பயம்
விதைத்துக் கொண்டேயிரு
பயத்தை !
ஒரு பயத்தின்
மூட்டில்
இன்னொரு பயம்
முளைக்க வேண்டும்
வாழையடி வாழையாக.
பதட்டத்துடனே
வைத்திரு அவனை.
இயல்பாய் நடக்கும்
விஷயங்களில் கூட
திகிலைத் திணித்து வை.
உண்ணவும்
உறங்கவும்
பயம் வந்து
பிராண்ட வேண்டும்.
பேசும் போது
தொண்டைக்குழியில்
ஆலகாலம் போல
வார்த்தைகள்
அடக்கமாக வேண்டும்.
பிரிவினைகளுக்கு
திரி போடு
வெறுப்புகளின் கிண்ணத்தில்
எண்ணை ஊற்று
கொழுத்து விட்டு எரியவேண்டும்
கோபம்.
யாரோ
முதுக்குப் பின்னால்
முறைத்துப் பார்ப்பதாய்
முதுகுத்தண்டு சில்லிட வேண்டும்.
தன்
நிழலைக் கூட
சந்தேகப்படும் சூழலை
சதியுடன் கட்டமை.
இந்தப்
பயம் தான் நம் ஆயுதம்
இந்தப்
பயம் தான் நம் கேடயம்.
வாழ்வதே
போராட்டமானால் தான்
வாழ்க்கையில்
போராடமாட்டான்.
பயங்களின்
மீதான
அவனது பயமே
நம் ஆதாயம்.
காலங்களின்
கடைசிப் படிக்கட்டுகளில்
பயங்கள்
அவனுக்குப்
பயமற்றதாகிவிடக் கூடும்
அப்போது
பேசலாம்
நிம்மதியாய் இருப்பதன்
பேரச்சம் பற்றி !
*
சேவியர்