கவிதை : கிழிந்த அழகு

moon1.jpg

என்
இதயத்தின் துடிப்போசை
ஆழ்மனச் செடி உலுக்கி
சில
நினைவுப் பூக்களை
உதிரவைக்கிறது.

உதிரும் என்
நினைவுப் பூக்களைத்
தாங்கிப் பிடிக்கின்றன
என்
சிறுவயதுச் சிற்றோடைகள்.

கிழிந்து போன
என்
பால்யகாலக் கிளைகளில்
இன்றும் என்னால்
அழகுகளை விளைவிக்க முடிகிறது.

நிலாவிலிருந்து பாயும்
வெள்ளை நதி
மொட்டைமாடியில் தளும்பி வழிய,
மூழ்கி மூழ்கி
மிதக்கின்றன என்
மழலைக்கால அழகுகள்.

எத்தனை பணம்
வைத்திருந்தேன் என்பது
என்
புத்திக்குள் வரவில்லை
ஆனால்
அந்த ஒற்றை மயில்பீலியும்,
கடல் குச்சும்
சத்தியமாய் மனம் விட்டு விலகவில்லை.

பரணிச் செடி பிடுங்க
பாசிப் பாறைகளில்
போரிட்டதும்,
வழுக்கி விழுந்தபின்
வலித்ததை மறைத்ததும்
இன்று
கவிதையாய் அழகு காட்டுகின்றன.

கல்லூரி ஆசிரியர்களின்
பெயர்கள்
மறந்து விட்டன,
இன்னும்
ஆரம்பச் சாலை ஆசிரியர்கள்
கல்வெட்டாய்க் கிடக்கிறார்கள்.

பக்கத்து இருக்கை
சின்னப் பெண்ணின்
சிரிப்பு தந்த
ஐந்தாம் வகுப்புக் கிளர்ச்சி
இன்றும் கூட
வற்றிப் போய்விடவில்லை.

அந்த
வெப்பத்தால் விரியும்
மத்தாப்புக் காலத்துள்
சென்னையின்
புகை விலக்கி தான்
புக வேண்டியிருக்கிறது.

காற்று கிழித்த
வாழைஇலைத் தாள்கள்,
நாற்றை அழைக்கும்
வாய்க்கால் மீன்கள்,
மரச்சீனித் தோட்டங்கள்,
தொட்டாச்சிணுங்கி இலைகள்

அடிக்கடி செல்லும்
என்
தாய் கிராமப் பயணத்தில்
தவறாமல்
சேகரிப்பதுண்டு
என் பழைய நினைவுகளின்
வயது முதிர்ந்த வடிவங்களை.

ஒரு நீண்ட
இடைவெளியில்
மீண்டும் என்
தொட்டில் தரையைத்
தொட்டுப் பார்த்தேன்.

வருடங்களின்
கிளைகளில் விளைந்த
கலாச்சாரக் காய்கள்
வெடித்துச் சிதறி
எங்கும்
பருத்தித் தூசுகளாய்ப் பறக்கின்றன.

என்
காலடியில் விரிந்திருக்கும்
காங்கிரீட் காலத்தின்
இடிபாடுகளிடையே
மிகக் கொஞ்சமாய்க் கிடக்கிறது
கிழிந்த அழகு.

பூமியில் மாற்றங்கள்
புதிது புதிதாய் பிறந்தாலும்,
வானம் எனக்கு
வழக்கிடாமல் வழங்கியது
இதயம் வழிய வழிய
கொஞ்சமும் குறைவின்றி.

பிறை வடிவில்,
பெளர்ணமியிலிருந்து
கிழிந்த அழகு.

0

( கிழிந்த அழகு – எனும் தலைப்பில் சந்தவசந்தம் இணையக் கவியரங்கத்தில் எழுதிய கவிதை. தலைப்பு : இலந்தை இராமசாமி அவர்கள்  )