தாவீது மன்னனின் சலனம்

king-david-and-bathsheba
ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தாவீது தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் குளிப்பதையே பார்த்துக் கொண்டே நின்றார். அவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

‘சொல்லுங்கள் அரசே….’, பணியாளன் ஒருவன் ஓடி வந்து பவ்யமானான்.

‘அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை என் அந்தப் புரத்துக்கு வரச் சொல்’ மன்னன் ஆணையிட்டான்.

‘அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் உரியா என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

‘நான் விரும்பும் பெண் யாருடைய மனைவியாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று அவள் என்னோடு மஞ்சத்தில் படுக்கவேண்டும்’ தாவீது அழுத்தமாய்ச் சொல்ல பணியாளன் அகன்றான்.

அரசனின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது ? பத்சேபா அரண்மனை அந்தப் புரத்துக்கு வரவழைக்கப் பட்டாள். அங்கே தாவீது அவளுடன் உறவு கொண்டார். மன்னனின் ஆசைக்கு மறுப்புச் சொல்ல இயலாத பத்சாபா உடைந்த மனதோடு ஏதும் பேசாமல் தன்னுடைய இல்லம் சென்றாள். பத்சேபாவின் கணவன் உரியா யோவாபு என்னும் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான். அரசின் மேலும், அரசர் மேலும் மிகவும் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார் அவர்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன்,
காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.
உரியா அதை அப்படியே யோபாவுவின் கைகளில் கொடுத்தான்.

யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான்.

அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாகவேண்டும்’  மன்னன் தனக்கிட்டிருந்த ஆணை அவனுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்
யோபாவு உரியாவை அழைத்தான்.

‘உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்’ யோபாவு சொன்னார்.

‘சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’ உரியா பணிவானான்.

‘நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

‘மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்’ உரியா கூறினான்.

‘கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’ யோபாவு சொன்னான்.

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா மகிழ்ச்சியுடன் தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கிப் புறப்பட்டான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா கலங்கிய விழிகளோடு தாவீது மன்னனின் முன்னிலையில் வந்து நின்றாள்.

தாவீது அவளிடம் ‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே… இனிமேல் நீ எனக்கு மனைவியாகி என் அந்தப்புரத்தில் இரு’ என்றார். பத்சேபா மறுத்துப் பேசும் உரிமையற்றவள். மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி அவருடன் வாழ்ந்து ஒரு மகனுக்கும் தாயானாள்.

தாவீதின் இந்தச் செயலைக் கண்ட கடவுள் கோபம் கொண்டார். அவர் நாத்தான் என்னும் இறைவாக்கினரை தாவீதின் அரண்மனைக்கு அனுப்பினார்.
நாத்தான் தாவீது மன்னனின் முன் வந்து நின்றார்.

‘அரசே வணக்கம்…. நீங்கள் நீடூழி வாழவேண்டும்’ நாத்தான் வாழ்த்தினான்.

தாவீது மகிழ்ந்தார். ‘சொல்லுங்கள் நாத்தான்… தங்கள் வருகையின் நோக்கம் என்னவோ ?’ தாவீது கேட்டார்.

‘அரசே நான் ஒரு வழக்கோடு வந்திருக்கிறேன்… ‘ நாத்தான் சொன்னான்.

‘வழக்கோடு வருவது தானே உங்கள் வழக்கம். சொல்லுங்கள். உங்கள் வழக்கு எதுவானாலும் தீர்த்து வைப்பேன்’ தாவீது உறுதியளித்தார்.

‘அரசே… ஒரு நகரில் ஒரு செல்வந்தனும், ஒரு வறியவனும் வாழ்ந்து வந்தார்கள். செல்வந்தனிடம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் நிறைந்திருந்தன. அவனுக்குத் தேவையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த ஏழையிடமோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் மிகவும் அன்பாக நேசித்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை தன்னுடன் அணைத்துக் கொண்டு, தான் உண்ணும் உணவில் முதல் தரமானதை அதற்கும் அளித்து அதனோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். அந்த ஆட்டுக்குட்டியும் தன் எஜமானனிடம் ஒரு நண்பனைப் போல மிகவும் அன்புடன் இருந்தது… ஒரு நாள் அந்த செல்வந்தனைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். அந்த செல்வந்தனோ, தன்னுடைய மந்தைகளை விட்டு விட்டு, அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்துக் கொன்று சமைத்து விட்டான்….’ நாத்தான் நிறுத்தினார்.

தாவீதின் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘என்னுடைய ஆட்சியில் இத்தனை பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறானா ? யாரவன் ? இப்போதே வெட்டிக் கொன்று விடுகிறேன்… ‘ தாவீது சினந்தான்.

‘அது நீர் தான் மன்னா….’ நாத்தான் அரசனின் முன் நேராக நின்று கொண்டு தன்னுடைய ஆட்காட்டி விரலை தாவீதின் முகத்துக்கு நேராக நீட்டினார்.

தாவீது திடுக்கிட்டார். ‘ என்ன… நானா ? நான் எப்போது அப்படி நடந்து கொண்டேன்’ தாவீது கேட்டார்.

‘புரியவில்லையா மன்னா ? உமக்கு எத்தனையோ மனைவிகள் இருக்க, ஒரு ஏழை உரியாவின் மனைவியை நீ கவர்ந்து கொள்ளவில்லையா ? அவனை சதித்திட்டம் தீட்டிக் கொன்று விடவில்லையா ? …’ நாத்தான் தொடர்ந்தார்.

தாவீது திகைத்துப் போய் நின்றார்.

‘உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?’ நாத்தான் தைரியமாய் பேசினார்.

தாவீது தம்முடைய தவறை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். ‘கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும், பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார்.

தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார்.
‘அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’.

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார்.

பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை.

குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது ! ஏழாம் நாளில் இறந்துபோனது.

தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.

திருட்டு : உண்மை கலந்த கதை

station.jpg

ஐயோ… என் பையைக் காணோமே…. என் பையைக் காணோமே…
விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய் ஆங்காங்கே கிழிவதற்குத் தயாராய் இருக்கும் சேலை. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத வண்ணத்தில் ஜாக்கெட்.

என்னம்மா … என்ன இருந்துது பைல ? எங்கே வெச்சிருந்தே ? நல்லா போய் தேடிப்பாரு. இப்படியா தூங்கறது ட்ரெயின்ல ? ஆளாளுக்கு ஏதோதோ சொல்ல அந்தம்மா அழுகை இன்னும் அதிகமாகியது.

ஊரில இருந்து சென்னைக்கு வரங்கய்யா… என் பொண்ணு கல்யாணத்துக்காக ஊர்ல இருந்த உழவு மாட்டையும் நிலத்தையும் வித்து நகையும் பணமும் கொண்டு வந்தேன். பத்தாயிரம் ரூபாயும், பத்து பவுன் நகையும் இருந்துது பைல. நேற்று முழுக்க அலைச்சலுங்க. அதான் கொஞ்சம் அசந்துட்டேன். அப்படியும் தலகாணி மாதிரி வெச்சி தான் தூங்கினேன். எந்த பாவி பய எப்போ எடுத்தான்னு தெரியலையே. ஐயா… தேடிப்பாருங்கையா…. புண்ணியமா
போவும். யாராச்சும் எடுத்திருந்தா குடுங்கையா… கால்ல விழறேன்… அந்த அம்மாவின் புலம்பலும் அழுகையும் இரயில் பெட்டியை நிறைத்தது.

சிலர் மீண்டும் போர்வைக்குள் நுழைந்து தூங்க, சில நல்லெண்ணம் கொண்டோர் பெட்டியில் தேடவும், யாராவது வந்தாங்களா என்று விசாரிக்கவும் துவங்கினர். அதற்குள் டி.டி.ஆருக்கு தகவல் போக, டி.டி.ஆர் வந்து சேர்ந்தார்.

யாருக்கும்மா பொட்டி காணோம் ?
‘ஐயா எனக்குதான்யா… பொட்டி எல்லாம் இல்லை. பைதான்யா.. அதுக்குள்ள பத்தாயிரமும், பத்துபவுன் நகையும் இருந்துதுய்யா… எப்படியாவது தேடிப்புடிச்சு குடுங்கையா …’ நேரம் செல்லச் செல்ல கிடைக்காமல் போய்விடுமோ என்னும் நினைப்பிலேயே அந்த அம்மாவின் அழுகை அதிகமானது.

பேரென்னம்மா ?
‘பொன்னம்மா’
இவ்ளோ நகை பணம் எல்லாம் எடுத்துட்டு வரே… ஒரு சங்கிலி கொண்டு வந்து கட்டி வைக்க வேணாம் ? கூட யாரும் வரலயா ?

‘ஐயா யாரும் வரலீங்க… நான் மட்டும் தான். இந்த பணம் இல்லேன்னா என் பொண்ணு வாழ்க்கை போயிடுங்க…’ பொன்னம்மா நிறுத்தாமல் அழுதாள்.

களவு போன பொருள் கிடைக்கிறது குதிரைக்கொம்பும்மா…. முணுமுணுத்துக் கொண்டே ஒவ்வோர் இருக்கை இருக்கையாய் நடந்து கொண்டிருந்த டி.டி.யாரிடம் ஒருவர் கிசுகிசுத்தார்.
‘சார்… பையைத் திருடினவனை நான் பார்த்தேன். பார்க்க ஸ்டுடண்ட் மாதிரி இருக்கானே ஐம்பத்து ஒன்பதாம் எண் இருக்கைல… அவன் தான் சார் எடுத்தவன் நான் பார்த்தேன்…நான் சொன்னதா சொல்லிடாதீங்க….’ கிசுகிசுத்துவிட்டு திரும்பிக் கொண்டார் அவர்.

டி.டி.ஆர்… ஏதும் தெரியாதவர் போல எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே அவனிடமும் விசாரித்தார். அவன் ஏதும் தெரியாதது போல பேச… டி.டி.ஆர் அகன்றார்.

அதன்பின் வி?யங்கள் ரகசியமாக நடந்தன. பொன்னம்மா அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைய, டி.டி.ஆர் செங்கல்பட்டு இரயில்வே காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் அனுப்பி, இரயில் வண்டி செங்கல்பட்டு வந்ததும் சாதாரண உடையில் வந்த காவலர்கள அவனை அமுக்கி வெளியே போட்டதில் உண்மையை ஒத்துக் கொண்டான் அவன். பொன்னம்மாவுக்கு போன உயிர் வந்ததுபோல் இருந்தது.

வாயில மண்ணுவிழுந்த பயலே நீ நல்லா இருப்பியா… உன்னை கள்ளி வெட்டிச் சாரி போக…. என்று அவளுடைய பாஷையில் சபித்துக் கொண்டே கிடைத்த பையை பரபரப்பாய் பிரித்துப் பார்த்து எல்லாம் சரியாய் இருக்கிறது என்றதும் எல்லா தெய்வங்களையும் மனசுக்குள் நினைத்து நன்றி சொல்லி இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அப்போது … இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
‘வாம்மா… ஸ்டேசன் வா… கம்ப்ளெயிண்ட் எழுதி குடு’

‘ஐயா… கம்ப்ளெயிண்ட் எல்லாம் வேண்டாங்கய்யா…. ஏதோ பாவி மவன் தெரியாம எடுத்துட்டான். அதான் கிடச்சுடுச்சுல்லீங்களா ? போகட்டும் நாசமாப் போறவன்… நம்ம கம்ளெயிண்ட் குடுத்தா படிச்ச முடியாம போயிடும் இல்லையா ?’
பொன்னம்மாவுக்குள்ளிருந்த கிராமத்து இதயம் பேச, திருடியவன் கூட ஏகத்துக்கு குற்ற உணர்வை முகத்தில் வாங்கி தலை கவிழ்ந்தான்.

‘ஏம்மா…. உன்னோட லெக்சரை எல்லாம் ஸ்டேசன்ல வெச்சுக்கோ… வா… சீக்கிரம்…  டிரையின் கிளம்பப் போவுது’ இன்ஸ்பெக்டர் கத்தினார்.

‘ஐயா… என்கிட்டே இருக்கிற டிக்கெட்டை வெச்சு வேற ட் ரெயினில போவ முடியுமுங்களா ?’ அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டே இறங்கிய பொன்னம்மாவைப் பார்த்து சக பயணிகள் பரிதாபப் பட்டனர்.

‘அவ்வளவுதான் அந்த போலீஸ்காரங்க இருக்கிற பத்துல ஒண்ணையாவது புடுங்காம விடுவானுகளா ?’
‘ஆதாயம் இல்லாம எவன் ஆத்தோட போவான் ?’
‘ பாவம் கிழவி…’

‘சரி பரவாயில்லை… தொலைஞ்ச பணம் கிடச்சுதே..’
ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டார்கள். வண்டி நகர்ந்தது.

***

பொன்னம்மா ஸ்டேசன் வாசலில் காத்திருக்கத் துவங்கி இரண்டு மணி நேரமாகிவிட்டது.  அதற்குள் பையைத் திருடிய பையனை ஸ்ட்டியோடு நிற்க வைத்து போட்டோ  எடுக்கவும், கைரேகைகளை எடுக்கவும் ஆரம்பித்திருந்தது ரெயில்வே போலீஸ்.

அவனும் அவன் பாகத்துக்கு கெஞ்சினான். ‘ஐயா… தெரியாம செஞ்சுட்டேங்க. இதான் முதல் தடவை. எங்க அப்பா அம்மா தெரிஞ்சா அவமானத்துல செத்தே போயிடுவாங்க. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா… இனிமே இந்தமாதிரி பண்னவே மாட்டேன். என் படிப்பும் வாழ்க்கையும் போயிடும்யா…’

இன்ஸ்பெக்டர் அவனுடைய கழுத்தைப் பிடித்து தள்ளினார்.

‘திருட்டு நாய்ங்க எதுதான் இப்படி பேசாம இருந்திருக்கு… சும்மா கிட… ‘

‘யோவ் ரைட்டர் எங்கய்யா… இன்னும் காணோம். அவனை இங்கே வரச்சொல்லு…. சீக்கிரம் எப்ஃஐஆர் தயார் பண்னணும்..’

‘கிழவிக்கு ஏதாச்சும் வேணுமா கேளு…’

‘ஆமா எஸ்பி எங்கய்யா.. புடிக்கவே முடியலை… வெளியூர் போயிருக்காரா என்ன ?… பழனி… அவரோட செல்நம்பர் என்ன ?’

இன்ஸ்பெக்டர் பரபரப்பாய் இருந்தார்.

பழனி எஸ்பியுடைய செல்போன் நம்பரை கிழிந்து கிடந்த பேப்பர்களிடையே இருந்து துடைத்து எடுத்து நீட்டினார்.

‘ஐயா… எஸ்பி… இருக்காருங்களா ? நான் செங்கல்பட்டு ரெயில்வே இன்ஸ்பெக்டர் தங்கதுரை பேசறேன்’

‘சொல்லுய்யா… என்ன வி?யம் ?’

‘சார்… இன்னிக்கு காலைல ஒரு தெஃட் ஐ புடிச்சுட்டோ ம் சார். சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்களை ரிக்கவர் பண்ணிட்டோ ம்..’

‘நல்லது… விட்டுடாதே… ஏற்கனவே உங்க ஸ்டேசன் மேல ஏகப்பட்ட பிளாக் மார்க். நிறைய கேஸ் பெண்டிங். நீங்க ரெயில்வே திருடங்களுக்கு சப்போர்ட் பண்றமாதிரி எல்லாம் புகார் வந்திருக்கு. அதனால் இந்த மேட்டரை ரொம்ப பெரிசு பண்ணு.. அப்போ தான் நம்ம டிப்பார்ட் மெண்ட் மேல கொஞ்சமாச்சும் மக்களுக்கு மரியாதை இருக்கும்’

‘ அதனால தான் பார்ட்டியை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிட்டிருக்கேன் சார்’

‘ம்ம்… அதைப் பண்ணு முதல்ல. ஆமா… யாரு அக்யுஸ்ட். அதே ஏரியாவா ?

‘ இல்ல சார்… விருதுநகர் பக்கத்துல உள்ள ஒரு பையன்’

‘ அதானே பார்த்தேன்.. நம்ம ஏரியான்னா… உங்களால புடிக்க முடியாதே…. போன மாசம் ஏழு கேஸ் ! உங்களுக்குத் தெரியாம நடந்திருக்காது. ஆனா எனக்கு எதுவும் வரலை. நான் இங்கே திருச்சில இருக்கிறதனால எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுடாதே…’ எஸ்பி தனக்கு மாமூல் வராத வெறுப்பை வெளிக்காட்டினார்.

‘ அப்படியெல்லாம்…. ‘

‘ போதும்யா… ரொம்ப இழுக்காதே. இந்த கேசை ஸ்டிராங்கா புரஜக்ட் பண்ணு. திருட்டு நடந்த மூணு மணி நேரத்துல திருடனைப் பிடித்து ரயில்வே போலீஸ் சாதனை ந்னு நியூஸ் குடு. …சரியா… ‘

‘அப்படியே செய்யறேங்கையா… ‘ என்று சொல்லி போனை வைத்த இன்ஸ்பெக்டர். போனைவைப்பதற்காகவே காத்திருந்தது போல, வைத்தவுடன் அந்த காவலர்களுக்கே உரிய ….பய என்னும் கெட்டவார்த்தையை மந்திரம் போல உரைத்தார்.

மதியம் மணி இரண்டைக் கடந்தபோது இன்ஸ்பெக்டர் பொன்னம்மாவை அழைத்தார்.

‘வாம்மா… வந்து இங்கே ஒரு கையெழுத்து போடு….’

பொன்னம்மா பெருவிரலை நீட்டினாள்….
‘கம்ப்ளெயிண்ட் போட்டாச்சுங்களா ஐயா… நான் இப்போ கிளம்பலாமா ?’ என்று கூறிக் கொண்டே பையைத் தொட்டாள்.

‘என்னம்மா… புரியாம பேசறே. இப்போ தான் கம்ப்ளெயிண்ட் போட்டிருக்கு… இனிமே இதை கோர்ட்டுக்கு கொண்டு போயி விசாரணை பண்ணிட்டு உங்க கிட்டே பொருளை எல்லாம் குடுப்பாங்க. நீ இப்போ போ…. போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா… என்னிக்கு கோர்ட்டுக்கு போகணும்ன்னு சொல்றேன்’ இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தாள் பொன்னம்மா.

‘ஐயா… பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேங்கய்யா… பணத்தையும் நகையையும் குடுத்துடுங்கய்யா.. எந்த கோர்ட்டுக்கு வேணும்ன்னாலும் நான் வரேன்’

‘என்ன புரியாம பேசறே. அதெல்லாம் ரூல்ஸ் படி தாம்மா நடக்கும்.. நீ இப்போ போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு வா. எல்லா நகையையும் தனித்தனியே எடை போட்டு கணக்கு எழுதணும். இருக்கிற பணத்தை எல்லாம் கணக்கு காட்டணும்… எத்தனை வேலையிருக்கு… போ…உன்பணத்தை யாரும் முழுங்கிடமாட்டாங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.. எதுவும் புரியாமல் வெளியே வந்தாள் பொன்னம்மா.

அதன்பின் இரண்டு வாரங்கள் கழிந்து பொன்னம்மா செங்கல்பட்டு ஸ்டேசனுக்கு வந்து காவல் இருக்க…

‘இந்த திருட்டு நடந்தது விழுப்புரம் ஏரியாம்மா.. அதனால விழுப்புரம் ஸ்டேசனுக்கு நாங்க கேசை மாற்றியிருக்கோம். கேஸ் செலவுக்கெல்லாம் உன் கிட்டேயிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்திருக்கோம். யாரு கேட்டேலும், பத்து பவுன் நகை ஒன்பதாயிரம் ரூபாய்ன்னு சொல்லு… இல்லேன்னா உனக்கு ஒண்ணும் கிடைக்காது’ என்று இன்ஸ்பெக்டர் அவளை விழுப்புரம் அனுப்பினார்.

பொன்னம்மா… அழுதுகொண்டே விழுப்புரம் ஸ்டேசனுக்கு ஓட…
‘இன்னும் கேஸ் கட்டு இங்கே வரலேம்மா…’ என்று நாட்கணக்கில்  விழுப்புரம் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் இழுத்தடிக்க, பொன்னம்மா அங்கும் இங்கும் ஓடி ஓடி வாரங்கள் மாதங்களாக…. ஒருவழியாக கேஸ் விழுப்புரத்துக்கு வந்தது.

இன்ஸ்பெக்டர் அழுதுகொண்டிருந்த பொன்னம்மாவிடம் சலனமே இல்லாமல் சொன்னார்.
‘ அம்மா… கேஸ் முடியறதுக்கு எப்படியும் இரண்டு மூணுவருசம் ஆகும். அதுவரைக்கும் உங்க நகைகளையும் பணத்தையும் கோர்ட் லாக்கர்ல தான் வெச்சிருப்பாங்க…. நீங்க கேஸ் ஆரம்பிச்ச பிறகு உங்க சாட்சியைச் சொல்லிட்டு நகைகளை வாங்கிட்டு போயிடலாம். ஆனா அந்த நகைகளை எல்லாம் கோர்ட் எப்போ கேட்குகோ அப்போ கொண்டு வந்து காட்டணும். அதை விக்கவோ, மாற்றவோ கூடாது. பணத்தோட நம்மரை எல்லாம் நோட் பண்ணி வெச்சிருக்காங்க. அதனால பணம் எல்லாம் கோர்ட்ல தான் இருக்கும் அது கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தருவாங்க….’

‘அப்போ என் பொண்ணு கல்யாணம்….. ‘ என்று ஏங்கிய பொன்னம்மா கண்கள் இருண்டு
போய், நடை தளர்ந்து ஸ்டேசன் வாசலிலேயே சாய்ந்தாள்.

பணம் இல்லாமல் பொன்னம்மாவின் மகளுடைய கல்யாணம் நின்று போனதும், அந்த அவமானம் தாங்காமல் பொன்னம்மாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டதும், ஒருவருடம் கடந்தபின்னும் இன்னும் பொன்னம்மா விழுப்புரம் கோர்ட் வாசலில் வெயிலில் அழுது கொண்டிருப்பதையும், கேஸ் என்பதே குறைந்த பட்சம் ஐந்து வருடம் என்பதை அறியாமல் வாரம்தோறும் அவள் மனசாட்சியே இல்லாத தலைமை கிளார்க்கிடம் அழுது
புலம்புவதையும் எழுதுவதற்குரிய மனவலிமை எனக்கு இல்லாததால் இந்தக் கதை இத்துடன் முடிவடைகிறது