கி.மு : முதல் பாவம்

adam_eve.jpg

( கி. மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து) 

கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன.

.தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன் தோட்டத்தில் தெய்வங்களைப் போல வாழ்ந்து வந்தார்கள். ஆதாம் தன்னுடைய மனைவியை ஏவாள் என்று பெயரிட்டழைத்தான். அவன் தான் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயரிட்டவன்.

தாலாட்டும் காற்றும், இனிமையான காட்சிகளும் நிறைந்திருந்த ஏதேன் தோட்டத்தில் அவர்களுக்கு எந்தக் குறையுமே இல்லை. கடவுள் ஏதேன் தோட்டத்தில் ஆதாமை தங்கவைத்தபோது ஒரே ஒரு கட்டளை மட்டும் இட்டிருந்தார். ‘ இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளும் உனக்கே.

.ஆனால் தோட்டத்தின் நடுவே நிற்கும் மரத்தின் கனியை மட்டும் நீ உண்ணக்கூடாது’ என்பதே அந்தக் கட்டளை. ஆதாம் அந்தக் கட்டளையை தன் துணைவிக்கும் சொன்னான். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்குள் ஓடியாடி பழங்களை உண்டு மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்த விலக்கப் பட்ட மரத்தின் கனியை மட்டும் உண்ணவே இல்லை.

ஒவ்வொரு முறை ஏவாள் அந்த மரத்தைக் கடக்கும்போதும் அவளுடைய உள்ளத்தில் ஓர் சலனம் உருவாகும். ‘நான் ஏன் அந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது ? அப்படி அந்தக் கனிக்கு என்னதான் தனிச்சிறப்பு ?’. நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஏவாளின் மனதில் விலக்கப் பட்ட கனியின் மீதான விருப்பமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் ஆதாமும் ஏவாளும் வழக்கம் போல ஏதேன் தோட்டத்தின் எழிலை ரசித்தவாறே நடந்துகொண்டிருந்தனர். நடந்து நடந்து அந்த விலக்கப் பட்ட மரத்தின் அருகே வந்தார்கள். அந்த மரத்தில் சாத்தான் பாம்பின் வடிவத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தான்.

.சாத்தான் ஏவாளின் மனதை வாசித்திருந்தான். ஏவாள் அந்த விலக்கப்பட்ட கனியின் மீது ஆசை வைத்திருப்பதை சாத்தான் அறிந்திருந்தான். சலனப் பட்ட மனசுக்குள் தானே எல்லாவிதமான சாத்தான்களும் குடியேறுகின்றன. ஒருவேளை ஆதாமிடம் தன்னுடைய சூழ்ச்சி பலிக்காது என்று சாத்தான் கருதியிருக்கக் கூடும்.

பாம்பு வடிவிலிருந்த அந்த சாத்தான் ஏவாளுடன் தன் சூழ்ச்சிப் பேச்சைத் துவங்கினான்.
‘என்ன ஏவாள்.. சவுக்கியமா ? ஏதேன் தோட்டத்தில் உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவா ?’

‘ஏதேன் கடவுள் அமைத்த தோட்டமாம். அதனால் இங்கே எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை’ ஏவாள் சொன்னாள்.

‘இல்லை ஏவாள், உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறது. ஏதோ ஒரு குறையின் ரேகை உன் முகத்தில் தெரிகிறது.  அது என்னவென்று சொல். நான் தீர்த்து வைக்கிறேன். நான் சகல சக்தியும் படைத்தவன். கடவுளால் செய்ய முடிகின்ற காரியங்களை அனைத்தையும் என்னாலும் செய்ய முடியும்’ சாத்தான்  சொன்னான்.

‘ஏக்கமா ? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே…’ ஏவாள் மறுத்தாள்.

‘சரி… சரி… இந்தா… ஒரு பழம் சாப்பிடு… ‘ சாத்தான் விலக்கப்பட்டக் கனியைப் பறித்து ஏவாளிடம் நீட்டினார்.

‘ஐயோ.. வேண்டாம். இந்த மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ ஏவாள் சொன்னாள்.

‘சாப்பிடக் கூடாது என்று சொன்னாரா ? இந்தப் பழத்தையா ? வேறென்ன சொன்னார் ?’ சாத்தான் அதிசயப்படுவது போல நடித்தான்.

‘அந்த மரத்தின் கனி அழிவுக்கானதாம். அதை உண்டால் நாங்கள் அழிந்து போவோமாம்’

சாத்தான் சத்தமாகச் சிரித்தான். ‘ அறிவிலியாய் இருக்கிறாயே. அந்த மரத்தின் கனியைத் தின்றால் நீ சாகமாட்டாய். அதை உண்டால் உன்னுடைய அறிவுக் கண்கள் திறந்து கொள்ளும். அந்த மரத்தின் கனியைத் தின்பவர்கள் எல்லோரும் கடவுளைப் போல ஆவார்கள்’ சாத்தான் சொன்னான்

‘உண்மையாகவா ?’ ஏவாள் உற்சாகமாய்க் கேட்டாள்.

‘ஆம்… கடவுளுக்குப் பொறாமை நீங்கள் கடவுளைப் போல ஆகிவிட்டால் கடவுளுடைய பணிகளையெல்லாம் நீங்களும் செய்யமுடியும். பின்பு கடவுளுக்கு மரியாதை இருக்காது. உங்களுக்கு மிகப் பெரிய வல்லமை கிடைக்கும்’ சாத்தான் ஆசை வார்த்தை கூறினான்.

‘அப்படியா…. ? உண்ணவேண்டும் என்னும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் உண்டால் செத்துவிடுவோமோ என்னும் பயமும் இருக்கிறது’ ஏவாள் இழுத்தாள்.

‘இன்னும் என்னுடைய வார்த்தைகளை நீ நம்பவில்லையா… இதோ பார். இந்தக் கனியை நான் கைகளில் வைத்திருக்கிறேன், அது என்னை ஒன்றும் செய்யவில்லையே ? நீயும் தொட்டுப் பார். ஒன்றும் சம்பவிக்காது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். வா….  நான் கைகளில் வைத்திருக்கும் கனியைத் தொட்டுப் பார்…’ சாத்தான் பழத்தை நீட்டினான். ஏவாள் தயக்கத்தோடு தன்னுடைய விரல் நுனியினால் தொட்டாள். எதுவும் நேரவில்லை.

‘பார்த்தாயா ? நீ தொட்டபோது ஒன்றுமே நடக்கவில்லையே ! உண்டாலும் ஒன்றும் நேர்ந்து விடாது’ சாத்தான் சொல்லிக் கொண்டே பழத்தை கைகளில் வைத்துத் தடவினான். ஏவாளின் மனசுக்குள் அதை உண்ணவேண்டும் என்னும் ஆசை கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

‘தொட்டால் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உண்டால் ஏதேனும் நேரிடுமோ ?’ ஏவாள் கேட்டாள்.

‘இத்தனை சொன்னபின்னும் உனக்குச் சந்தேகமா ? இதோ பார்.. நான் இந்தப் பழத்தை உண்ணப்போகிறேன். இந்தச் சுவையை அனுபவிக்கப் போகிறேன். நீ பார்த்துக் கொண்டே இரு நான் சாகிறேனா ? இல்லையா ? என்பதை. நான் செத்துப் போனால் நீ இதை உண்ணவேண்டாம்.

.சாகவில்லையென்றால் உன்னுடைய சந்தேகம் போய்விடும் தானே ? ‘ சாத்தான் விஷமமாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே அந்த கனியை உண்ணத் துவங்கினான். அவனுடைய முகம் ஒரு பேரானத்தத்தில் மூழ்கியிருப்பவனைப் போல மாறியது. அதைப் பார்க்கப் பார்க்க ஏவாளின் மனதுக்குள் தானும் அந்தக் கனியை உண்ணவேண்டும் என்னும் எண்ணம் வலுவடைந்தது.

ஏவாளின் மனதுக்குள் இருந்த எண்ணத்தை அறிந்த சாத்தான் ஒரு கனியைப் பறித்து அவளுடைய கைகளில் திணித்தான். ‘உண்ணுங்கள்.. நீங்கள் இருவரும் இதை உண்ணுங்கள். ஒன்றும் நேரிடாது. இந்தப் பழம் தான் இந்த தோட்டத்துப் பழங்களிலேயே மிகவும் சுவையானது. மிகவும் அழகானது. இதை மட்டும் உண்டால்  நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள். அதில் சந்தேகமேயில்லை’ சாத்தான் சொன்னான்

ஏவாள் அந்தக் கனியை சிறிது நேரம் கைகளில் வைத்திருந்தாள். பின் மெல்லக் கடித்தாள். ஒன்றும் நிகழவில்லை. ஏவாளுக்குத் தைரியம் வந்தது. அந்தப் பழத்தை முழுவதும் உண்டாள். அவளுக்கு அந்த சுவை மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய மனசுக்குள் பல நாட்களாக இருந்த ஆசை தணியத் துவங்கியது. அவள் ஆதாமைப் பார்த்தாள். ஆதாம் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

.ஏவாள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது அவளிடம் ‘வேண்டாம். கடவுளின் கட்டளையை மீறாதே’ என்று அவன் எச்சரிக்கவில்லை. ஏனென்றால் ஓரு குடும்பத் தலைவனின் கடமைகள் என்னென்ன என்பதை ஆதாம் அறிந்திருக்கவில்லை. பழத்தை உண்ணாதே என்று சொன்ன கடவுளும், ‘ஒரு நாள் சாத்தான் பாம்பு வடிவில் வந்து உன்னைச் சோதிப்பான். பழத்தை உண் என்பான். ஆனால் அந்த சோதனையில் விழுந்து விடாதே’ என்றும் சொல்லவில்லை. எனவே அந்த சூழ்நிலையில் ஆதாமின் கடமை என்ன என்பது ஆதாமுக்கே விளங்கவில்லை.

பழத்தை உண்ட ஏவாள் அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். ‘கவலைப்படாமல் உண்ணுங்கள். நான் உண்டேன் எனக்கு ஒன்றும் நேரவில்லை. இதுதான் நான் இதுவரை உண்ட கனிகளிலேயே சுவையானது. இனிமேல் இதை நான் தினமும் உண்ணலாம்’ ஏவாள் சொன்னாள். ஆதாம் ஏவாளின் பேச்சைக் கேட்டான். கடவுளின் கட்டளையை மீறினான். கனியை உண்டான்.

இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.

.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் மழலைத் தன்மையை அழித்துவிட்டது.

மெலிதான காற்று ஏதேன் தோட்டத்தில் வீசிக் கொண்டிருந்தது. கடவுள் தான் படைத்த மனிதனையும் அவனுடைய துணையையும் பார்ப்பதற்காகத் தோட்டத்துக்கு வந்தார். கடவுள் வரும் ஓசையைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோ மே என்னும் எண்ணம் அப்போது தான் அவர்களுக்குள் உறுத்தியது..

“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் தோட்டத்தில் எதிரொலித்தது.

பதில் இல்லை…

“ஆதாமே… நீ எங்கே இருக்கிறாய் ?” கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது.

‘கடவுளே நான் இங்கே புதரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறேன்.’ ஆதாம் பதில் சொன்னான்.

‘ஒளிந்து கொண்டாயா ? ஏன் ? ‘ 

‘ உம்முடைய குரலைக் கேட்டதும் எனக்குள் பயம் வந்துவிட்டது கடவுளே. அதனால் தான் நான் ஒளிந்து கொண்டேன். இதோ ஏவாளும் இங்கே ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாள்’ ஆதாம் சொன்னான்.

‘ நேற்றுவரை என்னிடம் அச்சமில்லாமல் பழகினாயே ? இன்று எப்படி உன்னிடம் புதிதாய் ஒரு அச்சம் வந்திருக்கிறது ? வெளியே வா… என்னிடம் நீ உரிமையோடும், அன்போடும் பழகவேண்டும். உனக்கு அச்சம் ஏற்படத் தேவையில்லை. வா வெளியே’ கடவுள் அழைத்தார்.

” இல்லை கடவுளே. என்னால் இப்போது வெளியே வர முடியாது ‘

‘ஏன் ?’

‘ஏனென்றால் நான் நிர்வாணமாய் இருக்கிறேன் ” ஆதாம் சொன்னான்.

நான் நிர்வாணமாய் இருக்கிறேன் என்று ஆதாம் சொன்னதும் கடவுள் கோபமடைந்தார். ‘நிர்வாணமாய் இருக்கிறாயா ? நீ நிர்வாணமாய் இருக்கிறாய் என்று யார் உனக்குச் சொன்னது ? நீ என்னுடைய கட்டளையை மீறினாயா ? நான் உண்ணக் கூடாது என்று சொல்லியிருந்த கனியை நீ உண்டாயா ? ‘ கடவுளின் குரல்
கோபத்தில் ஒலித்தது. அதுதான் கடவுள் கோபமடைந்த முதல் சம்பவம்.

“ஆண்டவரே… நான் அல்ல ஆண்டவரே. நீர் இட்ட கட்டளையை நான் மீறவில்லை. நீர் எனக்குத் துணையாக அளித்தீரே அந்தப் பெண் தான் நீர் இட்ட கட்டளையை மீறினாள். அவள் தான் எனக்கும் அந்தக் கனியைத் தந்தாள். எனவே நானல்ல கடவுளே அவள் தான் குற்றவாளி’ ஆதாம் பழியை ஏவாளின் மேல் போட்டான்.

‘ஏவாளே… நீ ஏன் அப்படிச் செய்தாய் ? ஆதாமுக்கு நான் இட்டிருந்த கட்டளை உனக்குத் தெரியாதா ?’ கடவுள் ஏவாளிடம் கேட்டார்.

‘உம் கட்டளை எனக்குத் தெரியும் கடவுளே. ஆனால் ஒரு பாம்பு தான் என்னிடம் வந்து அந்த கனியை உண்ணுமாறு கட்டாயப் படுத்தியது. அதனால் தான் நான் அதை உண்டேன். இது என் தவறில்லை கடவுளே. இது பாம்பின் தவறு தான்’ ஏவாள் சொன்னாள். செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் அந்தத் தவறுகளை அடுத்தவர் தலை மேல் சுமத்தும் பழக்கத்தை அவர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

கடவுளின் கோபம் அதிகரித்தது. என்னுடைய சொல்லை மீறி, பாம்பின் சொல்லை நான் படைத்த மனிதன் கேட்கிறானா என்னும் சினம் அவருக்குள் பொங்கி வழிந்தது. அவருடைய கோபம் முதலில் பாம்பின் மீது திரும்பியது.

‘பாம்பே… சூட்சியின் இருப்பிடமே. இனிமேல் நீ சபிக்கப் பட்ட ஜந்துவாய் இருப்பாய். வயிறால் ஊர்ந்து ஊர்ந்து தான் உன் வாழ்க்கை இருக்கும். உன் சந்ததிக்கும், பெண்ணின் சந்ததிக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவேன். உன் தலையை அவளுடைய சந்ததி மிதிக்கும், நீ அவர்களின் குதிகாலைக் கடிப்பாய்’ என்று சாபமிட்டார் கடவுள். கடவுள் இட்ட முதல் சாபம் !

பின் கடவுளின் கோபப் பார்வை ஏவாளை நோக்கித் திரும்பியது. அவர் ஏவாளை நோக்கி, ‘ நீ என்னுடைய பேச்சை மதிக்காமல் உன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாய். உன்னைப் படைத்த என்னை விட சாத்தானை நீ அதிகம் நம்பினாய். எனவே உனக்குத் தண்டனையாக உன்னுடைய பேறுகால வலிகளை அதிகப்படுத்துவேன். நீ மிகுந்த வேதனைப் பட்டுத் தான் குழந்தைகளைப் பெறுவாய். உன்னை நான் உன் துணைக்கு இணையாகப் படைத்தும் நீ அவனை தவறான திசைக்குத் திருப்பியதனால் அவனே இனிமேல் உன்னை ஆள்வான்’ என்றார்.

இறுதியில் கடவுள் ஆதாமை நோக்கி.’ மனிதனே. உன்னை நான் எத்தனை அதிகமாய் நேசித்தேன். உலகை அனைத்தையும் படைத்து அதை உன் கையில் ஒப்படைத்தேனே. தனியனால் இருப்பது நல்லதல்ல என்று உனக்குத் துணைவியையும் தந்தேனே. நீ நான் இட்ட ஒரே ஒரு கட்டளையையும் மீறி உன் துணைவியின் பேச்சைக் கேட்டாயே.

.எனவே இனிமேல் உனக்கு இந்த ஏதேன் தோட்டத்தின் சொகுசு வாழ்க்கை சொந்தமில்லை. உன் பாவத்தினால் பூமி சபிக்கப் பட்டு விட்டது. இனிமேல் நீ நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தால் தான் உனக்கு உணவு கிடைக்கும் என்னும் நிலையை உருவாக்குவேன். பாடுபடாமல் எதுவும் உனக்கு இனி தரப்படாது. உன்னை மண்ணிலிருந்து தான் உருவாக்கினேன். நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய்.’ என்றார்.

பின் கடவுள் அவர்களை ஏதேனை விட்டு துரத்தி விட்டார். அவர்கள் மீண்டும் ஏதேனுக்குள் நுழையாமலிருக்க தேவ தூதர்களையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு வாளையும் ஏதேன் தோட்டத்திற்குக் காவலாக வைத்தார்.
.

உலகம் உருவான கதை

adam.jpg

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து.

0