ஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.
முன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.
இப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.
கொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குகள் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.
பின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.
இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.
கூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.
அன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.
திருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.
“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.
ஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் என எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.
நட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.
“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ?” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.
மனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.
வர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.
நம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவும் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.
ஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை என்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும். அழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.
நாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.
நின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.
அந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.
மனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.
அவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை !
*
சேவியர்