அறுவடைத் திருநாள்- ஒரு உலகப் பார்வை

( இந்தவார தமிழோசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

தமிழர்களின் கலாச்சார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா. தமிழகம், இலங்கை போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி தங்கள் இன, சமூக, கலாச்சார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் ஐம்பது நாடுகளில் இன்று தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

சங்ககாலமான கி.மு இருநூறுக்கும் கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடியதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் துவங்கவும் கொண்டாடப்படுகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழா தன்னகத்தே நான்கு விழாக்களைக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாளில் தான் மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

தை நீராடல் என்னும் பொங்கல் விழாவின் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி நான்காம் நூற்றாண்டு – எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களான ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்துடனான விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.

ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. பயிர்களில் ஆவிகள் இருப்பதாகவும் அவை மனம் குளிர்ந்தால் விளைச்சல் அமோகமாகவும், இல்லையேல் குறைவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதுபோல ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். அறுவடை செய்யும்போது பயிர்களிலுள்ள ஆவி கோபமடையும் என்பதும், அந்தக் கோபத்தை குறைக்க அவற்றுக்குப் படையல் செலுத்த வேண்டும் என்பதும் கூட ஆதியில் இருந்த நம்பிக்கைகளில் ஒன்று.

இதனடிப்படையில் தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும், இயற்கையைப் பராமரிக்கும் தெய்வங்களுக்கும் ஆனந்தமளிப்பதற்காக நடத்தப்பட்டன. கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.

கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோ பர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக் கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கனடாவில் அக்டோ பர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.

வியட்நாமில் – தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.

இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப் படுவதுண்டு.

ரோமர்கள் அக்டோ பர் நான்காம் நாள் செரிலியா என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். இது தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழா. தங்கள் தெய்வத்துக்கு புதிய காய்கற்஢கள், பழங்கள் , பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை கொண்டாடுகிறார்கள். வினாலியா என்றொரு விழாவையும் இவர்கள் கொண்டாடுகிறார்கள். தங்கள் திராட்சைத் தோட்டங்களில் விளையும் முதல் திராட்சைக் குலையை இறைவனுக்குப் படைத்து அந்த விளைச்சல் காலத்தை ஆசீர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறார்கள்.

எகிப்தியர்கள் விளைச்சல் விழாவில் காய்கறிகள் மற்றும் வளம் தரும் கடவுளான மின் வழிபாடு பெறுகிறார். இசை, நடனம் என கோலாகலப் படுகிறது எகிப்தியர்களின் இந்த அறுவடை விழா.

ஆஸ்திரேலியாவிலும் ஏப்பிரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் – ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோ பர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோ பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்கவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும், இறைவனோடும் சக மனிதனோடும் மனிதன் கொள்கின்ற உறவையும் வெளிப்படுத்துபவையாக திகழ்கின்றன. எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


 

6 comments on “அறுவடைத் திருநாள்- ஒரு உலகப் பார்வை

  1. Pongalandru “Vadai” saapiduvom aanal Pongale oru “Aru Vadai” vizha endru idhai padippavargalukku unara vaithamykku nandri…

    Like

  2. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

    Unmaiyai unarthum varigal avai Xavi, vaazzthukkal. Nalla pathivu, kojam therindhu konden.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.