நில் நிதானி காதலி : யுகபாரதி பார்வையில்

ஒரு கல்கோனா / இரண்டு கமர்கட்டு :  யுகபாரதி.

அ.

அரைகிலோ கத்திரிக்காய், நூறு கிராம் துவரம் பருப்பு, இருநூறு கிராம் நல்லெண்ணெய், எட்டணாவுக்கு பச்சை மிளகாய், கொசுறாகக் கருவேப்பிலை, கொத்தமல்லித் தளை. இந்தப் பட்டியலோடு கடைக்குப் போய் பொருள் வாங்கி வந்ததுண்டு. எதற்காக இதை அம்மா வாங்கி வரச் சொன்னாள் என புத்தியால் யோசித்ததில்லை. யோசித்தாலும் சமைப்பதற்கென்று மட்டும் நினைக்கத் தோன்றும். அரைகிலோ கத்திரிக்காய்க்குப் பதிலாக ஒருகிலோவோ, நூறு கிராம் துவரம் பருப்புக்குப் பதிலாக ஐம்பது கிராமோ வாங்கத் தோன்றுவதில்லை. எனில் அம்மாவின் கட்டளையை அது மீறுவதாகும்.

காதல் கவிதைகளை வாசிப்பதிலும் எனக்கு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறை தான். எழுதியவனின் கட்டளையை மீறியோ, குறைத்தோ யோசிக்கத் தோன்றவில்லை. திருமணத்துக்குப் பிறகும் சேவியர் எழுதுகிற காதல் கவிதைகள் யாரைத் திருப்திப்படுத்துமோ ? எந்தெந்த அளவுக்கு எதை எதை சேர்க்க வேண்டுமென்கிற பக்குவம் தெரிந்த அம்மா போல எதற்கு எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். எத்தனையோ கவிதைகள் எழுதிவிட்ட பிறகும் காதலின் தொடக்கம் கவிதையில் மையம் கொள்கிறது. தெற்கத்தி சமையலில் கடுகுபோல பொரியும் சத்தமே பிரதானம் இலக்கியப் பசிக்கு.

ஆ.

மூணு பேண்ட், எட்டுச் சட்டை, இரண்டு போர்வை, ஒர் பட்டுப்புடவை மொத்தம் சலவை செய்த துணிக்கு முப்பது ரூபாய். முன்பிருந்த பாக்கியை சேர்த்து அறுபத்தி ஏழு ரூபாய். துண்டு சீட்டில் எழுதி வருகிற சலவைக்காரரிடம் நான் அல்லது நாம் கேட்பதில்லை. ஒரே தொழிலைச் செய்வதில் அலுப்பு வரவில்லையா ? வந்தாலும் இதை அவன் செய்யவே வேண்டும் எனில் அது அவனது ஜீவனம். இல்லாவிட்டால் வாழ முடியாது. கவிதை எழுதாவிட்டால் செத்து விடுவோமோ சேவியர் ? எழுத முடியாமல் போனதற்காக தற்கொலை செய்ததுண்டா யாராவது ?

இ.

கடுமையான காய்ச்சல். குமட்டலெடுக்கிறது. தலைபாரம். தூக்கம் வரவில்லை. மருத்துவரிடம் எதற்காகப் புலம்புகிறோம் ? மருந்து உண்டு எனத் தெரிந்தும் உடம்பு சரியில்லை என்பதற்காக ஏன் ? எதற்காகத் துக்கப் படுகிறோம் ?காதலித்தவள் வராது போன துக்கம் மறு நாள் வருகையில் தீரும் தான். எனினும் எதற்காகக் குமைகிறோம் ?

தெரிந்தும் தெரியாமலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
புரிந்தும் புரியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம்
வருந்தியும் வருந்தாமலும் இந்த வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை காதலைப் போல வாட்டம் கவிதையைப் போல.

நிற்பதற்குள் நிதானமிழந்து விடுகிறது காலம். நினைப்பதற்குள் நெருங்கி வருகிறது மெளனம். மெளனமும் காலமும் இரட்டைக் குழந்தைகள். காதல் மெளனம், கவிதை காலம்.

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்.

பரீட்சைக்குப் பணம் கட்டணும்பா, இன்றைக்குத் தான் கடைசி தேதி கட்டாட்டி பரீட்சை எழுத முடியாது. வாத்தியார் வீட்டுக்கு அனுப்பிச்சிருவார். வறுமை கல்வியைத் தின்கிறது. கல்வி பொறுமையிடம் வம்பு செய்கிறது. காலத்தால் மானப் பெரிது என்பது பரீட்சையின் போது எழுதுகோலுக்கு மை கொடுப்பது என்றார் என் வாத்தியார். மை அன்பு, எழுதுகோல் கவிதை. சேவியரிடம் இருக்கிறது காதலுக்கான கவிதைகள் நிரம்பி வழியும் நீரூற்று.

காளிமார்க் சோடா, ஒரு எலிமிச்சை அல்லது கொஞ்சம் உப்பு, இஞ்சி டீ, வசதியிருப்பின் ஸ்பெஷல் டீ, ரோட்டுக்கடையில் ரெண்டு புரோட்டா கூடவே ஆம்லெட், மிளகு தூவிய ஆகப்பாயில் , உணவு செரிக்க ஒரு வாழைப்பழம் – எந்த நேரத்தில் எது பிடிக்கும் ? பரிமாறுபவரிடம் பட்டியல் கேட்டு அடுத்த நொடியே ஆணையிடுகிறோம். எல்லாவற்றிலும் பிடிப்பதல்ல இருப்பவற்றில் பிடித்த அணுகுதல் அது. போலவே தான் வாழ்க்கை. கிடைத்தது உண்டு, கிடைத்ததை நினைத்து, கிடைப்பதோடு கழிகிறது நாள். கவிதை அவ்விதமில்லை. நினைப்பதைக் கிடைக்கச் செய்வது, உண்பதை வரவழைப்பது, கழிப்பதற்காக உருவாக்குவது.
வலிமையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை பூமியில்; கவிதையைத் தவிர. சேவியரின் கவிதைகள் மென்மையை ஆடையாக, முகப் பூச்சாகக் கொண்டிருக்கின்றன. இந்த மென்மை எத்தகையது ? குழாய் நீரின் வேக சத்தத்திற்கும் பயந்து விடுகிற மென்மை. தமாதமானாலும் நிதானமாகச் செயல்படுகின்ற காதல்.

இறுதியாக சேவியரின் கவிதைகள் படித்து நான் போடும் பட்டியல் . பத்து கிலோ சர்க்கரை, பதினாறு குடுவை தேன், முப்பது கிலோ கற்கண்டு, இருபத்தியாறு கிலோ நாட்டு வெல்லம், ஒரு கிலோ பாதாம் பருப்பு , நூற்றி எட்டு ரூபாய் முந்திரிக்காய், மேல் தூவ பதப்படுத்திய திராட்சை, வாசத்துக்கு ஏலக்காய். இத்தனை சேர்த்தும் தெவிட்டாதக் காரணம் அது காதலாயிருக்கிறது. காதலோடு இருக்கிறது. காதலை உடுத்தி, காதலைத் தேடி கண்ணாமூச்சி ஆடுகிறது. இவை எனக்குப் பிடிப்பதற்கு நிறையக் காரணமுண்டு.

சேவியரின் அன்புக்கு என்னைப் பிடிக்கிறது.
எதையும் காப்பாற்றுபவருக்குத் தான் சேவியர் என்று பெயர்
நிறைய பிரியமுடன்
யுகபாரதி

பின் குறிப்பு : நில், நிதானி, காதலி என்னும் எனது கவிதை நூலுக்காக யுகபாரதி எழுதிய முன்னுரை இது. சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பதிவு செய்கிறேன் ?