திடீர் பணக்காரன் !
மனதில் கொஞ்சம் தில். கையில் ஒரு துப்பாக்கி. முகத்தை மறைக்க ஒரு கர்ச்சீப். இது போதும் இலட்சாதிபதியாக ! நல்ல மத்தியான நேரமாகப் பார்த்து ஒரு வங்கியில் புக வேண்டியது, வேலை செய்து கொண்டிருக்கும் அப்பாவிப் பணியாளனின் நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டியது, பணத்தை அள்ளிக் கொண்டு அலேக்காகப் பறக்க வேண்டியது !
திடீர்ப் பணக்காரர் ஆக வேண்டும் எனும் ஆவல் உந்தித் தள்ளும் போது என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள் ! விளைவு என்ன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படி சுருட்டிய பணம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவியது என்பதும் நாம் அறிந்ததே !
படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேறும் வழிகளெல்லாம் பலருக்கும் அலர்ஜியாகிவிட்டது. “ஓவர் நைட் ல பணக்காரர் ஆக வேண்டும்” என்பது அவர்களின் தாரக மந்திரம். அதற்கு கிடைக்கும் வழி லீகலோ, இல்லீகலோ பரவாயில்லை என்பது தான் பதறவைக்கும் உண்மை.
பல்லில்லாத பாட்டியின் காதில் கிடக்கும் பாம்படத்தை அறுப்பதுமுதல், கன கம்பீரமாக இருக்கும் ஏடிஎம் பெட்டியையே தூக்கிச் செல்வது வரை எல்லாமே ஒரே இலட்சியத்தை நோக்கியது தான். “விடிஞ்சா நான் பணக்காரனாகி இருக்கணும் !” !
ஒரு காலத்தில் திடீர்ப் பணக்கார மோகம் உடையவர்கள் லாட்டரிகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் லாட்டரியுடன் காத்திருந்து காத்திருந்து கடைசியில் சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் நிலைமைக்கு வந்தார்கள். அப்புறம் சுரண்டல் லாட்டரி வந்தது. சுரண்டிச் சுரண்டி சுண்டு விரல் துண்டானது தான் மிச்சம் !
வீட்டில் கொஞ்ச நேரம் டிவி பார்க்க உட்கார்ந்தால் என்ன கிடைக்கிறது மனைவியின் அர்ச்சனையைத் தவிர ? ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அதி பயங்கரமான மாயை ! ஒரு மாய உலகம். ஒரு வகையில் கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கிய சர்வ சக்தி பொருந்திய சுவர்க்கத்தின் மினியேச்சர்!
அங்கே அட்டகாசமான ஒரு கார் அப்பழுக்கற்ற சாலையில் ஓடுகிறது ! அரை இலட்சம் ரூபாயை எட்டிப் பிடிக்கும் மொபைலுடன் ஒய்யார அழகி தோள் சாய்கிறாள். அரைச் சுவர் அளவு தொலைக்காட்சியில் ஹாக்கி பார்க்கிறார் பாப் கான் கொறிக்கும் பணக்கார மனுஷன். விளம்பரங்களும், சினிமாக்களும் இளைஞர்களின் இளகிய மனதுக்குள் கண்ணி வெடியை வைக்கும் பணியை கட்சிதமாய் செய்து விடுகின்றன.
மாதச் சம்பளத்தில் வீட்டு வாடகை கட்டி, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, இல்லாத கரண்டுக்கு பில் கட்டி, போன் பில் கட்டி வாழும் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை என நினைக்கிறார்கள் இளைஞர்கள். ஆசைக்கும், நேர்மைக்கும் இடையேயான போராட்டம் உக்கிரமடைகிறது.
பக்குவமான இளைஞர்கள் வெற்றிக்காக நேரான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த துறையில் கவனம் செலுத்துகிறார்கள். புதுமையாய் என்னென்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். வெற்றிகளை அடைகிறார்கள். அந்த வெற்றி ஒரு வருடத்தில் வந்தாலும் சரி, பத்து வருடங்களில் வந்தாலும் சரி. அது அவர்களிடம் தங்குகிறது. மனதை உற்சாகமூட்டுகிறது.
சிலரோ நேர்மையின் மதில் சுவரை எட்டித் தாவி விடுகிறார்கள். அவர்கள் மனித மதிப்பீடுகளை உடைத்து கொள்ளை, வழிப்பறி, ஏமாற்று என தவறான வழியில் செல்கிறார்கள். அதற்கு இடைஞ்சல்கள் வரும்போது கொலை வரைக்கும் போய் விடுகிறார்கள். தவறுகளை சிந்திக்கும் மனிதர்களிடமிருந்து தவறுகளே முளைக்கின்றன. அத்தி மரத்தில் அத்திப் பழங்களே விளையும் என்பதல்லவா விதி !
பணக்காரர்கள் ஆகவேண்டும் எனும் ஆசையை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு வலைகளில் விழுந்து விடுவது தான் ஆபத்தானது ! எப்படியாவது பணக்காரர்கள் ஆக வேண்டும் எனும் உங்களுடைய ஆசையே சிலருடைய முதலீடு தெரியுமா ?
“இன்று ஆயிரம் ரூபாய் கட்டுங்கள் அடுத்த வருஷம் ஒரு இலட்சம் ரூபாய் உங்கள் கையில் இருக்கும்” எனும் கோஷங்களுக்கு இன்றைக்கும் வலிமை உண்டு ! அது “ஆஸ்திரேலியாவில் திராட்சைத் தோட்டம், அன்டார்டிக்காவில் தேக்குத் தோட்டம்” என்றெல்லாம் சர்வதேச முகம் காட்டுவதும் உண்டு. அதை நம்பி பணத்தைக் கட்டி விட்டு கையைப் பிசைந்து நிற்பவர்கள் எக்கச்சக்கம் !
“நைஜீரியன் மெயில்” ஏமாற்று வேலை இதில் உலகப் பிரசித்தம். மின்னஞ்சல் திறந்தால் உங்களுக்கு ஒரு மெயில் வந்திருக்கும். “அதிர்ஷ்டப் பிரபுவே, உங்களுக்காக நைஜீரியன் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய்கள் காத்திருக்கின்றன. அதை சொந்தமாக்கிக் கொள்ள வெறும் ஐந்து இலட்சம் ரூபாய்களை மட்டும் உடனே கட்டுங்கள்” என கடிதம் விரியும்.
ஆயிரம் கோடியா என வாயைப் பிளந்து சைலன்டாகப் போய் பணத்தைக் கட்டி ஏமாந்து போகும் மக்கள் ஏராளம். சமீபத்தில் நமது நாட்டில் கூட ஒருவர் பணத்தைக் கட்டி கண்ணைக் கசக்கிய நிகழ்வு நடந்தது.
“என்னோட அக்கவுண்டில் இருக்கும் பணத்தை நான் எடுக்க முடியாது, டிரான்ஸ்பர் தான் செய்ய முடியும். அதற்கு ஒரு நைஜீரியன் அக்கவுண்ட் வேணும்.” அல்லது “எல்லாம் தங்கமாக இருக்கிறது அதை பணமா மாற்ற கொஞ்சம் முன்பணம் வேண்டும்”, “அல்லது உங்களுக்கு ஒரு கார் பரிசு விழுந்திருக்கிறது, இந்தியாவுக்கு அனுப்ப பேக்கிங் சார்ஜ் அனுப்புங்கோ” இப்படி ஏதோ ஒரு விதத்தில் மெயில் வரும்.
சிரித்துக் கொண்டே டிலீட் பட்டனை அமுக்குவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. கொஞ்சம் ஏமாந்து “முயற்சி செய்து பார்ப்போமே” என பணத்தைக் கட்டினால் உங்கள் பணம் காலி. அது உங்களுக்கு திரும்ப வரப் போவதில்லை என எல்லா சாமிகளையும் அடித்து சத்தியம் செய்து விடலாம்.
மத்திய ஐரோப்பாவிலுள்ள ஜெரி பெஸுவஸ்கி எனும் 72 வயது முதியவருக்கும் இப்படி அபத்தம் நேர்ந்தது. அவர் கட்டியது ஆறு இலட்சம் டாலர்கள் ! சுமார் மூன்று கோடி ரூபாய்கள். சம்பாதித்ததையெல்லாம் கட்டி விட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என காத்திருந்தார். ஒன்றும் கொட்டவில்லை. பதறி அடித்துக் கொண்டு பெருகுவேயில் இருந்த நைஜீரியன் தூதரகத்துக்கு ஓடினார்.
அவர்களிடம் பேசியபோது தான் இப்படி ஒரு ஏமாற்று வேலை நடந்திருப்பதை அவர் அறிந்தார். அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன அவர் கையிலிருந்த துப்பாக்கியால் சுட அருகிருந்த அதிகாரி மைக்கேல் அந்த இடத்திலேயே பலியானார் ! தடுக்க வந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது ! திடீர் பணக்காரர் ஆக வேண்டுமென விரும்பியவர் கடைசியில் குற்றவாளியானார் !
வெளிநாட்டிலிருந்து செக் வருகிறது, அப்படியே ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண்ட் பேப்பர் வருகிறது என்றெல்லாம் வரும் மோசடிகள் இந்த வகை தான். ரகசியக் குரலில் உங்களுடைய கதவைத் தட்டும் எதையுமே, “சாரி… கெளம்புங்க காத்து வரட்டும்..” என விரட்டியடித்தால் நீங்கள் தப்புவீர்கள்.
“என் கையில இரிடியம் இருக்கு. அதை வாங்க ஜெர்மனியிலிருந்து ஒருத்தன் வரான். அதோட மொத்த மதிப்பு இரண்டு இலட்சம் கோடி ரூபாய். அதை டெஸ்ட் பண்ண முதல்ல ஒருத்தன் வருவான். இரிடியத்தை நெல்லுக்கு பக்கத்துல வெச்சா நெல்லை அது இழுத்து எடுக்கும். தீக்கு பக்கத்துல வெச்சா தீ வளையும்” இப்படியெல்லாம் கதை சொல்லிக் கொண்டு மோசடி நடத்தும் பலருடைய வழக்குகள் காவல் துறையிடம் உண்டு.
“மின்னல் தாக்கினால் செம்பு இரிடியம் ஆகிவிடும்” என இவர்கள் ஷாக் சயின்ஸ் பேசுவார்கள் ! இதையெல்லாம் நம்பிக் கொண்டு மின்னல் தாக்கிய செம்பு குடத்துக்காக வெட்டிக் கொண்ட ஆட்களும் உண்டு. மின்னல் தாக்கட்டும் என வீட்டிலிருக்கும் செம்பு பாத்திரங்களையெல்லாம் மாடியில் விரித்து வைக்கும் அப்பாவிகளும் உண்டு. பணம் பிடுங்கும் ஏமாற்று வேலையன்றி இதில் வேறு ஒன்றும் கிடையாது !
கிரடிட் கார்ட்களை போலியாய் தயாரித்து ஏ.டி.எம் களில் பணம் திருடுவதாகட்டும், வங்கியின் பக்கத்தைப் போலியாய் தயாரித்து தகவல் திருடுவதாகட்டும் எல்லாமே திடீர் பணக்காரர்களாக விரும்புபவர்களின் தில்லு முல்லுகளே.
உஷாராய் இருக்க வேண்டியதும், இத்தகைய வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியதும் அவசியம்.
முன்பணமாக நீங்கள் பணம் கட்டுங்கள். உங்களை மஹாலட்சுமி வந்து சந்திப்பாள் என சத்தியம் செய்யும் சர்வ சங்கதிகளும் ஏமாற்று வேலைகள் தான். எஸ்கேப் ஆகிவிடுங்கள்.
வழக்கத்துக்கு மீறிய சலுகைகள், பயன்கள், லாபம் இதெல்லாம் எச்சரிக்கை மணியை அடிக்கும் விஷயங்கள். உங்களை பணக்காரர் ஆக்குவதே இலட்சியம் என யாரும் நேர்ச்சை செய்திருக்க வாய்ப்பில்லை.
இணையத்தில் பத்து மடங்கு கவனம் அவசியம். உங்கள் வங்கிக் கணக்கைப் பார்க்கும் போது கூட கவனம் வேண்டும். “உடனே பணம் கொடு” என அவசரப் படுத்தும் எதையும் சீண்டவே சீண்டாதீர்கள். உதவிகள், நிவாரணங்கள் கொடுப்பதைக் கூட நேரில் கொடுக்கவே முயலுங்கள். நெட்டில் கெட்டவர்கள் உலவ வாய்ப்பு அதிகம் ! வெளிநாட்டில் வேலை எனும் அழைப்புகளை அதீத கவனத்துடன் அணுகுங்கள். தேவைப்பட்டால் அனுபவஸ்தர்கள், காவல்துறை போன்றவர்களின் உதவியை நாடத் தயங்காதீர்கள்.
உழைப்பை நம்புங்கள். திருட்டுத் தனமாய் முன்னேறியவர்களை எக்காரணம் கொண்டும் முன்னுதாரணமாய்க் கொள்ளாதீர்கள். அது உங்கள் தந்தையாகவே இருந்தாலும் தள்ளியே வையுங்கள்.
வெற்றியை நோக்கி மனதில் நம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு ஓடுபவர்களை வெற்றி நிச்சயம் சந்திக்கும். பில்கேட்ஸ் கூட ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, முதல் வேலையான டிராஃப் ஓ டேட்டா வில் தோற்று பின்னர் தான் மைக்ரோசாஃட் மன்னனானார். அவர் வெற்றியை நோக்கி இலட்சியங்களுடன் ஓடியவர் !
நாலு வயசு வரை பேச்சு வராமல், ஏழு வயசு வரை எழுதத் தெரியாமல், ஆசிரியர்களும் பெற்றோரும் அரை லூசு என கருதியவர் தான் ஐன்ஸ்டீன். நேராக ஓடிய அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது !
குறுக்குப் பாதையில் ஓடுபவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி தளிர் இலைகளைப் போன்றது. விரைவிலேயே காய்ந்து விடும். நேரான பாதையில் ஓடுபவர்களுடைய வெற்றியோ உயர் மலைகளைப் போன்றது ! அது வரலாறுகளின் முகப்புப் பக்கத்தில் கர்வத்துடன் இடம் பெறும் !
குறுக்கு வழி விலக்கு
நேர்மையே நம் இலக்கு !
ஃ
Awesome..
LikeLike
Super Sago!👌👌👌👍👍👍
LikeLike