விழவைக்கும் வலைத்தளங்கள்
உலகம் அழகானது. இறைவன் நமக்கு இயற்கை அனைத்தையும் இலவசமாகவே தந்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு யாரும் கணக்கு கேட்பதில்லை. அடிக்கின்ற வெயிலை அள்ளிக் கொள்ள உத்தரவு தேவையில்லை. நதிகளில் நீந்தவும், நீர்தனை அருந்தவும் அனுமதி அவசியமில்லை. பரந்து விரிந்த வானமும், பாதம் தீண்டும் பூமியும் நமக்கு இலவசமாகவே தரப்பட்டன. எல்லாவற்றையும் சுயநலம் கலந்த பொருளாதார அளவீட்டினால் மனிதன் அளக்கத் தொடங்கிய போது தான் பிரிவினைகள் பிரசவமாயின.
இறைவன் நமக்கு வளங்கள் தந்தது போல, நல்ல குணங்களையும் தந்திருக்கிறார். ஒரு மழலையின் புன்னகை தான் நமக்கு இறைவன் தந்தது. அந்த புன்னகைக்கு முலாம் பூசி செயற்கையாக்கியது நாம் தான். பணத்தை இடது கையால் ஒதுக்கும் மழலை போன்றது தான் நமது ஆதி குணாதிசயம். பணத்தை அள்ளி, மனிதனைத் தள்ளி வைக்கச் சொன்னது நாம் தான்.
இன்று நமது இயல்புகள் எல்லாம் மறந்து போய், மரத்துப் போய் ஒரு ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கசப்பான உண்மை. இங்கே மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆபத்தில் சிக்கிய மனிதனுக்கு கைகளைக் கொடுப்பதை விட அவன் அருகே சென்று செல்பி எடுப்பவர்கள் தான் அதிகம். எனவே தான் இந்தக் காலகட்டத்தில் நமது எச்சரிக்கை பல மடங்கு அதிகமாய் தேவைப்படுகிறது.
இவ்வளவு நாள் இப்படித் தானே பண்றேன் ? எனும் அலட்சியம் ஆபத்தானது. “நமக்கெல்லாம் இப்படி நடக்காது, இது எங்கேயோ யாருக்கோ நடக்கும் விஷயம்” எனும் அதீத நம்பிக்கை கூடவே கூடாது. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நமக்கு நடக்கலாம் எனும் விழிப்புணர்வு அவசியம். விழிப்பாய் இருந்தால், விழாமல் நடப்பது சாத்தியமே.
சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக் களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.
பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.
ஜியோ டேக் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க காவல்துறை இது பற்றி ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. நீங்கள் ஏதேனும் புகைப்படம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த புகைப்படத்தில் அந்த லொக்கேஷன், அதாவது புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசம் ரகசியக் குறியீடாகப் பதியும். இன்றைக்கு ஸ்மார்ட் போன்களில் லோக்கேஷன், ஜிபிஎஸ் போன்றவை சாதாரணமாகவே இருப்பதால் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட விலாசத்தைக் கண்டுபிடிக்க பல வலைத்தளங்களும், மென்பொருட்களும் உள்ளன. நீங்கள் ஒரு வீட்டுக்குள் தனியறையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தால் கூட அந்த வீட்டின் விலாசத்தைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்து விட்டன. எனவே எந்த ஒரு புகைப்படமும் நமக்கு எதிராளி ஆகக் கூடும் எனும் நினைப்பு இருப்பது அவசியம். போனில் டேட்டா எல்லாம் அணைத்து வைத்து விட்டு புகைப்படம் எடுப்பது ஓரளவு பாதுகாப்பானது என்றாலும், புகைப்படங்கள் விஷயத்தில் அதீத கவனம் அவசியம்.
இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.
தகவல்கள் தான் இன்றைக்கு உலகை இயக்குகின்றன. வலைத்தளத்தில் ஒரு நாள் போய் நீங்கள் ஜீன்ஸ் வாங்கினால், அடுத்த நாள் சும்மா அந்த தளத்துக்குப் போனால் கூட ஜீன்ஸ் வேண்டுமா என அந்த தளம் கேட்கும். காரணம் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் எனும் தொழில்நுட்பம். வர்த்தகத்தை மையமாகக் கொண்ட நுட்பம். அதற்கு அடிப்படைத் தேவை தகவல்கள் தான். அதனால் தான் நீங்கள் வலைத்தளங்களில் கொடுக்கின்ற எல்லா தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன. தேவையான வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில் நீங்கள் ரொம்ப பர்சனலான ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வெளியே சொல்ல முடியாத ஒரு செயலை செய்தாலோ அது விஷமிகளுக்கு பொன் முட்டையிடும் வாத்தாய் மாறிவிடும். அது பல ஆபத்துகளைக் கொண்டு வரலாம்.
ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் நீங்கள் டவுன்லோட் செய்திருக்கும் ஆப்ஸ் கூட உங்களுடைய மொபைலில் இருக்கும் தகவல்களை திருடும் ஆபத்து உண்டு. அந்த ஆப்ஸ்களை நீங்கள் இயக்காமல் இருந்தால் கூட அது உங்கள் தகவல்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆப்பை நிறுவும் போதும் அது கேட்கும் கேள்விக்கு “ஓகே” என கிளிக்குகிறோம். அது நாம் அந்த ஆப்ஸ்க்கு கொடுக்கும் அனுமதி என்பதை மறந்து விடுகிறோம்.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.
நமது பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.
உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் மாற்றங்கள் செய்ய உங்களுடைய பிறந்த நாள், உங்கள் வங்கி எண், உங்களுடைய பெயர் போன்ற விபரங்களே போதுமானது. சமூக வலைத்தளம் என்பது பொதுச் சுவர் மாதிரி, பொதுச் சுவரில் என்னென்ன விஷயங்களை எழுதி வைப்பீர்களோ அதை மட்டும் வலைத்தளங்களிலும் போட்டு வையுங்கள்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வலிமையான கடவுச் சொல் அதாவது பாஸ்வேர்ட் மிக அவசியம். வீட்டைப் பூட்டும் போது நாம் கதவுகளை சும்மா சாத்தி வைத்து விட்டுப் போவதில்லை. எத்தனை இழுத்தாலும் உடைந்து விடாத பூட்டைத் தான் போடுகிறோம். எளிதில் யாரும் திறந்து விடக் கூடாது எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு உண்டு. அதே விஷயத்தை டிஜிடல் வீடுகளிலும் காட்ட வேண்டும். நமது சமூக வலைத்தளங்கள் ஒரு வீடு போல இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வலிமையான கடவுச் சொல் பயன்படுத்த வேண்டும் என்பது பாலபாடம். அதில் அலட்சியம் வேண்டாம்.
சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.
லிங்க் களை கிளிக் செய்யும் முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள். நூறு சதவீதம் சந்தேகம் விலகினாலொழிய நீங்கள் லிங்க் களை கிளிக் செய்யாதீர்கள். இத்தகைய லிங்க்கள் ஒருவேளை உங்களுடைய நெருங்கிய நண்பரிடமிருந்தோ, குடும்ப உறவினர்களிடமிருந்தோ கூட வரலாம். அவர்களுக்கே தெரியாமல் ! எனவே அவர் தானே அனுப்பியிருக்கிறார் என நினைத்து அலட்சியமாய் இருக்க வேண்டாம். தகவல்கள் திருடு போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். சந்தேகம் இருந்தால் அந்த நபருக்கு போன் செய்து விளக்கம் கேட்டபின் லிங்கை இயக்கலாமா வேண்டாமா என முடிவெடுங்கள்.
உங்களுடைய வலைத்தளத்தை எங்கேனும் லாகின் செய்தால் பயன்படுத்தி முடிந்தபின் “லாகாஃப்” செய்ய அதாவது அதை விட்டு வெளியே வர மறக்காதீர்கள். பாஸ்வேர்ட்களை சேமித்து வைக்க எந்த பிரவுசருக்கும் அனுமதி வழங்கதீர்கள். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்.
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரட்டைக் கவனம் தேவை. நிறுவனங்கள், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு சில வரைமுறைகளை வைத்திருக்கும். அதனை மீறாமல் இருப்பது முதல் தேவை. நிறுவனத்தின் தகவல்களை வெளியே பரப்புவது இன்னொரு மீறல். இந்த விஷயங்களில் கவனம் தேவை.
உங்களுடைய போட்டோவை யாரேனும் “அருமை” என பாராட்டியிருக்கலாம். அடிக்கடி உங்களுடைய ஸ்டேட்டஸுக்கு வந்து “சூப்பர்” என கமென்ட் போட்டிருக்கலாம். மயங்கி விடாதீர்கள். உங்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய செயல்களை தொடர்ந்து சிலர் செய்து கொண்டே இருப்பதுண்டு. சில மாதங்களில் உங்களுக்கு அவர்கள் பரிச்சயமானவர் போன்ற தோற்றம் உருவாகிவிடும். இது ஆபத்தில் முடியக் கூடும்.
முகம் தெரியாத நபர்கள் விடுகின்ற நட்பு அழைப்புகளை, அதாவது பிரண்ட் ரிக்வஸ்ட்களை அனுமதிக்காமல் இருப்பதே உசிதம். அனுமதிக்க வேண்டுமென தோன்றினால் அந்த நபருடைய முழு விவரங்களையும் கேட்டறிந்த பின் அது பற்றி பரிசீலியுங்கள்.
சிலர் தொடர்ந்து ஐந்தாறு மாதங்கள் உங்களை இணையத்தில் பின் தொடர்வார்கள். பின்னர் நட்பு அழைப்பு விடுவார்கள். உங்களுடைய முழு நம்பிக்கையைப் பெறும் வரை உங்களோடு நல்லவிதமாய்ப் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களை நம்பிய கணத்தில் உங்களை ஏமாற்றும் வழிகளில் இறங்குவார்கள். கவனம் தேவை.
சமூக வலைத்தளங்களில் பல டிஜிடல் போராளிகள் உலவுவதுண்டு. தங்களுடைய தீவிரமான அரசியல், சினிமா, மத சிந்தனைகளை அதில் வலுவாக பதிவு செய்வதுண்டு. தவறில்லை. ஆனால் அடுத்தவரை காயப்படுத்தாத, அடுத்தவர்களை எரிச்சல் மூட்டாத வகையில் அவை இருக்க வேண்டும் என்பது அவசியம். யாரையும் தவறாக விமர்சிக்க வேண்டாம். இவையெல்லாம் நம்மை அறியாமலேயே நமக்கு நிழல் எதிரிகளை உருவாக்கும் வல்லமை படைத்தவை என்பதை மறக்க வேண்டாம்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே உங்களுடைய “பிரைவசி” செட்டிங்கை கொஞ்சம் வலிமையாக்கி வையுங்கள். அது ஓரளவுக்கு உங்களை பாதுகாக்கும். அது முழுமையாக உங்களைப் பாதுகாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் “டிஃபால்ட்” எனும் வழக்கமான செட்டப்பை விட இது பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விளையாட்டாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இப்போது தனிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி விட்டன. மேலை நாடுகளில் சமூக வலைத்தளப் பதிவுகள் ஏராளமான மண முறிவுகளுக்குக் காரணியாகியிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வலைத்தளப் பதிவுகள் காரணமாகியிருக்கின்றன. பலருடைய உயர்வுகளுக்கு வேட்டு வைப்பதும், பலருடைய எதிர்காலத்தைப் பாழாக்குவதும், பலரை தற்கொலைக்குள் தள்ளுவதும் என இந்த சமூக வலைத்தளங்கள் செய்கின்ற வேலைகள் நிச்சயம் கவலைக்குரியவை.
சமூக வலைத்தளங்களை பாசிடிவ் ஆகவும் பயன்படுத்த முடியும். எப்படி ? இப்போதெல்லாம் நிறுவனங்கள் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் தேவையெனில் வேறெங்கும் செல்வதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணையத்தில் உலவி தகவல்களைத் திரட்டுகின்றன. அப்படி திரட்டப்படும் தகவல்கள் ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தால் அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம்.
சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.
குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவை உங்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. விழிப்புணர்வாய் இருப்பதற்காக மட்டுமே. சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். அதே நேரத்தில் வலிமையான சிந்தனைகளை, நல்ல கருத்துகளை, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து வந்தால் உங்களுக்கு நேர்மறை வரவேற்பு கிடைக்கவும் செய்யும்.