பாட்டி

 

Image result for south indian Old lady painting

இப்போதெல்லாம் எனக்கு
பாட்டியின் ஞாபகம்
அடிக்கடி வருகிறது.

கொஞ்சம் அன்புக்காக
எனது சிறு புன்னகைக்காக
ஜ“வனுக்குள்
பாசத்தின் ஜென்மத்தைப்
பதுக்கி வைத்திருந்த பாட்டி.

எனக்குத் தெரிந்து
பாட்டியின் நெடும் பயண நேரமே
சந்தைக்கும்
சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்.

கொல்லைப்புறத்தின்
பதனீர்ப்பானைகளுக்கிடையில்
பதியனிடப்பட்டு
பயிரானது தான் அவள் முதுமை!!

சருகுகள் பொறுக்குவதிலும்
சுள்ளிகள் சேகரிப்பதிலும்
ஓலை முடைவதிலுமாய்
அவள் வருடங்கள் முழுவதுமே
விறகுக்காய் விறகாகிப் போனது.

கிழக்குப் பக்கத்தில்
கட்டிவைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டைதேடி முட்டைதேடி
முடிந்துபோகும் காலைகள்.

சமையல் கட்டில்
சருகுக் கூட்டில்
கரிசல் காட்டில்..
இப்படியே மங்கிப் போகும்
மாலைப் பொழுதுகள்.

மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில்
விட்டில்களை விரட்டி விரட்டி
பாக்கு இடிப்பதிலேயே
முடிந்து போகும் இரவுகள்..

நினைவிருக்கிறது.
சின்னவயதில்
ஆசையாய் நெய் முறுக்கு தந்து
என்னைத் தழுவும் போதெல்லாம்
வழியும்
வெற்றிலைக்கறை கண்டு
விருப்பமின்றி ஒதுங்கியிருக்கிறேன்.

இப்போதெல்லாம்
சாப்பிட்டாயா ?
என்று கேட்கும் பாட்டியின் குரல்
அவ்வப்போது எதிரொலிக்கும்
ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து.

பாட்டியிடம்
சாப்பிட்டாயா என்று
பாசத்தோடு ஒரே ஒருமுறை
கேட்கத் தோன்றுகிறது.

கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
பதனீர் சட்டிகள்,
சருகு அடுப்புகள்,
மண்ணெண்ணெய் விளக்குகள்,
எல்லாம்..
எல்லாம் இறந்து விட்டன.
என் பாட்டியும்.

நினைவுக் கனல்கள்

Image result for Old lady kitchen village

 

குமிழியைத் திருகினால்
எரிகிறது அடுப்பு,
கூடவே
ஈரச் சருகுகளுக்குள்
மூச்சுக்காற்றை ஊதி ஊதி
இருமலுக்கிடையே
விறகு எரிக்கும் அம்மாவின்
நினைவும்.

 

சைகையின் சத்தங்கள்

Image result for sad man painting

 

 

என் நாவுகள்
வார்த்தைகளை வார்த்ததில்லை,
என்
வாய்க்குகைக்குள் இருந்து
இன்னும்
எந்தக் குரலும் வெளிக்குதிக்கவில்லை.

திசைகளெங்கும் இசையின்
விசைகள்,
மூங்கில்கள் கூட
முணுமுணுக்கின்றன,
அசையும் இலைகள் கூட
இசை தர இசைகின்றன.

மனசுக்குள்
ஓராயிரம் மீன்கொத்திகள்
ஓரமாய் அமர்ந்து
சிந்தனை
கொத்திக் கொண்டிருக்க,

என் நாவு மட்டும்
நங்கூரம் இறக்கப்பட்ட
கப்பலாய்,
உள்ளுக்குள் இறந்து கிடக்கிறது.

அழுத்தமாய் இழுத்தாலும்
வெறும்
எழுத்துக்களே எழுகின்றன
கழுத்தின்
சுடுகாட்டுப் புதைகுழியிலிருந்து !

மூன்றாம் நாளில்
உயிர்த்தெழாத வார்த்தைகளின்
சிலுவைச் சாவுகள் மட்டுமே
என் கல்வாரிக் கழுத்தில்.

மரணம் வந்து
மேய்ந்து போன வயலாய்,
இதயம் முழுதும்
சொல்லாத ஆதங்கங்களின்
தடயங்கள் மாத்திரம்.

யாரேனும் சொல்லக் கூடுமோ
என்
தொண்டையைக்
கிழித்த,
தூண்டில் வாசகங்களை ?

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
ரசனையெனும்
வைகையோரக் குயிலோசையை
என்
சைகையெனும் விரலோசைகளால்
விளக்கி விட முடிவதில்லையே.

உங்களுக்கு
இசைப்பவனைக் கண்டால்
பொங்கும் பிரமிப்பு,
பேசுபவனைக் கண்டால்
எனக்குள் எழுகிறது !

அம்மா என்றழைக்காத
உயிரில்லையே…
வரிகளும் வந்து
வலிகளை வலிமையாய்
வரைந்து போகும் எனக்குள்.

மனசு மட்டும் அழைத்துப் பார்க்கும்
ஓசை வருமா எனும்
ஆசையில்.
“அம்மாஆஆஆ..” என்று.

 

இன்னொரு வழிப்பாதை.

Image result for south indian wedding father

 

 

பிரிய மகளுக்கு இன்று திருமணம்.
நெற்றிச் சுட்டி முதல்,
சமயலறைச் சட்டி வரை
எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாயிற்று.

வாசலை மறைத்து நிற்கும்
பூவிலைத் தோரணங்கள்.
மெலிதாய்ப் புரண்டுவரும் இன்னிசை,
உறவினர், நண்பர் உற்சாக உரையாடல்கள்,
ராஜ கம்பீரத்துடன் மணமேடை.

காஞ்சிபுரக் கசவு நிறத்தில்
கவிதைக் கன்னம்,
அலங்காரங்களின் அபினயத்தில்
அழகுப் பதுமையாய் மணப்பெண்.

பரிசுப் பொருட்களின்
பளபளப்புக்கிடையே
தேய்ந்துகொண்டிருக்கிறது நேரம்.

மேடையில் யாகம் வளர்த்தாயிற்று,
நான் தேடிப்பிடித்த மாப்பிள்ளையும்
சிறுவயதில் என்னோடு ஓடிப் பிடித்து
விளையாடிய என் ஒரே மகளும் மேடையில்.

மந்திரங்கள் மெலிதாக
வெளி விழத்துவங்கின,
அதோடு இழைந்து என் நினைவுகளும்.

அறிவுச் சுடரின் அத்தனை இழைகளையும்
மொத்தமாய் அள்ளி வந்து
என்னை
மெத்த மகிழ்த்திய மகள்.

வீட்டின் ஒவ்வோர் அறைகளிலும்
கலைக்கப்பட்ட பொருட்களும்,
அடுக்கப்பட்ட அவளது நினைவுகளும் தான்.

பாதக் கொலுசுப் பாவாடை பிராயம்,
தாழத் தழையும் தாவணி வயது,
புதிதாய் பிறக்க வைத்த புடவைப் பருவம்
காலம் முன்னோக்கியும்
நினைவுக் கடிகாரம் பின்னோக்கியும்
நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாளை முதல்
என் மூச்சுக் காற்றில் பாதி
இன்னொரு ஊரில்
உலாவப் போகிறதா ?

சத்தங்கள் இல்லாமல்
இந்த வீடு
மௌனத்தோடு சண்டையிடப் போகிறதா ?

வீட்டு முற்றத்து மல்லிகைச் செடி
வாசமில்லாத பூவை
பிறப்பிக்கப் போகிறதா ?

நினைவுகள் மனதில் விழ விழ
கால்கள் களைப்படகின்றன.

“ கெட்டிமேளம் கெட்டிமேளம் “
சத்தங்கள் நொடியில் வேகம் பிடிக்க.
கண்களின் ஓரத்தில் வெது வெதுப்பாய்
வழிகிறது மகிழ்வைக் குழைத்த சோகம்.

கண் எரிகிறது,
யாகம் ஏன் இவ்வளவு புகைகிறது?
கூடி இருப்பவர்கள் பேசுகிறார்கள்.

சட்டென்று என் கைவிட்டுவிட்டு
கடற்கரைக் கூட்டத்தில் ஓடி மறையும்
ஒருவயதுக் குழந்தையாய்
என் எதிரில் மகள்.
அவள் கலங்கிய கண்ணருகே
கதறும் மன அலை ஒட்டிச் சென்ற
இன்னொருதுளிக் கண்­ணீர்.

எல்லைக் கோடுகள்

Image result for Girl in dream

எல்லைக் கோடுகள்

அதிகாலை அமைதியில்
வரும்
உன் கனவு.

உயிருக்குள் நீரூற்றி
மனசுக்குள் தீமூட்டும்
உன் இளமை !

விழிகளில் நிறமூற்றி
இதயத்துள் ஓசையிறக்கும்
உன் அழகு !

நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல்.

நெஞ்சுக்குள்
சிலிர்ப்பு நதி சரிக்கும்
உன் சிணுங்கல் !
..
.
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லைக் கோடுகள் !!!

அன்பினால் ஓர் அவதாரம் ( கண்தானம் )

Image result for eyes painting

இந்த பூமி,
நிறக்கலவைகளின்
நாட்டியாலயம்.

கதிரவத் தீயில்
பச்சையம் சமைக்கும்
சங்கீதத் தாவரங்களின்
சரணாலயம்.

அலையும் ஓவியங்களாய்
சிரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணப் பூக்களோடு
வர்ணனை பேசித் திரியும்.

இலைகளின் தலை கழுவி
பூக்களின் முகம் துடைக்க,
மேகத்தின் பாகங்கள்
மழை வடிவில் மண்தேடும்.

நதிகளின்
ஓட்டப்பந்தயத்தை,
சிறு மீன் கூட்டங்கள்
ஈரத் தலையுடன்
வேடிக்கை பார்க்கும்.

மொத்த அழகின்
ஒற்றைப் புள்ளியாய்
சிறு மழலைகள்
சிரித்துக் களிக்கும்.

கிழக்கைத் துவைத்துக்
களைக்கும் கதிரவன்
கண்கள் சிவக்க
மேற்குப் போர்வைக்குள்
துயில்ப் பயணம் துவங்கும்.

விடியல் முதல்
மடியல் வரை
அழகின் இழைகளை
அகத்திழுத்துச் செல்லும்
உன்
முகத்திரு விழிகள்.

அத்தனை அழகும்
ஆழமான குருட்டறைக்குள்
கருப்புச் சாயம் பூசப்பட்டுக் கிடக்கும்
பார்வை பிடுங்கப்பட்ட
பாமரக் கண்களில்.

எப்போதேனும்
ஓர்
கண்கிடைக்குமெனும்
கண்ணாடிக் கனவுகளுடன்
இருட்டுக்குள் அவை விழித்திருக்கும்.

புதைக்கப்பட்ட
ஒவ்வோர் விதையும்
கிளைக் கண்களால்
பூமியைத் தீண்டும்.
விதையின் முடிவில்
புது அவதாரம் மீண்டும்.

உணவைப் பகிர்ந்தளிப்பவன்
பசியைப் பட்டினியிடுகிறான்.
கண்களைப் பரிசளிப்பவனோ
பிரபஞ்சத்தையே பரிசளிக்கிறான்.

இது
உன் பூமி.
உன் பாதங்கள் பிறந்த பூமி.

உன்
உடலின் அழிவிற்குப் பின்னும்
உன் தேசத்தின் தேகத்துக்கு
உன் பார்வைகளைப் பரிசளி.

கண் தானம் செய்.
புனிதனாவதன் முதல் படி
மனிதனாய்
நீ
மனிதனை அடைவது தான்.

 

ஓர் தாயின் கடிதம்.

Image result for south indian pregnant painting

 

 

என்
பரவசப் படிக்கட்டுகளில்
பனிக்கட்டியாய்
உறைந்த என் மழலையே.

இப்போதெல்லாம்,
என்
விரல்களின் முனைகளில்
நகங்களுக்குப் பதிலாய்
வீணைகள் முளைக்கின்றன.

என்
கண்களுக்குள்
புதிதாய் சில
கருவிழிகள் உருவாகின்றன.

புலரும் காலைகளும்,
நகரும் மாலைகளும்
உன்
புன்னகை விரிப்புகளில் தான்
பயணிக்கின்றன.

உன்
சின்னச் சின்ன அசைவுகளில்
தான்
என் கவிதைக் கனவுகள்
பிரசுரமாகின்றன.

என் உயிரின் நீட்சி,
உன் வரவின் ஆட்சி.

என்னிடம்
வார்த்தைகள் இல்லை.
மலர்க் கண்காட்சிக்குள்
விழுந்து விட்ட
பூப் பிரியை யாய்
பொழுதுகள் உலர்கின்றன.

ஒவ்வொர் நாளும்
என்
கனவுகளின் கதவுகள்
அகலமாய் திறக்கின்றன.

மனசு மட்டும்
கைகளில் இறங்கி வந்து
வயிறு தடவிப் பார்க்கிறது.

நெருங்கி வரும்
உன்
ஜனன நாளை.

 

இரவின் பாதையில்.

Image result for a house in dark

 

கைத்தடி உடைந்த
குருட்டுக்கிழவன்போல்
தடுமாறி நகரும் கும்மிருட்டு.

சின்ன வாய்க்காலின் எல்லையில்
தென்னம் ஓலைகளோடு
ஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.

காலையில் பெய்த மழையில்
தலைக்குளித்து
மாலை வெயிலில் மஞ்சள் பூசி
கருப்புக் கரைத்த காற்றுடன்
தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீள வயல்..

சேற்றுக் குழிகளுக்குள்
குரல்வளை நொறுங்க
கத்திக் கொண்டிருக்கும்
ஈரத்தவளைகள்.

சொட்டுச் சொட்டாய்
தென்னைமரம் உதிர்க்கும்
சேமிப்புத் துளிகளின்
சலங்கைச் சத்தம்.

சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்
தூக்கம் கலைந்து
சுவடு சுவாசித்து அலையும்
எறும்புக்கூட்டங்கள்
வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்

ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசை
திண்ணைகளில் கூந்தலசைத்துச்
சிரிக்கும்
மண்ணெண்ணை தீபங்கள்.

போர்வைகளைத் துளைக்கும்
சில்மிஷக்காற்று..

கவிதை போல் காதுகளுக்குள்
கூடாரமடித்துக் கிடக்கும்
ஓர் மழைக்காலக் குருவியின்
மழலைப்பாடல்.

கை தொடும் தூரத்தில்
விட்டத்தில் கட்டிய தொட்டிலில்
விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்
என் மூன்று மாதக் குழந்தை..

தொட்டில் கயிறின் முனைபிடித்து
படுக்கைக் கரையில்
முந்தானை முனைகள் மெலிதாய்க் கலைய
விரல் தொடும் தூரத்தில்
அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.

மழலைக்காய் அவள் இசைக்கும்
தாலாட்டில் தான்
தூங்கிப் போகவேண்டுமென்று
ஆழமாகிப் போன பின்னிரவிலும்
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
என்
ஒற்றை மனசு.

கடல் தாண்டிய காதல்.

Image result for Love fantasy

நீண்ட நாட்களாகிறது.
அவள் முகம் பார்த்து.

அவள் பற்றிய நினைவுகளை
மனதிற்குள்
ஓடவிடும்போதெல்லாம்
மனக்கிண்ணத்தில்
மெல்லியதாய்
ஒரு இசை உருவாகும்
ஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.

அவள் சிரிப்பு,
ஹைக்கூக் கண்கள்,
இதயத்துக்குள் ஈட்டி இறக்கும்
அவள் வெட்கம்,

சொர்க்கம் என்பது
மண்ணில் என்பதை
அந்த
தேவதை தரிசனம் தான்
கொளுத்திவிட்டுப் போனது.

அவள் விரல் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாலை
அகலமாயில்லை என்பதை
அறிந்துகொள்வேன்.

உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே
அவளோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்

பகல்
விரைவாய் விழித்தெழுமென்று
விளக்கம் சொன்னதே
தொலைபேசிக்குள்
தொழுகை நடத்திய இரவுகள்தான்.

இப்போது வாழ்க்கை என்னை
கடல்களைத்தாண்டிக் கடத்திவிட்டது
ஆனாலும்
நினைவுகளின் தள்ளுவண்டி
அவள் நடக்கும்
வீதிகளில் தான் நகர்கிறது.

கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி மட்டுமல்ல
காதலும் தான்
என்கிறதே என் காதல்.

உண்மைதான்.
என்றோ விலகிப் போன
அவள் மேல்
எனக்கு
இன்றும் வளர்கிறதே காதல்.

காகிதச் சிறகுகள்

 

Image result for Guy sad

ஓவியம் வரைய
நினைத்தால்
தூரிகை திருடுகிறாய்.

கவிதை எழுத
நினைத்தால்
என்
கற்பனை திருடுகிறாய்.

கண்மூடிக் கிடந்தால்
விழிகளில் வழியும்
கனவுகளை வருடுகிறாய்.

என்ன தான் செய்வது ?

சிற்பமா ?
சிற்பத்துக்காய் உட்கார்ந்தால்
விழிகளால் செதுக்க மாட்டாயா
உளிகளை ?

ஓவியத்தையும்,
கவிதையையும்
சிற்பத்தையும் தவிர்த்து
இந்த
கவிதை உலகம் எனக்கு
எதையுமே
கற்றுத் தரவில்லையடி கண்ணே.

உன் பிம்பம் படிந்த
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை விட,

அன்றைய உன் மூச்சுக் காற்றை
இன்றும்
இழுத்துப் பிடித்திருக்கும்
என் மொட்டை மாடித்
தென்றலை விட,

நினைவுகளின் கனத்தில்
கழுத்தறுபட்டுப் போகும்
அந்த
கடைசித் துளிக் கண்­ரை விட
அடர்த்தியான,
கவிதைகளை என்னால்
எழுதமுடியாமல் போனதால்
இன்னும்
விதவையாகவே கிடக்கின்றன
என் வீட்டுக் காகிதங்கள்.

உணர்வுகளின்
மலர் தீண்டல்கள்
கீறிச் சென்ற காயங்களை,
என்
வார்த்தை வாட்களால்
மீறிச் செல்ல முடியவில்லை.

நீ
கருணைக் கொலையென்று சொல்லி
கொய்தெறிந்த என்னை,
நான்
திருப்பி எடுக்க மறுத்ததாலா
இன்னும்
தொடர்ந்து திருடுகிறாய் ?