சினிமாவுக்கு பாட்டு எழுதுகிறேன்


“வணக்கம் சார்… நான் தான் ராஜ்”

எந்த ராஜ் யா ? என்ன வேண்டும் என்று அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இருந்தாலும் தொண்டைக்குள் நின்றிருந்த மிச்ச உமிழ்நீரையும் விழுங்கிக் கொண்டே. ” போன வாரம் பேசினோமே சார். இன்னிக்கு வரச் சொல்லியிருந்தீங்க… பாட்டு எழுதுற விஷயமா…. ” என்று இழுத்தேன்

“ஓ… அந்த பாட்டு எழுதறவனா… உட்காரு..” – என்று சொல்லியபடி கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்தபோது மனுஷனை மதிக்கத் தெரியாத ஒரு இசையமைப்பாளர்யா… என்று மனசுக்குள் சுயகெளரவம் என்று நானாய் கற்பனை செய்து வைத்திருந்த மனசு அவமானப் பட்டது.

இருக்கை நுனியில் உட்கார்ந்தேன். இலக்கியவிவாதங்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம் அலட்சியமாய் செளகரியமாய் உட்கார்ந்து கொள்ளும் நானா இப்படி பவ்யம் காட்டி அமர்கிறேன் என்பதும், ஏன் இப்படி பவ்யம் காட்டுகிறேன் என்பது சத்தியமாய் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் எப்படியாவது ஒரு வாய்ப்பு வாங்கியாகவேண்டும். இரண்டு படங்களிலாவது பாடல் எழுதி நாலுபேர் நம்ம வரிகளை பாடித்திரியவேண்டும் என்னும் ஆர்வம் தான் மனசெங்கும்.

இசையமைப்பாளம் விதேயன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய இசைக்குறிப்புகளோடு மல்லிட்டுக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ அவர் வேண்டுமென்றே இழுத்தடிப்பது போல் தோன்றியது. ஆனாலும் அமர்ந்திருந்தேன். வேறு வழி ?

சட்டென்று திரும்பிப் பார்த்துக் கேட்டார். “நீ தானன்னா க்கு பாட்டு எழுதுவியா ”
“எழுதுவேன் சார்….” சட்டென்று சொல்லிவிட்டேன். ஆனால் எழுதியதில்லை.
” சார் நான் நாலு புக் போட்டிருக்கேன் சார். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் பாராட்டியிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டே மேஜையில் நான் எடுத்து வைத்த புத்தகங்களை அவர் ஒரு மரியாதை நிமித்தம் கூட பிரித்துப் பார்க்காதது சத்தியமாய் எனக்கு அவமரியாதையாய் தான் இருந்தது. ஆனாலும் பேசவில்லை.

சரி … ஒரு டியூண் சொல்றேன்  எழுது பார்ப்போம்…
சொல்லிக் கொண்டே அவர் போட்ட டியூன் இது தான்.

“தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா
தன்ன நான தன்ன நான
தான நான தானன்னா”

“சார் என்ன சூழ்நிலை சார்..” என்று நான் கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பார்வையே காட்டிக் கொடுத்து விட்டது.
” லவ்வர்ஸ் பாடறாங்க…” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். அதற்கு மேல் எனக்குள் எழுந்த கேள்விகளை நான் கேட்கவில்லை.
கேட்டால் நீ எழுத வேண்டாம்.. என்று சொல்லிவிடுவாரோ என்னும் பயம் தான் காரணம்.

நான் மனசுக்குள்ளும் காகிதத்திலும் மாறிமாறி ஏதேதோ எழுதிக் கிழித்து விட்டு… சொன்னேன்…

பின்னல் போட்ட மின்னல் காரி
காதில் காதல் சொல்வாளா…
கன்னம் கோர்த்த கன்னம் கொண்டு
கவிதை எழுதிச் செல்வாளா ?

எழுதி முடித்து பெருமிதத்தோடு அவரிடம் வரிகளைக் காண்பித்தபோது சலனமே இல்லாமல் வாங்கிப் பார்த்தவர் சொன்னார்….
“இதுல ஏதும் அட்ராக்டிவ் வேர்ட்ஸ் இல்லையேபா…. “..
” அது வந்து சார்… காதலன் காதலியை நினைச்சு…”

“அது என்ன மண்ணையோ நினைச்சுட்டு போகட்டும்….. முதல் வார்த்தை ரொம்ப கேச்சியா இருக்கணும்… இப்போ பாரு.. மன்மதராசா… இல்லேண்ணா காதல் பிசாசே… இப்படி ஏதாவது”

“காதல்பேயே காதல் பேயே
காதில் காதல் சொல்வாயே….”

ன்னு வெச்சுக்கலாமா சார்…. நான் கிண்டலாய் தான் கேட்டேன். ஆனாலு அவர் கொஞ்சம் பரிசீலனை செய்வது போல் தோன்றவே பக் கென்றாகிவிட்டது எனக்கு.

“இது பரவாயில்லை.. ஆனாலும் காதல் பிசாசே இருக்கிறதனால… வேற ஏதாவது எழுது…”

நான் மீண்டும் மண்டையைச் சொறிந்தேன்.

“நரகம் மீதில் கரகம் ஆடும்
நவரச தேவதை நீதானோ…
கிரகம் தாண்டி நகரம் தீண்டி
பரவசம் தருவதும் ஏந்தானோ”

” அட… இது பரவாயில்லை…. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நீ பாட்டு எழுத கத்துக்கறே…. ”

“சரி… நான் முழு டியூனையும் இந்த கேசட்ல வெச்சிருக்கேன். வீட்ல போய் உட்கார்ந்து நல்லா யோசிச்சு ஒரு பாட்டு எழுதிட்டு வா… பாட்டுல, கொஞ்சம் விரசம் தூக்கலா இருக்கணும்…. கேக்கறவனுக்கு பத்திக்கணும்.. நான் உன்னை கற்பழிப்பேன்,, ந்னு கூட எழுதலாம்… ”
என்று அவர் சொன்னபோது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனேன்.

ஆனாலும் பேசாமல் டியூன் கேசட்டை வாங்கி வீட்டில் வைத்தேன். திரும்பத் திரும்ப யோசித்து நான் எழுதிய சரணங்கள் இவை தான்…
மேற்கு வானம் மஞ்சள் பூசி
நீலக் கடலில் குளிக்க,
வெப்பம் போன காற்றுக் கூட்டம்
தெப்பத்துக்குள் கிடக்க,
வெள்ளிப் பாத வெள்ளை வாத்து
அல்லி விலக்கி மிதக்க,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உந்தன் பின்னே நடக்குதடி.

0

தாழக்கரையின் தாழம் பூவும்
வாசனை வீசிச் சிரிக்க – அது
பட்டுப் பூச்சியின் வண்ண இறகில்
மெல்ல மோதிக் களிக்க
பச்சை கொட்டிய வயலின் நண்டுகள்
வளைகளை உடம்பில் உடுத்த,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உனக்குள்ளேயே கிடக்குதடி.

எழுதி முடித்து பாடலை இசையமைப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு வந்தேன். அவ்வளவு தான் கடலில் போட்ட கல்லைப் போல, நீண்ட நாட்களாக எந்த ஒரு பதிலும் இல்லை.
சரி மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து ரிகார்டிங் ஸ்டுடியோ பக்கம் போனேன். உள்ளே ஒரு பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.
எனக்கு அவர் கொடுத்த அதே டியூண்… ஆனால் வேறு வரிகள்.

திடுக்கிட்டுப் போனேன். உள்ளே ஏதோ ஒரு கவிஞர் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்…

கொள்ளி வாய்ப் பிசாசு நீதானா
கொள்ளை யிடும் ஆளும் நாந்தானா
கொல்லிமலை மேலே மீன் தானா
மெல்லிடையில் நீந்த நாந்தானா…

கவிஞர் வரிகளை வாசித்துக் காட்டக் காட்ட… ஆஹா… பிரமாதம் சார். இந்த பாட்டு தான் இனி நாளைக்கு தமிழகத்தையே கலக்கப் போகுது.
நீங்க இன்னும் ஃபீல்ட் ல இருக்கிறதுக்கு இது தான் சார் ஒரே காரணம்.. கிரேட் என்று பாராட்டு மழை பொழிந்து கொண்டிருந்தார் இசையமைப்பாளர்.

நான் பாக்கெட்டிலிருந்து தபால்கார்டை எடுத்துப் பார்த்தேன். மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம் இருக்கிறது.
ம்ம்.. நமக்கு பாட்டு எழுதும் வேலையெல்லாம் ஒத்து வராது என்று முடிவு கட்டிக் கொண்டு திரும்பி நடந்தேன்.

மனத்திரையில்.. கொள்ளிவாய்ப் பிசாசு நீ தானா என்ற வரிகளுக்கு 70 எம் எம் மில் ஒரு தொப்புள் வந்து பயமுறுத்திப் போனது