1
முடியாது என்றால்
அதன் அர்த்தம்
முடியும் என்று என்றுமே
முடிந்ததில்லை…
நிமிராமல் எழில் சொன்ன
பதில்,
திமிரால் சொன்னதாய்
தோன்றியது தந்தைக்கு.
மறுப்புக்குக் காரணம்
வெறுப்பா ?
மனசுக்குள் மறைந்திருக்கும்
ஏதேனும் நெருப்பா ?
உனக்கு
மனைவியாகும் தகுதி
அவளுக்கு இல்லையா ?
அவளை உனக்கு
மனைவியாக்கும் தகுதி
எனக்குத் தான் இல்லையா ?
தந்தையின் கேள்விகள்
எழிலை
எழுந்திருக்க வைத்தன.
திருமணம் வேண்டாம் என்றது
என்
தனிப்பட்ட கருத்து.
நெருப்புக்குள் இருந்து கொண்டு
என்னால்
பட்டம் விட இயலாது.
திருமணம் எனும் மாலையை
என்
எழுத்து என்னும் கழுத்துக்கு
பட்டாக்கத்தியாய்
தொங்கவிட நான்
தயாராய் இல்லை.
என் மூச்சு
இலக்கியத்தின் இழைதான்
கன்னியின் இடை அல்ல.
எனக்குத் தேவை
காவியத்தின் அழகு தான்,
இந்த
சேலைச் சங்கதிகளுக்குள்
சிக்கிக் கொள்ள சம்மதமில்லை.
எழில் குரல் உயர்த்தினான்.
அவள் உன்
அத்தை மகள் தானே,
உன் நாடி பிடித்தவள் தானே
உன்
கரம் பிடிக்க ஆசைப்பட்டது
தவறா ?
பேனாவுக்குள் புகுந்துகொண்டு
அவளை நீ
காகிதமாய் கிழிப்பது
அழகா ? சொல்
அப்பாவும் குரல் உயர்த்தினார்.
உங்கள்
கட்டாயத்தின் சங்கிலிகளை விட
என்
இலக்கியத்தின் அரவணைப்பு
வலிமையானது அப்பா.
திருமணம் எனக்கு
நீங்கள் தரும் சாபம்.
வரத்தை விற்று விட்டு
சாபத்தை வாங்கி
சகித்து வாழ்வது சுகிப்பதில்லை.
இது
என்னுடைய முடிவு.
முற்றுப் புள்ளி தாண்டி
வாக்கியங்கள்
குதித்தோடாது.
எழில் முடிவாய் சொன்னான்.
2
மகிழ்வின் மலைஉச்சியில்
மோதி மோதி
என்
மேகக் கண்கள்
அழுகின்றன எழில்…
என் பெயரை
உங்கள் புனைப் பெயராய்
உலகுக்கு
அறிமுகப் படுத்துவீர்கள் என்று
கனவிலும் நினைக்கவில்லை.
என் பெயருக்குள்
உங்கள் படைப்புகள்,
என் உயிருக்குள்
உங்கள் உயிர் துடிப்புகள்,
இந்தக் கணம் மட்டுமே
இன்னும் சில
யுகங்களுக்கு நீளாதா ?
துளசி தழுதழுத்தாள்.
எழிலின் எழுத்துக்கள்
தங்கக் கிரீடம் சூடி
வெள்ளி வீதியில் வலம் வரும்
கனவுகள் தான்
துளசியின் மனமெங்கும்.
அந்த எழுத்துக்களுக்கு
தன் பெயரையே
அணிந்து கொண்டு
அழகுபார்த்த
பெருமிதத் தோணி தான்
அவளுக்குள் அசைந்தாடியது.
எழில்
விரலால் அவள்
விழியோரம் தீண்டினான்,
விழியால் அவள்
உதடுகளை தோண்டினான்.
உன்னை விட அழகாய்
உன் பெயரை விட சுவையாய்
என்
பிரபஞ்சத்துப் பந்தியில்
பரிமாறப்பட்டவை
எதுவுமில்லையே.
என் எழுத்துக்களை உழுதால்
உன்
நினைவுகளும் கனவுகளுமே
விளைகின்றன,
என்
கவிதைகளைக் கடைந்தால்
அங்கே
அமுதமாய் நீதானே
திரண்டு வருகிறாய்,
உனக்குச் சொந்தமானவற்றை
எழுதி,
எனக்குச் சொந்தமான
உன் பெயரையும் திருடினேன்.
நீயும் நானும்
இரண்டல்ல என்தற்கு,
ஒரு உதாரணம் போதாதா
உலகுக்கு ?
சிரித்தான் எழில்,
ஆனாலும்,
என் நம்பூதிரித் தந்தைக்கும்,
உங்கள் தந்தைக்கும்
இது ஓர்
அதிர்ச்சியாய் இருக்கும் இல்லையா?
கவலையாய் கேட்டாள் துளசி.
எழிலுக்கும்
அப்போது தான் அது
இறுக்கமாய் உறுத்தியது.
3
இலக்கியம் உனக்கு
இலை போடலாம்
சோறு போடாது,
அப்பா பொருமினார்.
உங்களுக்கு
இலக்கியம் என்பது இலைமாதிரி
எனக்கு
அது மலை மாதிரி,
இலைகள் உதிர்ந்தால்
மறு வசந்தத்தில்
மறுக்காமல் வளரும்,
மலைகள் உருண்டால் பின்
அதற்கு தொடர்
தலைகள் முளைப்பதில்லை.
எழில் சொன்னான்.
கல்யாணம் செய்யாமல்
வாழ்வது அவமானம்,
என் காலத்தின் கால்கள்
முடமான பின்
நீ
எப்படி நடக்கப் போகிறாய் ?
உன்னை கவனிக்கும்
தோள்களுக்காகவேனும் ஓர்
திருமணத்துக்கு சம்மதி.
இல்லை அப்பா,
திருமணம்
போலித் தனங்களின்
பொதுக்கூட்டம்.
அவளுடைய பிறந்தநாளுக்கு
பூ அனுப்புவதும்,
மறந்து போனால்
படுக்கையறையில் அவள்
தீ அனுப்புவதும்,
என் எழுத்துக்களின்
நேரத்தை புதைத்து விட்டு,
வீட்டைச் சுற்றி
விட்டிலாய் சுற்றுவதும்,
உறவினரின் நெருக்கத்துக்குள்
என்
கதைகளை
மூச்சுத் திணறி மரிக்க வைப்பதும்
என்னால் இயலாது.
தமிழ் எனக்கு தாய்,
இலக்கியம் என் மனைவி,
இனிமேல் நான்
இரண்டாவது மணம் செய்ய
எத்தனிக்கவில்லை.
எழில் சொல்லி நிறுத்தினான்.
திருமணம் என்பதை
ஏன்
வேலி என்று கொள்கிறாய் ?
நிழலோடு ஏன் நீ
நீள் யுத்தம் செய்கிறாய் ?
திருமணம் கடிவாளம் அல்ல
அடையாளம்,
உன் துயரங்களின்
தீக் காயத்துக்கு,
களிம்பு காத்திருக்கிறதெனும்
அடையாளம்,
களிம்பை நீ காயம் என்கிறாய்.
திருமணம் என்பது
அவசியமற்ற
ஆறாவது விரல் அல்ல,
அது
குயிலுக்குள் குடியிருக்கும்
குறையாத குரல்,
இருக்கும் துளைகள் கொண்டு
இசையை செய்யும்
புல்லாங்குழல் தான் இலக்கியம்,
இதயத்தின் உள்ளே
இசையைக் கொத்தி
துளைகள் செய்யும்
மரங்கொத்தி தான் திருமணம்.
நீ
இசையை நேசிக்கிறாய்
தவறில்லை,
புல்லாங்குழலாவதை
புறக்கணிக்கிறாயே !
வீட்டுக்கு வெளியே
பிறரைச் சம்பாதிக்கலாம்,
ஆனால்
வீட்டிற்குள்ளே தான்
நீ
உன்னை சம்பாதிக்க முடியும்.
ஒத்துக் கொள்
இல்லையேல்
அழுத்தமான காரணம் சொல்…
அப்பா நிறுத்தினார்.
அழுத்தமான காரணம்
வேண்டுமா ?
நான் காதலிக்கிறேன்,
துளசியை.
0
4
திருமணத்திற்கு
சம்மதம் கிடைக்குமா ?
காலங்காலமாய்
காதலர்
தவறாமல் கேட்கும் கேள்வியை
துளசியும் கேட்டாள்.
சம்மதம் கிடைப்பது
சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறது,
உன் நம்பூதிரிக் குடும்ப
பூஜையறைக்குள்
என்
ஆண்டவன் பிரவேசிக்க
அனுமதி கிடைக்காது,
ஆண்டவனையே அனுமதிக்காதவர்
என்னையா
அனுமதிப்பார் ?
ஆனாலும்
நம் திருமணம் நடக்கும்.
சொல்லிவிட்டு எழில்
விரல் நகம் கிள்ளினான்.
பதட்டம் என்
கால்களைச் சுற்றி
சர்ப்பமாய் சீறுகிறது,
எப்போது தான்
குழப்பங்களின் தலைகள்
கொய்யப்படுமோ ?
அனுமதி இல்லையேல்
என்ன செய்வது எழில் ?
வீட்டை விட்டு
வெளியேறவா ?
கருவறை வாசல் முதல்
கல்லூரி வாசல் வரை
கவலைகளை
மடியில் கட்டி,
என்னை பூக்களோடு அனுப்பி வைத்த
பெற்றோருக்கு
அவமானம் தேடித் தருவது
நியாயமா எழில் ?
இருபது வருடத்திய
வியர்வைத் துளிகளை
ஓர்
ஒற்றை ராத்திரியில்
அடுப்பில் போடுதல் அடுக்குமா ?
நீ
என் சிறகு என்றால்
அவர்கள் என் கூடு,
நீ
என் கூடு என்றால்
அவர்கள் என் மரம்,
உன்னை
என் மரம் என்றால்
அவர்கள் என் வானம்.
எது ஒன்றை இழந்தாலும்
என்
பறவை வாழ்க்கை
பிடிமானம் இழக்காதா ?
கேள்விகளின் கொத்துகளோடு
தலை கவிழ்ந்து,
பதில் கிடைக்குமா என
தரையைத் தோண்டினாள்
துளசி.
பதில்களின் வால் தொங்குதா
என
வானம் பார்த்தான் அவன்.
5
துளசியைக் காதலிக்கிறேன் !
எழிலின் வார்த்தைகள்
தந்தையின் உள்ளத்தில்
ஓர்
பிரளயத்தின் பிடிமானத்தை
அறுத்து விட்டது.
என்ன ???
துளசியையா ?
உனக்கென்ன பைத்தியமா ?
அப்பா பதட்டமானார்.
ஆமாம் அப்பா,
இதொன்றும்
ஒரு நாள் இரவில் பூத்து
மறு நாள்
வரவேற்பறைக்கு வந்ததல்ல.
சிறுவயதில்
நம் மாடிவீட்டில்
ஓடி விளையாடிய நட்பு,
சின்னச் சின்ன
சந்தோஷங்களில்
சண்டைபோட்டு அழுது,
பின்
மன்னிப்புக் கேட்க
முண்டியடித்த நட்பு,
வருடத்தின் வயதும்
பருவத்தின் பயிரும்
எங்களுக்குள்
காதல் தானியங்களை
விளைவித்தது.
இது
இருபதாண்டு
நேசம் அப்பா,
இலையைக் கிள்ளி
வாடவிட
இதொன்றும்
முந்தா நாளைய முளையல்ல.
எழில் உறுதியானான்.
நடக்காத ஒன்றைத் தேடி
நடக்கப் போகிறாயா?
என்ன ஆயிற்று உனக்கு ?
அப்பாவின் பதட்டம்
அதிகமானது.
என் காதல் நிஜம்,
எனக்குள் அவள் இருக்கும் வரை
இன்னொரு
கால்சுவடு
கடந்து வர இயலாது.
எழில் அமைதியானான்.
அதெல்லாம் சரி எழில்,
சாத்தியமில்லாததை ஏன்
சிந்திக்கிறாய் ?
துளசி இறந்து போய்
வருடங்கள் ஆறு
முடிந்து விட்டதே !
6
எனக்கென்னவோ
கவலையாய் இருக்கிறது
எழில்,
எந்தப் பக்கம் திரும்பினாலும்
உயரம் தெரியா
மதில் சுவர்கள் மட்டும்,
நீந்த நினைத்தால்
ஆழமான நீர் நிலையும்,
நீந்தத் தெரியா
என் நிலையும்.
நீ மட்டும் இல்லையேல்
நான் இல்லை எழில்,
வேர்கள்
எத்தனை தேவையானாலும்
பூக்கள் இல்லாத ரோஜா
இலை வளர்த்து
ஆவதென்ன சொல் ?
துயரம் தொலை துளசி,
துயரங்களில்
தொங்கிக் கிடந்தால்
உயரங்கள் அருகே வராது.
எதிர்ப்புகளின் அழுத்தம்
இல்லாமல்,
இங்கே பருவமழைகூட
பெய்ததில்லையடி,
நம் மேல் நமக்கிருக்கும்
நம்பிக்கைகள் தானே
காதலுக்கு
காதல் மேல் இருக்கும் காதல்.
அது சரி எழில்,
ஏதாவது
புரியாமல் பேசி சமாளி,
சிரித்தாள் துளசி.
எழிலும் சிரித்தான்,
அவர்கள்
பரிமாறிக் கொண்ட
கடைசிச் சிரிப்பு
அது என்பதை
அப்போது இருவருமே
அறிந்திருக்கவில்லை.
7
இரவைக் கிழித்து
விரைவாய் உயர்ந்தது
அந்தச் சத்தம்.
கோழிகளின் தூக்கம் கூட
கலையாத
அதிகாலை அமைதியில்
யாரோ
ஒப்பாரிச் சத்தத்தை
ஒப்புவிக்கிறார்களே,
கனவுகளின் நிஜமா
இல்லை
நிஜங்களின் கனவா ?
போர்வை விலக்கவும் முடியாமல்
இமைகளில்
தூக்கப் பசு
தறியறைந்து கட்டப்பட்டிருக்க
தடுமாறிப் புரண்டான்
எழில்.
என்னை
விட்டுட்டுப் போயிட்டியே
துளசிஈஈஈஈ….
துளசி !!!
ஒரே வினாடி நேரத்தில்
ஆகாயத்தில்
நின்று போன விமானமாய்
எழிலின்
அத்தனை தூக்கமும்
ஒரே வினாடியில் விழுந்து
உடைந்தன !
துளசி…
துளசிக்கு ஏதோ ஆகியிருக்கிறது.
அவன் கால்கள்
படுக்கையை விட்டு
பதட்டமாய் எழுந்து ஓடின,
அவசரத்தில்
கதவில் மோதி
மேஜைமீது உருண்டான்.
எழில்….
அப்பா தான்
ஓடி வந்தார்.
என்னாயிற்று அப்பா
ஒப்பாரிச் சத்தம் ?
வார்த்தைகளின் உள்ளே
வார்த்தைகளே
வலைபோட்டு இழுத்தன
அவன் நாக்கை.
துளசி
இறந்துட்டாளாம்,
பாவம் சின்னப் பொண்ணு…
அப்பாவின் அடுத்த வாக்கியங்கள்
எழிலுக்குள்
விழவில்லை.
அவன் கால்களுக்குக் கீழே
பிறந்தது முதல்
தொடர்ந்த
புவியீர்ப்பு விசையின் இழை
சிறுத்தை பாய்ந்த
சிலந்தி வலையாய்
அறுந்து வீழ்ந்தது.
இப்படி ஒரு
நில அதிர்வை
அவன் மனம் உணர்ந்ததில்லை,
இப்படி இரு
பாறைச் சரிவை
அவன் இதயம் சந்தித்ததில்லை,
கைகளும் கால்களும்
வல்லூறுகள்
கொத்தித் தள்ளிய
சதைத் துண்டங்களாக
வெறுமனே தொங்கின.
பிடிமானமற்றுப் போன
பனை மரமாய்,
நெடுஞ்சாண் கிடையாக
சாய்ந்தான் அவன்.
8
அவன் நெஞ்சக் கூண்டு
அந்த
யதார்த்தப் பறவையை
சிறைப் பிடிக்க அஞ்சியது.
துளசி சாகவில்லை,
அவள் சாக முடியாது என்னும்
எண்ணம் மட்டுமே
உள்ளுக்குள் எரிந்தது,
அணைந்து அணைந்து எரிந்தது.
ஆனால்
நிஜத்தின் ஒப்பாரிகள்
அவன் ஜன்னலை
மூர்க்கத் தனமாய் மோதின.
அவனுக்குள்ளே சோகம்
வேலடிபட்ட வேங்கையாய்
துடித்தது,
வேரறு பட்ட மரமாய்
சரிந்தது.
என்னவாயிற்று ?
எப்படி இந்தத் தோணியை
தவிக்க விட்டு விட்டு
துடுப்பு மட்டும்
தரையிறங்கிப் போனது ?
இறுதி வரை
வருவேன் என்று சொல்லி விட்டு
என் சிறகுகள்
ஏன் வானத்தை எட்டியதும்
வெட்டுப் பட்டுச் சாய்ந்தது ?
நன்றாகத் தானே இருந்தாள்
நேற்று மாலை வரை ?
விடியும் முன் எப்படி
மடிய முடிந்தது
அத்தனை சந்தோஷங்களும் ?
துளசியின் வாசலுக்குச்
செல்ல
எழிலின் கால்களுக்கு
வலு இருக்கவில்லை.
சுற்றி வந்த துளசியை
சுட்டுச் செல்ல மனம்
ஒப்புக் கொள்ளவில்லை.
மரணத்தின் பற்கள்
இத்தனை கொடூரமானவை
என்பதை
குதறப் பட்டபின்பு தான்
புரிய வருகிறது.
அழுவதற்கும் திராணியில்லை,
உறைந்து போன நிலையில்
பனி
உருகிப் போவதில்லையே.
உருக்கிப் போகும் வெப்பம்
இனி
நெருங்கப் போவதில்லையே.
வாசல் கடந்து
யாராரோ பேசிப் போகிறார்கள்,
கண்ணீரையும் கொஞ்சம்
அழவைக்கும் ஒப்பாரி
நான்கு வீட்டுக்கு அப்பால்
துளசிக்காய் அழுதது.
எழில் வெளியேறி
எதிரே வந்த காரில் ஏறி
எங்கேயோ போனான்.
துளசியின்
ஈரப் புன்னகையை மட்டுமே
முத்தமிட்டுக் கிடந்த
எழிலின் விழிகள்,
அவள் அசையா உதடுகளைக்
காண இசையவில்லை.
0
9
இனி என்ன செய்வதாய்
உத்தேசம் ?
மரணம் வலியானது
தெரிகிறது,
உன் காயத்தின் ஆழம்
தெரிகிறது,
அதற்காக இறந்த காலத்திலேயே
இறந்து கிடப்பதா ?
வாழ்க்கை
சிலருக்கு பரிசுகளையும்
சிலருக்கு
போட்டிகளையும் தந்து செல்கிறது.
பரிசு கிடைத்தவன்
வெல்லும் வலிமை பெறாமல்
வெறுமனே போகிறான்,
தரிசு கிடைத்தவன்
அதை பரிசுக்குரியதாக ஆக்குகிறான்.
கடந்து போனவற்றை
வாழ்வின்
பாடங்களாக்க வேண்டும்,
அதுவே
வாழ்க்கையாகக் கூடாது.
நேற்றைய வானம்
அமாவாசை என்றால்,
இன்னும் சில நாட்களில்
அது
பௌர்ணமியை பரிசளிக்கும்,
நேற்றைய மரம்
நிர்வாணமாய் இருந்தால்,
வரும் வசந்தம்
அதற்கு
ஆடை நெய்து செல்லும்.
விழுவது மனித இயல்பு,
எழுவதே மனித மாண்பு.
நீ
எழுத்தாளன்,
அத்தனை பேருக்கும்
நம்பிக்கை விற்கும் நீ,
உனக்கு மட்டும்
அவநம்பிக்கை வாங்கி வரலாமா ?
அப்பா குரலை தாழ்த்தி
அறிவுறுத்தினார்.
அப்பா,
யுகங்கள் கடந்தாலும்
என்னால்
துளசியை மறக்க முடியாது.
“நான்
மறக்கச் சொல்லவில்லையே,
பிடிவாதமாய் அந்த நினைவுகளில்
படுத்துக் கொள்ளாதே
என்கிறேன்”
இல்லை அப்பா,
காலங்கள் காயங்களை
ஆற்றும் என்று கேட்டிருக்கிறேன்,
அது இல்லை
அது
தோலில் காயமென்றால் தீர்க்கும்
இரத்தக் குழாய்களின்
காயமென்றால் அடைக்கும்,
காதலின் காயம் மட்டும்
எங்கே என்று தேடி
அடைக்க முடியாமல் அடங்கும்.
” இல்லை எழில்,
இது
நீயாய் உருவாக்கும் கற்பனை வளையம்,
உன்னால்
இன்னொரு பெண்ணைச்
சந்திக்க இயலும்” – அப்பா.
துளசி இருந்த அறைகளில்
இன்னொரு கொலுசொலியா ?
அதற்கு ஒப்புக் கொள்வதும்
சாவுக்கு சம்மதிப்பதும்
என்னைப் பொறுத்தவரை
சரி சமம்….
0
10
நம்ப முடியவில்லை,
துளசியிடமிருந்து கடிதம்.
அவள் மரணத்தின் வாசனை
இன்னும்
தெருக்களை விட்டுச்
செல்லத் துவங்கவில்லை,
அதெப்படி சாத்தியம் ?
மடிந்தபின்
கடிதம் ?
அவள் மரணத்தின்
வேல் குத்திய இடங்களிலெல்லாம்
தேன் ஊற்றிய அவஸ்தை
அவனுக்கு.
ஏராளமாய் வலித்தது,
அவசரமாய்,
கடிதத்துக்குக் காயம் தராமல்
கிழித்தான்.
துளசி தான்
எழுதியிருந்தாள்.
பிரிய எழில்,
இது உனக்கு நான் எழுதும்
கடைசிக் கடிதம்.
உனக்கு
ஓர்
இனிய விஷயம் சொல்லவா ?
அப்பா
நம் திருமணத்திற்கு
சம்மதித்தார்.
உன்னிடம் அதை
காலையில் வந்து
காதைக் கடித்துச் சொல்ல
இரவுகளில்
இமை மூடாமல் காத்திருந்தேன்.
எழில்,
நீ எனக்கே சொந்தமா ?
என்
கனவுகளின் கல்தூண்களில்
எல்லாம்
நம் காதலின் கல்வெட்டுக்களா ?
இனி
என் ஆனந்த விளக்கில்
நீ
சங்கீதமாய் ஆடுவாயா ?
உன்னை
உரிமையோடு முத்தமிடும் அந்த
அதிசய நாள்
அருகிலா ?
இப்படி
ஆயிரம் கனவுகளோடு
இரவைக் கடிந்து கொண்டு
காத்திருந்தேன்.
நள்ளிரவின் நிசப்தம்
இருட்டைவிட அடர்த்தியாய்
வீதிகளில் உலாவியபோது,
என்
அந்தப்புரம் கடந்து வந்தான்
பாலன், என் மாமன்.
அப்பாவின் நம்பூதிரித்
திருநீறு
என்
குங்குமப் பொட்டால்
கறைபடியும் என்ற கவலையாம்.
என்னை
படுக்கையறையில் வந்து
குடித்துப் போனது
அந்த
மிருகப் புயல்.
எழில்,
உனக்காய் காத்திருந்த
என் தேகம்,
களவாடப் பட்டு விட்டது,
எனக்குத் தெரியும்,
உன்னிடம் சொன்னால்
“நடந்தது விபத்து, மறந்துவிடு.
” என்பாய்.
என்னை
உன் உயிரின் உயரத்திலிருந்து
இம்மியளவும்
இறக்க மாட்டாய்.
ஆனால்
என்னால் முடியாதுடா…
நீ
பெரிய எழுத்தாளனாக வேண்டும்,
துளசி
என்னும் பெயர்
அத்தனை பத்திரிகையிலும்
வரவேண்டும்.
நான் பார்ப்பேன்,
வானத்தின் ஓரத்தில் ஓர்
நட்சத்திரத்தின் அருகே அமர்ந்து
உன்னைப் பார்ப்பேன்,
உன் புகழில் மகிழ்வேன்.
எழில்,
எழுதிக் கொண்டே இருக்கத்
தோணுது எழில்…
ஆனால்
இப்படி ஒரு நிலமை
யாருக்கும் வரவேண்டாம்.
என்
உடலை அழிக்கப் போகிறேன்
எழில்,
நான் இறந்தபின்
என்
உடலைப் பார்க்க வரமாட்டாய்
என்று தெரியும்,
என்
புன்னகையற்ற உதடுகள்
உன்னை
புண்ணாக்கி விடக் கூடும்.
ஒரு வேளை
நீ
வருவாயோ எனும் கவலையில்
நான்
சிரித்தபடியே சாகப் போகிறேன்.
உன்
துளசி…
கடிதம் ஓர்
கண்ணீர் துளியோடு முடிந்தது,
அது
எழிலின் கண்களிலிருந்து
விழுந்தது.
0
11
எழில்…,
அப்பா நெருங்கி வந்து
நெருக்கமாய் அமர்ந்தார்.
கவலைகள் இல்லாத
மனிதன் இல்லை,
அந்த கவலைகளிலிருந்து
மீளாதவன்
மனிதனே இல்லை.
வா,
போதும்
ஆறு ஆண்டுகால அழுத்தங்கள்
இப்போதேனும் கொஞ்சம்
இளகட்டும்.
எழில் பேசினான்,
இல்லை அப்பா,
என்னால் ஓர்
உண்மையான புருஷனாகவோ,
சாதாரண மனுஷனாகவோ
இருக்க இயலாது.
துளசி என்னும் பெயரில் எழுதி
வித்யா என்னும்
மங்கையை நான்,
மலையிலிருந்து தள்ளல்
இயலாது.
என்
மனசாட்சிக்கு விரோதமாய்
நான்
மௌனியாக இருப்பதும்,
மனசாட்சிக்கு ஆதரவாய்
காதலில் கலந்திருப்பதும்
வித்யாவை காயப் படுத்தும்.
திருமணம் என்பது
ஒரு பெண்ணின் கனவுகளுக்கு
கோடரி வைப்பதாய்
இருக்கலாமா ?
யோசியுங்கள் அப்பா….
எழில்,
நீ
அவளுக்கானவள் என்னும்
ஒப்பந்தத்தை,
வித்யாவின்
உள்ளம் எழுதி
கையொப்பமும் இட்டு விட்டது.
நீ,
துளசியின் பெயரில்
கதை எழுதுவதோ,
துளசியின் நினைவுகளில்
கவிதை எழுதுவதோ
தவறில்லை,
பிரேதப் பரிசோதனைகளில்
யாருக்கும்
உயிர் வந்ததில்லை,
புரிந்து கொள்.
எழில் மௌனியானான்
அப்பா தொடர்ந்தார்.
12
உன் கடந்தகாலக்
காதல் தோல்வி,
நிகழ்காலத்தின் உன்
அத்தைமகள் வித்யாவின்
காதலை
நிராகரிப்பது தகுமா ?
துளசியின் இழப்பில்
நீ
இறங்கிய தீக் குழியில்,
வித்யாவும்
விழ வேண்டுமா ?
நீ இல்லையேல்
வித்யா வாடுவதும்,
துளசி இல்லாமல்
நீ வாடுவதும்
இரு உள்ளங்களில் விழும்
ஒரே உணர்வு அல்லவா ?
யோசி,
துளசி
உன்னுள் கரைந்து போன
உணர்வாய் இருக்கட்டும்,
வித்யா
உன் வருங்கால வாழ்வின்
வழித்துணையாய்
தொடரட்டும்.
கடந்த கால
அகழ்வாராட்சிகளில் இருந்து
தடயங்களைத்
தோண்டித் தோண்டி,
நிகழ்கால கட்டிடங்களை
கடலுக்குள் தள்ளாதே.
அப்பா
சொல்லிவிட்டு நகர்ந்தார்..
‘இப்படி ஒரு நிலமை
யாருக்கும் வரவேண்டாம்…”
துளசியின்
கடைசிக் கடித வரிகள்
எழிலை எரித்தன.
வித்யாவை
வேண்டாமென்பது,
அவளுக்கு வலியைத் தருமா ?
வித்யாவிற்கு
என்மேலான காதல்,
எனக்கு
துளசிமேலான காதல் போல
இருந்தால்,
அவளுக்கும் எதிர்காலம்
தனிமையாகுமா ?
விடைதெரியா
விலாங்குமீன் கேள்விகள்
விரல்களிடையே
வழுக்கி ஓடின.
துளசி…
நான் என்ன செய்யட்டும் ?
உன் நினைவுகளை
ஓரமாய் கொட்டிவிட்டு
இன்னோர்
செடியை நடவா ?
இல்லை
உன் நினைவுகளின்
பூக்களைச் சூடியே
செடிகளை எல்லாம்
பிடுங்கி எறியவா ?
நீண்ட நாட்களுக்குப் பின்
எழிலின் கண்கள்,
இறுக்கத்தை விட்டு
உருகத் துவங்கின.
இரவு வெகுநேரம்
வானத்தைப் பார்த்தபடி
வெறித்திருந்தான்.
பின்,
காகிதத்தை எடுத்து
‘வித்யா நீ விடையா ?’
என்று தலைப்பிட்டு
கதை எழுத ஆரம்பித்தான்.
மேற்கு அடிவானத்தில்
ஓர்
விண்மீன் மின்னி மின்னி
ஆமாம் என்று ஆமோதித்தது.
0