சிறுகதை : பையன் எங்கே ?

பையனைக் காணோங்க….

போனின் மறுமுனையில் பதட்டமும், அழுகையுமாய் வழிந்த குரலைக் கேட்டதும் சாகர் வெலவெலத்துப் போனான். முகத்துக்கு நேரே விசிறியடித்துக் கொண்டிருந்த ஏ.சி காற்றையும் மீறி சட்டென உடல் வியர்த்தது. பதட்டத்தில் இருக்கையை பின்னோக்கித் தள்ள அது ஒரு அரைவட்டமடித்து ஆடியது. முன்னால் டேபிளில் இருந்த லேப்டாப் முகத்தில் வரி வரியாய், கட்டம் கட்டமாய் ஆங்கில எழுத்துகளை வாங்கி புரியாமல் பார்த்தது.

பையனைக் காணோமா ? ஏன் ? என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான் ? இருக்கையை விட்டு பதறி எழுந்த சாகரின் கையிலிருந்த செல்போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த ஐடி நிறுவனத்தின் தரை முழுவதும் அழுக்கு கலர் கார்ப்பெட் கைகளை விரித்துப் படுத்திருந்தது. கீழே விழுந்த அந்த போன் இருபதாயிரத்துச் சொச்சம் ரூபாய். இன்னொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால், “ஓ..ஷிட்..” என்று கத்தியிருப்பான். இப்போது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை.

என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான்.. மறுபடியும் கேட்டுக்கொண்டே கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே ஒரு அரை ஏக்கர் நிலம் அளவுக்கு அந்த வர்க் ஏரியா விரிந்து கிடந்தது. சின்னச் சின்ன தடுப்புகளுக்குப் பக்கத்தில் கணினிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள்.

மறுமுனையில் பிரியாவின் அழுகைக்கிடையே அவளுடைய வார்த்தைகளைத் தேடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. ஒரே பையன். போன மாசம் தான் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினான். பிறந்த நாளை கிராண்டா கொண்டாடாதேப்பா கண்ணு வெச்சுடுவாங்க.. ஊரில் பாட்டி சொன்னதையும் மீறி நல்ல செலவு பண்ணி விழா எடுத்திருந்தான்.

மாமாவும், அக்‌ஷத்துமா வெளியே போயிருந்தாங்க…

ஓ… அப்பா தான் கூட்டிட்டு போனாரா ? சாகர் குரலில் கொஞ்சம் பதட்டம் தணிந்தது. வந்துடுவாங்க.. எப்போ போனாங்க…

போய் ஒரு மூணு மணி நேரமாச்சும் இருக்கும்

மூணு மணி நேரமா ? போன பதட்டம் மறுபடியும் வந்து ஒட்டிக் கொள்ள, சரி.. அழாதே, பக்கத்துல எங்கேயாச்சும் போயிருப்பாங்க. என்றான்.

இல்லீங்க, மாமா வெறும் லுங்கியும், பனியனும் தாங்க போட்டிருந்தாரு. பையன் வீட்ல போட்டிருந்த சட்டை தான் போட்டிருந்தான். வேற எங்கயும் போயிருக்க வழியே இல்லை.

போன் பண்ணிப் பாத்தியா ?

பண்ணினேன்.. போனை வீட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காரு.. வெளியே போனா கைல எடுத்துட்டுப் போற அறிவு கூடவா இல்லை ?

பக்கத்துல கடைகளுக்கு எங்கேயாவது போயிருப்பாரோ ?

பக்கத்து கடை, அவங்க போற பார்க், அவங்க சுத்தற ஏரியா எல்லாம் போய் பாத்துட்டேன். அத்தை பையன் லாஸ்ட் ஒன் அவரா பைக்ல சுத்திட்டே திரியறான்.. எனக்கென்னவோ பயமா இருக்குங்க.. மறு முனையில் விசும்பல் சத்தம் அதிகமாகி அழுகையாய் மாறியிருந்தது.

சரி, டென்ஷன் ஆகாதே.. நான் இதோ கெளம்பி வரேன்.. சொல்லிக் கொண்டே பளீரென ஒளிவிட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை அப்படியே மடக்கி கருப்பு நிற பைக்குள் திணித்தான். சுவரில் ஒரு பாம்பு போல தொங்கிக் கொண்டிருந்த பவர் கார்டையும் இழுத்து உள்ளே தள்ளினான். கதவைப் பூட்டாமல், லைட்டை அணைக்காமல் வெளியே வந்தான்.

எதிரே பளீர் விளக்கோடு தெரிந்தது மேனேஜர் முத்து வின் அறை. அந்த அறையைப் பார்த்தபோதே உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் வேகமாக அந்த அறையின் கதவை சம்பிரதாயமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத் திறந்தான்.

வாங்க சாகர்.. என்ன பையோட கெளம்பிட்டீங்க

பையனைக் காணோமாம்…

என்னது பையனைக் காணோமா ? முத்துவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி அவருடைய கண்ணாடியையும் மீறி எட்டிப் பார்த்தது.

அப்பா தான் பையனைக் கூட்டிட்டு போயிருக்காரு, அதனால பக்கத்துல எங்கேயாவது தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஓ.. அப்பா கூட தான் போயிருக்காரா ? அப்போ நோ பிராப்ளம்…

இல்ல… தட்ஸ் த பிராப்ளம்.. அவருக்கு இல்லாத நோய் எல்லாம் இருக்கு. சுகர், லோ பிபி.. எல்லா எழவும் இருக்கு. பாவம்.. சட்டுன்னு லோ பிபி அது இதுன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது ? அதான் டென்ஷனா இருக்கு…

சரி..சரி.. நீங்க கெளம்புங்க… பிளீஸ்… டோன்ட் வரி,,,ஹி..வில் பி ஆல்ரைட்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது ரொம்ப ரொம்ப ஈசி. அதே பிரச்சினை நமக்கு வரும்போது தான் எந்த ஆறுதலும் வேலை செய்யாது. சோலியப் பாத்துட்டு போய்யா.. அவனவன் கஷ்டம் அவனவனுக்குன்னு கத்தத் தோணும். சாகர் எதையும் சொல்லவில்லை, தாங்க்ஸ்… என்று மட்டுமே சொன்னான்.

அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை, வேக வேகமாக கதவில் அக்ஸஸ் கார்டைக் காட்டினான். பீப் என சத்தமிட்டு இறுக்கம் தளர்ந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டே ஓடிய சாகரை செக்யூரிடி பிடித்து நிறுத்தினார்.

சார்..சாவி..சாவி… ரூம் சாவி சார்…

சாவி ரூம்லயே தான் இருக்கு… நீங்களே பூட்டி சாவியை எடுத்துக்கோங்க, கொஞ்சம் அர்ஜன்ட்… பேசிக்கொண்டே ஓடினான் சாகர்.

சரசரவென இரண்டு மாடிகள் கீழே இறங்கி, கார்ப்பார்க்கிங்கை நோக்கி ஓடுகையில் மீண்டும் போன்…

போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க போறேங்க… ஐயோ.. பையன் எங்கே போனானோ…

கொஞ்சம் வெயிட் பண்ணு, என் பிரன்ட்ஸ்க்கு கால் பண்றேன்.. தேடுவோம்… வரேன்… நான் கார்ல ஏறிட்டே இருக்கேன்…

லேட் ஆயிட்டே இருக்கு.. நைட் ஆச்சுன்னா கண்டு பிடிக்க கஷ்டம்.. சொல்லும் போதே பிரியாவின் அழுகை போனில் கொட்டியது.

பெண்களுடைய அழுகை தான் ஆண்களுடைய டென்ஷனை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. தனது சான்ட்ரோ காரில் ஏறி சட்டென கிளம்பினான் சாகர்.

“டாடி.. இன்னிக்கு ஒரு நாளைக்கும் லீவ் போடுங்களேன்” காலையில் அக்‌ஷத் சட்டையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

இல்லப்பா.. இன்னிக்கு கண்டிப்பா போணும், ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு.. முத்து வரச் சொல்லியிருக்காரு.

யாருப்பா அது முத்து ?

என்னோட பாஸ் டா..

அதென்ன பாஸ் பா.. என் பையன் வீட்ல நிக்க சொல்றான்னு சொல்ல வேண்டியது தானே..

ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு… அதனால நிறைய வேலை..

ஆமா.. பையனுக்கு கிளையன்ட் விசிட், வேலை எல்லாம் ரொம்ப நல்லா புரியும் ரொம்ப டீட்டெயிலா சொல்லுங்க. பாத்திரங்களின் இசைக்கிடையே பிரியாவின் குரல் கிண்டலுடன் ஒலித்தது.

பையனுக்கு புரியுதா இல்லையாங்கறது முக்கியமில்லை, ஆனா உண்மையைச் சொல்லணும்ல…

ஆமா..ஆமா.. பையனுக்கு சொல்ற சாக்குல என் கிட்டே தான் அதைச் சொல்றீங்க…

சே…சே… உனக்கு இனிமே புதுசா சொல்லணுமா என்ன ? சாக்ஸை உதறிக் கொண்டே கேட்டான் சாகர். அவனுடைய பதிலில் சிரிப்பு கொஞ்சம், வழிசல் கொஞ்சம் கலந்திருந்தது.

சரி.. சரி.. கெளம்புங்க…

டாடி…. பிளீஸ்….

இல்லடா செல்லம்.. நாளைக்கு லீவ் போட்டு உன்னை ஊர் சுத்திக் காட்டறேன் சரியா…

டேய்.. நாளைங்கறது டாடிக்கு எப்பவும் வராதுடா… அவருக்கு கிளையண்ட் தான் முக்கியம்…

சாகர் சிரித்துக் கொண்டே, பையனை அள்ளி எடுத்துக் கொஞ்சிவிட்டு காரை நோக்கி நடந்தான். பின்னால் பையன் ஒரு சோக முகத்தோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டே நின்றான்.

டேய்..சாவுகிராக்கி.. பாத்து ஓட்டமாட்டே ?

சர்ர்ர்ர்ர்ரக்… என பிரேக் அடித்து நிமிர்ந்த சாகரின் காருக்கு முன்னால் ஒரு பல்சர் நின்றிருந்தது. அவன் எப்போ அங்கே வந்தான் என்பதையே சாகர் கவனிக்கவில்லை. கவனம் எல்லாம் பையன் மீது தான் இருந்தது…

இந்த ஐடி கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே ஏதாவது ஒன்று மாறி ஏதோ ஒரு வேலை வந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய ? ஐந்திலக்கத்தில் ஒரு பெரிய எண் வங்கிக் கணக்கில் மாசம் தோறும் அட்சர சுத்தமாய் வந்து சேரும். அதற்குக் கொடுக்கும் விலை ரொம்பப் பெரியது.

கிளையன்ட் விசிட் என்றாலே போச்சு. அவன் தானே பணம் காய்க்கும் மரம். அவனை எவ்வளவு தூரம் சோப்பு போடறோமோ அந்த அளவுக்கு தான் கம்பெனி வளரும். ஒருத்தன் அமெரிக்காவிலிருந்து விசிட்டுக்கு வருகிறான் என்றாலே இங்கே எல்லோருக்கும் கிலி பிடித்துக் கொள்ளும்,

அஜென்டா தயாராக்கிட்டியா ? விசிட் அரெஜ்மென்ட் எல்லாம் என்ன நிலமைல இருக்கு ? லாஜிஸ்டிக்ஸ் ல எந்த பிரச்சினையும் வரக்கூடாது… வர்ரவன் சாதாரண ஆள் இல்லை. அவன் அந்த குரூப் டைரக்டர். அவனோட மனசைக் குளிர வைக்கிறது தான் நம்ம ஒரே குறிக்கோள்.

அஜென்டா பண்ணிட்டிருக்கேன் முத்து.. இன்னும் முடியல..

சீக்கிரம் முடி.. இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. நாலு கேப்பபிளிடி பிரசன்டேஷன் வேணும். டெஸ்டிங் சர்வீசஸ்ல யார் அவெய்லபிள்ன்னு பாரு… நாலு பிரசன்டேஷனாவது இருக்கணும். வரவனுக்கு நம்ம கம்பெனி மேல நல்ல அபிப்பிராயம் வரணும்.

கண்டிப்பா பண்ணிடலாம்.

சீக்கிரம் பண்ணு… ஐ  வான்ட் டு ரிவ்யூ த பிளான். பிரசன்டேஷன் குடுக்கிறவங்களோட டைம் வேணும். அவங்களோட பிரசன்டேஷன் வாங்கி முதல்ல படிச்சுப் பாரு. ஒரு டிரை ரண் போடணும். சும்மா கிளையன்ட் முன்னாடி நிறுத்தினா சொதப்பிடுவாங்க. பத்து மில்லியன் அக்கவுண்ட்ப்பா… கொஞ்சம் சொதப்பினாலும் வீ வில் லூஸ் அவர் ஜாப்.. அப்புறம் வீட்ல தான் இருக்கணும்.

யா.. ஐ அண்டர்ஸ்டேன்ட்.. நான் பண்ணிடறேன்..

ஐ..நோ.. யூ வில் டூ.. பட்.. ஐ னீட் திஸ் குவிக்லி மேன்…

முத்துவின் விரட்டலிலும் காரணமில்லாமல் இல்லை. கிளையன்ட் விசிட் என்றால் அப்படி ஒரு முக்கியம் ஐடியைப் பொறுத்தவரை. வருபவனுக்கு மாலை போட்டு வரவேற்பது முதல், தனியே ஒரு கான்ஃபரன்ஸ் ரூம், பக்கத்திலேயே ராடிசன் ஹோட்டல் சிப்பாய்கள் ரெண்டுபேர் அவனுக்கு காபியோ, டயட் கோக்கோ ஊத்திக் கொடுக்க. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அலகில் கிளிப் போட்டது போல சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன லைஃப் டா இது என அவ்வப்போது சலித்துக் கொள்வான் சாகர். ஆனால் எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை ?. வெட்ட வெயிலில் ரோட்டு நடுவே நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளை விட கஷ்டமானதா நமது வேலை, அல்லது சைக்கிளில் காய்கறி வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கும் பெரியவரை விடக் கஷ்டமானதா நமது வேலை. இல்லவே இல்லை. என மனசைத் தேத்திக் கொள்வான்.

சாலையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, பிரியாவுக்கு போன் செய்தான்.

என்கேஜ்ட் என்றது…

நண்பன் ஶ்ரீனிக்கு போன் செய்தான். டேய் அக்‌ஷத்தைக் காணோமாம்டா மச்சி.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வா…

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியாவின் போன்… கடவுளே நல்ல செய்தியாய் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டே கிளிக்கினான்…

மறுமுனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

இதோ நாம் இன்னும் ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் போலாம்.. அப்பாவும் போயிருக்காருல்ல.. வந்துடுவாங்க… சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே எதிர் திசையில் வந்தது.

சாகரின் கால்கள் வலுவிழந்தன… ஐயோ.. பையனுக்கு ஏதாவது ?… அந்த நினைப்பே அவனுக்குள்ளிருந்த கிலியை அதிகரிக்க கைகள் ஈரமாகி வழுக்கின.

இதோ இன்னும் இரண்டு சிக்னல் தான்.. சாகரின் மனம் எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தது.

என்ன அப்பன் நான். பையன் எவ்ளோ தடவை சொன்னான்.. பேசாம லீவ் எடுக்காம அந்த முத்து பேச்சைக் கேட்டு ஆபீஸ் போனதே தப்பு.. கடவுளே நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடு… என் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… பிளீஸ்… அவனுடைய நெஞ்சம் பதறித் தவித்தது.

அதோ அடுத்த சிக்னலில் வலது பக்கமாக இருக்கும் டோமினோஸ் பீட்ஸா கடையை ஒட்டிய சந்தில் திரும்பினால் வீடு…

வேகமாய் காரை மிதித்து சரேலெனத் திரும்பினான் சாகர். எதிரே வந்த லாரி இன்னும் ஒண்ணே கால் வினாடி தாமதித்திருந்தால் ஏறி மிதித்திருக்கும். நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை. வீட்டிற்கு முன்னால் சின்னதாய் ஒரு கூட்டம்.

வண்டி நின்றது. ஓடி வந்தாள் பிரியா… ரெண்டு மணிக்கு போனாங்க, மணி ஆறாகுது.. இன்னும் வரலைங்க.. என்னமோ ஆயிருக்கு… அவள் அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.

சாகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உதடுகளைக் கடித்தான். அவனுடை பார்வை எதிரே இருந்த புதரை நோக்கிப் போனது.

எல்லா வாய்க்கா, புதர் எல்லாம் பாத்துட்டேங்க… அழுகை கலந்து குரல் வந்தது.

என்ன செய்வது ? போலீசுக்குப் போக வேண்டியது தான். சாகர் காரை நோக்கி விரைந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது.

என்னாச்சு ? கேட்டுக்கொண்டே இறங்கினார் சாகரின் அப்பா. கையில் பையன் அக்‌ஷத். எல்லோருக்கும் போன உயிர் சட்டென திரும்பி வந்தது.

அக்‌ஷத்த்த்… கூவிக்கொண்டே ஓடிப்போய் குழந்தையை அள்ளினாள் பிரியா. கொஞ்ச நேரம் தெய்வங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தையை அணைத்தாள்.

ஏன்.. ஏன் கூட்டம் ? என்னாச்சு ? சாகரின் அப்பா புரியாமல் கேட்டார்.

ஏன்பா.. போகும்போ… போனையாவது கைல கொண்டு போயிருக்கலாம்ல… சாகர் பையனைக் கண்ட நிம்மதியில், அப்பாவிடம் மெலிதான எரிச்சலைக் காட்டினான். பையனைக் காணோம்ன்னு நாலு மணி நேரமா ஊர் புல்லா சுத்தியாச்சு.. எங்கே தான் போயிருந்தீங்க.

அய்யோ.. அதான் இந்த ஆர்ப்பாட்டமா.. சாரி.. பையன் பார்க் போணும்னு சொன்னான், பக்கத்து பார்க் மூடியிருந்துது அதான் நம்ம பிள்ளையார் கோயில் பின்னாடி இருக்கிற பார்க்ல கூட்டிட்டு போனேன்.

அவ்ளோ தூரமா போனீங்க..

ஆமா, போகும்போ நடந்து தான் போனோம். சரி லேட்டாயிடுச்சே தேடுவீங்களேன்னு தான் நான் ஆட்டோ புடிச்சு வந்தேன்.

மத்தவங்க பிள்ளையைத் தேடுவாங்கன்னு தெரியாது ? அறிவு கெட்ட ஜென்மம்… வேணும்னா தனியா போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே.. பிரியா உதடுகள் பிரியாமல் திட்டினார்.

எந்த ஆர்ப்பாட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அக்‌ஷத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

போன் அழைத்தது…

சாகர்… பையன் கிடைச்சுட்டானா ? மறு முனையில் முத்து.

யா.. கெடச்சுட்டான்.. அப்பா கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போயிட்டாரு போல. அதுக்குள்ள என்னோட வய்ஃப் கத்தி கலாட்டா பண்ணிட்டாங்க.

ஓ..காட்.. நல்ல வேளை.. ஒரே பதட்டமாயிப் போச்சு. ஏன் வைஃபை மட்டும் சொல்றீங்க ? உங்க முகமே விகாரமாயிப் போச்சுல்ல. அதான்பா பிள்ளைப் பாசம்.

யா.. வேற எதையும் என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல… முத்து, ஹி.. ஈஸ் மை எவ்ரிதிங்.

ஓ.கே.. குட்.. தேங்க் காட்… சரி, நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க.. வீட்ல பையன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க..

தாங்க்ஸ் முத்து, நானே கேக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஹே..நோ..நோ பிராப்ளம்.. கிளையன்ட் வருவான், போவான்.. நம்ம லைஃப், நம்ம கிட்ஸ் அவங்களை நாம தான் பாத்துக்கணும்… ஸ்பென்ட் சம் டைம் வித் ஹிம்…

தேங்க்ஸ் முத்து…  முதன் முறையாக முத்து மீது கொஞ்சம் மரியாதை வந்தது சாகருக்கு.

போனை வைத்த மறு வினாடி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையனை அள்ளினான்.

நாளைக்கு நான் லீவ் போடறேன்.. எங்கே போலாம்… ?

ரியலி ?? இன்னிக்கு போன பார்க்குக்கே போலாம் டாடி… கபடமில்லாமல் சிரித்தான் அக்‌ஷத்…

கண்டிப்பா என அணைப்பை இறுக்கினான் சாகர்.

சேவியர்

கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

 3

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான்.

“இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்”

சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை.  அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்து அடிக்கடி சாத்துவார். இப்போ இந்த மந்திரத் தண்ணீர் கிடைச்சிருக்கு. இது தண்ணீர் எல்லா சிக்கலுக்கும் விடிவு என சிறுவன் நினைத்தான்.

அன்று மாலை மந்திரக் குடுவையைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஒரு செடியின் தலையில் விட்டான்.

ஜீ..பூம்…பா போல செடி கடகடவென வளரும் என நினைத்தான்… ஊஹூம் வளரவில்லை.

அடுத்த செடியில் விட்டான்…

ஊஹூம்…

அதற்கு அடுத்த செடி ?

ஒரு மாற்றமும் இல்லை.

அப்படியே கடைசிச் செடி வரை முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ரொம்ப சோகமாகிவிட்டது. மிச்சமிருந்த பாட்டில் தண்ணீரையெல்லாம் கடைசிச் செடியின் தலையில் கவிழ்த்தான். கொஞ்ச நேரம் செடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ரொம்ப சோகமும் சோர்வும் பிடித்துக் கொள்ளப் போய்ப் படுத்து தூங்கிவிட்டான்.

மறு நாள் காலை.

டேய்.. சீக்கிரம் எழும்புடா…. அப்பா உலுக்கினார்.

என்னப்பா ?

உன் தோட்டத்தைப் போய் பாரு ? என்ன பண்ணினே ?

என்னாச்சுப்பா ?

எழும்புடா போய்ப் பாரு.

சிறுவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே தோட்டத்தைப் போய்ப் பார்க்க செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்து அழகழகாய்ப் பூக்கள் பூத்திருந்தன. புது வகையான பூக்கள் !

சிறுவனுக்கு குஷி தாங்கவில்லை. ஓடிப் போய்க் கடைசிச் செடியைப் பார்த்தான். அந்தச் செடிக்குத் தான் மிச்சமிருந்த தண்ணீரையெல்லாம் ஊற்றியிருந்தான்.

அந்தச் செடி வானளாவ வளர்ந்து மேகத்துக்குள் புகுந்திருந்தது…

ஓ…வாவ்… எவ்ளோ பெருசு ? சிறுவன் ஓடிப் போய் அந்த மரத்தில் தொங்கினான். அந்தக் கிளையில் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. தகதகவென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பொன் நிறத்திலான குட்டி டிராகன் !

சரி… ஸ்கூல் வந்துச்சு… இனிமே மிச்ச கதை நாளைக்கு. வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிவிட்டு சீட் பெல்டைக் கழற்றிக் கொண்டே இடப்பக்கம் திரும்பி மகனைப் பார்த்தேன். மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, கொஞ்சம் சாம்பல் கலரில் ஒரு டவுசர். கழுத்தில் தொங்கும் டேகில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பெயர். அருகில் குட்டிப் புகைப்படத்தில் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். கீழே யூகேஜி பி. என்று பளிச் என எழுதப்பட்டிருந்தது.

டாடி… பிளீஸ்… கார்ல இருந்தே கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்….  

நோ… டா செல்லம்.. இட்ஸ் லேட். நைன் ஓ க்ளாக். மிச்சம் நாளைக்கு.

ஒரு கையில் பையையும், மறுகையில் பையனையும் அள்ளிக் கொண்டு ஸ்கூல் காம்பவுண்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி கம்பீரமாய் நின்றிருந்தது. பள்ளியின் தலையில் டிரீம், டேர், டூ என வாசகங்கள். வாசலில் குட்டிக் குட்டி மழலைப் பூக்கள் ஓடியாடிக் கொண்டிருந்தன. குட் மார்ணிங் மிஸ் எனும் குரல்களுக்கிடையே ஆசிரியர்களும் ஆங்காங்கே தெரிந்தார்கள்.

எனக்கு இது தினசரிப் பழக்கம் தான். காலையில் 6.20 க்கு அலாரம் அடிக்கும். அடிக்கும் அலாரத்தை சபிப்பதில்லை. காரணம் இப்போதேனும் எழும்பாவிட்டால் எல்லாம் குளறுபடியாகிவிடுமென்பது ரொம்ப நல்லா தெரியும். ஒருபக்கம் மகள், மறுபக்கம் மகன் என ஆளுக்கொரு திசையில் அற்புதமான தூக்கத்தில் லயித்திருப்பார்கள். அழகான தூக்கத்தில் இருக்கும் ஒரு மழலையை எழுப்புவது போல ஒரு மோசமான வேலை இருக்க முடியாது. என்ன செய்ய ? இப்போ எழும்பினால் தான் மகளை 8 மணிக்கு ஸ்கூலில் கொண்டு விட முடியும். பிறகு திரும்ப வந்து பையனை 9 மணிக்கு ஸ்கூலில் கொண்டு போய் விட வேண்டும்.

வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் தான். சென்னை ஸ்பெஷல் ஏரியா ! சந்துகளைச் சந்தித்து, டிராபிக்கை அனுசரிக்க வேண்டியிருப்பதால் பத்து நிமிட கார்ப் பயணம்.

காரில் ஏறியவுடன் சீட்பெல்ட் போட்டு, ஒரு குட்டிப் பிரேயர் முடித்த கையோடு “டாடி ஸ்டோரி” என்பார்கள் இருவரும்.

ஆளுக்குத் தக்கபடி கதைகளைச் சொல்ல வேண்டும்.

மகளுக்கு பிடித்தவை தேவதைக் கதைகள். ஃபேரி டெய்ல்ஸ் அவளுடைய ஃபேவரிட். அழகழகான பூந்தோட்டங்கள், அதில் உலவும் ஃபேரி கள், அந்த ஃபேரிகளுக்கு வில்லனாய் வரும் தூரதேசத்து மோசமான சூனியக்காரி, பிறகு எப்படி அந்த ஃபேரிகள் கடைசியில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று முடியும். ஒரு ஃபேரி கதை முடிந்தபின் அடுத்த கதைக்கு டால்பின், கடல்க் கன்னி, தூரதேசத்து ராஜகுமாரி, அரச கோட்டையில் கிடந்த நீலக் கல் என ஏதோ ஒரு கதை அன்றைய காலைப் பொழுதில் உதயமாகி தானாகவே வளரும்.

பையனுக்குப் பிடித்தமானவை ஆக்‌ஷன் கதைகள். மந்திரவாதி, டிராகன், டைனோசர், சிங்கம், புலி என பரபரப்பாய் இருக்கும் கதைகள் தான் பிரியம். அப்படி இல்லாவிட்டால் கார் ரேஸ், கடல் பயணம் என அதிரடியாய் இருக்க வேண்டும். பசங்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ரசனை சின்னவயதிலேயே நிர்ணயமாகிவிடுகிறது பாருங்கள். எல்லாம் கடவுள் படைப்பின் விசித்திரம் என்றால் நாத்திகவாதிகள் அடிக்க வருவார்கள். சரி அது கிடக்கட்டும். அப்படி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி கதைகள் எப்படியோ எனது மூளையின் வலது பக்கத்தில் உதயமாகிக் கொண்டே இருக்கும்.

எந்தக் கதையையும் முன்கூட்டியே யோசிப்பதில்லை. எந்தக் கதை எப்படி துவங்கி எங்கே போய் முடியும் என்று சத்தியமாய்த் தெரியாது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. கதை எப்படி இருந்தாலும் அதைச் சொல்லும் போது ஒரு நாடகம் போல ஏற்ற இறக்கம் முக்கியம். கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் இருக்கலாம் தப்பில்லை. பிள்ளைகள் எந்த இடத்தை ரசிக்கிறார்களோ அந்த இடத்தை டெவலப் செய்து கொண்டே போக வேண்டும். எந்த இடம் அவர்களுக்குச் சுவாரஸ்யம் இல்லையோ, அந்த இடத்தைக் கட்பண்ணி கடாசவேண்டும். அந்த நுணுக்கம் தெரிந்தால் எல்லோருமே கதை சொல்லிகள் தான். என் கதைகள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். தினமும் கதை சொல்வேன். எந்த இடத்தில் நேற்று முடித்தேன் என்பதையே மறுநாள் மறந்து விடுவதும் உண்டு. ஆனால் பிள்ளைகள் மறப்பதேயில்லை.

“டாடி, அந்த டிராகனோட முதுகுல இருந்து கடல்ல குதிப்பான்ல, அதுவரைக்கும் சொன்னீங்க. அவன் குதிக்கிற இடத்துல நிறைய முதலைங்க நீந்திட்டு இருந்துச்சு…” என்று அட்சர சுத்தமாய் நினைவில் வைத்து சொல்வார்கள்.

“ஓ.. குதிச்சானா, அங்கே முதலை வேற இருந்துச்சா… ” சட்டென மூளையைக் கசக்குவேன். எனக்கு உதவ ஒரு திமிங்கலமோ, கடல்கன்னியோ, அல்லது விழும் முன் தூக்கிக் கொண்டு பறக்க ஒரு ராட்சத வெள்ளை கழுகோ வரும். அது அந்த நாளைப் பொறுத்தது !

பையனை ஸ்கூலில் அனுப்பியாகிவிட்டது. இனிமேல் அலுவலகத்தை நோக்கி 30 நிமிட டிரைவ்.

கண்ணாடிகளை ஒட்டி வைத்து சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப முயலும் ஐடி நிறுவனம் ஒன்றில் தான் வேலை. பிஸினஸ் எனேபிள்மென்ட் என ஸ்டைலாக அழைக்கும் துறையில் மேனேஜர். பேரைக் கேட்டு பயந்துடாதீங்க, கலர் கலரா பிரசன்டேஷன் பண்ணி, அதை திரையில் காட்டி கஸ்டமர்களை வசீகரிப்பது தான் வேலை. கொஞ்சம் டீசன்டா சொல்லணும்ன்னா அடுத்த கம்பெனிக்கு பிஸினஸ் போகாம நம்ம பக்கத்துக்கு இழுக்கிறது. ஓடைல ஓடற தண்ணியை இடையில வாய்க்கால் வெட்டி நம்ம வயலுக்குத் திருப்பற மாதிரி. விவசாயம் பத்தி தெரியாதவங்க,  டக் ஆஃப் வார் ன்னு வேணும்ன்னா வெச்சுக்கோங்க. 

கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு புராஜக்ட்க்காக மாடாய் உழைக்கிறோம். புராஜக்ட் புரபோஸல் கடைசி ஸ்டேஜ் ! கடைசி நிலைன்னு சொல்றது கஸ்டமரிடம் நமது பிரசன்டேஷனைக் கொடுத்து அவனுக்கு விளக்கிச் சொல்வது. அலுவலகத்தில் ஒவ்வொருத்தரிடமும் தகவல் கறந்து, சொல்யூஷனிங், டைமிங், காஸ்ட் அது இது என புரண்டு புரண்டு ஓடியதில் முதுகுக்கே முதுகு வலி. இன்னிக்கு நைட் கிளையன்ட் பிரசன்டேஷன். ஒரு நட்சத்திர ஹோட்டலில் கான்ஃபரன்ஸ் ஹால் புக் பண்ணியிருந்தார்கள்.

வைன் கோப்பைகளும், கோட் சூட்டுகளும் இருக்கும் அறையில் பிரசன்டேஷன் செய்வதே ஒரு பெரிய மேஜிக். கத்தியில் நடப்பது போல கவனம் வேண்டும். நாமும் கோட்டு சூட்டுக்கு மாறவேண்டியது முதல் கொடுமை ! வாடகைக்காவது ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொள்ள வேண்டியது இரண்டாவது கொடுமை. உதட்டிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடாத புன்னகையை ஆணி அடித்து வைக்க வேண்டியது மூன்றாவது கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல் கிளையண்ட் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது உலக மகா கொடுமை.

இந்த கொடுமைகளையெல்லாம் தாண்டி, இந்த பிரசன்டேஷன் வெற்றி கரமாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மேனேஜரிம் மனசிலும் அதே சிந்தனை தான்… ஸீ… ஹி..ஈஸ் காலிங்…

சார்…

இட்ஸ் லேட்… வயர் ஆர் யு ?

ஆன் மை வே… ராஜ்….. ஐ..ல் …பி …. இன் ஃபியூ மினிட்ஸ்.

சீக்கிரம் வாங்க… ஒரு ஃபைனல் ரன் துரூ தேவையிருக்கு. நீட் மோர் கிளாரிடி ஆன் ஆன்ஸர்ஸ்.

கண்டிப்பா சார்… வெச்சுடலாம்… ஒரு லெவன் ஓ கிளாக் உங்களை மீட் பண்றேன்.

ஓகே… சப்போர்ட்டிங் டாக்குமென்ட்ஸ்..

எல்லாம் ரெடி சார்…

வீ நீட் டு கட் துரோட் மேன்…. ஐ ஆம் ஆல் எக்ஸைட்டிங்…

பண்ணிடலாம் சார். ஆல் செட்…. இந்த புரபோசல் நமக்கு தான் சாதகமா இருக்கு. காஸ்ட் வைஸ் நாம மத்த கம்பெனியை விட கம்மியா இருக்கோம்ன்னு நமக்கே தெரியுது. அப்படியே அவங்க இதை விடக் கம்மியா கோட் பண்ணியிருந்தா கூட, நாம நாலெட்ஜ் டிரான்சிஸன் இலவசமா பண்ணிக் கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அது ஒரு இன்வெஸ்ட்மென்ட் நம்ம சைட்ல. அவங்களுக்கு அது ஒரு ஆடட் அட்வான்டேஜ்… எல்லாமே நல்லா தான் இருக்கு…. எந்திங் மிஸ்ஸிங் ?

நோ..நோ… யூ ஆர் ரைட்… நல்லா பிரசன்ட் பண்ணணும். தேட்ஸ் இம்பார்டன்ட்.

கண்டிப்பா சார்.

ஓகே,.. ஸீ..யூ.. இன் ஆபீஸ்.

அன்று மாலை,

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு பேர் இருந்தார்கள். ஒட்டடைக்குச்சி போல ஒருவர் கழுத்தில் டையுடன் நீளமான ஒரு கோப்பையில் வைன் வைத்திருந்தார். அவருக்கு நேர் எதிராய் ஒரு குண்டு மனிதர் பழச் சாறுடன் அமர்ந்திருந்தார். மிச்ச நபர்கள் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வை எமோஷன்ஸ் ஏதும் காட்டாத ஜேம்ஸ்பாண்ட் லுக்.

கழுத்தில் இருந்த டையை கொஞ்சமாய் அழுத்தி தலையை அசைத்துக் கொண்டே…

“ஐ ஆம் ரியலி எக்ஸைடட் டு வெல்கம் யூ ஃபார் திஸ்……” என்று பேசத் துவங்கினேன்.

தயாரித்து வைத்திருந்த பவர் பாயின்ட் பிரசன்டேஷன் திரையில் கலர்கலராய் வரைபடங்களோடு மின்னியது.

எங்களுக்கு வேலை கொடுத்தால் மூன்று ஏரியாக்களில் நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த செலவு, நிறைந்த தரம் மற்றும் சரியான நேரம். இந்த விஷயங்களை எப்படி நாங்கள் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கப் போகிறேன். அதற்காக எங்களிடம் என்னென்ன ஸ்பெஷல் திறமைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லப் போகிறேன். அதற்கு முன் எங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் வீர தீர பராக்கிரமங்களையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மென்மையான ஆங்கிலத்தில் விழுந்து விடாத புன்னகையில் பேசத் தொடங்கினேன்.

எனக்கு முன்னால் கதை கேட்க சுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் மகனின் முகம் தெரிந்தது. உள்ளுக்குள் மெல்லப் புன்னகைத்தேன். ‘டாடி.. சொல்லுங்க டாடி’ என்று அவன் சொல்வது போல ஒரு பிரமை.

நான் என் கையிலிருந்த மந்திரக் கோப்பையை எடுத்தேன். அதிலிருந்த திரவத்தை எடுத்து தெளித்தேன். செடிகள் அசுர வளர்ச்சியடைந்தன. எதிரே இருப்பவர்களின் சுவாரஸ்யங்களை அறிந்து அந்த ஏரியாக்களில் உயர்வு நவிர்ச்சி அணியைப் புகுத்தினேன். மற்ற இடங்களைத் தவிர்த்தேன். சரளமாக நான் சொல்லிக் கொண்டிருந்த ஃபேரி டேல் கலந்த பிரசன்டேஷனைப் பார்த்து தூரத்தில் அமர்ந்திருந்த மேனேஜர் பிரமித்துப் போய்விட்டார். நான் தொடர்ந்தேன்… தொடர்ந்து கொண்டே இருந்தேன். 

எனக்கு எதிரே அமர்ந்து உதட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

எனி கொஸ்டின்ஸ் ?  என்றேன், புன்னகை மாறாமல்.

சேவியர்

 

 

 

நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை

light.jpg

‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ?’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது.

‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்? ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின்  மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன் சொன்னான்.

‘இப்படி ஒரு யோசனை உங்களுக்கு எப்படி வந்தது ? அதுவே ஆச்சரியமாக இருக்கிறது’ அதிகாரி கண்களில் இருந்த வியப்பில் ஒருதுளி கூட குறையாமல் பேசினார்.

திடீரென நம்ம வீட்டுக்கு விருந்தாளி வரப்போறாருன்னு தோணும். பார்த்தா தூரத்துச் சொந்தக்காரங்க யாராவது வந்து நிப்பாங்க. யாரோ நமக்குப் போன் பண்ணப் போறாங்கன்னு நினைப்போம், அப்போ பார்த்து யாராவது போன் பண்ணுவாங்க. இப்படி நடக்கிற அனிச்சைச் செயல்களோட காரணத்தைத் தான் கடந்த பல வருடங்களா ஆராய்ச்சி செய்திட்டே இருந்தேன். அதோட வளர்ச்சி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.

‘இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..’

சொல்றேன். நம்ம மூளை ஒரு அற்புதம். அதோட போட்டி போட நம்முடைய எந்த அறிவியல் கருவிக்கும் வலு இல்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா மூளையை விட சிறப்பானதா நாம எதையும் கண்டுபிடிக்கவேயில்லை.

அடுத்த நிமிடம் ஏதோ நடக்கப் போகுதுன்னு நமக்குச் சொல்ற அந்த வேலையை மூளையோட ஒரு குறிப்பிட்ட பாகம் தான் செய்யுது. அந்த இடத்திலே தான் என்னோட ஆராய்ச்சி ஆரம்பமாச்சு.

அந்த பாகத்துல மூளைக்கு ஏற்படக் கூடிய மாற்றங்களை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தினா, அதாவது அந்த எண்ணம் தோன்றும் போது ஏற்படக் கூடிய அதிர்வலைகளை அதிகப்படுத்தினா, அடுத்த நிமிடம் ங்கிறது அதிகமாகி அடுத்த மணி நேரத்துல என்ன நடக்கும்ங்கிறதை நாம கண்டு பிடிக்க முடியும். அப்படித் துவங்கின
ஆராய்ச்சியோட வளர்ச்சி தான் இப்போ அடுத்த நாள் என்ன நடக்கும்ங்கிறதை கண்டு பிடிக்கக் கூடிய நிலமைல வளர்ந்திருக்கு.

‘ஆச்சரியமா இருக்கு சித்தார்த். பெருமையாவும் இருக்கு. அப்போ நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை நாம் இன்னைகே தெரிஞ்சுக்க முடியும் இல்லையா ?’

‘நிச்சயமா !. நாளைக்கு நடக்கிறதை அறிந்து கொள்ளக் கூடிய வகைல ஒரு மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கிறேன். அதுதான் இப்போதைய வெற்றி. இதையே இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தினா, இந்த நாள் என்பது வாரம், மாதம், வருடம் என்ற நிலைக்கு நீட்டிக்க முடியும் என்பது தான் என்னுடைய நம்பிக்கை’

‘வாட்… மனித மூளையைத் தயாராக்கி வைத்திருக்கீங்களா ?. இது நம்ம விதிகளுக்கு எதிரானது. மனிதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன் விலங்குகளை ஆராய்ச்சில உட்படுத்தினீங்களா ? ‘ அதிகாரியின் கண்களில் திகில் அதிகமானது.

‘மன்னிக்கணும். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறதை விலங்குகள் அறிந்து கொண்டாலும் அதை நமக்குச் சொல்லக் கூடிய அறிவு அவற்றுக்குக் கிடையாது இல்லையா ?.  அதனால இந்த ஆராய்ச்சில விலங்குகளை ஈடுபடுத்திப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதால் நமக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. என்னுடைய உதவியாளர் நாதனைத் தான் ஈடுபடுத்தியிருக்கிறேன்’ சித்தார்த் அமைதியாகச் சொன்னான்.

மனிதர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் உயர்மட்டக் குழுவிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஏதானும் தவறு நடந்திருந்தால்…’ அதிகாரியின் குரல் கோபமடைந்தது.

‘மன்னியுங்கள். என்னுடைய ஆராய்ச்சியில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததுண்டு. மனித ஆராய்ச்சி என்று சொல்லும்போது நிச்சயமாக நம்முடைய குழு அதை அனுமதிக்காது. அதனால் தான் அதைப்பற்றி குழுவுக்குத் தெரிவிக்காமல் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ சித்தார்த் குரலை தாழ்த்திப் பேசினான்.

அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாமல் கையிலிருந்த பேனாவை உள்ளங்கையில் வைத்து இருகைகளாலும் உருட்டினார்.

‘சார். இதனால் நம்முடைய நாட்டுக்குக் கிடைக்கப் போகும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. நாளைக்கு காஷ்மீர் செல்லும் பிரதமரின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ? நாளை ஏதேனும் விமானம் சியர்ஸ் டவர்சை தகர்க்குமா, எதிர்பாராத நிலநடுக்கம் எங்கேனும் நிகழுமா ? என்பதையெல்லாம் நம்மால் கண்டு பிடிக்க முடியும். ஏன் நாளைக்கு எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்யுங்கிறதைக் கூட நம்மால கண்டுபிடிக்க முடியும்.’

‘எதை வச்சு சொல்றீங்க ?’

‘நீங்க இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி அளிப்பீங்கங்கறது எனக்குத் தெரியும். அதை வெச்சுத் தான் நான் உங்க கிட்டயே பேசிட்டு இருக்கேன்..’ சித்தார்த் மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

‘ஓ… காட்… இதுலே இருக்கக் கூடிய பிரச்சனைகளையும், விளைவுகளையும் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ?’ அதிகாரி வேகம் குறைக்காமல் கேட்டார்.

‘என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?’ சித்தார்த் முகத்தில் மெல்லிய கேள்விகள் முளைத்தன.

நாளைக்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ல யார் ஜெயிக்கப் போறாங்க, நாளைக்கு எந்த குதிரை பந்தயத்துல ஜெயிக்கும் ஏன் நாளைக்கு எந்த லாட்டரிக்குப் பரிசு விழும்கிறது கூட கண்டுபிடிக்க முடியுமே ? அப்படின்னா அதை வெச்சு பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம். இதை ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்றேன். வாழ்க்கையோட சுவாரஸ்யமே நமக்கு இல்லாம போயிடுமே சித்தார்த்.

‘சார்.. நாம இதை எல்லா மூளையிலேயும் செய்யப் போறதில்லை. சில நம்பிக்கைக்குரிய,
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிக்கக் கூடிய, சிலருக்குத் தான் நாம் இந்த மாற்றத்தைச் செய்யப் போறோம். இதையே வேற விதமா யோசிக்கலாமே சார். இப்படி ஒரு வசதி இருந்திருந்தா, நாம கோட்சே கையிலிருந்து காந்தியைக் காப்பாற்றியிருக்கலாம், பாதுகாவலன் கைலயிருந்து இந்திராகாந்தியைக் காப்பாற்றியிருக்கலாம்.. ஏன், சுனாமியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கலாமே…’

‘சரி… லீவ் நாள் அதுவுமா இன்னிக்கு அவசரமா என்னைக் கூப்பிட்டுப் பேசிட்டிருக்கீங்களே.. என்ன விசயம் ?’ அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாத மனநிலையில் கேட்டார்

‘சார்… மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் ஒண்ணு நாளைக்கு நடக்கப் போகுது. நாளைக்கு நாம அனுப்பப் போற ராக்கெட் கிளம்பற பத்தாவது நிமிசமே செயலிழந்துபோய் கடல்ல விழப் போகுது. இந்த ராக்கெட் கிளம்பாம இருந்தால் நமக்கு ஏற்படக் கூடிய கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை நாம தடுத்திடலாம். நான் இதை இப்போ யார் கிட்டேயும் சொல்ல முடியாது. ஆனா நீங்க நினைச்சா… ஐ.எஸ்.ஆர்.ஓ தலைமையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல முடியும்’

‘நோ..நோ…நோ… அது முடியாது சித்தார்த். நான் என்ன சொல்லித் தடுப்பேன். காரணம் கேப்பாங்க, விளக்கம் கேப்பாங்க, நான் பதில் சொல்லியாகணும். பிள்ளையை பிக்னிக் அனுப்பாதீங்கன்னு சொல்றமாதிரி ஈசியா நான் இதைச் சொல்ல முடியாது’ அதிகாரி தலையை வேகவேகமாய் ஆட்டிப் பேசினார்.

‘அதுக்கும் வழி சொல்றேன் சார்’ சித்தார்த் புன்னகைத்தான்.

‘என்ன வழி’

‘சார். ராக்கெட் ஏன் பழுதடையுதுங்கிற விஷயம் கூட தெரியும் சார்’ சித்தார்த் சொல்ல அதிகாரி தளர்ந்து போய் பேசினார் ‘சித்தார்த்.. உன்னுடைய கண்டுபிடிப்பை நினைச்சா பயமா இருக்கு. ‘

‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை சார். அணு ஆயுதங்களை தேசத்தோட மடியிலே கட்டி வெச்சிருக்கோம், தற்கொலைப்படைகளை நாட்டோ ட எல்லைகளிலே உலவ விட்டிருக்கோம், அதைவிடப் பயமூட்டக் கூடிய விஷயம் இதுல எதுவுமே இல்லை சார்’

‘சரி.. ராக்கெட் செயலிழக்கக் காரணம் என்ன ? தொழில் நுட்பக் கோளாறா, இல்லை வேறேதும் காரணமா ?’

‘சார்.. நான் அதோட காரணத்தைச் சொன்னா நீங்க சிரிப்பீங்க.’

‘சொல்லுங்க. சிரிக்காம இருக்க டிரை பண்றேன்’

‘சார்.. ராக்கெட்ல வரப்போறது பெரிய தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. சின்ன புரோக்ராமிக் குளறுபடி தான். அதுவும் வேரியபிள் டிக்ளரேஷன் எறர்’

‘என்ன சொல்றே… சின்ன வேரியபிள் டிக்ளரேஷன் எரர் ராக்கெட்டை செயலிழக்கச் செய்யுமா ? புரியும்படியா சொல்’

‘சொல்றேன் சார். இன்னும் நம்ம ஆராய்ச்சிக் கூடத்துல ஃபோர்ட்ரான் புரோக்ராம் லாங்குவேஜ் தான் பயன்படுத்தறாங்க. அதுல ராக்கெட்டோ ட டைரஷனை தீர்மானிக்கக் கூடிய ஒரு வேரியபிள் லெங்க்த் சின்னதா குடுத்திருக்காங்க. ராக்கெட் எல்லையைத் தாண்டறதுக்கு முன்னாடியே அந்த வேரியபிள் ஓவர் புளோ ஆகி ரீசெட் ஆகப் போகுது. அதுக்கு அப்புறம் அது பாசிடிவ் வேல்யூவுக்குப் பதிலா நெகட்டிவ் வேல்யூவுக்குப் போகும். அப்போ ராக்கெட்டோ ட டைரஷன் மேலே போறதுக்குப் பதிலா கீழே வரும்’ சித்தார்த் சொல்லச் சொல்ல அதிகாரி திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘எ..என்னால எதையும் நம்பவே முடியலை சித்தார்த். அப்படியெல்லாமா தப்பு பண்ணுவாங்க ?’ அதிகாரியின் குரல் குழறியது.

‘எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. காரணத்தைக் கேட்டபோது. ஆனா அதுதான் உண்மை. நீங்க நினைச்சா மட்டும் தான் இந்த ராக்கெட் புறப்படறதைத் தடுக்க முடியும்’ சித்தார்த் சொன்னான்.

‘உனக்கு எப்படித் தெரியும் ? . விஞ்ஞான ரகசியங்கள் வெளியே போகுதா ? ந்னு ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும் சித்தார்த்…’ அதிகாரி இழுத்தார்.

‘உங்ககிட்டே நான் விஷயத்தைச் சொல்லிட்டேன். இனிமே உங்க கைல தான் சார் இருக்கு எல்லாமே’ சித்தார்த் சொல்லி விட்டு அமைதியானான்.

இதை எப்படிச் சொல்லி எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்னும் கவலையில் தலையில் கைவைத்து அமர்ந்தார் அதிகாரி.

மறுநாள் காலை 7.45 மணி.

சித்தார்த்… என்னால அவர்களைக் கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை. எத்தனையோ தடவை ராக்கெட் அனுப்பியிருக்கோம், அதே டீம் தான் வர்க் பண்ணியிருக்கு, நாட்டுல ஜனாதிபதி துவங்கி, கன்யாகுமரி கிராமம் வரைக்கும் ராக்கெட் லாஞ்ச் பத்தி தான் பேசிட்டிருக்காங்க… இது கண்டிப்பா சக்சஸ் தான் ஏதாச்சும் கனவு கண்டுட்டு உளறாதீங்க. உங்க டிப்பார்ட்மெண்ட் வேற எங்க டிப்பார்ட்மெண்ட் வேற ந்னு சொல்லிட்டாங்க.

‘அப்படின்னா…’ சித்தார்த் திகைப்புடன் கேட்டான்.

‘இன்னிக்கு எட்டு மணிக்கு ராக்கட் லாஞ்ச் பண்ண போறாங்க’

‘சார்….’ சித்தார்த் சோர்வுடன் அமர்ந்த போது அவனுடைய செல்பேசி கிணுகிணுத்தது.

‘எஸ்..’

‘சார் நான் தான் நாதன் பேசறேன்.’

‘சொல்லு நாதன் ஏதாச்சும் தகவல் இருக்கா ?’

‘ஆமா சார்.. இன்னிக்கு சாயங்காலம் நல்ல மழை பெய்யப்போகுது.

‘இது தானா… இதுக்குப் போய் ஏன் அவசரமா கூப்பிட்டே ?’

‘அது மட்டும் இல்லே சார். திடீர்ன்னு தலை வலிக்குது. நாளைக்கு என்ன நடக்குதுங்கிறதை என்னால கணிக்க முடியலை. மழை சாயங்காலம் ஆறுமணிக்கு ஆரம்பிச்சு பத்து மணி வரைக்கும் விடாம பெய்யும். நகரத்துல எல்லாமே ஸ்தம்பிக்கும். அதுக்குமேல யோசிக்க முடியலை. நம்ம ஆராய்ச்சில ஏதோ பிரச்சனைபோல தோணுது’ நாதனின் குரலில் இருந்த பதட்டத்தை சித்தார்த் வாங்கிக் கொண்டபோது

“எதிர்ப்பாராத விதமாக சற்று முன்னர் கிளம்பிய ராக்கெட் பழுதடைந்து கடலில் விழுந்தது” என்று தொலைக்காட்சி தற்போது வந்த செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

சித்தார்த் திரும்பி அதிகாரியைப் பார்க்க, அவர் வெலவெலத்துப் போய் எதுவும் செய்ய இயலாதவராய் நடுங்கும் கீழுதட்டைக் கடித்தார்.

மாலை ஆறுமணி.

சொல்லி வைத்தார்போல கொட்டத் துவங்கியது மழை. அதிகாரி நேரத்தோடு வீடு போய்விட்டிருந்தார்.

சித்தார்த்தும், நாதனும் ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

‘நாதன். நீ பதட்டப்படறமாதிரி ஒண்ணும் இல்லை. இந்த ஆராய்ச்சி மூளையை எதுவும் செய்துவிடாது. சில மாற்றங்கள் மட்டும் தான் செய்யும். உன்னால் சாதாரணமாக இருக்க முடிகிறது தானே…’

‘அதுல ஏதும் பிரச்சனை இல்லை.. ‘

மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

நாதனும் சித்தார்த்தும் ஆரவாரமாகப் பெய்து கொண்டிருந்த  மழையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘நாம கண்டுபிடிச்சும், நம்மால ராக்கெட்டைக் காப்பாத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே நம்முடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். அதற்குரிய முயற்சிகளை நாளைக்கே துவங்கப் போறேன்’ சித்தார்த் பெருமூச்சுடன் சொல்ல நாதன் புன்னகைத்தான்.

‘இதனால என்னுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாதே ?’ நாதன் இலட்சத்து மூன்றாவது முறையாகக் கேட்டான்.

‘இத்தனை வருடமா என்னுடன் ஆராய்ச்சியில் இருந்தும் நீ இப்படிக் கேட்கிறாயே’ சித்தார்த் அதே பதிலை சொல்லி நாதனின் தோளில் கைவைத்தான்.

திடீரென்று… வானத்தில் தோன்றிய மின்னல் ஒன்று கணநேரத்துக்கும் குறைவான நேரத்தில் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. சுதாரித்து நிமிர்வதற்குள் அவர்கள் பற்றியிருந்த கம்பி அந்த மின்சாரத்தை அப்படியே வாங்கி அவர்களுக்குக் கொடுக்க இருவரும் மரணத்துக்குள் விழுந்தார்கள்.

உள்ளே கடிகாரம் அடிக்கத் துவங்கியது. பத்து மணி !

0

கசப்புப் பதனீர்

palm.jpg 
விஷயம் தெரியுமா உங்களுக்கு ? என்றபடி வந்தாள் செல்லம்மாள்.
செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை. எந்த நிறத்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கிற விஷயம் தான் இது. காலையில் ரேடியோ கேட்பது போல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாக வேண்டும். தினமும் சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும் போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் முக்கியமான பொழுதுபோக்கு.

என்ன சமாச்சாரம் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு ?
கேட்டுக்கொண்டே முழங்கையால் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்த சொர்ணத்துக்கு 45 வயது இருக்கும். இன்னும் கண்ணாடி போட வேண்டி வராத தீர்க்கமான பார்வை. கையில் பதனீர் காய்ச்சுவதற்கான பெரிய தகரப் பாத்திரம். நேற்று பதனீர் காய்ச்சிய பிசுபிசுப்பை சாம்பல் தொட்டு தேங்காய் சவுரி கொண்டு தேய்த்துக்கொண்டிருந்தாள் சொர்ணம்.

எப்படி மனுஷனோட ஆயுசு பொட்டுண்ணு போயிடுதுண்ணு நினைச்சாலே பயமா இருக்கு. நேத்திக்கு வரைக்கும் கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் இன்னிக்கு பொசுக்குண்ணு போயிடறான். காலைல பேசிகிட்டு இருக்கிறவங்க மறுநாள் பாத்தா பேச்சி மூச்சில்லாம கிடக்கிறாங்க. இதெல்லாம் விதி. மனுஷன் எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம், காலம் வரும்போ காலணா கூட எடுக்காம போய்க்க வேண்டியது தான்.

எப்போதுமே செல்லமா இப்படித்தான், சொல்லவேண்டிய விஷயத்தை நேரடியாகச் சொல்வதில்லை, பலமான பீடிகை அது இது என்று ஏதாவது பேசிவிட்டுத் தான் சொல்வாள்.

சரி நீ இப்போ விஷயத்தைச் சொல்லு.. என்ன ஆச்சு ? கேட்டுக்கொண்டே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் சொர்ணம்.

நம்ம தெக்கேத் தோட்டத்து பாலம்மா புருஷன் தங்கப்பன் செத்துப் போயிட்டானாம் பனையில இருந்து விழுந்து…

செல்லம்மா சொல்லி முடிக்கவில்லை, சொர்ணம் திடுக்கிட்டுத் திரும்பினாள்…

எப்போ ?…எப்படியாம் ?

இன்னிக்கு காலைப் பனை ஏறப் போனப்போ தான் நடந்துதான். பனைத்தாவல் சமயத்துல பிடி நழுவிடுச்சுண்ணு சொல்றாங்க. என்ன நடந்துதுண்ணு யாருக்கும் சரியா தெரியல. ஏதோ சத்தம் கேட்டு ஓடிப்போயி பாத்திருக்காங்க. அப்போ தான் பேச்சு மூச்சில்லாம கீழே கிடந்திருக்காரு மனுஷன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மூத்த பையன் பாண்டில பனை ஏறப் போயிருக்கானாம், அவனுக்கு தகவல் சொல்ல போயிருக்காங்க, அவன் வந்ததுக்கு அப்புறம் தான் அடக்கம் இருக்கும்.

சொர்ணத்தின் நெஞ்சுக்குழிக்குள் அம்மி வைத்தது போல் ஒரு பாரம். தங்கப்பனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அந்த மரணம் ஒருவித கிலியை ஏற்படுத்தி விட்டது. காரணம் அவள் புருசன் பொன்னனுக்கும் பனைஏற்றுத் தொழில் என்பது தான்.

அவனும் பனைத் தாவலில் பிரசித்தம். அருகருகே நிற்கும் இரண்டு நெட்டைப்பனைகளை தனித்தனியே ஏறுவதற்குப் பதிலாக ஒரு மரத்தில் ஏறி பூ சீவி கலையம் கட்டியபின், கத்தியை இடுப்பில் கட்டியிருக்கும் பாளையில் போட்டுவிட்டு, ஒருமரத்தின் ஓலை வழியாக நடந்து பக்கத்து மரத்தை அடைந்து விடுவார்கள், இதைத் தான் பனைத்தாவல் என்று சொல்வார்கள். பொன்னன் இதில் பிரசித்தம். பொன்னனுக்கு இப்போது 55 வயதாகிறது. இன்னும் கட்டுக் குலையாத கம்பீரம். பிள்ளை மேல் வைத்திருக்கும் பாசம். மனைவியைக் கடிந்து கொள்ளாத மனசு. இதெல்லாம் தான் நெட்டைப்பனை உசரத்துக்கு பொன்னனை சொர்ணத்தின் மனசுக்குள் நிறுத்தியிருந்தது.

சொர்ணத்தின் திருமண சமயத்தில் , 50 பனை ஒரே மூச்சில் ஏறுவான் பையன், அந்திப்பனை ஏறுவான் என்றெல்லாம் பெருமையாக சொல்லித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் எத்தனை பனைமரம் ஏறுகிறான் என்பதை வைத்துத் தான் புருசனுடைய வீரமே கணக்கிடப் பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் குடும்பங்கள் தான் பனை ஏறும் தொழில் செய்கின்றன.

பொன்னனுக்கு வைராக்கியம். பனைஏற்றுத்தொழிலின் மேல் அவனுக்கு பக்தி இருந்தது. காலையில் நான்குமணிக்கெல்லாம் எழுந்து பனை ஏறக்கிளம்பிவிடுவான். செல்லாயி கையால் பால் கலக்காத ஒரு தேயிலை தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டால் தூக்கமெல்லாம் போய்விடும். ஒரே பையன் தாசப்பன், அவனை நெஞ்சின் மேல் படுக்கவைத்துத் தான் தூங்குவான். அவனை ஒரு வாத்தியாராக்க வேண்டும் என்பதுதான் பொன்னனுடைய ஒரே கனவாக இருக்கிறது. அதற்காக அவனை எந்த வேலையும் செய்ய சொல்வதில்லை. தாசப்பனுக்கும் அந்த உணர்வு இருந்தது. எப்போதும் குடிசைக்கு வெளியே இருக்கும் புளியமரத்தடியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பான்.

இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து சொர்ணத்துக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எப்படியாவது பாழாய்ப்போன இந்த வேலையை நிறுத்தச் சொல்லவேண்டும். எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக பனையேறுவதை மறந்து கொண்டிருக்கிறார்கள், இவருக்கு மட்டும் எதுக்கு இந்த வீம்பு ? விட்டுத் தொலைக்க வேண்டியது தானே ? ஒழைக்கிறதுக்கு உடம்புல தெம்பிருக்கிற வரைக்கும் விறகு வெட்டியாவது பொழைக்கலாம். மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் சொர்ணம்.

இதொன்றும் புதியதில்லை, ஒருமுறை பாதிப் பனைஏறிக்கொண்டிருக்கும் போது பனை ஏறுவதற்காகக் காலில் போட்டுக் கொள்ளும் திளாப்புக் கயிறு அறுந்துபோக பனை மரத்தைக் கட்டிக் கொண்டு வழுக்கி கீழே விழுந்ததில் மார்பு முழுவதும் இரத்தக் காயம். பனைமரத்தின் கூரிய வளையங்கள் ஆழமாக கிழித்திருந்தன. அப்போதே கண்ணீர் தீருமட்டும் அழுதுப் பார்த்தாள். மனுசன் கேட்பதாக இல்லை.

தாசப்பனும் ஓரிருமுறை சொல்லி இருக்கிறான், நான் வேணும்னா வேலைக்குப் போறேன்பா.. நீ இந்த வயசு காலத்துல கஷ்டப்பட வேண்டாம் என்று. அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே , ” நீ வாத்தியானாகிற நாளைக்கு அப்புறம் நான் பனையேற மாட்டேண்டா”… அதுவரைக்கும் நீ படி, நான் தொழில் பாக்கறேன். அவ்வளவும் சொல்லிவிட்டு போய்விடுவார். அதற்குமேல் பேச்சை வளர்த்துவதும் அவருக்குப் பிடிப்பதில்லை.

சொர்ணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்திப்பனை ஏற மாலையில் 5 மணிக்கு தான் போவார்கள், எப்போதாவது கொஞ்சநேரம் பிந்திவிட்டால் என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று ஈரல் குலை நடுங்கும். வாசலில் மண்ணெண்ணை விளக்கேற்றி பார்த்திருப்பாள். அப்படி பொழுது தப்பி பொன்னன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கள் வாசனையோடு தான் வருவான். சீவி விட்ட பனம் பூவோடு சேர்ந்து கட்டிவைக்கும் கலையத்தில் சுண்ணாம்பு தேய்த்துவைத்தால் சேர்வது பதனீராகும், இல்லையேல் அது கள்ளாக மாறிவிடும். கள் குடித்துவிட்டு பொன்னன் எப்போதுமே பனையேறுவதில்லை, கடைசிப்பனையில் அவ்வப்போது கள் பானை வைப்பதுண்டு, எல்லா பனையும் ஏறி முடித்தபின் கடைசியாக அந்தபனையில் ஏறி கள் இறக்கி அவ்வப்போது குடிப்பான்.

செல்லாயியின் வார்த்தைகள் தான் சொர்ணத்தை மிகவும் பாதித்ததென்றில்லை, அந்த கவலை அவளுக்கு எபோதுமே இருந்து வந்ததால், இன்றைய நிகழ்ச்சி அவளை மிகவும் பாதித்தது. பதனீர் காய்ச்சி அதை தேங்காயின் கண் பாகம் இருக்கின்ற சிரட்டைகளில் இலைவைத்து அதில் ஊற்றி , கருப்புக்கட்டி செய்துகொண்டிருந்தபோது பொன்னன் வரும் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள் … அவள் கண்கள் கலங்கியிருந்தன.
ஏன் அப்படிப் பார்க்கறே ? நேரத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறேனே ? கருப்புக்கட்டி வியாபாரமெல்லாம் அடிமாட்டு விலைக்குப் போயிடுச்சாம் அதனால இந்த வாரம் சந்தைக்கு போகவேண்டாம். அடுத்தவாரம் பாத்துக்கலாம், பேசிக்கொண்டே பொன்னன் இடுப்பிலிருந்த பாளையையும் தோளிலிருந்த திளாப்பையும் கழற்றி கூரையில் தொங்கவிட்டான்.

விஷயம் கேள்விப்பட்டீங்களா ? தங்கப்பன்…… சொர்ணத்தால் முழுதாக சொல்ல முடியவில்லை.
ம்.. கேள்விப்பட்டேன். என்ன ஆச்சுண்ணு தெரியல. அவன் ரொம்ப நாளா கட்டிப் புடிச்சு ஏறுற மரம் அவனை கீழே விட்டுடுச்சு. மெலிதான சோகம் படர விட்டுக் கொண்டே சொன்னான் பொன்னன்.

நான் சொல்றதை கேக்கறீங்களா ? நாளையில இருந்து பனை ஏற போக வேண்டாமே ?
நம்ம நினைச்சா வேற வேலையா பாக்க முடியாது ? எத்தனை பேரு ஏமான் சாரோட வயலில வேலை பாக்கறாங்க ? அவரோட மரக்கடையில விறகு வெட்டறாங்க ? சொல்லிவிட்டு பார்த்தாள் சொர்ணம்.

அதெல்லாம் எதுக்கு சொர்ணம். எத்தனை வருஷமா இந்த வேலை பாக்கறேன்.
எல்லா தொழில்லயும் கஷ்டம் இருக்கு. ஒரு டிரைவர் விபத்துல செத்து போயிட்டா எல்லாரும் வண்டி ஓட்டுற தொழிலை விட்டுடுவாங்களா ?
போன மாசம் ஆத்துச் சுழில சிக்கி ஒரு சின்னப் பையன் கூட செத்து போயிட்டான். பாவம். விதி முடிஞ்சுட்டா போய் சேந்துட வேண்டியது தான். அதுக்காக பயந்துட்டு தொழிலுக்கு போகாம இருக்கலாமா சொர்ணம் ? நீ கவலைப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது.

எனக்கு பூவோடயும் பொட்டோ டயும் போய்ச்சேரணும், அதான் ஆசை. இந்த கஷ்டத்தை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்க முடியாது சாமி… என் தலையில் அவன் என்ன எழுதி இருக்கானோ ? சமையல் கட்டில் சொர்ணம் புலம்பிக்கொண்டிருந்தாள்…

முற்றத்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் வந்து உட்கார்ந்த பொன்னனுக்கு தொண்டை அடைத்தது. பாவம் தங்கப்பன், எத்தனை வருஷமாய் பனை ஏறுகிறான். சின்னவயதிலிருந்தே என் கூட பனையேறும் தொழில் தொடர்வது அவன் மட்டும் தான். காலையில் முதல் பனையில் ஏறியவுடனே சத்தம் போட்டு பேசுவான் பக்கத்து பனையிலிருக்கும் என்னைப் பார்த்து.. ஒரு தோழனாய், தொழில் செய்யுமிடத்தில் ஒரு பேச்சுத் துணையாய் எல்லாமாய் இருந்தவன் தான் தங்கப்பன். அவன் மரணம் இதுவரை சொல்லாத ஏதோ ஒரு வலியையும், சிறு பயத்தையும் பொன்னப்பனின் மனசில் விதைத்தது.

“அவனுக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது”. காய்ப்பேறிப் போன கைகளை ஒருமுறை பிசைந்துவிட்டு காதுமடலில் சொருகி வைத்திருந்த பீடி எடுத்து பற்ற வைத்து விட்டு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் பொன்னன். பையனை எப்படியும் வாத்தியானாக்க வேண்டும். அதோடு இந்த செத்துப்பிழைக்கும் பனையேற்றுத் தொழிலையும் விட்டுவிடவேண்டும்.
இதுவரை இதமாக இருந்த அந்த கயிற்றுக் கட்டில் முதல் முறையாக முதுகைக் குத்துவதாகத் தோன்றியது பொன்னனுக்கு.