ESCAP : எல்லாவற்றுக்கும் காரணம் “விவசாயப் புறக்கணிப்பே”

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு விதமான பொருளாதாரக் கொள்கைகள், தாராளமயகாக்கம் என அனைத்து முயற்சிகளும் ஆசிய-பசிபிக் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை வியக்க வைக்கும் எண்ணிக்கையான சுமார் 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளது.

உலக அரங்கிலுள்ள பல தொழிற்சாலைகள், கணினி நிறுவனங்கள், பன்னாட்டுக் கேளிக்கை நிறுவனங்கள் தங்கள் இருப்பை இந்த நாடுகளில் இறுக்கமாக நிறுவியுள்ளன. இது இந்தப் பகுதி நாடுகளின் வருமானத்தை அதிகரித்திருக்கிறது.

ஆனால் இத்தகைய வளர்ச்சி ஒட்டு மொத்த சமூகத்தின் நிலைமையை கவலைக்கிடமான சூழலுக்குத் தள்ளி விட்டது என்பது தான் வேதனை.

உலகின் ஏழைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஆசியா-பசிபிக் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் அறுபத்தைந்து கோடி மக்கள் வறுமையின் கோரமான பள்ளத்தாக்குக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இங்கே வசிக்கும் மக்களில் சுமார் பத்து கோடி பேர் சரியான உடல் வளர்ச்சியில்லாமல் இருக்கின்றார்கள். காரணம் போதுமான ஊட்டச்சத்தும், உணவும் வாய்க்கவில்லை.

கண்ணுக்கு முன்னாலேயே குழந்தைகளின் மரணத்தைக் கண்டு துடிக்கும் வாழ்க்கை இந்தப் பகுதியிலுள்ள பல இலட்சம் குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட நாற்பது இலட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் மரித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் வறுமை, பசி, வசதியின்மை.

சுமார் அறுபது கோடி மக்கள் சரியான தண்ணீர் வசதி இல்லாமல், குடிக்கக் கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சுகாதாரமான வாழ்க்கை என்பது இங்கே கால்வாசி மக்களுக்குக் கூட இல்லை.

இந்தியாவில் மட்டுமே சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் 2001க்குப் பிறகு வறுமையின் காரணமாக தற்கொலை செய்திருப்பதாக சீனப் பத்திரிகை அதிர்ச்சித் தகவல் தருகிறது.

ஒரு பக்கம் பிரமிக்க வைக்கும் புள்ளி விவரங்கள் நாடுகளின் வளர்ச்சியை வண்ண விளக்குகளிலும், பங்குச் சந்தைகளிலும், மேனாட்டு முதலீடுகளிலும், கண்ணாடிக் கட்டிடங்களிலும், நிறுவனங்களிலும் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அதன் நேர் எதிர் சூழல் நிலவுவதன் காரணம் என்ன ?

விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம்.

இதை நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காரணம் எத்தனையோ முறை சமூக ஆர்வலர்களும், மனித நேயம் மிக்க மனிதர்களும், தலைவர்களும் சொல்லிய செய்தி தான் இது.

இப்போது ESCAP : ஆசிய – பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் சமூக பொருளாதாரக் குழு (United Nations Economic and Social Commission for Asia and the Pacific )  இதை தனது விரிவான ஒரு ஆய்வு மூலம் தெரிவித்திருக்கிறது.

விவசாயிகளின் நலன்களில் அரசுகள் காட்டிய மெத்தனமும், விவசாய நிலங்களைப் பாதுகாப்பதில் அரசுகள் தராத முக்கியத்துவமுமே இன்றைய வறுமைக்குக் காரணம் என மிகவும் தெளிவான ஒரு பதிலை இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் அறுபது விழுக்காடு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிக்கும் சூழலில் இவர்களுக்கு இத்தனை காலமாக அரசுகள் தரத் தவறிய முதன்மை அனைத்து மக்களையும் ஒட்டு மொத்தமாகப் பாதித்திருக்கிறது என்பதே இதன் மூலம் தெளிவாகும் உண்மையாகும்.

விளை நிலங்கள் பல்வேறு விவசாயம் சாராத திட்டங்களுக்காக அழிக்கப்படுவதும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கைக்காக விவசாயத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதும், விவசாயிகள் விவசாயத்தினால் தன்னிறைவை எட்ட முடியாத அவலம் உருவாகியிருப்பதும் இன்றைய நிலைமைக்கு முக்கியமான சில காரணங்களாகும்.

இதே போன்ற எச்சரிக்கையை Official development assistance (ODA) ஏற்கனவே பலமுறை அளித்திருந்தும் அரசுகள் தங்கள் முதன்மைக் கவனத்தை விவசாயிகள் மீது வைப்பதை நிராகரித்தே வந்துள்ளன.

இந்த நிலமை மிச்சமிருக்கும் விவசாய வளர்ச்சியை அழிவுக்குள் தள்ளியிருப்பதுடன், புதிதாக மக்கள் விவசாய வாழ்க்கைக்குள் நுழைவதையும் நிறுத்தியிருக்கிறது. வாழ்தலுக்கான நிச்சயமின்மை விவசாயிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கிறது, வறுமை விலகுகிறது என்பதற்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. குறிப்பாக சீனாவில் 1980 களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போது வறுமை நிலவரம் பாதியாகக் குறைந்திருக்கிறது.

தொடர்ந்து விவசாயிகள் அலட்சியப்படுத்தப்பட்டால் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறைவான உற்பத்தி, விவசாயத்துக்குத் தேவையான் பொருட்களின் விலையேற்றம், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, சந்தை கொள்முதல் விலை குறைவு, உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய வழிகள் இல்லாமை, காலநிலை மாற்றங்கள் தரும் அழிவுகளுக்கான போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் இன்று தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கின்றனர்.

தாய்லாந்தில் உள்ளது போல விவசாயிகளை அரசு முதன்மையாகக் கவனித்துக் கொண்டால் இந்தியா, சீனா, பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற ஆசியா-பசிபிக் பகுதிகளில் வாழும் சுமார் 22 கோடி ஏழைகள் வறுமையை விட்டு மீண்டு வருவார்கள் என்கிறது இந்த ஆய்வை நடத்திய ESCAP.

விவசாயிகளைத் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த வறுமை எண்ணிக்கையும், வறுமையின் ஆழமும் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறையப் போவதில்லை எனவும் அது அறுதியிட்டுக் கூறுகிறது.

விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும் போதும், விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப்படும் போதும், ஒட்டு மொத்த வறுமை சமூகமும் நிமிர முடியும் எனவும், இன்றைய சமநிலையற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சற்று சமநிலைப்படும் எனவும் இந்த நிறுவனம் கூறுகிறது.

அரசுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீதான பார்வையை விவசாயிகளின் மேல் திருப்பும் காலம் வந்துவிட்டது. விழித்துக் கொள்ளாவிடில் உலகளாவிய அவலத்தை சந்திக்கும் காலம் விரைவில் வரும்.

விவசாய வளங்களை மேம்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், விவசாயிகளுக்கு முதன்மை அளிப்பதும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, சந்தை போன்ற வசதிகள் செய்து தருவதும், அவர்களுக்கு இழப்பீடு, காப்பீடு என திட்டங்கள் வகுப்பதும் வளமான எதிர்காலத்தின் அவசியமாகும்.

மனித வளம் என்பதும், பொருளாதார முன்னேற்றம் என்பதும் கணினியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் நிர்ணயம் செய்யப்படுவதல்ல. அவையெல்லாம் வெறும் மாயைகளே. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலே ஆட்டம் காணும் நிலமை தான் அவற்றுக்கு. ஆனால் விவசாயம் அப்படியல்ல. ஒட்டுமொத்த பசுமைப் புரட்சி நிலையான வளத்தை நல்கக் கூடியது.

மேல்நாட்டு பொருளாதார சட்ட மாறுதல்களால் அழிக்கமுடியாத தன்னிறைவை விவசாயம் தரும் என்பதை மீண்டும் ஒருமுறை அரசுகள் உணரவேண்டும்.

இனியாகிலும் விவசாயிகளுக்கான திட்டங்கள் மரணப் படுக்கையில் இருப்பவன் மீதான இரக்கமாக இருக்காமல் மேல் நாட்டு முதலீடுகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்துடன் அணுகப்படவேண்டும். இல்லையேல் உலகம் கண்ணாடிக் கல்லறையாய் மாறிப்போகும் என்பதில் ஐயமில்லை.

2 comments on “ESCAP : எல்லாவற்றுக்கும் காரணம் “விவசாயப் புறக்கணிப்பே”

  1. ##என்னுடைய விருப்பம் நீங்கள் தொடர்ந்து இது போன்ற கட்டுரையை எழுதவேண்டும்.##

    இந்தக் கட்டுரைக்குக் கிடைத்திருக்கும் “ஒரே” பின்னூட்டம் உங்களுடையது என்பதிலேயே அது புலனாகிறது. நன்றி.. தொடர்வோம்.

    Like

  2. இது போன்று தொடர்ந்து கட்டுரையை எழுதிக் கொண்டு இருந்தால் இந்த முதலாளிதுவ சமுதாயம் உங்களை கமாரேட் ஆதரவாளர் என்று முத்திரை குத்திவிடும் ஜாக்கிரதை.
    ##என்னுடைய விருப்பம் நீங்கள் தொடர்ந்து இது போன்ற கட்டுரையை எழுதவேண்டும்.##

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.