மத்தகம்

வெப் சீரீஸ் – ஒரு பார்வை !

முதலில் மத்தளம் என்று தான் நினைத்தேன், பிறகு தான் பெயர் மத்தகம் என்றும், மத்தகம் என்பது யானையின் நெற்றியைக் குறிக்கிறது எனவும் அகராதியில் பார்த்து தெரிந்து. கொண்டேன். ஒரு தமிழ் வார்த்தையைப் புரிந்து கொள்ளக் கூட அகராதியைப் புரட்ட வேண்டியிருக்கிறதே எனும் சிந்தனையுடன்,வார இறுதியில் அமர்ந்து நிதானமாய் ரசித்தேன், இயக்குநர் பிரசாத் முருகேசன் அவர்களின் மத்தகம் தொடரின் முதல் பாகத்தை !

ஒரு இலக்கியவாதி திரைக்கலைஞராக உருவாகும் போது திரைப்படம் எப்படி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்பதைக் கிடாரியில் சொன்ன இயக்குனர், ஒரு வெப் சீரீஸில் என்ன புதுமையைத் தர முடியும் என்பதை மத்தகம் தொடரில் நிரூபித்திருக்கிறார். கடந்த வெப் சீரீஸில் சில அட்டவணைக்குள் பயணப்பட்ட இயக்குனரின் சுதந்திரமான ஒரு பாய்ச்சலை இந்தக் குறும்படம் பதிவு செய்திருக்கிறது !

நிழல் உலக ரவுடிகளின் ரகசியத் திட்டமும், அதை நோக்கிய அவர்களது காய் நகர்த்தல்களும் என கருப்புக் காய்களுடன் வில்லன்கள் சதுரங்கம் விளையாட, அவர்களைப் பிடிக்க விரிக்கும் கண்ணிகளும், அதற்கான நகர்த்தல்களும் என வெள்ளைக் காய்களுடன் போலீஸ் சதுரங்கம் விளையாடுகிறார்கள். இந்த சதுரங்க விளையாட்டின் ஒவ்வொரு நகர்த்தல்களையும் மிகவும் சுவாரஸ்யமாய் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். 

பொதுவாக ஆங்கில வெப் சீசீஸ்களில் மட்டுமே பார்த்துப் பழகிய ‘ஸ்லோ பர்ணிங்’ திரில்லர் இந்தத் தொடரில் கன கட்சிதமாக பொருந்தியிருக்கிறது. ரவுடிகளின் அறிமுகத்தைச் சொல்லும் விதம் கிடாரியையும், கௌதம் மேனனையும் நினைவு படுத்தினாலும் அதைக் காட்சிப் படுத்திய விதத்தில் சுவாரஸ்யம் மிளிர்கிறது. வெறுமனே ரவுடி என்பவரைக் காட்டி, இரத்தம் தோய்ந்த கத்திகளைக் கழுவாமல், அவர்களுக்குள்ளும் காதலும், வீரமும், குடும்பமும், பாசமும் நிரம்பியிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது தொடர். அதனாலேயே ரவுடிகள் மீதும் அவ்வப்போது நமக்கு ஒரு அன்பின் கைகுலுக்கல் நிகழ்ந்து விடுகிறது. 

போலீஸ் கதாநாயகனுக்கு காலம் காலமாய் நிகழ்கின்ற குடும்பச் சிக்கல்களையே இந்தத் தொடரும் பேசினாலும், அதை பிரசவத்துக்குப் பிந்தைய உளவியல் மனநிலை, மருத்துவ ரீதியான காரணங்கள் போன்றவற்றுடன் இணைத்துப் பேசுவதால் உறுத்தலில்லாமல் பயணிக்க முடிகிறது. 

படாளம் சேகர், காயின் சிவா என்றெல்லாம் பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. ஒரு வகையில் கொக்கி குமாரைப் போல இந்த படாளம் சேகரும் பல ஆண்டுகள் பேசப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.  

இந்த வெப் சீரீஸின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்கள். தமிழ் இலக்கியத்தின் மீது அதீத காதல் கொண்ட இயக்குனர் கதையின் வசனங்களை. மிக மிக நேர்த்தியாகச் செதுக்கியிருக்கிறார். இந்தத் தொடரின் ஓட்டத்துக்கு வசனங்கள் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. கூடவே தெளிவான ஒளிப்பதிவும், சிவாவின் இசையும் தொடரை பரபரப்பாய்ப் பயணிக்க உதவுகின்றன. இடையிடையே வருகின்ற குட்டிக் குட்டிப் பாடல்கள் தொடரை சுவாரஸ்யப்படுத்தியிருக்கின்றன. 

நடிகர் தேர்வு கன கட்சிதம். முதன்மைக் கதாபாத்திரங்களில் இருக்கும் தெரிந்த முகங்களைத் தவிர, மற்ற ரவுடிகள் அனைவரும் உண்மையிலேயே ரவுடிகளோ என நினைக்குமளவுக்கு ‘வெற்றி மாறன்’ ஸ்டைல் ரவுடிகள் தேர்வு இந்தத் தொடரின்  இன்னொரு பலம் எனலாம். 

பரபரப்பாய் ஆரம்பித்து, அசுர வேகமெடுத்து, பின்னர் நிதானமாகி இரண்டாவது கட்டத்துக்கான தயாரிப்பாய் இந்த முதல் பாகம் நிறைவடைந்திருக்கிறது. இடை வேளை – போட்ட ஒரு மனநிலையுடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது !

மொத்தத்தில் தமிழ் கிரைம் தொடர்களில் தவிர்க்க முடியாத ஒரு தொடராக மத்தகம் முதல் பாகம் அமைந்திருக்கிறது. முதல் பாகத்தில் அடக்கி வாசித்திருக்கும் கௌதம் மேனன் போன்றவர்கள் 

இரண்டாம் பாகத்தில் முக்கியமான தளங்களுக்கு நகருவார்கள் எனும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதே போல முதல் பாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் புள்ளிகள் எப்படி இரண்டாம் பாகத்தில் இணையப் போகின்றன என்பதை அறியும் ஒரு எதிர்பார்ப்பும் மனதில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது. 

அடுத்த பாகத்துக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

*

பீஸ்ட் விமர்சனம் / BEAST REVIEW

நெல்சனின் கற்பனை வறட்சியின் வெளிப்பாடு தான் பீஸ்ட் திரைப்படம் ! 

அதரப் பழசான கதையை, அதை விடப் பழசான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் நெல்சன். அவர் நம்பியிருக்கும் ஒரே அட்சய பாத்திரம் விஜய் தான். அதுவே ஒரு கட்டத்தில் சலிப்பாகிப் போய், ‘இன்னும் எவ்ளோ நேரம்டா வருவீங்க’ என நொந்து நூடூல்ஸ் ஆகும்போது ஒரு பாட்டைப் போட்டு நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

அந்த ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யாமல் இருந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டே நாம் வெளியே வருகிறோம். 

விஜயகாந்த் நடித்து நடித்து அவருக்கே போரடித்துப் போன அதே பாகிஸ்தான் தீவிரவாதி, அதே ‘தலைவனை விடுதலை செய்’ எனும் கோரிக்கை, அதே வெள்ளை தாடி தீவிர வாதி தலைவன், அதே தீவிரவாதியை அழிக்கும் ஹீரோ ! என அட்லிக்கே ஜெர்க் கொடுக்கும் திரைக்கதை ! ஒரே ஆறுதல் பக்கம் பக்கமாக தேச பக்தி வசனங்களையும் சொல்லி நமது குரல்வளையில் ஏறி மிதிக்கவில்லை என்பது தான்.  

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு படம் பார்த்தேன் என சொல்லும் அத்தனை பேரும் ஊகித்து விடக் கூடிய அக்மார்க் காட்சிகள். ஏசி வெண்ட் வழியாக தவழ்ந்து போவது, பணயக் கைதிகளை உட்கார வைத்திருப்பது, விடுவிக்கப் போறியா இல்லையா என மிரட்டுவது, எனக்கு தப்பிப் போக ஒரு பிளைட் வேணும் என சொல்வது.. ஷப்பா… நெல்சன்… புது படமாவது பாத்து தொலைய்யா என கத்தத் தோன்றுகிறது. 

ஒரு சின்ன மாலுக்குள் அடைபடும் கதையை தூக்கி நிமிர்ந்த வேண்டுமெனில் கொஞ்சம் சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை மிக மிக அவசியம். ஹீரோவும் செல்வராகவனும் இணைந்து அப்படி ஏதோ திட்டம் போடப் போகிறார்கள், மணி ஹேய்ஸ்ட் புரபசர் போல ஏதோ ஒரு மேட்டர் இருக்கிறது என காத்திருந்தால், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கிளம்பு காத்து வரட்டும் என கொமட்டிலேயே குத்தி விரட்டி விடுகிறார்கள். 

படத்தில் சீரியசாக வரவேண்டிய காட்சிகளை மினிஸ்டர் வந்து காமெடியாக மாற்றி விடுகிறார். காமெடியாக வேண்டிய காட்சிகளை யோகிபாபுவும் கிங்க்ஸ்லியும் செம சீரியசாக்கி கடுப்படிக்கிறார்கள். ஒருத்தனுக்கு கதைப் பஞ்சம் வரலாம், நகைச்சுவைக்குமாய்யா பஞ்சம் ?

தீவிரவாதிகளைப் பார்த்தால் ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. குறிபார்த்து சுடத் தெரியவில்லை, ஒரு கத்தியை வீசத் தெரியவில்லை, குறைந்த பட்சம் பணயக் கைதிகளை மிரட்டக் கூட தெரியவில்லை. இருட்டு அறையில் டார்ச் அடித்துத் திரிவது போல துப்பாக்கியை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு விஜயிடம் அடிவாங்கி அழிகிறார்கள். 

நாலு முக்கு ரோட்டில் பான் பீடா 420 விற்கும் அங்கிள் போல ஒரு வில்லன். ஷப்பா.. கொஞ்சமாச்சும் டஃப் குடுத்திருக்கலாம்ல என ஹீரோவே கடைசியில் கலாய்த்து நெல்சனை கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறார். என்னையா நீ போல்ட் ஆக்கறே என கடுப்பான நெல்சன் ஹீரோ கையில் ஒரு இளநீர் வெட்டும் கத்தியைக் கொடுத்து கொடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கிறார். அவர் ஒற்றை ஆளாய் தரையிலும், வானத்திலும், குகையிலும் வித்தை காட்டி, வார் பிளைட்டில் அமர்ந்து கொண்டு சர்வ தேசத்தோடும் வீடியோ கேம் விளையாடி சிரிக்க வைக்கிறார். அந்த கடைசி 15 நிமிடத்தில்  தனக்கு நகைச்சுவை சிறப்பாய் வரும் என நெல்சன் நிரூபித்திருக்கிறார். பார்வையாளர்களிடம் கொஞ்ச நஞ்ச உயிரும் மிச்சமிருக்கக் கூடாது எனும் அவரோட பரந்த மனசு தான் அதுக்குக் காரணம். 

படத்தில் ஏதாச்சும் ஒரு புது காட்சியைக் காண்பித்தால் இலட்சம் ரூபாய் பரிசு என தாராளமாய் வைக்கலாம். மேக்கிங்கில் தனது திறமையைக் காட்டிய இயக்குனர், கதை திரைக்கதை வசனத்தில் அகல பாதாளத்தில் நழுவியிருக்கிறார். பீஸ்ட், ரஜினிக்கு ஒரு எச்சரிக்கை மணி. நெல்சனைக் கழட்டி விட்டுடுங்க, அவரு சிவகார்த்திகேயன் கூட டாக்டர் கம்பவுண்டன்னு ஏதாச்சும் படம் எடுத்து பொழச்சுக்கட்டும். 

பீஸ்ட்… பீஸ் இல்லாத பழைய குஸ்கா !

ஆனா ஒண்ணு சொல்லணும்.. விஜய்.. செம மாஸ் ! ஸ்டைலிஷ் ! 

*

 

மாணவர்களின் கவனத்துக்கு…

ஏட்டுக்கல்வியை
மாற்றும் காலம்

*

கோவை மாணவி ஒருத்தி மன உளைச்சலின் உச்சத்தில் போய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இன்னும் இதயத்தை பாரமாகவும், விழிகளை ஈரமாகவும் வைத்திருக்கிறது. வாழ்க்கையை அதன் வசீகர வீதிகளில் சந்திக்க வேண்டிய ஒரு பதின் வயதுப் பெண், ஒரு துயரத்தின் இருட்டறைக்குள் மறைந்து போனதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

தற்கொலை தீர்வு அல்ல ! என்பதை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும், தீர்வுகளே இல்லை என மக்கள் நினைக்கும் போது தற்கொலையைச் சார்ந்து விடுகிறார்கள் எனும் துயரம் மனதை உடைக்கிறது. பெண்களற்ற உலகத்திலிருந்து யாரும் பிறக்கவில்லை. பெண்களற்ற உலகில் யாரும் வாழவில்லை. எனில், பெண்கள் மட்டும் ஏன் இத்தகைய கடும் சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் ?

“ஒரு பெண் நள்ளிரவில் சாலையில் தனியாய் அச்சமின்றி நடந்து போகவேண்டும்” என ஆசைப்பட்ட தேசத் தந்தையின் கனவு, இன்றைக்கு, ஒரு மாணவி அச்சமின்றி வகுப்பறையைக் கடந்து வரவேண்டும் என மாறியிருப்பது பலவீனத்தின் உச்சமன்றி எதுவுமில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என கருத்தூட்டி வளர்க்கப்பட்ட சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை என்னென்பது ?

ஒரு வலிமையான சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. அதே போல மாணவர் சமூகத்திற்கு நல்ல வலிமையான மனநிலை இருக்க வேண்டியதும் அவசியமானது.

பெண்களை வீடுகளில் எப்படி மதிக்கிறோம், எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே நமது சமூக அணுகுமுறைகளும் இருக்கும். சிறு வயதிலிருந்தே பெண்களை கீழாக நினைப்பதும், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும், அவர்களது சிந்தனைகளை கேலி செய்வதும், அவர்களது பங்களிப்புகளைப் புறக்கணிப்பதும் என பெண்களுக்கு எதிராகவே இருந்தால், அந்த குடும்ப சூழலில் இருந்து வருகின்ற ஆண்கள் சமூகத்தில் பெண்களையும் அப்படியே பாவிப்பார்கள். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது கிழமொழி அல்ல, வாழ்வின் மொழி.

ஒரு சமூகம் நல்ல முறையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு குடும்பமும் பெண்களை கண்ணியமாகவும், அன்பாகவும், மரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்த வேண்டும். எந்த விதமான வேறுபாடுகளும் காட்டக் கூடாது. நமது மத, ஆன்மிக, தத்துவ சித்தாந்தங்கள் அவற்றுக்கு தடையாய் இருக்குமெனில் அதை உதறவும் தயங்கக் கூடாது. எப்படி ஒரு தாயை நேசிக்கிறோமோ, அப்படியே எந்த ஒரு பெண்ணையும் நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு முதல் தேவை சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கக் குடும்பங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான எந்த ஒரு சிறு தவறும் மாபெரும் பிழை எனும் உணர்வை சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவரும் உணர வேண்டும். அத்தகைய பயிற்சியையும், கல்வியையும் நாம் உருவாக்க வேண்டும். பெண்கள் இளக்காரமானவர்கள், வலிமையற்றவர்கள் எனும் சிந்தனை எங்கே வருகிறதோ அங்கே தான் சிக்கல்கள் பெருமளவில் உருவாகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என சட்டம் சொல்ல வேண்டும். அவர்கள் தான் குற்றம் செய்யத் தூண்டுபவர்கள். குற்றவாளிகளுக்குக் கவசமாய் இருப்பவர்கள். அத்தகைய புல்லுருவிகளை முழுமையாய் அகற்ற வேண்டும்.

இன்றைக்கு கணினி நிறுவனங்கள் POSH போன்ற Sexual harassment Training விழிப்புணர்வு பயிற்சிகளை கட்டாயமாக்கியிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான சிறு குற்றமும் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கும் எனும் அச்சத்தை ஊழியர்களிடம் எழுப்பியிருக்கின்றன. அலுவல் நேரமானாலும் சரி, மற்ற நேரங்களானாலும் சரி பெண்களை தவறாய் நடத்துவதோ, பேசுவதோ, தொடுவதோ, கிண்டல் செய்வதோ எல்லாமே விசாரணை வளையத்துக்குள் வருகிறது. இது அலுவலகங்களில் புரையோடிப் போயிருந்த அழுக்கை பெருமளவு அகற்றியிருக்கிறது.

இத்தகைய கட்டமைப்புகள் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச தைரியத்தைக் கொடுக்கின்றன. அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை நிறுவனங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. தவறு செய்யும் ஊழியர்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நீக்கப்படுகின்றனர். இத்தகைய கடுமையான அமைப்புகள் நிச்சயம் கல்வி நிலையங்களில் இருக்க வேண்டும்.

மாணவிகளோ, மாணவர்களோ தங்களுடைய பிரச்சினைகளின் ஒரு வரியைச் சொன்னாலே அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தேவையான உதவிகளைச் செய்கின்ற அமைப்புகள் நிச்சயம் வேண்டும். மாணவர்களுக்கு ஒரு நல்ல மனமகிழ்ச்சியான கல்விச் சூழலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்களை மிரட்டுவதோ, அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்வதோ, அதைப் பேசு பொருளாக்குவதோ தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

முக்கியமாக, இன்றைய மாணவ சமூகம் சிலவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

  1. உங்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற எந்த ஒரு வன்முறைக்கும் வெட்கப்பட வேண்டியது நீங்களல்ல. அவமானப்பட வேண்டியது நீங்களல்ல. தோற்று செத்துப் போக வேண்டியது நீங்களல்ல. நீங்கள் துணிச்சலின் வாரிசுகள். நிமிர்ந்து நிற்க வேண்டியவர்கள். நீங்கள் நிமிர்ந்தால் தவறிழைக்கும் கோழைகள் தலைகுறுகிப் போவார்கள். எனவே தற்கொலை எனும் முடிவை எடுக்கவே எடுக்காதீர்கள், அது உங்களை குற்றவாளி என நீங்களே முடிவுகட்டுவதைப் போன்றது.
  2. ஒருவேளை நீங்களே தவறிழைத்திருந்தால் கூட அச்சமில்லை. உங்களுக்கான பாதுகாப்பை சட்டம் வழங்குகிறது. பிறருடைய மிரட்டலுக்கோ, எச்சரிக்கைக்கோ நீங்கள் செவிசாய்க்க வேண்டிய தேவை இல்லை. வீழ்தல் மனித இயல்பு, எழுதலே மனித மாண்பு. சமூக வலைத்தளங்களோ, ஊடகங்களோ உங்களை அவமானப்படுத்தி விட முடியாது. அத்தகைய மிரட்டல் விடுப்பவர்களை முழுமையாய் உதாசீனம் செய்யுங்கள்.
  3. ஆசிரியர் என்பவர் கடவுள் அல்ல ! என்ன செய்தாலும் ஆசிரியருக்கு அடிபணிந்திருக்க வேண்டும் எனும் முட்டாள் தனமான சிந்தனையை துடைத்தெறியுங்கள். தவறு செய்பவர் ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ யாராய் இருந்தாலும் நேருக்கு நேர் குரல் கொடுக்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  4. நல்ல நண்பர் படையைக் கொண்டிருங்கள். நல்ல பாசிடிவான சிந்தனைகளை விதைக்கின்ற நண்பர்கள் மிக மிக முக்கியம். உங்களை அவமானப்படுத்த ஒருவர் இருந்தால் உங்களை பெருமைப்படுத்த பலர் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை உங்களுக்குள் முழுமையாய் இருக்கட்டும்.
  5. பெற்றோரை முழுமையாய் நம்புங்கள். அவர்களே உங்களுக்கான வாழ்க்கையை உருவாக்குபவர்கள். அவர்களே உங்களின் வாழ்க்கை மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள். எந்த பிரச்சினை என்றாலும் முதலில் அவர்களிடம் சொல்லுங்கள். எதையுமே மறைக்காதீர்கள், உங்கள் தவறுகள் உட்பட. பெற்றோரின் கோபம் சிற்பியைப் போன்றது, உங்களை வனைய வேண்டும் எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அந்த கோபத்தைத் தாண்டி உங்களுக்காய் உயிரைக் கொடுப்பது அவர்கள் மட்டும் தான் என்பதைக் கல்வெட்டாய் மனதில் எழுதுங்கள்.
  6. பிறருடைய விமர்சனங்களைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். அடுத்தவன் சொல்வதல்ல நாம் ! அடுத்தவனின் விருப்பத்துக்கு வாழ்வதற்கல்ல நமது வாழ்க்கை. இது எனது வாழ்க்கை. இதை நான் வாழ்வேன். இதை அழித்துக் கொள்ள மாட்டேன். எவன் என்ன சொன்னாலும் நான் நானாய் வாழ்வேன் எனும் உறுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  7. எனது உடலுக்கான உரிமை எனக்கு மட்டுமே உண்டு ! அதை தொடவோ, கிண்டல் செய்யவோ, தவறாய் சித்தரிக்கவோ எவனுக்கும் உரிமையில்லை எனும் உத்வேகத்தை மனதில் எழுதுங்கள். உங்களை விட வலிமையானவர் உலகில் இல்லை என்னும் உண்மையை உணருங்கள்.
  8. பிடிக்காத சூழலையோ, பிடிக்காத உறவுகளையோ, பிடிக்காத நட்புகளையோ வெட்டி எறிய தயவு தாட்சண்யம் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்குள் வந்து அரசாட்சி செய்ய யாருக்கும் உரிமையில்லை. உங்களுடைய வாழ்க்கையில் களைகளைக் களைவதில் பயப்படவே வேண்டாம்
  9. இந்த உலகில் எல்லாமே கடந்து போகும். எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். எல்லாம் சில நாட்கள் பேசுபொருட்களே. அனைத்தையும் மன உறுதியுடன் கடந்து செல்ல துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். இதே நிலை அடுத்த ஆண்டு இருக்கவே இருக்காது, உங்கள் வாழ்க்கையை தொலைநோக்குப் பார்வையில் பாசிடிவ் ஆக பாருங்கள்.
  10. மனதை மடை மாற்ற ஒரு சிறந்த, உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேவையான வேளைகளில் டிஜிடல் உலகை விட்டு தள்ளியே இருங்கள். சமூக ஊடகங்களும், வலைத்தளங்களும் மாயையை உருவாக்குகின்றன. உண்மையான உலகம் டிஜிடல் வெளிக்கு வெளியே விரிந்து கிடக்கிறது.

மாணவ மாணவியரே,
நீங்களே இந்த பூமியின் நம்பிக்கை விளக்குகள்.
இருட்டைப் போர்த்தாதீர்கள். வெளிச்சத்தை வினியோகியுங்கள்.
நீங்கள் ஒளிர்ந்தால், கோழைகள் ஓடி ஒளிவார்கள்.

*

சேவியர்

வெற்றிமணி – ஜெர்மனி

கீழ்ப்படிதல் -a Christian skit

கீழ்ப்படிதல்

https://youtu.be/ygVf33K8V9s

காட்சி 1

( அம்மா & மகன் )

அம்மா : தம்பி.. என்னப்பா… படிச்சிட்டு புக்ஸை எல்லாம் அங்கேயும் இங்கேயும் போட்டு வெச்சிருக்கே… எல்லாத்தையும் எடுத்து அடுக்கி வை

மகன் : வெக்கிறேன்ம்மா.. ஃபைவ் மினிட்ஸ்..

அம்மா : என்ன சொன்னாலும் டூ மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ் ந்னே சொல்லிட்டிரு.. கடைசில எதையுமே பண்றதில்லை

மகன் : அம்மா, இதெல்லாம் ஒரு விஷயமா… வைக்கலாம் விடுங்க

அம்மா : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்ப்பா…. எது சொன்னாலும் உடனே கீழ்ப்படியணும்.. அதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்

மகன் : சரி.. சரி.. விடுங்க. டெய்லி இதே பாட்டு தானா ?

அம்மா : டெய்லி இதே பாட்டுன்னா, இன்னும் நீ திருந்தலேன்னு அர்த்தம்

மகன் : ஷப்பா… ஆளை விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.

காட்சி 2

( அம்மா & மகள் )

அம்மா : ஏம்மா ஸ்னோலின்… என்ன மறுபடியும் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?

மகள் : ஆமாம்மா…. ஏம்மா ?

அம்மா : காலைல மட்டும் தானே ஊத்த சொன்னேன் ?

மகள் : ஆமா, ஆனா ஈவ்னிங் கூட ஊத்தினா இன்னும் நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.

அம்மா : சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு தெரியாதா ? நான் நட்டு வெச்ச வெத எல்லாம் வெளியே வந்துச்சு. போட்ட உரம் எல்லாம் தண்ணில கரைஞ்சு எங்கயோ போயிடுச்சு… செடி மூட்ல குளம் மாதிரி தண்ணி கிடக்கு… அது அழுகிப் போகுமான்னும் தெரியல.

மகள் : ஓ… சாரிம்மா.. இவ்ளோ பிரச்சினை இருக்கா ?

அம்மா : என்ன சாரி.. சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு சொன்னா கேக்கறியா ? அதிகப்பிரசங்கித் தனம் உனக்கு ஜாஸ்தி. சொன்னதை செய்றதுக்காக பாராட்டறதா ? சொல்லாததையும் சேத்து செஞ்சதுக்காக திட்றதான்னே தெரியல…

மகள் : ஏம்மா.. நல்ல இண்டன்ஷன்ல தானே பண்ணினேன்…

அம்மா : உன் பார்வைக்கு நல்லதா இருக்கலாம், ஆனா கீழ்ப்படிதல்ங்கறது சொல்றதை அப்படியே செய்றது தான்.. சரியா ?

மகள் : ஓக்கேம்மா

<< சிறிது நாட்களுக்குப் பின் >>

காட்சி 3

( பள்ளிக்கூடத்தில் )

( ஆசிரியர் & மகன் )

ஆசிரியர் : என்னப்பா…அசைன்மெண்ட் பண்ண சொன்னா, அதை சரியான நேரத்துக்கு பண்ண மாட்டியா ? இத பாரு.. நீ மட்டும் தான் பாக்கி

பையன் : சாரி சார்.. நான் பண்ணிட்டேன்.. பட்.. எடுத்துட்டு வர மறந்துட்டேன்.

ஆசிரியர் : எல்லாத்துக்கும் ஒரு சாக்குப் போக்கு வெச்சிருப்பியே… நாளைக்கு காலைல 9.30 க்கு முன்னாடி ஆபீஸ் ரூம்ல கொண்டு வைக்கணும்…. அதான் லாஸ்ட் சேன்ஸ்.. இல்லேன்னா உனக்கு அசைன்மெண்ட்ல கோழி முட்டை தான்.

பையன் ; கண்டிப்பா வைக்கிறேன் சார்.

ஆசிரியர் : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்பா.. லைஃப்ல… இல்லேன்னா கீழ தான் கிடக்கணும்….

காட்சி 4

( ஆசிரியர் & மகள் )

ஆசிரியர் : ஸ்னோலின்.. இந்த எக்ஸாம் பேப்பரை எல்லாம் கொண்டு போய் என் டேபிள்ல வை.

மகள் : கண்டிப்பா சார்…

( மகள் பேப்பரை ரூமில் வைக்கிறாள் )

மகள் ( மனசுக்குள் ) – பேப்பரை அப்படியே வைக்காம ரோல் நம்பர் படி அடுக்கி வைப்போம். அப்போ டீச்சருக்கு ஹெல்ப்பா இருக்கும்.

( சிறிது நேரம் கழித்து அடுக்கி முடிக்கிறாள் )

(வெளியே வரும்போது ஆசிரியர் வருகிறார் )

ஆசிரியர் : நீ என்ன பண்றே…. ஆபீஸ் ரூம்ல ? இவ்ளோ நேரம் ?

மகள் : சார் நீங்க பேப்பரை கொண்டு வைக்க சொன்னீங்க..

ஆசிரியர் : ஆமா… அது சொல்லி ரொம்ப நேரம் ஆச்சே ! பேப்பர்ல ஏதாச்சும் கரெக்‌ஷன் பண்ணினியா ?

மகள் : சார்.. நோ..நோ.. நான்… ரோல் நம்பர் படி அடுக்கி வெச்சேன்

ஆசிரியர் : நெஜமாவா ? நான் அப்படி அடுக்கி வைக்க சொல்லவே இல்லையே ! லெட் மி செக்…. ஏதாச்சும் திருத்தியிருந்துச்சுன்னா முட்டை. மார்க் தான்

மகள் : சார்… உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தான் சார்..

ஆசிரியர் : சொன்னதை செஞ்சா போதும்… பூனையை புடிக்க சொன்னா, யானையை புடிக்க தேவையில்லை.

<<< சில வருடங்களுக்குப் பின் >>

அலுவலகம்

காட்சி 5

( அதிகாரி & பையன் )

அதிகாரி : என்னப்பா… சிங்கப்பூர் கஸ்டமர் புராஜக்ட் என்னாச்சு ? டெட் லைன் எதுவுமே மீட் பண்ணல… கீப் சேஞ்சிங் த டெலிவரி டேட்.. என்னாச்சு ?

பையன் : சார்.. அது வந்து…. அதர் பிரையாரிட்டி வர்க் வந்துச்சு.. சோ.. இது கொஞ்சம் ஹோல்ட் ல போயிடுச்சு

அதிகாரி : வாட்… ? அதர் வர்க்கா ? நாம கமிட் பண்ணியிருக்கோம்.. வீ நீட் டு டெலிவர்… சொன்ன டைம்ல டெலிவர் பண்ணணும்

பையன் : ஓக்கே சார்… வில் டூ

அதிகார் : என்ன வில் டூ.. அம்பு டூ.. ந்னு… ஐ வாண்ட் டு ரிவ்யூ த ப்ராஜக்ட்… கமிட்மெண்ட் மிஸ்ஸிங், டைம்லைன் மிஸ்ஸிங், இட்ஸ் இன் ரெட் ஸோன்

பையன் : எப்படியாச்சும் டெலிவரி டேட் மீட் பண்ண டிரை பண்றேன் சார்..

அதிகாரி : ஐம்.. நான் கான்பிடண்ட்…. உங்க கிட்டே குடுக்கிற வர்க் எதுவுமே சரியான டைம்ல முடியறதில்லை… ஐம் டிசப்பாயிண்ட்டட்.

காட்சி 6

( மகள் & கஸ்டமர் சைட் )

மகள் : சார்…. திஸ் ஈஸ் த டெலிவரி மாடல் சார்… ஹோப் யூ ஆர் ஃபைன். வித் இட்…

கஸ்டமர் : எஸ்.. வெரி குட்.. வெரிகுட்..

மகள் : எங்க கம்பெனி டெலிவரில எக்ஸ்பர்ட்… இதே மாடல்ல நாங்க ஏ ஐ/ எம் எல் கூட இம்பிளிமெண்ட் பண்ணியிருக்கோம்…

கஸ்டமர் : வாவ்.. தட்ஸ் கிரேட். அப்போ இந்த ஆர்கிடெக்சர்ல அதை இன்க்ளூட் பண்ணுங்க… ஆட்டோமேஷன் வித் ஏஐ.. அதான் பெட்டர்..

மகள் : சார்.. அது வந்து கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்

கஸ்டமர் : நோ..நோ.. ஐ வாண்ட் தேட். அதான் ஒரு டிபரன்ஷியேட்டர்… உங்க பாஸ் கிட்டே நான் சொல்றேன்… ஐ வில் மெயில் ஹிம்.. சொன்ன டைம்லைன், காஸ்ட்ல அதையும் இன்க்ளூட் பண்ணணும்.

காட்சி 7

( மாலையின் மேலதிகாரி போன் பண்ணுகிறார் )

மேலதிகாரி : என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க ஸ்நோலின்… நான் பிரசண்ட் பண்ண சொன்னதை. மட்டும் பிரசண்ட் பண்ணாம எக்ஸ்றா பிட் எல்லாம் போட்டிருக்கீங்க.

மகள் : சார், ஒரு வேல்யூ ஆடட் ஆ இருக்கட்டும்ன்னு தான்

மேலதிகாரி : வாட்.. வேல்யூ.. இப்போ நமக்கு எவ்ளோ பெரிய நஷ்டம் தெரியுமா ? மார்ஜின் ஹெவியா அடி வாங்கும். லாபம் போச்சு…. ஆள் புடிக்கணும்… காஸ்ட் எகிறும்.

மகள் : ஓ.. ஐம் சாரி சார்..

மேலதிகாரி : என்ன சாரி… இந்த வருஷம் உங்களுக்கு நோ போனஸ், நோ இன்கிரிமெண்ட்…

மகள் : சார்…

மேலதிகாரி : சொன்னதை மட்டும் செய்ய கத்துக்கோங்க… இது உங்க நாவல் இல்ல, உங்க விருப்பத்துக்கு எதை வேணும்ன்னாலும் எழுத.

மகள் : சார்… ஐம்… சாரி…

மேலதிகாரி : நாளைக்கு காலைல என்னை ஆபீஸ்ல வந்து மீட் பண்ணுங்க… வில் கிவ் யூ எ மெமோ.

காட்சி 8

( மகள் சோகமாய் & அம்மா + மகன் )

அம்மா : என்னம்மா, ரொம்ப டல்லா இருக்கே ?

மகள் : நல்லதுக்கு செய்ற எல்லாமே தப்பா போவுது.. இப்பல்லாம், நல்லதுக்கே காலமில்லை

அம்மா : புரியும்படியா சொல்லு…

மகள் : கம்பெனியைப் பற்றி நாலு வார்த்தை நல்லதா பேசினதுல மேனேஜர் கடுப்பாயிட்டாரு..

அம்மா : நல்லதா பேசினா ஏன் கடுப்பாகணும் ?

மகள் : அவரு சொன்னதை விட கொஞ்சம் எக்ஸ்றா பேசிட்டேன்.. அது தப்பாயிடுச்சு

அம்மா : சொன்னதை விட அதிகமா ஏன் பேசினே ? அப்படி என்ன தப்பாச்சு ?

மகள் : புதிய டெக்னாலஜி விஷயம் எல்லாம் இருக்கு ந்னு கிளையண்ட் கிட்டே சொன்னேன். அப்போ அதெல்லாம் எங்களுக்கு குடுங்கன்னு அவங்க சொன்னாங்க. அது நமக்கு நஷ்டம்ன்னு மேனேஜர் கடுப்பாயிட்டாரு. போனஸ், ஹைக் ஏதும் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு…

அம்மா : உன் கிட்டே சின்ன வயசுல இருந்தே சொல்றேன்… அளவுக்கு அதிகமா பேசக் கூடாதுன்னு…. ஒபீடியன்ஸ் ங்கறது ஓவரா பேசறதில்லை … பேச வேண்டியதை மட்டும் பேசறதுன்னு…

மகள் : கம்பெனிக்கு நல்ல பெயர் கிடைக்கட்டும்ன்னு தாம்மா நான் பண்ணினேன்

அம்மா : கீழ்ப்படிதல்ங்கறது சொன்னதை அப்படியே செய்றது தான். நமக்கு அதை விட அதிகம் தெரியும்ன்னு அதிகப்பிரசிங்கித்தனம் பண்றதில்லை. உதாரணமா நோவா கிட்டே கடவுள் பேழை செய்யச் சொன்னப்போ கடவுள் சொன்னதை அப்படியே செஞ்சாரு. தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நாலு ஃப்ரஞ்ச் விண்டோவும், எட்டு பால்கனியும் எக்ஸ்றா வெச்சு கட்டல.

மகன் : நல்லா சொல்லுங்கம்மா… இவ குடுத்த காசுக்கு மேலயே நடிப்பா

அம்மா : அவளை மட்டும் ஏன் சொல்றே…. நீ குடுக்கிற காசுக்கே நடிக்கிறதில்லையே. எப்பவும் கீழ்ப்படியறதே இல்லை. அது ரொம்ப ரொம்ப தப்பு. கீழ்ப்படியாம இருக்கிறதும், சொல்றதுக்கு அதிகமா பண்றதும் – இரண்டுமே தப்பு தான்.

மகன் : என்ன திட்டு ரூட் மாறி இந்தப் பக்கம் வருது ?

அம்மா : கடவுளோட கட்டளைக்கு கீழ்ப்படியாத இஸ்ரேல் மக்களுக்கு என்ன நடந்துதுன்னு நீ படிச்சதில்லையா ? கீழ்ப்படியாதவன் சொர்க்கத்துக்குள்ள போகவே முடியாது. கீழ்ப்படியாதவன் அழிவான் ந்னு பைபிள் சொல்லுது.

மகள் : கீழ்ப்படியாமை தப்பு தான்மா…. ஐம் டிரையிங் பட்….

அம்மா : கீழ்ப்படியாமையைப் போல, சொல்லாததை செய்றதும் தப்பு தான். ஆதாம் கிட்டே கடவுள் பழத்தை உண்ணக் கூடாதுன்னு சொன்னாரு. தொடவும் கூடாதுன்னு மனுஷன் அதுல கூட்டிச் சேர்த்தான்… அது தப்பு… மோசே கிட்டே மலையில பேசுன்னு சொல்வாரு கடவுள்.. ஆனா அவரு அடிச்சாரு…. அதுவும் தப்பு. கடவுள் சொல்றதுக்கு மேல செய்யவே கூடாது. அதே நேரம் கடவுள் சொல்றதை செய்யாம இருக்கவும் கூடாது.

மகள் : ம்ம்.. புரியுதும்மா…..

அம்மா : கீழ்ப்படியாத பிள்ளைகள் மேல் கடவுளோட சினம் வரும் தம்பி.. ரொம்ப கவனமா இருக்கணும்…. சின்னச் சின்ன விஷயத்துல கீழ்ப்படியாதவங்களால பெரிய பெரிய விஷயங்கள்ல கீழ்ப்படியவே முடியாது.

மகன் : ம்ம்ம் உண்மை தான்ம்மா.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ந்னு சொல்றது உண்மை தான்.

அம்மா : ஆமா.. யோசிச்சு பாருங்க.. சின்ன வயசுல செய்த விஷயங்கள் தான் அப்படியே தொடருது…. மேஷ்மில்லோ எஃபக்ட் மாதிரி… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனா, கடவுள் நினைச்சா எல்லாத்தையும் மாற்ற முடியும். தப்பை உணர்ந்து கடவுள் கிட்டே மன்னிப்பு கேளுங்க. கடவுளோட வார்த்தையை அப்படியே கீழ்ப்படியுங்க. அப்படியே கீழ்ப்படியறதுன்னா எப்படின்னு தெரியுமா ?

மகன் : ம்ம்.. வரைஞ்ச கோட்டை தாண்டாத கடல் மாதிரி..

மகள் : எல்லைக் கோட்டை மீறாத கோள்கள் மாதிரி, அப்படித் தானே

அம்மா : எஸ்.. வெரிகுட்…

மகள் : சரிம்மா, இனிமே அப்படியே பண்றேன்…

மகன் : நானும் கண்டிப்பா இனிமே அப்படியே பண்றேன்ம்மா

காட்சி 9

( மகன் மகள் செபிக்கிறார்கள், கீழ்ப்படிய முடிவெடுக்கிறார்கள் )

இயேசுவே.. இனிமே உங்க வார்த்தைகளை நீட்டாமலும், குறுக்காமலும் அப்படியே கீழ்ப்படிவேன்…

*

கீழ்ப்படிதல் ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. சிலர் கீழ்ப்படிவதே இல்லை, சிலரோ அதிகப்பிரசங்கித் தனமாய் தேவைக்கு அதிகமாகவே செய்து சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரோட வாழ்க்கை தான் இது….

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்

மீட்டிங் என்பது டேட்டிங் போல

மீட்டிங் என்பது டேட்டிங் போலவா ? என்னய்யா மொட்டைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடறீங்க என உங்கள் மனதில் ஒரு குரல் ஒலித்தால், அது ஒலிக்கட்டும். அது எவ்வளவு உண்மை என்பதை கொஞ்சம் நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் கண்டு கொள்வீர்கள். 

ஒரு டேட்டிங் போக வேண்டுமெனில் எவ்வளவு தயாராவீர்கள் ? எவ்வளவு தூரம் அதைப்பற்றிச் சிந்திப்பீர்கள் ? எவ்வளவு தூரம் அந்த பொழுதை பயனுள்ளதாக்க வேண்டுமென நினைப்பீர்கள் ? எப்படி கரெக்டாக அந்த நேரத்தில் சென்று சந்திப்பீர்கள், ஒவ்வொரு கணத்தையும் எப்படிச் செலவிட வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஓட்டிப் பார்ப்பீர்கள், அந்த டேட்டிங் சக்சஸ் ஆக வேண்டும் என நினைப்பீர்கள்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இல்லையா ?

அதே நேரம் மீட்டிங் என்றால் எப்படி இருக்கிறது நமது மனநிலை. மீட்டிங் துவங்கும் போது மீட்டிங் ரூம் காற்று வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கும். குறைந்த பட்சம் பத்து பதினைந்து நிமிடங்களாவது தாமதமாகத் தான் மீட்டிங் துவங்கும். வந்த பின்பும், “எதுக்குப்பா இந்த மீட்டிங் ?”  என்பதில் பாதி பேருக்கு குழப்பம் இருக்கும். சில வேளைகளில் மீட்டிங் அழைப்பு விடுத்தவருக்கே ஒரு தெளிவு இருக்காது. மீட்டிங் முடிந்த பின்பு, இது ஒரு வேஸ்ட் மீட்டிங் என்றோ, இந்த டைம்ல வேற ஏதாச்சும் செய்திருக்கலாம் என்றோ, மீட்டிங்கோட நோக்கம் முழுசா நிறைவேறலை என்றோ புலம்புவது வெகு சகஜம்.

ஒரு மீட்டிங் சரியாக நடத்தப்படவில்லையேல் அதன் முதல் பழி ஏற்க வேண்டியவர் புராஜக்ட் மேனேஜர் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு மீட்டிங்கை நடத்துவதொன்றும் கத்தரிக்கா வாங்குவது போல எளிதான விஷயம் அல்ல. காரணம் ஒவ்வொரு மீட்டிங்கும் பல்வேறு நபர்களின் ஒருங்கிணைப்பில் தான் நடத்தப்பட வேண்டும் என்பதில் உள்ள சிக்கல். அதனால் தான் மீட்டிங் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான சிறப்பான வழிமுறைகள் பல இருக்கின்றன. 

1. ஒரு மீட்டிங் ஏன் நடக்கிறது ? எதற்காக அந்த மீட்டிங் அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதில் தெளிவு வேண்டும். அப்போது தான் அந்த சந்திப்புக்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்பது தெரியவரும். மீட்டிங் துவங்கும் முன்பே அந்த மீட்டிங்கிற்கு வரவேண்டியவர்கள் எல்லோரும் வந்தார்களா என்பதையும் கவனித்து வருகைப் பதிவு செய்ய வேண்டும். 

2. யாரெல்லாம் மீட்டிங்கில் வரவேண்டும் என்பதை மிகக் கவனமாக யோசிக்க வேண்டும். எந்த விஷயத்தைப் பற்றி அந்த சந்திப்பு நடக்கிறதோ அந்த விஷயம் தான் கலந்து கொள்ள வேண்டிய‌ நபர்களை முடிவு செய்யும். முக்கியமான மூன்று வகையான நபர்கள் அழைக்கப்பட வேண்டும். ஒன்று, யாரிடமெல்லாம் அந்த தகவல் இருக்கிறதோ அந்த ஆட்கள். இரண்டு, யாருக்கெல்லாம் அந்த செய்தி சென்று சேரவேண்டுமோ அவர்கள். மூன்றாவது, யாரெல்லாம் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறாரோ அவர்கள். அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுப்பதும், அவர்கள் மீட்டிங்கில் கலந்து கொள்வதை உறுதி செய்வதும் புராஜக்ட் மேனேஜரின் கடமையாகும்.

3. மீட்டிங் அழைப்பு விடுக்கும் போது சரியான கால அளவு கொடுப்பது மிக மிக முக்கியமான விஷயம். அதுவும் முக்கியமான நபர்கள் வரவேண்டியிருந்தாலும், நிறைய பேர் பங்கு பெற வேண்டியிருந்தாலும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவசர நிலை தவிர வேறு எந்த விஷயத்துக்காகவும், திடீர் திடீரென மீட்டிங்கிற்கு அழைப்பு விடுக்கக் கூடாது. குறிப்பாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற சந்திப்புக்களுக்கு எல்லோருக்கும் வசதியான ஒரு நேரத்தை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

4. ஒருவேளை மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய நபர் பல நாடுகளிலும் இருந்தால், டைம் சோன் அதாவது அந்தந்த நாட்டின் நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். பணியாளர்களுடைய தனிப்பட்ட குடும்ப‌ நேரத்தைப் பாதிக்காத வகையில் அந்த மீட்டிங் நேரம் அமைய வேண்டும்.

5. அழைக்கப்பட்ட நபர்களுக்கு அந்த சந்திப்பின் காரணத்தையும், அந்த நபரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் முன்கூட்டியே தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். அப்போது தான் மக்கள் தயாராய் வருவார்கள். குறைந்த பட்ச தயாரிப்பாவது இருப்பது எந்த ஒரு சந்திப்பையும் வெற்றிகரமாய் முடிக்க உதவும். 

6. நிகழ்ச்சி நிரல் உருவாக்கப் பட‌ வேண்டியது மிக முக்கியம். என்னென்ன விஷயங்கள் அலசப்படப் போகின்றன. யாரெல்லாம் எந்தெந்த விஷயங்கள் பேசப் போகிறோம். என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் போன்றவையெல்லாம் நிகழ்ச்சி நிரலில் இருப்பது நல்லது. சரியான அஜென்டா இருந்தால் மீட்டிங் சரியான நேரத்தில் முடியவும் செய்யும், சரியான பாதையில் பயணிக்கவும் செய்யும். 

7.அஜென்டாவை புராஜக்ட் மேனேஜர் உருவாக்கியபின் அந்த மீட்டிங் அஜென்டாவில் எதையேனும் சேர்க்க வேண்டுமா என முக்கியமான நபர்களிடம் ஆலோசிக்க வேண்டியது அவரது கடமையாகும். மீட்டிங் துவங்கிய பின், “அதையும் பேசுவோமே, இதையும் பேசுவோமே, இதை மிஸ் பண்ணிட்டோமே” என புதிய ரூட் மாறாமல் இருப்பது ரொம்ப நல்லது.

8. முக்கியமான விஷயங்களில் ஒன்று, மீட்டிங் சரியான நேரத்தில் துவங்குவது. அதை விட முக்கியமான விஷயம் சரியான நேரத்தில் முடிவது. சாதாரண மீட்டிங் ஒரு அரை மணி நேரத்தில் முடிவது நல்லது. முக்கியமான மீட்டிங் எனில் ஒரு மணி நேரம் ! அதைத் தாண்டிய மீட்டிங் எல்லாம் தனது நோக்கத்தை நிறைவு செய்வதில்லை. அதனால் தான் இன்றைய தொழில்நுட்பம் “ஸ்டேன்ட் அப் மீட்டிங்” எனும் ஒரு சிந்தனையை அமுல்படுத்தியிருக்கிறது. இதன் படி, மீட்டிங் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் நடக்கும். யாரும் அமர முடியாது, நின்று கொண்டே தான் நடத்த வேண்டும். தினசரி ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு இந்த வகை மீட்டிங் ரொம்பவே கைகொடுக்கிறது. 

9. மீட்டிங் சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டியது மிக முக்கியம். “ஒருத்தரு வந்துட்டிருக்காரு.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” , “ஒருத்தரு பஜ்ஜி சாப்பிட்டிருக்காரு.. ரெண்டு நிமிஷம்” என்றெல்லாம் வருகின்ற சாக்குப் போக்குகளை ஒதுக்கித் தள்ளி விட்டு மீட்டிங்கை ஆரம்பிக்க வேண்டியது புராஜக்ட் மேனேஜரின் கடமைகளில் ஒன்று.

10. மினிட்ஸ் ஆஃப் த மீட்டிங் எனப்படும், மீட்டிங்கில் நடக்கும் விஷயங்களை குறித்து வைக்க வேண்டியதும் புராஜக்ட் மேனேஜரின் முக்கியமான கடமை. அந்த பணிக்காக அவர் இன்னொரு நபரையும் நியமிக்கலாம். ஆனால் அது மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது. அதில் முக்கியமாக என்னென்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன போன்றவை தவற விடாமல் பதிவு செய்யப்பட வேண்டும். அதை மீட்டிங் முடிந்தபின் அழைக்கப்பட்ட அனைவருக்கும் அனுப்பவும் வேண்டும். மீட்டிங் நடந்த 24 மணி நேரத்துக்குள் அது அனுப்பப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி. 

இந்த பத்து விஷயங்களையும் மனதில் கொண்டால் ஒரு மீட்டிங் வெற்றிகரமாக அமையும். அதன்பின் அந்த மீட்டிங்கில் நடந்த விஷயங்களைப் பற்றி எல்லோருக்கும் அறிவிப்பதும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கவனிப்பதும் புராஜக்ட் மேனேஜரின் வேலை. 

வழக்கமாக செய்ய வேண்டிய திட்டமிடப்பட்ட‌ மீட்டிங் களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அதிக பயனளிக்கும். “டெய்லி காலைல 11 மணிக்கு மீட்டிங்” என்றோ, “செவ்வாய்க்கிழமை நம்ம மீட்டிங் இருக்கு” என்றோ ஊழியர்களுடைய மனதில் அது பதிந்து விடும். இதன் மூலம் மீட்டிங்கை மிஸ் பண்ணாமல் எல்லோரும் கலந்து கொள்ள வழிவகை செய்யும்.

எல்லா மீட்டிங் களும் திட்டமிட்டு நடத்தப்பட முடியாது. சில மீட்டிங்களை திடீர் திடீரென தான் நடத்த வேண்டியிருக்கும். புராஜக்ட்ல ஒரு பிரச்சினை உடனே அதை சரி செய்யணும் எனும் எமர்ஜென்சி வரும்போது திடீர் மீட்டிங்கள் அழைக்கப்பட வேண்டும். ஆனால், அந்த சூழலில் கூட கூடுமானவரை அந்த மீட்டிங்கை கட்டுக்கோப்பாய் நடத்திக் கொண்டு போக வேண்டியது புராஜக்ட் மேனேஜரின் பணியாகும்.

முதலிலேயே சொன்னது போல, மீட்டிங் என்பது ஒரு டேட்டிங் போல முக்கியமானதாகக் கருதி அனைத்தையும் திட்டமிட வேண்டும். திட்டமிட்டபடி மீட்டிங்கை நடத்தவேண்டும். அந்த மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படும் வரை “ஃபாலோ அப்” செய்ய வேண்டும். 

*

சேவியர்

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்

எழுத்து ரொம்ப முக்கியம்

“ஒரு நாக்கு, ஒரு வாக்கு ! நான் சொன்னா சொன்னது தேன்…” என பழைய காலத்தில் கர்வமாகச் சொல்லுவார்கள். ஒரு வாக்கு சொன்னா அது கல்வெட்டில் எழுதியது போல ! அதை மாற்ற மாட்டார்கள். வாக்கை மாற்றி வாழ்வதை விட, வாழ்க்கையை முடித்து சாவதே மேல் எனும் எல்லைக்கும் செல்வார்கள். அது பழைய மானமுள்ள தமிழின வரலாறு. அதெல்லாம் இப்போ மலையேறி விட்டது. காலையில் சொன்னதையே, “எப்போ சொன்னேப்பா ?” என்றோ, “எது வேற அர்த்தத்துல சொன்னது, நீ தான் தப்பா புரிஞ்சுகிட்டே” என்றோ  சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலக பரப்பிலும் இதை காணலாம். தனது வேலைக்கு வேட்டு வரும் எனும் சூழல் உருவானால், சொன்னதையே மாற்றிப் பேசும் ஊழியர்கள் எக்கச்சக்கம் உன்டு. 

உண்மையைச் சொல்லி அதனால் வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட, பொய்யைச் சொல்லி இருக்கின்ற‌ பிரச்சினையை இன்னொருவர் தலையில் சுமத்துவதையே பெரும்பாலான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் தான் அலுவலகங்களைப் பொறுத்தவரை “ரிட்டன் கம்யூனிகேஷன்” எனப்படும் எழுத்து பூர்வமான தகவல் தொடர்பு மிக மிக முக்கியமானதாய்ப் பார்க்கப் படுகிறது. வார்த்தையை மாற்றிச் சொன்னால், “இதோ பாருப்பா, நீ தான் மெயில் அனுப்பியிருக்கே…” என ஆதாரத்தை முன்னெடுத்து வைக்க அது பயன்படும். 

ஒரு விஷயத்தை அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்வதற்கு இந்த எழுத்து பூர்வமான தகவல் பரிமாற்றம் பயன்படுத்தப்படுகிறது. அது டிஜிடல் வடிவிலான மின்னஞ்சலாகவோ, சாதாரண பேப்பர் ஃபைலாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சொன்னதெல்லாம் காற்றில் கரைந்து போகாதபடி கட்டி வைக்கும் ஏற்பாடுதான் இது என்பதே புரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகும்.

கடிதங்களில் எழுதும் போது, பல விஷயங்களை தெளிவாகவும் புள்ளி விவரங்களோடும் எழுத முடியும். தவறான தகவல் சென்று சேராதபடி கவனமாய் மின்னஞ்சலை எழுத முடியும். யாரையும் காயப்படுத்தக் கூடாதென எச்சரிக்கையாய் வார்த்தைகளை அமைக்கவும் முடியும். யோசித்து டைம் எடுத்து மெயில் எழுதவும் முடியும். “நாம் நேற்று பேசிக்கொண்ட படி, நான் இதைச் செய்யப் போகிறேன்” என்று சொல்லி, நேரிலோ போனிலோ பேசிய விஷயங்களையும் மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு ஆதாரமாகவும், தகவல்கள் மறந்து போகாமல் இருக்கவும், ஒரு புராஜக்ட் ஹிஸ்டரியாகவும் இருக்கும். 

எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றங்களில் உள்ள கெட்ட அம்சங்கள் என பார்த்தால், “உடனுக்குடன் கேள்வி கேட்டு பதில் பெற்றுக் கொள்ள முடியாது”. கடிதம் எழுதுபவருடைய உடல் மொழி என்ன என்பது வாசிக்கும் நபருக்குத் தெரிய வராது. அனுப்பிய கடிதத்தை எல்லோரும் படித்தார்களா, எல்லோருக்கும் புரிந்ததா, அதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. 

அலுவலக எழுத்து பூர்வமான கடிதப் போக்குவரத்துகளுக்கு சில வரைமுறைகள் உண்டு. அவை சரியாகப் பின்பற்றப்பட்டால் புராஜக்ட் வெற்றிகரமாக இருக்கும். அத்தகைய தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டியதும், வகைப்படுத்த வேண்டியதும் ஒரு புராஜக்ட் மேனேஜரின் முக்கியமான‌ கடமைகளில் ஒன்று. 

சரி, அலுவலகக் கடிதங்களுக்கு சில வழிகாட்டல்கள் உண்டு. 

1. ஒரு குறிப்பிட்ட வகையான ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் மின்னஞ்சல் இருப்பது நல்லது. ஒரே கட்டமைப்பில் மெயில் இருக்கும்போது தகவல்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எந்த தகவல் எந்த இடத்தில் கிடைக்கும் என்பது விரைவில் பழகிவிடும். ஒரு செய்தித்தாளை எடுத்ததும் நாலாம் பக்கத்தில் கட்டுரை இருக்கும் என சொல்வதைப் போல, இந்த ரிப்போர்ட்டில் இடது பக்கத்தில் வரவு செலவு இருக்கும், என‌ புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் புதிய புதிய வகையில் மெயில்கள் அமைந்தால் தகவல்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். 

2.  ஒரு மின்னஞ்சலில் பல முக்கியமான தகவல்களை இறுக்கித் திணிக்க கூடாது. அதிலும் குறிப்பாக, பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு மின்னஞ்சல் பயன்படுத்துவதே நல்லது. ஒரே மெயிலில் பல விஷயங்கள் அடுக்கும் போது அவற்றில் சில விஷயங்கள் கவனிக்கப் படாமல் போய்விடும். சின்னச் சின்னதாக பல மின்னஞ்சல்கள் அனுப்புவது, மிகப் பெரியதாக ஒரு மின்னஞ்சல் அனுப்புவதை விட ரொம்ப ரொம்ப நல்லது. எனவே ஒரு விஷயத்துக்கு ஒரு மின்னஞ்சல் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

3. மின்னஞ்சல் என்பது நீங்கள் சேக்ஷ்பியரின் கொள்ளுப் பேரன் என்பதைப் பறைசாற்றுவதற்கானது அல்ல. உங்கள் ஆங்கில புலமையை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அதே போல, உங்களுடைய தொழில்நுட்ப வார்த்தைப் பிரயோகங்களைக் கொட்டி காலரைத் தூக்கி விடும் இடமும் அல்ல. மிக எளிமையாக, எல்லா நிலையினருக்கும் புரியும் வகையில் எழுதுவதே சிறப்பானது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், மிக மிக எளிமையாய் எழுத, மிக அதிகத் திறமை வேண்டும் !

4. எழுத்துபூர்வமான மின்னஞ்சல் பரிமாற்றத்தில் கதையளப்பது சரியான வழிமுறை அல்ல. மிகத் தெளிவான, நேர்த்தியான, அளவிடக் கூடிய வகையிலான தகவல்களை இணைப்பதே சிறந்த வழிமுறை. அளவெடுத்துத் தைத்த சட்டை போல கன கட்சிதமாக எழுதப் பழக வேண்டும். 

5. ஒரு மின்னஞ்சல் அனுப்பும்போது அதை வாசிக்கும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு புறம். அது போல, வாசிப்பவர்கள் ஏதேனும் பதில் சொல்ல வேண்டுமெனில், அல்லது ஏதாவது செயல்பட வேண்டுமெனில் அதை மிகத் தெளிவாக மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டியது இன்னொரு புறம். இரண்டு புறமும் சரியாக இருக்க வேண்டும். 

6. ஒரே மாதிரியான எழுத்துரு, நெருக்கியடிக்கும் ஷேர் ஆட்டோ போல ஒழுங்கற்ற தகவல்கள், இவையெல்லாம் எழுத்து தகவல் தொடர்பை வலுவிழக்கச் செய்யும் காரணிகள். வாசிப்பவர்களை அது வசீகரிக்காது. அவர்களால் அதை எளிதில் புரிந்து கொள்ளவும் முடியாது. எனவே மின்னஞ்சலில் முக்கியமான வார்த்தைகளை வேறு வண்ணத்திலோ, போல்ட் எழுத்துகளிலோ, வேறு எழுத்துருவிலோ அல்லது அதே போன்ற ஏதோ ஒரு புதிய வகையிலோ பதிவு செய்வது மிகவும் பயனளிக்கும். எழுதிய தகவல்கள் முழுமையாய் வாசிப்பவரைச் சென்றடைய இது உறுதுணையாய் இருக்கும். 

7. மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மின்னஞ்சல் சுருக்கமாக, தெளிவாக, எளிமையாக, சரியான தகவல்களோடு இருக்க வேண்டும் என்பது தான். 

சரி, இந்தத் தகவல் பரிமாற்ற ஏரியாவில் இன்னொரு முக்கியமான விஷயம் மீட்டிங் சம்பந்தப்பட்டது. 

மீட்டிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகிற மக்கள் தான் அதிகம். அதற்கு பல காரணங்கள் உண்டு. பல மீட்டிங்கள் சரியான நேரத்தில் ஆரம்பிப்ப்பதே இல்லை. மீட்டிங் மீட்டிங் என காத்திருந்து கால விரையம் ஆவது ஒரு முக்கிய பிரச்சினை. 

பல மீட்டிங்கள் ஒரு குறிப்பிட்ட அஜென்டாவைக் ( நிகழ்ச்சி நிரல் ) கொண்டிருப்பதில்லை. ‘எல்லாரும் வந்துட்டீங்களா, நாம இந்த புராஜக்டைப் பற்றி பேசுவோம்..” என ஆரம்பித்து தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் மீட்டிங் நீண்டு கொண்டே போகும். கடைசியில் மீட்டிங் கூப்பிட்டவர் எதுக்காகக் கூப்பிட்டாரோ அந்த விஷயத்தைத் தவிர எல்லாவற்றையும் பேசி விட்டுக் கலைந்து போவதும் நடக்கும். 

இன்னும் சில மீட்டிங்கள் முடிந்து போன விஷயங்களைப் பற்றியே பேசி நேரத்தை வீணடிக்கும். போன மீட்டிங், அதுக்கு முந்தின மீட்டிங் போன்றவற்றில் பேசியவையே மீண்டும் விக்கிரமாதித்ய வேதாளமாய் முருங்கை மரம் ஏறும். 

உண்மையில் மீட்டிங் என்பது ஒரு அலுவலகத்தில் மிக மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்ற விஷயம். பல நபர்களுக்கு ஒரே நேரத்தில், சரியான தகவலைப் பகிர்வதற்கு மீட்டிங்கே மிகச் சிறந்த இடம். எல்லோரும் புரிந்து கொள்கிறார்களா என்பதைக் கவனிக்கவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், மீட்டிங் வழிவகை செய்யும். சில முக்கியமான முடிவுகளைக் குறித்து அலசி முடிவெடுக்கும் மீட்டிங்கள் ஒவ்வொரு புராஜக்டுக்கும் மிக மிக முக்கியமானவை.

ஒரு புராஜக்ட் மேனேஜரின் பணிகளில் மிக முக்கியமான ஒன்று, அவர் எப்படி மீட்டிங்களை நடத்துகிறார் என்பதாகும். ஒரு மீட்டிங் எப்படி இருக்க வேண்டும், அதற்கு என்னென்ன தயாரிப்புகள் தேவைப்படும் ?,  எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் போன்றவையெல்லாம் ஒரு தனி ஏரியா என்பதால் அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

*

சேவியர்

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்

16. கம்யூனிகேஷன்

சைனீஸ் விஸ்பர் என்றொரு விளையாட்டு கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பத்து பதினைந்து பேர் ஒரு வரிசையில் நிற்பார்கள். அல்லது ஒரு பெரிய வட்டமாக நிற்பார்கள். முதலில் நிற்பவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்படும். அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியத்தை அவர் வாசிக்க வேண்டும். பின்னர் துண்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இப்போது வாசித்த நபர், தான் வாசித்த விஷயத்தை தனக்கு அருகில் நிற்பவருடைய காதில் மிக ரகசியமாகச் சொல்ல வேண்டும். வேறு யாருக்கும் கேட்கக் கூடாது.

அந்த நபர் அந்த செய்தியை அவருக்கு அடுத்திருக்கும் நபருக்குச் சொல்ல வேண்டும். அதைக் கேட்ட அந்த நபர் அடுத்த நபருக்குச் சொல்ல வேண்டும். இப்படி அந்த செய்தி ஒவ்வொரு காதாகத் தாண்டி, கடைசியாய் நிற்கும் நபரிடம் சென்று சேரும். அப்படி சென்று சேர்ந்த செய்தி என்ன என்பதை அவர் கடைசியில் உரக்கச் சொல்ல வேண்டும். இப்போது எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன என்பதை வாசித்துக் காட்டுவார்கள். 

சின்ன விளையாட்டு தானே என தோன்றும். ஆனால், இந்த விளையாட்டின் முடிவு மிகவும் வியப்பானதாக இருக்கும். முதலில் பேப்பரில் எழுதப்பட்டிருந்த‌ செய்திக்கும், கடைசியில் சென்று சேரும் செய்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் உண்டாகியிருக்கும். கம்யூனிகேஷனின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் போது இந்தக் கதையை உதாரணமாகச் சொல்வார்கள். 

ஒரு புராஜக்ட் மேனேஜரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதியம் கம்யூனிகேஷன். சரியான நேரத்தில், சரியான செய்தியை, சரியான குழுவுக்குப் பகிர்வது இந்த‌ கம்யூனிகேஷனின் அடிப்படை. “ஓவர் கம்யூனிகேஷன் ஈஸ் பெட்டர் தேன் நோ கம்யூனிகேஷன்” என ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதாவது, “தகவல்களைப் பகிராமல் இருப்பதை விட, அளவுக்கு அதிகமாகவே தகவல்களைப் பகிர்வது நல்லது” என்பது தான் அது.

புராஜக்ட் என்றல்ல‌. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் சரியான கம்யூனிகேஷன் தான் வெற்றிகளைக் கொண்டு வரும். வாழ்க்கையானாலும் சரி, உறவுகளானாலும் சரி, புராஜக்ட் ஆனாலும் சரி வெளிப்படையான நேர்மையான சரியான தகவல் பரிமாற்றங்களே வெற்றிக்கு அடிப்படை. 

புராஜக்டில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அவர்களை வழிநடத்துபவர்கள், ஏதோ ஒரு வகையில் புராஜக்டோடு  தொடர்புடையவர்கள் அனைவரும் புராஜக்ட் எந்த நிலமையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும். “எனக்கு இது தெரியாதே !” என கடைசி நிமிட கலாட்டாக்கள் உருவாகாமல் இருக்கவும் இந்த கம்யூனிகேஷன் ரொம்ப முக்கியம்.

ஏதாவது ஒரு பிரச்சினை எழுந்தால் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இந்த நிலையான தகவல் தொடர்பு பயன்படும். பல வேளைகளில் பிரச்சினைகள் உருவாகாமல் இந்த கம்யூனிகேஷன் நம்மைக் காப்பாற்றவும் செய்யும். “என்கிட்டே சொல்லியிருந்தா, இந்த பிரச்சினையை ஈசியா முடிச்சிருப்பேன்” என சொல்வதைக் கேட்டிருப்பீர்கள் இல்லையா ? அந்த சிக்கல்கள் வராமல் இது காப்பாற்றும்.

புராஜக்ட் எந்த எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனும் தெளிவான ரூட் அனைவருக்கும் தெரிய வரும். கொஞ்சம் பாதை மாறினால் கூட, ” இது சரியில்லை, இதை இப்படி பண்ணணும்” என ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்த‌ கம்யூனிகேஷன் வழி வகை செய்யும். 

புராஜக்ட் ஒவ்வொரு மைல் கல்லை அடையும் போதும், உற்சாகமடையவும், ஊக்கமடையவும் இத்தகைய தொடர்பு பயனளிக்கும். “பரவாயில்லை, இவ்ளோ வந்துட்டோம் எனும் ஒரு தன்னம்பிக்கையை இது உருவாக்கும் “

புராஜக்ட்சில் உள்ளவர்களும், அதோடு தொடர்புடையவர்களும் ஒரு நல்ல புரிதலோடு செயலாற்ற இந்த தொடர்பாடல் உதவும். 

கம்யூனிகேஷன் ஒரு சின்ன மேட்டர் என பலரும் நினைப்பதுண்டு. எப்படி ஒரு மாட்டு வண்டிக்கு ஒரு சிறிய அச்சாணி முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தான் இந்த கம்யூனிகேஷனும். இதை உதாசீனப்படுத்தினால் நிச்சயம் பல எதிர்பாராத சவால்கள் புராஜக்ட்டில் வந்து விழும் என்பதில் சந்தேகமில்லை. 

கம்யூனிகேஷனை மிகச் சரியாகச் செயல்படுத்தும் நிறுவனங்களும், புராஜக்ட்களும் வெற்றிகளைக் குவிக்கும். நாம் சொல்ல வருகின்ற செய்தி சிதையாமல், பெற்றுக் கொள்ளும் நபரை அடைய வேண்டும் என்பதே கம்யூனிகேஷனின் அடிப்படைத் தத்துவம். 

இதில் ஐந்து முக்கியமான அம்சங்கள் உண்டு.

1. சொல்ல வேண்டிய செய்தி என்ன ?

2. அதைச் சொல்லப் போகிறவர் யார்

3. யாருக்காக அதைச் சொல்லப் போகிறார் ? 

4. எப்படி அதை சொல்லப் போகிறார் ? எழுத்து, குரல், ஓவியம், செய்கை இப்படி ஏதோ ஒன்று. 

5. எதன் வழியாக ( மீடியம் ) அதைச் சொல்லப் போகிறார் ? 

எந்த ஒரு தகவல் பரிமாற்றத்தின் போதும் இந்த அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். இதன் மாறுதல்களுக்கு ஏற்ப கம்யூனிகேஷனில் மாற்றம் இருக்கும்.

இந்த தகவல் பரிமாற்றத்தில் இரண்டு வகை உண்டு. 

1. ஒரு வழிச் செய்திப் பரிமாற்றம். ஒன்வே கம்யூனிகேஷன். இதில் ஒரு நபர் ஒரு செய்தியைச் சொல்வார். அடுத்த நபர் அதைக் கேட்டு புரிந்து கொள்வார் அவ்வளவு தான். உதாரணமாக கம்பெனியின் தலைவர் ஊழியர்களுக்கு ஒரு சுற்று மடல் அனுப்புகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வழிச் செய்தி. அதில் நாம் எதையும் திரும்ப சொல்ல தேவையில்லை. அல்லது ஒரு இணைய தளத்திலிருந்து ஒரு தகவலை தரவிறக்கம் செய்கிறீர்கள். அது ஒன்வே கம்யூனிகேஷன்.

2. இரு வழிப் பாதை. இது ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்பதும். அதற்கு அவர் பதில் சொல்வதுமாக இருக்கும். நேரடியாகப் பேசும் உரையாடல்கள், தொலைபேசி மூலம் பேசும் உரையாடல்கள் போன்றவையெல்லாம் இரு வழிப் பாதையின் உதாரணங்கள். குரல் மூலமாகவோ, உடல் மொழியின் மூலமாகவோ நாம் இங்கெல்லாம் தகவலைப் பரிமாற்றம் செய்ய முடியும். இருவழிக் கம்யூனிகேஷன் தான் மிக முக்கியமானதும், வலிமையானதும் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. 

கம்யூனிகேஷன் என்றதும் பேசுவது என்று தான் நாம் எல்லோரும் நினைக்கிறோம். பேசுவதைப் போலவே மிக முக்கியமான அம்சம் “கவனித்தல்/கேட்டல்” என்பதாகும். பேசுவதும், கேட்பதும், புரிந்து கொள்வதும் இணையும் போது தான் ஒரு தகவல் பரிமாற்றம் நேர்த்தியாகத் தன் பணியைச் செய்து முடித்தது என சொல்ல முடியும். 

சொல்வதை அப்படியே புரிந்து கொள்ளும் வகையில் கேட்பதை, “ஆக்டிவ் லிசனிங்” என்பார்கள். “நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்கே” போன்றவையெல்லாம் தகவல் பரிமாற்றத் தோல்வியின் வாசகங்கள். 

மனித மூளை எல்லா செய்திகளையும் காட்சிகளாகச் சேமிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். நாம் வார்த்தைகளாய்ச் சொல்லும் விஷயங்கள் கூட படங்களாக இருந்தால் மிக எளிதாக மூளையில் பற்றிக் கொள்ளும். அதனால் தான் கம்யூனிகேஷனில் காட்சிப் படுத்துதலை முக்கியமான ஒரு அம்சமாகச் சொல்வார்கள். சொல்லப்படுகின்ற வார்த்தையை ஒரு காட்சி போலவோ, ஒரு ஓவியம் போலவோ மனதில் தீட்டிக் கொள்வது இதில் ஒரு வகை.

பெற்றுக் கொண்ட செய்தியை மீண்டும் ஒரு முறை சொல்லி ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது தகவல் பரிமாற்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை. வடிவேலு நகைச்சுவை ஒன்று உண்டு. பத்து நிமிடம் பக்குவமாய் எப்படிப்பட்ட தோசை வேண்டுமென வடிவேலு விளக்குவார். சர்வரோ கடைசியில், “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என முடிப்பார். வடிவேலு அதிர்ச்சியுடன் பார்ப்பார். சொல்ல வேண்டிய செய்தியைத் தெளிவாகச் சொல்லியாச்சு, ஆனால் கேட்க வேண்டியவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இது கம்யூனிகேஷன் தோல்வியே.

ஒரு செய்தியைப் பெற்றுக் கொள்ளும் போது, சந்தேகங்களையும், அனுமானங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அது தான் செய்தியின் முழுமைக்கு உதவும். 

இந்த தகவல் தொடர்பிலும் “முறையான தகவல் தொடர்பு”, “முறைகளைப் பின்பற்றாத தகவல் தொடர்பு” என இரண்டு வகையைச் சொல்லலாம். ஃபார்மல் அன்ட் இன்ஃபார்மல் கம்யூனிகேஷன். “அஸ் ஐ ஏம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்” என நாம் சின்ன வயதில் எழுதுகின்ற லீவ் லெட்டர்களை முறையான தகவல் தொடர்பின் உதாரணமய்க் கொள்ளலாம். அது ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் இருக்கும். அதன் வடிவம் மாறாது. 

மற்றது வெகு இயல்பாக நடக்கும் தகவல் பரிமாற்றம். கடிதம் எழுதிக் கொடுத்த அதே ஆசிரியரை கடை வீதியில் சந்தித்தால், “நல்லாயிருக்கீங்களா சார்” என அழைத்து நாம் நிகழ்த்தும் குட்டி உரையாடல் இந்த வகையில் வரும். அலுவலகத்திலும் முறையான மின்னஞ்சல், கடிதப் பரிமாற்றமாக இல்லாமல் சாதாரணமாக நிகழும் உரையாடல்கள் இந்த வகையில் வரும்.

கம்யூனிகேஷனைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்

*

சேவியர்

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….

15

ரீ பேஸ்லைன் என்றால் என்ன

புராஜக்ட் மேனேஜ்மென்டில் அதிகம் கேட்கின்ற வார்த்தை “பேஸ்லைன்” என்பது. அதாவது ஒரு புராஜக்டின் மைல் கற்களைக் குறிப்பிடும் மதிப்பு தான் அது. அது புராஜக்டின் டெலிவரி நாளாக இருக்கலாம், அல்லது ஒரு சோதனையில் கிடைக்க வேண்டுமென தீர்மானித்திருக்கின்ற மதிப்பாகவும் சரி. முதலில் திட்டமிட்டு வைக்கின்ற மதிப்பு தான் பேஸ்லைன் என்பது.

உதாரணமாக, இந்த மாதம் 1000 கார்களை உற்பத்தி செய்யவேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை பேஸ்லைன் 1000 என்பார்கள். ஒருவேளை அடுத்த மாதம் 15ம் தியதிக்கு முன்பு ஒரு பொருளைத் தயாரித்து முடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை பேஸ்லைன் அடுத்த மாதம் பதினைந்தாம் தியதி என்பார்கள். 

சரி, ரீ பேஸ்லைன் என்றால் என்ன ? மீண்டும் ஒரு முறை அந்த பேஸ்லைன் மதிப்புகளை ஆராய்ந்து, புதிதாக ஒரு மதிப்பை வைப்பது தான் ரீ பேஸ்லைன். அது ஏன் புதிதாக ஒரு எல்லையை வரையறுக்க வேண்டும் ? அது பெரும்பாலும் ஒரு புராஜக்ட் எதிர்பார்த்த திசையில், எதிர்பார்த்த வேகத்தில் போகாமல் இருக்கும்போது மாற்றுவது. 

உதாரணமாக ஆறு மாத காலத்தில் ஒரு வீடு கட்டி முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது என வைத்துக் கொள்ளுங்கள். முதல் மாதத்தில் அஸ்திவாரம், அடுத்த மாதம் கட்டுமானம், அதற்கடுத்தமாதம் காங்கிரீட் என மைல் கற்கள் இருக்கும். ஒருவேளை நான்காம் மாதத்தில் தான் அஸ்திவாரம் முடிந்தது என வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதத்தில் வீடு கட்டி முடிப்பது இயலாத காரியமாகிவிடும். அப்போது சரி, ” வீடு கட்டி முடிக்கும் நாளை, இன்னும் ஒரு நாலு மாசம் தள்ளி வைப்போம்” என்பார்கள். அந்த புதிய நாள் தான் ‘ரீ பேஸ்லைன் டேட்’. ஏன் நாள் தள்ளி வைக்கப்பட்டது என்பதன் காரணத்தையும் கூடவே பதிவு செய்து வைக்க வேண்டும். ஒருவேளை அஸ்திவாரம் போட முடியாதபடி பெரு மழை பெய்து கொண்டிருக்கலாம், அல்லது பணியாளர்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம், இப்படி ஏதோ ஒரு காரணம் இருக்கும். இவையெல்லாம் ரீபேஸ்லைனுக்கான காரணங்களாய் பதிவு செய்ய வேண்டும். 

ரீபேஸ்லைன் என்பதை ஒரு புராஜக்ட் மேனேஜர் தான் விரும்பும் நேரத்தில், தனது இஷ்டப்படி செய்ய முடியாது. அதற்கு சில வரைமுறைகள் உண்டு. முதலில் அந்த புராஜக்ட் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களை எல்லாம் அழைத்து, புதிய நாள் என்னவாக இருக்கும் ? ஏன் பழைய நாளை மாற்ற வேண்டிய தேவை வந்தது போன்றவற்றையெல்லாம் விளக்க வேண்டும். அவர்களுடைய ஒப்புதல் மிக முக்கியம். அதே போல, புதிய பேஸ் லைன் உருவாக்கியதும், புராஜக்டிலுள்ள அத்தனை நபர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தவும் வேண்டும். 

பழைய பேஸ்லைன், அதன் திட்டங்கள் அதில் செய்த மாற்றங்கள் போன்ற அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். புராஜக்ட் முடியும் போது அது கடந்து வந்த வரலாற்றைப் பதிவு செய்து வைக்க வேண்டியதும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக ‘ரெட்ரோஸ்பெக்டிவ்” எனப்படும் புராஜக்ட்டுக்குப் பிந்தைய அலசலுக்கு இந்த தகவல்களெல்லாம் மிக முக்கியம். 

ஒரு திட்டம் இடப்பட்டால் அது மாற்றத்துக்கு உட்படாது என சொல்ல முடியாது. ஒரு பொருளைச் சந்தைப்படுத்த தாமதம் ஏற்பட்டால் ரீ பேஸ்லைன் தேவைப்படும். கஸ்டமருடைய தேவை மாறலாம். ‘இனிமே இப்படி வேண்டாம், அப்படி பண்ணு’ என கஸ்டமர் புதிய தேவையை வெளிப்படுத்தலாம். சட்டென ஒரு புதிய தொழில்நுட்பம் வந்து பழைய திட்டத்தை அழிக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களிலெல்லாம் பேஸ்லைன் நாட்களை மாற்றி புதிய ரீ..பேஸ்லைன் செய்ய வேண்டிய தேவை வரும். 

ஒரு புராஜக்டில் ரீபேஸ்லைன் செய்ய வேண்டிய தேவை வருவது புராஜக்ட் சரியாகச் செல்லவில்லை என்பதன் அடையாளம். சில வேளைகளில் சூழலுக்கு ஏற்ப புராஜக்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் புராஜக்டை ரீபேஸ்லைன் செய்ய வைக்கும். எனவே எந்த புதிய வேலை வந்தாலும் உடனே சட்டென ஒத்துக் கொள்ளக் கூடாது, அதை அலசி ஆராய வேண்டும். 

1. புராஜக்டில் ஒரு மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், ‘அது என்ன மாற்றம்’ என்பதை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மாற்றம் குறித்த தெளிவான ஒப்புதல் எல்லோரிடமிருந்தும் பெறப்பட வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா எனும் முடிவை எடுக்க வேண்டும். அப்படி முடிவை எடுக்கும் போது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். 

2. அந்த புதிய விஷயம் புராஜட்டில் கொண்டு வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை இம்பேக்ட் அனாலிசிஸ் என்பார்கள். ஒருவேளை அந்த மாற்றத்தை செய்ய வேண்டாமென முடிவெடுத்தால், என்ன பாதிப்புகள் புராஜக்டுக்கு உருவாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புராஜக்ட் மேனேஜரின் தேவை இந்த இடத்தில் மிக முக்கியம். 

3. அந்த மாற்றத்தை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்பதை மிகத் தெளிவாக இம்ப்ளிமென்டேஷன் பிளான் என எழுதி வைக்க வேண்டும். அந்த மாற்றம் கொண்டு வரக் கூடிய ஷெட்யூல் மாற்றம்,  பட்ஜெட் மாற்றம் போன்ற அனைத்தையும் குறித்து வைக்க வேண்டும். அதை புராஜக்டோடு சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவும் வேண்டும்.  

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் “எப்படின்னாலும் மாற்றம் வரும்” எனும் சிந்தனையில் ஒரு திட்டத்தை உருவாக்கவே கூடாது. “இப்போதைக்கு இப்படியே போகட்டும், கடைசில எப்படியும் மாற்றம் வரும் அப்போ பாத்துக்கலாம்” எனும் அடிப்படையில் உருவாக்கப்படும் திட்டவரைவுகள் சிறப்பானவை அல்ல. ஒரு புராஜக்ட் மேனேஜரின் தோல்வி அது என சொல்லலாம். மாறாக, ஒரு திட்டத்தை உருவாக்கும் போது அதில் பிற்காலத்தில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனுமளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாகக் கவனித்துச் செய்ய வேண்டும். 

சிறந்த ஹாலிவுட் இயக்குனர்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன் அந்தப் படத்தின் கதையை முழுமையாக எழுதுவார்கள். அதன்பின் அந்தப் படத்தின் காட்சிகளை கண்முண் கொண்டுவரும் விதத்தில் ஒவ்வொரு காட்சியையும் கார்ட்டூனாக வரைவார்கள். அதற்கே பல ஆண்டுகள் ஆவதுண்டு. அந்த கார்ட்டூன் படத்தில் எங்கிருந்து வெளிச்சம் வரவேண்டும், என்னென்ன பொருட்கள் காட்சியில் இருக்கவேண்டும், நடிகர்கள் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என அத்தனை விஷயங்களையும் வரைவார்கள். அதன்பின் அவர்கள் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அந்த கார்ட்டூன் படத்தில் உள்ளதை நிஜத்தில் எடுக்க வேண்டும் அவ்வளவு தான். 

இந்த முறையில் படப்பிடிப்பு காலத்தில் கதையையோ, காட்சிகளையோ யோசித்து குழம்ப வேண்டிய தேவையில்லை. கடைசி கட்ட மாறுதல்கள் பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதையும் தடுக்கலாம். அதை விட்டு விட்டு, ஒரு காட்சியை மேலோட்டமாக மனதில் நினைத்துவிட்டு செட்ல போய் பாத்துக்கலாம், என நினைத்தால் அது பல மாற்றங்களைக் கொண்டு வந்து, கடைசியில் புராஜக்டே தோல்வியில் முடியவும் வாய்ப்பு உண்டு. எனவே திட்டமிடலும், அதை மிக நேர்த்தியாக முதலிலேயே அலசி ஆராய்வதும் மிக மிக முக்கிய அம்சங்கள்

ஒரு திட்டத்தை உருவாக்கியபின்பு புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் காலத்தில் புதிது புதிதாக மாற்றங்கள் வருவது, முதலில் போட்ட திட்டத்தை வலுவிழக்கச் செய்யும். ஒரு புராஜக்டில் என்னென்ன இருக்க வேண்டும் எனும் பட்டியலை “ஸ்கோப்” என்பார்கள். அந்த ஸ்கோப்பின் அடிப்படையில் தான் திட்டங்கள் அமையும். அதில் வருகின்ற மாற்றங்களை, “ஸ்கோப் கிரீப்” என்பார்கள். முதலில் சொன்ன விஷயங்கள் இல்லாமல் மீண்டும் சிலவற்றைச் சேர்ப்பது தான் அது. 

ஒரு கதையைச் சொல்லி படம் எடுக்க ஆரம்பித்த பிறகு, தயாரிப்பாளர் கடைசியில் வந்து, “இந்த இடத்துல ஒரு பாட்டு போட்டுருப்பா” என சொன்னால் அது ஸ்கோப் கிரீப். காரணம், அந்த படத்துக்கான ஷெட்யூல், செலவு, கால அளவு, எதிலும் அது சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அது தேவையாகிறது. இப்போது ஸ்கோப் & ஸ்கோப் கிரீப் பற்றி உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதைப் பற்றி இங்கே சொல்லக் காரணம், “எந்த ஒரு ஸ்கோப் கிரீப்பும், பேஸ்லைனை ஆட்டம் காண வைத்து, ரீ பேஸ்லைன் செய்ய வைக்கும்” என்பது தான். ஒரு புதிய மாறுதல் வந்தும், பிளானில் எந்த மாற்றமும் வராத சூழல் மிகவும் அபூர்வம். 

*

சேவியர்

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்

14

கவனித்தல்

பிள்ளைகளை ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்க்க வேண்டும் என்பது எல்லா பெற்றோரிடமும் இருக்கக் கூடிய ஒரு பதட்டம் கலந்த எதிர்பார்ப்பு. அதற்காக பல ஸ்கூல் வாசல்களில் ஏறி இறங்கி விண்ணப்பப் படிவம் வாங்குவார்கள். அதன் பின் அதை நிரப்பி ஸ்கூல்களில் கொடுத்து, நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, பிரார்த்தனைகள் செய்து, மிகப்பெரிய பணத்தையும் வாரி இறைத்து நல்ல ஒரு இடத்தில் அட்மிஷன் வாங்குவார்கள். அதன் பின்பு பெரும்பாலான பெற்றோர்கள், இனியெல்லாம் பள்ளிக்கூடம் பார்த்துக் கொள்ளும் என ஹாயாக அமர்ந்து விடுவார்கள். 

பெற்றோர் தொடர்ந்து கவனிக்காமல் இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பு நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு அதிகம். அப்புறம் மார்க் வரும்போ தான் தெரியும் பிள்ளை நினைத்த அளவுக்கு படிப்பில் சுட்டியாக இல்லை என்பது. அப்படிப்பட்ட ஒரு சூழல் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் ?  ஒவ்வொரு நாளும் குழந்தை என்ன படிக்கிறது, எப்படி படிக்கிறது ? படிப்பதற்கு வேண்டிய சூழல் இருக்கிறதா ? ஏதேனும் தேவைகள் இருக்கிறதா ? குழந்தைக்கு ஏதேனும் மன வருத்தங்கள் இருக்கிறதா ? என ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கவனிப்பதும், அதற்கேற்க செயல்படுவதும் தான். 

புராஜக்ட் விஷயத்திலும் அப்படித் தான். ஆட்களை நியமித்தாயிற்று வேலை தொடங்கியாயிற்று என ஹாயாக ஓய்வெடுத்தால் புராஜக்ட் நினைத்த வேகத்தில் நகராது. ஆமை போல நடக்கத் தொடங்கும். சில வேளைகளில் தவறான திசையில் பயணிக்கவும் செய்யும். எனவே தான் இந்த ‘மானிட்டரிங் & கன்ட்ரோல்’ எனப்படும் தொடர்ந்து கவனிப்பதும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மிகவும் முக்கியமான அம்சமாகிறது.

முதலில் புராஜக்ட் துவங்கும் முன்பாகவே புராஜக்டில் பணி செய்யப் போகின்ற அத்தனை நபர்களையும் சந்தித்து அவர்களிடம் வேலையைப் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்  ?

எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் ?

எவ்வளவு உழைப்பு தேவைப்படும் ?

போன்ற விஷயங்களெல்லாம் பணியாளர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தெளிவை உருவாக்குவது கொள்வது முதல் நிலை. 

அதன் பின் ஒரு குறிப்பிட்ட மைல் கல்லை எட்டியபிறகு பணியாளர்கள் எப்படிப் பணி செய்திருக்கிறார்கள் என்பதைக் குறித்த ஒரு அலசல் மிக முக்கியம். அதிலும் குறிப்பாக, நீண்ட கால புராஜக்ட்களுக்கு இத்தகைய பரிசோதனை மிகவும் தேவை. 

கொடுக்கப்பட்டுள்ள பணிகளை முடித்திருக்கிறார்களா ?

எந்த நாளில் அந்த வேலை முடிக்கப்பட்டது ? யார் முடித்தது ? அந்த நாளுக்கும் திட்டமிட்ட நாளுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன ?

இடைப்பட்ட மைல் கற்களை எந்தெந்த தேதிகளில் எட்டினார்கள் ? 

ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் ?

எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?

எவ்வளவு உதவிகள் தேவைப்பட்டன ?

வேலை முடிக்கும் வரை அந்த பணியாளர் வேலையையும், அவருடைய அதிகாரிகளையும் எதிர்கொண்ட விதம் எப்படி இருந்தது ?

இப்படிப்பட்ட தகவல்களை கவனமாகச் சேமித்து, அந்த நபருக்குரிய அடுத்த கட்ட பணிகளைக் கொடுக்கலாம். அவருக்கு போனஸ், அங்கீகாரம் போன்றவற்றைக் கொடுப்பது பற்றிய முடிவையும் எடுக்கலாம். இத்தகைய தகவல்கள் ஹிஸ்டாரிக் டேட்டாவாக அடுத்து வருகின்ற புராஜக்ட்களுக்குக் கைகொடுக்கும். 

ஒருவேளை எதிர்பார்த்த அளவுக்கு ஒரு நபர் பணி செய்யவில்லையெனில் அதை சரிபடுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட நேரம் கிடைக்கும். குறிப்பாக ஒவ்வொரு மைல்கல்லுக்கும் இடையே அந்த நபருடைய செயல்பாட்டைக் கவனித்து வந்தால், சரியான ஆலோசனையும், பயிற்சியும் அந்தந்த நேரங்களில் கொடுக்க முடியும். 

பொதுவாக நம்முடைய புராஜக்ட் எவ்வளவு பெரியது என்பதை மனதில் வைத்து இந்த ரிவ்யூ காலத்தை நிர்ணயிக்கலாம். சில வேலைகள் அதிக ரிஸ்க் இல்லாததாய் இருக்கும், அங்கே அடிக்கடி கவனிக்கத் தேவையில்லை. சில இடங்கள் ரிஸ்க் அதிகமானதாக இருக்கும் அந்த இடங்களில் அதிக கவனிப்பை நாம் செலுத்த வேண்டும். 

நமக்கு தெரிஞ்ச டீம் தானே, நமக்குத் தெரிஞ்ச மக்கள் தானே, இதுக்கு முன்னாடியும் இப்படிப்பட்ட புராஜக்ட் செஞ்சிருக்காங்களே, இவங்க கிட்டே போய் மறுபடியும் மறுபடியும் பேசணுமா ? என ஒரு புராஜக்ட் மேனேஜர் நினைக்கவே கூடாது. எப்படி டிராபிக்கை நெறிப்படுத்தவும், கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஒரு டிராபிக் காவலர் தேவையோ அப்படியே ஒரு புராஜக்டை கட்டுக்குள் வைத்துக் கவனிக்க ஒரு புராஜக்ட் மேனேஜர் ரொம்ப அவசியம். இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடல்ல, கொடுக்கப்பட்டிருக்கும் பணி சிறப்பாகச் செயல்பட அவசியமான ஒரு அணுகுமுறை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பணிகளை மேனேஜர் கவனிப்பதும், ஆலோசனை கூறுவதும் குழுவிலுள்ளவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருக்கவேண்டுமே தவிர எரிச்சல் மூட்டுவதாய் இருக்கக் கூடாது என்பது பாலபாடம். அதனால் தான் புராஜக்ட் மேனேஜர்களுக்கு “இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ்” மிக மிக முக்கியம் என்கின்றனர் வல்லுநர்கள். 

ஒரு புராஜக்ட் எப்படி போயிட்டிருக்கு என்பதை அறிந்து கொள்ள நிறைய வழிகள் உண்டு. நிறைய மென்பொருட்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அவற்றை “மேஜேன்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்” என்பார்கள். நாம் கொடுக்கின்ற தகவல்களைப் பெற்று, நமது இலக்குகளோடு  ஒப்பிட்டு, ஒரு ரிப்போர்ட்டை தருவது தான் இத்தகைய மென்பொருட்களின் முதன்மை வேலை. பல நிறுவனங்கள் இத்தகைய மென்பொருட்களை உருவாக்கியிருக்கின்றன. புராஜக்டின் தேவைக்கு ஏற்ப இலவச மென்பொருட்களையோ (ஃப்ரீவேர் ), பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டிய மென்பொருட்களையோ (லைசன்ஸ்ட் வெர்ஷன்ஸ்) பயன்படுத்தலாம். 

புராஜக்ட்டின் முன்னேற்றத்தைக் கணக்கிடுவதற்குப் பல வகைகள் உண்டு. பத்து நாளில் செய்து முடிக்க வேண்டிய வேலை மூன்று நாள் முடிவில், 30% முடிவடைந்தது என சொல்ல முடியாது. தீக்குச்சி அடுக்குவது போன்ற ஒரே மாதிரியான வேலைக்கு மட்டுமே அப்படி கணக்கிட முடியும். மற்ற வேலைகளில் 10 நாள் வேலையில் மூன்று நாள் கடந்திருக்கிறதெனில் 30%  முயற்சி ( எஃபர்ட் ) செலவிடப்பட்டிருக்கிறது எனலாம்.  

எவ்வளவு முயற்சி செலவிடப்பட்டிருக்கிறது, எவ்வளவு நாட்கள் கடந்திருக்கின்றன என்பதை வைத்தும் புராஜக்ட் எவ்வளவு விழுக்காடு முடிந்திருக்கிறது என்பதை வரையறை செய்ய முடியாது. அதைக் கண்டுபிடிக்கத் தான் ஏற்கனவே நாம் “வர்க் பிரேக்டவுன் ஸ்ட்ரக்சர்” பற்றிப் படித்தோம். அந்த வேலைகளின் பட்டியலில் நாம் பதிவு செய்கின்ற, “என்னென்ன முடிந்திருக்கிறது, என்னென்ன எந்த அளவில் இருக்கிறது” போன்ற தகவலை வைத்தே புராஜக்ட் எத்தனை சதவீதம் முடிந்திருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.

ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்து வைப்பது புராஜக்டின் பயணத்துக்கும், அடுத்தடுத்த புராஜக்ட்களுக்கான திட்டமிடலுக்கும் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய வேலைகளைக் குறித்துக் கவனமாய்ப் பதிவு செய்து கொண்டே வருவது, அவர்களுடைய இலக்கை தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். “அட சரியா தான் போயிட்டிருக்கேன்” என்று நமது பாதையை சரிபார்த்துக் கொள்ளவோ, “இன்னும் ஸ்பீடா போனா தான் வேலை முடியும்” என எச்சரிக்கை அடையவோ, “போற ரூடே தப்பாச்சே” என உஷாராகி ரூட்டை மாற்றவோ இந்த தொடர்ந்த கவனிப்புகள் உதவும். 

இதை எழுதும்போது ஒரு விமான விபத்து நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்ட ஒரு விமான விபத்து அது. அதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்த போது அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. ஒரு மெக்கானிக், விமான இறக்கை ஒன்றில் பொருத்த வேண்டிய ஸ்க்ரூவைப் பொருத்தியபோது அதன் “நட்” கழன்று விட்டது. ஆனாலும் ஸ்க்ரூ சரியாக ஸ்ட்ராங்காக இருக்கிறது என அவர் சென்று விட்டார். விமானப் பயணத்தின் போது அந்த ஸ்குரூ கழன்றது தான் அந்த மாபெரும் விபத்துக்குக் காரணம் என கடைசி அறிக்கை சொன்னது. ஒரு சின்ன விஷயம், ஒரு மாறா வரலாற்றுப் பிழையாய் மாறிப் போனது. அந்த சிறு பிழையை அப்போதே சரி செய்திருந்தால் நூற்றுக்கு மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். 

தொடர்ந்து கவனிக்கும் போது தான் இத்தகைய சிறு சிறு பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும்.  கப்பலில் விழுந்த ஓட்டையைப் போல சில சின்ன பிரச்சினைகள் கடைசியில் புராஜக்டையே மூழ்கடித்து விடக் கூடும். எனவே இந்த கவனித்தல், சரிபார்த்தல், பதிவு செய்தல் போன்றவை சாதாரணமானவை என விட்டு விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

*

புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு

13

மைக்ரோ மேனேஜ்மென்ட் நல்லதா ?

*

நல்லதா ? கெட்டதா ? என்று கேட்கும் முன் “மைக்ரோமேனேஜ்மென்ட்” என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. அதை ஒரு சின்ன உதாரணம் மூலம் சொன்னால் எளிதாகப் புரியும் என நினைக்கிறேன். சில மாமியார்கள் மருமகள்களிடம் சமையல் வேலையை ஒப்படைப்பார்கள். ஒப்படைத்து விட்டு வெளியே போகமாட்டார்கள். அப்படியே சமையலறையில் ஓரமாக நின்று விட்டு, “அந்த வாணலியை எடுக்காதே, இதை எடு” என்பார்கள். எடுத்ததும், “அதை கொஞ்சம் கழுவிடு” என்பார்கள். கழுவினால் கூட, “கொஞ்சம் ஓரத்தையெல்லாம் விம் போட்டு நல்லா தேச்சுடு” என்பார்கள். அப்புறம், “அடுப்பை சிம்ல போடு, இவ்ளோ ஃப்ளேம் வேண்டாம் என்பார்கள். இப்படி கூடவே நின்று ஒவ்வொரு சின்ன வேலையிலும் மூக்கை நுழைத்தால் எப்படி இருக்கும் ?

“என்கிட்டே சமையல் செய்ய சொல்லிட்டீங்கல்ல, நான் பாத்துக்கறேன்.. கொஞ்சம் வெளியே போறீங்களா ?” என கத்தத் தோன்றும் இல்லையா ? இப்படி சின்னச் சின்ன விஷயத்திலும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பது தான் மைக்ரோ மேனேஜ்மென்ட் என்பது. ஒரு வேலையை திறமையான ஒருவரிடம் ஒப்படைத்தபிறகு அவருடைய ஸ்டைலில் அந்த வேலையைச் செய்ய விட்டு விட வேண்டும். “என்ன செய்ய வேண்டும்” என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர, “எப்படி செய்ய வேண்டும்” என்பதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கவனிப்பது கூடவே கூடாது.

ஒரு மேனேஜர் மைக்ரோ மேனேஜ் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

1. எப்படியாவது அந்த புராஜக்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என நினைக்கின்ற நபராக இருக்கலாம். எனவே புராஜக்டில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயங்களையும் கூடவே இருந்து பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் அவருக்கு இருக்கும். அந்த மனநிலை இருப்பவர்கள் மைக்ரோமேனேஜ் செய்யும் இயல்பைக் கொண்டிருப்பார்கள்.

2. சில வேளைகளில் புராஜக்டின் கடைசி கட்ட அப்டேட் வரை தனக்குத் தெரிய‌ வேண்டும் என நினைப்பவர்கள் இத்தகைய மைக்ரோமேனேஜ் மனநிலையைக் கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரியாம ஒரு துரும்பு கூட அசையக் கூடாது என்பவர்கள் பெரும்பாலும் மைக்ரோமேனேஜ்மென்ட் பார்ட்டிகளாகத் தான் இருப்பார்கள். அவர்களுடைய தலைவர் மைக்ரோமேனேஜ் மனநிலை கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம், அது அப்படியே அடுத்தடுத்த நிலைகளுக்கும் தாவும்.

3. சிலர் வேலை செய்வதை ஒரு ஹாபியாகவே வைத்திருப்பார்கள்.அவர்களால் வேலை செய்யாமல் இருக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே களத்தில் இறங்கி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். எல்லா முடிவுகளிலும் தங்களுடைய தலையீடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களால் சரியான டெலிகேட் செய்ய முடியாது.

4. சிலர் ‘நான் இதுல எக்ஸ்பர்ட், என்னைத் தவிர யாரும் இதை சிறப்பாகச் செய்ய முடியாது’ எனும் மனநிலை கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்போதுமே தங்களுடைய முடிவு தான் சரியான இருக்கும் என உறுதியாக நம்புவார்கள். தங்களுக்குத் தெரிந்த வழியைத் தவிர வேறு வழிகளில் சிறப்பாகச் செயல்பட முடியாது என நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மைக்ரோமேனேஜ்மென்ட் செய்யாமல் இருக்கவே மாட்டார்கள்.

5 சிலருக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் இருக்கும். நான் சொன்னது அவர்களுக்குப் புரிந்திருக்குமா ? சரியாகச் செய்வார்களா ? புரியாமல் குழம்புவார்களா ? எனும் ஒரு பதட்டம் இருக்கும். அதனாலேயே அடிக்கடி எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

6. சிலருக்கு உள்ளூர ஒரு ‘பயம் இருக்கும்’.தன்னை விட அடுத்த நபர் நல்ல பெயரை வாங்கிவிடுவாரோ. தன்னுடைய பெயர் போய்விடுமோ. தன்னுடைய வேலைக்கு அந்த நபர் ஒரு வில்லனாய் வந்து விடுவாரோ போன்ற அச்ச உணர்வுகள் மைக்ரோமேனேஜ்க்குள் தள்ளி விடும்.

7. சிலருக்கு தங்களுடைய நேரத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரியாது. அதனால் தேவையற்ற விஷயங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டே இருப்பார்கள். மைக்ரோமேனேஜ் தான் நல்லதுப்பா” என அவர்கள் வெளிப்படையாகவே சொல்வார்கள்.

மைக்ரோமேனேஜ்மென்ட் நல்லதல்ல என்பது ஒரு புறம் இருக்க, சில மேனேஜர்கள் மைக்ரோமேனேஜ்மென்ட் எனும் பூதக்கண்ணாடியோடு அலைவதை நாம் தவிர்க்கவே முடியாது என்பது தான் கள யதார்த்தம். அத்தகைய சூழல்களில் அந்த மேனேஜர்களோடு இணைந்து பணியாற்ற சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

முதலாவது, மைக்ரோமேனேஜ் பொதுவாகவே நம்பிக்கையின்மையிலிருந்து தான் பிறப்பெடுக்கும். ‘கொடுத்த வேலையை இவன் ஒழுங்கா செய்வானா ? ” எனும் சந்தேகம் அதற்கான மூல காரணமாய் இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழல்களில் எப்படி நாம் நம்பகத் தன்மையை உருவாக்குவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

முதலில் புராஜக்ட் சார்ந்த அத்தனை விஷயங்களும் மேனேஜரைத் தெரியப்படுத்துவது உசிதம். “எதையோ மறைக்கிறான்” எனும் சந்தேகம் எழும்போது மைக்ரோமேனேஜ்மென்ட் பழக்கம் வலுவடையும். அத்தகைய சிந்தனை எழாமல் கவனித்துக் கொள்ள, வெளிப்படையான கம்யூனிகேஷன் அவசியம். அதற்காக சில மைல்கற்களை உருவாக்கி, அதை நிறைவேற்றும் விஷயத்தை தெளிவாக விளக்கலாம்.

மைக்ரோமேனேஜ் செய்யும் மேனேஜரை எதிர்ப்பதை விட்டு விட்டு, அவர் அதிக நேரம் செலவிடுவதற்காய் நன்றி சொல்லுங்கள். அவருடைய தலையீடு எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்கவில்லை என்பது தெரிந்தாலே, மெல்ல மெல்ல அந்த மனநிலை மாறிவிடும் என்பது தான் நிஜம். கேட்கும் முன்னரே தேவையான தகவல்களையெல்லாம் அவருக்குக் கொடுத்து விடுவது ரொம்ப பயனளிக்கும்.

உதாரணமாக மைக்ரோமேனேஜ் செய்பவர்களுடன் கொஞ்ச நாள் வேலை செய்தாலே அவர்கள் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்பது தெரிந்து விடும். டெய்லி சாயங்காலம் வந்து “அந்த பேய்மென்ட் எல்லாம் அனுப்பியாச்சா” கேப்பாரு, காலைல “யாரெல்லாம் என்ன பண்றாங்கன்னு” கேப்பாரு, “நேற்றைக்கு ஏதாச்சும் பென்டிங்கான்னு” கேப்பாரு இப்படி பல விஷயங்களை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த பேட்டர்ன் புரிஞ்சு போச்சுன்னா, அதுக்குத் தக்கபடியான பதிலை நாம உருவாக்கிக் கொடுக்க முடியும். அவர் கேட்கும் முன்பாகவே, அவர் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை அவரிடம் கொடுத்து விட்டால் அவரது நம்பிக்கை அதிகரிக்கும்.

எதற்காக இந்த கேள்விகளையெல்லாம் கேட்கிறார் ? ஏன் ரொம்ப நோண்டறாரு ? என மனதில் கேள்விகள் அலை மோதலாம். அதற்கான பதிலை கண்டறிய முயலுங்கள். அது அவரது இயல்பாய் இருந்தால், அதை எதிர்கொள்ள அவரது வழியில் போக வேண்டும். ஒருவேளை உங்களிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார் எனில், உங்களிடம் அவருக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பது பொருள். அந்த நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

நாமாகவே ஒரு கற்பனைக் கதையை உருவாக்கி அதில் வில்லனாக மேனேஜரை நிறுத்துவது தேவையில்லாத விஷயம். பெரும்பாலானவர்கள் செய்கின்ற இமாலயத் தவறு இது தான். ‘என் மேல மேனேஜருக்குத் தனிப்பட்ட விரோதம் அதான் நோண்டிட்டே இருக்காரு’ போன்ற சிந்தனைகளை முதலில் ஓரம் கட்ட வேண்டும். அதே போல‌, ‘இவரு கேக்கறதுக்கெல்லாம் நான் எதுக்கு பதில் சொல்லணும்’ எனும் ஈகோ சிந்தனைகளையும் முழுமையாய் ஒதுக்கி வைக்கவேண்டும். வேலை இடத்தில், கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்வது, எப்படி சுமூகமாகச் செய்வது, எப்படி சிறப்பாகச் செய்வது, எப்படி வேகமாய்ச் செய்வது போன்ற விஷயங்களைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டும்.

புராஜக்ட் மேனேஜ்மென்ட் பற்றிப் பேசும்போது இதைப் பற்றிப் பேசக் காரணம், பலரும் இதை எதிர்கொள்ளச் சிரமப்படுவார்கள் என்பது தான். எது எப்படியோ, ஒரு மேனேஜராக‌ மைக்ரோமேனேஜ் செய்வது சரியான வழிமுறையல்ல. ஆனால் அத்தகைய சூழல்களை முழுமையாய்த் தவிர்க்கவும் முடியாது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

*
சேவியர்