அவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.

Image result for mental girl

சடைபிடித்த தலையும்,
புழுதிக் கன்னங்களுமாய்,
கிழிந்த பாவாடையை
வாழை நாரில் கட்டி
உடுத்தி நடப்பாள் அவள்.

பைத்தியக்காரி லெச்சுமி,
என்று
ஒளிந்திருந்து மாங்கொட்டை
எறிந்திருக்கும் சிறுவர்களும்,

தூரப் போ என்று
துரத்தி நடக்கும் மக்களும்,

பாவம் என்று
உச்சுக் கொட்டி நடக்கும்
சிழவிகளும்
ஊருக்குள் ஏராளம்.

ஆனாலும் அவள் கைகள்
எச்சில்
மிச்சங்களையும்
எப்போதாவது தான் சம்பாதிக்கும்.

எந்த அரசியல் மாற்றங்களிலும்
அலைக்கழிக்கப் படாமல்,
எந்த ஆசைக்குள்ளும்
சிரச்சேதம் செய்யப்படாமல்
அவள் சுற்றி வருவாள்.

‘உன் கார்குழல் பூவில்
ஓர் குழவி
கவிதை எழுதுகிறதென்று’
அவள்
இளமைக்காலத்தில் எவனாவது
மோக மை முக்கி
கவிதை எழுதியிருக்கக் கூடும்.

எப்போதேனும் ஒரு
பத்துரூபாய் கொடுப்பேன்,
அவள் கை தீண்டிவிடாத
தூரத்திலிருந்து.

சிரித்துக் கொண்டே என்
கன்னம் தொட்டு விலகுவாள்.

‘பைத்தியத்துக்கு
காசு கொடுக்கிறதும்
பன்றிக்கூட்டத்தில்
குன்றி மணி தூவுறதும் ஒண்ணு தான்,
பயனில்லை’ –
கடக்கும் யாராரோ
சொல்லிப் செல்வார்கள்.

எப்படி அவள்
பசியின் பரப்புகள்
நிரம்புகிறதென்பதே
புரிந்ததில்லை எனக்கு.

இந்த முறை
ஏதேனும் கொடுக்கவேண்டுமென்று,
தீர்மானித்துத்
தரையிறங்கினேன்.

காலத்தின் கடிகாரம்
நெஞ்சில்
முரட்டுக் கொம்புகளால்
என்னை
மூர்க்கத்தனமாய் மோதியது.

முதன் முதலாக
அழுக்குக்கு அஞ்சாமல்,
பாசத்தோடு தீண்டினேன்,
அவள் கல்லறைக் கற்களை.

2 comments on “அவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.