உன்னைச் சுற்றிய
சட்டங்கள்
உன்னை ஒருவேளை
இமைக்க விடாமல் இறுக்கலாம்.
உனக்காய் நீயே
சட்டங்களைத் தயாரி.
உனக்கான ஆடைகளை
நீயே
தேர்ந்தெடுக்கும் போது,
உனக்கான செருப்புகளை
நீயே
சரிபார்த்து எடுக்கும்போது
உனக்காய் சில
சட்டங்களையும் செய்யலாமே ?
வெளியே பார்.
குருவிகள்,
பல நூறு தலைமுறையாய்
கூடுகளின் வடிவத்தைக்
கூட
மாற்றிக் கட்டவில்லை.
சிங்கங்களும்
சைவமாய்
மாறிக் கொள்ளவில்லை.
நீ மனிதன்,
உன் வாசல்
குகைகளிலிருந்து
பிடுங்கப்பட்டு
நகரத்தில் நடப்பட்டிருக்கிறது.
இது தான் நேரம்,
உனக்கு நீயே சில
சட்டங்களைச் செய்.
அவை
உரிமை மீறாது என
உத்தரவாதம் செய்.
மீறல்களை மட்டுமே
அரசியல் சட்டங்கள் பேசும்.
நீ
மனதின் நீறல்களைப் பேசு.
விலகலைப் பற்றிப் பேசிப் பேசி
விலங்குகளாய்
ஆனது போதும்.
அகலாதிரு என்னும் சட்டமே
அவசியம் இப்போது.
செய்யாதே எனும்
சட்டங்களை விட,
செய்
எனும் சட்டங்களே
மானிட வளர்ச்சிக்குத் தேவை
இப்போது.
இமைதிறந்தால் மட்டுமே
தெரியும்,
உன்னைச் சுற்றிலும்
நீளும் பட்டினிக் கரங்கள்.
Pingback: மானிடச் சட்டங்கள் – TamilBlogs