உலக
அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல்
உன்னையும் சேர்த்திருப்பார்கள்.
உன்
கண்களில் தொற்றிக் கிடக்கும்
காதலைச் சேகரிக்க
எத்தனிக்கிறேன்
நீயோ
மின்சார இழைகளை
இமைகளில் தேக்கி
தத்தளிக்க வைக்கிறாய்.
நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என்
இமைகள்.
உன்
கண்கள்
ஆழ் மலர்க் கேணிகள்.
பறித்ததை விட
அதிகமாய்
பறிகொடுத்திருக்கிறேன்.
ஒவ்வோர் முறை
நீ
என்னைப் பார்த்துக்
கடக்கும் போதும்
என்
காதல் வலிமை சேகரிக்கிறது.
நீ
ஒரு முறை
புன்னகைத்தால்
சேமித்த அத்தனையும்
திருப்பித் தரவும்
சம்மதமெனக்கு !
காதலும் கடலும்
ஒன்றே
ஆழமாய் மூழ்காத கைகளில்
கிளிஞ்சல்களே
மிஞ்சும்.
காதலைச் செதுக்குவதாய்
நினைத்து
நான் செய்த
உளிப்பிரயோகங்களில்
காதல்
என்னைச் செதுக்கி முடித்தது
காதல்
பாதங்களுக்குக் கீழ்
பரவிக் கிடக்கும்
பூமிபோல,
கால்கள் கவனிக்காவிட்டாலும்
பூமி இருக்கும் !
பூமி கவனிக்க மறுத்தால்
கால்கள் நிலைப்பதில்லை.
உன்
முதல் பார்வை
என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள்
உடைந்து நழுவிய
மெளனக் கிண்ணங்களுக்கு
நான்
காதலென்று பெயரிட்டேன்.
காதல்
எரியும் போது வெளிச்சம்
அழியும் போது
இருள்.
சுண்டி விடப்பட்ட
ஒரு கிழமையின்
இரவு பகல் என்ற
இரு பக்கங்களைப் போல.
உன்
விழித் தீ விழாமல் போனால்
விழித்திருப்பதில்
அர்த்தமில்லை என்பதை
அறிந்தும்,
ஆயிரம் அகல்கள்
எண்ணையில் குளித்த
திரிகளோடு காத்திருக்கிறது
காதல் கனல்
விழாத பிரதேசங்களில்
எரிவதற்கு
என்ன இருக்கிறது ?
எத்தனை வார்த்தைகளால்
சொன்னாலும்
உனக்குப்
புரியப் போவதில்லை.
ஒரே ஒரு
முத்தத்தால் உணர்த்தி விடவா
என் காதலை ?
உன்னோடான
என் காதலை உணர்த்த
பனிப் புற்களையும்
சுடு கற்களையும்
காட்ட வேண்டும் நான்.
இரண்டும்
இணைந்தே விளைகின்றன
என்
காதல் காடுகளில்
பிரேதப் பரிசோதனையும்
பிரேமப் பரிசோதனையும்
தகவல்களை
மட்டுமே தர இயலும்.
வேண்டாம்
சோதனைக் கூடத்தில்
காதலைத் தயாரிக்கும்
விதிமுறை யாருக்கும்
வாய்த்ததில்லை.
காதல்
ஓர் புல்லாங்குழல்.
சரியான அளவு காற்றைச்
செலுத்துவதில்
இருக்கிறது
வெற்றியும் தோல்வியும்
அவிழ அவிழ
புதுப் புதுப் புதிர்கள்
புதிதாய் கிளைவிடுவது
காதலில் மட்டுமே.
புரிந்த இடத்தின் முடிவில்
புரியாமையின்
ஆரம்பம்
முளைவிடுவதும்
காதலில் மட்டும் தான்
காதல்
அதிகமான உவமைகளால்
தாலாட்டப் பட்ட
உலகின் ஒரே விஷயம்.
இன்னும்
உவமைகள் உலர்ந்துவிடவில்லை.
காதல்
தலை குலுக்கும் போதெல்லாம்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
உவமைகள் !
உன்னைத்
தீண்ட வேண்டும் எனும்
எண்ணமே
எனக்குள்
மொட்டுகளை மலர்த்தி விடுகிறது.
தீண்டி விட்டால்
மலர்ந்தவை
உலர்ந்து விடுமோ எனும்
அச்சமும் தலை விரிக்கிறது.
நாமென்ன
இரட்டைக் குழந்தைகளா ?
உனக்கு வலித்தால்
எனக்கு
கண்ணீர் வருகிறதே.
ஒருமுறை தான்
காதல் வருமென்பதெல்லாம்
பொய்யடி பெண்ணே,
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறது
உன்
ஒவ்வோர் புன்னகையிலும்.
என் குறைகளைப்
பட்டியலிட்டுப் பரிகசிப்பதை விட
நம்
நிறைகளைப்
பட்டியலிட்டுப் பரிசீலிக்கலாமே ?
ஆனாலும்
காதல்
பட்டியல்களில் பயிராவதில்லையடி.
உள்ளுக்குள் உயிராவது.
உடலுக்கு வெளியே
உயிர் நின்றாலும்
உயிர் வாழ முடியும் என்பதை
நீ
விலகியபோது தான்
உணர்ந்து கொண்டேன்.
தேவதை
உனை
அன்பு செய்கிறேன்
நான் ஆத்திகன் தானே !
உயிரைப் பார்க்க முடியாது
என்றார்கள்.
நீ
தருகிறாய்
தினசரி தரிசனம்
எழுதியவர்களுக்கும்
புரியாத
ஒரே கவிதை
காதல்.
சாத்தானும்
கடவுளும்
சங்கமித்துக் கொள்ளும்
வட்டப் பாதை
காதல் தான்
நான்
சொன்ன போதெல்லாம்
நீ
நம்ப மறுத்தாய்.
ஆனாலும்
நீ சொன்னால் நான்
நம்பி விடுவேன்.
சொல்லிவிடேன் காதலை !
என்
காதலுக்குப் பதிலாய்
ஏதேனும் தர விரும்பினால்
உன்
காதலைத் தா.
கடலுக்குப் பதிலாய்
வேறு எதைத் தர இயலும்
நீ ?
உண்மைக் காதல்
என்னும்
உத்தரவாதத்துடன் தான்
துவங்குகின்றன
அத்தனைப்
பொய்க் காதல்களும்.
என்னோடு
நீ இருக்கிறாய் என்பது
தேக நிலை.
நானாகவே
நீ இருக்கிறாய் என்பதோ
தேவ நிலை.
என்
குறைகளோடே என்னைக்
காதலிப்பதாய்
சொன்னபோது
செத்துப் போனது நம் காதல்.
காதலித்தும்
எப்படிக்
குறைகள் தெரிந்தன உனக்கு ?
காதலிப்பது
குற்றம் என்கிறாய்.
சட்டம் தெரியாதா உனக்கு
குற்றம் செய்யத்
தூண்டுவதும் குற்றமடி !
காதலுக்காய்
நீ சொல்லும் பதில்கள்
கேள்விகளையே
சூடி நின்றாலும்,
நீ
திரும்பக் கேட்கும் கேள்விகளில்
பதில்கள் தான்
பொதிந்து கிடக்கின்றன.
அந்த மலைகளும்
பள்ளத்தாக்கும்
எதிரொலிக்கத் தயங்காத
வார்த்தைகளை எதிரொலிக்க
நீ
தயங்குகிறாய்.
ஆனாலும்
நான்
எறிந்து கொண்டே இருக்கிறேன்
எப்போதேனும்
எதிரொலி வருமெனும்
எதிர்பார்ப்பில்
வாழ்க்கைக்கு
நிறைய தேவைகள்.
காதலுக்கு
ஒரே ஓர் தேவை
வாழ்க்கை.
கடிகாரத்தைப் போலவே
காதலும்
நொடிக்கொரு தரம்
துடிப்பதற்கே வாழ்கிறது.
மாற்றம் நிரந்தரம்
என்றார்கள்,
காதலித்துத் தோற்றவர்கள்.
நிரந்தரமாய் மாற்றம்
என்றார்கள்
இதயம் மாற்றிக் கொண்டவர்கள்.
நாம்
சந்தித்துக் கொண்டபோது
விருப்பங்களை
விரல் மாற்றிக் கொண்டோம்.
நம் விருப்பங்கள்
சந்தித்துக் கொண்டபோது
நாம்
விலகத் துவங்கினோம்.
எதுவும்
விரும்பாமலேயே
இருந்திருக்கலாம்.
புன்னகைக்கும்
கண்ணீருக்கும்
இடைப்பட்ட தூரத்தில்
தான்
பயிராகின்றன
பலகோடிக் காதல்கள்.
நீ சொன்னதற்கும்
நான் சொல்லாததற்குமான
வார்த்தைகளுக்கு
இடையே
ஏராளமாய் கிடக்கின்றன
உண்மையின் வார்த்தைகள்.
உதடுகள் காதலில்
உரசும் வேளையில்
உடையா
மெளனம் உடைபடும்.
கனவில் கூடப்
பேசப் பயப்படும் எனக்கு
நிஜம்
எதைத் தந்துவிடக் கூடும் ?
இருட்டில் கிடக்கும்
காகம் போல
என் காதலும்.
சத்தமிடும் வரை
சாத்தியமில்லை என்றறிந்தும்
இருட்டென்னும்
பெரும் சிறகின் அடியிலேயே
அடைந்து கிடக்கிறது.
மெளனமாய்.
அந்தக் கிளி
புதிதாய் ஓர்
கூட்டுக்குள் குடிபுக
ஆசைப்பட்டு
பறந்து விட்டது.
என்
கூட்டுக்குள்
இன்னும் அந்த சிறகோசைகள்
அகலவேயில்லை.
பையில் போட்டு
கையில் எடுக்கும்
தெருவோர மாயாஜாலமாய்
காதல்.
என் மனசில் போட்டுவிட்டேன்
உன் மனசில்
எடுக்க முடிந்தால்
வெற்றி.
நீ கொடுத்த
பூக்கள்,
பரிசுகள்,
அட்டைகள்
என எல்லாம் மறந்து விட்டன.
ஆனாலும்
ஈரமாய் இருக்கிறது
கடைசியாய்
உள்ளங்கையில் நீ வடித்த
கண்ணீர்த் துளி.
காதலின் அடர்த்தி
குறையக் குறைய
குறைகளின் பட்டியல்
வீர்த்துப் பெருக்கும்.
நான் காணும்
இரவுக் கனவுகளுக்கான
பதிலை
பகலில் சந்திக்கும் போது
நீ
தருவாயானால்
அங்கே முளைக்கும்
என் காதல் நதி.
நட்சத்திரங்களை
எண்ணி முடித்தபின் உன்
விரல்களை எண்ணவும்,
நிலவை
கண்டு திரும்பியதும்
அதன் பிம்பம் காணவும்
என்னருகே
நீ இருக்க விரும்புகிறது
மனம்.
தனியாய் தரைகிளறும்
மாமர
நிலா நிழல் பொழுதுகளில்.
காதல்
உலகத்தின் அளவென்றால்
மிச்ச அளவை
எங்கே வைப்பதடி ?
பேசாமல்
உன் கண் அளவு என்று சொல்
இன்னும்
அந்தக் கிரகத்தின்
தன்மை அறியவில்லை விஞ்ஞானம்.
தொப்பலால் நனையும்
பொழுதுகளை விட
சாரலில்
கண் நனைப்பது
கவித்துவமானது.
காதலில் மட்டும்
சாரலோடு திருப்திப்பட
தெரிந்து கொள்ளவில்லை மனசு !
தோற்றுப் போகுமென்று
முதலிலேயே
தெரிந்தும் கூட
தோற்றுப் போக சம்மதிக்கும்
ஒரே தளம்
காதல் தான்.
உனக்குள்
காதல் முளை விட்டபோது
எனக்குள் தானடி
அது
கிளைகளை விரித்தது.
நீ
முளையைக் கிள்ளி விட்டாய்
இந்தக்
கிளைகளை என்ன செய்வது
நான் ?
அறிவில்லையா ?
என்கிறாய்
என் இதயத்துக்கு
மூளை இல்லை.
உன்
மூளைக்கு
இதயம் இல்லை
என்
காதல் வெளிச்சங்களின் மேல்
நீ
ஊற்றிக் கொண்டே
இருக்கிறாய்
துளித்துளியாய் இருட்டு.
எனக்கு
வெளிச்சம் தருவதை விட
இருட்டைத் துரத்துவதிலேயே
கழிகின்றன
என் நெருப்பு நாட்கள்
நீ
பிரிகிறேன் என்று சொன்னபோது
எனக்குள்
ஒரு கோடி
சர்ப்பங்கள் படமெடுத்துப்
பாய்ந்தன.
பிரிவதாய் சொன்னதாலல்ல
உன்
விழிகளில் வழிந்த
சில துளிக் காதலுக்காக.
எத்தனை
அழகென்று
சொல்லமுடியாப் பட்டியலில்
உன்
விழிகளையும் சேர்த்து விட்டேன்.
என்
சன்னலுக்கு வெளியே
பறந்து திரியும்
புள்ளினங்களை விட
என்
கண்களுக்கு உள்ளே
பறந்து திரியும்
உன் பட்டாம்பூச்சிப்
புன்னகைக்கே
வண்ணச் சிறகுகள் ஏராளம்.
சட்டையைக் கழற்றி
ஆணியில் மாட்டுவது போல
என்
கவலைகளைக் கழற்றி விட்டேன்
நீ
சிரித்தது
எனக்காய் என்பது
புரிந்த வினாடியில்
இந்த வயசில் காதலா
என்று தான்
எல்லோரும் கேட்கிறீர்கள்
அது சரி
எந்த வயதில் காதலித்தால்
ஒத்துக் கொள்வீர்கள் ?
காதல்
ஓர்
வித்தியாச நெருப்பு.
தொட்டால்
சில்லிட்டும்
விலகினால் எரித்தும்…
கொட்டப்பட்ட
காலம்
நமக்கிடையேயான
கணங்களைக் கொஞ்சம்
மூடிவிட்டன,
ஆனால்
ரணங்கள் இன்னும் அப்படியே…
காதல்
என்
கரம்பிடித்து நடந்தபோதெல்லாம்
யாரும்
அழகாய் தெரியவில்லை.
எதிர்ப்படுவோர்
அழகாய் தெரிந்த
ஓர் கணத்தில்
திரும்பிப் பார்த்தேன்
திரும்பி
நடந்து கொண்டிருந்தது
என் காதல்.
பூமி
சிலிர்த்துக் கொள்ளும்
வினாடியில்
புதைந்து போகும்
உயிர்கள் போல,
நீ
மறுத்து நடுங்கியபோது
புதைந்து போனது
என்
ஒற்றைக் காதலும்
ஏறக்குறைய
ஆறு கோடிக் கனவுகளும்.
நீ
சிரித்துக் கொண்டே
ஒரு
கவிதை வாசித்தாய்
பிரமித்துப் போய்
பார்த்திருந்தேன் நான்
அற்புதக் கவிதை அது.
வீட்டுக்கு வந்து
தனிமையில்
வாசித்தபோது தான் புரிந்தது
கவிதை
மிகச் சாதாரணம்
நீ
அருகில் இருக்கும் போது
அலைகடல்
சத்தம் கூட
மெல்ல காது குடைந்து
கடந்து போகிறது.
நீ
விலகி விட்டாலோ
காது குடையும் சத்ததிலேயே
செத்துப் போகிறேன்
நான்.
நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.
இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு.
வாழ்க்கைக்குத்
தேவையான
வருவாய் இல்லையென்றே
பல
காதல்கள் பிரிக்கப் படுகின்றன.
பின்
அவை
பணத்தை எண்ணிக் கொண்டும்
இழந்த காதலை
எண்ணிக் கொண்டும்
தேவையான வாழ்க்கையைத்
தொலைத்து விடுகின்றன
I felt loved when i read this …..very nice sir
LikeLiked by 1 person
Very very..nice …it’s superb….படிக்க படிக்க அவ்வளவு intresting ah iruku….
LikeLike
Really soo beautiful..
LikeLike
Really superb
LikeLike
Very super lines
LikeLike
அத்தனையும் அருமை
LikeLike
அருமை.
LikeLike
கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் சினுங்கள்
உன்னைப் போலவே
உன் கொலுசு சத்தமும்…..!!!!
வாழ்க வளமுடன் கவிஞர்களுக்கு என் மகிழ்ந்த வாழ்த்துக்கள்
#பாலா
LikeLike
அனைத்து கவிதைகளும் அருமை நிறைய கவிதைகள் எனக்கும்
பொருந்துகிறது நன்றி வாழ்த்துகள்.!
LikeLike
Thank you 🙂
LikeLike
அழகான கவிதை நயம்்,அருமையான கவிதைகள்்
LikeLike
vera level really superb semma my golden wishes
LikeLike
More kutti kutti kadhal kavidhaikal post
LikeLike