காலமாற்றமும், குழந்தையின்மையும்.

( இந்த மாத பெண்ணே நீ இதழில் வெளியானது )

வாழ்வின் ஆனந்தம் என்பது மழலைகளின் சிரிப்பிலும், கூட்டுக் குடும்ப உணர்விலும் எனும் நிலையிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் கேளிக்கைகளும், பொருளீட்டுதலும், மனம் போன போக்கில் வாழ்தலும் எனும் நிலை உருவாகிவிட்டது.

கணினித் துறையின் மறுமலர்ச்சி இளைஞர்களையும் இளம் பெண்களையும் குடும்பம் எனும் ஆனந்தமான சூழலை விட்டு தூரமாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட மனிதன், இப்போது குடும்பத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டான்.

எனவே தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மென்பொறியாளர் தம்பதியினரிடையே மனக்கசப்பும், மணமுறிவும் அதிகரித்திருக்கிறது. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவெனில் கூடி வாழும் தம்பதியினருக்கும் கொஞ்சி மகிழ குழந்தையில்லை எனும் இன்னலும் உருவாகியிருக்கிறது.

திருமணமான தம்பதியினரில் ஐந்து பேருக்கு ஒருவருக்கு கருத்தரிப்பதில் தாமதமும், சிக்கலும் நிலவுகிறது. இதன் முதல் காரணம் மன அழுத்தம், இரண்டாவது காரணம் அலுவலகத்துக்கும், பணத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை. இப்போது இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்களின் வயது !

பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருப்பது இப்போது நகைச்சுவையாகி விட்டது. திருமணத்துக்கான வயது பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுமார் முப்பது வயதை நெருங்கும் நிலையில் பெண்களும், முப்பதைத் தாண்டிய பிறகே ஆண்களும் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

இப்படி இளைஞர்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பின்னர் குழந்தைப் பிறப்பைச் சிலகாலம் தள்ளிப் போடுவதே குழந்தையின்மைக்கும், குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவுக்கும் முதன்மையான காரணமாகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமான அளவுக்குக் குறைகின்றன எனவும்,  கருவுறும் பெண்களுக்குக் கருச்சிதைவு நேர்வதற்கும் ஆண்களின் வயது காரணமாகி விடுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி அதிர்ச்சித் தகவலை அறிவித்திருக்கிறது.
சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டு முப்பதுகளின் கடைசியில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் உட்பட பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.  நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிக்கலின்றி குழந்தை பிறக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறதாம்.

பெண்களின் வயது மட்டுமே குழந்தைப் பிறப்புக்குத் தேவை, ஆண்களின் வயது ஒரு பொருட்டல்ல, 90 வயதிலும் ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்றிருந்த ஆண்களின் மீசை முறுக்கலுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

கூடவே குடும்ப உறவுகளைக் குறித்த ஆழமான உணர்வு இல்லாமல், மேனாட்டுக் கலாச்சாரத்தின் வால்பிடித்து, கேளிக்கைகளுக்கும், பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அலையும் இளம் வயதினருக்கு இந்த ஆராய்ச்சி ஓர் எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.

4 comments on “காலமாற்றமும், குழந்தையின்மையும்.

  1. //ஆண்கள் எத்தனை வயதில் தான் திருமணம் செய்வது… அதையும் சொல்லலாமே….

    //

    உன் வயசுல !

    Like

  2. பெண்களின் தற்கால வாழ்க்கைமுறைகளால் பல உடலியல் கோளாறுகள் அவர்களுக்கும் ஏற்படுகின்றது.
    ஃபைப்ராய்டு பிரச்சனை, பெரும்பாலான பெண்களுக்கு இருக்கின்றது. இதுவும் பெண்கள் கருவுறுவதை தடை செய்யும் ஒரு காரணியாகும். ஃபைப்ராய்டு பிரச்சனை வர காராணமாக சொல்லப்படுவது குறைந்தவயதிலேயே பூப்படையும் பெண்கள் நீண்ட நாட்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால் அதிக அளவிலான மாதவிடாய்களை சந்திப்பதும் ஒரு காரணம் என்பது.

    30 வயதுக்கு மேல் ஆண்களுக்கு செயல்திறன்மிக்க உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும் என்பதும், இருக்கும் உயிரணுக்களின் வடிவம், செயல்திறன் குறைபாடுகள் கொண்டிருக்கும் என்பதும் முக்கியமான பிரச்சனைகள்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.