மீண்டும் மீண்டும் தோல்வி

 

( கல்கி இதழில் வெளியான எனது சிறுகதைகளில் ஒன்று )

அமெரிக்காவின் அந்த சாலையில் அப்போது யாருமே இருக்கவில்லை, வெறிச்சோடிக் கிடந்தது அந்த ‘பிரீ வே’ என்று அழைக்கப்படும் சிக்னல்களே இல்லாத நெடும் சாலை. என் சிந்தனைகள் எங்கோ ஓட அதைத் துரத்திப் பிடிக்கும் வேகத்தில் என் வண்டியும் அதைத் தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும். கவனிக்கவேயில்லை, சட்டென்று என் காருக்குப் பின்னால் போலீஸ் வண்டியின் சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தபோது தான் பக்கென்று ஆகிவிட்டது. பிடிபட்டு விட்டோ ம் !

மனசுக்குள் சட்டென்று திகில் ஒன்று பரவ, காரின் வேகம் காட்டியைப் பார்த்தேன், அது மணிக்கு தொன்னூறு மைல் என்றது. மெதுவாக பிரேக்கை அழுத்தி சாலையின் வலது ஓரமாய் வண்டியை நிறுத்தினேன். வண்டி ஓட்டும் போது எதையும் யோசிக்காமல் இருந்திருக்க வேண்டும், இல்லையேல் குறைந்த பட்சம், வேகத்தை ஒரே நிலையில் நிறுத்தும் ‘குரூஸ் கன்ரோல்’ -ஆவது உபயோகித்திருக்க வேண்டும். நேரம் தாண்டி கவலைப் பட்டேன்.
எப்போதுமே நடந்தபின் வருந்துவது தானே வழக்கம்.

பின்னால் வந்த காவல்துறை வாகனத்திலிருந்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்த காவலர் ஒருவர் இறங்கினார். இங்கே காவலர்களுக்கு நீல நிற உடை. இடுப்பில் அமைதியாக உட்கார்ந்திருந்தது கைத்துப்பாக்கி ஒன்று. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவர்கள் சுடலாம். அதற்காக இருமிக் கொண்டே ஒருவர் கட்டளை அனுப்பவேண்டியது இல்லை. நம்ம ஊரில் தான் லத்தியையும், துப்பாக்கியையும் போலீஸார் அடிக்க மட்டுமே உபயோகிக்கிறார்கள். இங்கே காவலர்களைப் பார்த்தாலே மனசுக்குள் ஒரு பயம் தான்.

ஒருமுறை சிகாகோவில் ஒரு இந்தியனை அதிக வேகம் காரணமாக நிறுத்தியிருக்கிறார்கள், அவர் தன்னுடைய லைசென்ஸை காரின் டாஸ்போர்ட் -ல் வைத்திருந்திருக்கிறார். காவலர் அருகே வந்ததும் லைசென்சை எடுத்துக் காட்டுவதற்காக அந்த டாஸ்போர்ட் இவர் திறக்க, காவலருக்கு இவன் என்னவோ கைத்துப்பாக்கியைத் தான் எடுக்கப் போகிறானோ என்ற பயம்,. எதையும் யோசிக்கவில்லை வினாடிக்கும் குறைவான நேரத்தில் காவலர் சுட, அதே இடத்தில் இளைஞர் இறந்து போயிருக்கிறார். இந்த கதைகளை எல்லாம் கேட்டபின் நான் எங்கே நகர்வது ?

சொல்ல மறந்து விட்டேன், இந்த ஊரில் காவலர் ஒரு காரை நிறுத்துகிறார் என்றால் நாம் காரைவிட்டுக் கீழே இறங்கி விடக் கூடாது. காருக்குள்ளே கையை ஸ்டியரிங் மீது வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். இதே நிலை நம்மூரில் என்றால் ‘ என்னடா பெரிய முதலமைச்சரா நீ ? இறங்க மாட்டியோ கீழ ?’ என்று வசை விழும். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வரும்போது எப்படி எல்லாம் மாறவேண்டியிருக்கிறது ? சின்னச் சின்ன விஷயங்கள் எத்தனை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

கற்றுக் கொண்டு தான் என்ன பயன் ? இன்றைக்கு நான் மாட்டிவிட்டேன். அறுபத்தைந்து மைல் க்கு பதிலாக நான் வந்ததோ தொன்னூறு மைல் வேகம். எப்படியும் இருநூற்றைம்பது டாலர், பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் தண்டம் தான். யோசித்துக் கொண்டிருந்தபோதே காவலர் வந்து காரின் கதவை தட்டினார். ஒரு சின்ன புன்சிரிப்போடு கேட்டார் ?

‘ உங்கள் அதிகப்படியான வேகத்துக்கு ஏதேனும் காரணம் உண்டா சார் ?”
என்ன சொல்வது ? தெரியாமல் வந்து விட்டேன் என்றா ? இல்லை, சிந்தனைகள் என்னிடம் இல்லை அவை தான் காரோட்டிச் சென்றன என்றா ?
என்ன சொன்னாலும் இங்கே தப்பிக்க இயலாது. எல்லாவற்றுக்கும் ஒரு பதில் தயாராய் வைத்திருப்பார்கள். பதில் இல்லாத கேள்விகளை இவர்கள் தவறியும் கேட்பதில்லை. இவர்களிடம் என்ன சொல்லியும் ஆகப் போவதில்லை என்று தெரிந்ததால்…
‘இல்லை’ என்றேன். நல்லவேளை அவர்களுடைய வழுக்கும் ஆங்கிலத்தை புரியுமளவுக்கு அமெரிக்கா பழகியிருந்தது எனக்கு!.
‘நீங்கள் இருபத்தைந்து மைல் அதிகமான வேகத்தில் வந்திருக்கிறீர்கள், இருநூற்று இருபது டாலர் கட்ட வேண்டும்’ கவலைப் படாதீர்கள் உங்களுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் தரப்படும். காத்திருங்கள் நான் போய் ‘பேப்பர் ஒர்க்’ முடித்து விட்டு வருகிறேன்.
சொல்லிவிட்டு என்னுடைய ‘சரி’ என்ற பதிலுக்குக் கூடக் காத்திராமல் சென்றும் விட்டார் அவருடைய காரை நோக்கி.

நான் இதுவரை பிடிபட்டதே இல்லை, வாரம் தோறும் ஆறு மணி நேரம் பயணித்து என் மனைவியைப் பார்க்க பக்கத்து ஸ்டேட் செல்வது வழக்கம் தான். இன்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாக யோசித்து விட்டேன்.
யோசிக்காமல் என்ன செய்வது ? கடந்த டிசம்பர் மாதம் தான் எனக்கு கல்யாணம் முடிந்தது. அமெரிக்க வேலை என்னை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு துரத்தியது. இந்த துரத்தியது என்னும் வார்த்தை எல்லாம் சும்மா தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் மோகம் தான் என்னை அனுப்பியது என்பது தான் உண்மை. ஆச்சரியப்படும் விதமாக என் மனைவியையும் அவளுடைய கம்பெனியிலிருந்து அமெரிக்கா அனுப்பினார்கள், கொஞ்சம் முட்டி மோதிய பிறகு. ஆனால் பக்கத்து மாநிலம். வாரம் ஒருமுறை மட்டுமே நாங்கள் சந்திப்பது வழக்கம். அவள் இங்கே வந்து ஆறு மாதம் ஆகப் போகிறது. எங்கள் அலுவலக கிளை ஒன்று அவள் வேலை பார்க்கும் மாநிலத்திலேயே இருக்கிறது ஆனால் பணி மாற்றம் மட்டும் ஒத்துவரவே இல்லை.

எல்லாம் நன்மைக்கே என்று மட்டும் ஆறுதல் வார்த்தைகள் எல்லா பக்கத்திலிருந்தும்.
எது நல்லது ? பணிமாற்றம் கிடைக்காததா ? யோசித்தால் வறண்ட ஒரு சிரிப்பு தான் வந்தது.

இங்கே எல்லாமே சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் ஜாதிகள் தான். ‘ நீ, இந்த குழுவின் மிகப் பெரிய பலம்’ என்று யாராவது சொன்னாலே, புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் – உன்னுடைய பணிமாற்றம் எல்லாம் இப்போது நடக்காது. உன்னைப் போல இரவு பகலாய் உட்கார்ந்து கணிணி வெறிக்கும் ஒருவன் கிடைக்கும் வரை நீ காலி – என்பது தான். அப்படித்தான் ஆயிற்று ஒரு முறை. அதற்குப் பின் நீண்ட நாட்கள் போராடி, ஒரு நேர்முகத் தேர்வு எல்லாம் முடித்து, உன்னை என்னுடைய டீமில் சேர்த்துக் கொள்கிறோம் என்று அடுத்த பிராஞ்ச் லிருந்து புராஜக்ட் மானேஜர் ஒருவர் கூறிவிட்டார். அடுத்தவாரம் நான் நிரந்தரமாக அந்த அலுவலகத்துக்கு மாற்றலாகி இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது ? விதியின் கரங்கள் நீளமானவை . அவை அந்த பணிமாற்றத்தையும் நிறுத்தி வைத்தது. அதற்குக் காரணமாய் இறக்கி வைத்த விஷயம் தான் அதிர்ச்சிக்குள் எங்களை தள்ளியது.

அலுவலகத்தில் ஆள்குறைப்பு !!! யாராரோ வாங்குவார்கள் என்று எதிர்பார்த்து தயாரித்து வைத்த மென்பொருட்களை எல்லாம் கஸ்டமர் கள் வேண்டாம் என்று நிராகரித்து விட்டதில் கம்பெனிக்கு மில்லியன் கணக்கில் நஷ்டம். அதனால் ஆள் குறைப்பு ஒன்றே வழி என்று நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. மொத்தத்தில் நிர்வாகத்தின் திறமையின்மை வேலையாட்களின் மேல் சிலுவையாய் விழுகிறது. நிர்வாகிகள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை, கீழ்மட்ட தொழிலாளர்கள் மட்டும் பணிநீக்கப் படுவார்களாம். என்ன நியாயமோ தெரியவில்லை. ஓட்டைப் பானையில் நீர் நிற்கவில்லை என்பதால் கிணறை மாற்றச் சொல்கிறது நிர்வாகம். சொல்கிறது என்பது கூட சரியான வார்த்தையல்ல, கட்டளை என்பதே சரி.

இப்படி கம்பெனிகளை கவிழ்ப்பதில் பங்குச் சந்தைக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு, ஏதாவது ஒரு கம்பெனியை திட்டமிட்டே ஏதாவது வதந்திச் செய்திகளை இணையத்தில் உலவவிட்டு கெடுப்பது, இதற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் சிலரையே உடந்தையாய் கொள்வது. பின் கம்பெனியின் பெயர் கெட்டுப் போய், திடீரென அதன் பங்குச் சந்தை மதிப்பு பூமியில் விழுந்ததும் மில்லியன் கணக்காய் பங்குகள் வாங்குவது, பிறகு கம்பெனியைப் பற்றி நல்ல செய்திகள் பரப்பி அவை பங்கின் விலையை ஒரு கணிசமான நிலைக்கு உயர்த்தியதும் வாங்கிய பங்குகளை விற்று பணம் சம்பாதிப்பது. இப்படியே ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாய் கவிழ்த்து பணம் சம்பாதிக்கிறார்கள் பலர். எங்கள் கம்பெனி பங்கு கூட இருபத்து நான்கு டாலர் மதிப்பிலிருந்து எட்டு டாலர் மதிப்புக்கு இறங்கியது. இறங்கிய அன்று நாற்பத்து இரண்டு மில்லியன் பங்குகள் விற்றுத் தீர்ந்தன!
அடுத்த நாளே பங்கின் விலை பத்து ரூபாய் தொட, முப்பது மில்லியன் பங்குகள் விற்கப் பட்டன. ஒரே நாளில் அறுபது மில்லியம் லாபம் , பங்கு சந்தை நரிகளுக்கு!!

இப்படி யாராரோ ஏதேதோ செய்ததில் வேலை நாளை இருக்குமா என்பதே கேள்விக் குறியாய் வளைந்தது. யாரிடமும் பதில்கள் இல்லை.
ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் இன்னொரு கேள்வியே தொங்கியது. ஒவ்வொரு பதிலும் கூட இன்னொரு அனுமானமாகவே இருந்தது.
வாசல்களெங்கும் அனுமர் வாலாய் நீண்டு கிடந்தன வதந்திகள். அனைத்து இந்தியர்களும் வேலையை விட்டு அனுப்பப் படுவார்கள், டெஸ்டிங் குழுக்கள் எல்லாம் மூடப்படும், என்றெல்லாம் வதந்திகள். போகிறபோக்கில் நான் கிளப்பி விட்ட ஒரு வதந்தியைக் கூட அடுத்த நாள் நான்குபேர் என்னிடம் சொன்னார்கள் விஷயம் தெரியுமா…. என்று ஆரம்பித்து. அப்படியா ? என்று கேட்டு வைத்தேன். இல்லாவிட்டால் இருக்கிற டென்ஷனில் என்னை எல்லாருமாய் சேர்ந்து அடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்போது எனக்கு பணிமாற்றம் கிடைக்காதது பெரிய விஷயமாய் தெரியவில்லை. வேலை இருந்தால் போதும் என்றாகி விட்டது.
கிளைகள் இருக்கும் போது, பூக்களுக்கு ஆசைப்படும் மரம், கிளைகள் இல்லையேல் வேராவது இருக்கட்டுமே என்று வருத்தப்படுவது போல தான் இருக்கிறது மனிதனுடைய மனதும். ஒவ்வொன்றாய் தேடித் தேடி அலையும், கிடைக்கக் கிடைக்க அடுத்த படிக்குத் தாவும். கிடைத்ததை இழக்கும் தருணம் வரும் போது தான் இருப்பது கூட போதும் என்று தோன்றும். சாவு சமீபிக்கும் போது தானே உலகம் உன்னதமானதாய் பலருக்குப் புரிகிறது .

ஆட்களின் பட்டியல் இன்று வரும் நாளை வரும் என்று சொல்லிச் சொல்லி ஒரு வாரம் கடத்தி விட்டார்கள், இனி திங்கட் கிழமை வரும் என்கிறார்கள். ‘ நீங்கள் இந்த கம்பெனிக்கு அளித்த பணி மகத்தானது’ என்னும் ஒரு பளிங்கு வாசகத்தோடு இரண்டு செக்கியூரிட்டி ஆட்கள் வந்து நம்மை அழைத்து வாசல் வரை கொண்டு போய் விடுவார்கள். அது தான் அமெரிக்காவின் ஆள் குறைப்பு பணியின் முறை. வேலையில்லை என்று சொல்லிவிட்டால் பணியாளர்கள் கணிப்பொறி வழியாக எந்த தகவல்களையும் அழித்துவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கை காரணமாம். எனக்கென்னவோ அப்படி ஒரு பணிநீக்கம் அவமானமாய் தோன்றியது. “வேலை இல்லை நாளை முதல் வராதே”  என்றால் சகித்துக் கொள்ளலாம், சும்மா கைதி போல வெளியே பிடித்துத் தள்ளினால் என்ன செய்வது ?

சிந்தனையைக் கலைத்தார் ‘ஸ்பீடிங் டிக்கெட்’ கொண்டு வந்த காவலர். ‘ உங்களுக்கு இந்த நாள் இனிமையாய் இருக்கட்டும் ‘ என்று சொல்லி விட்டு நகர்ந்தார். எல்லாம் இங்கே சம்பிரதாயம் தான். சம்பிரதாய வார்த்தைகள் கேட்டுக் கேட்டு சலித்து விட்டன. ‘ நான் உங்களை கொல்லப் போகிறேன், பிளீஸ் ..” என்று சொல்லி விட்டுத் தான் சுடுவார்கள் போலிருக்கிறது. நலம் நலமறிய ஆவல் என்று ஆரம்பித்து, பின் திகட்டத் திடட்ட சுகவீனச் செய்திகளையும் சுமந்து வரும் கடிதம் தான் ஞாபத்துக்கு வருகிறது.இங்கே காவலர்கள் மாமூல் வாங்கினால் எப்படி இருக்கும் ? ஒரு ஐம்பது டாலர் கொடுத்து தப்பித்திருக்கலாம் , எனக்குள் இருந்த அந்த கேவலமான மனசு சொன்னது.

பிறகு நான் வழக்கமாய் ஓட்டவேண்டிய வேகத்தை விட குறைவான வேகத்தில் தான் ஓட்டியிருப்பேன். நல்லவேளை அதற்காகப் பிடிபடவில்லை !
ஆறு மணி நேரப் பயணம் ஏழு மணி நேரமாய் நீண்டிருந்தது.

வீடு போய் சேர்ந்தபோது இருட்டியிருந்தது. களைப்பில் உட்கார்ந்த போது திடீரென்று தோன்றியது. நண்பனுக்கு போன் பண்ணி பேசினால் என்ன ?
அவனும் நான் மாற்றலாகி வரவேண்டிய குழுவில் தான் இருக்கிறான். ஏன் இந்த பணி மாற்றம் தடை பட்டது என்றாவது தெரிந்து கொள்ளலாமே !

கூப்பிட்டேன், ‘என்னடா ? அந்த காலியிடம் இல்லேன்னு சொல்லிட்டாங்க ? முதல்ல இரண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டியது. அப்போ என்னை எடுத்துக்கல, இப்போவும் ஒரு வாரம் இருக்கும்போ வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரி இனிமே ஏதாவது வாய்ப்பு வரமாதிரி இருக்கா ? மிச்சம் மீதி இருந்த நப்பாசை எல்லாம் பொறுக்கி எடுத்து கேட்டேன்.

“இல்லடா… இனிமே சான்ஸே இல்லை…”
“என்னடா இப்படி பட்டுன்னு சொல்லிட்டே – ஆச்சரியமாய் கேட்டேன்”

ஏன்னா ? எங்க டீமையே மூடிட்டாங்க ! ஆள்குறைப்பை இன்னிக்கு இங்கே நடத்தியிருக்காங்க.
எனக்கும் வேலை போய்டுச்சு. நான் இன்னும் ஒரு வாரத்துல கிளம்பியாகனும். உனக்கு அதிர்ஷ்டம் டா மச்சி, இல்லேன்னா நீ பணிமாற்றம் ஆகி இங்கே வந்திருப்பே. இப்போ உன் வேலையும் போயிருக்கும்.

‘சாரி டா மச்சி’ என்று என் வாயிலிருந்து விழுந்த வார்த்தையை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. தொடர்ந்து பேசினான்.
நான் இங்கேயே வாழனும்ன்னு வரல மச்சி, கொஞ்ச நாள் இருந்தாச்சு, இனிமே போக வேண்டியது தான். எப்பவுமே நாம ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது. அப்படியே நம்மள ஆண்டவன் கிட்டே விட்டுடணும், அவன் கிட்டே ஜெபம் பண்ணும்போ கூட ” எனக்கு எது நல்லதுண்ணு உமக்கு தோணுதோ அதைத் தாரும்” ன்னு தான் நான் கேட்பேன். சோ, இந்த வேலை போனது அவரோட விருப்பம் தான். உனக்கு பணிமாற்றம் கிடைக்காதது கூட அவரோட விருப்பம் தான். வாழ்க்கை எப்படி வருதோ அப்படியே எடுத்துக்கணும் மச்சி….

அவன் பேசிக் கொண்டே போனான், வேலை போனவன் அவன். நான் ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இப்போது அவன் சொல்கிறான்.
எனக்கு ஆறுதல் !!! ஆச்சரியம் தான். இப்படியே எல்லாரும் இருந்துவிட்டால் உலகில் மனம் உடைவு, தற்கொலை இதெல்லாம் இருக்காது என்று தோன்றியது. கொஞ்சம் குற்ற உணர்வும், மனசுக்கு மிகத் தெளிவான ஒரு பதிலும் கிடைத்தது போல தோன்றியது எனக்கு.

ஆமாம்டா, சில நேரம் தோல்விகள் கூட வெற்றிகள் தான் இல்லையா என்றேன்.

ஆமா.. ஆமா… நீ கூட ஒரு கவிதைல சொல்லி இருந்தியே, ஒரு சூதாட்டத் தோல்வி ஒரு இதிகாசத்தை பிறக்க வைத்தது. ஒரு சிலுவை மரச் சாவு ஒரு புது மதத்தைப் பிறக்க வைத்ததுங்கற கருத்துல… தோல்விகள் எல்லாம் தோல்விகள் இல்லேன்னு ரொம்ப நாள் கழிஞ்சு பார்த்தா புரியும். எனக்கு ஒரு காதல் தோல்வி கூட வந்தது , அப்போ அது மிகப் பெரிய தோல்வியா தெரிஞ்சுது. இப்போ அன்பான மனைவி, ஒரு அழகான குழந்தைன்னு ஆனதுக்கு அப்புறம், அந்த தோல்வி தோல்வியல்ல ன்னு தோணுது. காலம் தான் சிறந்த களிம்பு !!! ஒத்துக்கறியா இல்லையா ? என்றான்.

ஒத்துக்கறேண்டா…. நம்பிக்கையில்லேன்னா பாரேன். நான் இதை ஒரு கதையாகவே எழுதப் போறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

சினிமாவுக்கு பாட்டு எழுதுகிறேன்


“வணக்கம் சார்… நான் தான் ராஜ்”

எந்த ராஜ் யா ? என்ன வேண்டும் என்று அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இருந்தாலும் தொண்டைக்குள் நின்றிருந்த மிச்ச உமிழ்நீரையும் விழுங்கிக் கொண்டே. ” போன வாரம் பேசினோமே சார். இன்னிக்கு வரச் சொல்லியிருந்தீங்க… பாட்டு எழுதுற விஷயமா…. ” என்று இழுத்தேன்

“ஓ… அந்த பாட்டு எழுதறவனா… உட்காரு..” – என்று சொல்லியபடி கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்தபோது மனுஷனை மதிக்கத் தெரியாத ஒரு இசையமைப்பாளர்யா… என்று மனசுக்குள் சுயகெளரவம் என்று நானாய் கற்பனை செய்து வைத்திருந்த மனசு அவமானப் பட்டது.

இருக்கை நுனியில் உட்கார்ந்தேன். இலக்கியவிவாதங்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம் அலட்சியமாய் செளகரியமாய் உட்கார்ந்து கொள்ளும் நானா இப்படி பவ்யம் காட்டி அமர்கிறேன் என்பதும், ஏன் இப்படி பவ்யம் காட்டுகிறேன் என்பது சத்தியமாய் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் எப்படியாவது ஒரு வாய்ப்பு வாங்கியாகவேண்டும். இரண்டு படங்களிலாவது பாடல் எழுதி நாலுபேர் நம்ம வரிகளை பாடித்திரியவேண்டும் என்னும் ஆர்வம் தான் மனசெங்கும்.

இசையமைப்பாளம் விதேயன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய இசைக்குறிப்புகளோடு மல்லிட்டுக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ அவர் வேண்டுமென்றே இழுத்தடிப்பது போல் தோன்றியது. ஆனாலும் அமர்ந்திருந்தேன். வேறு வழி ?

சட்டென்று திரும்பிப் பார்த்துக் கேட்டார். “நீ தானன்னா க்கு பாட்டு எழுதுவியா ”
“எழுதுவேன் சார்….” சட்டென்று சொல்லிவிட்டேன். ஆனால் எழுதியதில்லை.
” சார் நான் நாலு புக் போட்டிருக்கேன் சார். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் பாராட்டியிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டே மேஜையில் நான் எடுத்து வைத்த புத்தகங்களை அவர் ஒரு மரியாதை நிமித்தம் கூட பிரித்துப் பார்க்காதது சத்தியமாய் எனக்கு அவமரியாதையாய் தான் இருந்தது. ஆனாலும் பேசவில்லை.

சரி … ஒரு டியூண் சொல்றேன்  எழுது பார்ப்போம்…
சொல்லிக் கொண்டே அவர் போட்ட டியூன் இது தான்.

“தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா
தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா”

“சார் என்ன சூழ்நிலை சார்..” என்று நான் கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பார்வையே காட்டிக் கொடுத்து விட்டது.
” லவ்வர்ஸ் பாடறாங்க…” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். அதற்கு மேல் எனக்குள் எழுந்த கேள்விகளை நான் கேட்கவில்லை.
கேட்டால் நீ எழுத வேண்டாம்.. என்று சொல்லிவிடுவாரோ என்னும் பயம் தான் காரணம்.

நான் மனசுக்குள்ளும் காகிதத்திலும் மாறிமாறி ஏதேதோ எழுதிக் கிழித்து விட்டு… சொன்னேன்…

பின்னல் போட்ட மின்னல் காரி
காதில் காதல் சொல்வாளா…
கன்னம் கோர்த்த கன்னம் கொண்டு
கவிதை எழுதிச் செல்வாளா ?

எழுதி முடித்து பெருமிதத்தோடு அவரிடம் வரிகளைக் காண்பித்தபோது சலனமே இல்லாமல் வாங்கிப் பார்த்தவர் சொன்னார்….
“இதுல ஏதும் அட்ராக்டிவ் வேர்ட்ஸ் இல்லையேபா…. “..
” அது வந்து சார்… காதலன் காதலியை நினைச்சு…”

“அது என்ன மண்ணையோ நினைச்சுட்டு போகட்டும்….. முதல் வார்த்தை ரொம்ப கேச்சியா இருக்கணும்… இப்போ பாரு.. மன்மதராசா… இல்லேண்ணா காதல் பிசாசே… இப்படி ஏதாவது”

“காதல்பேயே காதல் பேயே
காதில் காதல் சொல்வாயே….”

ன்னு வெச்சுக்கலாமா சார்…. நான் கிண்டலாய் தான் கேட்டேன். ஆனாலு அவர் கொஞ்சம் பரிசீலனை செய்வது போல் தோன்றவே பக் கென்றாகிவிட்டது எனக்கு.

“இது பரவாயில்லை.. ஆனாலும் காதல் பிசாசே இருக்கிறதனால… வேற ஏதாவது எழுது…”

நான் மீண்டும் மண்டையைச் சொறிந்தேன்.

“நரகம் மீதில் கரகம் ஆடும்
நவரச தேவதை நீதானோ…
கிரகம் தாண்டி நகரம் தீண்டி
பரவசம் தருவதும் ஏந்தானோ”

” அட… இது பரவாயில்லை…. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நீ பாட்டு எழுத கத்துக்கறே…. ”

“சரி… நான் முழு டியூனையும் இந்த கேசட்ல வெச்சிருக்கேன். வீட்ல போய் உட்கார்ந்து நல்லா யோசிச்சு ஒரு பாட்டு எழுதிட்டு வா… பாட்டுல, கொஞ்சம் விரசம் தூக்கலா இருக்கணும்…. கேக்கறவனுக்கு பத்திக்கணும்.. நான் உன்னை கற்பழிப்பேன்,, ந்னு கூட எழுதலாம்… ”
என்று அவர் சொன்னபோது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனேன்.

ஆனாலும் பேசாமல் டியூன் கேசட்டை வாங்கி வீட்டில் வைத்தேன். திரும்பத் திரும்ப யோசித்து நான் எழுதிய சரணங்கள் இவை தான்…
மேற்கு வானம் மஞ்சள் பூசி
நீலக் கடலில் குளிக்க,
வெப்பம் போன காற்றுக் கூட்டம்
தெப்பத்துக்குள் கிடக்க,
வெள்ளிப் பாத வெள்ளை வாத்து
அல்லி விலக்கி மிதக்க,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உந்தன் பின்னே நடக்குதடி.

0

தாழக்கரையின் தாழம் பூவும்
வாசனை வீசிச் சிரிக்க – அது
பட்டுப் பூச்சியின் வண்ண இறகில்
மெல்ல மோதிக் களிக்க
பச்சை கொட்டிய வயலின் நண்டுகள்
வளைகளை உடம்பில் உடுத்த,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உனக்குள்ளேயே கிடக்குதடி.

எழுதி முடித்து பாடலை இசையமைப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு வந்தேன். அவ்வளவு தான் கடலில் போட்ட கல்லைப் போல, நீண்ட நாட்களாக எந்த ஒரு பதிலும் இல்லை.
சரி மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து ரிகார்டிங் ஸ்டுடியோ பக்கம் போனேன். உள்ளே ஒரு பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.
எனக்கு அவர் கொடுத்த அதே டியூண்… ஆனால் வேறு வரிகள்.

திடுக்கிட்டுப் போனேன். உள்ளே ஏதோ ஒரு கவிஞர் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்…

கொள்ளி வாய்ப் பிசாசு நீதானா
கொள்ளை யிடும் ஆளும் நாந்தானா
கொல்லிமலை மேலே மீன் தானா
மெல்லிடையில் நீந்த நாந்தானா…

கவிஞர் வரிகளை வாசித்துக் காட்டக் காட்ட… ஆஹா… பிரமாதம் சார். இந்த பாட்டு தான் இனி நாளைக்கு தமிழகத்தையே கலக்கப் போகுது.
நீங்க இன்னும் ஃபீல்ட் ல இருக்கிறதுக்கு இது தான் சார் ஒரே காரணம்.. கிரேட் என்று பாராட்டு மழை பொழிந்து கொண்டிருந்தார் இசையமைப்பாளர்.

நான் பாக்கெட்டிலிருந்து தபால்கார்டை எடுத்துப் பார்த்தேன். மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம் இருக்கிறது.
ம்ம்.. நமக்கு பாட்டு எழுதும் வேலையெல்லாம் ஒத்து வராது என்று முடிவு கட்டிக் கொண்டு திரும்பி நடந்தேன்.

மனத்திரையில்.. கொள்ளிவாய்ப் பிசாசு நீ தானா என்ற வரிகளுக்கு 70 எம் எம் மில் ஒரு தொப்புள் வந்து பயமுறுத்திப் போனது