தமிழோசை பத்திரிகையில் எனது பேட்டி!

 

கவிஞர் சேவியர், கணிப்பொறி பயன்பாட்டு அறிவியல் முடித்து விட்டு கணிணி மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை. பிறந்தது குமரி மாவட்டத்திலுள்ள பரக்குன்று என்னும் கிராமம். ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும், மன விளிம்புகளில், நில் நிதானி காதலி, கல் மனிதன், இயேசுவின் கதை போன்ற கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன. ‘சேவியர் கவிதைகள் காவியங்கள் என்னும் முழு கவிதைத் தொகுப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அவர் புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ள ‘இயேசுவின் கதை’ தற்போது விமர்சகர்களால் பேசப்பட்டு வரும் நிலையில் அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களது முதல் கவிதைத் தொகுப்பு அனுபவம் எப்படி ?
_______________________________________

2001 ல் எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் சொக்கன் அவர்கள் ‘தினம் ஒரு கவிதை’ எனும் மின்னஞ்சல் கவிதைக் குழு ஒன்றைத் துவங்கினார். உலகெங்கிலும் உள்ள சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் உறுப்பினராக சேர்ந்தனர். பலரது கவிதைகளைப் பரிசீலித்து அவர் வெளியிட்டு வந்தார். என்னுடைய கவிதைகளை நிறைய வெளியிட்டார். அந்தக் கவிதைகளே முதல் தொகுப்பாக வெளிவந்தது.

நவீன கவிதைகளில் பல உட்பிரிவுகள், பல இசங்களாக வகைப்படுத்தப் படும் நிலையில் உங்களுடைய எழுத்து எதை நோக்கி இருக்கிறது ?
_______________________________________

சென்னை வருவதற்கு முன் என்னுடைய கால் நூற்றாண்டு கால வாழ்க்கை கிராமத்தில் தான். அங்கே வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை முறையைத் தான் அதிகம் அறிந்தவன். பனை ஏறுதலும், பதனீர் இறக்குதலும், விவசாயமும் தான் எனக்கு அதிகம் தெரியும். அதைத் தான் அதிகம் எழுதினேன். இசங்களை ஒட்டிய புரியாத கவிதைகள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. அதில் எனக்கு அறிமுகமும் இல்லை.

ஒரு கவிஞன், எழுத்தாளன் இன்னொரு தளத்தில் பொருளியலாக தன்னிறைவு அடையும் போது அதன் எதிர் விளைவு அந்த எழுத்தாளனின் போக்குகளை, படைப்பின் வீரியத்தைக் குறைத்து விடுமா ?
_______________________________________
 
படைப்பாளிக்கு எப்போதுமே பணத்தை விட, படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், பாராட்டுகள் தான் உயர்வாகப் படும். வெயிலில் வெறுங்காலோடு நடந்தபோது அதன் கொடுமையை நேரடியாக உணர்ந்தேன். இப்போது காரில் போகிறபோது அதே வெயிலில் நடந்து செல்கிற இன்னொருவரைப் பார்த்ததும் பதறுகிறது. காரில் போவதால் மகிழ்ச்சியாகப் பயணிக்க முடியவில்லை. வெளியே இயங்கும் வெயில் சமூகத்தையே மறந்தவனாக இயங்கவும் முடியவில்லை. இது எல்லா படைப்பாளிக்கும் உள்ள சிக்கல் தான். படைப்பாளிகள் எந்த நிலையிலும் ஒரே மாதிரியாக இயங்கக் கூடியவர்கள் தான்.

இயேசுவின் கதை எழுதியிருக்கிறீர்கள். அதன் நோக்கம் என்ன ? அடுத்ததாக என்ன செய்யப் போகிறீர்கள். ?
_______________________________________
 

 இயேசுவை இந்த சமுதாயம் ஒரு கடவுளாக மட்டுமே பார்க்கிறது. மூன்றாவது நாள் உயிர்த்து விட்டதனால் வணங்கப்படுகின்ற ஒரு இறைமகனாக. நான் இயேசுவை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். வரலாற்றின் முதல் மாபெரும் புரட்சிப் புயல் அவர். அவருடைய துணிச்சல் அசாத்தியமானது. யூத மதம் காலங்காலமாக வேரூன்றியிருந்த தேசத்தில், யூத மத குருமார்கள் அரசரை விட அதிகாரம் அதிகமாய்ப் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய சட்டங்கள் எல்லாம் செத்தவை என்றும், அவர்கள் வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் என்றும் துணிச்சலாகச் சொல்லக் கூடிய அசாத்திய மனதிடம் அவரிடம் இருந்தது. கண்டிப்பாக மரணம் நிகழும் என்று தெரிந்திருந்தும் கூட யூதர்களின் எருசலேம் தேவாலயத்தில் சென்று சாட்டை சுழற்றி அங்கே கடை நடத்துபவர்களை அடித்து விரட்டுகிறார், யூதர்களின் சட்டங்களை தூர எறியுங்கள் என்னுடைய போதனைகளின் பின்னே வாருங்கள் என்று சொல்கிறார், இந்த துணிச்சல் என்னை எப்போதுமே சிலிர்ப்படையச் செய்கிறது. இந்த துணிச்சலோடு அவர் சொன்ன போதனைகள் எல்லாமே சமூக மாற்றம் விரும்பும் உலகின் எந்த கலாச்சாரப் பின்னணியில் வாழ்பவர்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பது இன்னொரு சிறப்பம்சம். இதை சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்று விரும்பினேன். ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு’ என்று சொன்ன அதே இயேசு ஏன் ஆலயத்தில் வன்முறையில் ஈடுபட வேண்டும் ? அயலானுக்கு அன்பு செய் என்று சொன்ன அவர் ஏன் நான் வாளையே கொண்டு வந்தேன் என்று சொல்ல வேண்டும் ?. இவற்றையெல்லாம் எளிமையாகவும், புதுமையாகவும் சொல்ல விரும்பினேன். இயேசுவின் வாழ்க்கை ஒரு மத நூலாக மட்டும் முடங்கிவிடக் கூடாது அது ஒரு புதுக்கவிதை இலக்கிய நூலாகவும் நிலைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் இந்த நூலை எழுதினேன். கிறிஸ்தவ மதத்திலேயே பிறந்து வளர்ந்தது ஒரு விதத்தில் இந்த நூலை புரிந்து எழுத வழிவகுத்தது எனினும் சில ஆண்டுகள் ஆயின இந்த நூலை எழுதி முடிக்க. கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களுடைய யாளி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கும் நூலை இன்று பார்க்கும் போது, அதற்குக் கிடைத்திருக்கும் நல்ல விமர்சனங்களையும், அங்கீகாரங்களையும் பார்க்கும் போது மக்கள் மதம் கடந்த பார்வையில் இலக்கியத்தைத் தேடுகிறார்கள் என்பது புரிகிறது.

 கவிதைகளின் மீதான கரைபுரண்டோ டும் நேசம் தான் என்னை எப்போதும் எழுத வைத்துக் கொண்டே இருக்கிறது. இயேசுவின் கதை ஒரு மைல் கல் தான், மைல் கல்லே ஊர் அல்ல. அடுத்த மைல் கல் என்ன என்பதைக் காலம் தான் தீர்மானிக்க முடியும். என்னுடைய விருப்பம் எல்லாம் சுவைக்கும் ஒரு துண்டு கருப்பட்டி உள்ளுக்குள் விரிவடைந்து என்னுடைய கிராமத்தின் பனைமரக் காடுகளையும், அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் என் நினைவுகளுக்குள் கொண்டு நிறுத்துவது போன்ற, முகச்சாயங்களுக்குள் மூச்சுத் திணறி செத்து விடாத, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்பதே.


மதப் பார்வை… வேறு பாடாக நடத்தப் பட்ட அனுபவங்கள் உண்டா ? வேறுபாட்டுடன் நடத்தப் பட்டேனா ?

_______________________________________

நான் ஒரு கிறிஸ்தவன் என்பதற்காக நிராகரிக்கப் பட்டேனா என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் பலர் என்னிடம் புனைப்பெயர் வைத்திருந்தால் இதற்கு முன் இலக்கிய உலகில் ஒரு இடம் பிடித்திருக்கலாம் என்று சொன்னதுண்டு. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். யதார்த்தங்களைப் பற்றி எழுதுவதற்குக் கூட எனக்கு ஒரு முகமூடி தேவைப்படும் என்றால் இந்த இலக்கிய உலகில் என்ன நேர்மை இருக்க முடியும் ?.


எங்கெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்

_______________________________________

திசைகள், அம்பலம், திண்ணை, தினம் ஒரு கவிதை, குவியம், தமிழோவியம், சிங்கை இணையம், காதல், நிலாச்சாரல் போன்ற இணைய இதழ்களிலும், கல்கி, புதியபார்வை, இலக்கிய பீடம், தென்றல், தை , குமுதம் போன்ற அச்சு இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. இணைய உலகம் நடத்திய கவிதைப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் பலவற்றில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குமரி மாவட்டத்திலிருந்து வெளியாகும் சிற்றிதழ்கள் பலவற்றில் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

என்ன மாதிரி அறியப்பட விரும்புகிறீர்கள் ?

_______________________________________

போலித்தனமில்லாத கவிதைகளை வாழ்க்கைச் சாலையின் தள்ளுவண்டிச் சக்கரங்களிலிருந்து பொறுக்கி எடுப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. கிளைகளில் அமர்ந்து நிலா ரசிப்பதை விட, வேர்களில் அமர்ந்து மண்புழுவை நேசிப்பதையே எனது கவிதைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சமுதாய அவலங்களையோ, மனித வாழ்வின் பலகீனங்களையோ பதிவு செய்யவும், வாசகனுக்குப் புரியவைக்கவும் என் கவிதைகள் பயன்பட வேண்டும் என்று தான் ஆசிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கவிதைகள் புரியவில்லை என்று சினிமாக் கொட்டகையின் தரையிலமர்ந்து சீட்டியடித்து எம்.ஜி.ஆர் படம் ரசிக்கும் ஒருவன் கூட சொல்லக் கூடாது என்னுமளவுக்கு எளிமையாய் எழுத ஆசைப்படுகிறேன். இவன் எழுதுவது என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒன்றைப்பற்றி என்று யாரேனும் சொல்லும் போது என்னுடைய படைப்பு தன்னுடைய இலக்கை எட்டி விட்டதாகக் கருதிக் கொள்கிறேன்.