கும் பனையேற்றுத் தொழிலையும் விட்டுவிடவேண்டும்.
இதுவரை இதமாக இருந்த அந்த கயிற்றுக் கட்டில் முதல் முறையாக முதுகைக் குத்துவதாகத் தோன்றியது பொன்னனுக்கு.

விபத்து

accident.jpg
மதியம் மணி ஒன்று. அந்த அமெரிக்கச் சாலை தன் மேல் போர்த்தப் பட்டிருந்த பனி ஆடையை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தண்ணீராய்க் கழற்ற ஆரம்பித்திருந்தது. வெயில் அடித்தாலும் விறைக்க வைக்கும் குளிர் காற்றில் நிரம்பியிருக்க, வாகனங்கள் மணிக்கு நூற்றுச் சொச்சம் கிலோமீட்டர்கள் என்னும் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன. தன்னுடைய டயோட்டா காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விமல். அருகிலேயே விக்னேஷ். பின் இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும், ஹேமாவும்.

கார் உள்ளுக்குள் கதகதப்பாய் வெப்பக் காற்றை நிறைத்துக் கொண்டு மணிக்கு நூற்றுப் பத்து கிலோமீட்டர் எனும் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனந்தியின் மனசு முழுதும் அந்த கதை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன. பொதுவாகவே ஒரு கதை எழுத பத்து நாட்களாவது எடுத்துக் கொள்வாள் ஆனந்தி. தன்னுடைய கதைகள் சாதாரண விஷயங்களைச் சொன்னாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதே அவளுடைய பிடிவாதக் கொள்கை.

இப்படித்தான், சேரி வாழ் குடும்பம் ஒன்று ஒரு மழைநாள் இரவில் படும் அவஸ்தையை எழுதுவதற்காக ஒரு மழைநாள் இரவு முழுதும் சேரியிலேயே படுத்துவிட்டு வந்தாள். இரயில்வே பிளார்பாரக் கடைவைத்திருப்பவனைப் பற்றி எழுத வேண்டுமென்று ஒரு நாள் பிளாட்பாரத்தில் கடை விரித்தாள். ஆனால் அந்தக் கதைகள் எங்கும் பிரசுரமாகவில்லை. அவளுடைய கதைகள் பல அங்கீகரிக்கப்பட்டதில்லை. அதற்காய் ஆனந்தி வருத்தப்படுவதுமில்லை. “நான் செடி மாதிரி. பூக்களை பூப்பிப்பது மட்டுமே எனக்குப் பிரியமான பணி. யாரும் பறித்துக் கொள்ளவில்லையே எனும் கவலையோ, யாரும் பாராட்டவில்லையே எனும் பதட்டமோ எனக்குக் கிடையாது” என்பாள்.

“பாட்டுச் சத்தத்தை கொஞ்சம் குறைத்து வை விமல் . பின் சீட்டில் உட்கார்ந்தால் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல இருக்கிறது” என்றபடியே ஆனந்தி காரின் ஜன்னலைத் திறந்தாள். காரில் ஏதோ ஒரு ஸ்பானிஸ் பாடல் அலறிக்கொண்டிருந்தது. குளிர் காற்று வேக வேகமாக முகத்தில் மோதியது. உள்ளே இருந்த வெப்பக் காற்றை எல்லாம் வினாடி நேரத்தில் விழுங்கிவிட்டு உள்ளுக்குள் குளிர் நிறைத்தது. கொஞ்ச நேரம் மூச்சை அடைக்கும் அந்த வேகக் காற்றில் சுகம் பிடித்தாள் ஆனந்தி. அதிக நேரம் ஜன்னலைத் திறந்து வைக்க அந்த பனிக்குளிர் இடம் தராததால் மீண்டும் மூடினாள். அவள் மனம் முழுதும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றிய சிந்தனைகளே நிறைந்திருந்தன.

ஒரு காதல் கதை. காதலுக்கு காதலன் வீட்டில் எதிர்ப்பு. ஆனால் குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை. காதலனோ பிடிவாதமாய் காதலியைத் தான் மணம் செய்வேன் என்கிறான்.தீறுதியில் காதலன் வீட்டா ஒத்துக் கொள்கிறார்கள். காதலி அமெரிக்கா செல்கிறாள். ஒரு விபத்து நடக்கிறது. விபத்தில் காதலி ஊனமாகிறாள். காதலைத் தடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கும் காதலனின் பெற்றோருக்கு அந்த விபத்து ஒரு காரணமாகிறது. இது தான் கதை. இதில் காதலியாக ஆனந்தி. காதலனாக கிரி.

கிரியை நினைக்கும் போதெல்லாம் ஆனந்திக்குக் கவிதை எழுதத் தோன்றும். ஆனாலும் அவள் எழுதுவதில்லை. ” கவிதை எழுதினால் அது சாதாரணக் காதல், நூற்றுக்கு தொன்னூற்றொன்பது பேர் காதலித்தால் கவிதை தானே எழுதுகிறார்கள் இல்லையா கிரி ?”  என்பாள். ஆனால் கிரி அதற்கு நேரெதிர். ஒவ்வோர் சந்திப்புக்கும் ஒவ்வொரு கவிதை எழுதுவான். கிரியும் ஆனந்தியைப் போல ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். யார் மீதும் வராத காதல் ஆனந்தி மீது வந்ததற்கான வலுவான காரணத்தை கிரியாலும், காதலாலும் சொல்ல முடியவில்லை !. அதை விசாரிக்க இருவரும் விசாரணைக் கமிஷன் அமைத்துக் கொண்டதும் இல்லை. அது தானே காதல் ?

ஆனந்தி அமெரிக்கா வந்த அந்த நள்ளிரவில் விமான நிலையத்தில் பெருமையும், கண்ணீரும், வலியும் கலந்த பார்வை ஒன்றை கிரியின் கண்களில் கண்டபோது ஆனந்திக்கு இந்த மூன்று மாதப் பயணம் முள் காடாய் உறுத்தியது. என்ன செய்வது ? இப்போது போக மாட்டேன் என்றால், பிறகு எந்த வாய்ப்பும் தரமாட்டார்களாம் அலுவலகத்தில். எப்படியும் இந்த மூன்று மாதம் பொறுத்துத் தான் ஆக வேண்டும். அதற்குப் பின் திருமணம். கிரியின் பெற்றோர் மீண்டும் முருங்கை மரம் ஏறும் முன் அது நடக்க வேண்டும். என்னதான் கிரியுடன் சேர்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்ள முடியும் என்றாலும், கூட்டுக் குடும்ப சூழலில் நடக்கும் திருமண வாழ்க்கையே வேண்டும் என்னும் பிடிவாதக் குணம் அவளுக்கு.

ஆனந்தியின் கதைகளின் முதல் வாசகன் கிரி தான். கிரியின் கவிதைகளின் முதல் ரசிகை அவள்.
” என்ன ஆனந்தி எந்தக் கதைகளை எழுதினாலும், அந்த களத்துக்குள்ளே போய் தான் எழுதறே… முத்தம் பற்றி ஒரு கதை எழுதேன் .. நான் களம் அமைத்துத் தரேன்”… அவ்வப்போது சீண்டுவான்.
“ஆமா… இப்போ முத்தம் பற்றி எழுது முத்தத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லுவே… அப்புறம் குழந்தை பற்றி எழுதுண்ணு சொல்லுவே…” சொல்லி முடிக்கும் முன் வெட்கப் படுவாள் ஆனந்தி.

” ஏன் ? முத்தம் பற்றி எழுதுறது என்ன தப்பு ஆனந்தி ? பிழையா எழுதினாலும் இனிக்கிற ஒரே கவிதை முத்தம் தான் தெரியுமா ? ” – கண் சிமிட்டுவான் கிரி.
“ஆமா.. ஆமா… ஏதாவது பேசியே சமாளிச்சுடு. நான் முத்தம் பற்றி எழுதினாலும்… குழந்தையின் முத்தம் பற்றி தான் எழுதுவேன்”… சிரிப்பாள் ஆனந்தி.
” நம்ம குழந்தையா ? ” – மீண்டும் சிணுங்கலாய் அபினயம் காட்டிச் சீண்டுவான் கிரி.

நினைவுளில் மூழ்கிப் போய் மெலிதாய் புன்னகைத்தாள் ஆனந்தி. கதைக்கு கதாநாயகன் ரெடி, கதாநாயகி ரெடி, களம் ரெடி.. இனிமேல் அந்த விபத்து தான் பாக்கி. இதுவரை எந்த விபத்தையும் நேரடியாய் பார்த்ததில்லை ஆனந்தி. கதைக்கு அந்த விபத்து தான் முக்கியம் என்பதால் கதையின் அந்தப் பாகத்தை ஜீவனோடு எழுதவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசனையில் மூழ்கினாள் ஆனந்தி.

“விமல் கொஞ்சம் மெதுவா போயேன்… ரோடெல்லாம் ஒரே ஈரமா இருக்கு…” ஹேமா மூன்றாவது முறையாகச் சொன்னாள்.
” வேணும்ன்னா சீட் பெல்ட் போட்டுக்கோ ஹேமா… இங்கே நான் நாலு வருஷமா கார் ஓட்டறேன். ஒரு சின்ன துரும்புக்கு கூட சேதம் வருத்தியதில்லை. கவலைப் படாதே”.. விமல் சிரித்தான்.

“பயம்ன்னு இல்லே… ரோடு ஈரமா இருக்கிறதனால சொன்னேன். ” ஹேமா முனகினாள்.
“ஆமா, நாம எந்த எக்சிட் எடுக்கணும் ?” விமல் விக்னேஷ் பக்கமாய் திரும்பிக் கேட்டான்.

அமெரிக்காவில் பிரீவே எனப்படும் சாலைகளில் நிறுத்தங்கள் கிடையாது. வேகம் அதிகபட்சம் நூற்றுப் பத்து கிலோமீட்டர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் மைல் க்கு ஒரு முறை சொல்லும். ஆனாலும் வாகனங்கள் நூற்று முப்பது, நூற்று நாற்பது என்று மதிக்காமல் ஓடும். குறைந்தபட்ச வேகமே எப்படியும் எண்பது, தொண்ணூறு கிலோ மீட்டர்கள் இருக்கும். வேகம் அளவுக்கு அதிகமாகிப் போனால் ஆங்காங்கே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் காத்திருக்கும் போலீசாரிடம் கப்பம் கட்ட வேண்டியது தான். இங்கே கப்பம் கட்டும் பணத்தில் ஊரில் நல்லதாய் இரண்டு டி.வி.எஸ் வாங்காலாம்.

இந்த பிரிவே க்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று லேன் வசதியோடு, ஒரு வழிப்பாதையாக இருக்கும். அதிக பட்ச வேகக் காரர்கள் இடப்பக்கமும், வேகம் குறைவாய் ஓட்டுபவர்கள் வலப்பக்கமும் செல்ல வேண்டும் என்பது சட்டம். எந்த ஊருக்குப் போகவேண்டுமென்றாலும், இந்த பிரீ வே யிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு ரோட்டை பிடித்தாக வேண்டும். ஒவ்வொரு பிரிந்து செல்லும் சாலைக்கும் ஒவ்வொரு எண் இருக்கும். அந்த எண் தெரியாவிட்டால் திக்குத் தெரியாத காட்டில் அலைய வேண்டியது தான். சாலை ஓரங்களில் ஆள் நடமாட்டம் அறவே இருக்காது.

“எந்த எக்சிட் எடுக்கவேண்டும்” என்ற விமலின் கேள்விக்கு பதில் சொல்ல விக்னேஷ் வரைபடத்தை புரட்டினான்.
” சீக்கிரம் பாருப்பா…. நாம முன்னூற்று ஒன்பதிலே இருக்கிறோம்…” விமல் பாடலில் சத்தத்தை குறைத்துக் கொண்டே சொன்னான்.
விக்னேஷ் வரைபடத்தின் மீது விரலை ஓட்டியபடியே….. ” நாம் முன்னூற்றுப் பத்தில் நுழைய வேண்டும் ” என்பதற்குள் கார் முன்னூற்றுப் பத்தை வெகுவாக நெருங்கியிருந்தது.

சட்டென்று காரை வலப்புறமாய் திருப்பி வெளியேறும் சாலையை அடைவதற்குள் காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போக, சாலையின் மேலும், சாலை ஓரங்களிலும் கிடந்த பனி காரின் டயரை இறுக்கமாய் பற்றிக் கொள்ள மறுத்து கைகளைவிரிக்க, கார் அந்த பிரீ வேயில் ஒரு சுற்று சுற்றி எதிர் பக்கமாய் திரும்பி நிராயுதபானியாய் நின்றது. காரை நோக்கி இராட்சச வேகத்தில் வண்டிகள் பாய்ந்து வந்தன.

நிலமையின் வீரியம் காரிலிருப்பவர்களுக்குப் புரிந்து அலற ஆரம்பிப்பதற்குள் அசுர வேகக் கார் ஒன்று வேகமாய் மோதி இவர்கள் காரை இடது ஓரத்துக்குள் தள்ளியது. அங்கிருந்து இன்னொரு கார் மோத, வலப்பக்கமாய் உருண்டது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன் வாகனம் தன் அத்தனை பக்கங்களிலும் மூர்க்கத்தனமான மோதல்களைப் பெற்று ஓரமாய் தூக்கி வீசப்பட்டது.

பக்கத்துக் காரில் இருந்தவர்கள் போன் செய்திருக்க வேண்டும். விபத்து நடத்து மூன்று நிமிடங்கள் முழுதாய் முடியும் முன் அந்த இடம் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு காவல்துறை வண்டிகளும், ஆம்புலன்ஸ்களுமாய் நிறைந்திருந்தன.

*

ஆனந்தி கண்களைத் திறந்தாள். சுற்றிலும் மங்கலாய் உருவங்கள். விமல் தான் முதலில் கண்களில் தட்டுப் பட்டான்.
” ஆனந்தி … “… மெதுவாக அழைத்துக் கொண்டே விமல் ஆனந்தியை நெருங்கினான்.
” மத்தவங்க எல்லாம்…. எப்படி இருக்காங்க… ?” ஆனந்தியின் தொண்டையில் வார்த்தைகள் பலவீனமாய் வெளிவந்தன.
தான் எத்தனை நாளாய் மயக்கத்தில் இருக்கிறேன் என்ற கேள்வி ஆனந்தியின் உள்ளுக்குள் மெல்ல உருண்டது.

” யாருக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல ஆனந்தி. ஐயாம் வெரி சாரி…   இப்படியெல்லாம் ஆகும்ன்னு நினைச்சுக் கூட பாக்கல. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ” விமலின் கண்கள் கலங்கின.
” அதெல்லாம் ஒண்ணுமில்லை விமல் யாருக்கும் எதுவும் ஆகல இல்லே…” இன்னும் வார்த்தைகள் பலம் பெறாமல் தான் வந்தன.
” ஹேமா எங்கே ? “என்றபடியே வலது கையைத் தூக்கிய ஆனந்தி ஏகமாய் அதிர்ந்தாள். அவளுடைய கை முழங்கையோடு முடிந்து போயிருந்தது.
அதிர்ச்சியின் உச்சம் உள்ளத்தைத் தாக்க …. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருள மீண்டும் மயக்கத்துக்குள் போனாள் ஆனந்தி.

*

“அப்பா…”- கிரி அப்பாவை மெதுவாக அழைத்தான்.
அப்பா திரும்பினார்.
” ஆனந்திக்கு விபத்து நடந்திடுச்சுப்பா…. அதுல.. ஆனந்தியோட கை…….” அதற்கு மேல் பேச முடியாமல் கிரியின் கண்கள் கலங்கின.

ஒரு நிமிடம் அமைதியாய் அமர்ந்திருந்த அப்பா பேச ஆரம்பித்தார்,
” கேள்விப் பட்டேன்….  எல்லாம் கேள்விப் பட்டேன். என்ன பண்ன முடியும் ? எல்லாம் நடக்கணும்னு இருக்கு…. கல்யாணத்துக்கு அப்புறம் இது நடந்திருந்தா நான் என்ன செய்திருக்க முடியும். இந்த நேரத்துல இதைக் காரணம் காட்டி காதலை முறிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மனசாட்சி இல்லாதவன் இல்லை… நிச்சயித்தபடியே திருமணம் நடக்கும். கவலைப்படாதே. அவளுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்லு”…
சொல்லிவிட்டு கண்மூடிய அப்பாவை ஆச்சரியமாய்ப் பார்த்தான் கிரி.

” இல்லேப்பா. ஒரு கை இல்லாத பொண்ணு கூட வாழறது பிராக்டிக்கலா எனக்கு சரியாப் படல. நீங்களும் அதையே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க நேர்மாறா சொல்லிட்டீங்க. காதலிச்சப்போ வேண்டாம்ன்னு சொன்னீங்க, நான் கேக்கல. இப்போ வேணும்ன்னு சொல்றீங்க… அதையும் என்னால கேக்க முடியல” . என்னை மன்னிச்சுடுங்கப்பா. என்ற மகனை அதிர்ச்சியாய்ப் பார்த்தார் அப்பா.

முடிவு தெரியாத நிலையில் ஆனந்தி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். அவளுடைய கதை  ஒரு விபத்தைச் சந்தித்த அதிர்ச்சியில் முடிவுறாமல் கிடந்தது.

*

பாசம் இலவசம்

 

‘இன்னிக்கும் கடுதாசி வரல பெரியவரே…’ சொல்லிவிட்டுக் கடந்து போன தபால்க்காரனையே பார்த்துக்கொண்டிருந்தார் வேதாச்சலம். வேதாச்சலத்துக்கு வயது அறுபத்து ஐந்து இருக்கும். பார்வை இப்போதெல்லாம் அவருக்கு சரியாகத் தெரிவதில்லை. ஒரு ஆரம்பப்பாடசாலையில் வாத்தியார் வேலை செய்து ஐம்பத்து எட்டு வருடங்களை நகர்த்தியாகி விட்டது. காலில் அவ்வப்போது வந்து போகும் வீக்கம். முகத்தில் சோர்வின் தழும்புகள். முதுமை ஒரு கொடுமை என்றால் முதுமையில் தனிமை அதை விட கொடுமையானது…  இளமையில் வறுமை யும் முதுமையில் தனிமையும் இரண்டும் இல்லாத வாழ்வு, பலருக்கு அது பகல்க்கனவு.

ஏங்க … இன்னிக்கும் பையனோட லெட்டர் வரலையா ? சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மாலதி. இல்லே… என்னிக்கு தான் லெட்டர் எல்லாம் ஒழுங்கா வந்து சேர்ந்திருக்கு. எதுவுமே சரியான நேரத்துக்கு வரது இல்லே. அது டவுண் பஸ் ஆனாலும் சரி, கடுதாசி ஆனாலும் சரி, ஏன் இந்த பாழாப்போன சாவு கூட சரியான நேரத்துக்கு வரதில்லே… சொல்லி முடித்த வேதாச்சலத்தின் கண்கள் நனைந்திருந்தன. மெதுவாக எழுந்து வீட்டின் கொல்லைப்பக்கமாக நடக்கத் துவங்கினார்.

அது ஒரு ஓட்டு வீடு, பின்பக்கம் நீளமான கொல்லை, வீட்டின் கிழக்குப் பக்கத்தில் கன்னிமூலை பார்த்துக் கட்டிவைத்த கிணறு… பின் பக்கம் அரை ஏக்கர் நிலத்தில் மரச்சீனிக்கிழங்கு பயிரிடப்பட்டு அதற்கு வேலியாக பலா மரங்கள் நடப்பட்டிருந்தன. எங்கும் ஒரு நீண்ட அமைதி.

வேதாச்சலம் ஒன்றும் தனி மனிதர் இல்லை, அவருக்கு ஏழு பிள்ளைகள். அவர் காலத்திலெல்லாம் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம். பக்கத்து வீட்டு பொன்னம்மாவுக்கு 2 புருஷனும் 16 பிள்ளைகளும் என்று சொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பார்கள், இல்லையேல் நம்ப மாட்டார்கள். ஆனால் அது தான் நிஜம்.
அந்த பதினாறு பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளுமாக அந்த கிராமத்தில் எல்லா மூலைகளிலும் அவர்களுக்கு உறவினர் பட்டாளம் தான். கடந்த ஆண்டு தான் பொன்னம்மா செத்துப்போனாள். நூறு வயது வரை இருப்பாள் என்று எல்லோராலும் கணிக்கப்பட்டு அதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் போதே இறந்து போய்விட்டாள் பொன்னம்மா. ஆனால் அதில் என்ன வருத்தம் என்றால், சாகும்போது அவளுடைய பிள்ளைகளில் ஒருவர் கூட அருகில் இல்லை. கடைசி காலத்தில் பிள்ளைகள் அருகில் இல்லாமல் இறக்க நேரிடுவது ஒரு மிகப்பெரிய வலி என்று தோன்றியது வேதாச்சலத்துக்கு.

வேதாச்சலத்துக்கு நான்கு பெண் பிள்ளைகள். எல்லோரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போய் விட்டார்கள். எப்போதேனும் குழந்தை களோடு வந்து போவார்கள். அப்போதெல்லாம் வேதாச்சலம் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். குழந்தைகளோடு சிரித்து, விளையாடி இனிப்புகள் கொடுத்து… அப்படி வேதாச்சலத்தை பார்ப்பதே மாலதிக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
‘இது தாண்டி, இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு… எல்லா பிள்ளைங்களையும் கரையேத்திட்டேன்…
பசங்களை படிக்க வெச்சுட்டேன்… ஒரு பையனை அமெரிக்கா வுக்கே அனுப்பிட்டேன்.. இந்த உசுரு இப்போ போனாகூட கவலையில்லே…’ என்று அப்போதெல்லாம் மனைவியிடம் சொல்வார். ஆனால் குழந்தைகள் விடுப்பு முடித்து போன பிறகு அவரை மீண்டும் அந்த தனிமை சூழ்ந்து கொள்ளும்.

எப்போதுமே தனியாக இருப்பது வேதாச்சலத்துக்குப் பிடிப்பதில்லை. கோயிலில் தேவசம் போர்டில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. சமையச் சொற்பொழிவுகளுக்கு வேதாச்சலத்தை விட்டால் யாரும் இல்லை என்கின்ற நிலமை. அதிலும் இதிகாச கதைகளை வாழ்வியல் நிகழ்வுகளோடு கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு அவரை விட்டால் ஆளில்லை. ” செய்நன்றியில் சிறந்தது கர்ணனா..கும்ப கர்ணனா” என்னும் தலைப்பில் அவர் பேசிய சொற்பொழிவிற்காக அவருக்கு அந்த சாஸ்தான் கோயிலில் பாராட்டுப் பத்திரமே வாசித்தார்கள். ஆனால்
இப்போது நிலமையே வேறு…. தொண்டை கட்டிப்போன குரலுடன், நடுங்கும் தொனியில் தான் வார்த்தைகளே வரும். போதாக்குறைக்கு சிறு நீரகக் கோளாறு வேறு… அமெரிக்காவிலிருக்கும் மகனிடமிருந்து கடிதம் வந்து ரொம்ப நாட்களாகிறது. வீட்டிற்கு ஒரு போன் வைக்கலாம் என்றால் இந்த வயல்க்காட்டை எல்லாம் தாண்டி கம்பிகள் இழுத்து வருவதற்கு நிறைய நாட்களாகுமாம். ஏதேதோ எண்ணங்களோடு அந்த புளிய மரத்தின் நிழலில் உட்கார்ந்தார் வேதாச்சலம். அந்த புளியமரம், ஒருகாலத்தில் தன்னுடைய பிள்ளைகள் ஊஞ்சல் ஆடி ஆடி விளையாடிய மரம். இப்போது அதுவும் தனிமை தின்றுகொண்டிருந்தது. கிளைகளில் எப்போதாவது வந்து தங்கிப்போகும் காகத்தைத் தவிர எதுவும் இல்லை. முன்பெல்லாம் அதன் கிளைகளில் வெளவால்களாய்த் தொங்கி விளையாடுவார்கள் வேதாச்சலத்தின் மகன்கள். இப்போது அவர்களும் வேலை வேலை என்று வெளியூர் போய் செட்டிலாகி விட்டார்கள்.

வறுமையில் பிறந்து கடின உழைப்பால் நடுத்தர நிலமைக்கு வந்தவர்தான் வேதாச்சலம். தன் பிள்ளைகளாவது வறுமையில் விழக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். நன்றாகப் படிக்க வைத்தார். இப்போது பிள்ளைகள் அவர்களுக்கான பாதையில் நடக்கத்துவங்கிய போது அவருக்கு கஷ்டமாக இருக்கிறது.

‘ வந்து சாப்பிடுங்க .. என்ன தவம் செய்யறீங்களா ?’ மாலதியில் குரல் பின்னாலிருந்து எழ திரும்பிப்பார்த்தார்.
இல்லடி… நம்ம பையன் கிட்டே இருந்து ஒரு கடுதாசி வந்து எவ்வளவு நாளாச்சு. நாம என்ன கேக்கறோம் ? ஒரு நாலு வரிக் கடுதாசி, அவ்ளோ தானே.. பிள்ளைங்களுக்கு ஏன் இதெல்லாம் புரியாம போச்சு ?
பேசாம நம்ம வயலில விவசாயம் பாக்க பிள்ளைங்களைப் பழக்கி இருக்கலாம்.. காலம் பூரா பாத்துட்டாவது இருந்திருக்கலாம். இப்ப பாரு ஐம்பத்தெட்டு வருஷம் நானும் நீயும் வேலை பாத்தோம்… அப்போ நாம வெளியே பிள்ளைங்க வீட்டில. இப்போ பாரு நமக்கு வயசாயிடுச்சு , ரிட்டயர்ட் ஆயிட்டோ ம்… இப்போ பிள்ளைங்க எல்லாம் வெளியே இருக்காங்க. நம்ம பிள்ளைங்க கூட நாம சரியா, சந்தோஷமா இருக்க முடியல. இப்போ யாராவது பக்கத்துல இருக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் தான். ஒரு கடுதாசி போடக்கூட பசங்களுக்கு நேரம் இல்லை. சொல்லிவிட்டு வெறுமையாய்ச் சிரித்தார் வேதாச்சலம்.

அதையெல்லாம் விட்டுடுங்க… பசங்க நல்லா இருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க . அது போதாதா நமக்கு ?
வாங்க இப்போ செஞ்சு வெச்சதெல்லாம் ஆறிடப்போகுது. சும்மா எதையாவது நினைச்சு வருந்தாதீங்க. லெட்டர் வரும், கண்டிப்பா நாளைக்கு வரும் பாருங்களேன். என் மனசு சொல்லுது. சொல்லிவிட்டு நகர்ந்தாள் மாலதி.

பகல் முழுவதும் அளவுக்கு அதிகமாகவே சிந்தனைகள் வந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன.
இரவும் கூட வேதாச்சலத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. மனசின் மேல் மொத்தப்பாரமும் விழுந்து கிடந்தது.
முன்பெல்லாம் நிறைய முற்போக்குக் கருத்துக்கள் பேசுவார். இப்போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசம் கேட்காமல் எழும்புவதில்லை . பகவத் கீதை படிக்காமல் தூங்கப் போவதில்லை. முதுமை மனிதனை மாற்றி விடுகிறது.
தோள்களில் வலு இருந்தபோதெல்லாம், தன்னை மட்டுமே நம்பிக் கிடந்த மனசு, முதுமை நெருங்க நெருங்க இன்னொரு தோள் தேடுகிறது. இதயம் வெறும் இரத்தத்தின் சுத்தீகரிப்பாலை என்றெல்லாம் பேசி யிருக்கிறார். இப்போது ஏதோ ஒன்று இதயத்தையே பாரமாக்குவதாய் உணர்ந்தார். என்னோட அப்பா கூட இப்படித்தான் நினைச்சிருப்பாரோ ? அவரும் வயசான நாட்களில் கயிற்றுக்கட்டிலில் கிடந்து இதெல்லாம் தான் சிந்தித்திருப்பாரோ ? அப்போதெல்லாம் என் கடிதம் காணாமல் அப்பாவின் மனசு கூட இப்படித் தான் அழுதிருக்குமா ? எப்போதேனும் மணியார்டர் அனுப்பும் போது கூட நான்கு வரிக்கடிதம் அனுப்புவதில்லை. அதெல்லாம் ஒரு மிகப்பெரிய வேலையாய்த் தோன்றியது அப்போது. வேதாச்சலத்துக்கு நினைவுகள் முண்டியடித்தன. இப்போதுதான் ஒரு தந்தையின் பாசம் புரிகிறது. இப்போது அப்பா ஒரு முறை முன்னால் வந்தால் கால்களைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவருக்கு. ஏதேதோ நினைவுகளுடன் தூங்கிப்போனார் வேதாச்சலம். அந்த ஒற்றை ஆந்தை மாமரக்கிளையில் இருந்து கத்தத்துவங்கியது.

“கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா பிரவர்த்ததே…”.. டேப் ரிக்கார்டர் மெலிதாச் சுழல, வெளியே விடியத் துவங்கியிருந்தது.

‘என்னங்க டீ போடவா ?’ – மெதுவாய்க்கேட்டாள் மாலதி.
சத்தமில்லாமல் படுத்துக் கிடந்தார் வேதாச்சலம்.

என்னங்க… தூங்கறீங்களா முழிச்சுக்கிடீங்களா ? மாலதி வேதாச்சலத்தின் தோளைத் தொட்டாள்.
‘ம்ம்ம்… டீ போடு…சரியான தூக்கமே இல்ல… கெட்ட கெட்ட கனவா வருது….’ சொல்லி விட்டு எழும்பி உட்கார்ந்தார் வேதாச்சலம்.
சரி… எழும்பி பல் தேச்சுட்டு வாங்க… இன்னிக்கு கோகுலாஷ்டமி, கோயிலுக்கு போயிட்டு வரலாம்… மாலதி சொல்லிக்கொண்டே சமையலறை நோக்கி நடந்தாள்.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.
வேதாச்சலம் வழக்கம் போல சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினார். எவ்வளவு நேரம் இருந்திருப்பார் என்று தெரியவில்லை.
‘ சார் போஸ்ட்’ – என்ற போஸ்ட் மேனின் குரலில் திடுக்கிட்டு விழித்தார். மனசுக்குள் திடீரென்று மழையடித்ததாய் ஒரு குளிர்ச்சி.
கண்களை அவசர அவசரமாய்த் திறக்க, வெளியே யாருமே இல்லை…. மாலதி தான் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
‘என்ன பகலிலேயே  கனவா ? எழும்பி குளிச்சிட்டு வாங்க.. கோயிலுக்கு போகலாம்… ‘ மாலதியின் குரலால் மீண்டும் ஏமாற்றம் தொற்றியது அவருக்கு. சாய்வு நாற்காலியில் மீண்டும் படுத்தார்…

‘ சார் கடுதாசி வந்திருக்கு ‘ – மீண்டும் அதே குரல். பிரமை பிடிவாதமாய்த் தொடர்கிறதா ? யோசனையுடன் மெதுவாய் கண்கள் திறந்தார்.
என்ன ஆச்சரியம் .. !!! தபால்க்காரர் தான் நின்று கொண்டிருந்தார். அவசர அவசரமாய் எழுந்தார் வேதாச்சலம்.
‘சார்… கடுதாசி வந்திருக்கு சார். நீங்களும் டெய்லி கேப்பீங்க, நானும் இல்லே இல்லே ன்னு சொல்லுவேன் இன்னிக்கு என்னடாண்ணா நிஜமாவே கடுதாசி சார். அதுவும் அமெரிக்கால இருக்கிற உங்க பையன் கிட்டே இருந்து’, சொல்லி விட்டு ஒரு கவரை நீட்டினார்.
சத்தம் கேட்டு மாலதி திண்ணைக்கு விரைந்தாள். வேதாச்சலம் பரபரப்பு விரல்களால் கடிதத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே ஒரு செக்… ஏழாயிரம் அமெரிக்க டாலர்களுக்கான செக். சுமார் மூன்றே கால் இலட்ச ரூபாய். அதை எடுத்து இடதுகையால் திண்ணையின் ஓரத்தில் வைத்துவிட்டு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று கவரை ஆர்வமாய்த் துழாவினார் வேதாச்சலம்.
உள்ளே வெறுமை. கண்களை இடுக்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார். இவன் ஒரு நாலு வார்த்தை எழுதினா கொறஞ்சா போயிடுவான் ? முணுமுணுத்தபடி வெற்றுக் கவரின் வெளிப்பக்கம் எழுதப்பட்டிருந்த மகனின் பெயரை மெதுவாய்த்தடவினார் வேதாச்சலம்.
மகன் அனுப்பிய காசோலை திண்ணையின் ஓரத்தில் முக்கியத்துவமில்லாமல் கிடந்தது.