கவிதைத் தொகுப்பு

p.jpg

சார். இதெல்லாம் என்னோட கவிதைகள் சார். இதை ஒரு புத்தகமா போடணும்ன்னு தான் ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டிருக்கேன். யாருமே முன் வர
மாட்டேங்கறாங்க. நீங்க தான் மனசு வெச்சு இதை ஒரு புத்தகமா போடணும். தன் கையிலிருந்த ஒரு கட்டு கவிதைகளை பதிப்பாசிரியர் பாலராஜன் முன்னால் வைத்தான் மூர்த்தி.

‘மூர்த்தி. கேள்விப்படாத பேரா இருக்கே ? ஏதாச்சும் புனைப்பெயர்ல கவிதைகள் எழுதறீங்களா ?’ பாலராஜன் கேட்டார்

இல்லை. என்னோட சொந்தப் பெயர்ல தான் எழுதறேன். பத்திரிகைகள்ல அதிகமா பிரசுரம் ஆனதில்லை.

‘ம்.. அதான் புதுப் பெயரா இருக்கேன்னு கேட்டேன். சரி.. இதுக்கு முன்னாடி புக்ஸ் ஏதாச்சும் போட்டிருக்கீங்களா ?’

‘இல்லை சார். இது தான் முதல் புத்தகம். நாலஞ்சு வருசமா எழுதின கவிதைகள்ல மிகச் சிறந்த கவிதைகள் மட்டும் தான் இதுல வெச்சிருக்கேன். நல்லா இருக்கும் சார். படிச்சு பாருங்களேன்’ சொல்லிக் கொண்டே மூர்த்தி ஒரு கவிதையை எடுத்து பாலராஜனின் முன்னால் நீட்டினான்.

பாலராஜன் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதை அவருடைய முகமே காட்டியது. தினத்தந்தியின் கடைசிப் பக்கத்தில் வரும் சினிமா விளம்பரத்தைப் பார்ப்பது போல பார்த்தார்.

‘உங்களுக்கு சொந்த ஊர் எது ?’ மூர்த்தியின் பேச்சிலிருந்தே அவர் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும். பால ராஜன் கேட்டார்.

என்னோட சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்துல ஒரு கிராமம். சின்ன வயசில இருந்தே கவிதைகள் மேல மிகப்பெரிய ஈடுபாடு. நிறைய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கேன். எப்படியாவது ஒரு புத்தகம் போடணும்ங்கிறது தான் என்னோட இலட்சியமே. மூர்த்தி படபடப்பாய் பேசினான்.

சரி நான் மேட்டரை படிச்சுப் பாக்கறேன் நீங்க அடுத்த வாரம் வந்து பாருங்களேன். பாலராஜன் சொல்ல மூர்த்தி அவசர அவசரமாய் பதில் சொன்னான்.
‘நான் புத்தகம் போடறதுக்காக ஊருல இருந்து சென்னைக்கு வந்திருக்கேன். ஒரு வாரமா நண்பன் கூட தங்கி இருக்கிறதனால அவன் கூட கொஞ்சம் முகம் சுளிக்க ஆரம்பிச்சுட்டான். என்கிட்டே தனியா தங்கற அளவுக்குப் பணமும் இல்லை. இன்னும் ஒருவாரம் நான் இங்கே தங்க முடியாது சார். நாம இன்னிக்கே பேசி முடிவு பண்ணிடலாமே சார்’

‘புக் போடறதெல்லாம் ஒரு நாள் சமாச்சாரம் கிடையாது. மேட்டரை டைப் பண்ணணும், லேயவுட் டிசைட் பண்ணணும், அட்டைப்படம் பண்ணணும், புரூஃப் ரீடிங் பண்ணணும்… அதுக்கெல்லாம் நாளாகுமே. அது மட்டும் இல்லே. இப்பல்லாம் நாங்க அதிகமா கவிதைப் புத்தகம் போடறதில்லை. நீங்க வேற ஏதாவது பதிப்பகத்தைப் போய் பாருங்களேன். பாலராஜன் சொல்ல மூர்த்தி பதட்டமடைந்தான்

ஐயோ.. அப்படிச் சொல்லாதீங்க சார். ஒரு வாரமா ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டு இருக்கேன் சார்.  யாரும் ஒத்துக்கலை.  என்னோட கனவு மனசை விட்டு வெளியே வந்து நடமாடணும் சார். அது உங்க கைல தான் இருக்கு. மூர்த்தி கெஞ்சும் குரலில் சொன்னான்.

நான் உன்னை டிஸ்கரேஜ் பண்றதுக்காக இதைச் சொல்றதா நினைக்காதீங்க, இப்பொல்லாம் கவிதை புக் மார்க்கெட்ல விக்கிறதில்லை. ஒருசில கவிஞர்களைத் தவிர மத்தவங்களோட புக் சுத்தமா விக்கறதில்லை. பிரபலமான கவிஞர்களோட புக்ஸ் கூட நூறோ இருநூறோ தான் விக்குது. இந்த சூழ்நிலைல நாங்க எப்படி கவிதைப் புத்தகம் போடறது ? முன்னாடியாவது லைப்ரரி ஆர்டர் கிடைச்சிட்டிருந்துது. இப்போ கவிதைப் புத்தகம்ன்னா லைப்ரரி ஆர்டர் கிடைக்கிறதே இல்லை. அதனால நாங்க கவிதைப் புத்தகம் போடறதில்லை. பாலராஜன் நழுவினார்.

சார் அப்படிச் சொல்லாதீங்க சார். இந்த ஒரு புத்தகம் மட்டும் போடுங்க சார். நல்லா விக்கும். கண்டிப்பா இதைப் படிக்கிறவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவாங்க. மூர்த்தி தன் படைப்புகளின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்தான்.

உன் கவிதை நல்லா இல்லேன்னு நான் சொல்லலை. ஆனா பிசினஸ் ந்னு வரும்போ அது எனக்கு நஷ்டம். கவிதைக்குப் பதிலா சமையல் குறிப்புகளோ, அழகாய் இருப்பது எப்படி ங்கற மாதிரி புத்தகமோ, இல்லேன்னா ஏதாவது மத சம்பந்தமான புக்கா இருந்திருந்தா கூட நான் சரின்னு சொல்லியிருப்பேன். கவிதை புக்குக்கெல்லாம் நிறைய செலவாகும். போடற காசை எடுக்கவும் முடியாது.

பாலராஜனின் தீர்மானமான முடிவைக் கேட்ட மூர்த்தி உடைந்து போய் உட்கார்ந்தான். தமிழிலக்கியத்தின் மீதான ஆர்வம் அவனுடைய நெஞ்சை அழுத்தியது. சற்று நேரம் மெளனமாக இருந்தவன் பேசினான்.

இந்த புத்தகம் போடறதுக்கு எவ்வளவு செலவாகும் சார் ?

டெமி சைஸ்ல எட்டு ஃபாரம் வர மாதிரி ஒரு புத்தகம் போடணும்ன்னா குறைஞ்சது இருபதாயிரம் ரூபா ஆயிடும். நாங்க ஆயிரத்து இருநூறு காப்பி போடுவோம்.

இருபதாயிரமா ? மூர்த்தி கண்களை விரித்துக் கேட்டான்.

ஆமா. குவாலிட்டில நாங்க காம்ப்ரமைஸ் பண்றதில்லை. தமிழ்நாட்ல இருக்கிற எல்லா கடைகள்லயும் நம்ம புக் இருக்கும். நீங்க கூட பாத்திருப்பீங்களே பின்னட்டைல கழுகு படம் போட்டு “பறவை பதிப்பகம்” ந்னு போட்ட புத்தங்களை. அது நம்ம புக் தான். பாலராஜன் சொன்னார்.

சார். இந்த புக் எப்படியாவது வெளிவரணும் சார். ஆனா அவ்வளவு பணம் எங்கிட்டே சத்தியமா இல்லை சார். மூர்த்தி சொன்னான்.

முழு பணத்தையும் எழுத்தாளன் கிட்டே இருந்து நாங்க வாங்க மாட்டோ ம். எழுத்தாளனுடைய படைப்பை நாங்க மதிக்கிறோம். கவிதை எழுதறது சாதாரண விஷயமா என்ன ? பாதி பாதி போட்டு புத்தகம் கொண்டு வருவோம். இருநூற்றைம்பது காப்பி உங்களுக்கே தரோம். ஒரு புக் ஐம்பது ரூபான்னு பார்த்தா இருநூற்றைம்பது புத்தகங்களை விற்றா உங்களுக்கு பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும். அட்லீஸ்ட் இருநூறு புத்தகங்களை விற்றா கூட போட்ட பணத்தை எடுத்துடலாம். என்ன சொல்றீங்க ? பாலராஜன் கேட்டார்.

மூர்த்திக்கு எப்படியாவது புத்தகம் வெளிவந்தால் போதும் என்றிருந்தது. அவனுடைய கவிதைத் தொகுதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றமே அவனுக்குள் பெரிய சிலிர்ப்பை உண்டாக்கியது.

என்கிட்டே இப்போ நாலாயிரம் ரூபாய் தான் சார் இருக்கு. மீதி ஆறாயிரம் ரூபாயை நான் ஊருக்கு போய் அனுப்பி தரேன். நீங்க புத்தகம் போடுங்க. நல்லா வரணும் சார் இந்த புக். இது எனக்கொரு நல்ல பெயரை வாங்கித் தரமாதிரி இருக்கணும். மூர்த்தி சொல்லிக் கொண்டே கவிதைகளை அவரிடம் கொடுத்தான்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. புக் பிரமாதமா வரும். எல்லா புத்தகக் கண்காட்சிகளிலயும் உங்க புக் கண்டிப்பா இருக்கும். எல்லா ஊருலயும் உங்க புக் இருக்கும். சரி.. புத்தகத்தோட பின் அட்டைல போடறதுக்கு உங்க போட்டோ  ஒண்ணு குடுங்க. பாலராஜன் கேட்டார்.

மூர்த்தி தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ  ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கி கவிதைகளோடு சேர்த்து ஒரு காக்கி நிறக் கவரில் போட்டு வைத்தார் பாலராஜன்.

மூர்த்தி தன்னிடமிருந்த நாலாயிரம் ரூபாயை பாலராஜனின் கைகளில் கொடுத்த்பின் அவனுடைய சட்டைப்பையில் கன்னியா குமரி வரை சென்று சேர்வதற்கான பணம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

சார். புத்தகம் நல்லா வரணும் சார். நல்ல அட்டைப்படமா போடுங்க. என்று மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் வைத்து விட்டு, பதிப்பகத்தாரின் முகவரி, தொலைபேசி எண்களை தன்னுடைய கிழிந்துபோன சின்ன டைரியில் குறித்து வைத்துக் கொண்டு விடைபெற்றான் மூர்த்தி.

அன்று இரவே அரசுப் பேருந்து பிடித்து வீட்டுக்குச் சென்ற மூர்த்தி பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்தான். அவனை நம்பி யாரும் பணம் கொடுப்பதாகத் தெரியவில்லை. தெரிந்த நண்பர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தான். அவர்கள் பத்தாயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகம் போடப்போகும் நண்பனை மனநோயாளி போல பார்த்தார்கள்.

இரவு.

மூர்த்திக்குத் தூக்கம் வரவில்லை. தன்னுடைய ஓட்டு வீட்டின் பின் புறமிருந்த கிணற்றடியில் வந்து அமர்ந்தான். வீட்டின் பின்புறம் கம்பீரமாய் நின்று கொண்டிருந்த பனை மரங்களில் நிலவொளி விழுந்து வழுக்கிக் கொண்டிருந்தது. தாத்தா பனையேற்றுத் தொழில் செய்து வந்தவர். அவர்காலத்து வரலாற்றை பேரனுக்குச் சொல்லும் வரலாற்றுச் சின்னங்கள் போலத் தோன்றின அந்தப் பனைமரங்கள். பழைய காலமாக இருந்திருந்தால் இந்த பனை ஓலைகளில் கவிதை எழுதி ஓலைச் சுவடியாக மாற்றியிருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த மூர்த்தியின் மனதில் ஒரு பளிச்.

இரண்டு நாட்களில் மூர்த்திக்குத் தேவையான ஆறாயிரம் ரூபாய் கிடைத்து விட்டது. வீட்டின் பின்புறம் கம்பீரமாய் நின்றிருந்த பனைமரங்கள் மூர்த்தியின்கைகளில் கரன்சிக் காகிதங்களாகிவிட்டிருந்தன. சில சோகங்களோடு சமரசம் செய்து கொண்டால் தான் சில சந்தோசங்களைச் சொந்தம் கொள்ள முடியும் என்று நினைத்துக் கொண்டான். அன்றே அந்த பணத்தை டி.டியாக மாற்றி பதிப்பகத்துக்கு அனுப்பினான்.

கிராமத்துப் பனை மரத்தின் வாசனையைச் சுமந்து கொண்டு தன் கைகளில் வந்து சேர்ந்த ஆறாயிரம் ரூபாய்க்கான செக்கை மகிழ்ச்சியோடு பற்றினார் பாலராஜன். அருகில் அமர்ந்திருந்த முருகேஷ் சிரித்தார்.

நீங்க பலே ஆள் தான் சார். ஆளுக்குத் தக்கபடி பேசி பத்தாயிரம் ரூபாயை வாங்கிட்டீங்களே.

பேசத் தெரியாதவனால பிசினஸ் பண்ண முடியாதே. சரி. இந்த கவிதைகளை எல்லாம் கலைவாணி செண்டர்ல குடுத்து டைப் பண்ண சொல்லு. பனைமர வாசனை ந்னு டைட்டில் வெச்சிருக்கான். அதுக்கு ஏத்தமாதிரி ஏதோ ஒரு படத்தைப் போட்டு லேயவுட் பண்ன சொல்லிடு. அதுக்கு ஒரு எழுநூற்றைம்பது ரூபா குடுத்துடு.

அதெல்லாம் தெரியும் சார். எத்தனை கவிதை புக் போட்டிருப்போம் ! முன்னூறு காப்பி பிரிண்ட் பண்ணணும். அதுல இருநூற்றைம்பது காப்பி கிராமத்துல இருக்கிற மூர்த்திக்கு அனுப்பிடணும் அப்படி தானே ? முருகேஷ் சிரித்தபடியே கேட்டார்.

ஆமா. முன்னூறு காப்பி போட்டா போதும். சென்னைல நாம வழக்கமா கொடுக்கிற ஒரு கடைக்கு மட்டும் பத்து புத்தகம் அனுப்பு. பத்து காப்பி நம்ம கடைல வெச்சுடு. மொத்தம் ஒரு ஐயாயிரம் ரூபா செலவாகும். மிச்சத்தை நம்ம லாபக் கணக்குலே சேர்த்துடு. அப்படியே லைப்ரரி ஆர்டருக்கும் இரண்டு காப்பி அனுப்பு. ஒருவேளை லைப்ரரி ஆர்டர் கிடைச்சா இன்னொரு அறுநூறு காப்பி பிரிண்ட் போட்டு லைப்ரரிக்கு அனுப்பிடலாம், இன்னும் கொஞ்சம் காசு பாக்கலாம். பாலராஜன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இந்த விஷயங்களை எதுவும் அறியாத மூர்த்தி, தன்னுடைய கவிதைப் புத்தகம் ஆயிரத்து இருநூறு பிரதிகளாகச் சிறகடித்து தமிழகம் முழுவதும் பறப்பது போலக் கனவு கண்டு கொண்டே வீட்டுக் கொல்லையில் உலாவிக் கொண்டிருந்தான். பனைமரத்தை எல்லாம் வெட்டிக் கொண்டு சென்றிருந்தார்கள். பனை மரங்கள் நின்ற இடங்களில் அவை நின்றதற்கான அடையாளமாக கொத்துக் கொத்தாய் வேர்கள் வெளித்தெரிய பள்ளங்கள் உருவாகியிருந்தன.

நடந்து கொண்டிருந்த மூர்த்தியின் பாதத்தில் பனைமர ஆல் ஒன்று சுருக்கென்று குத்தியது.

சேவியர்

8 comments on “கவிதைத் தொகுப்பு

  1. //திரு சேவியர் அவர்கட்கு,
    மிக அருமையன நடை, நேரில் பார்த்த அனுபவமும்,
    நெஞ்ஞில் முள் தைத்த வலியும் ஒருங்கே பெற்றேன்.
    நன்றி.
    சேவியர் தற்போது எங்கே இருக்கிறீர்கள்//

    நன்றி.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சென்னையில் தான் !

    Like

  2. திரு சேவியர் அவர்கட்கு,
    மிக அருமையன நடை, நேரில் பார்த்த அனுபவமும்,
    நெஞ்ஞில் முள் தைத்த வலியும் ஒருங்கே பெற்றேன்.
    நன்றி.
    சேவியர் தற்போது எங்கே இருக்கிறீர்கள்?

    Like

  3. நன்றி செந்தூர் பாண்டி. தமிழக கவிஞர்களின் நிலை வருத்தத்துக்குரியதே. திரைப்படங்களில் பாடல் எழுதாதவரை அவர்களுக்கு வரவேற்பு இல்லை !

    Like

  4. நன்றி செல்வேந்திரன். சொந்த அனுபவம் இல்லை எனினும் அனுபவமும் கலந்ததே இது !

    நான் சென்னையில் தான் இருக்கிறேன்

    Like

  5. திரு சேவியர் அவர்கட்கு,
    மிக அருமையன நடை, நேரில் பார்த்த அனுபவமும்,
    நெஞ்ஞில் முள் தைத்த வலியும் ஒருங்கே பெற்றேன்.
    நன்றி.

    Like

  6. என்ரை உடம்பிலை எங்கையோ எனக்கு வலிக்கிறமாதிரி இருக்கு. எங்கை எண்டு தான் தெரியேலை.

    Like

  7. சேவியர் இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்க எனக்கு மனது வரவில்லை. நீ பாதி, நான் பாதி என சில பதிப்பாளர்கள் விளம்பரம் செய்து புத்தகம் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆரோக்கியமானது, புகழ் வெளிச்சம் படாதவர்கள்கூட நூல் வெளியிட வகை செய்யும் அற்புத திட்டம் என்றெல்லாம் நிணைத்துக்கொண்டிருந்தேன். இதன் பிண்ணனியில் இப்படி ஒரு பிராடுத்தனம் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நன்றாக இருந்தது பதிவு. சேவியர் தற்போது எங்கே இருக்கிறீர்கள்?

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.