கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்

இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபின் வழிமரபினர் எகிப்திற்குக் குடியேறினார்கள். அங்கு வாழ்ந்து வந்த அவர்கள் எகிப்து அரசர்களினால் அடிமைகளாக்கப் பட்டார்கள். மோசே என்பவரால் அவர்கள் எகிப்தியரின் நானூறு ஆண்டைய அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு, கடவுள் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த கானான் நாட்டை நோக்கி பயணித்தார்கள்.

வழியில் சீனாய் மலையிலிருந்து கடவுளின் பத்துக்கட்டளைகளையும், மற்றும் பல்வேறு ஒழுக்கம் சார்ந்த கட்டளைகளையும் பெற்றபின் மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் கானானை அடைய நாற்பது ஆண்டுகள் ஆயின. அதுவரைக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான, சோகமான பயண அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டை மோசே ஒரு பேழையில் வைத்து மூடினார். அது உடன்படிக்கைப் பேழை என்று அழைக்கப்பட்டது. அந்தப் பேழை இருக்குமிடமெல்லாம் கடவுளின் பிரசன்னம் அவர்களோடு இருந்தது. அவர்கள் போகும் வழியில் அவர்கள் மேலே ஒரு பெரிய நிழல் மேகமானது போய்க் கொண்டே இருந்தது. அந்த பெரிய நிழல்மேகம் எங்கெல்லாம் நின்றதோ, அங்கெல்லாம் இஸ்ரயேல் மக்கள் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். மேகம் மீண்டும் பயணப்படும் வரை கூடாரங்களிலேயே தங்கினர். இவ்வாறு அவர்களுடைய பயணம் நடந்து கொண்டிருந்தது.

இஸ்ரயேல் மக்கள் பன்னிரண்டு குழுக்களாக இருந்தார்கள். மோசே இஸ்ரயேல் மக்களில் போருக்குத் தகுதியுடைய மக்கள் அனைவரையும் கணக்கெடுக்க கடவுளால் அறிவுறுத்தப் பட்டார். அதன்படி மோசேவும், அவரோடிருந்த ஆரோன் என்பவரும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குலத்தில் இருபது வயதுக்கு மேற்பட்ட, போருக்குத் தகுதியான அனைவரையும் கணக்கெடுத்தார்கள். அவர்கள் மொத்தம் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐநூற்று ஐம்பது பேர் இருந்தார்கள். கானான் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நிறைய யுத்தம் தேவைப்படும் என்பதை மோசே தெரிந்திருந்தார்.

போருக்குரிய மக்களைக் கணக்கெடுத்தபின் மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒவ்வொருவரை அழைத்து அவர்களை நோக்கி,

‘நீங்கள் கானான் நாட்டுக்குச் சென்று நாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நாட்டு மக்கள் எப்படியிருக்கிறார்கள் ? வலிமையானவர்களா ? வலிமையற்றவர்களா ? அங்கு வளங்கள் அதிகம் இருக்கிறதா ? நாட்டில் ஏராளம் செல்வம் இருக்கிறதா ? மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன ? அவர்கள் கோட்டைகள் கட்டியிருக்கிறார்களா ? இவற்றையெல்லாம் அறிந்து வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அவர்களில் யோசுவா, காலேப் என்னும் இரண்டு பேரும் இருந்தார்கள். உளவாளிகள் அனைவரும் கானான் நாட்டிற்குள் சென்று நாற்பது நாட்கள் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். கானான் நாடு செல்வச் செழிப்பானதாய் இருந்தது. ஏராளமான கனி வகைகள் அங்கே விளைந்திருந்தன. அங்குள்ள திராட்சைக் குலைகள் ஒருவர் தூக்க இயலாத அளவுக்குப் பெரிதாக இருந்தன. நோட்டமிடும் பணி முடிந்ததும், உளவாளிகளில் இருவர் அங்கிருந்த ஒரு பெரிய திராட்சைக் குலையை ஒரு மரக்கொம்பில் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

யோசுவாவும், காலேப்பும் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து ‘ கடவுள் உண்மையிலேயே நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். கானான் நாடு மிகவும் வளமானதாக இருக்கிறது. அங்கு பாலும், தேனும் ஓடுகிறது. அங்கே இல்லாத செல்வங்களே இல்லை. எல்லாவிதமான பழவகைகளும், தாவரங்களும் நன்றாக செழித்து வளர்கின்றன. ஆனால் அங்கே மக்கள் நம்மை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள்’ என்றார்கள். மோசேயும், ஆரோனும் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

ஆனால் யோசேப்பையும், காலேப்பையும் தவிர மற்ற அனைவரும் இஸ்ரயேல் மக்களிடம் வந்து இல்லாததும் பொல்லாததும் சொன்னார்கள்.

‘ஐயோ.. கானான் நாடு நன்றாகவே இல்லை… ‘

‘அங்குள்ள மக்கள் இராட்சஸர்களைப் போல இருக்கிறார்கள், அவர்கள் முன்னிலையில் நாம் வெறும் வெட்டுக் கிளிகளைப்போல இருக்கிறோம்’

‘அங்கே போனால் நாம் அழிவது உறுதி. கடவுள் நம்மை கொல்வதற்காகத் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்’

அவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் மிரண்டு போன விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வர்ணனைகளில் பயந்து போன மக்கள் கூட்டம் கூட்டமாக முணுமுணுக்கத் துவங்கினார்கள்.

‘நாம் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாக இருந்தோம், ஆனாலும் இத்தனைக் கஷ்டம் இல்லை…’

‘எகிப்தில் இருந்தபோது உயிரோடு இருந்தோமே… இப்போது மடியப் போகிறோம் அல்லவா ?’

‘எல்லா விதத்திலும் எகிப்தில் அடிமைகளாய் இருப்பது இதைவிட உயர்ந்தது தான்’

‘நாம் ஒன்று செய்வோம். நாம் மோசேயை விட்டுவிட்டு வேறொரு தலைவரை ஏற்படுத்தி எகிப்திற்கே திரும்பிப் போவோம்’ மக்கள் அனைவரும் முடிவெடுத்தனர்.

இதையறிந்த யோசுவாமும், கலேபும் அதிர்ச்சியடைந்தார்கள்.
‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்து தான் பேசுகிறீர்களா ? நமது அடிமை நிலையை மாற்றிய கடவுளை நம்பாமல் மீண்டும் அடிமை நிலைக்கே போகப் போகிறீர்களா ? உங்களுக்கென்ன புத்தி பேதலித்து விட்டதா ?’

‘எங்களுக்கு உயிர்மேல் ஆசையிருக்கிறது. நாங்கள் சாகவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?’

‘கடவுளை நம்பினால் நீங்கள் அழிய மாட்டீர்கள். கடவுளை நம்பவில்லையேல் எங்கு சென்றாலும் அழிவு உங்களை விட்டு அகலாது’

‘இங்கே கானானில் இராட்சஸர்கள் எங்களைக் கொன்று விடுவார்களே. அதற்காகத் தான் கடவுள் இங்கே கூட்டி வந்தாரா ?’

‘கானானில் இராட்சசர்கள் யாரும் இல்லை. அங்கே இருப்பவர்களும் மனிதர்கள் தான். அங்கே எவ்வளவு வளம் இருக்கிறது தெரியுமா ? அங்கே சென்றால் நமக்கு எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் தாராளமாக வாழமுடியும்’

‘நீ எங்களை ஏமாற்றுகிறாய்… அங்கே போனால் நாம் அழிவது உறுதியென்று தான் உன்நனையும், காலேபையும் தவிர அனைவரும் சொல்கிறார்கள்’ மக்கள் சொன்னார்கள்.

யோசுவா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் அவரை நம்பவில்லை. மோசே இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் மிகவும் கவலைப்பட்டார்.

‘கடவுளே.. நான் இப்போது என்ன செய்வது ? இந்த மக்களை நான் எப்படிச் சமாதானப் படுத்துவது ?’ என்று கடவுளை நோக்கி முறையிட்டார்.

கடவுள் மோசேக்குப் பதிலளித்தார்.
‘மோசே… என்னுடைய வழிகளில் நடக்கும் உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்த மக்கள் என்னுடைய வழிகளை விட்டு விலகிப் போகிறார்கள். யாரும் என்னை நம்பவில்லை. எனவே நான் இந்த மக்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்’

‘ஐயோ… கடவுளே… நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோ மே. எல்லாம் வீணாய்ப் போய்விடும் அல்லவா ? எனவே தயவு செய்து யாரையும் அழிவுக்குட்படுத்த வேண்டாம்’

‘இல்லை.. இந்த மக்களைத் திருத்தவே முடியாது. இவர்கள் அழியட்டும்’ கடவுளின் கோபம் குறையவில்லை.

‘கடவுளே… நீர் இவர்களைக் கொன்றால் அந்த செய்தியை எகிப்தியர்களும் அறிவார்கள். பின் அவர்கள் உம்மைப் பழிப்பார்களே. இஸ்ரயேலரின் கடவுள் இஸ்ரயேலர்களைக் கொல்வதற்காக எகிப்திலிருந்து கூட்டிப் போனார் என்பார்களே’ மோசே சொன்னார்.

மோசேயின் தொடர் வேண்டுதல்களால் கடவுளின் கோபம் குறைந்தது.

‘சரி.. ஆனாலும் இந்த மக்கள் என்னைப் பழித்ததால் , என்னைப் பழித்த, என்னை நம்பாத யாருமே கானான் நாட்டில் நுழையமாட்டார்கள். பன்னிரு தலைவர்களில் யோசுவா, காலேப் இருவரைத் தவிர வேறு தலைவர்கள் யாரும் கானானைக் காணமாட்டார்கள்’ கடவுள் சொல்ல மோசே அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘அதுமட்டுமல்ல. இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கானான் நாட்டிற்கு இந்த மக்கள் நேரடியாகப் போகமாட்டார்கள். இன்னும் நாற்பது ஆண்டுகள் இந்தப் பாலை நிலத்தில் சுற்றித் திரிந்தபிறகு தான் இவர்களை நான் கானான் நாட்டுக்குள் அனுப்புவேன்’ கடவுள் சொன்னார். மோசே அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளின் வாக்கு பலித்தது. கானானை அடையும் முன் இஸ்ரயேலர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தார்கள்.

*

எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து

16 comments on “கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்

 1. இவ்வளவு அற்புதங்கள் நடந்தபிறகும் இறைவனைவிட்டு விலகிசென்ற இஸ்ரவேல் மக்களின் மனநிலையைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

  Like

 2. மோசே காலத்தை போல இப்போதும் கடவுள் நேரடியாக தலையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டு. ஆனால் நல்ல கனவுகள் பலவும் பலிப்பதில்லை.

  Like

 3. வருகைக்கு நன்றி ரோபின். விவிலியக் கதைகளின் மீது உங்களுக்கு அதிக பரிச்சயம் இருக்கும் என நம்புகிறேன். இந்த சிறுகதையாக்கம் குறித்த உங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வேன். இங்கே சொல்ல விரும்பவில்லையெனில் xavier . dasaian @ g m a i l .com !

  Like

 4. இந்த பதிவை பொறுத்தவரை பத்துக்கட்டளைகள் என்னென்ன என்று கொடுத்திருந்தால் பைபிள்-ஐ ஏற்கனவே படித்திராதவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருந்திருக்கும். மற்றபடி சொல்லப்பட்டவிதம் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

  Like

 5. வணக்கம்,
  ஐயா, நான் உங்கள் பக்கத்து ஊராகிய மணவாளக்குறிச்சியை சேர்ந்தவன். உங்களுடைய கிறிஸ்தவம் தொடர்புடைய படைப்புக்களை என் இணையத்தளத்தில் இணைத்து அலங்கரிக்க ஆசைப்படுகிறேன். அனுமதி தருவீர்களா?

  Like

 6. //இந்த பதிவை பொறுத்தவரை பத்துக்கட்டளைகள் என்னென்ன என்று கொடுத்திருந்தால் பைபிள்-ஐ ஏற்கனவே படித்திராதவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருந்திருக்கும். மற்றபடி சொல்லப்பட்டவிதம் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

  //

  நல்ல பார்வை. நன்றி… அதை எங்கேனும், எழுதுகிறேன்.

  Like

 7. //வணக்கம்,
  ஐயா, நான் உங்கள் பக்கத்து ஊராகிய மணவாளக்குறிச்சியை சேர்ந்தவன். உங்களுடைய கிறிஸ்தவம் தொடர்புடைய படைப்புக்களை என் இணையத்தளத்தில் இணைத்து அலங்கரிக்க ஆசைப்படுகிறேன். அனுமதி தருவீர்களா?

  //

  நிச்சயம் பயன்படுத்துங்கள். வருகைக்கு நன்றி. இந்தக் கதைகள் எனது கி.மு – விவிலியக் கதைகள் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

  Like

 8. நன்றி சகோதரரே,

  உங்களுடைய படைப்புக்களில் சிலவற்றை “திருவிவிலிய கதைகளும், கவிதைகளும்” எனும் தலைப்பில் என்னுடைய இணையத்தளத்தில் இணைத்துள்ளேன். அதற்கான இணைப்பை கீழ் காணலாம்.

  http://home.catholicweb.com/tamil/index.cfm/NewsItem?ID=245927&From=Home

  நன்றியுடன் செல்வராஜ்

  Like

 9. Pingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

 10. Pingback: கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்! | Tamilcatholic's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.