உலகை உலுக்கிய செய்திப்படம் : Hell Hole !

நரகமல்ல, அதைவிடக் கொடியது !

zim1

உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது.

ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.

zim3

நிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.

ஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.

இந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.

zim2

ஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.

காட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.

ஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,

zim5

 

 

 

 

 

வெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.

ஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.

zim4

பொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.

எத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

உணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.

அடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.

அப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.

இந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.

zim6

ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.

ஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.

தவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்

ஒரு கோழி முட்டையின் விலை ஐந்து கோடி ரூபாய்கள். அதிர்ச்சியடையாதீர்கள், இது தங்க முட்டைக்கான விலை இல்லை சாதாரண கோழி முட்டைக்குத் தான் இந்த விலை. ஜிம்பாவேயில் !!! இந்த கிரிக்கெட் விளையாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் நமக்கு அந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும்

நமது இந்திய நாடு அதிகபட்சமாக சந்தித்த பணவீக்க விழுக்காடு 14 தான். இப்போது சுமார் பன்னிரண்டு விழுக்காடு பணவீக்கத்துக்கே விலைவாசி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறது எனில் ஒரு நாட்டின் பணவீக்கம் இருபத்தைந்து இலட்சம் விழுக்காடு என இருந்தால் எப்படி இருக்கும் ? இந்த வரியை இன்னொரு முறை வாசிக்க வேண்டுமென தோன்றுகிறது அல்லவா, சந்தேகம் வேண்டாம் இருபத்தைந்து இலட்சம் விழுக்காடு பணவீக்கம் தான் ! அரசு கணக்குப் படி இருபத்தைந்து இலட்சம் விழுக்காடு பணவீக்கம் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும் அதிகாரபூர்வமற்ற புள்ளி விவரமோ இந்த விழுக்காடு ஒருகோடியே ஐம்பது இலட்சம் என பதற வைக்கிறது.

வறுமையின் உச்சம் மனிதர்களை பிழிந்து எடுக்கிறது. பணத்துக்கான மதிப்பு இல்லை. பணம் வெறும் காகிதமாகி விட்டது. குளிரெடுத்தால் மக்கள் நோட்டுக் கட்டுகளை எரிக்கிறார்கள். காரணம், எரிப்பதற்கான விறகுகள் இந்த நோட்டுக் கட்டுகளை விட விலை அதிகம்.

குளியலறையில் கை துடைக்க இவர்கள் பணத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஒரு பேப்பர் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தை விட, அந்த பணத்தையே கை துடைக்கும் காகிதமாகப் பயன்படுத்துவது லாபகரம் !

அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டைத் தானே நாம் பார்த்திருக்கிறோம். ஜிம்பாபேவில் கிடைக்கிறது ஐம்பது கோடி ரூபாய் நோட்டு !!! ஆம், ஒரு நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பு ஐம்பது கோடி ஜிம்பாவே டாலர்கள்.

கடைக்குச் சென்று ஒரு முட்டை வாங்கினால் நீங்கள் கொடுக்கவேண்டிய விலை ஐந்து கோடி ஜிம்பாவே டாலர்கள் ! ஒரு கோழி வாங்க வேண்டுமெனில் நீங்கள் ஒரு தள்ளு வண்டியில் தான் பணத்தை அள்ளிச் செல்ல வேண்டும். கட்டுக் கட்டாகக் குவியும் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.

இது மட்டுமல்ல, அதிர்ச்சிச் செய்திகள் நீண்டு கொண்டே செல்கின்றன. யாரும் பணத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. பணத்தை எடை போட்டு தான் வாங்குகிறார்கள். இல்லையேல் ஒரு கோழி விற்ற பணத்தை எண்ண ஒரு நாள் தேவைப்படும் !! என்ன ஒரு கொடுமை !!! மக்கள் என்ன செய்வார்கள் ? எப்படி வாழ்வார்கள் ?

எல்லாவற்றுக்கும் காரணம் அதிபர் ராபர்ட் முகாபேயின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் என குற்றச் சாட்டுகள் நாலாபுறமிருந்தும் எழுகின்றன. தன் இனத்தவர்கள் தவிர மற்றவர்கள் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் சட்டத்தின் நிர்பந்தத்தால் நிலங்களில் உழைத்துக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான வெள்ளை மக்கள் கொத்து கொத்தாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கினர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டுக்குச் சென்றவர்களின் கணக்கு மட்டுமே முப்பது இலட்சம் ! உலகின் பல பாகங்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே யாருக்கும் தெரியவில்லை. விளைவு ? வெறும் நிலங்கள் விவசாயக் கரங்கள் இல்லாமல் வறண்டது. விவசாயம் படுத்தது !

விவசாயம் செய்ய ஆட்கள் இல்லாமலும், போதிய உற்பத்தி இல்லாமலும் சுமார் எட்டு இலட்சம் டன் கோதுமை விளைவித்துக் கொண்டிருந்த ஜிம்பாவே நிலங்கள் வெறும் ஐம்பதாயிரம் டன் எனுமளவுக்கு உற்பத்தியில் படு வீழ்ச்சி கண்டது.

நாட்டின் வீழ்ச்சியும், அன்னியச் செலாவணி கையிருப்பும் கணிசமாய் குறைந்ததால் ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் அன்னியச் செலாவணியில் முப்பது விழுக்காடை ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற வேண்டும் எனும் கட்டளையை அரசு பிறப்பித்தது. சரியான மாற்று விலை இல்லாததால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே அரசியல் ஊழல் மலிந்து கிடக்கும் ஜிம்பாவே நாட்டில் இந்த சட்டம் கள்ளச் சந்தையில் அன்னியப் பணம் திருட்டுத்தனமாக உலவவும், அரசு அதிகாரிகளின் பைகள் நிரம்பவுமே வழி கோல்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

போதாக்குறைக்கு அரசு அலுவலர்களுக்குத் தேவையான பணத்தை அச்சிட்டு வழங்கிக் கொண்டே இருக்கிறது அரசு. அதற்குரிய விளை பொருட்களோ, தங்கக் கையிருப்போ ஏதுமில்லாமல் வெறுமனே அச்சிடப்படும் பணம், பணவீக்கத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்துகிறது.

விலைகள் யானை விலை குதிரை விலை எனும் நிலையை எல்லாம் தாண்டி நிலவுக்குப் பக்கத்தில் குடியேறியது. எனவே எல்லா பொருட்களின் விலையையும் பாதியாய்க் குறைக்க வேண்டும் என அரசு புதிய ஒரு சட்டம் இயற்றியது. தொழில் ஸ்தம்பித்தது.

ஜிம்பாவே நாட்டுக்கு வெளிநாட்டுப் பணத்தை வஞ்சகமில்லாமல் வழங்கிக் கொண்டிருந்த துறை புகையிலை ஏற்றுமதி. அது ஆண்டுக்கு அறுபது கோடி அமெரிக்க டாலர்கள் எனும் அளவிலிருந்து சட்டென சறுக்கி நூற்று இருபது கோடி டாலர்கள் எனும் நிலைக்கு விழுந்து விட்டது.

மக்கள் தொகை வழக்கம் போல சீராக ஏறிக் கொண்டிருக்க, வேலையின்மை படு கோரமாக மக்களைத் தீண்டியிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் இருப்பவர்களில் எண்பது விழுக்காடு மக்களுக்கு வேலை இல்லை !

சுமார் முப்பத்தைந்து ஆண்டு கால வளர்ச்சியை புரட்டிப் போட்டு மக்களை கற்காலத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது சமீபத்திய ஆட்சி. உலக மனித உரிமைகள் பட்டியலில் ஏறக்குறைய கடைசி இடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது இந்த நாடு.

வறுமையின் உச்சத்தினால் மக்களுடைய வாழும் வயதும் படு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. நம்புங்கள், ஒரு ஆணின் சராசரி ஆயுள் வெறும் முப்பத்து ஏழு !!! உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையின் படி இங்கே ஒவ்வோர் வாரமும் வறுமையினாலும், நோயினாலும் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 3500 ! ஆனால் உண்மை நிலவரம் பல மடங்கு அதிகம் என உள்ளூர் புள்ளி விவரங்கள் நம்புகின்றன.

கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே சுமார் ஐந்து இலட்சம் உயிர்களை வறுமையும், நோயும் கொலை செய்திருப்பதாக பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உயிர் கொல்லி நோயான எயிட்ஸ் அதிகம் பீடித்திருக்கும் நாடு எனும் சிக்கலும் ஜிம்பாவேக்கு இருக்கிறது.

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள தேவையான உணவு என்பது மட்டுமே பெரும்பாலான மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் சூழல் அவர்களை அந்த எதிர்பார்ப்புக்கும் தகுதியற்றவர்களாக உருமாற்றியிருக்கிறது. காரணம் இந்த பண வீக்கம் எனும் அசுரக் கொலையாளி.

அரசு முன்னூறு மடங்கு சம்பள உயர்வு கொடுத்தால் கூட கிடைக்கும் பணம் சில வேளை உணவுக்கு மட்டுமே சரியாய் போகிறது எனும் அவல நிலை ! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வருடம் சாப்பிடத் தேவையான பணத்தைக் கொண்டு இன்றைக்கு வாங்க முடிவது ஒரு கிலோ கத்திரிக்காய் மட்டுமே ! இந்த துர்பாக்கிய நிலை சுமார் அரை கோடி பட்டினி வயிறுகளை உருவாக்கியிருக்கிறது.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் ஒரு ஆசிரியரின் ஒரு மாத சம்பளம் இப்போதைய ஜிம்பாவே பணவீக்கத்தில் மூன்று துண்டு ரொட்டிகளை வாங்க மட்டுமே பயன்படுகிறது ! நினைத்துப் பார்த்தாலே உயிர் உலுங்குகிறதல்லவா ?

குண்டுகள் வெடித்து, போர்கள் நிகழ்ந்து உலகின் பல இடங்களிலும் மடியும் மக்களை விட அதிக அளவில் ஜிம்பாவே நாட்டில் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர் என்பது தான் குருதி வடியும் நிஜம். ஆனால் அவர்கள் ஒட்டிய வயிறுகளோடும், நோயின் வலியோடும் குரலெழுப்பத் திராணியற்று மடிகின்றனர். வெடிகுண்டுகளைப் போல ஒலியெழுப்பி உலக நாடுகளின் கவனத்தை இழுக்க இந்த அமைதி மரணங்களால் முடியாததால் இவை கவனிப்பாரற்றுப் புதைபடுகின்றன.

இன்னொன்று எண்ணை வளங்கள் ஏதும் இல்லாத இந்த நாட்டை மேல் நாடுகள் எட்டிப் பார்க்க வேண்டிய தேவையும் இல்லையே ! சுயநலப் பல்லக்குகளில் மட்டுமே பயணிப்பவர்களுக்கு ஜிம்பாவே இது வரை எந்த நாடுமே சந்தித்திராத சிக்கலைச் சந்தித்திருக்கிறது என்பதை யோசிக்கவே நேரமில்லை.

இத்தனைக்கும் ஜிம்பாவே 1980 களில் ஆப்பிரிக்க நாடுகளிலேயே வலுவான நாடாய் இருந்தது. அப்போது ஒரு ஜிம்பாவே டாலரின் மதிப்பு அமெரிக்க டாலரின் மதிப்பை விட ஒன்றரை மடங்கு அதிகம் !!! இப்போது அமெரிக்க டாலரை வாங்குமளவுக்கு மக்களுக்கு வருமானம் இல்லை. புழக்கத்தில் பத்து இலட்சம், ஒரு கோடி, ஐந்து கோடி என நீண்டு ஐம்பது கோடி ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன.

பணத்தின் பின்னால் வால் போல நீண்டு கொண்டே இருந்த பூச்சியங்களால் எந்த பெரிய மாற்றமும் நேரவில்லை மாறாக சிக்கல்கள் அதிகரித்தன. கணினிகள் அத்தனை பூச்சியங்களை வைத்து கணக்கு செய்ய முடியாமல் திணறின. ஏடிஎம் இயந்திரங்கள் செய்வதறியாமல் செயலிழந்தன. பணம் அச்சிடும் காகிதம் அச்சிடப்படும் பணத்தை விட மதிப்பு மிக்கதாய் மாறியதால் நாடுகள் காகிதம் அளிக்கவும் யோசித்தன.

அரசு யோசித்தது நோட்டுகளிலுள்ள பூச்சியங்களில் பத்து பூச்சியங்களை வெட்டுவதாக அறிவித்தது. அதாவது 10,00,00,00,000.00 நோட்டின் மதிப்பு இனிமேல் 1.00 !!! ஆகஸ்டில் நடைமுறைக்கு வந்த அதுவும் பயனேதும் அளிக்கவில்லை. பணவீக்கம் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜிம்பாவே டாலர் கொடுத்தால் ஒன்றரை அமெரிக்க டாலர் கிடைக்கும். இப்போதோ சுமார் நாற்பத்தையாயிரம் ஜிம்பாவே டாலர்கள் தேவைப்படுகின்றன. கவனிக்கவும், உண்மையில் ஒரு டாலரின் மதிப்பு நாற்பத்தையாயிரம் ஜிம்பாவே டாலர்கள் கூடவே பத்து பூச்சியங்கள் !!! வாசிக்க முடிகிறதா ?

உண்ணவே உணவில்லாத நிலையில் மக்கள் இருப்பதால் நோய்கள் வந்து விட்டால் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நிலையில் வெகு வெகு சொற்ப மக்களே அங்கிருக்கின்றனர்.

பொருளாதாரத்தின் படு பயங்கர வீழ்ச்சி ஜிம்பாவே அரசை மிகப்பெரிய கடனாளியாகவும் உருமாற்றியிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தையும் மொகாபேயின் அரசு அடிப்படைத் தேவைகளுக்காய் செலவிடாமல் ஊதாரித்தனமாக ஆயுதங்கள், இராணுவ பலம் என செலவிட்டு வறுமை வயிறுகளை சுடுகாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்க அரசு கடந்த வாரம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன்வந்திருக்கிறது. எனினும் இது யானைப்பசிக்கு இடப்பட்ட சோளப்பொரி என்பதில் ஐயமில்லை.

இத்தனைக்கும் ஜிம்பாவே உலகிலேயே செல்வச் செழிப்பு பெற்ற நாடு என்று சொல்லலாம். இரும்பு, நிக்கல், பிளாட்டினம், வைரம், நிலக்கரி, தங்கம் என நாட்டில் உள்ள செல்வம் ஏராளம் ஏராளம். மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் தங்கம் மட்டுமே போதும் ஜிம்பாவே நாட்டை உலகத்தின் உச்சத்தில் அமர்த்த. தங்கச் சுரங்கங்கள் நன்றாகச் செயல்பட்டால் குறைந்த பட்சம் முப்பதாயிரம் கிலோ தங்கத்தை ஒவ்வோர் ஆண்டும் பெற முடியுமாம். என்ன செய்ய குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் கிடக்கின்றன வெளியே எடுக்க முடியாத வளங்கள்.

மொகாபேயின் தவறான கொள்கைகளே அனைத்துக்கும் காரணம் என விமர்சனங்கள் அழுகையில் மொகாபேயோ மழை இல்லை என்றும், சூழல் சரியில்லை, உலகம் கவனிக்கவில்லை என்றும் விரல்களை வேறு வேறு திசைகளில் காட்டிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு உணவை ஒரு அரசியல் ஆயுதமாக்கி அதன் இயக்கத்தையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டு மொத்த அதிகாரங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் அரசு ஆபத்தானது என்றும் தேவையான அதிகாரங்களும் தேவைப்படும் இடங்களில் தனியார் உதவியையும் அரசு நாடவேண்டும் என்றும் வலுவான கருத்துகள் நிலவுகின்றன. மிகப்பெரிய அரசியல் மறுமலர்ச்சியும், தெளிவான தேர்தல் அமைப்புகளும், தெளிவான ஜனநாயகப் பார்வையும் ஜிம்பாவே பீனிக்ஸ் பறவையாய் கிளர்ந்தெழவேண்டுமெனில் தேவை என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாகும்.

குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்கப்படுத்துவதும், ஜிம்பாவே நாட்டு வளங்களை கூர்தீட்டி தன்னிறைவை நோக்கிய பயணத்தை மீண்டும் துவங்குவது அவசியம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். அதற்கு அடிகோலும் வகையில் ஓர் அரசியல் அதிசயமும் கடந்த வாரம் ஜிம்பாவே நாட்டில் உருவாகியுள்ளது.

அதாவது, தற்போது எதிர்கட்சியாக செயல்படும் கட்சியுடன் கைகோத்து அரசியல் அதிகாரப் பகிர்வுகளை நிகழ்த்தும் ஒரு அரசியல் வெள்ளோட்டம் ஜிம்பாவே நாட்டில் துவங்கியிருக்கிறது. இதன்படி அரசு அதிகாரங்களில் மொகாபேயுடன் எதிர்கட்சித் தலைவர் மார்கன் ஸ்வாங்கிரை என்பவரும் இணைந்து செயல்படுவார். ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஆட்சி ஒப்பந்தம் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை மறு பரிசீலனை செய்யப்படும். இந்த ஒப்பந்தம் கடந்த பதினொன்றாம் தியதி கையெழுத்தானது.

இந்த இந்த மாற்றமேனும் ஜிம்பாவே மக்களின் துயரைத் துடைக்குமா என்பது சுயநலமற்ற ஆட்சிப் பகிர்தல் மற்றும் புரிதலில் இருக்கிறது.