ஒரு விலைமகள் விழித்திருக்கிறாள்

 

Image result for prostitute india paintingஎன்
படுக்கை விழித்திருக்கிறது…

என் கதவு,
தாழ்ப்பாள் விலக்கிக் காத்திருக்கிறது.
எந்தக் கோவலனால்
அழியப்போகுதோ
இன்றைய என் அலங்காரம்.

உணர்வுகள் எல்லாம்
ரணமாகி,
பின் மரணமாகிப் போயின.
இப்போது இருப்பதெல்லாம்
இரவுக்குக் காத்திருக்கும்
இந்த
தற்கொலைத் தாமரை மட்டும் தான்.

பகலில்
புரவிச் சவாரி செய்யும்
பல பாண்டிய மன்னர்கள்
இரவில் மணிமுடி கழற்றிவிட்டு
என்
கொல்லைப்படி தேடி வருவதுண்டு.

பகலில்
தோளில் கம்பீரமாகும் துண்டு
இரவில் சிலருக்கு இடம்மாறி
தலையிலும் முகத்திலும்
தற்காப்புக்கவசம் ஆவதுண்டு.

மனைவியின் சண்டையும்,
பிரிவின் வலியும்,
சுமந்து சுமந்தே
இந்த உடம்பு
கட்டில் கால்களுக்குள் கசங்கிப் போனது.

இயலாமையில் இதயம்
எரியும் போதெல்லாம்
வயிற்றுத்தீ வந்து
தண்­ணீர் வார்த்துப் போகும்.

கேலிகளின் நீள் நாக்கு குத்தி
காதுகள் கிழியும் போதெல்லாம்
கண்ணீ­ர்க்கால்வாய்கள் ஓடி வந்து
ஒட்டுப்போடும்.

அம்மா
எனும் மழலைக்குரலுடன்
என் முந்தானை முனை இழுக்கும்
மூன்று வயது மூத்தமகன்.

கணவன் வரவுக்காய்
இருண்ட வாசலில் வெளிச்சமாய்
விளக்கேற்றிக் காத்திருக்கும்
என் முகம்.

கனவுகள் அவ்வப்போது வந்து
கதவு திறக்கும் போது
அவிழ்க்க மட்டுமே பழக்கப்பட்ட
ஏதோ ஒரு பாம்புக் குரல் வந்து
முடிச்சிட்டு இழுக்கும்.

மாங்கல்யக் கனவுகளின்
முற்றுப்புள்ளியாய்
என் முந்தானை முடிச்சுகள்
மீண்டும்
கழன்று வீழும்.
*

முதுமை

Image result for old man

வயோதிகத்தின் வழிப்பாதை.
அது
இன்னொரு பிரசவத்தின்
பிரயாசை.

ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில்
கால் முட்டிகள்,
அதிர்ந்து தும்மினால்
அறுந்து வீழும் வலியில்
அரற்றும் அங்கங்கள்.

சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும்
ஆமை வாழ்க்கை இது.

இரங்கல் கூட்டம் போடும்
இரக்கமில்லாதோர் சபை.
இங்கு
முதியவர்களின் முகத்திற்கு நேராய்
மூச்சுக்கு
மூவாயிரம் குற்றச்சாட்டுக்கள்.

உயிரை மட்டும்
இழுத்துப் பிடித்திருக்கும்
இந்த சுருக்கங்களின் தேசத்தோடு
இளசுகளின் யுத்தங்கள்.

தளிர்களின் நரம்புகளெங்கும்
சருகுகளோடு சண்டை.

பச்சையப் பாசனம் நின்றுபோன
இந்த
வைக்கோல் வயல்களுக்கு
கொழுகொம்புகளே
கொலைக்களமாகி விடுகின்றன.

இரும்பாய் இருந்தவரை
ஏதேதோ வடிவத்தில் வாழ்க்கை.
கால்கள் துருப்பிடிக்கத் துவங்கியபின்
தரையோடு தான்
தவழ்கிறது மிச்ச வாழ்க்கை.

கைத்தடிகளின் கால்களோடும்,
கட்டில்
கால்களின் துணையோடும்,
ஜன்னலோரக் காற்றோடு பேசிப் பேசி
கழிந்து விடும் எஞ்சிய ஜ“விதம்.

நெஞ்சில் தவழ்ந்த
மகனின் பிஞ்சுக்கால்கள்
இப்போது வலுவடைந்து விட்டன.

அவன் அடுத்த தலைமுறைக்கான
கதவுகளோடும் கனவுகளோடும்
நடக்கின்றான்.
நான்
இறந்தகாலத்தின் படுக்கையில்
இன்னும் இறக்காமல்.

உறவுகளுக்குப் பாரமாகிப்போனது
என் உடல்.
கடவுளின் கருணைக் கொலைக்காக
கண்­ர் மனு சுமந்து கிடக்கிறது
உணர்விழந்து போன உயிர்.

பிராணன் போகட்டுமென்று
பிரார்த்தனை செய்யும் மனசு,
செத்துப் போயேன் எனும்
மருமகள் வார்த்தையால்
இன்னொரு முறை சாகும்.

அறுவை சிகிச்சை

Image result for dreaming

நாளைக்கு அறுவை சிகிச்சை !!!
இருபத்து நான்கு வருட
இருள் வாழ்க்கைக்குப் பின்
விழிப்பாதைக்குள் வழியப் போகுது வெளிச்சம்.

எனைப் பார்த்துக்கொண்டிருந்த பூமியை
முதன் முதலாய்
நான் பார்க்கப் போகிறேன் ..

பார்வை கிடைத்ததும்
முதலில்
அம்மாவைப் பார்க்க வேண்டும்.
பேச்சுக்குள் பரிமாறிக்கொண்ட பாசத்தின்
முக உருவம் காண வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும் போது
நான் தொட்டுப் பார்க்கும் திண்ணையும்
எனைத் தொட்டுப் பார்க்கும்
அப்பாவையும் பார்க்க வேண்டும்.

இரைச்சல்களில் இழுக்கப்பட்டு
எங்கோ நிற்கும் போது
என்கரம் தீண்டி சாலை கடத்தும்
அந்த அன்னிய முகம் காணவேண்டும்.

என்னை மட்டும் இருள் பள்ளத்தின்
முகம் இல்லா மூலைக்குள்
புதைத்துப் போட்ட
என் கருவிழி காணவேண்டும் .

என் ஒரு முகத்தின்
இரு கண்களையும் இருட்டாக்கிய
அந்த பல முக இறைவனின்
திரு உருவம் தரிசிக்க வேண்டும்.

என் இருட்டுப் பயணத்துக்கு
கதவுகள் கண்டுபிடிக்கும்
என் ஊன்றுகோல்..
நான் உடுத்திருக்கும் ஆடையின் நிறம்
எல்லாம் காணவேண்டும்.

வானவில்லுக்கு நிறமுண்டாம்.
ஆமாம் நிறமென்பதென்ன ?
நிலவு போல பெண்ணாம்
சரி நிலவும்,பெண்ணும் என்ன நிறம்..?

எனக்கு முன்னால் இருப்பதெல்லாம்
எதிர்பார்ப்பு மூட்டைகள்.
மனசு முழுக்க ஆனந்தம் வந்து
ஊசிகுத்திய போது..
கனவு கலைத்தாள் அம்மா.

விடிந்து விட்டதாம்..
எனக்கு
அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

கனவு கண்டாயா
என்ற அம்மாவின் கேள்விக்கு
ஊன்றுகோல் தடவிய கரங்களுடன்
வார்த்தைகள் வலித்தன.
ஆமாம். ஆனால்.
கனவில் கூட கண் தெரியலேம்மா..

 

 

வெளிவராதவை

Image result for a man alone painting

மனசுக்குள்
ஓராயிரம் மீன்கொத்திகள்,
ஓரமாய் அமர்ந்து
சிந்தனை
கொத்திக் கொண்டிருக்கின்றன.

எப்போதும்
வார்த்தைகள் முண்டியடித்து
என்
தொண்டைவரை ஏறி
தற்கொலை செய்கின்றன.

வாய்க் குகைகள் வழியாய்
என்
மனசின் கர்ஜனைகள்
வெளிவருவதே இல்லை.

மரணம் வந்து
மேய்ந்து போன வயலாய்,
இதயம் முழுதும்
சொல்லாத ஆதங்கங்களின்
தடயங்கள் மட்டும்.

யாரேனும் சொல்லக் கூடுமா
என்
தொண்டையைக்
கிழித்த,
தூண்டில் வாசகங்களை ?

நான் பேச நினைப்பதெல்லாம்
பேச
நாவு இல்லா நிலையை
நானெப்படி சொல்ல ?

அன்பு

Image result for caring hand

 

பிரதேசங்களின் தேகங்களில்
நேச நதியை நகரவும்
வாச மலரை நுகரவும் வைக்கும்
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம்
அன்பு.

இதயங்கள் இரண்டு
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
குடிபெயர்ந்துக் குடிவாழும்
ஓர்
குதூகலக் காடு
அன்பு.

அன்பு,
படிகம் பிரித்துத் தரும்
வண்ணங்களின் வரிசை
ஆனாலும்
காதலுக்கு மட்டுமே இதில்
வரிசை மீறிய வžகரம்.

அன்பு,
மனிதத்தின் மையம்,
மதங்களும், கடவுளும்
அன்பில் தான் மையம்

தராசுகளின் தட்டுகளில்
வெட்டி வைத்து,
முள்ளின் முனையோடு
முரண்டுபிடித்து,
கைகளில் அள்ளி
பைகளில் தள்ளும்
தானியமல்ல அன்பு,

அது தண்­ணீர் !
வறண்ட நிலத்தின் வேரிலோ,
குளிர்ந்த இடத்தில் நீரிலோ
சுட்டுக் கொண்டால் வானிலோ,
உருவம் மாறி உருவம் மாறி
உறங்காமல் உலாவும்.

அன்பு,
தானே பொழியும் மழை.
செயற்கைப் பிரசவங்களை,
கர்ப்பம் தரிக்காத
பணப் பசுக்கள்
நடத்த முடியாது.

அன்பு,
கட்டளைகளுக்குள் சிக்காது,
வான் மழைக்கு
விண் வெளியில்
அணைகட்டல் இயலாது.

அன்பு,
வலுக்கட்டாயத்தின் விளைவல்ல
பறக்கச் சொல்லி
மீன்குஞ்சை
பழக்கப் படுத்தல் இயலாது.

அன்பு,
அது அன்பாகவே உலவும்.
கால் கிலோ காற்று என்றும்
அரை லிட்டர் அன்பு என்றும்
யாரேனும்
அளந்து சொல்லல் இயலுமோ ?

அன்பை அளியுங்கள்,
அத்தனை சட்டமீறல்களும்
சட்டென்று அடைபட்டுப் போகும்.
அத்தனை
கண்­ர் விழிகளும்
கைக்குட்டை இல்லாமலேயே
ஈரம் வற்றிப் போகும்.

அன்பு
பண்டமாற்று முறையல்ல,
விற்றுத் தள்ளுவதற்கு.
வெற்றுக் கையோடு
விரோதியும் கொஞ்சம்
பெற்றுக் கொள்ளட்டுமே..

புல்லில் வீழும் பனித்துளிக்கும்
ரோஜாவில் வீழும் பனித்துளிக்கும்
ஈரமும் பாரமும்
வாழும் நேரமும்,
வித்தியாசப் படுவதில்லையே.

குடிசையில பெஞ்ச மழை

Image result for Hut in rain

ஓண்டக் குடிசையில்ல
ஒட்டிக்கிடக்க பாயுமில்ல
நேத்து பெஞ்ச பேய் மழைல
காஞ்சு போச்சு என் உசுரு.

ஐயா மவராசா.
அஞ்சு புள்ள பெத்தவய்யா
பெஞ்சு போன பெருமழைல
பெத்த மனசு பதறுதய்யா.

காத்தால வானத்துல
கருக்கயிலே கவலப்பட்டேன்
பொத்துகிட்டு விழுந்தய்யா வானும்
வீதியில ஆனேன் நானும்.

போன மாசம் ஒரு ராவுல
தீபாவளி இருட்டுக்குள்ள
பாவிப்பய வெச்ச வெடி
பாஞ்சுதய்யா கூரைக்குள்ள

எரிஞ்சுபோன மொத்த வூடும்
கரிஞ்சு போய்தான் கிடச்சுதய்யா
நேத்து பெஞ்ச பேயி மழை
அன்னக்கி மட்டும் பெய்யாதா ??

தண்ணிப்பஞ்சம் போச்சுதுண்ணும்
அணையெல்லாம் நிறஞ்சுதுண்ணும்
சிரிச்சுகிட்டே டிவில ஆபீசரு சொன்னாக.
மனசெல்லாம் ஒடஞ்சு போயி
கண்ணீ­ர் பஞ்சம் தீந்து போச்சு
பசிச்ச வயிறு பதறுறத
பத்து நிமிசம் சொல்றீயளா.

கலக்டர் சாரு வந்தாக
காருக்குள்ள இருந்தாக
கண்ணாடி கூட எறக்காம
கதையெழுதிப் போனாக.

மழை பெஞ்சா புயலடிச்சா
மாரியாத்தா ஓடி வந்து
குட பிடிக்கக் கூடாதா.
வீடெல்லாம் விழுங்கிப்போன
பெரு வெள்ளம் காஞ்சு போச்சு
கறுத்துக் கெடந்த வானமெல்லாம்
வெளுத்துப்போயி சிரிச்சிருக்கு.

வாயக் கட்டி
வவுத்தக் கட்டி
கட்டி வெச்ச குடிசை மட்டும்
ராத்திரிக்கு வந்த மழைல
அவுந்து போச்சே என்ன செய்வேன்..

பிரார்த்தனை

Image result for south indian Old lady praying

விறகு உலர்த்திக் கொண்டே
அம்மா
மழை வரக்கூடாதே
என்றும்,

நடவு முடித்த மாமா
கொஞ்சமாய்
தூறலேனும் விழட்டுமே என்றும்.

ஒரே கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்
தனித் தனியாய்.

நான் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறுமனே.

 

அழுவதில் அத்தனை ஆனந்தமா..

Image result for just born crying

 

எங்கே இருக்கிறேன்,
நான் யார் ?
என்ன நேர்கிறது எனக்கு ?
ஒன்றும் விளங்கவில்லை,

சட்டென்று விழிகளில்
வேகமாய்ப் பாய்கிறது
வெளிச்ச அருவி

ஏதோ ஒரு முரட்டுக்கரம்
கூரிய கத்தியால்
என் உடலில் வெட்டுகிறது.

யாரோ எரிமலைக்குழம்பில்
என்னை அமிழ்த்துகிறார்கள்.

உடலைச் சுற்றி ஏதோ ஒன்று
எலும்புகளை நொறுக்குகிறது.

அசுர பலத்துடன் இரு கைகள்
என்னை
தலைகீழாய் உலுக்குகின்றன.

தொண்டை வரைக்கும்
வார்த்தைகள் உருண்டு வந்து
மொழி மறந்து வறண்டு போகின்றன.

புரியாத சத்தங்களின்
பிரம்மாண்ட ஊர்வலம்
என் காதுகளைச் சுற்றிலும்.

ஏதேதோ மோதுகின்றன
என் மேனியெங்கும்.

ஒட்டுமொத்தப் பயத்தின்
ஒற்றைப்புள்ளியாய் நான்.
விலகாத பயம் விரிவடைய
உயிர் திரட்டி வீறிட்டு அழுகிறேன்.

வெளியே சிரிப்பொலி
குழந்தை அழுதுவிட்டது எனும்
ஆனந்தக் குரல்களுடன்.

என் மகள்.

Image result for girl child

 

மெல்ல மெல்லச் சின்ன
மல்லிகைக் கால்கள் பின்ன
சின்னச் சின்ன சின்னம் வைத்து
அல்லி நடை போடுகிறாய்.

ஒற்றைப் புன்னகையில்
உலகை விற்று விட்டு
பிஞ்சு விரல் அஞ்சிலும்
வெற்றிப் பத்திரம் நீட்டுகிறாய்.

என் மீசைக் கயிறு பிடித்து
தோள் மலை ஏறுகிறாய்.
கன்னப் பிரதேசங்களில்
நகப் பள்ளம் தோண்டுகிறாய்.

செதுக்கிச் செய்த சின்னச் சூரியனாய்,
உன் கண்களின் சிரிப்பு
வாசல் முழுதும் சிதறிக்கிடக்கிறது.

பதுக்கி வந்த பகல் நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
படுக்கை முழுதும் பரவிக்கிடக்கின்றன

செம்பருத்திப் பாதங்கள்
சமயலறைவரை
சிறு செம்மண் கோலம் வரைய,
தளிர் மாவிலைக் கைதரும்
ரேகைச் சித்திரங்கள்
வெள்ளைச் சுவரை அழுக்காக்கி அழகாக்கும்.

நீ
பிறப்பதற்குத் தவமிருந்தது ஒருகாலம்,
உன்
ஒவ்வோர் அசைவுகளும்
வரம் தருவது நிகழ் காலம்.

பிஞ்சுக்கன்னங்களை நெஞ்சில் தாங்கி,
ரோஜாத்தீண்டலாய் விழும்
மெல்லிய உன் மூச்சுக் காற்றில்,
மனசுக்குள் சில
மனங்கொத்திகளை பறக்கவிடுகிறேன்.

உன் அழுகைக் கரைகளில்
கரைந்து போகிறேன்.
உன் மெல்லிய உதைகளில்
மென்மையாய் மிதக்கிறேன்.

என் வாலிபங்கள் காத்திருந்தது
உன் வரவுக்காய் தானோ ?
நான் சந்தித்த
மகிழ்வுகளின் மாநாடு தான்
உன் வரவோ ?

காலங்களைப் பிடித்திழுக்கும்
உன் கரங்களுக்குள் கடிவாளமாகி
உன் கண்களோடு கலந்து போய்
கவியரங்கம் நடத்துகிறேன்.

உன்
முத்தங்களுக்காய் மனுச்செய்து
நான் மண்டியிடும் போதெல்லாம்
பக்கத்து வீட்டுச் சன்னல்
சத்தமாய் ஒலிபரப்பு செய்யும்.
‘ஊரிலில்லாத பிள்ளையைப் பெற்றுவிட்டான் “ என்று.

உனக்கும் எனக்கும்
உயிர்ப்பாய்ச்சல் நடக்கும் போது
ஊர்ப்பாய்ச்சல் நமக்கெதுக்கு ?
தயங்காமல் தாவிவந்து
என் இரு தோளில் தொங்கி
இன்னொரு முத்தம் தந்துவிட்டுப் போ.
இறுக்கமாய் சிறிது நேரம் இருந்துவிட்டுப் போ.

திருநங்கையரின் வலி

Image result for transgenders india

 

போலிகளின் பற்களைப்
பிடுங்கத் தெரியாத
நீங்கள்,
திருநங்கைகளோடு மட்டும் ஏன்
கேலிக் குரலை எறிகிறீர்கள்?

திருநங்கைகள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.

யாரோ செய்த பாவத்தின்
ஆயுள் கைதிகள்
அவர்கள்,
சாலைகளில்
தினம் தினம்
ஏன் தூக்கிலிடுகிறீர்கள்.

அவர்கள் என்ன
ஆசைப்பட்டு திருநங்கையர்
ஆனார்களா ?

நீங்கள் முழுமையாய்
பிறந்தததிலும்,
அவர்கள்
அரைகுறையாய் அவதரித்ததிலும்,
உன் திறமையும்
அவன் தவறும் எங்கும் இல்லையே.

உங்கள் இதயத்துக்கும்
அவர்கள் இதயத்துக்கும்
இருப்பதெல்லாம் இரண்டு
தமனிகள் தானே ?

காயம் பட்ட நெஞ்சங்களை
கேலி செய்யும்
நீங்கள்
உயர்ந்தவர்கள் என்று எப்படி
உங்களை
பிரகடனப் படுத்திக் கொள்ளலாம் ?

ஆடு தொடா இலைகளாய்
வேலிக் கரையில்
விளைகிறது அவர்கள்
வாழ்க்கை,
எருமைகளோடு வந்து
எட்டி மிதிப்பதை நிறுத்துங்கள்.

இல்லையேல்,
அயலானை அன்புசெய்யச் சொன்ன
அத்தனை மதங்களும்
ஓர்
அர்த்தராத்திரி இருட்டாய்
அர்த்தமற்றுப் போய்விடும்.