சாத்தப்பட்ட சன்னல்கள்

window.jpg

ரயில் பயணங்களில்
கவனத்தை
அறைந்து திறக்கின்றன
சாத்தப்பட்ட சன்னல்கள்.

சாத்தப்பட்ட
சன்னலுக்குப் பின்னே
ஓர்
மழலை
தந்தையின் முதுகில்
குதிரைச் சவாரி செய்யலாம்,

விடிந்து விட்டதை
மறந்து
ஓர்
காதல் சோடி
போர்வைக்குள்
பிணைந்திருக்கலாம்

இரவில் மறந்து போன
வீட்டுப் பாடத்தை
சீருடைச் சிறுமி ஒருத்தி
பதட்டத்துடன்
கிறுக்கிக் கொண்டிருக்கலாம்.

அலுவலக அவசர அம்மா
பரபரப்பை
சமையலறைக்கும்
வரவேற்பறைக்கும்
விதைத்துக் கொண்டிருக்கலாம்.

சாத்தப்பட்டே கிடக்கட்டும்
சன்னல்கள்.

திறந்து கிடக்கும் சன்னல்கள்
வரைந்து சொல்லும்
வெறுமையை விட
மூடப்பட்ட சன்னல்கள்
திறக்கும் கற்பனைகளே சுகமானவை.

நிர்வாண நிஜங்கள்

ear.jpg

குளியலறையின்
நிர்வாண நிஜங்கள்
வரவேற்பறைகளில் வந்தமர்வதில்லை.

உடைகள் மாற்றி
தலைமுடி சீவி
வரவேற்பறை நுழையுமுன்
அவசரமாய் துழாவி
இதழ்களில் மாட்டும்
போலித்தனப் புன்னகை சிரிக்கிறது.

கண்ணியப் பார்வைகளும்
பெண்ணியப் பேச்சுகளுமாய்
நீளும்
உரையாடல்களினூடாக
மனதுக்குள் விரியும்
படுக்கையறைக் காட்சிகளை
வரவேற்பறைகள் மொழி பெயர்ப்பதில்லை.

கை குலுக்கல்களிலும்
நட்புச் சிலிர்ப்புகளிலும்
சுவாரஸ்யச் சங்கல்பங்களிலும்
உள்ளுக்குள்
உடைந்து தெறிக்கும்
கொட்டாவி சத்தமிடாமல் சிரிக்கும்.

மீண்டும் சந்திப்போம் என்று
கைகுலுக்கி விடைபெறுகையில்
காதை மட்டும்
மறந்து வைத்துவிட்டுப் போக முடிந்தால்
தரிசிக்கலாம்
தூய்மையான நேசத்தின்
துகிலுரியப்பட்ட உண்மைகளை

மாறிப் போயிட்டேனா ?

 

மாறிப் போயிட்டே
என்றார்கள்

எப்படி ?
என்றேன்.
தெரியவில்லை என்றார்கள்.

மாறி மாறி
நிறம் காட்டாமல்
ஒரே
நிறமாய் மாறிப்போனால்
நல்லது தானே என்றேன்.

நீ
மாறவே இல்லை
என்றார்கள்
மாறிப் போனவர்கள்

இயலாமைகள்

 

.

இதை
நிறுத்தவே முடியாதா
என
கவலைப்படுகிறேன்,
ஒவ்வொரு முறையும்
விரலிடுக்கில் சிகரெட் புகையும் போதும்,
நினைவுகளின் வெப்பத்தில்
இதயம் எரியும் போதும்.