ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது.

மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ).

மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர்.

குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல.

தலித் இலக்கியத்தை தலித் தான் எழுதவேண்டும், ஈழத்தை ஈழம் சார்ந்தவர் தான் எழுதவேண்டும் எனும் குரல்களோடு எனக்கு பெரிய அளவில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், தலித்தின் சோகத்தையோ, ஈழத்தின் தார்மீக உரிமையையோ அந்தந்த இன மக்களின் உணர்வுகளோடு ஒன்றி உள்வாங்கிக் கொள்ள முடிகின்ற எந்த ஒரு எழுத்தாளனும் உண்மையை நேர்மையுடன் பிரதிபலிக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.

மலைவாசிகளின் வாழ்க்கையை ஒருவேளை ஒரு மலைவாசி எழுத முடியாமல் போகலாம், எனில் மலைவாசி மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைய முடிகின்ற எழுத்தாளர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

எனினும், சூழலில் வாழும் எழுத்தாளன் அதை எழுதும் போது அதன் வலிமை பன்மடங்கு கூடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கவிஞர் திலகரும் தனது கவிதைகளில் ஈழத்தையும், சமூகத்தையும், ஈழ அரசியல் வாதிகளுக்கு உள்ளே இருக்கின்ற போலித்தனங்களையும் கவிதைகளில் வார்த்திருக்கிறார். பொதுவாகவே ஈழக் கவிதைகள் சிங்கள எதிர்ப்பாகவும், தமிழனின் கண்ணீர் குரலாகவும், போராட்டக் குரலாகவும் மட்டுமே வெளிவரும். இவருடைய கவிதைகள் தமிழ் வீதிகளில் நிலவும் போலித்தனங்களைக் கூட சற்று சுட்டிக் காட்டுகின்றன.

ஈழப் போரின் தற்போதைய உண்மை நிலவரத்தையும், தமிழீழம் உருவானால் உண்மையிலேயே மக்கள் நிறைவடைவார்களா ? இல்லை இன்னும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்களா எனும் ஐயம் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாகவும் கவிஞர் தனது உரையாடலின் ஊடாக தெரிவித்தார். விட்டுக் கொடுத்தல் எனும் சிந்தனையே கால்நூற்றாண்டு கால குருதி சாட்சிகளின் சாவுக்கு அவமரியாதை செய்வதாய் அமைந்து விடக் கூடும் எனும் பயமும் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாக அவரது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

மல்லியப்பு சந்தி – ஒரு கவிதை நூல் எனுமளவில், கவித்துவப் படைப்பாக்க அளவில் முழுமையான திருப்தி தரும் நூலாக அமைந்தது என்று சொல்ல முடியவில்லை. எனினும் உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும், சோகமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.

36 comments on “ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

  1. The mistake happend is that Thilagar wanted him to declare himself as grate poet of Illankai. Xavier got cheated.

    Like

  2. நண்பர் திலகர், உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன்… பார்த்து உங்கள் கருத்துக்களை தனி மடலில் சொல்லுங்களேன்…

    Like

  3. நன்றி காரத்திக். மொழியை முடிந்தவரை வசப்படுத்தியிருந்தீர்கள். வாழ்த்துக்கள். நான் சேவியரிடம் எனது கருத்தினை தெளிவுபடுத்தியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ‘மல்லியப்பு சந்தி’ மலையகத்தைப் பற்றி பேசுவதை அவர் புரிந்துகொள்ளாமல் விடுவதிலும் பார்க்க அது ஈழப்பிரச்சினை பற்றி பேசுவதாக புரிந்துகொண்டுவிட்டால் அது முற்றிலும் தவறானதாகிவிடும் என்பது ஒன்று. மற்றது இலங்கைக்குள்ளேயே மலையக மக்கள் தனித்துவமான பிரச்சினைகளையும் கொண்டிருக்கிறார்கள் அது பற்றியும் அறிதல் வேண்டும் என்பது இரண்டாவது. மற்றபடி ‘தவறான எண்ணம்’ ஏதும் என்னிடமில்லை. நீங்களும் எங்கள் சகோதரனே என்ற உங்களின் பதிலில் உணர்ச்சி மேலீட்டினை புரிந்து கொண்டேன். காத்திரமான பங்களிப்புக்கு நன்றி.

    Like

  4. அன்பின் கார்த்திக், உணர்வோடு எழுதியிருக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள் பல.

    Like

  5. //உங்கங்களின் படைப்புகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக்காரணமே அதன் எளிமைதான். பின் சந்திப்பின்போதும் உங்கள் படைப்பின் யதார்த்தம் உங்களில் தெரிவதை அவதானித்தேன். இப்போது மிகவும் எளிதாக மலையக மக்கள் பற்றி நீங்கள் அறிந்திராததை ஏற்றுக்கொண்டு (என்னிடமும், நிர்ஷனிடமும்) அதனை மற்றவருக்கு அறியத்தரவும் ஆவலாக இருப்பது கண்டு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. நன்றி இதற்கு முன்னரும் மலையக மக்கள் பற்றிய அறிதலைச் செய்வதற்கு தலைப்பட்டிருக்கிறேன். எனினும் உங்களிடம்போன்று ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நண்பர் நிர்ஷனும் மிக ஆர்வத்தோடு களமிறங்கியிருக்கிறார். வாழத்துக்கள். விரைவில் கட்டுரைகளை மின்மடலில் அனுப்புகிறேன். பதிற்குறிகளுக்கு நன்றிகள்

    /

    மிக்க நன்றி நண்பரே. உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்புகிறேன். விரிவாக.

    Like

  6. Engal tamil kavingaraam “Thilagar” avargale, ungalai ezha kavaingarendru azhaikka maatean…neengalum engal sodharane;
    Namadhu sagodharargal anga irakaiellum engal udhadugal adhai unaraamal munbu sirithu konde irundhadhai varauthathudan oppukkolgirean…
    Tamil thalaivargal ezhathai arasiyalukku mattume bayanpaduthinaargal…
    Padaipaaligalo ezhuthil ezhathai mattume yettri naargal…Aagaiyaal dhaan namdhu samugam elangai endradhum singala-ezha perachanai ninaikka thalai pattaargal……idhil xavierukkum vidhi vilakallave…..

    Neengal thamilargalai thavaraaga ninaikka vendam endru ungalai thaalmai udan kettu kolgirean….Namadhu “Malaiyaga Thamilargalukku” mattum alla namadhu thamilargal aanaivar meedhum engalukku akkaraiyum paasamum undu enbathai avaragalidam therivikkummaaru ungalai naan kettu kolgirean..

    Karthick

    Like

  7. நண்பர சேவியர் அவர்களே, உங்கங்களின் படைப்புகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக்காரணமே அதன் எளிமைதான். பின் சந்திப்பின்போதும் உங்கள் படைப்பின் யதார்த்தம் உங்களில் தெரிவதை அவதானித்தேன். இப்போது மிகவும் எளிதாக மலையக மக்கள் பற்றி நீங்கள் அறிந்திராததை ஏற்றுக்கொண்டு (என்னிடமும், நிர்ஷனிடமும்) அதனை மற்றவருக்கு அறியத்தரவும் ஆவலாக இருப்பது கண்டு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. நன்றி இதற்கு முன்னரும் மலையக மக்கள் பற்றிய அறிதலைச் செய்வதற்கு தலைப்பட்டிருக்கிறேன். எனினும் உங்களிடம்போன்று ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நண்பர் நிர்ஷனும் மிக ஆர்வத்தோடு களமிறங்கியிருக்கிறார். வாழத்துக்கள். விரைவில் கட்டுரைகளை மின்மடலில் அனுப்புகிறேன். பதிற்குறிகளுக்கு நன்றிகள்

    Like

  8. வலியூட்டும் செய்திகள் நிர்ஷன். அனுமதிக்கு நன்றிகள்.
    இலங்கை என்றாலே ( ராமன் – இராவணன் தவிர்த்து ) சிங்களம் – ஈழம் என சிந்திக்கும் தமிழர்களுக்கு உங்கள் கட்டுரை மறைந்த பக்கங்கள் சிலவற்றைத் திறந்து காட்டும் என நம்புகிறேன்.

    Like

  9. நீங்கள் தாராளமாக பிரசுரிக்கலாம்.
    அடிப்படைச் சம்பளம் இந்தியாவிலிருந்து வந்து இலங்கை வருமானத்துக்கு முதுகெலும்புகொடுத்து உழைக்கும் இந்திய வமிசாவளி தமிழர்களுக்கு அடிப்படைச் சம்பளம் வெறும் 170 ரூபாதான்.
    இலங்கையில் ஒரு கிலோ அரிசி 65.00
    பாண் ஒன்று 35.00
    தேங்காய் 30.00
    பால்மா 400 கிராம் 275.00
    என்று ஏராளமாய் சொல்லலாம். ஒருகுடும்பத்தில் நால்வர் என்றால் நாளாந்தம் எப்படிச் சாப்பிடுவார்கள்?
    இதுவரை இருந்த இந்தியத்தலைவர்கள் வெறும் கடிதங்களால் மட்டுமே சாதித்தார்கள்.

    எவ்வாறெனினும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் இவர்களின் உண்மை நிலைவரம் வெளிக்கொண்டுவரப்படுமாயின் உண்மையில் நான் தங்களுக்கு நன்றியுடையவனாவேன்.

    அன்புடன் நிர்ஷன்

    Like

  10. நிர்ஷன், உங்கள் கட்டுரை படித்தேன். இதை நான் ஒரு அச்சுப் பத்திரிகையில் பிரசுரிக்க உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

    Like

  11. //மல்லியப்பு சந்தி அவலங்களை சொல்கிறது. நிவர்த்தி செய்வது எதிர்காலம். அதற்கான தளங்களை நமது கலந்துரையாடல்கள் இடக்கூடும். மலையக மக்கள் குறித்த தகவல்களை நிர்ஷனின் புதிய மலையகம் ஊடாக தர முயற்சிக்கிறேன். பலரும் பதிவு செய்வர்கள் என எண்ணுகிறேன். எங்கள் தமிழக அன்பு நெங்சங்களுக்கு அவற்றை அறிமுகம் செய்வீர்களெனின் ஆறுதலடைவோம். எமது உறவின் ஆழ அகலங்களை புரிந்து கொள்வோம்.

    //

    என்னால் என்னென்ன செய்ய இயலுமோ அவற்றையெல்லாம் செய்து தர தயாராய் இருக்கிறேன்.

    ஒரு கட்டுரையாய் எழுதி அனுப்புங்களேன், எனது மின்னஞ்சலுக்கு அதை நிச்சயம் ஒரு நாளிதழில் வெளியிடச் செய்கிறேன்.

    Like

  12. ”’இலங்கைத் தமிழர் எழுதும் படைப்பு என்றாலே, அதிலுள்ள பிரச்சனைகள் எல்லாமே ஈழப் பிரச்சனைகள் என்னும் தவறான புரிதலுக்குள் சிக்கி விட்டேன். மன்னியுங்கள். மீண்டுமொரு வாசிப்பை நிச்சயம் நிகழ்த்துகிறேன்”’

    நன்றி நண்பர் சேவியர். எவ்வித தயக்கமுமின்றி உங்களின் புரிதலை ஏற்றுக்கொண்டதற்கு. மன்னிப்பெல்லாம் என்ன? மலையகம் பற்றி பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். மறுவாசிப்புக்கும் தயாராகியிருக்கிறீர்கள்.மகிழ்ச்சிதான்.

    (‘ ஒரு சமூகத்தின் அவலங்களை சொல்லாமல் அதனை நிவரத்திசெய்துவிட முடியாது’ பேராசிரியர் .கா.சிவத்தம்பி)

    மல்லியப்பு சந்தி அவலங்களை சொல்கிறது. நிவர்த்தி செய்வது எதிர்காலம். அதற்கான தளங்களை நமது கலந்துரையாடல்கள் இடக்கூடும். மலையக மக்கள் குறித்த தகவல்களை நிர்ஷனின் புதிய மலையகம் ஊடாக தர முயற்சிக்கிறேன். பலரும் பதிவு செய்வர்கள் என எண்ணுகிறேன். எங்கள் தமிழக அன்பு நெங்சங்களுக்கு அவற்றை அறிமுகம் செய்வீர்களெனின் ஆறுதலடைவோம். எமது உறவின் ஆழ அகலங்களை புரிந்து கொள்வோம்.

    Like

  13. மல்லியப்பு சந்தி நூலை இலங்கையில் எங்கு பெறமுடியும் என்பதை அறியத்ரவும்.ஹட்டன் நோர்வூட் சூரியன் எவ் எம் இந்திரஜித்திற்கும் இந்த நூல் தொடர்பாக தெரிவிக்கிறேன்.மேலும் நண்பர் சொன்னது போல விரிவான விவாத அல்லது ஒரு கருத்து பரிமாற்றலை செய்வது சால சிறந்தது.என்னுடன் தொடர்புடைய இலக்கிய,மாக்சிய நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கிறேன்

    மல்லியப்பு சந்தி வெளியீடு செய்யப்பட்டு ஒரு வருடமாகிறது. வெளியீடு மல்லியப்பு சந்தி அமைந்துள்ள ஹட்டன் நகரில் இடம்பெற்றது. ஆதனை தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளிலும் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் அறிமுக நிகழவோடு புத்தக சாலைகளுக்கு வழங்கலாம் என்றிருந்தேன் (இருக்கிறேன்) வேலைப்பளுவும், ‘சூழலும’ விடுவதாக இல்லை. விரைவில் அறிமுக நிகழ்வோடு புத்தகசாலைகளில் கிடைக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளேன். சூரியன் நண்பர்களுக்கு (இந்திரஜித் உட்பட) கிடைக்கச்செய்துள்ளேன். அப்புச்சியின் ஆர்வத்துக்கு நன்றிகள்.

    Like

  14. //வரலாற்றுக்கறைகளை மட்டுமே பரிசாகத் தந்து வாழ்வாதாரப்பிரச்சினைகளை நிரந்தரமாக்கிக்கொண்ட நீண்டகால சோகவிரக்தி மனதுடன் நாட்களுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் குறித்து பேசப்படுவதும் அறியப்படுவதும் குறைவு என்பது மனவேதனையை தருகிறது.
    அந்தக்காலம் தொட்டு இப்போதுவரை இருக்கும் இந்தியத்தலைவர்கள் கூட ஏன் தமிழர்களின் தாய்வீடு என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில்கூட அப்பாவி இந்தியவமிசாவளி மலையகத்தமிழர் குறித்தான பேச்சு அறவே இல்லை என்பதில் //

    உண்மை நண்பரே.. மனதைப் பிசையும் சோகத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். விரிவான உங்கள் மடலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Like

  15. அன்புக்குரிய திலகர் குறிப்பிட்டுள்ள பலவிடயங்கள் பற்றி விரிவாக கதைக்க வேண்டிய கடப்பாட்டினை அவருடைய பின்னூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

    //இலங்கை வாழ் மலையகத்தமிழர் என்பது தொழிலாளர் வர்க்கத்தை மையப்படுத்திய சமூகமாகும். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டு தேயிலை இறப்பர தோட்டங்களில் தினக்கூலிகளாக அமர்த்தப்பட்டு இன்றுவரை அந்த உழைப்புக்கான ஊதியத்தை ஒரு ரூபாவால் உயர்த்திக்கொள்ளக்கூட உயிர்கொடுத்து போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் வஞ்சிக்கப்பட்ட சமூகமாகும். இவர்களுள் இந்தியாவை தமது தாய்நாடாகக் கருதிக்கொண்டிருப்பவர்களும் உளர்.//

    இந்திய வமிசாவளியினர் என இலங்கையில் அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி வயிற்றுப்பசிக்காக மண்டாடிப் போராடும் மலையக மக்களின் இந்தியாவுடனனான உறவினை பலரும் உணர்ந்துகொள்வதில்லை. காடுமேடுகற்பள்ளங்களில் உருண்டோடி உயிர்கொடுக்கும் அருவியை மலையக மக்கள் என்றும் முதல் ஊற்று இந்தியா என்றும் கொள்ளலாம்.
    வரலாற்றுக்கறைகளை மட்டுமே பரிசாகத் தந்து வாழ்வாதாரப்பிரச்சினைகளை நிரந்தரமாக்கிக்கொண்ட நீண்டகால சோகவிரக்தி மனதுடன் நாட்களுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் குறித்து பேசப்படுவதும் அறியப்படுவதும் குறைவு என்பது மனவேதனையை தருகிறது.
    அந்தக்காலம் தொட்டு இப்போதுவரை இருக்கும் இந்தியத்தலைவர்கள் கூட ஏன் தமிழர்களின் தாய்வீடு என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில்கூட அப்பாவி இந்தியவமிசாவளி மலையகத்தமிழர் குறித்தான பேச்சு அறவே இல்லை என்பதில் முழு விரக்தியையும் வெளிப்படையான எதிர்ப்பாடலையும் கொண்ட புத்திஜீவிகள் நிறையபேர் இருக்கிறார்கள்.

    காலத்தால் சிலவேளைகளில் இவர்களின் துன்பதுயரங்கள் உணரப்பட்டாலும் அப்போது பட்டினியால் பல்லாயிரம்பேர் மடிந்திருப்பார்கள்

    திலகருக்கும் பதிவிட்ட சேவியருக்கும் நன்றிகள்.

    புதியமலையகத்தில் திலகரைப்போன்ற சமூகஆர்வலர்கள் படித்தவர்கள் எழுதுவதை நான் சிரம்தாழ்த்தி வரவேற்கிறேன்.

    Like

  16. மல்லியப்பு சந்தி நூலை இலங்கையில் எங்கு பெறமுடியும் என்பதை அறியத்ரவும்.ஹட்டன் நோர்வூட் சூரியன் எவ் எம் இந்திரஜித்திற்கும் இந்த நூல் தொடர்பாக தெரிவிக்கிறேன்.மேலும் நண்பர் சொன்னது போல விரிவான விவாத அல்லது ஒரு கருத்து பரிமாற்றலை செய்வது சால சிறந்தது.என்னுடன் தொடர்புடைய இலக்கிய,மாக்சிய நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கிறேன்

    அன்புடன்

    அப்புச்சி

    Like

  17. //சேவியர் வாசித்திருப்பதுபோல் ‘மல்லியப்பு சந்தி’ ஈழப்பிரச்சினையின் ஒரு நுழைவாயில் அன்று, மாறாக ஒரு பாட்டாளி வர்க்கம் தமது வாழ்வாதாரத்துக்காகவும் தேசிய அடையாளத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும்; தமிழ் சமூகமொன்றின் வாழ்க்கைப்பிரதேசத்தின் நுழைவாயிலாகும்
    //

    இலங்கைத் தமிழர் எழுதும் படைப்பு என்றாலே, அதிலுள்ள பிரச்சனைகள் எல்லாமே ஈழப் பிரச்சனைகள் என்னும் தவறான புரிதலுக்குள் சிக்கி விட்டேன். மன்னியுங்கள். மீண்டுமொரு வாசிப்பை நிச்சயம் நிகழ்த்துகிறேன்.

    Like

  18. //தர்க்கரீதியானதும் கூட.ஈழப்போராட்டம் என்பது தனியவே தேசியம் சார்ந்ததா அல்லது வர்க்கப்புரட்சியும் சேர்ந்ததா என்பதை இதுவரை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.இன ரீதியாக இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் அதே வேளை அங்கு இன்னொரு போராட சூழலும் இருக்கத்தான் செய்கிறது.இதனை பற்றி விரிவாக பேச வேண்டும்.என்னப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால யுத்த நிலத்தில் இருந்து, தாய் ,போரும் அமைதியும் போன்ற படைப்புக்கள் வெளிவராத்தது//

    மனமார்ந்த நன்றிகள் அப்புச்சி.

    Like

  19. ‘’மல்லியப்பு சந்தி – ஒரு கவிதை நூல் எனுமளவில்இ கவித்துவப் படைப்பாக்க அளவில் முழுமையான திருப்தி தரும் நூலாக அமைந்தது என்று சொல்ல முடியவில்லை. எனினும் உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும்இ சோகமும்இ ஏக்கமும்இ எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.’’
    என்ற நண்பர் சேவியரின் நேர்மையான விமர்சனத்தை மனமாற ஏற்றுக்கொள்ளுகின்றேன். அவரது இயல்பான பார்வையினாலும் கவிதைப் படைப்பாக்க செழுமையினாலும் இத்தகைய விமர்சனத்தைச் சொல்லுவதற்கு பொருத்தமானவராகிறார். நான் அழகியல் பொருந்திய வரிகள் கொண்டு அலங்காரப்படுத்துவதைவிட நாம் அடக்கிவைத்துள்ள வலிகளைச் சொல்லும் ஆயுதமாகவே இலக்கியத்தை கையாள ஆசைப்படுகிறேன். அது கவிதை, கட்டுரை, கதை, உரைநடை எனும் வடிவங்களுக்கு ஆட்படாவிட்டாலும் எனது எதிர்பாரப்புக்களை எடுத்துச்சொல்லும் களமாக இருந்தாலே போதுமானது என எண்ணுகிறேன். அந்த எதிர்ப்பார்ப்பினை மல்லியப்பு சந்தி ஏற்படுத்தியிருப்பது கண்டு திருப்தி அடைகிறேன்.
    தவிரவும், ஈழப்பிரச்சினை என்ற விசாலத்துள் அகப்பட்டு காணாமல் கரைந்து போய்க்கொண்டிருக்கும் மலையக தமிழ் மக்கள் குறித்த பதிவே மல்லியப்பு சந்தியாகும். எனினும் என்னுடனான சந்திப்பை ஈழத்து கவிஞருடனான சந்திப்பு என்றும் ஈழப்பிரச்சினையை மல்லியப்பு சந்தி பேசுகின்றது என்றும் நண்பர் சேவியர் வாசித்திருப்பது மலையக தமிழ் மக்கள் எந்த அளவுக்கு மறக்கப்பட்டிருக்கிறார்கள், மறைக்கப்பட்டிருக்கிறார்கள், மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு.
    நண்பர் அப்புச்சியின் பதிற்குறியில் குறிப்பிட்டிருப்பது போல் இது தேசியம் சார் பிரச்சினையா? அல்லது வர்க்கம் சார் பிரச்சினையா என்பது, மலையக தமிழர் பற்றிய சரியான வாசிப்புக்கு தமிழக கல்வியாளர்களும் படைப்பாளர்களும் வரவேண்டும் என்பதையே காட்டி நிற்கிறது.
    இலங்கை வாழ் மலையகத்தமிழர் என்பது தொழிலாளர் வர்க்கத்தை மையப்படுத்திய சமூகமாகும். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டு தேயிலை இறப்பர தோட்டங்களில் தினக்கூலிகளாக அமர்த்தப்பட்டு இன்றுவரை அந்த உழைப்புக்கான ஊதியத்தை ஒரு ரூபாவால் உயர்த்திக்கொள்ளக்கூட உயிர்கொடுத்து போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் வஞ்சிக்கப்பட்ட சமூகமாகும். இவர்களுள் இந்தியாவை தமது தாய்நாடாகக் கருதிக்கொண்டிருப்பவர்களும் உளர். (சரளமாகச்சொன்னல் ‘முரளிதரன் பந்துவீசினால் கூட டெண்டுல்கரின் சிக்ஸரை வேண்டிநிற்பவர்கள்’ ) அதே நேரம் தங்களை ‘மலையகத் தமிழர்’’ எனும் தேசியத்துள் உள்ளடக்கிக்கொள்ள சதா பிரயத்தனத்திலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இவர்களையும் இவர்களின் போராட்ட மாதிரியையும் புரிந்துகொள்ள இலங்கை வாழ் தமிழர் பற்றி வாசிக்கநினைக்கும் தமிழக அன்பு நெஞசங்கள் சற்று தமது ஈழக்கண்ணாடியை கழற்றிவைத்துவிட்டு வாசிக்கவேண்டிய தேவையுள்ளது என நினைக்கிறேன். அப்போது மட்டுமே அந்த சமூகத்தின் வேர்களையும் விலாசத்தினையும் வலிகளையும் புரிந்து கொள்ள முடியும். மல்லியப்பு சந்தி அந்த வலிகளை சொல்லும் ஒரு வழிமுறையே, தவிரவும் சேவியர் வாசித்திருப்பதுபோல் ‘மல்லியப்பு சந்தி’ ஈழப்பிரச்சினையின் ஒரு நுழைவாயில் அன்று, மாறாக ஒரு பாட்டாளி வர்க்கம் தமது வாழ்வாதாரத்துக்காகவும் தேசிய அடையாளத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும்; தமிழ் சமூகமொன்றின் வாழ்க்கைப்பிரதேசத்தின் நுழைவாயிலாகும்
    பணிநிமித்த பயணத்தில், கால்மணி நேரத்திற்குள் ஒருவரையொருவர் தேடிக்கண்டுபிடித்து, குழந்தைகளைப்பற்றி குசலம் விசாரித்துக்கொண்டு, அன்போடு சேவியரின் துணைவியார் தந்த குளிர்பாணத்தையும் குடித்துக்கொண்டு இடம்பெற்ற எனக்கும் நண்பர் சேவியருக்குமான சந்திப்பு இந்த முழுவீச்சையும் கொண்டுவரும் என எதிர்பார்ப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. எனினும் ‘மல்லியப்பு சந்தி’ முழுவதுமே மலையகம், மலையக இலக்கியம், தொழிலாளர் வர்க்க அடக்குமுறைகள் என பேசப்பட்டிருக்கின்ற போதும் கூட அது ஈழப்பிரச்சினை பற்றி பேசுகின்றது என்ற புரிதலே ‘மலையகம்’ மற்றும் ‘மலையக தமிழர்’ பற்றிய வாசிப்பை வேண்டிநிற்கும் பதிற்குரியாக இது இங்கே பதிவாவதன் தேவையை ஏற்படுத்திற்று.
    எது எவ்வாறாயினும் மலையகத்தமிழர் பற்றிய காத்திரமான ஒரு வாசிப்புக்கான தேவையை எமது சந்திப்பும் நண்பர் சேவியரின் பதிவும் ஏற்படுத்தியிருப்பது எனக்கு நிறைவைத்தருகின்றது. அவருக்கு என்றும் எனது நன்றிகள். பதிற்குறி பதிவு செய்த நிர்ஷன், ஹேமா, கிங், அப்புச்சி எல்லோருக்கும் எனது நன்றிகள். மலையக தேசியத்தை வலியுறுத்தி நண்பர் நிர்ஷன் பதிவு செய்யும் ‘புதிய மலையகம்’ தளத்தினூடாக ஒரு தொடர்ச்சியான கலந்துரையாடலினை ‘மலையக தேசியம்’ தொடர்பில் மேற்கொள்ளலாம். அடியேனும் பதிவுகளை வழங்க காத்திருக்கிறேன்.
    திலகர்

    Like

  20. ஈழப் போரின் தற்போதைய உண்மை நிலவரத்தையும், தமிழீழம் உருவானால் உண்மையிலேயே மக்கள் நிறைவடைவார்களா ? இல்லை இன்னும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்களா எனும் ஐயம் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாகவும் கவிஞர் தனது உரையாடலின் ஊடாக தெரிவித்தார்.இது அடிப்படையான ஒரு விடையம்.தர்க்கரீதியானதும் கூட.ஈழப்போராட்டம் என்பது தனியவே தேசியம் சார்ந்ததா அல்லது வர்க்கப்புரட்சியும் சேர்ந்ததா என்பதை இதுவரை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.இன ரீதியாக இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் அதே வேளை அங்கு இன்னொரு போராட சூழலும் இருக்கத்தான் செய்கிறது.இதனை பற்றி விரிவாக பேச வேண்டும்.என்னப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால யுத்த நிலத்தில் இருந்து, தாய் ,போரும் அமைதியும் போன்ற படைப்புக்கள் வெளிவராத்தது.கவலைக்கு உரியது.இப்படியான கலை இலக்கிய நண்பர்களை சந்திக்கும் போது விரிவான ஒருகருத்தாக்கத்தை செய்து பதிவிடுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    நன்றி

    Like

  21. //.மல்லியப்பூ சந்தி ஒரு காலப் பதிவாகத்தான் இருக்கும்.நன்றி சேவியர் அண்ணா.பதிவிற்கும் அதற்கு எடுத்துக்கொண்ட அக்கறைக்கும் கூட.
    //

    வருகைக்கு நன்றி கிங்.

    Like

  22. /.மல்லியப்பூ சந்தி ஒரு காலப் பதிவாகத்தான் இருக்கும்.நன்றி சேவியர் அண்ணா.பதிவிற்கும் அதற்கு எடுத்துக்கொண்ட அக்கறைக்கும் கூட.
    //

    உண்மை. நன்றி சகோதரி, உங்கள் தொடர் ஆதரவுக்கு 🙂

    Like

  23. //திலகரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பதை அவரது அடக்கமான பேச்சினில் கண்டுகொள்ளலாம்.

    //

    உண்மை. அருமையான மனிதர். 🙂

    Like

  24. கவிஞர் திலகர் சொன்னது முற்றிலும் உண்மைதான்.அரசியலில் கிடைக்கும் இலாபமும் நஸ்டமும் அரசியல்வாதிகளூக்கே சேரும்.என்றும் இடையில் இருக்கும் பொதுமக்களுக்கே பாதிப்பு அதிகம்.போராடத்தின் போதும் சரி அதன் பிறகும் சரி பாதிப்பு பொதுமக்களாகிய எங்களுக்குத்தான்.மல்லியப்பூ சந்தி ஒரு காலப் பதிவாகத்தான் இருக்கும்.நன்றி சேவியர் அண்ணா.பதிவிற்கும் அதற்கு எடுத்துக்கொண்ட அக்கறைக்கும் கூட.

    Like

  25. திலகரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பதை அவரது அடக்கமான பேச்சினில் கண்டுகொள்ளலாம்.

    //உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும், சோகமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.//

    காத்திரமான படைப்புகள் எப்போதும் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மல்லியப்பு சந்தியும் அவ்வாறானதொரு தரமான படைப்பு.

    அன்புடன்
    நிர்ஷன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.