ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.
முதலில்
அது
பிரச்சினையே இல்லை
என நம்ப வைக்க வேண்டும்
அதற்காக
அதைவிடப் பெரிய
பிரச்சினை ஒன்றை
உருவாக்க வேண்டும்.
அது
மெல்லும் வாய்களுக்கான
வசீகர
அவலாக இருக்க வேண்டும்.
ஊடகங்களின்
கவர்ச்சிப் பேச்சுக்கு
ஆவேச அனலாய்
கொதிக்க வேண்டும்.
அதற்காக
எளிய வழியாக
ஒரு
நடிகையின்
அந்தரங்கத்தை சபையேற்றலாம்.
ஒரு
சாதீய ஏழையைத்
துகிலுரியலாம்.
ஒரு
மத வன்முறையை
கலாச்சாரக் குடைபிடித்து
அரங்கேற்றம் செய்யலாம்.
ஒன்றும் இல்லையேல்
வெறுமையிலிருந்து
ஒரு
ஊகத்தை உருவியெடுக்கலாம்.
போதும்,
இனிமேல்
இந்தப் பிரச்சினை
எல்லா ஊடகங்களிலும்
தீக்குளிக்கும்.
எல்லா நரம்புகளிலும்
வெறியினை
இறக்குமதி செய்யும்.
பழைய
பிரச்சினை மறந்து போகும்.
அதை
பரணில் போட்டு மூடிவிடலாம்.
அப்போ,
புதிய பிரச்சினையை
தீர்க்கும் வழி ?
ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.
முதலில்…
*
சேவியர்