( World Breastfeeding Week Special )
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.
அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.
தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.
வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.
வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.
SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.
குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.
தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.
முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்
பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..
எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.
உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.
ஃ
இன்றைய இளம் தாய்மார்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு.தங்கள் இளமையைக் கட்டிக்காக்க புட்டிப்பால்தானே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்.தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தாய்ப்பாசத்தாலும் வித்தியாசமனவர்கள்.
குழந்தைகளின் நலனை விட அழகு என்ன ???
LikeLike
உண்மை… ! ஏதோ நம்மால முடிஞ்சது ஒரு கட்டுரை. புரியவேண்டியவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே.
LikeLike
azhagai virupum pengaluku idhu oru saravedi pengal thirunthadum
LikeLike
very nice thaipalukku ivallo magathuvam iruka ,vow!!!!!. I have seen a photo of philiphino mothers feeding their childrens of 5 to 6 yrs of age. only in india, the women dislike continuing feeding of milk to their child very earlier. Thaimaikku oru kodi vanakkangal.
LikeLike
வருகைக்கு நன்றி தேவி பாலன் & மௌலி.
LikeLike