பிரியத்துக்குரிய தோழி,
வரவேற்புக்கு இருக்கும்
வாசனை மனம்
வழியனுப்புதலில் இருப்பதில்லை.
இலையுதிர் காலத்தில்
பூக்களுக்கேது பூபாளம்.
நினைவுகளின் பெட்டகங்கள்
நிரம்பி வழியும் போது
சாவியோடு
நீ
விலகிச் செல்கிறாய்.
நீ,
பறந்து செல்கிறாய் என்பதன்
சோகம்,
வேடந்தாங்கல் நோக்கித் தான்
நீ
ஓடுகிறாய் என்பதால்
ஓடு பாதை விட்டுக் கொஞ்சம்
விலகிச் செல்கிறது.
இது வரை
நீ
கிளைகள் தேடினாய்,
இப்போது
மரம் ஒன்று உன்னிடம்
வரம் கேட்டு வருகிறது.
உனக்கென்று
யுகங்களுக்கு முன்னால் எழுதிவைத்த
சுகங்களெல்லாம்,
இனிமேல் தான் ஆரம்பம்.
இது,
அருவிகளின் ஆரவாரக் காலம்,
நான்
நதிகளைப் பற்றி மட்டுமே
கவி எழுதல் தகாது.
சென்று வா,
சென்று வாழ்,
அலுவலகம்
உனக்கு இன்னொரு தாய்வீடு.
கண்ணீர்த் துளிகள்
விலகலால் பெருகினாலும்,
மகிழ்வின் துவலைகள்
அதை துவட்டிவிடுகின்றன.
நடந்து முடிந்த நிமிடம் வேறு,
ஆழத்தில் விழுந்தாலும்
அருவிக்கு
காலுடைவதில்லை,
அவை தொடர்ந்து எழுகின்றன.
எங்கள்
இதயத்தின் ஆழத்திலும் விழுகின்றன
இதமாய் சில
ஆனந்த அருவிகள்.
நீ,
வருகையால் மகிழ்வூட்டினாய்,
சிந்தனைகளில் வலுவூட்டினாய்,
இனி வருவது
மாங்கல்ய மாதம்
மகிழ்வால் எங்களில் மழையூற்று.
சிறகுகள் இருந்திருந்தால்
பறந்து வந்திருப்போம்,
தோள்களில் தொங்காத சிறகுகள்
மனசில் மட்டுமே
முளைத்திருக்கின்றன.
வாழ்த்துகிறோம்,
இணைந்த இதயமும்,
பிணைந்த கரங்களும்,
அடுத்தடுத்து தொடரும் சுவடுகளும்
ஆயுள் நீளம் வரை அகலாதிருக்கட்டும்.
இப்போதும் எங்கள்
கண்களில் கண்ணீர்,
இதற்கு
உப்புச் சுவை இருக்கிறதா?
இப்போது எதையும்
உணரமுடியவில்லை.