எவ்வளவு முறைதான்
இழுத்தாலும்
கடிவாளம் கழன்று போன குதிரையாய்
குதிக்கிறது மனசு.
தியானம் செய்யவேண்டுமென்று
ஒற்றைப் புள்ளியில்
உள்ளம் குத்தினால்.
அந்த ஒற்றைப்புள்ளி வாய்திறந்து
மொத்தமாய் என்னை விழுங்கி
கனவுகளுக்குள் துப்பிவிடுகிறது.
ஒரு முறைகூட வென்றதில்லை
என் மனசை.
மெல்லிய
ஒரு நூலிழையில் பிடித்து
கிளைக்குத் தாவி,
உச்சிக்குச் சென்று
ஏதோ நினைவுகளோடு
உரையாடப் போய்விடும்
சில வேளைகளில்
கடல்களைத்தாண்டி
கப்பல்களைத் தாண்டி
கிராமத்துத் தொழுவத்தின்
கொட்டிலைப் போய்
தொட்டிலாக்கிக் கொள்ளும்.
தியானிக்கத் துவங்கும் போதுதான்
ஏமாற்றங்களின் காயமும்
ஏற்றங்களின் மாயமும்
வேண்டுமென்றே மனம் மோதும்
பார்த்த திரைப்படமும்
படித்த கவிதை நூலும்
கடல்..மழை…வானம்
ஏதோதோ
எண்ணக் குவியல்களுக்குள்
இதயம் இளைப்பாறத் துவங்கும்
இழுத்துப் பிடிப்பதென்பது
காற்று,
மனசு
இரண்டிடமும் இயலாத காரியம்.
ஒற்றைப்புள்ளியில்
இதயம் குவித்து
தியானம் செய்யும் நிதானம் இழந்து
திரும்பும் மனசு,
உயிர்மூச்சின் ஒழுங்கோடு
கலந்து மீண்டும் தியானத்தைத் துவங்கும்.