நாட்டாமைக்கும் அடி சறுக்கும்

சாயவே சாயாது என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் இன்றைக்கு ஒட்டு மொத்த உலகமே உன்னிப்பாகவும், வியப்பாகவும் பார்க்கக் கூடிய செய்தியாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிமிர்ந்து நின்ற, பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டி வந்த பிரபல நிறுவனங்கள் பல தலையில் துண்டைப் போட்டு எங்களிடம் பணமில்லை, திவாலாகிவிட்டோம் என அறிவித்து வீதிக்கு வந்திருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களை யாரேனும் வாங்கி புதிதாய் நிர்வாகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு நூறு டாலர்கள் என இருந்த லேமேன் பிரதர்ஸ் நிறுவன பங்குகள் இருபது பைசா எனுமளவுக்கு பங்குகளில் வீழ்ச்சியைச் சந்தித்து திவால் ஆகிவிட்டேன் என அறிவித்திருக்கிறது. இப்படி திவாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பத்து !

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் மட்டுமே சுமார் ஐம்பதாயிரம் வேலையில்லாப் பட்டதாரிகளால் நிரம்பி விட்டதாம். காரணம் பொருளாதார வீழ்ச்சி, பங்கு வர்த்தகத்தின் பாதாளத்தை நோக்கிய பாய்ச்சல். எப்போதும் பாரி வள்ளலாய் தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தனது இன்னொரு முகத்தை இப்போது தான் வெளிக்காட்டியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்குவதில் ஆரம்பித்தது இந்தப் பிரச்சனையின் மையம். பொதுவாக அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமெனில் உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கவேண்டும், கூடவே கிரெடிட் கிஸ்டரி (கடன் வரலாறு) எனப்படும் உங்களுடைய பணம் கட்டும் திறன், நேர்மை இவையெல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லையேல் வங்கி கடன் வழங்காது.

அப்படியெனில் புதிதாய் அமெரிக்காவில் குடியேறும் மக்கள் வீட்டுக் கடன் வாங்குவது குதிரைக் கொம்பு. கூடவே கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்களுக்கும் கடன் கிடைக்கவே கிடைக்காது. இந்த நிலையில் சரியான கடன் வரலாறு மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு உதவியது “சப்பிரைம்” எனப்படும் மூன்றாம் நிறுவனத்தின் / நபரின் பரிந்துரை வழக்கம்.

இந்த சப் பிரைம் நிறுவனம் எப்படியாவது தனது வாடிக்கையாளருக்குக் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும், கடன் வரலாறு சரியாய் அமையாதவர்களுக்கும் வீட்டுக் கடனை பரிந்துரை செய்து வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொடுத்தது.

இந்த முறையில் வங்கிக்கு அதிக வட்டி வரும் வாய்ப்பு இருப்பதனால் வங்கிகள் இதை ஊக்கப்படுத்தின. இதன் மூலம் புதிதாய் புலம் பெயர்ந்தவர்கள், பணத்தைத் திரும்பக் கட்ட வழியில்லாதவர்கள், சரியான வேலை இல்லாதவர்கள், கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்கள் என பலரும் வீடுகளை வாங்கிக் கொண்டனர்.

இந்தியாவின் வீட்டுக் கடன் வட்டி வழங்கும் முறைக்கும், அமெரிக்காவின் வீட்டுக் கடன் வழங்கும் முறைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இங்கே பெரும்பாலும் 100 விழுக்காடு பணத்தை வீட்டுக் கடனாய் பெறமுடியாது. கூடவே வட்டி விகிதமும் வங்கியை முடக்காத அளவுக்கு 13 விழுக்காடு வரை இருக்கும்.

நம்முடைய வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம் என ஏதோ ஒன்று வங்கியிடம் ஒப்படைக்கப்படும். எனவே எப்படியேனும் வீட்டுக் கடனை முடிக்க வேண்டும், பத்திரத்தை மீட்கவேண்டும் என்றெல்லாம் நமது மனம் படபடக்கும். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் வீடு வாங்கிக் கொள்ளலாம்.

வீடு வாங்கிக் குடியேறியபின் மாதந்தோறும் வாடகை கட்டுவது போல தவணையைச் செலுத்திக் கொண்டிருக்கலாம். அல்லது வெறுமனே வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம். இது ஏழு ஆண்டுகளுக்குத் தான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி இந்தக் கடனை அடைக்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில் வீடுகளை மக்கள் இஷ்டம் போல வாங்க ஆரம்பித்தனர். வங்கிகள் லாபம் பார்த்தன. காலம் மாறியது. அமெரிக்காவிலும் பொருளாதாரச் சிக்கல்கள் தலை தூக்கின. மக்கள் வேலை இழந்தனர். வேலை இழந்த மக்களால் வீட்டுக் கடனை திரும்பக் கட்ட முடியவில்லை. இங்குள்ளது போல அமெரிக்காவில் மக்களை மிரட்டியெல்லாம் பணம் வாங்க முடியாது.

இந்த முதலீட்டு நிறுவனங்களின் பெரும்பகுதிப் பணம் வீட்டுக் கடனாக மக்களிடம் சென்று சேர்ந்தது. ஆனால் வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. பணம் கட்ட முடியாத மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பவற்றை எல்லாம் அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறத் துவங்கினர். அல்லது எங்களால் முடியாது என வங்கிக்கு கடிதம் அனுப்பி விட்டு காணாமல் போயினர்.

வங்கிகள் திகைத்தன. பரவாயில்லை. இருக்கும் பணத்தைக் கட்டுங்கள், அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுங்கள் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தன. முடியவில்லை.

அரசு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துப் பார்த்தது, அதுவும் பெருமளவில் பயனளிக்கவில்லை.

சிறு சிறு மீன்களின் கூட்டம் பெரும் கப்பலையே சாய்ப்பது போல அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் முதுகெலும்பை, இந்த சப் பிரைம் கடன் வழங்குதல் உடைத்தே விட்டது.

இப்போது சில மாகாணங்களில் வீடுகள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒரு டாலர் மட்டும் தந்து விட்டு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் வீட்டின் மீதிருக்கும் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்துங்கள் என வங்கிகள் பொதுமக்களிடம் கெஞ்சத் துவங்கியுள்ளன.

நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்ததும் பங்குச் சந்தை படு வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் பலர் பங்குச் சந்தையின் படு பயங்கர வீழ்ச்சியினால் தற்கொலை செய்து கொண்டு மடிந்தும் போனார்கள்

கடந்த சூலை மாதத்தில் முதலீட்டு வங்கிகள் ஐயோ எங்களுக்கு சுமார் 435 பில்லியன் அளவுக்கு நஷ்டமாகிவிட்டதே என புலம்பி அறிக்கை சமர்ப்பித்தன. சுமார் எழுநூறு பில்லியன் எனுமளவில் பணத்தை அமெரிக்க அரசு முதலீடு செய்தால் தான் முதலீட்டு வங்கிகளின் தலை தப்பும் எனும் நிலமை.

இந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு வழி தெரியாமல் விழிக்கிறது. ஒரு நிறுவனத்தைக் காப்பாற்ற 80 பில்லியன் டாலர் பணத்தை அரசு செலவழித்தது. அதே நிலமையில் இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன. அவையெல்லாம் அரசின் பண முதலீட்டை அல்லது கடனுதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

ஆனால் மக்களின் பணத்தை எடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றுவது என்பது அமெரிக்க மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி என அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க வர்த்தகத்துக்குள் நுழைந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேட்டு வைத்து விடக் கூடும் எனும் அச்சமும் அமெரிக்க அரசிடம் நிலவுகிறது.

இந்த நெருக்கடியினால் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் இதில் சில நன்மைகளும் விளைய வாய்ப்பு உண்டு.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவை அவுட்சோர்சிங் எனப்படும் வேலையை பிற நாடுகளுக்கு மாற்றும் நிலைக்கு தள்ளும். அப்படிப்பட்ட சூழலில் இந்தியா நிறைய வேலை வாய்ப்பைப் பெறும். அதே நேரம், நிறுவனங்கள் மூடப்பட்டாலோ, தங்கள் எல்லைகளைக் குறைத்துக் கொண்டாலோ இந்திய கணினி நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

இன்றைய நிலையில் இந்தியாவின் முன்னணி கணினி நிறுவனங்கள் அனைத்துமே இந்த அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலை இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

வெறும் வீட்டுக் கடன் பிரச்சனை எனும் அளவைத் தாண்டி அமெரிக்க அரசின் பலவீனமான பல முடிவுகளும் இந்த சிக்கலுக்கு ஒரு காரணம் என்கின்றனர். குறிப்பாக ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா செலவிடும் பணம் மாதம் ஒன்றுக்கு 16 பில்லியன் டாலர்கள் ! (1 பில்லியன் = 100 கோடி )

பதினாறு பில்லியன் என்பது ஐ.நா வின் ஓராண்டு பட்ஜெட் ! இந்தப் பணத்தை போருக்கு செலவழிக்காமல் இருந்திருந்தால் அமெரிக்காவின் இன்றைய பொருளாதாரத் தேவையை எளிதில் தீர்த்திருக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. கூடவே, கச்சா எண்ணையின் விலை அதிகமாகவும் இந்த போர் ஒரு காரணியாய் இருந்திருக்கிறது.

எப்படியோ உலகுக்கெல்லாம் அறிவுரைகள் வாரி வழங்கிக் கொண்டிருந்த நாட்டாமை அமெரிக்கா இப்போது தீர்ப்புச் சொல்லத் தெரியாமல் திகைக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகியிருக்கிறது !

தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை

18 comments on “நாட்டாமைக்கும் அடி சறுக்கும்

  1. எங்கிருந்து வீசிய காற்று எனச் சொன்னால் தகவல் களஞ்சியத்தில் சேமித்துக் கொள்கிறேன் 🙂

    Like

  2. ஈராக் போருக்கான செலவை குவைத்தும், கட்டாரும் ஏற்றுக்கொள்கின்றன என்று காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன். உண்மையாக இருப்பின் போரினால் பொருளாதரத்திற்கு பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

    ——————
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)

    Like

  3. மலேசியாவிலும் பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது… முதலிட்டாளர்கள் பாயை சுருட்டுகிறார்கள்… வீட்டுல் கொஞ்சமான நிலப்பகுதி இருந்தாலும் அதில் பயிரிடுங்கள் என அடிக்கடி விளம்பரமும் வருகிறது.. ஹம்ம்ம்…

    Like

  4. //வங்கிகள் செலுத்திய கடன் பணம் வீடு கட்டிக் கொடுத்த கம்பெனிக்கு போய்ச்சேர்ந்து விடும்//

    மக்கள் வங்கியிடமிருந்து பணத்தை வாங்கி கட்டிட நிறுவனத்துக்குக் கொடுப்பதற்குப் பதிலாக இப்படி வங்கியே வங்கியே நேரடியாய் கொடுத்து விடுகிறது. வீடு மக்களிடம் இருப்பதால் அந்த பணம் மறைமுகமாக மக்களிடம் சேர்ந்ததாகவே பொருள். எப்படியோ வங்கியை விட்டு பணம் வெளியேறிவிட்டது, வங்கிக்கு வந்து சேரவில்லை என்பதே உண்மை.

    //வராக்கடனை எப்படி வாங்குவதற்கென்றே (மிரட்டியாவது) சில நிறுவனங்கள் இருக்கின்றன//

    ஓ.. இது எனக்குப் புதிய தகவல். நன்றி. இது குறித்து அதிக விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள், மகிழ்வேன்.

    Like

  5. /இதைத் தான் மார்க்ஸ் அப்பவே சொன்னரே. குமிழி ஊதினா கண்டிப்பா உடையத்தானே வேண்டும்?//

    நன்றி ஆள்காட்டி 🙂

    Like

  6. //உங்கள் பதிவை படித்த நேரம்.80 பில்லியன் டாலர் நிதிநிலை அறிக்கை மசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததாக செய்தி வந்துவிட்டது//

    வருகைக்கு நன்றி செல்வம். இப்போது நிலை மாறி விட்டது 🙂

    Like

  7. நான் கலையரசன் சொன்னதை 100 சதவிதம் ஒத்து கொள்கிறேன் … இன்று பணம் செலுத்தமுடியாமல் இருக்கும் அனைத்து கட்டிடங்களும் பல கட்டிட நிறுவனங்களால் கட்டப்பட்டவைதானே …வங்கிகள் அந்த நிறுவனங்களுக்கு பணம் வழங்கி இருக்கும் தானே…எனவே பணம் அந்த நிறுவன முதலாளிகளிடமும் , அதில் வேலை செய்த அனைத்து வகையான ஊழியர்களிடமும் தானே இருக்க வேண்டும்…

    Like

  8. கட்டுரை நன்றாக இருக்கின்றது. இருப்பினும் விடுபட்டுப் போன முக்கிய தரவு ஒன்றை சேர்க்க விரும்புகின்றேன்.

    “இந்த முதலீட்டு நிறுவனங்களின் பெரும்பகுதிப் பணம் வீட்டுக் கடனாக மக்களிடம் சென்று சேர்ந்தது.” – இது தவறு. வங்கிகள் செலுத்திய கடன் பணம் வீடு கட்டிக் கொடுத்த கம்பெனிக்கு போய்ச்சேர்ந்து விடும். ஆனால் வீட்டை வாங்கிய மக்கள் தான் அந்த கடனை அடைக்க வேண்டும். ஒரு வேளை திருப்பி கொடுக்க முடியாமல் போனால், வீடு வங்கிக்கு சொந்தமாகும். அவர்கள் அதை வேறு யாருக்காவது விற்று காசு பார்ப்பார்கள். தற்போது நடந்துள்ளது என்னவெனில், லட்சக்கணக்கான மக்கள் இப்படி கடனை கட்ட முடியாமல் போகும் போது வங்கிகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    “இங்குள்ளது போல அமெரிக்காவில் மக்களை மிரட்டியெல்லாம் பணம் வாங்க முடியாது.” -இதுவும் தவறு. நிரந்தர கடனாளியாக மாறி விட்ட மக்கள், தற்போது வீட்டை இழந்தது மட்டுமல்ல, வாங்கிய கடனை சாகும்வரை திருப்பி கட்ட வேண்டும். வராக்கடனை எப்படி வாங்குவதற்கென்றே (மிரட்டியாவது) சில நிறுவனங்கள் இருக்கின்றன. இனிவருங் காலத்தில் இந்த பிரச்சினை பற்றி கேள்விப்படுவோம்.
    http://kalaiy.blogspot.com/2008/09/blog-post_30.html

    Like

  9. இதைத் தான் மார்க்ஸ் அப்பவே சொன்னரே. குமிழி ஊதினா கண்டிப்பா உடையத்தானே வேண்டும்?

    Like

  10. உங்கள் பதிவை படித்த நேரம்.80 பில்லியன் டாலர் நிதிநிலை அறிக்கை மசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததாக செய்தி வந்துவிட்டது.இதனால் அமேரிக்காவின் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி காணும் அபாயம் உள்ளது.இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.கால் செண்டர்களிலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.ஆனால் ஒன்று கவனித்தீர்களா?எதிர்க்கட்சியினர் எல்லாம் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை.சுதந்திரமான முறையில் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.(எனக்கு இந்தியாவை பற்றி நினைத்த போது ஏக்கப் பெருமூச்சு வந்தது).டப்…டப்…டப்…டப்…. (ஒன்னுமில்லைங்க மேசையை தட்டும் சத்தம்.)

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.